தொடாமல் நின்றவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2020
பார்வையிட்டோர்: 5,233 
 
 

அன்று தோட்டத்தில் வருடாந்திர ஆலயத்திருவிழா. காலை பூசைக்குப் பிறகு தீமூட்டப்பட்ட காண்டாகட்டைகள் பதமாக வெந்து தீக்குழி கனகவென்ற தணலுடன் தயார் நிலையில் இருந்தது. அதில் மேலும் அனல் கனியத் தென்னை மட்டை கொண்டு கிளறி விடப்பட்டது. தீக்குழிக்கு எதிரே உள்ளூர், வெளியூர் பக்தர்களும் பார்வையாளர்களும் பக்திப் பரவசத்துடனும் வேடிக்கை பார்க்கவும் குழுமியிருந்தார்கள்.

நேர்த்திக்கடனைத் தீக்குழி இறங்கி நிறைவேற்ற ஆண்களும் தீக்குழி வலம் வர பெண்களும் காத்திருந்தனர். தீ இறங்குபவர்களுக்கும் தீக்குழி சுற்றி வருபவர்களுக்கும் மஞ்சள் நீரைத் தலை முதல் கால் வரை ஊற்றிக் கொண்டிருந்தார்கள் தொண்டர்கள். அதுவே தீக்குழி சுற்றக் காத்திருந்த அவளுக்குள் ஒரு தகிப்பை ஏற்படுத்தியிருந்தது. சல்லாத் துணியில் பாவாடை ரவிக்கை போட்டிருந்த சில பருவப் பெண்களின் மேடு பள்ளமான இடங்கள் சில கண்கொத்திகளுக்கு ரசிப்பாக இருந்திருக்கும் போலும். அப்படிப்பட்ட அநாகரிகக் கூரிய கண்களின் ரசனை வெறுப்பை ஏற்படுத்தியது அவளுக்கு. சில வயசுப் பையன்கள் ஒருவர்க்கொருவர் கண்களால் சைகை செய்து கைபேசி காமிராவில் படம் பிடித்துக் கொண்டிருந்ததும் பாக்கியவதியின் சினம் தலைக்கேறக் காரணமானது. இவள் சற்று தடிமனான துணியில் தைக்கப்பட்ட பாவாடையும் ரவிக்கையும் போட்டிருந்தாள். அது கொஞ்சம் பாதுகாப்புப் பலத்தைக் கொடுத்திருந்தது.

தீக்குழிக்கு எதிரே ஆற்றங்கரையிலிருந்து பக்தர்கள் புடைசூழ மாரியம்மன் திருவுருவை அலங்காரமாகக் கொண்டு வந்த இரதம் காட்சியளிக்க நுகத்தடியிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் இரண்டு பக்கங்களிலும் நிமிர்ந்த திமில்களோடு நின்று கொண்டிருந்தன. மஞ்சள் வேட்டி கட்டியிருந்த ஆண்களும் தீக்குழி சுற்றக் காத்திருந்த பெண்களும் தவில், உருமி மேளம், நாயன ஒலி முழக்கத்தில் தங்களை மறந்திருந்தார்கள். அப்படிப்பட்ட சூழல் கொண்ட கோவில் வளாகத்தில் நின்றிருந்தாலும் பாக்கியவதிக்கு மகிழ்ந்து அதனுள் தன்னை முழுமையாக இருத்திக் கொள்ள முடியவில்லை. மீண்டும் மீண்டும் தாயின் கடுகடுத்த முகமும் விட்டெறிந்த சுடு சொற்களும்தான் கனத்த மணியோசையாகக் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தன.

‘யாருக்கும் இல்லாம ஏந்தான் இவளுக்கு மட்டும் இது நடக்குதோ தெரியலிய… பெரியவளுக்கு பதினோரு வயசிலய நடந்து போச்சு. இவளுக்கு கீல நேத்து பொறந்தவ… கொஞ்சம் தள்ளிப் போனாலும் பதினாலுல பொம்பளப் புள்ளயா நிமிந்து நின்னுருக்கா… மனசுக்கு எவ்ளோ நிம்மதி… இந்த மாட்டுக்கு பதினேலு முடிஞ்சி பதினெட்டு பொறக்கப்போவுது… கடேரி கணக்கா நின்னுக்கிட்டுதான இருக்கா…’ தாயின் இப்படிப்பட்ட வக்கணையற்ற வார்த்தைகளும் பினாத்தல்களும் காதுக்குள் மிக மௌனமாகவும் சில நேரங்களில் கனத்தும் ரீங்கரிக்கும். அதுபோது அவளுக்கும் கொஞ்சமாக அழுகையும் வரும். ‘இது என்ன என் குற்றமா…எனக்குந்தா அந்த ஆச இல்லையா..? மாராப்போட பாவட கட்டிக்கிட்டு நாலு பெரிய மனுசிங்க மஞ்ச தண்ணி ஊத்தி ஆரத்தி எடுக்க… புதுப்புடவ உடுத்தி நடு வூட்ல ஒக்கார வச்சி முறைமாமனுங்க கேலி செய்ய அத்தைங்க அழைச்சிட்டுப்போயி மனையில உக்கார வைக்க… சுமங்கலித் தாய்மார்கள் என் கன்னங்கள் கனிய கனிய சந்தனம் குங்குமம் பூச… ஏங் கூட்டாளிங்கல்லாம் அத பொறாமையாப் பாக்க… அம்மாவும் அப்பாவும் பெருமையோட நிக்க…’ அதற்கு மேல் எதுவும் நினைக்க முடியாததாய் எண்ணத் தொடர் பாதியிலேயே அறுந்து நின்று போன வேதனை நிரம்பிய பல தினங்கள் உண்டு.

அன்றொரு நாள் பாக்கியவதிக்கு வில்லங்கம் ஒன்று சொல்லாமல் வந்து வீட்டு வாசலில் காத்திருந்தது. அவர்களின் குடும்ப நண்பர் ஒருவர் பல வருடங்களுக்குப் பின் வந்திருந்தார். பாக்கியாவைப் பார்த்து, ‘அடேங்கப்பா பொண்ணு எப்படி நெடு நெடுன்னு வளர்ந்து போயிருக்கா… இப்படிப்பட்ட பொண்ணுங்களதான் எங்க குடும்பத்துக்கு ரொம்பவும் புடிக்கும்… சத போட்டு பாதி மல போல இல்லாம கச்சிதமா இருக்கா… ஏம் பையனும் ரொம்பவும் விருப்பப்படுவான்…’

பையனும் பொருத்தமானவனாகவும் கைநிறைய சம்பாதிப்பனாகவும் இருந்ததையும் அறிய முடிந்தது. இருந்தும் என்ன பதில் சொல்வது என்னும் இக்கட்டில் தாய் தவித்தாள். ‘இவ இன்னும் சின்ன பொண்ணாத்தான இருக்கா… கொஞ்ச நாள் கழித்து பாத்துக்கலாமே..’ இப்படிப் பதில் சொன்னாலும் உண்மையை மறைக்க தாயின் மனம் நெளி நெளியாய் நெளிந்து வளைந்ததானது இவளைப் பார்த்த முகச் சுழிப்பிலிருந்தே தெரிந்தது.

அவள் அம்மா ஒருநாள் தனியார் மருந்தகம் கூட்டிச் சென்றார். அப்போது மருத்துவர் சில கேள்விகள் கேட்க “ஆமாங்க டாக்டர், இவதான் மூத்தவ… அதோட எங்க குடும்பத்தில அப்போது ஆம்பள புள்ளங்க கெடையாது… அதனால இவளுக்கு பையன்ங்க சட்டையெல்லாம் போட்டு ‘கிராப்’ வெட்டி ஆம்பள புள்ளளைங்க கணக்கா வளத்தோம்… இவளும் பையனுங்க கிட்ட சகஜமா வெளையாடுவா… நானும் பெரிசா எடுத்திக்கிடல… எங்களுக்கும் அது ஒரு தவறா தெரியல… கொஞ்சம் பெருமையா கூட எனக்கு இருந்துச்சி… கூப்டும்போது கூட ஒரு ஆண் பிள்ளையக் கூட்ற மாதிரி வாடா போடானுதான் கூப்டுவோம்… இதுக்கும் அதுக்கும் ஏதாவது…?” இப்படி வெகுளித்தனமாக வினா எழுப்பினார்.

“அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பு இல்ல… அதனோட தாக்கம் கொஞ்சம் இருக்கலாம்… மெடிகல் டெர்ம்படி இத பியூட்டரி சுரப்பி ‘ஈஸ்ரோஜென்’ சுரக்கும்போது ஏற்படுற மாறுபாடுன்னு வகைப்படுத்தலாம். இது சகஜந்தா நீங்க வீணா கவலைப்படாதீங்க…” இப்படிக் கூறியவுடன் பாக்கியின் தாய் சற்றே ஆறுதல் அடைந்தார்.

பெண் மருத்துவர் அவளிடம் மட்டும் கேட்ட வினாக்களுக்கு, ‘ஆமாங்க டாக்டர் நான்தா எங்க பள்ளிகூட ஓட்டக்காரி. விளையாட்டு, ஓட்டப்பந்தயம், வீட்டுக்கு வந்த பின்னாடி ஆம்பள பிள்ளைங்களோட ஆத்துல நீச்சல் கூட அடிக்கப் போவேன். பையனுங்க கூட கால் பந்து, கில்லி கூட விளையாடியிருக்கேன்.’ அவள் ஆர்வமாகக் கூறினாள்.

“மிக ஈடுபாட்டோட விளையாட்டுத் துறையில ஈடுபட்டதும் நீங்களும் சின்ன வயசிலேயே அவளுக்கு ஆண்பிள்ளைத் தன்மைய விதச்சதும் உரிய காலத்தில பெரிய மனுசியா ஆவதில் தடை ஏற்பட்டிருக்கு…… நீங்க பயப்படாம போய் வாங்க,” இப்படி மருத்துவத்தையும் உடற்கூறுகளையும் முன் வைத்து மருத்துவர் விளக்கியிருந்தாலும் பாக்கியின் தாய் சமாதானப்படுவதாயில்லை.

“இங்க பாருடி இந்த மஞ்ச துணியில பத்து வெள்ளி முடிஞ்சி வைக்கிறன். நாம சாமி முன்னால சத்தியம் பண்றம். நீ சீக்கிரமே வயசுக்கு வரணும் அதுக்கு அந்த மாரியாத்தா கண் தொறக்கணும். மத்தவங்க ஏளனமா சாடமாடயா பேசறத என்னால தாங்கிக்க முடியல… சுத்த பத்தமா இருந்து தீக்குழி சுத்தணும்… இல்லன்னா உனக்கு நடக்கறது நடக்காம போயிடும். பதனாலு நாலு மரக்கறி மட்டுந்தான் சாப்டணும். எனக்கு தெரியாம கருவாடு, நெத்திலிப் பொடி, முட்ட எதுனாச்சும் பொரிச்சு சாப்பிட்ட மவளே உண்டு இல்லன்னு பண்ணிப்புடுவன்…’ தாயின் தீக்குழி சுற்றுதலுக்கான விலாவாரியான பட்டியல் வாசிக்கப்பட்டதானது பாக்கியின் மனதுக்குள் ஒரு நகைப்பையே உண்டாக்கியது. தாயின் மற்றொரு விண்ணப்பம்தான் அவளுக்குள் மேலும் ஒரு மிரட்டலை ஏற்படுத்தி விட்டது.

“பாக்கி, இன்னோன்னையும் மனசுல வச்சுக்கடி… உன் மாமன்காரனும் தீ எறங்கறதா வேண்டிக்கிட்டிருக்காரு…உன்னோட அக்காகாரி நாலயும் பொண்ணா பெத்துப் போட்டிருக்கா… இந்த தடவயாவது ஒரு ஆம்பள புள்ள வேணும்ணு வேண்டிகிட்டு மாமன் தீ எறங்கறாரு. நீ சரியா நடந்துக்கலைன்னா அவங்களோட வேண்டுதலும் பலிக்காம போயிடும்…அந்த பழி உன்னையும் பெத்த என்னயும் வந்து சேரும்… நல்லா மனசுல வச்சுக்க…”

அக்காளின் பிள்ளைவரமும் இவளுடைய தீக்குழி வலம் வருதலில் தொங்கிக் கொண்டு ஊஞ்சலாடுவதை எண்ணி ஒரு பக்கம் நக்கல் ஏற்பட்டாலும் அப்படியும் நடக்க வாய்ப்பு உண்டோ எண்ணும்போது உள்ளுக்குள் ஒரு பதைபதைப்பும் ஏற்பட்டுப் போனது. அன்றிலிருந்து சாப்பாட்டிலிருந்து மற்ற எல்லா நடவடிக்கைகளிலும் கூடுதல் கவனம் மேற்கொள்ள வேண்டியிருந்தது பாக்கியவதிக்கு.

“மூனு தடவ சுத்தி முடிச்சவங்க கோயிலுக்குள்ள போங்க…” என அறிவிப்பு வந்த போது கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டுப் போனது மனது. ‘அடேங்கப்பா எவ்ளோ பெரிய சாதனய செஞ்சிருக்கோம்… அம்மா இனிமேலாவது கொறட்ட விட்டு நிம்மதியா தூங்குவாங்க… அப்படியும் அது… இல்லன்னா..!?’ இதைச் சொல்லித் தனக்குள் பரிகசித்து ரசித்துக் கொண்டாலும் ஓர் அச்சமும் கொஞ்சமாக சின்ன அணிலைப் போன்று தொத்திக் கொண்டது.

‘தீ எறங்கறது சொம்மா இல்ல… காப்பு கட்ண பின்னாடி பதனாலு நாளைக்கு பத்திய வெரதம் இருக்கணும். மரக்கறிதான் சாப்டணும்… கள்ளு, பீரு வாய்லயே வைக்கப்படாது… முடிஞ்சா கோயில்லதான் படுக்கணும்… ஊர் எல்ல தாண்டக்கூடாது… அந்த வேலியையுந்தா..! இப்பல்லாம் அத யாரு செய்றாங்க…நேர்த்திக்கடன் செலுத்துன்றது ஒரு நம்பிக்கைன்னாலும் அதுலயும் நம்ம மனச முழுசா ஈடுபாடு வச்சாதான் நம்ப வேண்டிக்கிட்டத அம்பா நமக்கு அளுள்பாலிப்பா…’ இப்படிப்பட்ட இன்னும் பல பக்தி பரவசச் சொற்களும் கூடுதலாக சில ரகசிய கொசுறுச் சொற்களும் கோவிலுக்குள் ஏற்பட்டிருந்த கசமுசாவிலும் காதில் விழுந்து கொண்டிருந்தன.

அப்போதுதான்..! திடீரென கோவிலுக்கு வெளியே கூச்சல், கூப்பாடு, குழப்பம் ஏற்பட்டுப் பரவியது. அது தீக்குழி பக்கமிருந்துதான் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அங்குள்ளவர்களின் பரபரப்பிலிருந்தும் குழியைச் சுற்றிலுமிருந்த பக்தர்களின் சிதரலிலும் தெரிந்தது. அதைத் தொடர்ந்து ஒலித்த அந்த ஆக்ரோசமான குரலைக் கேட்டு அவள் ஒருகணம் செயலற்று நின்றாள்.

“அடியே, பாவி, என்னாடி செஞ்சி தொலைச்சே… பண்ணிப் பண்ணிச் சொன்னனே, வெரதம் புடிடின்னு… எனக்கு தெரியாம என்னவெல்லாம் தின்ன… நீ தீக்குழிய மூனு சுத்து சுத்திட்டு ஜாலியா வந்துட்டே… அங்கன என்னா நடந்துச்சுன்னு தெரியுமாடி..?” ஆலயத்திலுள்ள ஆக்ரோசமான பத்ரகாளியாய் எதிரே நின்றாள் பாக்கியின் தாய். தாயின் தோற்றம் இவளுக்குள் ஒரு விதிர் விதிர்ப்பை உண்டாக்கி விட்டது.

“நாஞ்சொன்ன மாதிரி செய்யாமப் போனதால உம்மாமன்காரனுக்கு ஆத்தா நல்லா தண்டன குடுத்துட்டா…தீக்குழியில விழுந்து மனுசன் ஒடம்பெல்லாம் வெந்து போயி புண்ணா கெடக்குறாரு… ஆசுபத்திரிக்கு தூக்கிட்டுப் போறாங்க… இப்ப உனக்கு ரொம்ப சந்தோசமா…” தாயின் அறியாமையால் ஏற்பட்ட ஆங்காரக் கத்தல் அவளுக்குள்ளும் ஊசிமிளகாயைக் கடித்த சுரீர் காரத்தை ஏற்படுத்தியது.

இப்படியாக அந்த ஆண்டு திருவிழாவானது அவளது வாழ்க்கையில் ஒரு மின்மினியின் மங்கலான ஒளியைக் கூடத் தராமல் போனது. அதன் பாதிப்பும் பிரிதிபலிப்பும் அவள் தாயின் முகத்தில் இவளைப் பார்க்கும்போது வெடிக்கும் வெறுப்பிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. திருவிழா முடிவுற்ற சில தினங்களுக்குப் பின் பாக்கியின் மாமன் தீப்புண் காயம் ஆறி வெற்றிகரமாக வீட்டுக்கு வந்து வந்துவிட்டார். அப்படிப்பட்ட ஒரு நாளில் அவளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுப் போனது மாமனுக்கு. ‘என்ன மாமா, விரதம் இருக்கேன்ற பேர்ல யாருக்கும் தெரியாதுன்னு தோடத்துக் கடையில ரகசியமா கூட்டாளிங்களோட பீர் குடிச்சத எல்லோரும் தெரிஞ்சிக்கணுமா..? இல்ல வீட்டுகுள்ளயே போட்ட முக்கியமான எல்லைக்கோட்ட தாண்டன ரகசியத்த போட்டு ஒடைக்கட்டுமா..!’ எனக் கேட்பது போலிருக்கவே தலையைக் குனிந்து அவளைப் பார்க்கவே வெட்கப்பட்டார்.

“அம்மா, பாக்கி கண்ணு அம்மா ஊம்பேருக்கு முடிஞ்சி வச்சிருந்த பத்து வெள்ளிய அவுத்துக் கொண்டு போயி தண்ணியடிச்சிட்டேன்டா… அம்மா கிட்ட மட்டும் சொல்லிடாத…” தந்தையின் வேண்டுகோள் கேட்டு அவளுக்குச் சிரிப்பு தான் ஏற்பட்டது. அப்பாவுக்கும் இது ஒரு பாடமாகவே இருக்கட்டும் என அமைதியாகவே இருந்து விட்டாள்.

‘உங்க மருமகன் தீக்குழியில தவறி விழுந்ததுக்கு அன்னைக்கு தீக்குழியில வேகத கட்டைகள தோண்டியெடுத்து அப்புறப்படுத்தாம விட்டுட்டாங்க… அதோட அவர் அன்னைக்கு கட்டியிருந்த மஞ்ச வேட்டி ஒரு பக்கம் அவுந்துதொங்கியிருக்கு இதையும் சரி செய்யாம அவர் காலு சுடுமேன்னு வேகமா ஓடியிருக்காரு…’ இப்படிச் சரியான காரணத்தைச் சிலர் சொன்னாலும் பாக்கியின் தாயின் மனதிற்கு மட்டும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாமலிருந்தது. அவள் மாமனுக்கு ஏற்பட்ட தீ விபத்திற்கு அவளே காரணம் என தாயின் குற்றச்சாட்டு ஆழ்கிணற்றில் விழுந்த இரும்புத் துண்டாக அங்கேயே தங்கி விட்டது.

தோட்டத்தில் அடுத்த திருவிழாவுக்கும் நாள் குறித்தாகி விட்டது. பாக்கிக்கு மட்டும் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் மருத்துவரைப் பார்ப்பதும் முத்து உருட்டுபவர்களைத் தேடிப்போவதும் ஜாதகம், தோசம் கழித்தல் சமாச்சாரங்களும் எந்தக் குறைபாடும் இல்லாமல் அதுபாட்டில் நடந்து கொண்டிருந்தன.

இம்முறையும் மாமன் ஆண்பிள்ளைக்காக தீயிறங்க வேண்டிக் கொண்டு காப்பு கட்டியதிலிருந்து பயபக்தியோடு நல்லபிள்ளையாக கோவிலிலேயே படுத்துக் கொண்டார். தகப்பன் முடிந்து வைத்திருந்த மஞ்சள் துணி பக்கமே போகவில்லை.

இந்த நடப்புகளுக்கு மத்தியில்தான் அவனை அவள் பார்த்தாள். இளம்பிள்ளை வாத நோய் ஒரு காலை ஊனப்படுத்தி உந்தி உந்தி நடக்க வைத்திருந்தது. சில மாதங்களுக்கு முன்புதான் தோட்டத்தில் டிராக்டர் டிரைவராக பதவியில் அமர்ந்திருந்தான். காலில் குறைபாடு தெரிந்தாலும் பூ மொட்டவிழும்போது காணும் அழகும் மென்மையான ஆண்மையும் அவன் முகம் முழுதும் வியாபித்திருந்தது. உடல் உறுப்பில் ஏதாவது ஒரு சேதம் உடையவர்களுக்கு அடுத்ததைக் கடவுள் பரிபூரணமாக அள்ளிக் கொடுத்து விடுவாராம். பாக்கியும் கேள்விப்பட்டிருந்தாள். அவன் பார்வை இவள் பக்கம் பாயும் போதெல்லாம் ‘ஆமா இந்த இழுவைக் காலுக்கு இதெல்லாம் தேவைதான்..?’ இப்படி ரகசியமாக மனதுக்குள் உதாசீனம் தலைகாட்டினாலும் இவளை இழுத்தணைத்துக் கொள்ளும் ஏதோ ஒரு மாய சக்தி அவனிடம் இருந்தது. ‘தோ பார்றா பாக்கியா பையன் வர்றான்… என்னா நம்ம மாதிரிதான்… மீச வச்சா ஆம்பள பையதான்…’ என அவளை நோக்கித் தோட்டத்தில் இளமை முதல் பழகிய விடலைகள் கேலியும் கிண்டலும் செய்த போது இவன் மட்டும் அவளை ஒரு நிறைவான பெண் தேவதையாகப் பார்த்தான். அது பாக்கியின் கண்ணுக்குள்ளும் அடி மன ஆழத்திலும் ஏதோ ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது. ‘காலம் முழுதும் மற்றவர் நையாண்டி செய்வதுபோல் இருந்து விடுவேனா..?’ என அவள் நைந்து போயிருக்கும்போதெல்லாம் அவனுடைய வசீகரப் பார்வை மனதுக்குள்ளும் உடலுக்குள்ளும் ஒரு இனமறியா குறுகுறுப்பை உண்டாக்கியது.

பக்தர்கள் முன்னும் பின்னும் சூழ்ந்து வர அம்மன் விக்கிரகத்தைச் சுமந்து பவனி வந்த தேர் தீக்குழி எதிரே அழகு ஒளிர நின்று நின்றிருந்தது. எல்லா ஆண்டுகளைப் போல சாங்கிய சம்பிரதாயங்களும் நடைபெற்றன. மேளதாள முழக்கங்கள் சுற்று வட்டம் முழுமையும் ஒலித்தது. பாக்கியா கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிக்கிடந்தாள். உடலும் மனமும் ஏதோ ஓர் இன்பப் பூரிப்பைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. அப்போது..! தீக்குழி வலம் வரக்காத்திருந்த பெண்களுக்கு உடல் குளிர மஞ்சள் நீர் ஊற்றப்பட்டது. நீராட்டலில் பாக்கியா என்றைக்கும் இல்லாத திருநாளாய் நனைந்து குதூகலித்தாள்.

அப்போது…! ‘இங்க பாருடி இந்த மஞ்ச துணியில காச முடிஞ்சி வச்சி சத்தியம் பண்றம்’ தாயின் குரல் பல மங்கல ஓசைகளையும் மீறி வந்து சன்னமாகக் காதுகளில் பல ஒலித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *