கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 16, 2024
பார்வையிட்டோர்: 2,505 
 
 

(1934ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

3-வது அதிகாரம் | 4-வது அதிகாரம் 

கபட சூட்சி-களிப்புறும் காட்சி 

அஸ்தமித்து விட்டது. இந்திராணி அன்று வீட்டுக்குப் போவதில்லை என்று கூறியதும், பொன்னம்மாளும் தாமோதரனும் அவளை அன்று இங்கேயே நிற்கச் செய்து ஒரு தினம் பக்ஷமாக விருப்பதுபோலக் காட்டிப் பேசி அவளிடமிருக்கும் பொருளை வாங்க எண்ணினார்கள். ஆதலால் அவளுக்குச் சரியாகவே பேசிவிட்டார்கள். 

கம்பெனியில் வேலை முடிந்து எல்லோரும் போய்விட்டார்கள்: இந்திராணி மட்டும் வெகு சந்தோஷத்துடன் “மாமீ!” என்று உறவு முறையுடன் அழைத்தபடியே பொன்னம்மாளிடம் சென்று பக்கத்திலமர்ந்தாள். “மாமீ! நான் அந்த வேலையைச் செய்கிறேன். இதைச் செய்கிறேன்:” என்று கேட்டு செய்யத் தொடங்கினாள். இரவு போஜனம் முடிந்ததும் தானே வெற்றிலைப் பாக்கும், பாலும் கொடுக்கத் தீர்மானித்தாள். 

ஆனால் வழக்கம்போல வேலைக்காரனே வெற்றிலையைக் கிழித்தும், பாலை ஆற்றியும் வைத்துவிட்டான். அதனால் இவளுக்கு மயக்க மருந்தை எப்படிக் கரைப்பது என்ற யோசனை யுண்டாகிவிட்டது. ஆற்றி வைத்திருக்கும் பாலில் அப்படி இப்படி பார்த்து சடக்கென்று மாத்திரையைப் போட்டு தாமோதரனுடைய மேஜையின் மீது அதைக் கொண்டு தானே வைத்துவிட்டாள். 

பிறகு இருவரும் ஏதோ வேடிக்கையார்த்தமாகப் பேசிக்கொண்டே யிருக்கையில் அவன் பாலைக் குடித்து விட்டான்: இந்திராணியின் சந்தோஷம் உச்ச நிலையை அடைந்தது. மயக்கம் வந்து, விழும் நிலைமையை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாள்: பொன்னம்மாள், இந்திராணி இருவரும் கூட பாலைக் குடித்தார்கள்: குடித்துப் பத்து நிமிடத்திற் கெல்லாம் இந்திராணிக்கு அவளை யறியாத மயக்கம் வந்து கிறுகிறு என்று சுற்றிக் கீழே தள்ளிவிட்டது. இதைக் கண்ட இருவரும் அடங்காத ஆச்சரியத்தை யடைந்து, “ஐயோ! இதென்ன! மயக்கம் வந்துவிட்டதே!” என்று பேசிக்கொண்டே இருக்கையில் தபதப வென்று யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்டது. 

திரும்பிப் பார்த்த உடனே முகமூடியுடன் இரண்டு மூன்று உருவங்கள் கையில் துப்பாக்கியோடு அங்கே வந்து “வாயைத் திறந்தால் சுட்டுவிடுவேன்: ஜாக்ரதை!…குரலையே காட்டக்கூடாது” என்று அதட்டி விட்டு விளக்கை எல்லாம் அணைத்துவிட்டார்கள். இந்திராணியின் கூட்டத்தினர் அவள் செய்த ஆக்கினைப்படிக்கு மெத்தையை நோக்கியவாறு நாற்புறமும் நின்று கொண்டிருந்தார்கள்: மெத்தையின் வடவண்டைப் பக்கத்து ஜன்னல் வழியாக பாக்கெட்டு விளக்கின் வெளிச்சம் பிரகாசமாகத் தெரிந்த உடனே வீதியிலிருந்த எல்லோரும் வெகு விரைவில் மெத்தையில் அந்த வெளிச்சம் கண்ட இடத்திற்கு வந்தார்கள். எங்கும் இருள் சூழ்ந்து கிடக்கிறது. கையிலுள்ள பாக்கெட்டு விளக்கு மட்டும் முணுக்கு முணுக்கு என்று தெரிந்தது. அங்கு வந்தவர்கள், “இந்திராணி! அகப்பட்டு விட்டதா! ஆசாமிகள் பூர்ண மயக்கத்தில் விழுந்துவிட்டார்களா! இப்போது நாம் என்ன செய்யவேண்டும்?” என்றார்கள். 

முக மூடி யணிந்திருந்த ஒரு உழுவம், “இதோ இங்கு வாருங்கள்” என்று கூறியழைத்துக் கொண்டு வந்து நிற்கச் செய்ததும் ஸ்விச்சை திடீரென்று அழுத்தி விட்டது. கோடி சூர்யப் பிரகாசம் போன்ற வெளிச்சம் உண்டாகி விட்டது. தாண்டவராயனும் அவன் கூட்டமும் அங்கு ஸ்மரணையற்று விழுந்து கிடக்கும் இந்திராணியைப் பார்த்த உடனே “ஐயோ! மோசமே! ஹா!”…என்று அலறி விட்டார்கள். அதே சமயம் முக மூடியுடன் இருந்த ஒரு உருவம் விசில் அடித்தது. 

தக்ஷணமே தபதபவென்று போலீஸ் சேவகர்கள், இன்ஸ்பெக்டர்கள், மேல் அதிகாரிகள் முதலியோர் வந்து சூழ்ந்து வளைத்துக் கொண்டு வந்த ஏனையோரையும் கைது செய்து விலங்கை மாட்டியபடியே, “அரசாங்கத்திற்குத் தெரியாமல் வெடி மருந்துகளைச் செய்வதும், துப்பாக்கியைக் கள்ளத் தனமாக விற்பதுமான வியாபாரத்திலிருந்து ஒளிந்தபடி எத்தனை நாளைக்குப் பிழைக்க முடியும்? தன் வினை தன்னைச் சுடும் என்ற வாக்கை மறந்து விட்டீர்களா?” 

மகிழம்புரி ஜமீந்தாரினி வீட்டில் கொள்ளையடித்த குற்றத்தில் தண்டனையடைந்து சிறை சென்று அங்கிருந்து உங்கள் தயவால் தப்பிய கைதியாகிய இவள் இந்திராணி என்ற பட்டப் பெயரில் இப்போது இந்த பரிசுத்தமான மனிதனை மோசம் செய்ய நீங்கள் செய்த சதிகள் தெரியாமல் அழுந்தி விடுமென்று நினைத்தீர்களா! பரம பாதகர்களாகிய உங்களை எங்களுக்குப் பிடித்துக் கொடுத்த இந்த அம்மாளுக்கு நாங்கள் என்ன பிரதி செய்தால்தான் போதும்? “அம்மா! இனி இந்த மூடி எதற்கு?” என்றதும் முகமூடிகள் எல்லாம் பறந்தன. 

சந்திர பிம்பம்போல, ஜாஜ்வல்யமாய்ப் பிரகாசிக்கும் சிந்தாமணி ப்ரஸன்னமானாள். இந்த அத்யாச்சரியமான சம்பவத்தைக் கண்ட பொன்னம்மாளும் தாமோதரனும் “ஹா! சிந்தாமணீ! சிந்தாமணீ! நீயா இங்கு நிற்கிறாய்? உண்மையான தோற்றமா இது!” என்று கூறியவாறு அவளருகில் வந்ததும், பொன்னம்மாள் சிந்தாமணியைக் கட்டிக் கொண்டாள். 

சிந்தாமணி:போலீஸாரை நோக்கி, “ஐயா! நீங்கள் உங்கள் உத்யோக முறையில் அரசாங்கச் சட்டத்தின் படிக்கு தீயவர்களைப் பிடிப்பதும் தண்டிப்பதுமான தொழிலைக் கொண்டிருக்கிறீர்கள். சற்று ஆராய்ச்சி செய்து பார்த்தால் கடவுளின் கீழ் உள்ள ஒவ்வொருவரும் பிறர் நலங் கோருவதும், பிறர் பொருட்டுழைப்பதும், பிறர் துயராற்றுதலும், பிறருக்குத் தீங்கிழைக்காதிருத்தலும், பிறருக்குத் தீங்கு யாரேனும் செய்வதைக் கண்டு வாளா விருந்திடாது அதைக் களைந்தெறிய உதவுவதும், இன்னும் இதுபோன்ற பல சட்டங்கள் அக்கடவுளால் அளிக்கப்பட்டதை மனித ஜென்மம் எடுத்தவர்கள் செய்ய வேண்டியது கடமை என்பதே என்னுடைய துணிபு. துஷ்ட ஜெந்துக்களாகிய பாம்பும், தேளும் செல்வதைக் கண்டு நாம் பேசாம லிருப்போமா! உடனே அடித்துக் கொல்லவில்லையா? அதுபோல துஷ்ட செய்கை யுள்ளவர்களையும் அவ்வாறு செய்வது கடமை என்று எண்ணியே தங்களுடைய துணையைக் கொண்டு அவர்களைப் பிடித்ததும், அவர்களின் இடரைத் தீர்த்ததும் என் பிறவியின் கடமையாகும். இதற்கு எதற்காக என்னைப் புகழச் செய்யவேண்டும். உங்கள் வேலையாகிவிட்டதல்லாவா?” என்றாள். 

இதைக் கேட்ட தாமோதரனும், பொன்னம்மாளும் கட்டு மீறிய வியப்பும், சந்தோஷமும் ஒருங்கே கொண்டு பதில் பேசிவுமாட்டாது கல்லாய் நின்றார்கள். போலீஸார் சிந்தாமணிக்கு வந்தனங்கள் செய்த பின்னர், இந்திராணியைத் தூக்கும்போது மடியிலிருந்த துப்பாக்கியைக் கண்டு எடுத்தார்கள்: இவள் துப்பாக்கி வைத்திருப்பதை யறியாத தாயும் மகனும் பிரமித்து, “ஐயோ! இதனால் நம்மைச் சுட்டுக் கொல்லத் தான் இங்கு தங்கினாள் போல விருக்கிறது. ஆ! கடவுளே எங்களைக் காப்பதற்குத் தான் இக் காரிகையை அனுப்பினாயா?” என்று தோத்தரித்தார்கள். 

பிறகு போலீஸார் எல்லாக் கைதிகளையும் வீதியில் தயாராக விருந்த வண்டியில் ஏற்றி ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்றார்கள். சிந்தாமணியும் வெகு மரியாதையாக “அம்மணீ! ஐயா! நான் வீட்டிற்குச் செல்கிறேன்: நாளைக் காலையில் பேசிக்கொள்ளலாம்” என்று போகப் புறப்பட்டாள். 

பொன்னம்மாள் அவள் கையைப் பிடித்துக் கொண்டு “ஐயோ! நீ இனி இந்த ராத்திரியில் செல்வதாவது? அது முடியாது. நீ எங்கள் உயிரையே காப்பாற்றிய ஓர் பெரிய விந்தையை எங்களால் அறியக் கூடவே இல்லை. அதை எல்லாம் நீ கூறு. நீ சொந்தமாகக் காப்பாற்றிய மனிதர்களை நீ சொந்தமாக எண்ணாமல் செல்வது அழகல்ல: என் செல்வச் சீமாட்டியே! இங்கு உனக்கு வித்யாசமெதற்கு? உட்காரு.” என்றாள். 

சிந்தா:- அம்மணீ! தாங்கள் சொல்வதெல்லாம் வாஸ்தவம்: பனைமரத்தடியிலிருந்து பால் குடித்தவன் கதைபோலத்தான் என் விதியமையும்: ஆதலால் நான் இரவு என் வீட்டை விட்டு வெளியிலிருக்க முடியாத நிலைமையி லிருக்கிறேன்: காலையில் கட்டாயம் வருகிறேன். 

பொன்:- அப்படியாயின் நாங்களும் உன்னோடு வருகிறோம்: உன் வீட்டிலிருப்போருக்குச் சொல்லி விட்டு உன்னை யழைத்துக்கொண்டு வருகிறோம்……. 

தாமோ:- தயவு செய்து இங்கிருக்கலாகாதா? அம்மாவை வேண்டுமானால் சென்று சொல்லிவிட்டு வரச் சொல்லுகிறேன்: அம்மா!… தாங்கள் மறைந்திருந்து செய்த பேருதவியின் விவரங்களை நாங்கள் தெரிந்துகொள்ள வேண் டாமா?” என்று கெஞ்சிக் கேட்டான். 

சிந்தாமணிக்கு அதைத் தட்டவும் முடியவில்லை. என்ன செய்வாள் பாவம்! “ஐயா! என்னுடைய சரித்திரம் ஓர் கதை போன்றது. அதை நீங்களறிந்தால் பிறகு விசனிப்பீர்கள். நான் இன்று இங்கு நிற்பேனேயானால் நாளைய தினம் என் கதியாகும் வேடிக்கையை நீங்கள் சகிக்க முடியாது. ஆதலால் நான் சென்று, நாளைக் காலையில் கட்டாயம் வருகிறேன் ” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டாள். 

இரவு இவ் விருவருக்கும் தூக்கமே பிடிக்கவில்லை. தாமோதரனின் மனத்தில் ஏற்கெனவே நிறைந்திருந்த எண்ணம் மீண்டும் தலை சிறந்துவிட்டது. இன்னதென்று விவரிக்க முடியாத விதமாகப் படுக்கையிலமர்ந்தான். தன்பொருட்டு அத்தருணீமணி மறைந்து செய்த வேலையின் ஆச்சரியத்தைக் கூறவே திறமன்று. “ஐயோ! இம்மங்கை நல்லாள் அன்று நம்மைக் கேட்டதற்குச் சரியாகவே விடை கொடுக்காது போய்விட்டோமே! பாழும் லஜ்ஜையல்லவோ என்னைப் பாழாக்கிவிட்டது. என் மனப் பூர்வமாக அம்மங்கையை நான் மானஸீகமாக நேசித்தும் அவளுடன் பேசாமலும், பகிரங்கமாகத் தெரிவிக்காமலும் அன்னியன் போலவே இருந்துவிட்டோமே! நான் சர்வ முட்டாள்தனம் செய்து விட்டேன்: இனிமேல் நான் எனக்குள்ள பிரியத்தைத் தெரிவிப்பதெனின் அம்மடந்தை நமக்குச் செய்த உதவியைக் கண்டபிறகு காதல் கொண்டதாக வன்றோ தோன்றும்:” என்று பலவிதமாக எண்ணியவாறு இருக்கையில் அவனுடைய படுக்கையில் ஒரு கவர் தென்பட்டது. 

அதற்குள் இவர்கள் கையை விட்டு இழந்து விட்ட மருந்து செய்யும் முறைகளடங்கிய காகிதம் கருப்புப் பையுடன் கட்டப்பட்டு அப்படியே இருந்ததைக் கண்டு அளப்பரிய ஆச்சரியத்தை யடைந்து அதைப் பிரித்துப் பார்த்து விட்டு, அதோடு கூட விருந்த கடிதத்தைப் படிக்கத் தொடங்கினான். 

“அன்பிற் சிறந்த எஜமானர் அவர்களுக்கு, பேதையாகிய சிந்தாமணி செய்யும் வந்தனங்கள். 

ஐயா! நான் இக் கடிதம் எழுதுவது தங்களுக்கு மிக மிக வியப்பாக விருக்கலாம்: எனினும் தற்போது நான் எழுதவேண்டிய சமயம் நேர்ந்துவிட்டது. தாங்கள் இக் கடிதத்தைப் படிக்கும் முன்பே சில ஆபத்துக் களினின்று விலகி அதில் நான் சம்மந்தப்பட்டதைத் தாங்களறிந்து விடுவீர்க ளென்று நம்புகிறேன். அவ்வாறு நீங்களும், உங்கள் தாயாரும் “எக்காரணம் பற்றி நம் விஷயத்தில் இம்மங்கை இத்தகைய முயற்சி எடுத்துக் கொண்டாள்?” என்று நினைப்பீர்கள். அது சகஜமே! அதை நிவர்த்திக்கவே இதை எழுதுகிறேன். 

ஐயா! சிலவாண்டுகளுக்கு முன்னர்… மாதம்… – தேதி… செவ்வாய்க்கிழமை யன்று தாங்கள் சில துஷ்டர்களுடன் நேசங் கொண்டு திரிந்த காலைபில் அவர்கள் எல்லாம் குடித்துவிட்டுத் தங்களையும் குடிக்கும் படிக்குக் கூறத் தாங்கள் அதை மாத்திரம் மறுத்ததற்குக் குடி வெறியால் தங்களை அடித்துப் போட்டுவிட்டுச் சென்றார்கள்: பிறகு பிரக்ஞை யற்றிருந்த தம்மை ஓர் வண்டியிலமர்த்தி தம் வீட்டில் கொண்டு விட்டது அக் காலை உமக்குச் சரியானபடி ஞாபகமில்லை எனினும் இச் சம்பவம் நடந்தது மறந்திருக்கா தென்று நினைக்கிறேன்: அப்போது நான் சிறியவளே யாவேன்; தம்மிடம் காதல் கொண்டு இக்காரியம் செய்ததல்ல. 

பிறகொரு சமயம் அத்துஷ்டர்களுடன் சீட்டாடுகையில் தாம் பணம் வைக்க மறுத்ததற்கு அவர்கள் நெத்தியில் முரட்டுத்தனமாக அடித்து ரத்தம் வழிய, அப்போது பக்கத்துச் சந்து குழாவில் ரத்தத்தை யலம்ப வந்தபோது அதை யலம்பி மருந்து போட்டுக் கட்டி விட்டது நினைவிருக்கலாம். 

வேறொரு சமயம் ரங்க ராட்டினத்தில் தடி தடியாக நீங்கள் எல்லோரும் சுற்றியபோது தலை சுற்றலும், புரட்டலும் அதிகரித்து, இறங்கி கீழே விழுந்து விட்டதும், தெருவில் கும்புகூடிவிட்டதும், தாங்கள் வாந்தி எடுத்துக்கொண்டு அதன்மேலேயே புரண்டதும் அப்போது தண்ணீர் ஊற்றித் தம்மைக் கழுவி ஒரு சோடா உடைத்துக் கொடுத்துத் தேற்றியதும் ஞாபக மிருக்கலாம். 

ஐயா ! இந்த பழங்கதைகள் எல்லாம் இப்போது எதற்கு இங்கு குறிப்பிட வேண்டுமென்று நீங்கள் நினைக்கலாம். அக்காலை நானும் சிறியவளே! காதல் கொண்டதனால் செய்தவையல்ல. தமக்குச் செய்தது போல இன்னும் அனேகருக்கு- என் கண்ணில் பட்ட எந்த மனிதருக்கும்- என்னால் செய்யக் கூடிய உதவியைச் செய்து கொண்டுதான் வருகிறேன். இப்போது தங்கள் விஷயம் மட்டும் சம்மந்தப் பட்டவை யாகையினால் இதை எழுதுகிறேன்; இதைக் கொண்டு நான் தற்பெருமை யடைந்து பேசுவதாக எண்ண வேண்டாம். 

ஐயா! நான் யார் என்பதைத் தாமறியும் பொருட்டுப் பழங் கதைகளில் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டேன் ; இனி நடக்கும் விஷயத்தைக் கூறுகிறேன். என்னுடைய பாபப் பிறவியைப் போல உலகத்தில் வேறு எங்கு மிருக்கா தென்றே நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்; என்னைக் கடவுளே மோசம் செய்து விட்டார் எனின், மனிதர்கள் மோசம் செய்ததைக் கேட்க வேண்டுமா !…மதியீனம்!… கடவுள் என்ன செய்வார்? என்னுடைய விதி.. தலைவிதி என்னை வஞ்சித்துப் படுகுழியில் தள்ளி விட்டது. அவ்வாறு தள்ளிய பிறகு நான் நடைப் பிணமாகவே உலாவுகிறேன். என் விதி எனக்கு என்ன பட்டமளித்தது…ஆ!… விதவை ..கைம்பெண்.. அமங்கலை.. என்ற பட்டத்தை எனது 8-வது வயதிலேயே அளித்து விட்டது. 

அப்போது நான் கேவலம் சிறுமியாதலால் ஒன்றுமே தெரியாது. என் தாயார் பெண் பேயென்று கூறத் தக்க மகிமை வாய்ந்தவள். என் பாட்டியார் பிரம்ம ராக்ஷஸி என் பதில் ஐயமே இல்லை. என் பிதா எனது 7-வது வயதில் உலகை விட்டொழிந்தார். கல்வி வாசனை யறியாத கசடர் களின் கையில் சிக்கி நான் பட்ட பாடு ஈசனுக்கே வெளிச்சம். 8-வது வயதிலேயே விதவைக் கோலத்தைச் சம்பூர்ண மனத்துடன் சூட்ட என் பாட்டியும், அத்தையும், தாயாரும் தலை கீழாகத் தவித்தார்கள்; எங்கள் வீட்டில் குடி இருந்த ஓர் வாத்தியாரம்மாவினால் அந்த கோலத்தில் மூழ்காது தப்பினேன். 

எனக்கு 12 வயது ஆகிய பிறகே விதவை என்ற நோய் நம்மைப் பீடித்து விட்டதை அறிந்தேன்; கணவன் யார்! விவாகம் எப்போது ஆயிற்று. எப்போது அவன் இறந்தான் என்ற ஒரு விஷயத்தையும் நான் சற்று மறிய மாட்டேன். பெரியோர்கள் சில நாட்கள் நினைத்துக் கொண்டு காலையில் பொழுது விடியும் முன்னர் பெரியதாக ஒப்பாரி வைத்து என்னைச் சூழ்ந்து கொண்டு புலம்புவார்கள். அதனுடைய தகவல் எனக்குத் தெரியாது.பிறகு அவர்கள் பேசிக் கொள்வதிலிருந்து எனக்குக் கல்யாணமானதும், அவன் இறந்ததும் தெரிய வந்தது. அந்த மனிதனுக்கு 10 வயது முதல் காசநோயிருப்பதை யறிந்தும் என் பாட்டி தன் தம்பி மகன் என்ற விசுவாசத்தினால் வேண்டுமென்று விவாகம் செய்ததாயும் அவன் வெகு விரைவிலேயே போய்விட்ட தாயும் தெரிய வந்தது. 

15-வது வயதில் நான் புத்தி யறிந்த பிறகு என்னை வீட்டில் செய்யும் சித்திரவதையைக் கூறத் திறமன்று. எல்லோரும் எழுந்திருப்பதற்கு முன் எழுந்திருப்பதும், படுத்த பிறகு படுப்பதும், அதற்கிடையில் செக்கு மாட்டிற்கும் எனக்கும் வித்தியாசமே இன்றி உழைப்பதுமாக விருந்தது. தப்பித் தவறி ஒரு தினம் சற்று தாமதமாகிவிட்டால் பெற்ற தாயே தடி கொண்டு அடித்து என்னைக் கண்டவாறு திட்டி வதைப்பாள். 

“அங்கு நின்று எவனைப் பார்த்தாய்? அறுத்த முண்டக்கு அங்கு வேடிக்கை என்ன? கம்மண்டாட்டிக்குக் களியாட்ட மென்ன! ஏன் வேண்டுமென்று எதிரே வருகிறாய்!…ஐயோ !…அந்த முண்டை எதிரே வந்தது: என் வேலை எல்லாம் மண் விழுந்து விட்டது”…என்று இப்படி எல்லாம் வீட்டுக்காரர்களும் வெளியார்களும் என்னைத் தினம் ஏசியது கணக்கில்லை. நான் ஒரு தரத்திற்கு மேல் சாப்பிட்டு விட்டாலோ, “தின்று கொழுத்து யார் குடியைக் கெடுக்கப் போகிறாயடீ முண்டை!” என்று என் தாயாரே கேட்பாள். வீட்டில் யாருக்கேனும் உடம்புக்கு வந்தால் “ஐயோ! அவர்களுக்கு வந்தது இந்த சனியனுக்கு வரலாகாதா!” என்பார்கள். ஊரில் யாரேனும் இறந்து விட்டால் எல்லோரும் என்னைப் பார்த்துப் பார்த்து மார்பிலடித்துக் கொண்டு “இந்த முண்டை சாகக் கூடாதா ! இந்த சனியன் சாகக் கூடாதா?” என்று கதறுவார்கள். 

ஐயா! அக்காலையி லெல்லாம் இப்பாவியின் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்பதை நினைத்தாலும் பகீரென்கிறது. என் போதாக் கால விதியால் என்னுடன் பிறந்த சகோதரி ஒருத்தி இறந்து விட்டாள். ஊரில் பிணம் விழுந்தாலே என் தலையில் இடி விழும்போது, வீட்டில் கேட்க வேண்டுமா! அது வரையில் இக் கட்டையில் பொறுமை யிருந்தது. அதற்குமேல் பொறுமையை வகிக்க முடியவில்லை. “கடவுள் என்னை ஏன் எடுக்கக் கூடாது. இப்படி மோசம் செய்து விட்டாரே!” என்று கதறினேன். 

வீட்டிலிருப்பவர்க ளறியாது குளத்தில் விழுந்து, பிராணனை விட்டு விடச் சென்றேன். அதை எப்படியோ வாத்தியாரம்மாள் தெரிந்து கொண்டு என் பின்னாலேயே வந்து என்னைத் தடுத்து “அம்மா! பொறுமையில் நீ பூமி தேவிதான் என்று நான் நினைத்திருக்கிறேன். அத்தகைய நீ கேவலமாகத் தற்கொலை செய்து கொள்வது சற்றும் பொருந்தாத காரியமாகும். அதைப்போல பாவம் உலகத்தில் வேறு எங்கேயும் கிடையாது: மனித ஜென்மம் எடுப்பதன் தத்துவமென்ன! அதன் மகிமையை அறியாது அனாவசியமாக இறந்து, அலகையாகப் பிறந்து, பலர் கையிலும் சிக்கிச் சித்திரவதையை யனுபவிப்பதை விட மானிட ஜென்ம மெடுத்த ஒவ்வொருவருக்கும் உள்ள கடமையை உணர்ந்து அதன்படி பரோபகாரம் செய்து உன் வாழ் நாளைக் கடத்து. இவ்விதம் செய்யாதே! மனித ஜென்மத்தின் முக்கிய தத்துவமானது பிறருக் குழைப்பதே யாகும். பிறர்க்கு உதவி புரிந்தால், ஜீவகாருண்யத்துடன் உழைத்தால் கடவுளின் பரிபூர்ண கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகலாம். வீணாக இவ்விதம் செய்யாதே!” என்று பல்வேறு நீதிகளை ஓதி பல உதாரணங்களைக் கூறி என்னைத் தடுத்தார். 

அந்த சமயம் அவைகள் உசிதமாக என் புத்திக்குப் பட்டன. ஆகையினால் நான் அந்த அம்மாளின் உதவியைக் கொண்டே நந்தபுரியில்ஸேது லக்ஷ்மியம்மாள் அமைத்துள்ள அனாதைச் சங்கம், ஜீவகாருண்ய சங்கம் : என்பதில் என் வீட்டார் அறியாதபடி சேர்ந்து விட்டேன். சில நாட்களுக்குள் வாத்தியாரம்மாளும் அதே சங்கத்தில் சேர்ந்து விட்டார்கள். வீட்டில் காணாதவுடன் பலவிதமான பழிகளுக்கு என்னை ஆளாக்கி வசை மாரியைச் சொறிந்தார்களாம். 

சில மாதங்கள் சென்ற பிறகு இங்கிருப்பதை அறிந்து என்னை அழைத்தார்கள். “நான் இறந்து விட்டதாகவே எண்ணி விடுங்கள்! என்னுடைய பரிசுத்தம் பகவானுக்குத் தெரியும். அவனுக்குப் பொதுவாக நான் நடந்தால் போதும். இனிமேல் நான் அந்த இடத்திற்கு வர முடியாது என்று கண்டிப்பாய்க் கூறிவிட்டேன். அதோடு என்னை அச்சனியன் விட்டது என்றே கூறலாம். 

வாத்தியாரம்மாளின் பேருதவியால் எனக்குள்ள துயரக் கடலில், கல்வியறிவாகிய கரை ஏற்பட்டு கரையேறினேன்; ஜீவகாருண்யச் சங்கத்தின் நோக்கமாவது:- யாராயினும் சரி; அபாயத்தி லிருப்பவர்களுக்கு உபகாரம் செய்தல் வேண்டும் என்பதே யாகும். அம் முறையிலேயே தமக்கும் செய்தேன். நான் சில வருடங்களில் நன்றாகப் படித்துத் தேறியதோடு ஜீவகாருண்ய சங்கத்தில் பலருக்கு உதவி புரிந்த பெரும் புகழையும் அடைந்தேன். 

எங்கள் வித்யாலயத்தின் வேலைகள் முடிந்த உடன் தம் தம் இஷ்டப்படி வேலைக்கு அமருவதோ, விவாகம் செய்து கொள்வதோ, அன்றி ஆசிரம வாசத்தையே அனுஷ்டிப்பதோ முதலிய வழிகள் விதித்திருக்கின்றன. என் வீட்டிலிருந்து வந்த வாத்தியாரம்மாள் என்னை ஈன்ற தாயாகவே இருந்தார்கள். அவர்களுடன் நான் ஜீவகாருண்ய நிலயத்திலேயே வசித்து வருகிறேன். 

என்னை விவாகம் செய்து கொள்ளும்படி என் வாத்தியாரம்மாள் பல முறை கூறியதுண்டு. அக்காலை எல்லாம் நான் மறுத்தே வந்தேன்; கைம்பெண்ணிற்குக் கல்யாணமேன் என்ற எண்ணமே ஊசலாடியது. 

நான் பாவமென்றும் அறியவில்லை; புண்ணிய மென்றும் தெரியவில்லை. என் விதியில் இதுவும் ஒரு கூற்று என்றே நினைக்கிறேன்: எனக்கு இப்போது 22 வயது ஆகிறது. சென்ற சில வருட காலமாகத் தங்கள் கம்பெனியில் நான் ஏஜெண்டாக நியமிக்கப்பட்டதும், அதற்குப் பிறகு மானேஜராக விருப்பதும் என் ஜீவனத்தின் பொருட்டு அமர்ந்ததேயாகும்: இக்காலத்திற்குள் என்னைக் கெடுப்பதற்கும் அடியோடு அழிப்பதற்கும் எத்தனையோ துஷ்டர்கள் முற்பட்டார்கள்: அந்த விபத்திற்கெல்லாம் சிக்காமல் தப்பித்துக்கொண்டு வருகிறேன்: இந்திராணி என்பவளை நான் நன்கறியாவிட்டாலும் அவள் மகா கெட்டுப்போனவள் என்று முன்னரே அறிவேன்: அவள் இங்கு வேலைக்கு வந்தது முதல் அவளை நான் ஒரு கண் கவனித்துக்கொண்டே வந்தேன்: இதற்குக் காரணம், தங்களுக்கு அவர்கள் பெருங்கேடு விளைவிக்கப் போகிறார்கள் என்பதை எப்படியோ என் மனத்தில் ஒன்று கூறியது. 

ஏன் ஒளித்துப் பேசுவானேன்? என் மானஸீகமாகத் தங்களிடம் என் பொல்லாத மனத்தில் முடவன் கொம்புத் தேனை விரும்புவது போல என்னை யறியாத ஆழமான அன்பு உண்டாகிவிட்டது. தங்களிடம் என்னையே நான் அடிமை என எண்ணி உழைக்கத் தொடங்கினேன். எனினும் விதவை என்கிற கவசமிருக்கிறதே: அது எல்லாவற்றையும் மறைத்து மலைபோலத் தடுத்து நின்றதால் நான் என் மனத்திற்குள்ளேயே வைத்துத் தமக்கு ஏற்பட விருக்கும் தீங்கைக் களைய வேண்டிக் கங்கணங் கட்டிக்கொண்டேன். துஷ்ட நேயர்களின் விஷமம் நாளுக்கு நாள் விருத்தியாயிற்று. 

தம் கையிலுள்ள ப்ளானை அபகரிக்கவே முதல் பிரயத்தனம் செய்தார்கள்: தங்களையும் தங்கள் தாயாரையும் வசியம் செய்துகொண்டு ஏமாற்றவே இந்த பாதகியை இங்கு வேலைக்கு அமர்த்தினார்கள். இவர்கள் நம் கம்பெனிக்கு எதிர் வாடையிலுள்ள சுந்தர விலாஸ் ஓட்டலில் தான் சந்திப்பது வழக்கம்: அவ்வோட்டலே சோதாக்களுக்கு இடமளிக்கும் போக்கிரி ஓட்டல் என்று பெயர் பெற்றது. 

அதில் அவர்கள் சந்திப்பதை நான் கண்டுபிடித்து நானும் அவர்களறியாமல் அங்கு சென்று அவர்கள் பேசுவதை எல்லாம் கவனித்தேன்; ஒரு டீ பார்டி என்ற வியாஜத்தை வைத்து உங்களை வரவழைத்துப் பிளானைப் பிடுங்கிக்கொண்டு, உங்களையும் கொன்று விட்டுக் கம்பெனியை தமக்கே சுவாதீனம் செய்துவிடுவது என்று சதியாலோசனை செய்து அதற்குத் தக்கபடி ஊர்க் கோடியில் இடத்தை அமர்த்திக் கொண்டார்கள். 

இதை நான் தாங்களறியும் பொட்டு மொட்டைக் காகிதம் ஒன்று எழுதி தங்கள் மேஜைமேல் வைத்தேன்; அதை நீங்கள் லக்ஷ்யம் செய்யாது புறப்பட்டு விட்டீர்கள்; நான் எனது தலைவியின் பேருதவியைக் கொண்டு மோட்டாரில் மாறு உருவத்துடன் வந்து போலித் துப்பாக்கிகளை நீட்டிப் பயமுறுத்தி, உங்களிடமிருந்து ப்ளான் உள்பட சகலத்தையும் பிடுங்கிக் கொண்டோம். அப்படிச் செய்தால் நீங்கள் அங்கு செல்லாது திரும்பி விடுவீர்கள் என்று தோன்றியது. தெய்வாதீனமாக நீங்கள் திரும்பினீர்கள். கெட்டுப் போன ப்ளான் பொய் ப்ளான் என்று அந்த பாதகியிடம் கூறும்படியான புத்தியையும் கடவுள் உங்களுக்குக் கொடுத்தார். 

அந்த துஷ்டக் கூட்டத்தினர்களில் இருவர் காணாமலிருப்பின் சந்தேகம் அவர்களுக்குள்ளேயே செல்லும் என்ற முன் யோசனையினால் போலீஸாரின் உதவியைக் கொண்டு அவர்களைப் பிடித்துச் சிறையிலிட நினைத்தேன். தெய்வ சகாயத்தினால் அதன் முன்னரே அவர்கள் ஒரு குழந்தையின் காப்பைத் திருடியதினால் சுலபமாகப் பிடிபட்டு அவர்களின் கூட்டத்திற்கே தெரியாம லடைக்கப்பட்டார்கள். 

நீங்கள் பறி கொடுத்த ப்ளான் பொய்யானது என்று கூறியதும், அவர்கள் அசல் ப்ளானைக் கொள்ளை யடிக்க மீண்டும் ஏற்பாடு செய்தார்கள். உங்களை மயக்க அவர்கள் எண்ணியதும், அவர்களை மயக்க நீங்களும் உங்கள் தாயாரும் எண்ணியதும் இரண்டையும் நானறிந்தேன். அச்சமயம் ப்ளான் என்னிடமிருப்பதைத் தெரிவித்தால் மோசமாய் விடும் என்று தோன்றியது. போலீஸார் உதவியைக் கொண்டே நான் வேலை செய்ததால் அக் கூட்டத்தைப் பிடித்துத் தருவதாகச் சொல்லி இருந்தேன். அதற்கு இச்சமயமே ஏற்றதாகும் என்று நம்பினேன். 

இன்று அவர்கள் கூடி ஒட்டலில் பேசியதை நானும் போலீஸாரும் கவனித்து உங்களுக்கு மயக்க முண்டாவதற்காக வைத்த பாலை அவளே குடிக்கச்செய்து அதற்கு மேல் நாங்களே முக மூடியுடன் வர நினைத்துத் தீர்மானித்து விட்டோம்; இனிமேல் நடக்க வேண்டியதை நீங்களே காண்பீர்கள். இனியும் தங்களை வருத்தாது இதை எழுதி, ப்ளானை வைக்கிறேன்; என்னுடைய கடமை என்று நான் செய்யப் புகுந்தேன்; குற்றங்க ளிருப்பதை மன்னிக்கவும். 

இன்னொரு முக்கிய விஷயம். 

நான் மேனேஜர் வேலையைப் பூண்டு செய்து வருங் காலையில் தமது மேஜையினருகில் வரும் காரணங்கள் பல சமயம் ஏற்பட்டபோது தமது டைரியைத் தாமறியாமல் பார்க்க நேர்ந்தது பற்றி மன்னிக்கவும். அப்படி. பார்ப்பதற்குக் காரணம் இப் பாவியைப் பற்றித் தாம் ஏதோ எழுதியதை அகஸ்மாத்தாகக் கண்ணுற்றதும். இன்னும் என்ன விருக்கும் என்பதைக் காண ஆவல் தூண்டியதால் தான். மகா கொடிய பாபத்தைச் செய்த கட்டையாகிய என்மேல் தாங்களும் காதல் கொண்டிருப்பதை யறிந்தேன்; திடுக்கிட்டேன். 

அன்பரே! நான் இன்னாள் என்பதை யறியாது. தாங்கள் அப்படி நினைத்திருக்கலாம். தங்கள் அன்பிற்கு இலக்காகி விடாமல் இடையில் விதவை என்கிற எரிமலை படுத்திருப்பதை யறியுங்கள்; காதலுக்குப் பாத்திரமற்ற கைம்பெண் என்பதை யறியுங்கள். இதுவே முக்கிய செய்தி யாகும். இரவு நடத்த விரும்கும் காரியம் ஜெயமாகிய பிறகு மற்ற விஷயங்களைப் பேசலாம். 

இங்ஙனம் தங்கள் ஊழியை
சிந்தாமணி.” 

இந்த பிரம்மாண்டமான கடிதத்தைப் படிக்க அவனுக்கு வியப்பும், களிப்பும், திகைப்பும் சினிமாப் படம் போலத் தோன்றுகின்றன. தாங்க முடியாத சந்தோஷத்துடன் மாறி மாறித் தன் தாயிடத்தில் ஓடி இக்கடிதத்தைப் படித்துக்காட்டினான். “அம்மா! இதோ ப்ளான்! இதோ ப்ளான்” என்று கூறித் தாயார் கையில் கொடுத்தான். 

இவ்விதமாக விருக்குமென்று பொன்னம்மாள் சற்றும் எதிர்பாராமலிருந்ததால் அபாரமான ஆச்சரியத்தை யடைந்து “ஆகா! என்ன வினோத சம்பவங்கள் நடந்துள்ளன! தாமோதரா! எனக்கு ஒன்றுமே தோன்றவில்லையே! அக்காரிகையை அப்படியே இறுகத் தழுவி யணைத்துக் கொள்ள என் மனம் விரும்புகிறதே! உத்தமி என்று நாம் கொண்டாடியவாறு இருந்ததற்கு நமக்குப் பலன் அளிக்கும் உத்தமப் பதுமையாகவே அமைந்துவிட்டாள். ஆகா!… என்ன ஆச்சரியம்! என்ன ஆச்சரியம்! அன்று நம்மை மிரட்டிப் பையை அபகரித்தது இம்மாதரசியா!” என்று தாயும் மகனும் ஆச்சரிய, ஆநந்த சாகரத்தில் மூழ்கினார்கள். 

இதே பேச்சுக்களைப் பேசியவாறு “இரவு எப்போது துலையும்? சூர்ய உதயம் போன்ற சிந்தாமணியை எப்போது காணலாம்?” என்று இருவரும் ஏங்கி எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிந்தாமணி எவ்வித மிருந்தாள் என்பதைக் கூறவேண்டுமா! இருவரும் பொழுது புலர்வதையே எதிர்நோக்கி நின்றனர். 

உதயமாயிற்று. சிந்தாமணி வெகு வணக்கமாக, கம்பீரமான தோற்றத்துடன் வந்தாள். அவளைக் கண்ட உடனே பொன்னம்மாள் கட்டு மீறிய களிப்புடன் வாரியணைத்து இறுகத் தழுவி சில வினாடிகள் ஸ்தம்பித்து நின்றாள். தாமோதரன் அப்போதும் லஜ்ஜையினால் தலை குனிந்து நின்றான். எனினும் மனத்திலுள்ள பெருமிதமான உணர்ச்சியைத் தடுக்க முடியாது சிந்தாமணியின் இரு கரங்களையும் பிடித்துத் தன் கண்ணில் ஒற்றிக்கொண்டு “அம்மணீ! சிந்தாமணீ! இக்கரங்களின் சொந்தக்காரனாக நான் என்று ஆகப் போகிறேன் என்று எதிர் நோக்கிக் கடவுளைத் தவம் செய்து வந்தேன்! இன்றே அதை எனக்கு உவந்தளித்தார்போலும். நீ நினைத்தபடி விதவை என்ற பட்டம் உன்னைத் தாக்க வில்லை. உன்னை மாசு படுத்தவில்லை; மகா கொடிய இருதயத்தை யுடைய உன் பெற்றோர்களையே தாக்கியது. அந்த எண்ணத்தை அறவே ஒழித்துவிடு. இனி இக்கரத்தை நான் விடமாட்டேன்” என்றான். ஆநந்தக் கண்ணீர் மூவரையும் நீராட்டியது. 

சிந்தாமணி நாக்குழற “ஐயோ! விதவை! கைம்பெண்! ஒன்றுக்கும் உதவாக் கட்டையாகிய என்னை நேசிப்பது தகாது” என்று கூறிப் புலம்பினாள். உடனே பொன்னம்மாள் அவளைத் தேற்றி, தன்மீது சாய்த்துக்கொண்டு “செல்வீ! நீ விதவையே யல்ல என்பதை நாங்கள் உறுதியாக எண்ணி இருக்கையில் உனக்கேன் அக்கவலை! நீ வீண் கவலை கொள்ளலாகாது. இன்று முதல் நீ வேறல்ல! என் செல்வக் கண்மணி நீதான்! உன் ஆச்ரமவாசிகளின் விருப்பத்தின்படி நீ விவாகம் செய்து கொள்ள வேண்டிய ஏற்பாட்டை நானே செய்துவிடுகிறேன்! கூடிய சீக்கிரத்திலேயே இக்காரியம் நடைபெறவேண்டும்!” என்றாள். 

ஒன்று கூடிய மனத்தினரின் உற்சாகக் களிப்பைக் கூற முடியுமா? அன்று முழுதும் மூவரும் பேசிப் பேசி ஆநந்தத்தை அள்ளிக் குடித்துக்கொண்டிருந்தார்கள்: தனக்கு ஆதியில் உதவி புரிந்த புனிதவதியும் சிந்தாமணியே என்பதை யறிந்து தாமோதரன் இன்னும் அடங்கா மகிழ்ச்சி யடைந் தான்: பிறகு ஆடம்பரமே இன்றி வெகு சாதாரணமாக விவாகத்தைச் செய்துவிடத் தீர்மானித்தார்கள்: சிந்தாமணியின் ஆதிகாலத்து டைரியையும், தாமோதரனின் டைரியையும் இருவரும் மாற்றி மாற்றிப் படித்துப் பேராநந்த மடைந்தார்கள். 

சிந்தாமணியை அவதூறுக்கு ஆளாக்கித் திட்டிய தாயாரே அவள் நல்ல சம்பாத்தியத்தில் இருக்கிறாள் என்பதை யறிந்ததும் அவளை மாதா மாதம் பணமனுப்பும்படியாகக் கடிதம் மட்டும் எழுதத் தொடங்கினாள். சிந்தாமணி பழங்கதைகளை நினையாமல் தன்னை ஈன்ற அன்னை என்கிற அபிமானத்தினால் மாதாமாதம் தன் கையில் கிடைத்ததை யனுப்பி வந்தாள்: தன் விவாகத்தைப் பற்றி பிறகு தெரிவதற்கு முன் ஒரு கடிதம் எழுதிவிடுவது மேலானது என்று நினைத்துத் தாயாருக்கு மட்டும் கடிதம் எழுதினாள்: 

அன்றலர்ந்த கமலம் போன்ற முக தேஜஸுடன் மணமகனும், மணமகளும் மணவறையில் விளங்கினார்கள்: ஆடம்பரமே இல்லாது வெகு சாதாரணமாக விவாகச் சடங்குகள் நடந்தேறின. மணவறையில் தம்பதிகள் வீற்றிருக்கையில் மணமகளின் தாயார் பூர்வ காலத்து மமகாரங்கள் முற்றும் ஒழிந்துபோய் வற்றியுலர்ந்த கட்டையைப் போல வந்து மணவறையி லிருக்கும் ரதியும் மன்மதனும் போன்ற தம்பதிகளைக் கண்டு ப்ரமிப்பு கொண்டாள். 

இந்த அம்மாள் வருவதைக் கண்ட பொன்னம்மாளின் சரீரமே நடுங்கியது. “ஹா! நாகப்பாம்பு இங்கேயும் இத்தனை வருடங்கள் சென்று வந்துவிட்டதே!” என்று திடுக்கிட்டாள்: அதே சமயம் மணமகளைத் தாயார் தழுவிக் கொண்டு, “என் செல்வீ! மகா பாவி என்னாலேயே நீ இது காறும் பட்ட கஷ்டங்கள் போதும். ஈசன் கிருபையால் இனி சுகமே மங்களமாக வாழ்வாயாக” என்று ஆசீர்வதித்தாள். 

மணமகளும் தன் தாயை மாமிக்கு அறிமுகம் செய்து வைக்கத் திரும்பினாள்; அதற்குள் பொன்னம்மாள் “அக்கா! நமஸ்காரம்; கடவுளின் செயல் கூறமுடியாதது: என்னருமைக் கண்மணி தங்கள் புதல்வியா? இதோ! உங்கள் மருமகனே, மருமகனாகி விட்டான்: ஈசனின் பிரிய கடாக்ஷத்தைப் பாருங்கள்: தாமோதரா! அத்தைக்கு நமஸ்காரம் செய்: இவர்தான் நம்மை ஆதியில் காப்பாற்றிய அத்தை: உன் பிதாவுடன் பிறந்தவர் இவர்தான்: ஆகா! என்ன ஆச்சரியம்!” என்று திகைத்தாள்: தாமோதரனும் வணங்கினான். 

இந்த விதமான பந்துத்வ மிருக்கு மென்று சற்றும் எதிர்பாராத மணமகளுக்குக் கூறத் திறமற்ற வியப்பு உண்டாகிவிட்டது. அவள் தாயார் கல்லாகவே சமைந்துவிட்டாள்: பிறகு ஒருவாறு தேறி, “ஆகா! தாமோதரா! என் கண்ணே! என் குற்றங்களை மன்னிப்பாயாக! பொன்னம்மா! உன் விஷயத்தில் நான் பெரும் பாவம் செய்துவிட்டேன்; மகா அபராதம் செய்துவிட்டேன்: என்னை க்ஷமிக்கவேண்டும். உங்களை நான் செய்த வதைக்குப் பலன் இந்த ஒரு குழந்தையை இவ்விதம் அலையவிட்டேன். மற்றவைகளை எமன் கொண்டுபோய் விட்டான்: கஞ்சிக்குப் பறக்கும் பஞ்சையாக ஆகி சகல வித கஷ்டமும் பட்டுவிட்டேன்: உங்கள் கம்பெனியிலேயே வேலை செய்து, உங்கள் பணத்திலேயே நான் பிழைக்கும்படிக் கடவுள் செய்துவிட்ட ஆச்சரியத்தை என்னென்பேன்? நீங்களும் இப்பாவியை மன்னிக்கவேண்டும்.” என்று கண்ணீர் விட்டாள்: வியப்பின் மேல் வியப்பாகவே எல்லாம் மாறின. விவாகமும் விமரிசையாக நடந்தது. 

எல்லோரும் ஒரே குடும்பத்தினராகப் பிறந்ததுபோல ஒரே குடும்பத்தினராகி விட்டார்கள். ஜெய ஸஞ்ஜீவி வைத்தியசாலையின் ஏஜெண்டாக வேலையிலிருந்த அம்மாள் தற்போது எஜமானியாகியும், அப்போதும் தன் வேலையைத் தானே கவனித்து, வரும் ஸ்திரீகளுக்கு மருந்து கொடுப்பதும், பக்கத்தில் இவைகளைக் கணக்கு பார்க்கும் தன் பர்த்தாவுக்குக் களிப்புற வியாபாரம் நடத்துவதுமாக விளங்குகிறாள். திருடர்களைப் பிடித்துக் கொடுத்ததற்காக கவர்மெண்டாரால் ஓர் தங்கப் பதக்கம் பரிசாகப் பெற்றாள். தன் விவாகத்தின் பயனாக அடுத்த வருடம் பொங்கல் பண்டிகை யன்று பொங்கல் பரிசாகத் தன் பர்த்தாவுக்கு ஒன்றும் மாமியாருக்கு ஒன்றுமாக இரட்டைக் குழந்தைகளாக ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாக அளித்தாள். பொன்னம்மாளுக்கும் தாமோதரனுக்கும் இப்பொங்கல் பரிசைப் பெற்றுப் பொங்கிய களிப்பை விட வேறு நித்திய மங்கள வைபவ சுகமும் வேண்டுமா! பொங்கலன்று கிடைத்த பரிசாகிய குழந்தைகளுடன் “பொங்கலோ! பொங்கல்! உலகம் முற்றும் இவ்விதமே பொங்கிக் களிக்கவேண்டும்!” வாழ்த்தி விளையாடுவதைத் தவிர வேறு வேலை என்ன? 

மங்களம். 

தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னார்
அழுதகண் ணீரு மனைத்து.- திருக்குறள். 

சுபம்! 

“ஜெய ஸஞ்ஜீவி” முற்றிற்று 
ஓம் தத் ஸத்.

– ஜெயஸஞ்ஜீவி (துப்பறியும் நாவல்), முதற் பதிப்பு: 1934, ஜகன்மோகினி காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *