காதல் மழை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 15, 2019
பார்வையிட்டோர்: 10,088 
 

அய்யம்புழா, கேரளா.

கொச்சிக்கு அருகில் இருக்கும் செழிப்பான மிகச் சிறிய ஊர்.

அய்யம்புழாவின் மிகப்பெரிய பணக்காரர் பிஜூ குரியன். செல்வாக்கானவர். நிறைய நில புலன்கள்; கேரளாவின் பல பகுதிகளில் ஏலக்காய் எஸ்டேட்டுகள் என செல்வத்தில் கொழிப்பவர்.

அய்யம்புழாவில் இரண்டு ஏக்கரில் தன் வீட்டுத் தோட்டத்தின் நடுவே ஒரு பெரிய வீட்டில் குடியிருந்தார். வீட்டின் முன் எப்போதும் நான்கு உயர்ந்த வகைக் கார்கள் பளபளவென டிரைவர்களுடன் தயார் நிலையில் இருக்கும்.

அவருக்கு ஒரே மகள் ரெஜினா. இருபத்திநான்கு வயது. அழகின் உச்சம். ஏகப்பட்ட பணம் இருந்தும், அலட்டல் இல்லாத அமைதியான பெண். பெற்றோர்களுக்கு அடங்கி நடக்கும் பண்பின் சிகரம். ஆனால் பிஜூ குரியனுக்கு பணத்திமிர் அதிகம். பணத்தினால் தன்னால் எதையும் சாதித்துவிட முடியும் என்கிற திமிர் ஏராளம்.

கணவனை இழந்த அவருடைய அக்கா எமல்டா, தன் ஒரே மகன் பீட்டருடன் கொச்சியில் வசித்துக் கொண்டிருந்தாள். பீட்டர் கொச்சின் ஷிப்யார்டில் சீனியர் க்வாலிட்டி இஞ்ஜினியராக கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலையில் இருக்கிறான். இருபத்தியெட்டு வயது. அவனுக்கு தன் மாமன் மகள் ரெஜினா மீது தீராக்காதல்.

ரெஜினாவின் அழகும், பண்பும், அமைதியும் அவனை அவள் பால் மிகவும் ஈர்த்தன. மணந்தால் அவளை மணப்பது இல்லையேல் தனித்தே வாழ்ந்து விடுவது என்கிற முடிவில் இருந்தான்.

போன வருடம் கிறிஸ்துமஸ் தினம் அவள் வீட்டிற்கு சென்றபோது, தன் காதலை ரெஜினாவிடம் நேர்மையாகச் சொன்னான். அவளை மணந்து கொள்ளும் ஆர்வத்தை அவளிடம் வெளிப்படுத்தினான். ஆனால் அவள் மிகவும் வெகுளியாக, காதலின் ஆழம் புரியாமல், தன் அப்பாவிடம் பேசி அவர் சம்மதத்துடன் தன்னை மணந்துகொள்ளச் சொன்னாள்.

அது சரியாகப்படவே, அடுத்த வாரமே தன் அம்மா எமல்டாவுடன் சென்று மாமாவை நேரில் பார்த்து முறையாகப் பெண் கேட்டான்.

பிஜூ குரியன் தன் அக்காவைப் பார்த்து, “இதபாரு எமல்டா, ரெஜினாவை பெரிய பெரிய இடத்திலிருந்து பெண் கேட்கிறார்கள்… நீ கொச்சியில் எட்டாவது மாடியில், ஒரு எலிப் பொந்தில் மகனுடன் குடியிருக்கிறாய்; மாதச் சம்பளம் வாங்கும் உன் மகன் பீட்டரின் ஸ்டேட்டஸ் ரெஜினாவுக்கு சற்றும் சரிப்பட்டு வராது; பீட்டருக்கு நானே ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன்…சற்றுப் பொறுமையாக இரு…” என்று நயமாகப் பேசி அவர்களைத் திருப்பியனுப்பி விட்டார்.

பீட்டர் துடித்துப் போனான். வாழ்க்கையில் பணம்தான் எல்லாமே. அன்பு; பாசம்; காதல்; முறைப்பெண் என்பதெல்லாம் வெறும் பசப்பு வார்த்தைகள் என்பதை உணர்ந்து கொண்டான்.

மாமாவை மீறி பீட்டரால் எதுவும் செய்ய முடியாது. அது தவிர ரெஜினா பீட்டரை வெறுக்கவில்லையாயினும், அவனைக் காதலிக்கவும் இல்லை. அவளைத் தவிர வேறு எவர் மீதும் பீட்டருக்கு ஆர்வமில்லை என்பதால், அதன்பிறகு திருமணப் பேச்சே எடுக்காமல் அவன் சோகமாகத் தனிமை காத்தான்.

பீட்டரின் எண்ணம் புரிந்ததும், ரெஜினாவுக்கு சுறுசுறுப்பாக மாப்பிள்ளை தேடினார் குரியன். .

உடனே ரெஜினாவுக்கு ஏற்ற அமெரிக்கா மாப்பிள்ளை ஜோசப் கிடைத்தான். ஜோசப், டூன் ஸ்கூலில் படித்துவிட்டு, லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் படித்து தேர்ச்சியானவுடன், மெரிட்டில் நியுயார்க்கின் கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) கம்பெனியில் சேர்ந்து, சில வருட உழைப்பில் தற்போது அதன் வைஸ்-பிரசிடெண்டாக இருக்கிறான். கோடிக் கணக்கில் சம்பளம்.

நியூயார்க்கில் அவன் குடியிருக்கும் அடுக்குமாடிக் கட்டிடத்தின் பால்கனியில் இருந்து பார்த்தால் அமெரிக்காவின் புகழ்வாய்ந்த லிபர்ட்டி சிலை அழகாகத் தெரியும். அதுதவிர, நியூயார்க்-நியூஜெர்ஸியைப் பிரிக்கும் ஹட்ஸன் ரிவர் மிக நீளமாகத் தெரியும். அனைத்தையும் அவன் அழகாக வீடியோ எடுத்து அனுப்பியிருந்தான்.

ஜோசப்பின் பெற்றோர்கள் திருவனந்தபுரத்தில் இருந்தனர். அவர்களும் முரட்டுப் பணக்காரர்கள். நான்கு நகைக்கடைகள் வைத்திருந்தனர். ஜோசப்பிற்கு ரெஜினாவின் சொக்க வைக்கும் அழகும்; ஒரேமகள் என்பதால் அவளுக்கு வரக்கூடிய சொத்துக்களும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை உண்டாக்கின. ரெஜினாவை வீடியோவில் பார்த்த அவன், உடனே சரியென சொல்லிவிட்டான்.

நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க ஆரம்பித்தன.

நியூயார்க்கிலிருந்து கொச்சி வந்து போக ஏகப்பட்ட செலவாகும். தவிர, இதற்கென தனியாக லீவு எடுக்க வேண்டாம். ஓணத்தை ஒட்டிவரும் கல்யாணத்திற்கு நிறைய நாட்கள் லீவு எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, ஜோசப் தன் திருமண நிச்சயத்தை ஸ்கைப்பில் நடத்தச் சொல்லிவிட்டான்.

2018 ஜூன் மாத பிற்பகுதியில், கொச்சின் புனித அந்தோனியார் தேவஸ்தானத்தில் உறவினர்கள் அனைவரையும் அழைத்து, ஸ்கைப்பில் ரெஜினா-ஜோசப்புக்கு தடபுடலாக நிச்சயம் செய்தார் பிஜூ குரியன். அமெரிக்கா மாப்பிள்ளை என்று மிகவும் துள்ளினார். எமல்டாவும், பீட்டரும் ஒப்புக்காக அழைக்கப் பட்டனர். தேவாலயத்தின் ஒரு ஓரத்தில் நின்றுகொண்டு அவர்கள் பேருக்காக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ரெஜினா-ஜோசப் திருமணம், அதே தேவஸ்தானத்தில், வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 24, 2018 என்று நிச்சயமாயிற்று.

தன் ஒரேமகள் திருமணத்தை ஊரே வியக்கும் வண்ணம் தடபுடலாக நடத்த எண்ணி, விதம் விதமான கற்பனையில் பணத்தை வாரி இறைத்தார் பிஜூ குரியன். உறவினர்கள் அனைவருக்கும் பெரிய பெரிய ஹோட்டல்களில் அறைகள் பதிவு செய்தார்; அவர்கள் கொச்சின் ஏர்போர்ட்டில் இறங்கிக்கொள்ள டிக்கெட் எடுத்து அனுப்பினார்; கொச்சியிலுள்ள அனைத்து பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ கார்களை வாடகைக்கு முன் பதிவு செய்து கொண்டார்.

ரெஜினாவும் ஜோசப்பும் ஏகப்பட்ட கனவுகளுடன் தினமும் ஸ்கைப்பில் கொஞ்சிக் கொண்டனர்.

ஆனால், கேரளாவில் திடீரென ஆகஸ்ட் எட்டாம் தேதி முதல் பன்னிரண்டு நாட்கள் தொடர்ந்து விடாது மழை பெய்தது. அதில் மாநிலம் முழுதும் வெள்ளக் காடானது. அனைவரின் வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. கேரள மக்கள் எதுவும் புரியாமல் தவித்துப் போயினர்.

பிஜூ குரியனின் அய்யம்புழா வீடும், மாடிவரை தண்ணீர் சூழ்ந்து கொண்டது. வீட்டின் வெளியே நிறுத்தப் பட்டிருந்த பென்ஸ், ஆடி, இன்னோவா கார்கள் தண்ணீரினுள் மூழ்கின. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் மொபைல்களும் வேலை செய்யவில்லை. கட்டிப் போட்டிருந்த மாடுகள்; ஜாதி நாய்கள் அனைத்தும் இறந்து போயின. வேலைக்காரர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

குரியன், அவர் மனைவி, மகள் ரெஜினா மூவரும் மட்டும் வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சமடைந்தனர். பசியால் வாடிய அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் ஆறிப்போன உணவு பல நாட்களுக்கு தூக்கி எறியப்பட்டது. அதை அவர்கள் பொறுக்கி உண்டனர்.

கொச்சியிலும் நிலைமை மோசமானது. அங்கு ஏர்போர்ட் ஆகஸ்ட் 29 ம் தேதிவரை மூடப்பட்டது. ரெஜினாவின் கல்யாணம் நடக்கவிருந்த தேவாலயம் நீரில் முற்றிலுமாக மூழ்கி, கோபுரத்தின் சிலுவைகள் மட்டும் வெளியே தெரிந்தன.

விஷயத்தை தன் தந்தை மூலம் தெரிந்துகொண்ட ஜோசப் தனது பயணத்தை உடனே கேன்ஸல் செய்தான். நிலைமை சீராகும் வரை திருமணத்தைத் தள்ளி வைத்தனர்.

அரசு நிவாரண முகாமில், வயசுப் பெண்ணுடன் தங்க விரும்பாமல், கொச்சியிலுள்ள அக்கா எமல்டா வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று தஞ்சமடைந்தார் குரியன்.

தனது வீடும்; கார்களும்; கால் நடைகளும்; ஏலக்காய் எஸ்டேட்டும் முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கியதால் பிஜூ குரியனுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம். அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பது தெரியாமல் தவித்தார். அவரது எதிர்காலமே இருண்டுபோனது.

போதாததற்கு, அவரது நஷ்டங்களை கணக்கிட்ட ஜோசப், தள்ளிவைத்த கல்யாணத்தை தனக்கு ‘இஷ்டமில்லை’ என்கிற ஒரே வார்த்தையில் நிறுத்திவிட்டான்.

ஆடிப்போனார் பிஜூ குரியன். மனைவியும், மகளும் வாய்விட்டு கதறி அழுதனர். குரியன் அக்காவின் தோள்களில் சாய்ந்துகொண்டு அழுதார்.

எமல்டா அவரை ஆசுவாசப்படுத்தினாள்.

“கவலைப் படாதடா… ரெஜினா நல்ல பெண். அவளுக்கு வேறு நல்ல இடத்தில் திருமணம் அமையும். நீ கண்டிப்பாக இந்தக் கஷ்டத்திலிருந்து மீண்டு வருவாய்; இயற்கையின் சீற்றத்தினால் பஞ்ச பூதங்களின் முதல் மூன்று பூதங்களான ஆகாயம்; நீர்; நிலம் ஆகியன ஒன்று சேர்ந்து உன்னைத் தண்டித்து விட்டன… ஆகாயம் பிளந்துகொண்டது; நீர் கொட்டித் தீர்த்தது; நிலமும் நிலம் சார்ந்த சொத்துக்களும் உருத்தெரியாமல் கரைந்து போயின… கர்த்தரின் ஆசீர்வாதத்தால் இழந்ததை நீ திரும்பப் பெறுவாய்…தைரியத்தை மட்டும் இழக்காதே.”

இரண்டு அறைகளைக்கொண்ட கொச்சியின் அதே எட்டாவது மாடி எலிப் பொந்தில், அக்கா எமல்டாவுடன் தன் குடும்பத்துடன் வெகுநாட்கள் தங்கியிருந்தார் பிஜூ குரியன்.

பீட்டரின் கடமையுணர்வு; கண்ணியம்; மரியாதையான பண்பு; பொறுப்பு ஆகியவைகளை நேரில் பார்த்து உணர்ந்தார்.

அன்று காலை பீட்டர் வேலைக்காக ஷிப்யார்ட் சென்றதும், தன் மனைவியை அருகில் வைத்துக்கொண்டு எமல்டாவிடம், “அக்கா, நான் தற்போது பழைய பிஜூ இல்லை; என்னுடைய பணத்திமிரை ஜீசஸ் அடக்கி ஒடுக்கி விட்டார். நீயும் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் என்னை மன்னித்துவிடு. நம் பீட்டருக்கு என் ஒரே பெண்ணை மணமுடித்து வைப்பாயா…?” என்று வேண்டினார்.

“பீட்டரின் முடிவுதான் என் முடிவும்….நீயே அவனிடம் பேசிப்பார்.”

அன்று மாலை பேச்சினிடையே, பீட்டரிடம் அனைவரின் முன்னிலையிலும் குரலில் ஏகப்பட்ட குழைவுடன், “பீட்டர்… என் ஒரே செல்ல மகள் ரெஜினாவை நீ மணந்து கொள்வாயா?” என்றார்.

உடனே அம்மாவைப் பார்த்தான். அம்மா கண்களால் சம்மதம் சொன்னவுடன், “கண்டிப்பாக மாமா…என்னுடைய ‘மாதச் சம்பளத்தில்’ என்னால் ரெஜினாவை சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியும். வாலிப வயதிலிருந்தே என்னுடைய காதல் பொக்கிஷம் ரெஜினாதான். கேரளாவில் பெய்த மழையால் பலருக்குத் துன்பம் என்றாலும், எனக்கு என்னுடைய காதலை மெய்யாக்கிய மழை” என்று புன்னகைத்தான்.

அந்த வீட்டில் மகிழ்ச்சி கரை புரண்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *