சாய முகங்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 17, 2023
பார்வையிட்டோர்: 3,128 
 

(1995 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஐம்பது, அறுபது ஆண்டுகளாக நச்சுக் காற்றையே சுவாசித்து தரசித்து வாழ்ந்ததில் இப்போது எஞ்சியிருப்பது உயிர் மட்டும், அந்த உயிரையும் கொண்டு நினைவிலிருந்து எப்போதோ நீங்கிவிட்ட பிறந்த கிராமத்திற்கு இரயில் ஏறும் போது, நகர வாழ்க்கையே இனி வேண்டாமென சபதம் செய்தார். எவ்வளவு சீக்கிரம் நகரைவிட்டுப் போக வேண்டுமோ அவ்வளவு சீக்கிரமாகப் போவதற்கு முதலில் செல்லும் ரயிலிலே ஏறிவிட்டார்.

விடிந்தால் அனுபவிக்கப் போவது கிராமத்துப் பச்சை இலைக் குளிர்ச்சியும் தூய்மையான தென்றலும் என்ற பெருமிதம். எப்போதும் போல் படுத்து விட்டார். ஆனால் படுத்ததும் உறக்கம் மூடவில்லை. அவர் நிரந்தரமாகத் தங்கச் செல்லும் கிராமச் சூழலைக் கற்பனையில் வரைய முனைந்தார்.

‘இனி மிதிக்கமாட்டேன்’ என்று சபதம் செய்து, முன்பு வெளியேறிய கிராமம். இன்று அவருக்கு ஒரு நினைவுப் புள்ளி மட்டுமே. முகங்கள் இருந்திருந்த கிராமத்து மனிதர்களுக்கு இன்று அவர் நினைவில் முகங்கள் இல்லை.

அங்கு இருந்திருந்த முடுக்குகளும் இடை வழிகளும் மணல் திட்டைகளும் வரப்புகளும் அவரைப் பொறுத்த மட்டில் புதை பொருட்களாகி விட்டன. சில மட்டும் பச்சையாகவே நிற்கின்றன. அலறி அலை எழுப்பிக் கொண்டிருந்த கடல், பாலம், அதற்கடியினூடே ஓடிக் கொண்டிருந்த எலப்ப வீட்டு கை ஆறு.

கடற்கரைச் சிளி மணலில் புரண்டது; கடக் குளி பெரு நாட்களில் கடலில் குளித்தது; வெள்ளாம்பல் பூக்கள் பூத்து, இலைகள் மிதந்து கிடக்கும் எலப்ப வீட்டு கை ஆற்றில் குளித்தது; பாறைகள் மீது வெள்ளாரம் கல்லால் சித்திரங்கள் வரைந்தது… இழப்புகள் நெஞ்சில் ஏக்கக் குமிழ்களை உருவாக்கியது.

இடுக்கமான குளியல் அறையில் சொட்டுச் சொட்டாக வடியும் உப்பு நீரில் குளித்து வந்த, பின்னிட்டுச் சென்ற ஆண்டுகளை நினைக்க, பயமாகவே இருந்தது. வெள்ளாம்பல் பூத்து நிற்கும் எலப்ப வீட்டு ஆற்றுத் தெளிநீரில் கண் சிவக்க முங்கிக் குளிக்க ஆவல் வந்தது.

இரயில் இறங்குமிடத்திலிருந்து வேறு ஒரு பஸ் ஏறிப்போக வேண்டுமென்று நண்பர் ஒருவர் மூலம் ஊருக்கு வழிகேட்டுத் தெரிந்து கொண்டார். மொரார்ஜிதேசாய் துவக்கி வைத்த இரயில், அந்தக் கிராமம் வழியாகச் செல்லவில்லை என்று அறிந்து மகிழ்ந்தார். தங்கி வந்திருந்த பழைய அடுக்கு மாடிக் கட்டடத்தின் கொல்லைப்புறமாகப் பூமியை உலுக்கிச் செல்லும் இரயிலின் ஊத்தும், விசை அமறலும் இரவு பகலாகக் கேட்டுக் கேட்டு, செவிப் பறை நொறுங்கியே போச்சு. இனி எஞ்சியுள்ள காலம், கடல் காற்றின் ஈரக்குளிர்ச்சி நல்கும் சிவீர்ப்பில் ஆற்றுத்தெளி நீரில் முங்கிக் குளித்துக் கொண்டு ‘என்னாண்டவனே” என்று சுகமாக வாழலாம். கிராமத்துக் கன்னி அழியாத சூழலில், கடலிலிருந்து பிடித்து வரும் மீன்களைச் சாப்பிட்டு!

***

அவளிப்போது பேரப்பிள்ளைகளுடன் எங்கு வாழ்கிறாளோ? அதே கிராமத்திலோ, வேறு ஊரிலோ? எலப்ப வீட்டு ஆற்றிலிருந்து குளித்து வந்த அவளைப் பார்த்தவினாடி, மனத்தில் சுழன்று அடித்தப் புயலில் அன்று அது நிகழ்ந்து போனது. உணர்ச்சி வேகத்தின் விளைவு.

அவளுடைய கூக்குரல் கேட்டதுதான் தாம் தம், விட்டில் போல் ஒரே கூட்டம்; காக்கான் குளம் வழியாக சேண்டைப் பள்ளிப் பாறை ஏறி, இறங்கி உசரத்துவிளை கோயில் முன் வந்த போது, கல்ரோட்டில் சந்தையிலிருந்து திரும்பிய பார வண்டிகளின் கடகட சப்தம். அங்கிருந்து கீழ்க்குளம் வாய்க்கால் கரையோரமுள்ள ஒற்றையடி சுருக்குப்பாதை வழியாக போய்ச் சேர்ந்தது கருக்கலில்! அப்போது சந்தையில் சன சத்தடி இல்லாமலிருந்தது.

அன்றைய தொங்கவோட்டம், ஊரை வெறுத்துக் கொண்டுள்ள நீண்டகால வெளியேற்றம்.

***

எப்படி நாலு மனுச முகங்களை நிமிர்த்து பார்ப்பது?

அப்படி இந்தப் பெரு நகரத்திற்கு வந்து, கள்ளி கம்பில் சேக்கையேறியதே பெரும் கதை. குடியிருந்தது வீடா? ஒரு குருவிக் கூண்டு, சமைப்பதும், சுருண்டுறங்குவதும் வெளிக்காற்று புகாத ஒரு நரகக் குழியில், மின்தடைபடும் போதெல்லாம் கிடந்தது, நூற்றாண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டுப்போன காட்டுப் புதர்கள் நிறைந்த ஒரு சுரங்கத்திற்குள். இடிந்து விழும் நிமிடத்திற்காகக் காத்துக் கிடக்கும் ஒரு இதி காசகால கட்டடத்தின் நான்காவது மாடிக்கு ஏறிச் செல்லும் படிகளுக்கடியிலுள்ள இடுங்கிய இருட்டறை அது. ஆட்களின் கால் மிதிபடும் போது ஆட்டம் காணும் மரப்படிக்கட்டு, அதன் மேற்கூரை, புவரும்போது தான் உயிரோடு இருக்கிறோம் என்ற நிம்மதி. பல் விளக்க வரிசை, கக்கூசுக்குச் செல்லட குளிக்கச் செல்லட எல்லாவற்றிற்கும் வரிசை. அதை எல்லாம் இப்ப நினைத்தாலே பைத்தியம் பிடித்து, ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்தாலும் குதித்து விட நேரிடும்.

***

நான்காவதாக மனைவி என்று சேர்த்துக் கொண்டவள் மவுத்தானது இரண்டு ஆண்டு களுக்கு முன், ஒரு நோம்பு தாளில், முதல் மனைவி ஒரு பகட்டுக்காரி. வேறு ஒருவனோடு ஓடிப்போனாள், இரண்டாவதாகச் சேர்த்துக் கொண்டவளை, விரட்டி அடிக்க வேண்டியதாயிற்று, கீழ்மாடியிலுள்ள ஒருவனோடு தொடர்பு, அந்தத் தொடர்பு தன்னுடைய ஆண்மையைக் கேள்வி கேட்பதாக இருந்தது. நாற்பத்தி எட்டாவது வயதில் மூன்றாவதாக சேர்த்துக் கொண்டவள், ஒரு சின்னம்சிறு பொண்ணு. அடுக்கு மாடிகளிலுள்ள தீப்பெட்டிகளில் குடியிருக்கும் சிறு பசங்களுக்கு அவள் மீது ஒரு கண்ணு. அவளைப் பாதுகாப்பதே பெரும்பாடு. ஒருநாள் அவள் மீன் வாங்க மார்க்கெட்டுக்குப் போனவதான்.

இந்தச் சீர்குலைவு கிராமப் புறங்களில் இருக்காது என்ற நினைப்பில் கிராமத்து ஆண்கள் மீது அவருக்கு எப்பவும் உள்ள பொறாமை. தன் மூலம் குழந்தை பெறமாட்டாள் என்று தெரிந்தது முதல், நாலாவதுகாரியின் முகம் இருண்டு தொங்கியது. அவள் மவுத்துக்குப்பின், ஒரு தனிமை உணர்வு இரவு பகலாகத் தொத்திக் கொண்டிருந்தது. அவளுடைய மய்யித்தை நட்டுக் குத்தாக உள்ள இடுக்கான மாடிப்படிகளிலிருந்து கீழிறக்கப் பட்டச்சிரமம்!

அந்த இருட்டு அறையில் ஒருபோது அவள் மய்யித்து(சடலம்) எறும்பு அரித்துக் கிடப்பதை நினைக்கும் போதெல்லாம் நடு நடுங்குவார். அந்த நடுக்கத்தின் உந்து சக்தியால் கிராமத்தை தோக்கிப் புறப்பட எடுத்த முடிவு.

நகர வாழ்க்கையே வெறுத்துப்போச்சு.

தம்பி வாழும் சொந்தக் கிராமத்தைப் பற்றி நினைப்பு வந்ததே அப்போதுதான், ஊரில் யார் யாரெல்லாம் உயிரோடு இருப்பார்கள் என்று திட்டமில்லை.

நகரத்தின் மாலை நெரிசலில் ஒரு ரெஸ்டாரண்டில் சந்திக்க நேர்ந்த நடுத்தர வயதுக்காரர், தன் ஊருக்காரராகயிருந்தார். அந்தச் சந்திப்பின்போது அவர் சொன்ன நினைவு, ஊரில் தம்பி பெரும் பண வசதியுடன் இருப்பதாக; வாப்பாவின் சொத்தில் தனக்குள்ள சொத்தைத் தனியாகப் போட்டு வைத்திருப்பதாக.

ஊரைவிட்டு ஓடும்போது தம்பி தொட்டிலில் கிடத்திருந்தான். அவனாகத்தானிருப்பான். பெயர் மட்டும் நினைவிலிருந்து பெயர்ந்து போகவில்லை.

***
கால்சராயுடன் கிராமத்தில் பஸ் இறங்கும்போது, கிராமத்துச் சனங்கள் தன்னைக் காட்சி மிருகமாகப் பார்க்க நேரலாம் என்ற கூச்சம். தொளதொளவென்று மாட்டியிருந்த கால்சராயை இரயில் இறங்குமுன் மாற்றி விட்டு, கிராம வாழ்க்கை வாழ்வதற்காக வாங்கிப் பேணியிருந்த நாலு முழ வேட்டியை உடுத்திக் கொண்டார்.

***

கிராமம், நகரத்தின் முகமூடி அணிந்திருப்பதாகத் தோன்றியது அவருக்கு முன் பாத்திராத முகங்கள்; பரிச்சயமில்லாத பாதைகள்; பஸ்,இறங்கிய இடத்திலேயே பெரும் அமளி; பஸ்ஸில் இடம் பிடிக்க, வேறு பஸ்ஸில் ஓடி ஏற, சீருடை அணிந்த மாணவர்களின் முகங் களில் பள்ளிக்கு தேரமாய் விட்ட பரபரப்பு. ‘ஆனா, ஆவன்னா’ சொல்லித்தர முன்பு அங்கு ஒரு பள்ளிக்கூடம் இல்லாமலிருந்ததை நினைத்துப் பார்த்தார்.

தம்பி பெயரைச் சொல்லி வழி கேட்டார். நின்று சொல்ல யாருக்கும் பொறுமை இல்லை. ஒரு பெட்டிக்கடைக்காரர் காட்டிய வழியே நடந்தார். சென்றிராத ஒரு வெளிநாட்டு நகரத்தில், பாதை குழம்பிப்போய் நடப்பது போலிருந்தது அவருக்கு. அந்நேரம் தம்பியின் குழந்தைகளின் நினைப்பு வந்தது. ‘மூத்தாப்பா’ என்று கட்டி அணைக்கும் பிள்ளைகளுக்குக் கொடுக்க எதுவும் வாங்காத கை வெறுமை. எதிர்ப்பட்ட ஒரு கடையிலிருந்து விலை உயர்ந்த பிஸ்கட் டின் ஒன்றை வாங்கி பைக்குள் வைத்தார்.

நடந்து செல்லும் தார்ரோட்டின் இருமருங்கிலும் பலதரப்பட்ட கான்கிரீட் கட்டடங்களில் துபாய் பிரதாபங்கள். முன்பு பலா மரங்களும் மாமரங்களும் கமுகும் தென்னைகளும் அடர்த்தியாக நின்று கொண்டிருந்த இடங்கள். காய்த்துத் தொங்கும் மாமரத்தில் கல்லெறியும் போது, தோப்பின் உடைமையாளர் பிடித்து, மாமரத்தில் கட்டி வைத்து நாய் அடி அடிக்க விரட்டுவதும் தலைதெறிக்க ஓடுவதும்! அன்று ஓடி, கால்கள் இளறிய மணல் பாதைகளெல லாம் இப்போது மாருதி கார்கள் ஓட, தார் கொண்டு மூடப்பட்டிருக்கின்றன.

***

திடீரென பழைய பாலம் எதிர்ப்பட்டது. அதனடியில் எலப்ப வீட்டு ஆறு. அதில் குனித்து விட்டு ஈரமுடி விரித்துப்போட்டு வந்த அவளைத்தான் அன்று… வெள்ளாம்பல் பூத்து நின்று கொண்டிருந்த தெளி நீருள்ள கை ஆறு. ஆம்பல் மொட்டுப் போல் தண்ணீரில் தலை நீட்டி நிற்கும் நீர் நாகங்கள்.

சுவரைப் பிடித்துக் கொண்டு எட்டிப் பார்த்ததும், மூக்கைப் பொத்தி விட்டார். குப்பை கூளங்களால் நிரம்பி, கட்டுப்பட்டு, நீர் கறுத்துப்போய் கிடந்தது எலப்ப வீட்டு ஆறு. இரயில்வே காலனிக்கு பின்பக்கமாக ஓடும் சாக்கடைக்கும் இந்த வீச்சமில்லை.

வழுக்கைத்தலை வியர்த்துக் கொட்டியது. அன்று, வெயில் துளிகள் நிலத்தில் விழாமல் தடுத்திருந்த கிராமத்தின் மேற்கூரை, கழன்று தெறித்து விழுந்த இடம் புரியாமல் நடந்தார். கிராமம் கன்னி அழிந்து விட்டதே என்று தனக்குள் முணுமுணுத்தார்.

***

பெயர் சொல்லிக் கேட்டபோது காட்டப்பட்ட வீட்டு முற்றம் சிமெண்டால் மெழுகப்பட்டிருந்தது. வீட்டுக்கு முன் ஓமெண்டு தொட்டிகளில் பினாஸ்டிக் தென்னம் கன்றுகள், பிற மரக்கன்றுகள், சங்கிலியில் தொங்க விட்டிருந்த சட்டிகளில் மலர்ந்து நின்றிருந்த பூக்கள், காகிதப் பூக்கள் என்று தெரிந்ததோடு, நேதாஜி நகரில் சினிமா நடிகரின் வீட்டைப் பார்த்தது போலிருந்தது அவருக்கு.

வாசலில் ஒரு பொத்தான் இருக்குமென்று முதலில் எதிர்பார்க்கவில்லை. துலங்கும் கைப் பிடியுள்ள பிளஷ் டோரின் மத்தியில் மோதிரக் கல் போல் ஒரு சிறு கண்ணாடி பதித்திருந்தது எதற்கென்று புரியவில்லை.

தொண்டையைக் கனைத்தும், ‘தம்பி’ என்று உரக்கக் கத்தியபோதும், வாசலைத் திறப்பதாகத் தெரியவில்லை. கிராமத்தின் கலகலப்பு இல்லாத மயான அமைதியைக் கண்டு, மனித வாடை இல்லையோ என்ற முதல் ஏமாற்றம்.

பொத்தான் அழுத்த படிகளில் மிதித்த கால்கள் நடுங்கின. நேதாஜி நகரிலுள்ள பாங்கு மானேஜரின் பெரிய வீட்டில் ஒரு முறை சென்ற அனுபவ நடுக்கம்.

ஐடை நாய்கள்!

சிறிது நேரம் தாழ்ந்து, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த பெண், குரல் கொடுத்தாள்.

“யாருங்கூட எந்த ஊரு..”. நாகரீகமான மொழி

“நான் அகம்மது ஷெரீப், தம்பியெப் பாக்க வந்தேன்!”

“உக்காருங்கொ. வரச் சொல்றேன்.”

சிட்டவுட்டில் கிடந்த பிளாஸ்டிக் நாற்காலியில் உட்காரும் போது அவருடைய கற்பனைகள் உடைத்து நொறுங்கிச் சிமெண்டு முற்றத்தில் கிடந்தன.

***

“புரியல்லை” டீ ஷர்ட்டும் பேண்ட்டும் அணித்திருந்த வீட்டுக்காரர் கேட்டார்.

நாலு முழ வேட்டி வாங்கக் காசு செலவு செய்திருக்க வேண்டாமென்று அவருக்கு அப்போது தோன்றியது.

“நான்தான் அகம்மது ஷரீப்; உன் அண்ணன், சின்னதில் ஊரைவிட்டுப் போன அண்ணன்!”

“அப்படியா? எனக்கு ஒரு பிரதர் உண்டு எண்ணு மம்மி அடிக்கடி சொல்லுவாங்கொ. அது நீங்கதான் எண்ணு எப்படித் தெரியும்?”

மம்மியா?

என்ன சொல்வதென்று தெரியாத சிறிது மௌனத்திற்குப்பின், சொன்னார்- “தகப்பனாருடைய சொத்தில் எனக்குள்ள பங்கு கிடப்பதாக யாருட்டையாவது சொன்னியா…”

“சொல்லியிருப்பேன். பிரதருக்குள்ள பங்கு கிடக்குது. நீங்கதான் என் பிரதர் எண்ணு நான் எப்படி நம்ப முடியும்?”

ஒரு நீண்ட மௌனம் நிலவியது.

“யப்பா… நா சொத்து எடுக்க வரல்ல…எனக்கு வாரிசுமில்லை. நீ தந்தாலும் எனக்குப் பிறகு உனக்குதானப்பா, நீயே எடுத்துக்கோ!”

“வாரிசு இல்லையா?”

“இல்லையப்பா, தனிமரம். பத்து அறுபது வருசமா உஷ்ணக்காற்றும் கரிப்புகையும், சாக்கடை வாடையும் சுவாசிச்சு வாழ்ந்தாச்சு, இண்ணோ, நாளையோ? மிச்சமுள்ள நாளுகளை நான் பிறந்த இந்த கிராமத்திலே உன்னோடையே கழிச்சு, இந்த மண்ணிலே படுக்கலாமுண்ணுதான்ப்பா ஒதுங்கி வந்தேன்.”

வீட்டுக்காரர் அவரை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். அவருடைய நாடிக்குழியில் தகப்பனார் உயிர் பெற்றிருப்பதைக் கவனித்தார்.

“தம்பி, புள்ளைங்க எங்கப்பா?” பையிலிருந்த பிஸ்கட் டின்னை வெளியே எடுத்தார்.

“வெளிநாட்டிலெ.”

“எத்தனை புள்ளைங்க…?”

“ஒரு ஆணும் ஒரு பெண்ணும்,”

“என்ன செய்றாங்க..?”

“மூத்தது டாட்டர், அவொ ஹஸ்பன்டோட், ஸ்டேட்ஸ்லெ! சன்னும் பேமிலியும் குவைத்துலெ.”

“உன் சம்சாரம்?”

“ஸ்டார் டீ.வி.யிலெ. இங்கிலீஷ் புரோக்கிராம்!”

“தொந்தரவு குடுக்கண்டாம்!”

“பரவாயில்லை. பினூ” மனைவியைக் கூப்பிட்டார்.

அவள் தோற்றம், அவருக்குத் திடுக்கிடலாகவே இருந்தது. சுடிதார். உதட்டுச் சாயம். கரும் மையால் வளைத்து விட்ட வில் புருவம்.

அவர் பிஸ்கட் டின்னை அவனிடம் நீட்டினார்.

“புள்ளைகளுக்கெண்ணு வாங்கி வந்தேன்!”

அவள் தயங்கினாள்.

“வாங்கு புரூஸ்லிக்காவது ஆவும்.”

பிஸ்கட் டின்னில் பார்வையை உன்றினாள்.

“இந்தியன் மேடு, புரூஸ்லிக்கு இதையா குடுக்கா?”

“பரவா இல்லை. உமயம்மை பாட்டிக்குக் குடு!”

அவர் அப்படியே குறுகி உட்கார்ந்து விட்டார்.

“நீங்கெ வந்திட்டிங்க. பக்கத்துலெ பழைய குடும்ப வீடு இருக்கு; அங்கெ தங்கலாம். மற்ற விஷயங்களையெல்லாம் பிறகு பார்ப்போம்!”

“எந்த விஷயம்?”

“சொத்து விஷயம்!”

“எனக்கு சொத்து வேண்டாம்பா, நீயே வச்சுக்கோ”

“பினூ_” மனைவியிடம் சொன்னார்-

“குடிக்க ஏதாவது?” வந்தவரிடம் கேட்டார்- “ஹாட்டா? கூலா!”

முன்பு விளையாடிக் களைத்து வரும்போது உம்மா நாட்டரிசித் தண்ணீர் தந்த ருசி நாக்கிலிருந்து இப்பவும் நீங்கவில்லை.

“சாயா போதும்பா!”

“ஏதாவது டிபின் சாப்பிட்டீங்களா?”

“ரயில் இறங்கி, பஸ் ஏறி நேராக வாறேன்…”

தம்பி வீட்டு உபசரிப்பில் திக்கு முக்காடிப் போவோம் என்று நினைத்ததால், ஏற்பட்ட பிசகில் தானாக வருந்திக் கொண்டார். வயிற்றுச் சுவரில் சுண்டெலி முகம் குத்தி ஓடியது.

“இண்ணு மதியம், என் கஸ்ட் நீங்கெ!”

அப்படியானால் இன்று இரவு? நாளை?

“பிரிட்ஜிலெ மீன் இருக்கு…இறச்சி இருக்கு…எது விருப்பம்…?”

கை எட்டும் தொலைவில் கடல். கடற்கறையில் மீன் பட்டுச் சொரியும் கூச்சல், ஐசில் வைத்த மீனும் இறைச்சியும் சாப்பிட்டு அலுத்துப் போச்சு. கிராமத்திற்கு வந்தாலாவது கடற்கரையிலிருந்து மீன் பிடித்து குழம்பு சாப்பிட மூக்களவு ஆசை, என்ன செய்ய!

“எனக்கு வேண்டாம்ப்பா. உனக்கு எதுக்குப்பா தொந்தரவு?”

“பழைய வீட்டை உமயம்மை பாட்டிக் கிட்டெ சுத்தம் செய்யச் சொல்றேன். அங்கேயே தங்கிக்கிடுங்கெ. அங்கெ புருஸ்லியெப் போட்டிருக்கு. இரவுநேரம் இங்கெ கொண்டு விடுவோம். மற்ற விஷயமெல்லாம் பின்னெ பார்ப்போம்!”

“எந்த விஷயம்?”

“சொத்து”

“நான்தான் சொன்னேனே, சொத்து வேண்டாமெண்ணு!”

“தேங்க்யூ… போய் ரெஸ்ட் எடுங்கோ, வெளியே ஒரு நார் கட்டில் கெடக்கு!”

“யார் இவர்…” அவள் கேட்டான்.

“இவர் என்னுடைய காணாமல் போன பிரதர் எண்ணு சொல்றார். இவர்தாள் அவர் எண்ணு நம்புவதற்கு எந்த எவிடன்சும் இவர்க் கிட்டெ இல்லை!”

அவள், அவரை அடி முடி பார்த்தாள்,

“இவரா உங்கெ பிரதர்…” அவள் உள்ளே சென்றாள்.

“நீங்கெ அங்கெ போய் ரெஸ்ட் எடுங்கொ”

வீட்டுக்காரர் பிளஷ்டோரை உள்ளே கொண்டி போட்டார்.

***

அந்த இரண்டு நிலை நாகரிகக் கட்டடத்தின் பின் பக்கமுள்ள பழைய வீட்டை நோக்கி நடந்தார்.

உமயம்மைப் பாட்டி கையில் விளக்குமாற்றுடன் அங்கு நின்று கொண்டிருந்தார்.

அவர் கேட்டார்- “உமயம்மை பாட்டியா?”

“அமா!?”

அவர் கொண்டுவந்த கட்டுக் கிழிகளை அங்கு வைத்தார். ஒரு துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டு தோளில் போட்டுக் கொண்டார்.

வீட்டுக்காரர், டாட்டா பாரஸ்டை கேட்டுக்கு வெளியே கொண்டு வந்தார்.

“ரெஸ்ட் எடுக்கல்லியா..?” அவரைக் கண்டதும் கேட்டார்.

“ஊரை சுற்றிப் பாக்கட்டு…”

“ஜங்சனிலெ நல்ல ரஸ்டாண்டுகள் உண்டு..” டாட்டா பாரஸ்ட் புகை துப்பியது.

ஊரைச் சுற்றி வந்தார். கிராம முகமல்ல. கான்கிரீட் முகங்கள். கான்கிரீட் காடாகவே காணப்பட்டது. ஒரு கூரை வீடாவது? ஒரு ஓட்டு வீடாவது?

***

கடல் காற்று வாங்கி கடற்கரை மணலில் நடக்க கடற்கரைக்கு வழிகேட்டார். அங்கே தெரிந்தது கடற்கரையின் கல்லறை, பெரும் பாறைக்கற்கள் நெடுகிலும் அடுக்கப்பட்டிருக்கிறது. கடல் அரிப்பைத் தடுக்கக் கடல் சுவர், அங்கு நின்றபோது குமட்டியது. கற்களுக்கிடையிலுள்ள குழிகளில் பன்றிகளும் நாய்களும் முகம் தாழ்த்தி அலைந்தன.

அடிமண் தெரியும் நிர்மலமான குளம் ஒன்று இருந்தது. கரை இடித்து கிடக்கும் குளத்தில் சங்கமிக்கும் சாக்கடைக் கால்வாய்களைக் கண்டு துண்டை உதறித் திரும்பி நடக்கும் போது, பெரும் ஏமாற்றம். முகம் சிதைந்துபோய், முகமற்றுக் காணப்படும் வெறிச்சோடிய கிராமம்.

அவர் அங்கு எதையோ தேடிக் கொண்டிருந்தார், தேடுவது கிடைக்கப் போவதில்லை என்ற உணர்வு அவரைச் சோர்வால் வரிந்து கட்டியது. வீட்டுக்கு வந்தார்.

***

இருட்டியதும், புரூஸ்லியை அவிழ்க்க அங்கு வந்த உமயம்மைப்பாட்டி சற்று தயக்கத்துடன் கேட்டாள்-

“அன்னு போனதுக்கு, இன்னைக்குத்தான் வாறீயளா?”

அவர் திடுக்கிட்டார்.

“நீ…”

உமயம்மைப் பாட்டி பதில் சொல்லவில்லை. சுருக்கம் விழுந்த அவளுடைய முகத்தில் வெட்கச்சாயல் படர்வதைக் கவனித்தார். அவர் ஏதோ கேட்க முயலுமுன், உமயம்மைப் பாட்டி புரூஸ்லிக்குப் பின்னால் போய் விட்டாள்.

மனசிற்குள் உமயம்மைப்பாட்டி ஓர் ஆலமரம் போல் கொப்பு பரப்பி நின்றதால், உறக்கம் வரவில்லை.

சூரியோதத்திற்கு முன், உமயமைப்பாட்டி புரூஸ்லியுடன் பழைய வீட்டிற்கு வந்தாள்.

நார்க்கட்டில் வெறுமனே அங்கு கிடந்தது. அவள் கையிலிருந்து நாய்ச் சங்கிலி நழுவி விழுந்தது.

– 1995-10-15

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *