கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2023
பார்வையிட்டோர்: 2,821 
 
 

சம்பா செம்பருத்திச் செடியை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்..

சிவப்பு நிற ஒற்றை செம்பருத்தி… அவளுக்கு சிவப்பு நிற செம்பருத்திப் பூக்களே அதிகம் பிடிக்கிறது..

மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு, ரோஜா நிற செம்பருத்திப் பூக்கள் அந்நியமாகத் தெரியும்..

தினமும் காலையிலும் மாலையிலும் தோட்டத்தை கண்டிப்பாக சுற்றி வந்தே ஆகவேண்டும்..

ஒவ்வோரு இலையும், மொட்டும், பூவும் காயும் அவளிடம் சொல்ல சேதி ஒன்று வைத்திருக்கும்..

இதுவரையில் பூவே பூக்காத ஒரு செம்பருத்திச் செடி அவள் தோட்டத்தில் உண்டு.

“உனக்கும் ஒரு நாள் குழந்தை பிறக்கும்” என்று ரகசியமாக அதனிடம் ஒருநிமிடம் நின்று அதை ரசித்துவிட்டு போவாள்..

அவளுக்குப் பிடித்த செம்பருத்தி செடியருகே மீண்டும் வந்தாள்.. இப்போதுதான் பூக்க ஆரம்பித்திருக்கிறது…

திருமணமாகி ஒரே வருடத்தில் கருவுற்ற பெண்ணைப் போல் நாணி வளைந்திருந்தது…

நேற்று மாலை அவள் மொட்டுகளை எண்ணிவைத்திருந்தாள்..

அவற்றில் எத்தனை மறுநாள் பூக்கும் என்பது அவளுக்கும் அந்த செடிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்…

காலையில் இரண்டு மலர்களை எதிர் நோக்கி இருந்தவளுக்கு ஒற்றை மலரைப் பார்த்ததும் ஒரு ஏமாற்றம்..

யாரும் அவர்கள் வீட்டிற்குள் புகுந்து மலர்களைப் பறித்து அவள் பார்த்ததே இல்லை..

கீழே குனிந்தவளுக்கு சின்ன அதிர்ச்சி.. ஒரு மொட்டு கருகி உதிர்ந்து கிடந்தது.
மனம் அழுதது..பூக்குமுன்பே ஏன் அவசர அவசரமாய் உதிர்ந்து விட்டாய்..?

துக்கம் தொண்டையை அடைத்தது…

ஏன் சில மொட்டுக்கள் மலரும் முன்னே உதிர்ந்து விடுகிறது?

ஒரே செடி..அதே கவனிப்பு…!

பக்கத்தில் அரளிச்செடி..கொத்து கொத்தாய் இளம் ரோஜா வர்ணத்தில் பூக்கள்…

ஒரு கிளையில் காய்ந்த சருகு..கிளையை இறுக்கிப்பிடித்து தொங்கிக் கொண்டிருந்தது…

சம்பாவுக்கு அவை கொஞ்சம் உறுத்தலாக இருக்கும்.. பிய்த்துப் போட்டு விடுவாள்….

பலம்கொண்ட மட்டும் இழுத்தாள்..

தாயின் மடியை இறுகப் பிடித்துக் கொள்ளும் குரங்குக் குட்டியைப் போல பிடியை விடுவேனா என்றது..

சட்டென்று ஏதோ உறுத்தியது… பிடியை விட்டாள்.. அதைத் தடவிக் கொடுத்தாள்.

அம்மா..! நீதானா..? இன்னும் உயிரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இந்த தொன்னூற்றைந்து வயதில் என்ன பிடிவாதம்..? எதை சாதிக்கப்போகிறாய்..?

கண்ணிலிருந்து பொல பொலவென கண்ணீர்..

சாரிம்மா….!

நீ எப்போது தயாராக இருக்கிறாயோ அப்போது உன் பிடியை விட்டால் போதும்..!

கீழே சில சருகுகள் உதிர்ந்து கிடக்கின்றன…!

புத்திசாலிகள்…! சரியான சமயத்தில் கிளையிலிருந்து உதிரத் தெரிந்த சருகுகள்..!

இன்னும் கொஞ்ச நேரத்தில் குமாரி எல்லாவற்றையும் வாரி குப்பையில் போட்டு விடுவாள்.. உரமாகப் பயன் தரப்போகும் சருகுகள்..!

நேரம் போனதே தெரியவில்லை..

சம்பாவுக்கு இது பழகிப்போன ஒன்று..

வீட்டுக்குள் நுழைகிறாள் சம்பா…

***

அம்மா படுத்துக் கொண்டிருந்தாள்.கடந்த ஐந்து வருடங்களாக இதைத்தானே செய்து கொண்டிருக்கிறாள்..

நினைவு நன்றாகவே இருக்கிறது… அதிகம் பேசுவதில்லை..அம்மா சுபாவமாகவே நிறைய பேசமாட்டாள்..

‘சம்பா’ என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் மென்மையாக அம்மா கூப்பிடுவது இதமாக இருக்கும்….

காய்ந்து சருகான உடல்….

“அம்மா….! எதற்காக காத்திருக்கிறாய்..? இன்னும் என்ன கடமைக்காக உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டு…?”

“குமுதா…அம்மா சாப்பிட்டாங்களா?”

“ஒரு இட்லி மட்டும் போதுமாம்..! உப்புமா வேண்டாமாம்…லட்டு வேணுமாம்…!”

அம்மாவின் முகத்தை வழித்து முத்தமிட்டாள் குமுதா…!

“அம்மா.. பாட்டிக்கு ஒரு வாய் லட்டு தரட்டா….? இனிப்புன்னா ஆன்னு வாயத் தொறக்கும்போது பாவமா இருக்குதும்மா..!”

“குடு குமுதா…. அம்மாவுக்குத்தான் ஷூகர்., பீப்பி ஒரு பிரச்சனையும் இல்லியே…பிடிச்சத சாப்பிட்டுட்டு போட்டுமே…!”

சாப்பாட்டு விஷயத்தில் அம்மாவைப் போல யாராலும் கண்டிப்பாக இருக்க முடியாது… ஆனால் இப்போதெல்லாம் இனிப்பு வேண்டியிருக்கிறது…

நாக்கில் அந்த சுவையரும்புகள் மட்டுமே எஞ்சியிருக்கிறது போலும்..

“சம்பா…”

“என்னம்மா….?”

“இங்கதான் இருக்கியா…? உன் குரலே கேக்கலியேம்மா…!”

“அம்மா.உன்ன விட்டுட்டு எங்க போவேன்…?”

“வா..பக்கத்தில வந்து உக்காரு.. ரொம்ப எளச்சு போய்ட்டியே…!”

துரும்பாய் இளைத்த அம்மா அவளைப் பார்த்து கேட்கிறாள்….? இதுதான் தாய்மையா…?

அம்மா எப்போது கண்ணாடியைப் பார்த்தாள்? தான் எப்படி இருக்கிறோம் என்று யோசித்துப் பார்ப்பாளா ? வேண்டாம்..!

“சாப்பிட்டியாம்மா….?”

அம்மா சம்பாவைப் பார்த்து தினம் தினம் கேட்கும் கேள்வி..

இந்த கேள்வியைக் கேட்காத தாயும் உலகில் உண்டா?

“என்னால உனக்கு எத்தனை சிரமம்?”

சிரமமா….?

அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு எத்தனை நேரம் இருந்தாலும் சம்பாவுக்கு அலுக்காது..
அந்த ஸ்பரிசமே கதைகதையாய்ச் சொல்லுமே!

சம்பா…சம்பங்கி….அம்மா ஆசையாய் வைத்த பெயர்…

***

சம்பங்கி…சம்பா…!

“அம்மா..சம்பங்கின்னு பேரு வைக்கணும்னு உனக்கு எப்பிடி தோணித்து..? யாருமே இந்த பேர்ல எங்க ஸ்கூல்ல இல்ல…!

“சம்பா… நான் சின்னவளா இருக்கும்போது நாங்க குடியிருந்த வீட்ல ஒரு சம்பங்கி செடி இருந்தது..வாசன ஊரையே தூக்கும்…ரஜினிகந்தான்னு சொல்வாங்க… அதுதான் என்னோட பெஸ்ட் ஃபரெண்ட்…!

அது கிட்ட நின்னு மணிக்கணக்காக பேசுவேன்…

கல்யாணம் ஆனதும் அப்பா அம்மாவ விட்டுப்போறோமேன்னு கூட அழல…
சம்பங்கி செடிய கட்டிப்பிடிச்சு தான் அழுதேன்..

அடுத்த தடவ அப்பா என்ன பாக்க வரும்போது பொறந்த வீட்டு சீர்… கையில ஒரு சம்பங்கி கன்னு…

அப்பான்னு அப்படியே கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்தேன்..
நீ சம்பங்கிதான்னு முடிவு பண்ணிட்டேன்..

ஏன்..உனக்கு இந்த பேர் பிடிக்கலியா..? “

அம்மா..இந்த பேரையும் பிடிச்சிருக்கு.. உன்னையும் அதவிட பிடிச்சிருக்கு…

அப்பா சம்பான்னு கூப்பிட்டாலும் அம்மாவுக்கு அவள் சம்பங்கி தான்..

அப்பா போனதும் அவள் அம்மாவை தங்களோடு வைத்துக் கொள்ள முடிவு பண்ணி விட்டாள்… ஆனால் கிரியோடு வாழ்ந்த வாழ்க்கை அதிக வருடம் நிலைக்கவில்லை ..

அம்மாவுக்கு சம்பங்கியென்றால், சம்பாவுக்கு செம்பருத்தி.. அதுவும் சிவப்பு செம்பருத்தி..

குழந்தைக்கு பெயரும் செம்பருத்தி..செம்பா…!

ஆனால் அவள் கனவுக்குழந்தை கனவாகவே போனது.. மூன்று மாத செம்பருத்தி மலராகும் முன் மொட்டாகவே உதிர்ந்து போனது….

கிரி சீக்கிரமே அவளை விட்டுப் போனபின் அவளும் அம்மாவும்..

இதோ..தொன்னூற்றைந்து வயது வரை ஒருவருக்கொருவர் துணையாய்..

அம்மாவுக்கு அவ்வப்போது நினைவு தப்புகிறது..

சம்பங்கி அவளுக்கும் சம்பாவானாள்..
கட்டிலிலேயே முடங்கிக் கிடந்து கைகால் எல்லாம் கட்டையாய் போவதைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா..?

இதோ.. இன்னும் அரை மணியில் உடற்பயிற்சி தருவதற்கு பிஸியோதெரப்பிஸ்ட் சஞ்சீவ் வந்துவிடுவான்..

அம்மாவுக்கு உடற்பயிற்சியுடன் அவளுக்கு மனப்பயிற்சியும் கூட..

அவனுடன் செலவழிக்கும் ஒரு மணிநேரம் தான் அவளுக்கு அவளாக தோன்றும் நேரம்..

அவள் மனதுக்குள் ஒரு புத்துணர்ச்சி தோன்றும் பொன்னான நேரம்….

சஞ்சீவ்….

***

அம்மா மிகவும் பொறுமைசாலிதான்.ஆனால் பூப்போல ஆகிவிட்டதே அவளது தேகம்..தொட்டாலே வலிக்கிறது..!
.
இத்தோடு மூன்று பிஸியோதெரபிஸ்ட் வந்து போனதுதான் மிச்சம்…

“எனக்கு எதுக்கும்மா இந்த தண்டன.. ??இப்பிடியே விட்டுடுங்கோ…!”

யாரையும் தொடவிடமாட்டாள்..

ஆனாலும் சம்பா மனசு கேட்கவில்லை..

சஞ்சீவ் வித்தியாசமானவன்..

அம்மாவைப் பார்த்ததுமே புரிந்து கொண்டான்.. மயில் இறகால் வருட வேண்டிய மென்மையான தேகம்…

இரண்டு நாள் அம்மாவைத் தொடவேயில்லை…

“பாட்டி… எப்படி இருக்கீங்க? என் பேரு சஞ்சீவ்…உங்க பேரென்ன…?”

அம்மா பதிலே பேசவில்லை..

“அம்மா…உங்க பேரு செண்பகவல்லி, இல்லியாம்மா…?”

அவளுடைய முழுப் பெயர் அவளுக்கே மறந்துபோய் எத்தனை நாளாகிறது..?

பொக்கை வாயைத் திறந்து சிரிக்கிறாள் அம்மா…!

“நீ எதுக்கு வந்திருக்கேன்னு எனக்கு தெரியுமே “

“சொல்லுங்க பாப்போம்..“

“வலிக்கும்பா… எனக்கு இனிமே இதெல்லாம் எதுக்கு.‌?”

“நான் ஒண்ணும் பண்ண மாட்டேன்..சும்மா பேசிட்டிருக்கலாம் என்ன?

என் கைய பிடிச்சுக்குங்க…வேற ஒண்ணும் பண்ண வேண்டாம்…”

ஒரு வாரத்திலேயே “சஞ்சீவ் வரலியா..? “

என்று கேட்க வைத்தான்..

மந்திரக்கோலால் தடவினாற்போல் அம்மா அவன் மகுடிக்கு ஆடும் நாகமானாள்..
கைகால் விறைப்பு குறைந்து நீட்டி மடக்கினாள்..

சஞ்சீவ்..!

அம்மாவுக்கு பயிற்சி முடிந்ததும் சம்பாவுடன் பத்து நிமிடமாவது பேசாமல் போகமாட்டான்…

“சஞ்சீவ்.. உனக்கு இருபத்தஞ்சு வயசு இருக்குமா ? இத்தன பொறுமையும், பணிவும், கனிவும் ! உங்கம்மா உன்ன நெனச்சு ரொம்பவே பெருமைப்படணும்…!

“அம்மா..இது எனக்கு வாழ்க்கை கத்துக் கொடுத்த பாடம்..வலியோட கத்துகிட்ட பாடம்…!

மத்தவங்க வலியைப் போக்கறதில ஒரு சுயநலம் கலந்திருக்கு…என் வலி மறந்தே போச்சு….!”

***

சஞ்சீவின் தாத்தா பாட்டி ஆந்திராவிலிருந்து மதுரையைச் சேர்ந்த வடுகப்பட்டி கிராமத்தில் வந்து குடியேறிய தெலுங்கு நாயக்கர்கள்..

அம்மா அங்கிருந்த பள்ளியில் மூன்றாம் வகுப்பு ஆசிரியை…

அப்பா பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை.. அம்மாவுக்கு முறைதான்.. அவருடைய நல்ல குணத்துக்காகவே அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாள்..

ஒரு கடையில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்தார்..

சஞ்சீவுக்கு எட்டு வயது இருக்கும்போது அவரது சைக்கிளில் லாரி மோதியதில் இடுப்புக்குக் கீழே உணர்விழந்தார்..

சஞ்சீவுக்கு இரண்டும்கெட்டான் வயது..

“ஏம்மா.. நயினா இனிமே எந்திரிச்சு நடக்காதா…? கை, காலு நீட்ட முடியாம கெடக்குதே…! அம்மா…! ஏதாச்சும் செய்யணும்மா…!”

பள்ளி விட்டதும் அப்பா பக்கத்தில் வந்து உட்காரந்து விடுவான்..

“நயினா…வலிக்குதா…? சொல்லு நயினா…! நானு நீவி விட்டா சரியாகப் போகும்…”

“ஐயா…எங்கனுக்குள்ள வலிக்குதுன்னே சொல்லத் தெரியலையே…ஆனா உன் கை பட்டாலே சுகம்மா இருக்குதய்யா…”

அவன் பக்கத்திலுள்ள மருத்துவர்களிடம் அவருக்கு செய்யக் கூடிய பயிற்சிகளை கற்றுக் கொண்டு வந்து உடனே செய்து பார்ப்பான்..

“அம்மா..இங்க வந்து பாரு…விரலு அசையுது..”

“அம்மா கைய தூக்கினாரும்மா…நீ பாக்கலியே…”

“நயினா கண்டிஷனா எந்திரிச்சு நடப்பாரு…நம்பும்மா….”

நம்பிக்கை…அது ஒன்றேதான் சஞ்சீவின் ஆயுதம்…

கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்தாலும் முழுவதும் குணமடையாமல் போய்ச் சேர்ந்து விட்டார்..

ஒரு வருஷம் சஞ்சீவ் பித்துப்பிடித்தவன் போல நடந்து கொண்டான்…

“விடக்கூடாது…அப்பா போனால் என்ன..? அவரை மாதிரி எத்தனையோ பேருக்கு நான் ஏன் உதவக் கூடாது…?

பள்ளிப் படிப்பை முடித்ததுமே உடற்பயிற்சி டிப்ளமோ கோர்ஸில் சேர்ந்தான்.. பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே முதுகலை படிப்பையும் முடித்தான்…

அவன் கைபட்டு படுக்கையிலிருந்து எழுந்து நடமாடும் ஒவ்வொரு மனிதரிலும் அவனுடைய தந்தை முகம்தான் வந்துபோகும்…

சஞ்சீவ் சம்பாவின் குடும்பத்தில் ஒருவனானான்…

***

சம்பாவுக்கு வெறுமை பயமுறுத்தியது..தோட்டத்தை சுற்றிப்பார்ப்பததில் கூட முன்பிருந்த ஆர்வம் இல்லை..

சருகுகள் எல்லாம் சுத்தமாக அள்ளப்பட்டு, அப்போதுதான் குளித்துவிட்டு வந்த குழந்தையைப் போன்ற தோட்டம் அவளுக்கு ஆனந்தம் தரவில்லை..மாறாக கோபமும் ஆத்திரமும் வந்தது..

ஏன்..? காய்ந்த சருகுகள் இருந்தால் என்ன?

விடாப்பிடியாக தொங்கிக் கொண்டிருந்த சருகுகள் எங்கே….? தானாகவே உதிர்ந்து போனதா…?

அம்மா…! என்னை தனியாக விட்டு விட்டு ஏன் போனாய்..?

இல்லையில்லை.. இதுதான் உலக நியதி..நீ மேலும் துன்பப்படக் கூடாது….!

அவளுக்கு பிடித்த மல்லிகைக் கொடி நேற்று அடித்த காற்றில் அப்படியே சாய்ந்து கிடந்தது..

சிவாவைக் கூப்பிட்டு இழுத்து கட்ட வேண்டும்.. ஒரு பந்தல் போட்டால் என்ன..? அதற்கு இப்போது ஒரு கொழுகொம்பு தேவைப்படுகிறதா..?

சிறிது நேரம் வெறுமையிலேயே கழிந்தது..
உள்ளே போய் என்ன செய்யப் போகிறாள்..?

குமுதா வை திருப்பி வரச்சொல்லலாமா..? பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லை..

சஞ்சீவ் வருவதை நிறுத்தி ஆறு மாதம் இருக்குமா…?

‘சில தவிர்க்க முடியாத காரணங்களினால் தற்காலிகமாக நான் விடுப்பில் இருக்கிறேன்..’

இதற்கு மேல் அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விட்டு விட்டாள்..

அம்மாவின் இழப்பு அவனை நிச்சயம் பாதிக்கும்.. வேண்டாம்..இப்போது சொல்வது சரியில்லை..

தனிமையை கொஞ்சம் கொஞ்சமாக தழுவிக் கொண்டாள்..வேறு வழியின்றி..!

திடீரென ஒரு நாள் அவளே எதிர்பார்க்காத ஆச்சரியம்…

***

ஒலிக்க மறந்திருந்த அழைப்பு மணியின் இனிய சங்கீதம்..!

வாசல் கதவைத் திறந்த சம்பாவுக்கு இன்ப அதிர்ச்சி..

சஞ்சீவ்…கூடவே ஒரு வயதான பெண்மணி.. மற்றும் அவன் வயது ஒத்த பெண்.

“ஆஹா.. !சஞ்சீவ்..!என்ன மறந்திட்டியோன்னு நெனச்சேன்.. வாட் எ சர்ப்ரைஸ்…! வாங்கம்மா..வாம்மா…! “

“அம்மா…..!சாரி கேட்டு என்னோட வருகைய அந்நியமாக்க விரும்பல… உங்களுக்கு சொல்லாமலே எல்லாம் புரியும்…அம்மா போனத கேள்விப்பட்டேன்…

கடைசியில அவுங்க கையப்பிடிச்சிக்கிட்டிருக்கிறது நானாத்தான் இருக்கணும்னு ஆசப்பட்டேன்..

நாம் விரும்பினதெல்லாம் வாழ்க்கையில நடக்காதுன்னு சின்ன வயசிலையே அம்மா புரிய வச்சிருக்காங்க..

கிடைக்கிற வாழ்க்கைய விரும்பி ஏத்துக்கொள்ள பழக்கிவிட்டிருக்காங்க…!

பைதிபை… இவுங்க என் அம்மா தாமரை..இது என் மனைவி மல்லிகா…!..”

“சம்பா.. !உங்களைப் பத்தி இவன் பேசாத நாளே கிடையாது..உங்கள பாக்க இப்போதான் சந்தர்ப்பம் அமஞ்சுது…”

“அம்மா ..!கல்யாணத்துக்கு கூட கூப்பிட முடியாத சூழ்நில…இவதான் என் சுகதுக்கங்கள்ள பங்கு கொள்ள வந்த வாழ்க்கைத் துணை…

“மல்லிகா… இவுங்க சம்பா ஆன்ட்டி… இன்னொரு அம்மா இருக்காங்கன்னு சொல்வேனே…!”

சம்பா அப்போதுதான் மல்லிகாவை முழுவதுமாக பார்க்கிறாள்.. கக்கத்தில் ஊன்றுகோலுடன்…மிக இயல்பாக,
“நைஸ் டு மீட் யூ ஆன்ட்டி “என்று இரு கரங்களையும் நீட்டியவளை அப்படியே தழுவிக் கொண்டாள்…

நால்வருமே சூழ்நிலை இறுக்கத்தை தளர்த்தும் கலையை அறிந்தவர்களான தால் அங்கே ஒரு சௌக்கியமான அமைதி நிலவியது..

“அம்மா..உங்க பிள்ளையை நெனச்சு நீங்க ரொம்பவே பெருமைப்படணும்… அவன் உடலுக்கு மட்டுமில்ல, மனசுக்கும் சேத்து பயிற்சி அளிக்கிற கலையை கத்து வச்சிருக்கான்…

சஞ்சீவ்..மல்லிகாவப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே…!

அவளைப் பாத்தா இன்னைக்கு பூத்த மல்லிகைப்பூ நெனவுதான் வருது….!”

“அம்மா.. நான் வந்ததே இந்த ஆறு மாசத்துல என்ன நடந்ததுன்னு சொல்லத்தானே….!

சஞ்சீவ் பேச ஆரம்பித்தான்…..

***

“மல்லிகா எங்க ஊரு பொண்ணுதான்.ஒருவிதத்துல தூரத்து சொந்தம்.பாட்டி மட்டும்தான்..நல்லா படிப்பா..படிச்சு டாக்டராகணும்னு ஆசப்பட்டா..

அம்மா வேலை பாத்த பள்ளிக்கூடத்தில படிச்சு ஸ்கூல்ல முதல் மாணவியா வந்தா..

அம்மா கிட்ட அடிக்கடி வந்து சந்தேகம் கேப்பா..

ஒருநாள் அம்மாவக் கூட்டிட்டு நூலகத்துல புத்தகமெல்லாம் எடுத்திட்டு திரும்ப வரும்போது…..”

சஞ்சீவுக்கு தொண்டையில் வார்த்தைகள் சிக்கிக் கொண்டது..

“மல்லிகா என் கையப் பிடிச்சுட்டு தான் இருந்தா.நடுவுல ஒரு பைக் வேகமா குறுக்க வந்து என்மேல மோதப் போனான்.
என்ன அப்படியே தள்ளிவிட்டா…! அவ கால் மேல பைக் ஏறிடிச்சு….!”

“அம்மாவுக்கு உடம்பெல்லாம் காயம்….மல்லிக்கு…..

அவன் மல்லிகாவைத் திரும்பிப் பார்த்த பார்வையே மீதிக்கதையை கூறாமல் கூறியது….

“சஞ்சீவ்..மேல என்ன நடந்திருக்கும்னு புரிஞ்சு போச்சு…”

“ஆமாம்மா… இவங்க இரண்டு பேரையும் பழையபடி எழுந்து நடக்க வைக்க முடியலைனா என்னோட படிப்புக்கு என்ன மதிப்பு?

ஒரு பார்ட் டைம் வேலையும் பாத்துகிட்டு.. !உங்களைப் பாக்க வரமுடியலையேன்னு நான் நினைக்காத நாளில்ல..”

“மல்லிகா..! உங்க இரண்டு பேர்ல யாரு அதிர்ஷடசாலின்னு சொல்லத்தெரியல…!”

“சம்பா..என்ன விட்டிட்டியே… நான்தான் கொடுத்து வச்சவ…”

தாமரை இரண்டு பேரையும் அணைத்துக் கொண்டாள்..

“மல்லிகா.. சஞ்சீவ் மாதிரி ஒரு துணை கிடைச்சா வாழ்க்கையில என்ன வேணா சாதிக்கலாம்..நீ உன் மருத்துவ கனவ நெனவாக்கணும்… அதுக்கு என்னோட வாழ்த்துக்கள்…!

***

சம்பாவுக்கு மீண்டும் தோட்டத்தை சுற்றிவரும் ஆர்வம் வந்துவிட்டது..

சருகுகள் காய்ந்து விழுவது அவள் மனதை உறுத்தவில்லை…

புதிதாக துளிர்க்கும் இலைகள், பூக்களின் மணம் அவளுக்கு சுவாசப் புத்துணர்ச்சி அளிக்கிறது.

இப்போதெல்லாம் மல்லிகைப்பந்தல் முன் அப்படியே மெய்மறந்து நிற்கிறாள் சம்பா..

பந்தலை அடைத்துக் கொண்டு மணம் வீசும் மல்லி மொட்டுக்கள்….!

யாருக்காகவும் எதுவும் நிற்கப் போவதில்லை…!

சம்பாவுக்கு இப்போதெல்லாம் தனிமை பயமுறுத்தவில்லை….!

பழகிப்போனது…! பிடித்துப் போனது….!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *