நாமார்க்கும் குடியல்லோம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 13, 2024
பார்வையிட்டோர்: 348 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அந்தப் புத்தகம், வேதா, உதடுகளை பெருமளவு பிரிய வைக்காமல், அதே சமயம் அவற்றுக்கு இடையே ஒரு வெண்கோட்டைப் போட்டது. அந்தச் சமயம் பார்த்து டெலிபோன் மணி அடித்தது. அவள் வேண்டா வெறுப்பாய் எழுந்து புத்தகத்தை தொலைக்காட்சிப்பெட்டி மேல் வைத்துவிட்டு, கூடாரம் போன்ற முகப்பு அறையிலிருந்து உள்ளறைக்குள் ஓடியபோது, அந்த டெலிபோன் மூச்சடங்கியது. சிறிதுநேரம் அங்கேயே காத்து நின்றாள். ஒரு வேளை கட்டாகாமல் லைனில் இருப்பார்களோ என்று மீண்டும் ரிசீவரை எடுத்தாள். அதுவோ, வெறுமனே இருப்பதைக் காட்டும் வகையில் பழைய காலத்து கிறிஸ்துவப் பாடல் போல ஒலித்தது.

வேதா, மீண்டும் முகப்பறைக்குள் வந்து அந்தப் புத்தகத்தைப் பிரித்தாள். பெரும்பாலும் ஆண்மையற்றவனே மனைவியைச் சந்தேகிப்பான். அதேபோல் சில பெண்கள் சிடுசிடுவென்று இருப்பதற்கு அவர்கள் இல்லற சுகத்தில் ஏமாற்றமுற்றதே காரணம்’ என்ற வரிகளை எந்தப் பக்கத்தில் படித்தது என்பது புரியாமல் பக்கங்களைப் புரட்டினாள். கல்யாணமான தோழியிடமிருந்து ரகசியமாக வாங்கிய புத்தகம். எப்படியோ அந்த வரிகளைக் கண்டுபிடித்த அவள், சிறிது சிந்தித்தபோது, மீண்டும் டெலிபோன் ஒலித்தது. அவள் அந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டே முனங்கிக் கொண்டு நடந்தாள். டெலிபோனை எடுத்தால் மீண்டும் வெறுமனே ஒலித்தது. பழையபடியும் புத்தகத்திலிருந்து கண்ணை நகர்த்தாமல், அவள் நடந்தபோது, மீண்டும் அது ஒலித்தது. முன்பு மாதிரி மிட்டாய்க்காரர் மணி மாதிரி அடிக்காமல், ஆலயமணி போல் தொடர்ந்து ஒலித்தது. அவள் அதைப் பொருட்படுத்தாமல் புத்தகத்துக்குள் முகத்தைப் புதைத்தாலும், அந்த டெலிபோன் ஒலியும் விடப்போவதில்லை என்பதுபோல் அடித்துக் கொண்டே இருந்தது. டெலிபோன் செய்த எதிர்முனை ஆளை அவள் மனதுக்குள்ளேயே திட்டிக்கொண்டு நிதானமாக நடந்து, அதன் குமிழை எடுத்து, எதிர்தரப்புக் குரல் கேட்கும் முன்பே தன் குரலைத் தாவவிட்டாள்.

“ஹலோ… என்ன… யார் பேசறதா? முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க…. இது என்னடா வம்பா போச்சு? நான் யாருன்னு உங்களுக்கு எதுக்காகத் தெரியணும்? நீங்க யாரு?”

அவள், டெலிபோன் குமிழை முகத்துக்கு நேராக, மைக் மாதிரி பிடித்துக்கொண்டு யோசித்தாள். அந்தக் குமிழோ நேருக்கு நேர் பேசுவது போல் “ஹலோ, ஹலோ, நான்தான், நான் தான்” என்று கத்தியது. அப்படியும் அவள் மசியவில்லை . பல வீடுகளில் சம்பந்தா சம்பந்தாமில்லாதவர்கள் டெலிபோன் டைரக்டரிகளைப் பார்த்துசில எண்களைச் சுழற்றி அப்பாவி பெண்களின் வாய்களைக் கிளறுவார்களாம். ஒரு சில பெண்கள் கூட இப்படிப்பட்ட டெலி போன்களால் ராங் நம்பராகியிருப்பதாகவும் கேள்விப்பட்டு இருக்கிறாள்.

அவள் மின்னல் வேகத்தில் சிந்தித்தாள். எதிர்முனைக் குரல் ஆண்குரல் கேட்ட குரல் மாதிரி ஒலித்தாலும், அது கெட்ட குரலாகவும் இருக்கலாம். அந்தக் குரலோடு பேச்சுக் கொடுத்து டெலிபோன் நம்பரை வாங்கி போலீசுக்கு புகார் செய்யலாமா? இப்படித்தான், அவள் அலுவலகத்தில் ஒருத்தியுடன் அத்துமீறி டெலிபோனில் பேசியவனை மாட்ட வைத்தாள். ஆனால், அந்தப் பயலோ, தனக்கும், தான் டெலிபோன் செய்த பெண்ணுக்கும் ஒரு ‘இது’ இருந்ததாகச் சொல்லித்தப்பிக்கப் பார்த்தான். இந்த மாதிரி தனக்கும் வரக்கூடாது. அதுவும் கல்யாணம் நிச்சயித்த பிறகு.

இதற்குள் டெலிபோன் வாய் அலறியடித்துக் கதறியது. “ஹலோ.. ஹலோ… ஒன் மினிட் பிளீஸ்…. நான் சொல்றதக் கேளுங்க ப்ளீஸ்…. ஒன் மினிட் பிளீஸ்… நானே நான்தான்…”

வேதா எதிர்முனைக்காரன் முகத்தில் அறைவதுபோல், டெலி போனை வைக்கப் போனாள். அப்படி வைத்தால், மீண்டும் டெலி போன் செய்வான். என்னதான் செய்திடுவான்? அதையுந்தான் பாத்திடலாமே… அவள், டெலிபோன் வாயைக்காதில் வைத்துக் கேட்டாள்.

“யாருங்க… சஞ்சையா? நெசமாவா? நானா? நான்தான்…. நானேதான். நீங்க….”

அவளுக்கு ஒரு பயம். வேறு எவனோ ஒருவன், போன புதன் கிழமை வீட்டில் நடந்ததைக் கண்டறிந்து, இப்படிப் பேசலாமே?… அவள் உஷாரானாள். பேசுவது சஞ்சய்தான் என்று கிட்டத்தட்ட உறுதியானாலும், மிமிக்கிரி கலையில் கைவந்தவர்கள் இருப்பதைக் கணக்கிலெடுத்து “உங்க டெலிபோன் நம்பரைச் சொல்லுங்க. நான் ரிங் பண்றேன்…. ஃபோர்செவன்… நோ… உங்க மேல நம்பிக்கை இல்லைன்னு அர்த்தமில்ல… ஒருத்தர் கொடுக்கிற ரூபா நோட்டுகளை எண்ணுகிறோமுன்னா, அவர்மேல நம்பிக்கை இல்லைன்னு அர்த்தமா? எல்லாம் ஒரு தற்காப்புக்குத்தான்… ஓ.கே. போனை வையுங்க… மூணு நிமிஷத்தில் கூப்பிடறேன் ….” என்றாள்.

வேதா, பதட்டப்பட்டாள் பரவசப்பட்டாள். அங்கேயே இருந்த தனது கைப்பையை, எங்கெல்லாமோ போய்த் தேடினாள். தம்பி, தங்கைகளை திட்டினாள். பிறகு டெலிபோன் மேஜைப்பக்கமே, அது இருப்பதைப் பார்த்துவிட்டு, தன்னைத்தானே செல்லமாகத் திட்டிக்கொண்டு, அந்தப் பையின் வாய் மூடிய ஜிப்பைத் திறந்து உள்ளே குடைந்தாள். வழுவழுப்பான கண்ணாடி மாதிரியான ஒரு விசிட்டிங் கார். கார்டில் மூன்று வரிசைகளில் முத்து முத்தானடபுள் கலர் எழுத்துக்கள், சஞ்சய், கம்ப்யூட்டர் இன்ஜினியர்… அதே நம்பர்.

வேதா, டெலிபோன் நம்பர்களை ஒவ்வொன்றாய் அழுத்தினாள். அவசரத்தில் நான்கு ஐந்தாகிவிட்டது. யாரிடமோ திட்டு வாங்கினாள். பிறகு அவசரப்பட்டாள். அய்யய்யோ … தப்பா நினைப்பாரே… மூணு நிமிஷம் பத்து நிமிஷமாயிட்டே… நான் உதாசீனம் செய்யுறதா நினைச்சிடப்படாதே.. சே… இப்ப பார்த்து ஒரு டெலிபோன் …. ஒரு வேளை அவரா?… யாரு? கமலாவா? நான் வேதா இல்ல… எத்தனை தடவை சொல்றது… ராங்க் நம்பர்….. வையுங்க போனை”

வேதா, சத்தம் போட்ட டெலிபோனை – அதன் கழுத்தை, தனது மனச்சாட்சியை நெறிப்பதுபோல் நெறித்து, கீழே வைத்தாள். மீண்டும் எடுத்தாள். “அப்பாடா… நல்லலவேளையா லைன் கெடச்சிட்டு…

“ஹலோ…. சஞ்சயா…. ஸாரி… மிஸ்டர் சஞ்சயா? ஏன் அப்படி கேட்கிறீங்க….நான் வேதாதான் பேசுறேன். வீட்ல யாருமில்ல… என்ன விஷயம்?… ஸாரி… நான் ரூடாய் பேசலை…. அப்பாக்கிட்ட ஏதாவது பேசணுமான்னு கேக்கத்தான் அப்படிக் கேட்டேன… அப்பாவா? அவரு , அம்மா, அண்ணி எல்லாரும் எனக்கு நகை வாங்கப் போயிருக்காங்க. அவங்ககிட்ட ஏதாவது சொல்லணுமா? என்ன சொல்றீங்க…..? உங்களைப் பிடிச்சாலும் பிடிக்காட்டியும் பெரியவங்க நிச்சயம் செய்ததை கட்டித்தானே ஆகணும்? நோ… நோ…. இந்த மாதிரி பேசுறது முறையா? அதுவும் இப்பவே… ஸாரி… என்கிட்ட தப்பாகக் கேட்டிங்கன்னு சொல்லலை…. அதுக்கு நான் பதில் சொல்றதுதான் தப்புன்னு சொல்ல வந்தேன். சரி… சரி… ஆம்.. அதுக்காக…’

வேதா, டெலிபோன் குமிழை கன்னத்தில் உரசியபடியே யோசித்தாள். அவனின் ஹலோ ஹலோ குரல், அவள் கன்னத்தில் அவன் உதடுகளாய் உரகவது போல் கூச்சப்பட்டாள். டெலிபோனை மீண்டும் காதுப்பக்கம் கொண்டு போனாள். அவன், அவள் காதுக்குள் வாயை வைத்து கிசுகிசுப்பது போன்ற உணர்வு…அந்த உணர்வின் வளர்பிறையான நாணம்… அது தூண்டிவிட்ட சிந்தனை, தனக்குள்ளயே இப்படி மௌனமாக, உதட்டை அசைக்காமல் மனதுக்குள்ளயே பேசிக் கொண்டது.

‘இப்படி பேசுறவர்கிட்ட எப்படி பேசுறதாம்? அவரை மாதிரி என்னால் வர்ணிக்க முடியுமா? ஆனாலும், நல்ல ரசிகர்தான்… என் அழகைவிட தோரணை ரொம்ப பிடிச்சிருக்காமே…. அப்போ நான் அழகில்லாதவளா? ‘அப்புறம்’ கவனிச்சுக்கலாம். அவர தலைகுனிந்து பார்க்காமல் நேருக்கு நேராப் பார்த்தது அதிகமாப் பிடிச்சுப் போச்சாம்….. இவரு மட்டும் என்னவாம்? சூட்டு, கோட்டுன்னு அமர்க்களப்படுத்தாமல் சாதாரண உடைக்கே எவ்வளவு கம்பீரம் கொடுத்தார்? ஒவ்வொரு கேள்விக்கும் அதை உள்வாங்குவது போல் அவர் முகம் காட்டிய கம்பீரமும், அதற்குப் பதிலளிக்கும்போது முகத்தைக் குழைத்த இனிமையும், பேசும்போது குறுக்கிட நினைத்துபோல் ஆள்காட்டி விரலைத் தூக்கி முகத்தை நிமிர்த்தி, பேசுகிறவரை தனது பேச்சால் முறியடிக்காமல் பேசியவரின் கவனத்தைக் கவர கையாண்ட நளினிமான உத்தியும் – எல்லாவற்றிற்கும் மேல் அந்த ஆளுமையான தோற்றமும்…

வேதா , அதிக நேரம் சிந்திக்க அவகாசம் கொடுக்காமல் கன்னத்தில் உரசிய டெலிபோன் குமிழை வாயருகே கொண்டு வந்து, சிறிய உதறலோடும், உற்சாகத்தோடும் தத்தித் தத்திப் பேசினாள்.

“நீங்க பிடிக்காட்டி இப்படிப் பேசுவனா? நீங்க சொல்லிட்டீங்க. நான் சொல்லலை. என்ன குரல் நடுங்குதா? நோ… நோ. பதிபக்தி இல்லை …. பயபக்தி. ஆமா… நானும் கவிதை எழுதியிருக்கிறேன்.. சரி… வச்சுட்ட்டுமா? என்னடா இது. ஸாரி உங்களை டா போடலை. எவ்வளவு நேரமா பேசுறதுன்னு சொல்ல வந்தேன்…. வாட்? ஒரு நிமிஷம் பெர்மிஷன் கொடுக்கணுமா? சொல்லுங்க…

வேதா, லேசாய் சிரித்துவிட்டாள். அந்தச் சிரிப்பு அலையலையாய் அந்த டெலிபோன் குமிழுக்குள் பாய்ந்து, துள்ளிக் குதித்து, ஒளி வேகத்தில் மாறுவேடம் போட்டு, மீண்டும் ஒலியாய் மாறி, எதிர்தரப்புக் காதில் உரசியது. அந்த உந்து சக்தியில், அவன் பேசப் பேச , இவள் ‘உம்’ கொட்டினாள். தொலைக்காட்சியிலும் சில திரைப்படங்களிலும் பேச்சுக்களுக்கு இடையே ‘விஷுவல்கள்’ வருமே, அப்படி அவன் பேசியதை உருவகப்படுத்திப் பார்த்தாள்.

மணப்பந்தலில் கிள்ளுக்குப் பதில் கிள்ளு, பார்வைக்கு எதிர்ப்பார்வை, சிரிப்புக்கு புன்னகை… வரவேற்பு நிகழ்ச்சியில் மெல்லிசை என்ற பெயரில் நடைபெறும் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில், இவள், தனது தோழிகளுக்கு அவனை அறிமுகம் செய்து வைக்கிறாள். அவர்கள், அவனை அண்ணாந்து பார்த்துவிட்டு, இவள் கையை பலமாகக் குலுக்கும் போது, குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறாள். அப்புறம் முதலிரவில்…. அதற்கு மேல் அவள் சிந்திக்க நாணப்பட்டாள்.

எதிர்முனைக்காரனும் அந்த விஷுவல் காட்சியை ரசித்தபடியே ஒரு கேள்வி கேட்பது போலிருந்து. அவள், வேகவேகமாய் பதிலளித்தல்:

“நான் ஒண்ணும் பராக்குப் பார்க்கலை. நீங்க பேசற பேச்சை கேட்டுட்டுத்தான் இருக்கேன். சாரி… போனை வையுங்க… எங்கப்பா வாரார்… மொதல்ல நீங்க கட் பண்ணுங்க… எனக்கு ‘கட்’ பண்ண மனசு வர மாட்டேங்குது. அய்யய்யோ … இன்னும் ஒரு நிமிஷமா.. அப்பா ரெண்டு நிமிஷத்திலே வந்திடுவார்… ஆமாம்… அந்த கவர்மெண்ட ஆபீஸ்ல ஸ்டெனோ கிராபராகத்தான் இருக்கேன். ஆபீஸர் அறைக்குள்ள அப்பப்போ போய்த்தான் ஆகணும்… டெலிபோன்ல கனெக்ஷன் வாங்கித்தான் கொடுக்கணும். இது எப்படி எடுபிடி வேலையாகும்? ஆபீஸர், அவரு வேலையைப் பார்ப்பார். நான் என் வேலையைப் பார்ப்பேன்… இதில் என்ன கேவலம்? எப்படிங்க முடியும்? சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி கஷ்டப்பட்டு வாங்கின வேலை. உங்களுக்கு, ரெண்டு மாருதி கார் இருக்கட்டும்… ஒரு பங்களா இருக்கட்டும். அதுக்காக நான் எதுக்கு வேலையை விடணும்? என்ன… யோசித்துப் பார்க்கணுமா? இதுல யோசிக்கறதுக்கு எதுவுமே இல்லையே….”

ஆனாலும், வேதா டெலிபோன் வாயை நெற்றிப் பொட்டில் வைத்து லேசாய் அடித்தபடியே , அவனுக்காக மட்டுமே யோசிப்பதுபோல் யோசித்தாள். அப்படி யோசிக்க யோசிக்க, அவள் உறுதி வைரப்பட்டதே தவிர, பித்தளையாகவில்லை. இப்போது உரத்த குரலில் பதிலளித்தாள். நாணமும், பெண்மையும் நாய்களாய் ஓட, அவள் திட்டவட்டமாய்ப் பேசினாள்:

“ஸாரி ஸார்… என்னால வேலையை விட முடியாது. உங்களோட இருந்தாலும் நான் சொந்தக்காலில் நிற்க விரும்புறேன். குடும்பத்துக்கு மட்டுமில்ல, சமூகத்திற்கும் பயன்படுறோம் என்கிற சந்தோஷத்தை அனுபவிக்க விரும்பறேன்… இதனால் தன்னம்பிக்கை ஏற்படுது… இப்படித் தன்னம்பிக்கை ஏற்படுற ஒருத்தியாலதான் கணவன்கிட்ட தூய்மையான அன்பைச் செலுத்த முடியும். இல்லாவிட்டால், அந்த அன்பே ஒரு கலப்படமாகும். என்ன ஸார் உளறுளீங்க… வீட்டில் புருஷன் உசத்தி. ஆபிஸ்ல மேலதிகாரி ஒசத்தி… இதுக்கு ஏன் முடிச்சுப் போடுறீங்க? வேலையை விடமுடியாதுன்னா முடியாது… ஓ.கே. கட்டிக்காட்டாப் போங்க. இப்ப நானே ஒங்களை மறுபரிசீலனை செய்திட்டிருக்கேன். நாமார்க்கும் குடியல்லோம்… ஆனாலும் ஒரு சின்னரிக்கெஸ்ட் இந்த நாட்ல பொண்ணு பிடிக்கலன்னு மாப்பிள்ளை சொல்ல முடியும். ஆனால், மாப்பிள்ளை பிடிக்கலைன்னு பொண்ணு சொல்ல முடியாது. அதனால்… அதோ எங்கப்பா வரார். நீங்களே சொல்லி டுங்க…. பொண்ணுபிடிக்கலைன்னு சொல்ல எத்தனையோ காரணம் இருக்கே. உங்களுக்கா தெரியாது? நான் வேலையை விடமாட்டேன்னு சொன்னதாய் மட்டும் சொல்லாதீங்க. மொட்டைக் கடுதாசி… அழகில்லை… இப்படி எதையாவது சாக்குப் போக்கா சொல்லுங்க… இதோ எங்கப்பாவே வந்துட்டார்… நீங்களே சொல்லுங்க….”

பேச்சின் கடைசி வார்த்தைகளை, ரகசியமாகவும் ஆழமாகவும் சொன்ன வேதா, அந்த டெலிபோன் குமிழை மேஜையில் கிடத்திவிட்டு, முகப்பறைக்கு வந்து கதவைத் திறந்தாள். முகத்தைத் துடைத்துக் கொண்டு நின்ற தந்தையிடம் பற்றற்றக் குரலில் – அதே சமயம் பாரம் விலகிய ஆறுதலில் சொன்னாள்:

“எப்பா – உங்ககிட்ட யாரோ பேசணுமாம்…. லைன்ல இருக்காங்க”

– செம்மலர் 1980

– தராசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, கங்கை புத்தக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *