பிறப்பொக்கும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 19, 2023
பார்வையிட்டோர்: 2,386 
 
 

முதல் டிகாஷனின் கசப்பும், வீட்டுப் பசுவின் பாலின் சுவையுமாக அம்மா தந்த அந்தக் காலை காபி அமர்க்களமாக இருந்தது.

“ஏ ஒன் காபிம்மா. அதெப்பெடிம்மா உன் கைக்கு மட்டும் இப்படி ஒரு ருசியும், மணமும் வாய்க்குது?” சப்புக் கொட்டிக் கொண்டே அம்மாவிடம் கேட்டேன்.

“சரிதான் போடா… எதையாவது உளறாதே…” என்று செல்லமாய் சொல்லிவிட்டு காலி டம்ப்ளரை வாங்கிக் கொண்டு சமையற்கட்டிற்கு திரும்பினாள் அம்மா.

ஒரு பதினைந்து ஆண்டுகளாவது ஆகியிருக்கும் – நான் இப்படி நிதானமாக ஆற அமர எங்கள் கிராமத்து வீட்டில் தங்கி. பள்ளியிறுதி வரை உள்ளூர் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். பக்கத்து நகரிலிருக்கும் கல்லூரிக்கு கூட இங்கிருந்துதான் பஸ்ஸில் தினசரி போய் வந்து கொண்டிருந்தேன். வேலை கிடைத்து சென்னை போன போது மாதக் கணக்கில் ஊரையும், அம்மா அப்பாவையும் பிரிந்து இருக்க முடியாமல் ஆரம்பத்தில் பட்ட அவஸ்தைகள் எல்லாம் மெல்ல மெல்ல வேலை தந்த சுவாரசியங்களில் புதைந்து போனது. திருமணமான பின் குடும்பத்தின் கிளையலுவலகமாய் சென்னையிலேயே தனிக்குடித்தனமும் போட்டாயிற்று. ஆரபி பிறந்த பின்னரும் கூட வருடம் ஒன்றிரண்டு முறை வந்து போய்க் கொண்டு இருந்த பயணங்களின் தொடர்ச்சி எப்போது நின்றது என்று யோசித்துக் கொண்டே குளியலை முடித்துக் கொண்டு வந்தேன்.

சூடான தோசை இளம் குருத்தான வாழையிலையில் விழும் போது லேசாய் இலை வெந்து போகும் மணம் நாசியை நிறைத்தது. இளம் பச்சை நிறத்தில் மினுக்கும், ஸ்பிரிங் போல ஓரம் சுருண்டு கொள்ளும் குருத்து வாழையிலையைக் கண்ணால் பார்த்தே எத்தனை வருடமாயிற்று. அப்பா ஒரு போதும் தட்டில் சாப்பிட மாட்டார். எப்போதும் வாழையிலைதான். மழை நாளில் வாழைத் தோப்புகள் இருக்கும் ஆற்றின் அக்கரைப் படுகைக்குப் போய் வர முடியாது என்பதால் வாழையிலையை வெய்யிலில் காயவைத்து சருகாக பத்திரப் படுத்தி வைத்திருப்போம் வீட்டில். தேவையான போது கட்டிலிருந்து ஒரு சருகை உருவி தண்ணீரில் நனைத்தால் இலை தயார். மழை நாட்களில் பெரும்பாலும் அந்த சருகிலையில் வற்றல் குழம்பு சாதமும், காய்கறிகள் இல்லாததால் தொட்டுக் கொள்ள அப்பளமுமாக வாரக் கணக்கில் சாப்பிட்டாலும் கூட அலுக்கவே அலுக்காத சுகம்.

வேலையில் மேலும் மேலும் என்று எட்டிய உயரங்கள் கொடுத்த சலுகைகளாய் சென்னையில் பெரிய பங்களாவும், காரும் இன்ன பிற சவுகரியங்களும் நிறைந்திருந்தாலும் பிறந்து புழுதியளைந்து விளையாடிய இந்த மண்ணில் நிற்கையில்தான் என்னை நான் முழுமையானவனாக உணர முடிவது புரிந்தது.

மொறுகல் தோசையும் வெங்காயச் சட்னியுமாக காலைச் சிற்றுண்டியை முடித்தேன்.

“அம்மா இன்னொரு கப் காபி கிடைக்குமா?” சத்தமாய் அடுக்களை நோக்கி குரல் கொடுத்தேன். ரெண்டே நிமிடத்தில் காபி டம்பளருடன் அம்மா வந்தாள்

“ஏண்டா அம்பதை தொடறதுக்குள்ள பிபி, சுகர்னு சகலத்தையும் உடம்புல சம்பாதிச்சு வச்சிருக்கே. உன் பொண்டாட்டிக்கு இப்படி நான் ரெண்டாவது காபியும், மூனாவது காபியும் தர விஷயம் தெரிஞ்சால் இப்படி என்னிக்கோ ஒரு நாள் நீ இங்க வரதையும் நிப்பாடிரப் போறா” சிரித்துக் கொண்டே சொன்னாலும் அடிக்கடி வருவதில்லையே என்ற ஏக்கம் அதில் நிழலாடுவதை உணர முடிந்தது.

“நீ வேறம்மா. வேலை என்னை இருபத்திநாலு மணி நேரமும் பிச்சுத் தின்னுகிட்டிருக்கு. நீ இங்க வரலைன்னு குறைப்படறே. அங்க மெட்ராஸிலேயே தாரிணி நான் வீட்டுக்கே நேரத்துக்கு வரதில்லைன்னு புலம்பிகிட்டிருக்கா. லீவு நாள், பண்டிகைன்னு எதுக்கும் வீடு தங்க முடியறதில்லை. முதல் நாலஞ்சு வருஷத்துக்கப்புறம் எங்க கல்யாண நாள், ஆரபி பிறந்த நாளெல்லாம் கூட எனக்கு சரியா நினைப்பு வரதே இல்ல. என்னிக்காவது ஒரு நாள் அரை நாள் நிம்மதியா வீட்டுல உக்காந்தா போதும் உன் மருமக பொறிச்சு கொட்ட ஆரம்பிச்சுருவா… என்ன செய்யம்மா?”

“சரி, சரி. ஒன் பொண்டாட்டியும் பொண்ணும் வர நேரம்தான். நீ பாட்டுக்கு இப்படி எதுனா பேசிகிட்டிருந்தா அவ காதுல விழுந்து பிரச்சனையாயிறப் போகுது. ” அம்மாவுக்கு எத்தனையோ வருடம் கழித்து நான்கு நாட்கள் சேர்ந்தாற்போல தங்க நான் குடும்பத்தோடு வந்திருப்பதில் ஏக சந்தோஷம். அது எந்தவிதத்திலும் கெடுவது போல் பிரச்சனைகள் வந்துவிடக் கூடாது என ரொம்பவே கவனமாக இருந்தாள்.

தாரிணியின் அம்மா வழி உறவுக்காரர்கள் எங்கள் ஊரில் நான்கைந்து பேர் இருந்தனர். எங்கள் திருமணம் நிச்சயமானதே அவர்கள் மூலம்தான். எனவே நேற்று வந்து இறங்கியதிலிருந்தே காலையும் மாலையும் ஒரு மணிநேர திக்விஜயம் செய்வது என்று முடிவு செய்திருந்தாள். இன்றைய காலைச் சுற்றுலாவுக்கு மகளையும் கூட்டிக் கொண்டு போனவள்தான் – மதிய உணவு தயாராவதற்குள் வந்துவிடுவாள்.

அம்மாவின் பதட்டம் புரிந்து புன்னகைத்தேன்.

“சரிம்மா, மதியம் என்ன மெனு?”

“எல்லாம் உனக்கு பிடிச்ச ஐட்டங்கள்தான்.” உண்மையில் இந்திய உணவு வகைகளில் எனக்கு பிடித்த ஐட்டங்கள் என்னவென்று எனக்கே மறந்து போகத் துவங்கியிருந்தது. நினைத்த நேரத்தில் வெளிநாட்டுப் பயணம், உள்ளூரிலும் ஸ்டார் ஹோட்டல்களில் மட்டுமே புழக்கம். எப்போதும் உணவு நேரத்தில் யாரேனும் ஒரு க்ளையன்ட்டோ இல்லை மேலதிகாரியோ பக்கத்தில். எனவே கவனமெல்லாம் உணவின் மீது துளியும் படிவதில்லை. உள்ளூர் வாசம் செய்யும் நாட்களிலும் கூட தாரிணி குறைபட்டுக் கொள்வது போல் திருடன் நுழையும் நேரத்தில் வீட்டில் நுழைந்து பேய் சாப்பிடும் வேளையில்தான் சாப்பிட வாய்க்கிறது. என்னதான் ஹாட்பேக்கில் பதுக்கி வைத்தாலும் நான் வரும் நேரத்தில் அது ஆறி அவலாகத்தான் இருக்கும். இதோ நேற்றிலிருந்து அம்மாவும் அசராமல் விதம் விதமாய் சமைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறாள்.

“மதியத்துக்குள்ள பரசு மாமா வந்துருவாரில்லம்மா?”

“ஆமாடா, விடிகாலைல கிளம்பிப் போனவன். நாளைக்கு பூஜைக்குத் தேவையான எல்லா சாமனும் வாங்கி முடிச்சுட்டுத்தானே வரணும். ம்ம்…. நல்ல வேளையா உள்ளூர்லயே எந்தம்பியும் இருக்கப் போய் நான் உங்கப்பா மாதிரி ஒரு பொறுப்பத்த மனுஷனுக்கு வாழ்கப்பட்டும் கூட பொழப்ப ஓட்ட முடியுது. எது ஒன்னுக்கும் அவனத்தான் தொந்தரவு பண்ண வேண்டியிருக்கு. “

சமையற்கட்டை நோக்கி நடந்து கொண்டே அம்மா சொல்லிக் கொன்டு போனது மெல்ல மெல்ல தேய்ந்து போனது.

நாளை நடக்கவிருக்கும் எங்கள் குலதெய்வ வழிபாட்டுக்காத்தான் இந்த பயணமே. தாரிணியின் உடல் நலம், என் தொழில் சிக்கல்கள், அடுத்து ஆரம்பிக்க வேண்டிய ஆரபியின் திருமண முயற்சிகள் எல்லாம் நல்லபடி நடக்க வெகுநாட்களாய் செய்யாதிருந்த குலதெய்வ பூஜையை நடத்தியே ஆக வேண்டும் என அம்மா தொடர்ச்சியாய் ஒவ்வொரு முறை ஊருக்கு தொலைபேசும் போதும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

கிறிஸ்மஸ்ஸையும், புதுவருடப் பிறப்பையும் உள்ளிட்ட நீண்ட விடுமுறைக் காலம் எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லோருக்கும் கொண்டாட்ட நேரம். எனவே எங்களுக்கு அவர்களிடமிருந்து ஏதும் வேலை வராது. ஆனால் அந்த நாட்களில் மிச்சமிருக்கும் எல்லா சில்லறை வேலைகளையும் முடித்துக் கொண்டு நிமிர்ந்தால் அந்தப்புறம் வெள்ளைத் தோல் எஜமானர்கள் ஏகத்துக்கும் புத்துணர்ச்சியோடு திரும்பி வந்து கசக்கிப் பிழிய தயாராகிவிடுவார்கள். ஆனால் இந்த முறை அந்த நேரத்தில் எப்படியும் போராடி விடுமுறை எடுத்துக் கொண்டு குடும்பத்தோடு செலவழிக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். எனவே அந்நேரத்தில் இந்த பூஜைக்கு ஏற்பாடு செய்யுமாறு அம்மாவிடம் சொல்லியிருந்தேன். இதோ கிளம்பி வந்து சாவகாசமாய் சொந்த ஊரின் சொகுசுகளையும், அம்மா கைச் சமையலையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

பரசு மாமாவின் புல்லட் சத்தம் கேட்டது. தொடர்ந்து வியர்த்து வழியும் உடலுடன் தன் எட்டுமுழ வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இரண்டு கைகளிலும் பிதுங்கி வழியும் பைகளைச் சுமந்தபடி வேகுவேகென்று மாமா உள்ளே வந்தார்.

எழுந்து போய் அவரது கைச்சுமைகளில் ஒன்றை வாங்கி கொண்டேன். மாமாவின் குரல் கேட்டதுமே அவருக்கான காபியைக் கலந்து எடுத்துக் கொண்டு அம்மாவும் கூடத்துக்குள் வந்தாள்.

“என்னடா, எல்லா சாமானும் வாங்கியாச்சா?”

“ஆச்சுக்கா. மாலை, அர்ச்சனைக்கு உதிரிப்பூ எல்லாத்துக்கும் நம்ம ஆவுடைகிட்ட நேத்தே சொல்லிட்டேன். நேரா காலைல கோவிலுக்கே கொண்டு போய் கொடுத்திருவா. பூசாரி வீட்டுலதான் ஏற்கனவே சொல்லியாச்சே, இருந்தாலும் வரப்ப ஒரு குரல் கொடுத்துட்டு வந்துட்டேன். அவரு பையன இன்னிக்கு சாயந்தரமே அனுப்பிருவார். நீ அவங்கிட்ட அரிசி, பருப்பு சாமானெல்லாம் கொடுத்து விட்டுரு. சேவலையும், ஆட்டுக் குட்டியையும் மட்டும் நாம் போறப்ப கொண்டு போலாம்.”

நீளப் பேசிக் கொண்டே அம்மாவிடமிருந்து காபியை வாங்கி ஆற்ற ஆரம்பித்தார். அம்மா அவர் கொண்டு வந்த பைகளைப் பிரித்து எதற்கும் ஒரு முறை சரி பார்த்து அடுக்க உட்கார்ந்தாள்.

“முக்கியமான சாமன்கள் சிலது மட்டும் நாளைக்கு கோவிலுக்குப் போற வழில அப்படியே வாங்கிட்டுப் போயிரணும்” என்னைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே சொன்னார்.

ஆம், எங்கள் குலதெய்வமான பாவாடைராயன் நல்ல அசைவப் பிரியர் மட்டுமல்ல. சுருட்டு, பொடிமட்டை, சாராயம், கள்ளு என சகல லாகிரி வஸ்துக்களும் அவருக்குப் படைக்கப் படவேண்டும். அப்பாவோ அவ்வஸ்துக்களை வீட்டுக்குள்ளேயே சேர்க்காத ஆசாமி. எனவே கோவிலுக்குப் போகும் வழியில் அவைகளையெல்லாம் வாங்கிக் கொண்டு போவோம். அல்லது பண்ணையாள் யாரையேனும் வாங்கிக் கொண்டு நேராக கோவிலுக்கு வரச் சொல்லிவிடுவோம்.

மறுநாள் விடிகாலை எழுந்து எல்லோரும் குளித்து முடித்து காரில் ஏறினோம். முன்னால் சென்ற பரசு மாமாவின் புல்லட்டைத் தொடர்ந்து வண்டியை செலுத்திக் கொண்டிருந்தேன். எங்கள் ஊரிலிருந்து குலதெய்வக் கோவில் இருந்த மாத்தூருக்கு காவிரியின் கிளை நதிகள் மூன்றையும், பின்னர் காவிரியையும் தாண்டி கொஞ்சம் சுற்றிக் கொண்டு போக வேண்டும். போகும் வழியெல்லாம் அப்பா டூரிஸ்ட் கைடாகத் தன்னை பாவித்துக் கொண்டு என் மகளுக்கு ஒவ்வொன்றாய் விளக்கிக் கொண்டிருந்தார். என் மகளும் விவரம் தெரிந்த நாள் முதலாய் சென்னையிலேயே வாழ்பவள் என்பதால் நெல் எந்த மரத்தில் காய்க்கும் என்கிற அளவில் அப்பாவியாய் கேள்வி கேட்க என் அப்பா தன்னை ஒரு அப்துல் கலாமாக நினைத்துக் கொண்டு அவள் அறிவுக்கண்ணை விரிய வைத்துக் கொண்டே இருந்ததார்.

நான்காவது பாலமான காவிரிப் பாலத்தையும் தாண்டி கும்பகோணம் செல்லும் சாலையில் ஏறும் போது நேர் எதிரில் ஒரு பெரிய பொட்டல் மைதானம் ஒன்று உண்டு. மைதானத்தை அடுத்து வருவது மெய்யப்பச் செட்டியின் எண்ணெய் செக்கு. சிறு வயதில் அப்பாவோடு செக்கிற்கு வரும்போது இந்த மைதானத்தில் ஆங்காங்கே கட்டிப் போடப்பட்டிருக்கும் மாடுகள் வினோதமான குரலில் கத்திக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கும். ஏனென்று கேட்டாலும் அப்பா அதைத் தவிர்க்கும் விதமாக வேறு ஏதாவது பேச்சை மாற்றிவிடுவார். சில சமயங்களில் வீட்டிலிருக்கும் பசுமாடுகளும் சில சமயங்களில் அதே போல் வினோத ஒலி எழுப்புவதும் மறுநாளே பண்ணையாட்கள் யாரையாவது விட்டு இங்கே ஓட்டி வரச் சொல்வதையும் கவனித்திருக்கிறேன். எனவே எதோ வியாதி போல, இங்கே மருத்துவத்திற்கு அழைத்து வருகிறார்கள் என்று புரிந்து வைத்திருந்தேன். விவரம் புரியத் துவங்கியதும்தான் அந்த கத்தல் இனப்பெருக்க விழைவுக்கானது என்பதையும், இங்கே மைதானத்தின் கோடியில் இருக்கும் ராமுக் கோனார் வீட்டில் இருக்கும் பொலி காளைகளிடம் விடுவதற்காகவே இந்த பசுக்கள் இங்கே ஓட்டி வரப்படுகின்றன என்பதையும் ஊகித்துப் புரிந்து கொண்டேன். பாலத்தில் வரும்போதே இதையெல்லாம் யோசித்துக் கொண்டு லேசான புன்னகையுடன் காரை கும்பகோணம் பாதையில் திருப்பியவாறே மைதானத்தின் பக்கம் பார்த்தேன்.

மைதானம் என்னவோ அப்படியேதான் இருந்தது. ஆனால் மாடுகள் எதுவுமேயில்லாமல் வெறுமையாக இருந்தது. பக்கத்திலிருந்த செக்கும் அதை ஒட்டிய செட்டியாரின் எண்ணெய், புண்ணாக்கு விற்கும் கடையும் காணாமல் போய் அங்கே சற்று நவீனமான ஒரு மளிகைக் கடை புதிதாய் முளைத்திருந்தது.

என்னப்பா பொட்டல் காலியாக் கிடக்கு? ராமுக் கோனார் மாடு எதுவும் இப்ப வச்சுக்கலையா?

உங்க பட்டணம் அளவுக்கு எல்லாத்துலயும் நவீனமா மாறிடலைன்னாலும், ஊரெல்லாம் மட்டும் அப்படியே உறைஞ்சு போயிருக்கும்னா நினைச்சுகிட்டிருக்க? இப்பல்லாம் யாருப்பா மாட்டை பொலிகாளை கிட்ட விட்டு சினைப் பிடிக்க வச்சுகிட்டிருக்காங்க? மாட்டாஸ்பத்திரிக்கு ஓட்டிகிட்டுப் போனா ஒரு ஊசில மாடு சினைப்பட்டுருது. அதுலயும் நல்ல சீம மாட்டு வித்தா பாத்துல்ல சேத்து வச்சிருக்காங்க, அதுனால கன்னுகுட்டிகளும் நல்லா இருக்குதுங்க. நீ காலேஜ் போறப்பல்லாமே நாம மாடுங்கள இங்க ஓட்டி வரத் நிறுத்தி, உள்ளூர் மாட்டாஸ்பத்திரிக்கு கொண்டு போக ஆரம்பிச்சுட்டோமே, உனக்கு கவனமில்ல போல?

ஆமாப்பா, ஆனா அப்பவும் கூட அதெல்லாம் நல்லதில்லன்னு நம்ம சுப்பு மாமா மாதிரி கொஞ்சம் பேர் இங்கதானே வந்துகிட்டிருந்தாங்க?

எவ்ளோ நாளைக்கு பிடிவாதமா முரண்ட முடியும்? அத்தோட ஊருக்கு ரெண்டு பேர் பசு ஓட்டிகிட்டு வரதை நம்பி ராமுக் கோனார் காள வளக்க முடியாதில்ல?

அதுவும் சரிதான் என்று ஆமோதித்தாலும் கூட உள்ளுக்குள் கொஞ்சம் குறுகுறுப்பாய் இருந்தது. பொதுவாய் பிரசவத்திலோ அதைத் தொடர்ந்தோ கன்றுக்குட்டி இறந்துவிட்டாலும் பசுவிடமிருந்து தொடர்ந்து பால் கறக்க தோல் கன்றுகுட்டி செய்து அதனுள் வைக்கோல் அடைத்து அதை மாட்டிடம் காண்பித்து பால் சுறக்க வைப்பது எல்லா இடத்திலும் வழக்கம்தான். ஆனால் அதையே அப்பா கூடாது என நினைப்பவர் – வாயில்லா ஜீவன் என்பதற்காக அதன் தாய்ப்பாசத்தை கேவலப்படுத்தக் கூடாது என்று சொல்பவர். அவருமே கூட அதன் இயற்கையான இணை விழைவை தடுப்பது தவறில்லை என்று நினைப்பது ஆச்சரியம்தான். அவரவர்க்கு அவரவர் நியாயங்கள். மெல்லிய பெருமூச்சுடன் பாதையில் கண்ணைப் பதித்தேன்.

கோவிலுக்குப் போகும் பாதையின் முனையிலேயே காரைப் பார்க் செய்துவிடச் சொன்னார் அப்பா. அங்கிருந்து ஒரிரு நிமிட நடையில் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம். வெகு நாட்கள் கழித்து கோவிலின் உள் நுழைந்த பரவசம் அம்மாவின் முகத்தில். நாங்கள் போய் இறங்கியதும் விறுவிறுவென பூசாரி சுப்பையா வேலைகளை ஆரம்பித்தார். முதலில் ஆட்டையும், கோழியையும் பாவாடைராயன் சன்னிதிக்கு நேர் எதிரில் சற்றுத் தொலைவில் நடப்பட்டிருக்கும் வேலின் அடியில் பலியிட்டு ரத்தத்தை ஒரிரு சொட்டுக்கள் வேலின் மேல் தடவினார். பின்னர் அவற்றை சமையலுக்காக தன் மருமகளிடம் கொடுத்துவிட்டு கிணற்றடிக்குப் போய் குளித்துவிட்டு வந்து ஈர வேட்டியுடன் அபிஷேகத்தை துவங்கினார்.

அபிஷேகம் முடித்து, அர்ச்சனையை முடிக்கவும் அவர் வீட்டினர் சமையலை முடித்து பதார்த்தங்களை கொண்டு வந்து சன்னிதியில் இலை போட்டு அடுக்கவும் சரியாக இருந்தது. அடுத்து தீபாராதனையும் காட்டி இலையை சாமிக்கு படைத்தார். பின் எல்லோருக்கும் திருநீறு பூசினார். பிறகு பிரசாத உணவை சிறு இலைத் கிழிசல்களில் தர, அங்கேயே சன்னிதியில் உட்கார்ந்து சாப்பிட்டு பின் வீட்டுக்கு கிளம்பினோம்.

பக்திப் பரவசமும் இனி எல்லாம் நல்லதே நடக்கும் என்ற நிம்மதியுமாக அம்மாவின் முகம் விகசித்திருந்தது. தாரிணியும் கூட வழக்கமான தனது உடல்நலப் புலம்பல்களை நிறுத்திவிட்டு வேறு வேறு விஷயங்களைப் பற்றி பேசியபடி கலகலவென வந்தாள். திடீரென நினைத்துக் கொண்டவராய் அப்பா அபிஷேகத்தின் பின் அலங்காரத்திற்காக காத்திருந்த நேரத்தில் பரசு மாமா பேசிய விஷயத்தை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்.

“நம்ம வங்காரம்பேட்ட திருநாவு இல்ல, அவன் பரசுவ முந்தாநாள் தேங்காவெட்டு விஷயமா பாக்கவந்தானாம். அப்ப உங்க அக்கா மகன் குடும்பத்தோட வந்திருக்கானாமே, அவன் பொண்ணையும், சம்சாரத்தையும் மாரியம்மன் கோவில்ல வச்சுப் பாத்தோம். என் கடசீப் புள்ள குமரேசனுக்கு அந்தப் பொண்ணு பொருத்தமாயிருக்கும்னு தோணிச்சு. அவனும் நல்ல கம்ப்யூட்டர் படிப்பு படிச்சுட்டு வெளிநாட்டுல வேலபாத்து கை நிறைய சம்பாதிக்கறான். எங்க அந்தஸ்து, சொத்து சொகம்னு எல்லா விவரமும் உனக்கும் உங்கத்தானுக்கும் நல்லாவே தெரியும். அதுனால யோசிச்சுப் பாத்து சரின்னா சொல்லுங்க, ஜாதகம் கொடுத்துவிடறேன்னு சொன்னானாம்.”

அந்த திருநாவுக்கரசு தாரிணிக்கும் ஒரு விதத்தில் உறவுதான். நல்ல பரம்பரை பணக்காரர்கள்.

“பாத்தீங்களா, குலதெய்வ தரிசனம் பண்ணின ஒடனே நல்ல விஷயமா பேச்சு வருது பாருங்க” என்று குதூகலமாய் தாரிணி என் பக்கம் குரலை அனுப்பியதிலேயே தெரிந்தது அவளுக்கு இந்த சம்பந்தத்தில் ஆர்வமிருக்கிறது என்று.

ஆரபி இப்பேச்சைக் கேட்டதும் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டாள். அவளுக்கு மேற்படிப்புக்கு பூலோக வைகுண்டமான அமெரிக்கா செல்ல ஆசை. அதற்கான தேர்வுகளுக்குத் தீவிரமாகத் தயார் செய்து கொண்டிருந்தாள். ஜிஆர் ஈ ஸ்கோர் என்றும், எந்தெந்த பல்கலைக்கழகங்களில் எவ்வளவு தூரத்துக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என்றும் தோழிகளுடன் பரபரத்துக் கொண்டிருப்பவள் அவள். இந்த கல்யாணப் பேச்சைக் கேட்டதும் கன்னம் சிவந்து, கால்விரலால் தரையில் கோலமிடுவாள் என்று எதிர்பார்க்க முடியாதுதான்.

தாரிணிக்கு தன் பக்கத்து சொந்தத்திலிருந்து வரும் மாப்பிள்ளை என்கிற ஆர்வம். ஆனால் என் மனநிலை என்னவென்று எனக்கே சரியாகத் தெரியவில்லை. பெண் அடிவயிற்று நெருப்பு, காற்றிலும் கூட கிழிந்துவிடும் வாழையிலை என்றெல்லாம் காலகாலமாய் கேட்டுக் கேட்டு வளர்ந்ததினால் அவளது கல்யாணம் என்பது ஏதோ என்னுடைய தலை மேல் உட்கார்ந்திருக்கும் பாறை போலவும், விரைவில் ஒரு சுமைதாங்கியைக் கண்டுபிடித்து அதை இறக்கி வைத்துவிட வேண்டும் என்றும் சில சமயங்களில் தோன்றுகிறதுதான்.

ஆனால் ஆரபியை, அவள் புத்திசாலித்தனத்தை, படிப்பு, இசை, இலக்கிய ரசனை என்று அஷ்டாவதானியாக அவள் பரிணமிப்பதை பார்த்து பிரமிக்கும் நேரங்களில் ஒரு குழந்தையை வளர்ப்பதும், நல்ல கல்வி தருவதும் மட்டுமே நம் கடமை. அதற்கு மேல் இந்தக் கல்யாணம் பண்ணி வைப்பது மாதிரியான அதிகப்பிரசங்கித் தனமெல்லாம் தேவையற்றது என்பதை உணர்கிறேன்.

நான் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வைத்திருக்கும் போது கூட நான் செலவழித்து அவளை வெளிநாடு அனுப்ப வேண்டும் என்று துளியும் எதிர்பார்ப்பதில்லை. அப்படியிருக்க அவள் திருமணம் என்பது அவளாய் காதல் ஒருவனைக் கண்டு கொண்ட பின்பல்லவா நடக்க வேண்டும்? இன்னமும் அம்மாவோடு சேர்ந்து கொண்டு தாரிணியும் “பெண்ணை ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுக்க” தவிப்பது கொஞ்சம் பரிதாபமாகத் தோன்றியது.

அப்பா தகவல் தெரிவிப்பதோடு தன் கடமை முடிந்து விட்டது போலவும், முடிவெடுக்க வேண்டியது நானும் தாரிணியும் மாத்திரமே என்பது போலவும் மௌனமானார். அம்மாவின் முகத்திலும் தீவிரமான சிந்தனைக் கோடுகள். தன் குதூகலக் குரலுக்கு யாரிடமிருந்தும் எதிரொலி இல்லை என்பது கண்ட தாரிணியின் முகத்திலும் லேசான சிடுசிடுப்பு. மெல்ல இறுக்கத்தைக் குறைக்கும் விதமாக பேச்சை ஆரம்பித்தேன்

என்னம்மா… ஒன்னுமே பேசாம வர்ர? நீ சொன்னா மாதிரியே குலதெய்வ பூஜய முடிச்சவொடனே கல்யாண பேச்சு வருது. பாத்தியாடா, பாவடராயனோட மகிமையன்னு சந்தோஷத்துல பொங்குவன்னு பாத்தா அமைதியா இருக்க? ஆச்சரியமா இருக்கேம்மா?

மெல்ல குரலை கனைத்துக் கொண்டு அம்மா பேச ஆரம்பித்தாள் ”நல்ல விஷயம் பேசுறப்ப நான் அஸ்து போடறதா நினைக்காதேப்பா. அம்மாடி தாரிணி, அவங்க ஒரு வகைல உனக்கு சொந்தமும் கூட. அதுனால உனக்கு இந்த வரன் பிடிச்சிருக்கலாம். நான் முட்டுக் கட்டை போடறேன்னு நினைக்காதே. ஆனா, என் மனசுல படறத சொல்லிடறேன். அப்புறம் பொண்ண பெத்த நீங்கதான் முடிவு செய்யணும்.”

“எதுக்கு அத்தை நீங்க இவ்ளவு பீடிகையெல்லாம் போடறீங்க. நம்ம குடும்பத்துக்குள்ளதானே பேசுறோம், பெரியவங்க நீங்க எதுக்கு இவ்ளோ ஜாக்கிரதயா பேசறீங்க. மனசுல படறத சொல்லுங்க. நீங்க சொல்றத மீறியா உங்க பேத்திக்கு கல்யாணம் செய்யப்போறோம்?” தாரிணி பவ்யமாகச் சொன்னாலும் அம்மா மீண்டும் கொஞ்ச நேரம் மவுனமாக இருந்தார்.

“அந்த திருநாவுக்கரசும் சரி, அவரு சம்சாரமும் சரி பணம் பணம்னு அது ஒன்னே குறியா இருக்கறவங்க. அது ஒன்னும் தப்பில்லைதான். ஆனா அவரோட மூத்த மகனுக்கு கல்யாணம் ஆகி பன்னென்டு வருஷம் ஆகுது. அந்தப் புள்ளயும் ஏதோ வெளிநாட்டுலதான் வேல பாக்குது. பொண்டாட்டி புள்ளங்கள கூட்டிகிட்டு போய் வச்சுக்கறதுக்கு வசதி இருக்கா மாதிரி பெரிய வேலைதான். குடும்பத்த கூட்டி வர பர்மிஷனெல்லாம் இருக்காம். ஆனாலும் அந்த மருமக இங்க வங்காரம்பேட்டைல இவங்க வீட்டுலதான் இன்னமும் இருக்கு. ரெண்டு பிள்ளங்களையும் இதோ இங்க மணி மெட்ரிகுலேஷன்லதான் சேத்திருக்காங்க. அந்த பொண்ண பெத்தவங்க இந்த அதிசயத்த பாத்து மாஞ்சு போறாங்க – வெளிநாட்டுல குடும்பம் பண்ணினா காசு மீக்க முடியுமா, அவன் சம்பாதிச்சுட்டு வரட்டும். உங்க பொண்ணை சவுகரியமாத்தான் வச்சிருக்கோம்னு நியாயம் பேசறாங்களாம் பையன பெத்தவங்க. “

பேச்சை சற்றே நிறுத்தி சில வினாடிகளுக்கு வெளியில் வேடிக்கை பார்த்தாள்.

“பணம் காசெல்லாம் நீயே நிறைய சம்பாதிச்சு வச்சிருக்க. பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுக்கறது வெறுமன காசும் பணமும் சேக்க மட்டுமில்லை. அவ புருஷனோட சேர்ந்து சந்தோஷமா வாழ வேணாமா? இந்தப் புள்ளையும் வெளிநாட்டுலதான் இருக்கான்னா, நம்ம பொண்ணும் லெட்டர்லதான் குடித்தனம் பண்ண வேண்டியிருக்கும். நம்ம புள்ளைக்கு அப்படி ஒரு நிலம வேணாம்பா… உள்ளூரோ வெளியூரோ ராமனிருக்கும் இடம் சீதைக்கு அயோத்தின்னு நம்ம பெரியவங்க சும்மா சொல்லலை. “

மேற்கொண்டு முடிவை நானும், தாரிணியும்தான் எடுக்க வேண்டும் என்பது போல் பேச்சை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்கத் துவங்கினாள்.

“நீங்க சொல்ல வரது எனக்கு நல்லாவே புரியுதும்மா. ஆரபியும் மேல படிக்கற ஆர்வத்துலதான் இருக்கு. அதுனால இப்போதைக்கு அவ கல்யாணத்துக்கு நானும் அவசரப் படலை. இதையே காரணமா அவங்ககிட்ட சொல்லிருங்க”

ஆரபியும் அப்பாவும் இறுக்கம் குறைந்து புன்னகைக்கத் தொடங்கினர். கார் வெறுமையான பொட்டல் மைதானத்தை தாண்டி காவிரிப் பாலத்தில் நுழைந்தது. கழுத்தைத் திருப்பி அந்த காலிப் பொட்டலை இன்னொரு முறை பார்ப்பதை மட்டும் என்னால் தவிர்க்க முடியவில்லை.

நன்றி – கதவு காலாண்டிதழ் (2012 அக் – டிச)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *