ஏங்க, இப்படி திட்டு வாங்கிட்டு அவனிடம் கம்ப்யூட்டர் கத்துக்கணும்னு உங்களுக்கு தலையெழுத்தா என்ன..?
அரை மணிக்கு முன் நடந்ததுக்குத்தான் அப்பாவிடம் அம்மா கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது.
நடந்தது இதுதான்
இரவுக்குள் முடித்து ஆபீஸூக்கு அனுப்ப வேண்டிய வேலையை வீட்டிலிருந்தவாறே செய்து கொண்டிருந்தேன்.
ரிடையர் ஆன அப்பா கதை அடிக்கிறேன் பேர்வழின்னு பக்கத்தில் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் அது எப்படி இது எப்படின்னு சந்தேகம் கேட்டுத் தொந்தரவு கொடுத்தார்.
அவரிடம் எரிந்து வழிந்தேன்.
”அவனோட சின்ன வயசிலே அப்படி இப்படின்னு சந்தேகம் கேட்கறச்சே சலிக்காம எத்தனையோ விஷயம் சொல்லிக் கொடுத்திருக்கேன். இப்ப எனக்கு
வயசாயிடுச்சுல்ல, ஞாபக சகதி குறைஞ்சிகிட்டு வருது, விடு கமலா” ன்னு அம்மாவிடம் அப்பா சொல்லவும் இந்த வயசிலும் கத்துக்கறதில் ஆர்வத்தோடு இருக்கற அப்பாவிடம் இனி இப்படி நடந்துகொள்ளக்கூடாது என்று மனசுக்கு கட்டளையிட்டேன்.
– கே.ராகவன் (15-4-2009)