தன்னை பெண் பார்க்க வந்த பையன் சேகரை, மீனாவுக்கு மிகவும் பிடித்து விட்டது. அவன், அவளை பெண் பார்த்துவிட்டுச் சென்று, பத்து நாளாகியும், அவன் முகமே அவள் மனதில் நிறைந்திருந்தது.
அழகாக இருந்தான் சேகர். இந்தக் கால இளைஞர் போல் இல்லாமல், தலைக்கு எண்ணைய் தடவி, இடது பக்கம் வகிடெடுத்து முடியை வாரி இருந்தது மிகவும் அழகாக இருந்தது. ஷேவ் செய்யப்பட்ட முகத்தில், முடியிருந்த இடம் இளம் கறுப்பாக இருந்தது.
அவன் பார்வை, எடுப்பான அவள் பருவமேனி மீது படர்ந்து கொண்டிருக்கவில்லை. இருந்த ஒரு மணி நேரமும், மீனாவின் உருண்டையான முகத்தையும், செழிப்பான கன்னங்களையும், ஈரம் மினுமினுக்கும் உதடுகளையும், அழகான கண்களையும் தான் அவன் பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் பார்வை மீனாவிடம், “என்னை உனக்கு பிடித்திருக்கிறதா?’ என்று கேட்பது போல் இருந்தது.
அவன் அம்மா, பெண் வீட்டாரின் பொருளாதார நிலைமையை, வீட்டிலுள்ள பொருட்களை பார்த்து நிர்ணயம் செய்து கொள்வது போல், வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருட்களையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பாவம்… அவள் கணவரோ எங்கள் வீட்டிற்கு விளக்கேற்ற ஒரு மருமகள் வந்தால் போதும் என்பது போல, எல்லாரையும், சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
பெண்ணை, ஒரு முறை தலை முதல், உள்ளங்கால் வரை பார்த்து, பிள்ளையிடம் திரும்பி, “என்ன சொல்றே சேகர்?’ என்று கேட்டாள் அம்மா.
“ஓ.கே.,ம்மா!’ என்று, ஒரு வரியில் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தியபடி சொன்ன சேகர், மீனாவை பார்த்தான்.
“தனக்கும் ஓ.கே.,!’ என்று சொல்வது போல, மீனா எல்லாரையும் ஒரு முறை பார்த்து, தலையை குனிந்து கொண்டாள். அவளுள் ஆனந்தம் பிரவகித்து, பொங்கிக் கொண்டிருந்தது.
“அப்போ ஒரு நாளைக்கு எங்க வீட்டுக்கு வாங்கோ சந்தானம் சார்… மேற்கொண்டு பேசலாம்!’ என்றார் பிள்ளையின் அப்பா பத்மநாபன்.
“பேஷா வர்றேன்… இப்போது, எல்லாரும் காபி, டிபன் சாப்பிடுங்கோ…’ என்றார் சந்தானம்.
இரண்டு வகை பஜ்ஜி, ரவா கேசரி, கேரட் அல்வா, தேங்காய் சட்னி, கும்பகோணம் டிகிரி காபி என்று எல்லாரும் டிபன் சாப்பிட்டு, புறப்பட்டனர்.
வயிறும், மனமும் நிறைந்த திருப்தி ஒவ்வொருவர் முகத்திலும் தெரிந்தது. சென்றவர்களுக்கும், வீட்டில் இருப்பவர்களுக்கும் ஒரே சந்தோஷம்.
“மீனா…’ என்று அழைத்தார் சந்தானம்.
“என்னப்பா?’ என்று கேட்டபடி அவரருகே வந்தாள் மீனா.
“பிள்ளையை நல்லா பார்த்தியாம்மா?’ என்று கேட்டார் சந்தானம்.
“பிடிச்சிருக்குப்பா…’ என்ற மீனா வெட்கத்தால், தலையை குனிந்து, “இந்த வரனையே முடிச்சிடுங்கோப்பா…’ என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.
“அப்போ உடனேயே, ஆக வேண்டிய காரியத்தை பார்க்க ஆரம்பிச்சுடுங்கோ…’ என்று, உற்சாகத்துடன் சொன்னாள் மீனாவின் அம்மா சாரதா.
மறுநாளே பிள்ளை வீட்டிற்குச் சென்ற சந்தானம், திரும்பி வரும் போது, சற்று உற்சாகம் குறைந்தவராக வந்தார்.
“என்னங்க… என்னமோ போல இருக்கீங்க?’ என்று, பதட்டத்துடன் கேட்டாள் சாரதா.
“பிள்ளையோட அம்மா, “பொண்ணுக்கு எவ்வளவு நகை போடப் போறீங்க?’ன்னு எடுத்த எடுப்பிலேயே கேட்டாங்க… நாம முடிவு செஞ்சபடி, “பத்து பவுன் போடலாம்ன்னு இருக்கோம்…’ன்னு சொன்னேன். “எங்கள் பெரிய மருமகள், இருபது பவுன் நகையோட வந்தா. சின்ன மருமகள் அவ்வளவுக்கு இல்லாவிட்டாலும், 15 பவுனாவது போட்டுட்டு வந்தா தான் எங்களுக்கு பெருமையாகவும், திருப்தியாகவும் இருக்கும்…’ன்னு சொன்னாங்க!’ என்றார் சந்தானம்.
“மேற்கொண்டு அஞ்சு பவுனா? அதுக்கே இப்போ சவரன் விக்கிற விலைக்கு, ஒரு லட்சம் ரூபாய் ஆகிடுமே!’ என்றாள் கவலையுடன் சாரதா.
“அது மட்டுமில்ல சாரதா… வெள்ளிப் பாத்திரம் எல்லாம், அஞ்சு கிலோவுக்கு வாங்கணுமாம்!’
“அடக்கடவுளே!’
“பையனுக்கு நாம கொடுக்கிறதா இருக்கிற, பத்தாயிரம் ரூபாய் போதாதாம்!’
“எவ்வளவு வேணுமாம்?’
“நாற்பதாயிரம் வேணுமாம்!’
“அப்படியா கேட்டாங்க?’
“ஆமாம் சாரதா… சீர், செனத்தி, கல்யாண பட்டுப் புடவைகள், ஜவுளி, கல்யாண மண்டபம், சமையல்காரர், ரிசப்ஷன், மியூசிக், வீடியோ எல்லாம் ஏதோ பெயருக்கு செஞ்சு ஒப்பேத்தக் கூடாதாம். ஒவ்வொன்றையும் பெரிய அளவில், ரொம்ப கிராண்டா செய்யணுமாம்!’
“கேட்கும் போதே எனக்கு தலையை சுத்துதே. நாம போட்டிருக்கிற பட்ஜெட்டை விட ரெண்டு, மூணு லட்ச ரூபாய் அதிகமாயிடும் போலிருக்கே!’
“ஆகும், ஆகும்… நம்ம பொண்ணு மீனா அந்த பையனையே முடிச்சுடுங்கோப்பான்னு வேற தன் மனக்கிடக்கையை சொல்லிட்டா. எப்படியாவது செஞ்சாகணும் சாரதா…’ என்றார் சந்தானம்.
ஆனால், அதிகப்படியான பணத்துக்கு எங்கே போவதென்று தான் சந்தானத்துக்கு தெரியவில்லை.
அம்பாசமுத்திரத்திலேயே பிறந்து, வளர்ந்தவர் சந்தானம்; ஏழ்மையான குடும்பம். சொத்து சுகம் ஒன்றும் கிடையாது; சாதாரண எலிமென்ட்ரி ஸ்கூல் டீச்சர். சொற்ப சம்பளம். ஒரே பெண். மீனா என்ற மீனாட்சி.
பள்ளியில் கிடைக்கிற சம்பளம், குடும்பம் நடத்தவே போதவில்லை. டியூஷன்கள் எடுத்தார் சந்தானம். அதில், எல்லா செலவுகளையும் சமாளிக்கிற அளவுக்கு, ஓரளவு கூட வருமானம் வரவில்லை. அநேக நாட்கள் காலையில் ஸ்கூலுக்கு வயிற்றுக்கு ஒன்றும் சாப்பிடாமல் கூடப் போவார். மதியம் சாப்பிட, பல நாட்கள் வீட்டிற்கு வர மாட்டார். கேன்டின் கால்வாய் தண்ணீரை, இரு கைகளாலும் அள்ளி குடித்து, கிரவுண்டிலுள்ள நார்த்தை மரத்தடியில் பச்சை இலைகளிலிருந்து வீசும் நார்த்தை இலையின் மணத்தை சுவாசித்தபடி படுத்திருப்பார். மதியம் மறுபடியும் ஸ்கூல் செயல்படத் துவங்கியதும் கிளாசுக்குச் செல்வார். அப்போது, அவர் உடம்பு ரொம்பவும் உஷ்ணம் அடைந்திருக்கும்.
மத்தியானம் அவர் சாப்பிடாமல், பட்டினி கிடந்திருக்கிறார் என்பது சாரதாவுக்குத் தெரியும். ஜலபானம் கூட செய்யாமல் காலை, மாலை இரு வேளை எப்படித்தான் வகுப்பு நடத்துகிறாரோ என்று தானும் சாப்பிடாமல், விரதம் இருப்பது போல உபவாசம் இருப்பாள் சாரதா.
இரவில், இருக்கிற சாதத்தை குழந்தை மீனாவுக்கு போட்டுவிட்டு, சாரதாவும், அவரும் பெயருக்கு சாப்பிட்டு, படுத்துக் கொள்வர். மறுநாளும், இதே கதைதான் தொடரப் போகிறது என்பதால், மவுனமாகவே படுத்து விடுவர்.
சாரதா, வசதியானவர்கள் வீட்டில் தண்ணீர் இறைத்துக் கொட்ட, மாவு அரைத்துக் கொடுக்க, முறுக்கு, தட்டை, சீடை செய்து கொடுக்க, சமையல் செய்து கொடுக்க என்று போக ஆரம்பித்தாள். அப்படி போகும் போது, வேலை செய்யும் வீட்டில் அவர்கள் கொடுக்கும் ஆகாரத்தால், அவள் பாடு கழிய ஆரம்பித்தது.
பள்ளி வேலை, டியூஷன் என்பது தவிர, தானும் வேறு ஏதாவது எக்ஸ்ட்ரா வேலை செய்தால், கையில் நாலு காசு சேர்த்து, பெண்ணின் கல்யாணத்தைப் பற்றி நினைக்கவாவது முடியுமென்று எண்ணினார் சந்தானம்.
இரவு நேரத்தில், 10:00 மணி வரை, ஒரு வக்கீலிடம் குமாஸ்தாவாக சேர்ந்தார். ஜில்லாக் கோர்ட் வக்கீல் அவர். அனந்த நாராயணன் என்பது அவர் பெயர். வடக்குத் தெருவில் நீளவாக்கில் எட்டுகட்டு அமைந்த வீடு அவருடையது.
வீட்டின் முன், இரும்பு கேட் போடப்பட்டிருக்கும். அதன் பின்னால் தாழ்ந்தும், கொஞ்சம் உயர்ந்தும், இரு திண்ணை இருக்கும். தாழ்ந்த திண்ணையில் ஒரு மேஜையும், நாற்காலியும் போடப்பட்டிருக்கும்; அதில், வக்கீல் உட்கார்ந்து கொள்வார்.
சற்று உயரமான திண்ணையில் பாய் விரிக்கப் பட்டிருக்கும். அதில், தரையில் உட்கார்ந்து, குனிந்து எழுதும் குமாஸ்தா மேஜை சரிவாக போடப் பட்டிருக்கும். அதன் எதிரே சந்தானம் உட்கார்ந்து, வரும் நாட்களில் கீழ்க் கோர்ட்டில், மேல் கோர்ட்டில் வரவிருக்கும் வழக்குகளின் விவரத்தை நீளமாக இரண்டாக மடித்திருக்கும் கேஸ் கட்டைப் பிரித்து படிப்பார்.
கண்களை மூடி, காதுகளை கூர்மையாக்கி, வழக்கின் விவரங்களை கூர்ந்து கேட்பார் வக்கீல் அனந்த நாராயணன். பிறகு, மாடியிலுள்ள தம் சட்ட புத்தகங்கள் நிறைந்த லைப்ரரிக்குச் சென்று, வழக்காடுவதற்கான சட்டங்களையும், அதன் பிரிவுகளையும் ஆழ்ந்து படிப்பார்.
மறுநாள் அவர் எடுத்து வைக்கும் சட்ட பாயின்டுகளாலும், வாதாடும் திறமையாலும் கேஸ் அவர் பக்கம் ஜெயித்து விடும். வென்றவர் வக்கீலுக்கு பீஸ் கொடுக்கும் போது, அவரது குமாஸ்தாவான சந்தானத்துக்கும் ஒரு கணிசமான தொகையை கொடுப்பார். குபேர நிதி கிடைத்தது போல இருக்கும் சந்தானத்துக்கு. வக்கீலும் மாதா, மாதம் ஒரு தொகையை அவருக்கு கொடுப்பார்.
வயல் சண்டை, வரப்பு சண்டை, சொத்து சண்டை, பாகப் பிரிவினை சண்டை என்று பல சண்டைகள், இரு கோஷ்டியிடையே பகையை உண்டாக்கி, வழக்காகி, வக்கீலிடம் வரும் போது, அவற்றைப் பார்த்து, பார்த்து மக்கள் படும் கஷ்டத்தையும், நஷ்டத்தையும் கண்டு சாதாரண மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ தாமும் ஏதாவது செய்ய வேண்டுமென்று சந்தானத்துக்கு தோன்றிற்று.
தெரு தோறும் இரண்டு, மூன்று நல்ல தண்ணீர் குழாய். வீதியில் மின் விளக்கு அதிகமாக எரிய, சாதாரண எலிமெண்டரி பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக, ஊரில் எல்லையில் தொட்டுக் கொண்டு ஓடும் பஸ்சை, ஊருக்குள்ளும் வரச் செய்ய, வாரம் ஒரு நாள் மட்டும் வரும் டாக்டரை, தினசரி மருத்துவமனைக்கு வரச் செய்ய, மாலையில் பெரியவர்கள் அமர்ந்தோ, நடந்தோ பாட்டு கேட்க, பஞ்சாயத்து பூங்காவில் ஒரு ரேடியோ ஒலிபரப்பு செய்ய, கப்பி சாலையை நல்ல சாலையாக மாற்ற என்று ஒவ்வொரு விஷயத்தையும் கையில் எடுத்து, மக்களுக்காக உழைத்ததில், சிறிது, சிறிதாக பெயரெடுக்க ஆரம்பித்ததில், ஊருக்கு மிகவும் தேவையான ஒரு மனிதரானார் சந்தானம்.
ஆனால், அவருக்கு கிடைத்த பணம் பெண் மீனாவின் கல்யாணத்தை சுமாராக நடத்துமளவுக்கு மட்டும் தான் சேர்ந்தது.
தன்னலம் இல்லாது செய்த தொண்டில், நல்ல பெயரும், புகழும் தான் சந்தானத்துக்கு கிடைத்தது; பணம் கிடைக்கவில்லை. தான் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியத்துக்கும், எப்படி பணத்தை அடைவது என்பது சந்தானத்துக்கு தெரியவில்லை.
மீனாவின் கல்யாணத்துக்கு தேவைப்படும் அதிகப்படியான பணத்தை எப்படி திரட்டுவதென்று தெரியாமல், விழி பிதுங்கிக் கொண்டிருந்தார் சந்தானம். சாரதாவும், பெண்ணின் கல்யாணம் எப்படித்தான் நடக்கப் போகிறதோவென்று கவலைப்பட்டு, கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.
“”சந்தானம் சார்… சந்தானம் சார்!” என்று வாசலில் யாரோ அழைக்கும் குரல் கேட்டது.
“”யாரு?” என்று கேட்டபடி, வெளியில் வந்தார் சந்தானம்.
வெளியே, பேன்சி ஸ்டோர் தாஸ், கண்ணாடி பிரேம் கடை நாரம்பு நாத பிள்ளை, டெய்லர் ராஜாமணி, தீர்த்தபதி ஸ்கூல் டீச்சர் காந்திமதி நாதன் எல்லாரும் நின்றிருந்தனர்.
“”வாங்கோ… உள்ளே வாங்கோ… என்ன எல்லாருமா ஒண்ணு சேர்ந்து வந்திருக்கீங்க?” என்று அவர்களை வரவேற்றார் சந்தானம்.
உள்ளே வந்த அவர்கள், “”நீங்கள் நம்ம ஊர் மக்கள் கஷ்டங்கள் தீர, எவ்வளவோ பாடுபட்
டிருக்கீங்க. இன்னைக்கு நம்ம ஊர் மக்கள், எவ்வளவோ சவுகரியங்களை அனுபவிக்க காரணமே நீங்களும், உங்கள் உழைப்பும் தான்.
“”அப்படிப்பட்ட மகா மனிதரான உங்களுக்கு, ஒரு கஷ்டம்ன்னா அதை நாங்க எப்படி பொறுத்துக் கொள்வோம்?
“”அதுதான் உங்களுக்கு உதவ எல்லாரும் சேர்ந்து வந்திருக்கோம். எங்களுக்கு பின்னாலே உங்களுக்கு உதவி செய்ய இந்த ஊர் மக்களுடைய ஒவ்வொரு கையும் நீண்டிருக்கு!” என்றார் காந்திமதி நாதன்.
“”நீங்கள் என்ன சொல்றீங்க?” என்று, ஒன்றும் புரியாமல் கேட்டார் சந்தானம்.
“”உங்கள் மகள் மீனாவோட கல்யாணத்தை நடத்த போதுமான பணமில்லாம நீங்க கஷ்டப்படறதா தெரிஞ்சுக்கிட்டோம். மீனா உங்கள் வீட்டுப் பெண் மட்டுமல்ல; எங்கள் ஒவ்வொரு வீட்டுப் பெண்ணும் கூட. அதனாலே, அவள் கல்யாணம் நடக்க தேவைப்படற பணத்தை நாங்க எல்லாரும் சேர்ந்து கொடுக்கலாம்ன்னு இருக்கோம்!” என்றார் தாஸ்.
சந்தானத்தாலும், சாரதாவாலும் தம் காதுகளை நம்பவே முடியவில்லை. திக்கற்றவர்களுக்கு, தெய்வமே துணை. அந்த தெய்வம்தான் இவர்கள் எல்லார் வடிவிலும் வருந்திருக்கிறதா?
“”உங்களுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்றதுன்னே எனக்கு தெரியலே!” என்று சந்தானம் சொல்லி முடிக்கும் முன், “”அப்பா…” என்றழைத்தப்படி அங்கே வந்தாள் மீனா.
எல்லாரையும் பார்த்து, “”உங்கள் நல்ல மனதுக்கு எங்கள் நன்றி. நீங்கள் எல்லாம் கொடுக்கப் போற பணத்திலே, என் கல்யாணம் சிறப்பா நடக்கு மென்கிறதுலே சந்தோஷம்தான்.
“”ஆனால், அந்த சந்தோஷம் என் கல்யாணத் துக்கு அப்புறம், என் வாழ்க்கையிலே இல்லாமல் போயி டும்.”பெண் கல்யாணத் துக்கு பணமில்லாம, ஊர்க்காரர்கள் இரக்கப்பட்டு கொடுத்த பணத்திலே தானே உன் கல்யாணம் நடந்தது. இல்லாட்டா உனக்காவது கல்யாணமாகிறதாவது…’ன்னு புகுந்த வீட்டிலே என்னையும், என் அப்பா, அம்மாவையும் கேவலமா, இகழ்ச்சியா, அவமானமா பேசுவாங்க.
“”அப்படி ஒரு நிலைமை எனக்கு ஏற்படறதை விட ஒரு அர்ச்சகருக்கோ, சமையல்காரருக்கோ கல்யாணம் செய்து கொடுத்தால், நான் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருப்பேன்!” என்றாள் மீனா.
“”உங்க அப்பா வந்து, கல்யாண சம்பந்தமா ஒண்ணும் பேசலியே என்று கேட்டுட்டு போகலாம்ன்னு தான் வந்தேன் மீனா. உன்னோட தன்மான உணர்ச்சி, பேராசைப்பட்ட என் கண்களை திறந்திடுச்சும்மா. நான் கேட்டது எதையும் உன் கல்யாணத்துக்காக, உன் அப்பா செய்ய வேண்டாம் மீனா. கட்டின புடவையோட நீ வந்தாலும் பொன்னையும், பொருளையும் விட பொன்னான தன்மானமிக்க உள்ளம்தான் பெரிசுன்னு நான் உன்னை ஏத்துக்கறேன்மா!” என்று கூறினாள், அங்கு வந்த பிள்ளை சேகரின் அம்மா.
– ஆகஸ்ட் 2011