கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 12,965 
 
 

இருபத்தி ஆறு வயது வரை, எந்த வேலைக்கும் போகாமல், ஊர் சுற்றும் வேலையை மட்டுமே ஒழுங்காய் செய்து வந்த மகன் செல்வ கணபதியை பற்றிய கவலையிலேயே, கண்ணை மூடி விட்டார் ராமசுப்பையா.

அவர் இறந்த பின், இருந்த காடு கரையை விற்றதில், கணபதியின் கையில், இருபது லட்சம் ரூபாய் மிஞ்சியது. அவனது ஒரே அக்காவான அரியலூர்க்காரி பங்கு கேட்க வந்து நின்றாள்.
“வேண்டாம்… அவன் ஏதாவது ஒரு தொழில் செய்து முன்னேறட்டும்… நீ எதுவும் கேட்காதே…’ என்று மனைவியைத் தடுத்து, கூட்டிச் சென்று விட்டார் அழகர்சாமி.

விவசாயக் கடன் எட்டு லட்சத்தை கொடுத்ததுபோக, பாக்கிப்பணம் பனிரெண்டு லட்சத்தில், ஒரு பாவிப்பயலோடு கூட்டுச் சேர்ந்து, ஒரு சினிமா தியேட்டரை குத்தகைக்கு எடுத்த கணபதி, குடித்துக் கும்மாளம் இட்டது தான் மிச்சம். எடுத்துத் திரைஇட்ட எல்லாப் படங்களுமே வசூலில் மண்ணைக் கவ்வியது.

தகுதி2

கடைசியில் கணக்குப் பார்க்கும் போது, சில்லறை தான் மிச்சமாய் இருந்தது.

அவனது பங்காளி, பொய்க் கணக்கிலும், போலி டிக்கட் விற்பனையிலும், ஆரம்பத்தில் இருந்தே சுருட்டிக் கொண்டு வந்ததால், கை முதலோடு தப்பித்துக் கொண்டான். கணபதிதான் பாவம், குடிபோதையில் அழுது புலம்பிக் கொண்டே, குடிகாரத் தோழர்களின் கைத் தாங்கலில் வீடு வந்து சேர்ந்தான்.

மறுநாள் அழகர்சாமி, மைத்துனன் செல்வ கணபதியை கூப்பிட்டு வைத்து, கொடுத்தனுப்பிய கொடைதான், கடையேழு வள்ளல்களும் கொடுக்காத கனத்த கொடையாய் இருந்தது.

“செய்றதுக்கு உனக்கொரு தொழிலே கிடைக்கலியாக்கும்? சினிமா தியேட்டரை லீசுக்கு எடுத்திருக்க… அதுவும் பனிரெண்டு லட்ச ரூபாய்க்கு… ஒரு படுக்காலிப்பய உனக்கு பார்ட்னரு. எதையாவது என்கிட்ட சொன்னியா, கேட்டியா… இப்ப என்ன ஆச்சு? பனிரெண்டு லட்சத்தையும் தொலச்சுட்டு பல்லக்காட்றியே… இனிமே, ஒரு பைசாப் பெறுவியா? நீ சம்பாதிக்க வேண்டாம்… உன்னால முடியாது. பெரியவங்க தேடி வச்சதையாவது பத்திரப்படுத்த முடிஞ்சதா உன்னால? பனிரெண்டு லட்சத்தையும் பேங்குல போட்டு, நீ சித்தாள் வேலைக்கு போயிருந்தாலும் கூட, பெருமைப் பட்டிருப்பனே… இனி, என்ன செய்யப் போற?

“எரும மாடு… வளந்தா போதுமா? அறிவு வேண்டாமா? எக்கேடு கெட்டு போ… என் எதிரே இனி வராத… ஓடிப்போயிரு…’ என்று கை ஓங்கினார் அழகர்சாமி.

கவிழ்ந்த தலையோடு நின்று கண்ணீர் வடித்த கணபதி, “விறுவிறு’வென வெளியேறியவன் தான். அதன்பின், அரியலூர் இருக்கும் திசை பக்கமே அவன் தலை வைத்துப் படுப்பதில்லை.
ஏழையாகிப் போன அவன், தன் பத்தொன்பது வயது மகளுக்கு, தன் நிலைமைக்கு தகுந்த இடத்தில் ஒரு மாப்பிள்ளையைத் தேடி கொண்டிருந்தான்.

அவன், தன் மகளுக்கு, மாப்பிள்ளை தேடும் சங்கதியும், அரியலூர் அக்கா வீட்டிற்கு தெரிந்தது.
ஒரு காலத்தில், கணபதியின் வீட்டில் மாடுமேய்த்து, கஞ்சி குடித்த கீழத்தெரு சீனிவாசன். மணப்பாறை மாட்டுச்சந்தையில் ஒரு வியாபாரி தவற விட்டுப் போன ஆறு லட்சத்தை, கையோடு கொண்டு வந்ததால், அவன் அதிரடி பணக்காரனாய் மாறிய காலக்கட்டம் அது.
புதுப்பணக்காரன் ஆன சீனிவாசன், புது ஏழையாய் மாறிய கணபதியின் தோளில் கை போட்டான்.

“”உங்க அத்தான் உன்னை ரொம்ப பேசீட்டாராமே? இப்ப பேச்சு வார்த்தையும் இல்லையாமே? எல்லாம் எனக்குத் தெரியும் மாப்ள… ஒரு தொழில் செய்தா, அதுல லாப நஷ்டம் யாருக்கும் வர்றதுதான் மாப்ள… அது உங்க அத்தானுக்கு தெரியாமலா இருக்கும்?

“”அதுக்காகவா உங்க அத்தான் அப்படிப் பேசினார்ன்னு நினைக்கீங்க… இல்ல… இல்ல…வேற காரணம் இருக்கு மாப்ள… உங்களுக்கு தெரியாது.”

காரணத்தை கண்டுபிடிப்பதற்காக, செல்வ கணபதிக்கு சில நொடிகள் அவகாசம் தருவது போல், அவனையே, “குறுகுறு’வென்று பார்த்தபடி, பையப்பதறாமல், ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்து, புகை வளையம் இட்ட பின், “என்ன… காரணம் தெரியலியா?’ என்று கேட்பது போல் அவனை பார்த்துச் சிரித்தான் சீனிவாசன்.

“”வேற என்ன காரணம் மாமா?” என்று கணபதி அவரைக் கேட்ட விதம் அப்பாவித்தனமாய் இருந்தது.

“”கே.டி.ஆர்., முதலாளி வீட்ல, சம்பந்தம் பண்ணப் போறாரு உங்க அத்தான். இனி, உங்க உறவெல்லாம் அவருக்கு கவுரவக் குறைச்சல் தான? அதனால, உங்களை கழட்டி விடத்தான் அவ்வளவு பேச்சும்… ஏச்சும்… புரியுதா? இன்னமும் உலகம் தெரியாத ஆளா இருக்கியே மாப்ள?” என்று சொல்லி, மறுபடியும் புகை இழுத்து விட்டு, கபகபவென்று சிரித்த சீனிவாசனின் அசிங்கமான சிரிப்பை, ரசிக்க முடியாமல் தலை கவிழ்ந்தான் கணபதி.

“”கவலைப்படாத மாப்ள… நானும் இன்னைக்கு பணக்காரன்தான்… ஆனா, உங்க அத்தானைப் போல் நன்றி மறந்த ஆள் கிடையாது.

“”அரியலூர்ல… அன்னைக்கு அந்த ஆளுக்கு பெரிசா என்ன இருந்தது… காடுகரை இருந்ததா? சொத்து சுகம் இருந்ததா? அரியலூர் சிமென்ட் மில்லுல ஒரு வேலை மட்டும்தான்.

“”ஒழுக்கமான ஆள்… அந்த ஒரு தகுதியை வச்சுதான் அவருக்கு உங்க அப்பா பொண்ணு கொடுத்தாரு…

“”அந்த நன்றியை கூட மறந்து தான, இன்னைக்கு உன்ன மானாங்கனியாய் பேசி விரட்டீட்டாரு. ஆனா, நான் அப்படி இல்ல… பணக்காரனா இன்னைக்கு நான் இருந்தாலும், பழச மறக்கல…

“”உங்க வீட்டுல மாடு மேச்சு கஞ்சி குடிச்ச பழைய வாழ்க்கையை மறக்கவே மாட்டேன்.

“” உங்க அத்தானுக்கு நீ ஏழையாத் தெரியலாம்… எனக்கு, இன்னைக்கும் நீ தான் முதலாளி… உன் எதிர நின்னு பேசவும் எனக்கு தகுதி கிடையாது. ஆனா, உன்னைத் தூக்கி சுமந்த உரிமையில பேசுறேன்… அவ்வளவுதான்.

“”என்னை விடு… இந்த ஊரையே நான் கேக்குறேன்… எங்க கணபதி முதலாளி கால் தூசுக்கு சமமா எவன்டா இருக்கான் இந்த ஊர்ல… எவன்டா இருக்கான்? வாங்கடா… என் மாப்ள எதிர வந்து நில்லுங்கடா பாப்போம்.”

ஊரில் பத்து ஆட்கள் நடுவே சீனிவாசன் தலைக்கேறிய போதையில் சப்தமாய் பேச நொந்து போயிருந்த கணபதிக்கு, அதுவே பெரிய ஆறுதலாய் அமைந்தது.

“”மாமா… நான் முடிவு பண்ணிட்டேன். இனி, நீங்கதான் எனக்கு சம்பந்தி. ஒரு நல்ல நாள் பார்த்து வீட்டுக்கு வாங்க மாமா… என் மகளை உங்க பையனுக்கே பேசி முடிச்சிரலாம்…” என்று பத்து பேருக்கு முன்னால், பகிரங்கமாய் அறிவித்து விட்டான் கணபதி.

அங்கிருந்த அத்தனை பேருமே, ஒருவரை ஒருவர், திகைப்பும், வியப்புமாய் பார்த்தபடி, கசகசவென்று பேசிக்கொண்டே கலைந்து சென்றனர். கணபதியும் கூட, அப்பொழுது முழுபோதையில் தான் இருந்தான். அது வேறு விஷயம்.

மறுநாள் கணபதியும், சீனிவாசனும் சந்தித்த போது, போதை எதுவும் இல்லாத மிகத் தெளிவான மனநிலையில்தான் இருவருமே இருந்தனர்.

“”கணபதி மாப்ள… உனக்கும், உங்க அத்தானுக்கும் ஆயிரம் இருந்தாலும், அவர்தான் உன் அக்கா மாப்ள… அது இல்லேன்னு போயிருமா? அதனால, நாம எடுத்த முடிவ, அவர் வீடு தேடிப்போய் ஒரு மரியாதைக்காவது சொல்லீட்டு வந்திரு மாப்ள… அதோட, கல்யாணச் செலவுக்கு, ஐம்பதாயிரம் கேள் மாப்ள,” என்று சீனிவாசன் திடீரென்று தெரிவித்த யோசனை, கணபதியை, “குபீர்’ என்று கோபப்பட வைத்தது.

“”என்ன மாமா பேசுறீரு? அந்த ஆள் சகவாசமே வேண்டாம்ன்னு இருக்கேன். அங்க போகச் சொல்றீரு… போனது காணாதுன்னு, ஐம்பதாயிரம் வேற கேக்க சொல்றீரு? சீச்சீ…” என்று அருவருப்பாய் முகம் சுளித்தான் கணபதி.

“”அந்த ஆளுக்கு, ஐம்பது லட்சத்துக்கு செய்திருப்பார் உங்க அப்பா… அவர் உங்க வீட்டு மருமகன் ஆனதுக்கே, ஆயிரம் ஜென்மத்துக்கும் கடன்பட்டவர் மாப்ள… அவர் ஐம்பதாயிரம் தர்றது, ஒரு பெரிய விஷயமே இல்ல… போய் கேளுங்க,” என்று திரும்ப திரும்ப வற்புறுத்தினான் சீனிவாசன்.

கணபதி ஏற்றுக் கொள்ளவே இல்லை.

“”நீங்க போக வேண்டாம்… நான் போய்க் கேட்டுப் பார்க்கட்டுமா?” என்று சீனிவாசன் கிளம்பிய போது, கணபதிக்கு கோபம் பொங்கி எழுந்தது.

“”வேண்டாம் மாமா… அந்த ஆள் சகவாசமே வேண்டாம்… தயவு செய்து நான் சொல்றதக் கேளுங்க… முதல்ல நிச்சயம் பண்ணீறலாம்… இன்னைக்குக் கூட, முகூர்த்த நாள்தான்… இப்பவே வீட்டுக்கு வாங்க… வெத்திலை பாக்கு மாத்திக்குவோம்,” என்று சீனிவாசனின் கையை பிடித்து, கணபதி இழுத்தும் கூட, கையை கோபமாய் உதறிவிட்டு வேகமாய் சென்று விட்டான் சீனிவாசன்.

அதன் பின், தொடர்ந்து இரண்டு மூன்று முறை சீனிவாசனை பார்க்க முயன்றும் முடியாமல் போனதும், கடைசியில் அவனது வீட்டுக்கே சென்று சந்தித்தான் கணபதி.

வேண்டா வெறுப்பாய், கணபதியின் முகத்தைக் கூட பார்க்காமல், மிக இறுக்கமாய் முகத்தை வைத்துக் கொண்டு, கடுமையான, கண்டிப்பான தொனியில் பேசத் தொடங்கினான் சீனிவாசன்…

“”கணபதி மாப்ள… இப்ப வெளிப்படையா பேசீர்றேன்… வேதனைப் படாத…

“”உன் மகளை, என் மகனுக்கு கல்யாணம் செய்து வைக்க நீ ஆசைப்படற… ஆனா, நான் ஒண்ணும் தியாகி இல்ல… நீ இன்னைக்கு வெறும் ஆளா இருந்தாலும், உன் வீடு பல லட்சம் ரூபாய்க்கு போகும்.

“”அந்த வீட்டை நம்பித்தான் நான் சம்மதிச்சேன். உனக்கு ஆண்வாரிசு கிடையாது. அதனால, வீட்டை என் மகன் பெயருக்கு மாத்தீரணும்… அப்புறம், இப்ப, உன் கையில நயா பைசா கிடையாது. வெறுங்கையோட எப்படி கல்யாணம் நடத்தி வைப்ப? வறட்டுக் கவுரவம் பாராம, உங்க அத்தான் கால்ல விழுந்தாவது, ஐம்பதாயிரம் வாங்கீட்டு வா… நிச்சயம் பண்ணுவோம். போய்ட்டுவா… வீணா என் வீட்டுக்கு அலையாத,” என்று பட்டென்று சொல்லி, “படார்’ என்று கதவை சாத்திக் கொண்டான் சீனிவாசன்.

தன் மகளின் திருமணத்தை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருந்த கணபதி, வேறு வழி இல்லாமல், அரியலூர் அக்கா வீட்டிற்கே போனான்.

அவன் வீட்டை விட்டு கிளம்பிய நல்ல நேரமோ என்னவோ, அழகர்சாமி வீட்டில்தான் இருந்தார். மைத்துனனைக் கண்டதும், அமைதியாய் வரவேற்கவும் செய்தார்.

சீனிவாசன் மகனுக்கு, தன் மகளை நிச்சயம் செய்யப் போவதாய் தெரிவித்து… சில நிமிஷங்கள் மவுனமாய் இருந்து, தயங்கித் தயங்கி, கல்யாணச் செலவிற்கு, ஐம்பதாயிரம் ரூபாய் தேவைப்படுவதாய் குரல் நடுங்கக் கூறிவிட்டு… அந்த அவமான அவஸ்தையோடு, தன் அத்தான் முன் தலைகவிழ்ந்து நின்றான்.

“”ஐம்பதாயிரமா… ஐம்பது பைசாத் தர மாட்டேன்…” என்று சட்டென்று எழுந்து, எங்கேயோ தான் அவசரமாய்க் கிளம்புவது போல் சட்டையை போட்டு பொத்தான்களை மாட்டிய அழகர்சாமியிடம், அவர் மனைவிதான் தம்பிக்காக பரிந்து பேசினாள்…

“”முப்பது வயசு வரைக்கும், வீட்டுக் கஷ்டம் தெரியாமலே வளந்துட்டான்… விவரமில்லாமப் பொழச்சுட்டான். மூதேவி, கல்யாணச் செலவுன்னு வந்து கையேந்துறான்… அவனுக்கு நீங்க செய்யாம, யார் செய்வா?” என்று கண்ணைக் கசக்கிய தன் மனைவியை,
அடிக்கக் கை ஓங்கினார் அழகர்சாமி.

“”ஐம்பதாயிரம் உன் தம்பிக்கு தர்றேன். அவனோட நீயும் சேந்து போயிரு… அப்புறம் என் ஆயுசு உள்ளவரைக்கும், நீ இங்க வரக் கூடாது… போறியா டீ…” அழகர் சாமி தீர்மானமாய்க் கேட்ட போது, தன் வாயைப் பொத்திக் கொண்டு உட்கார்ந்த அக்காவிடம், அது வேண்டாம் எனக் கையசைத்து விட்டு, கவிழ்ந்த தலையோடு வாசலை நோக்கி நடந்தான் கணபதி.

“”நீ தர்றதா இருந்தா மட்டும் வா… உட்கார் பேசு… கேட்குறதுக்கு வராத மாப்ள…” என்று விரல் அசைத்துச் சொன்னார் அழகர்சாமி.

“”என்ன சொல்றீங்க… அவன் தரணுமா? இன்னமும் என்ன தரணும் உங்களுக்கு?”

“”ஆமா… உங்க அப்பாவைப் போல, அவனும் தர்றதா இருந்தா தான், இங்க வரணும்… எதையும் கேட்டு வர்றதா இருந்தா, வரவே வேண்டாம்.”

“”அவன்கிட்ட என்னங்க இருக்கு, இன்னமும் உங்களுக்கு தர்றதுக்கு?”

“”வீடு மட்டும்தான் இருக்கு. வேணும்ன்னா, அதையும் எழுதித் தந்துர்றேன்… வாங்கத்தான்,” என்றான் கணபதி.

“”வீடு வேண்டாம்… வீட்ல உள்ளதைத்தான் கேக்குறேன்…”

“”வீட்ல என்ன இருக்குத்தான்? எதுவுமே இல்லையே…”

“”இருக்கு மாப்ள… தூக்கிட்டு வந்துருவேன். எனக்கு உரிமை இருக்கு… ஆனா, நீயா தருவேன்னு எதிர்பார்த்தேன். ஆனா நீ, உன் வீட்டில் மாடு மேய்ச்ச சீனிவாசன் மகனுக்கு தரணும்ன்னு நினைச்சியே தவிர… உன் அக்கா மகனுக்கு தர்றதுக்கு, உனக்கு மனசு வரலியே மாப்ள?”

செல்வ கணபதி வியப்பும், திகைப்புமான மிகப்பெரிய அதிர்ச்சியோடு அத்தானை பார்த்தான்.

“”அன்னைக்கு அரியலூர் மில்லுல, நான் ஆறாயிரம் ரூபா சம்பளம் தான் வாங்குனேன். வேற எந்த தகுதியும் இல்லாத எனக்கு, உங்க அக்காவை தந்தாரு உங்க அப்பா… அது, அவரோட உயர்ந்த மனசு…

“”இன்னைக்கு அறுபதாயிரம் ரூபா சம்பளம் வாங்குறான் உன் சொந்த மருமகன்… உங்க அப்பாவோட பேரன். அவனுக்கு உன் வீட்டு மருமகனாகத் தகுதியில்ல. ஆனா, மாடு மேய்ச்ச சீனிவாசன் மகனுக்கு இருக்கு… அப்படித்தான மாப்ள?” என்று அழகர்சாமி கேட்டது தான் தாமதம், அவர் காலில் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தான் செல்வ கணபதி.

“”எனக்கு தகுதி இல்லேயே அத்தான். இந்த வீட்டுக்கு, என் மகளை அனுப்ப எனக்கு தகுதி இல்லையே… எல்லாம் இழந்துட்டனேத்தான்? எனக்கு என்ன தகுதி இருக்கு?”

அவனை தோளைப் பிடித்து தூக்கி நிறுத்தி, தன்னோடு சேர்த்தணைத்து, அவன் கண்ணீரைத் துடைத்தார் அழகர்சாமி.

“”ஒரு பொண்ண அடையறதுக்குத் தான் தகுதி வேணும் மாப்ள? தர்றதுக்கு தேவையில்லை… உன் மகளை அடையறதுக்கு, உன் மருமகனுக்கு தகுதி இருக்கு… அது போதும்.

“”உனக்கு மனசிருந்தால் போதும் மாப்ள… தகுதி என்ன பொல்லாத தகுதி… அது வர்ற நேரம், தானா வரும். உன் மகளைத் தர்றியா?”

“”தெய்வம், பக்தன் கிட்ட வரம் கேக்கிற மாதிரி இருக்குத்தான்… நீங்க என் கிட்ட கேக்குறது,” என்று கண்ணைத் துடைத்தபடி, அக்காவை பார்த்து சிரித்துக் கொண்டே சொன்ன கணபதியை, மேலும் தன்னோடு இறுகக் தழுவிக் கொண்டு…

“”நீ தான் மாப்ள என் சம்பந்தி… இது உன் அக்கா மேல சத்தியம்… உன் மருமகன் மேல சத்தியம். போதுமா… ஒரு நல்ல நாள் பார்த்து, நானும், உன் அக்காவும் உங்க வீட்டுக்கு வர்றோம்… இப்ப இருந்து சாப்பிட்டுப் போகலாம்,” என்று மிகக் கனிவாய் சொல்லி, தன் மைத்துனனை, அன்று தன்னோடு சேர்ந்து சாப்பிட வைத்து அனுப்பி வைத்தார் அழகர்சாமி.

மறுமாதம், சீனிவாசனைத் தேடி சென்றான் கணபதி. பஞ்சாயத்துத் திண்ணையில், பத்து பேர் மத்தியில் கால்மேல் கால்போட்டு, கம்பீரமாய் உட்கார்ந்திருந்தான் சீனிவாசன்.

தன்னை நோக்கி கணபதி சந்தோஷமாய் வருவதைப் பார்த்தே, தன் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டான் சீனிவாசன்.

“”என்ன மாப்ள… ஐம்பதாயிரம் சிக்கிருச்சி போல… சபாஷ் மாப்ள… கொண்டாங்க முதல்ல…” என்று கையேந்தினான் சீனிவாசன்.

சீனிவாசன் ஆவலாய் ஏந்திய கையைப் பிடித்து, மிக வேகமாக குலுக்கினான் கணபதி.
“”எப்படியோ? உங்க பிடிவாதத்தால, நானும், எங்க அத்தானும் ராசியாயிட்டோம் மாமா… சம்பந்தி ஆகவும் போறோம். நாந்தான் அறிவு கெட்டுப் போயி, அவசரப்பட்டு, உங்க சம்பந்தியாகப் பாத்தேன்… எங்க அப்பா செய்த புண்ணியம் வீண் போகுமா?

“”நீங்களே பிடிவாதமா என்னை அனுப்பி வச்சு, எங்க அத்தானோட என்னை சேத்து வச்சுட்டீங்க… ரொம்ப ரொம்ப நன்றி மாமா… எனக்கு கல்யாண வேலை, மலை உயரத்துக்கு இருக்கு, வர்றேன் மாமா…” என்று வந்த வேகத்தில் திரும்பினான் கணபதி.

சீனிவாசனை பார்த்து, அங்கிருந்த பத்துப் பேருமே, தலையில் அடித்து சிரித்த மிக இகழ்ச்சியான சிரிப்பால், பாவம் சீனிவாசன்,

பதிலுக்கு, இஞ்சி தின்ற குரங்கு போல பற்களைக் காட்டத்தான் முடிந்தது.

– செப்டம்பர் 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *