கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 7,110 
 

”அடியேய்! பனையூரான் இந்த தபா பலவையப் போட்ருவானா?.. போட்ற கையை அங்கியே வெட்டுவோம்டியேய்.”

“அட பொறுங்கப்பா!.”

“மாமா! அவங்க ஏரி நேத்திக்கே கலங்கு சாஞ்சிட்டதுதானே? இதுக்கு மேல சாயறது நம்ம தண்ணி. நம்மூரு ஏரிக்கு வரணும். இப்ப பார்த்து அடாவடியா கலங்கல் மடையில ஏற நாலடி தண்ணி கட்றான்னா இன்னா அர்த்தம்?. நாமெல்லாம் பொட்டைங்க.”

“மாப்ளே! போனவாட்டிதான் ஏமாந்துட்டோம்.இப்ப நடக்கப் போறதை பனையூரான் என்னைக்கும் மறக்கக் கூடாது. அப்பிடி வெச்சி தாக்கிப்புடணும்.”.

வெளியே நறநறவென்று மழை விளாசிக் கொண் டிருக்க,நந்தியூர் சாவடியில் நடந்துக் கொண்டிருந்த வாய்க்கால் பிரச்சினையின் உள்ளூர் கூட்டம் இப்படித்தான் ஆரம்பித்தது. அடுத்த கட்டமாக, மறுநாள் பனையூர் ஏரிக்கரையில் இரண்டு தரத்தாரும் மோதிக் கொண்டதில் நிறைய பேர் அடிபட்டார்கள். நந்தியூர் ஆள் ஒருத்தன் ஸ்தலத்திலேயே செத்து விழ, வன்முறை வெடித்தது. அதற்கப்புறம் நடந்தவைகளை சொல்லி முடியாது. சம்பவங்கள்தான் அவர்களை நடத்திச் சென்றன. ஆடுபுலி ஆட்டம்போல மாற்றி மாற்றி வெட்டிக் கொண்டார்கள். ரிசர்வ் போலீஸ் படை வந்திறங்கி, நிலைமையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்குள் இரண்டு தரப்பிலும் தலா ஒரு பிணம் விழுந்துவிட்டிருந்தது. நிறையபேர் அடிபட்டிருந்தார்கள்.

மீடியாக்கள் நந்தியூரையும்,பனையூரையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன. பெண்கள் மார்பில் அறைந்துக் கொண்டு கதறும் காட்சிகள்,பேட்டிகள்,ஆண்களின் சூளுரைகள், வெறிக் கூச்சல்கள், அவ்வளவும் தமிழகமெங்கும் பட்டித்தொட்டிகளெல்லாம் கொண்டு செல்லப் பட்டன. முதல்வர் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபமும், நஷ்டஈடும் அறிவிக்க, இங்கே சட்டம்,ஒழுங்கு சீர்குலைந்து விட்டது, முதல்வர் இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என்று ஒன்றன் பின் ஒன்றாய் எல்லா எதிர்கட்சிகளும் பக்கம் பக்கமாய் அறிக்கை விட்டு தத்தம் இருப்பை காட்டிக் கொண்டிருந்தன. இரண்டு ஊர்க்காரர்களும் சாலை மறியலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

சில நற்பணி மன்றங்களின் ஆக்கபூர்வமான அனுகுமுறையினால் மூன்றாம் நாள் பனையூர் மேநிலைப்பள்ளியில் கலெக்டர் தலைமையில் நல்லிணக்கக் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடாகியிருந்தது. கூட்டத்திற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் வந்திருந்தார். வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.கேட்டுக்கு வெளியேயும் மக்கள் திரண்டிருந்தனர். லேசாக உசுப்பினால்கூட வன்முறை வெடிக்கும் தீட்சண்யம் எங்கும் விரவியிருந்தது. தாசிதார் எழுந்து தன் உரையை ஆரம்பித்தார்.

“இந்த தாவா சம்பந்தமாய் நடைமுறை சட்டத்தை மட்டும் நான் சொல்லிவிட்டு முடிச்சிக்கிறேன். பாலாற்றிலிருந்து பிரிந்துவரும் மாமண்டூரான் கால்வாய்த் தண்ணீர் மாமண்டூர் பெரிய ஏரிவரைக்கும் இடையில் இருக்கிற மொத்தம் பதிமூன்று ஏரிகளுக்கும் பொதுவானது. தனிப்பட்டு எந்த ஊருக்கும் சொந்தமானதில்லை..”
சண்டைக் கோழியாய் பனையூரான் ஒருத்தன் எழுந்தான்..

‘அந்த சட்டம் எங்களுக்கும் தெரியும் சாரூ!. எங்க ஏரி ரொம்பினப் பெறவு தன்னால நந்தியூர் ஏரிக்கு தண்ணீர் பெரளப் போவுது. இப்ப இன்னாத்துக்கு பிரச்சினைப் பண்றீங்க?.”

“டாய்!…டாய்!…மயிரு, திருட்டுப் பலகைப் போட்டுட்டு சட்டம் பேசறீயா?. ஒதை வாங்கப் போறடீ!.”—-நந்தியூர் ஆட்கள் எழுந்துத் துள்ளினார்கள். பதிலுக்கு பனையூரான்களும் எழுந்து கத்த, கலெக்டர் எழுந்தார்.கூட்டம் கப்சிப்பென்று அடங்கியது.

“முதல்ல பனையூர்காரங்க தங்கள் ஏரியில கோடிமடையில, நாலடிக்கு பலகைப் போட்டு நாலடி உசரத்துக்கு மடை கட்டினது சட்டப்படி குற்றம் என்பதைப் புரிஞ்சிக்கணும். ஒண்ணு உங்க ஏரிக்கு அடுத்த கீழ் ஏரி அதாவது நந்தியூர் ஏரி கலங்கு சாய்ஞ்சப்புறம் நீங்க பலகைப் போடலாம், மடை கட்டிக்கலாம். அல்லது மழைக்காலம் முடிஞ்சப்புறம், அதாவது டிசம்பர் பதினைந்து தேதிக்கு மேல தண்ணி கட்டிக்கலாம். ஆட்சேபமில்லை.. இதுதான் நடைமுறை சட்டம்..”

“கலெக்டர் ஐயா! மழைக்காலம் முடிஞ்சிப் போச்சிங்க. இந்த வருசமும் இவ்வளவுதான் மழை. பாருங்க ஒருவாரமா தென்னங்காத்து ஓட்டுதுங்க. காத்து திரும்பிட்டதுங்கய்யா. நாலைஞ்சி வருசமாவே கார்த்தி எட்டுக்குமேல நம்ம பக்கம் மழை இல்லீங்க. உங்க ரெக்கார்டைப் பாருங்க புரியும். அப்புறம் எதுக்கு தப்பு சொல்றீங்களாம்?.”

“அடீங்! பொத்துடா தெரியும். நாளைக்கேகூட மழை பெய்யலாம். டிசம்பர் பதினைந்துக்கு மேலே, இதுதான் சட்டம்.. வுடமாட்டோம்டியேய்!.”

“நான் கலெக்டர்கிட்ட பேசறேன். நீ இன்னாடா குறுக்கால குலைக்கிறது?..”—–மறுபடியும் இரண்டு தரப்பும் மோதிக் கொண்டன. ஒரே கூச்சல். சட்டமன்ற உறுப்பினர் எழ அடங்கியது.

“ரெண்டு ஊர்காரங்களும் தயவுசெஞ்சி சட்டம் என்ன சொல்லுதுன்னு பாருங்க.”—ஓட்டுவங்கி என்பதால் கடைசிவரைக்கும் பொல்லாப்பு வராமல் அடக்கி வாசித்தார்.

“ஆமா பொல்லாத சட்டம். இதையேதான் கர்நாடகாக்காரன் பண்ணிக்கிட்டு வர்றான். கீழ்கோர்ட்டு ,மேல்கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டுன்னு எங்க போயும் ஒண்ணும் ஜிம்பமுடியல. .அங்க வாயைக் காணோம். இங்க நாங்கன்னா எளப்பம், தலை காய்ஞ்சவங்க.”——பனையூரான் ஒருத்தன் சட்டம் பேசினான்.

“இங்க யாரும் அரசியல் பேசாதீங்கப்பா!.”—–இது கலெக்டர். பனையூர் தலைவர் எழுந்தார்.

“ஐயா! பலவைப் போட்டு நாலடி தண்ணீர் ஏற கட்டலேன்னா மூணாம் போகம் கதிரு பால் புடிக்கிறப்போ தண்ணி அருந்தட்டலா போயிரும். அப்புறம் பயிரு சாவியாப் போயி, மாட்டை வுட்டுத்தான் மேய்க்கறதா இருக்கு.. அதனாலதான் இப்படி போராடிக்கிட்டு இருக்கோமுங்க..’

கலெக்டருக்கு எரிச்சலாக இருந்தது..

“நந்தியூர்காரங்களுக்கு ஆடுமாடு குடிக்கக்கூட ஏரியில தண்ணி இல்லேன்றப்போ, நீங்க மூன்றாம் போகத்துக்கு இப்படி வெட்டு குத்து ரேஞ்சுக்கு போறது அநாகரீகம். அதனால இன்றைய தேதிக்கு, என் முன்னிலையில் பனையூர் ஏரியில் சட்ட விரோதமாய் அடைக்கப் பட்டிருக்கும் கோடிமடை அகற்றப் படுகிறது..”

கலெக்டர் கையொப்பம் இட்டுவிட்டுக் கிளம்பிவிட்டார். பனையூர் ஆட்கள் கோஷமிட்டபடி வெளியேற, நந்தியூர் ஆட்கள் சந்தோஷத்தில் குதித்தார்கள். ஆனால் பாவம் அவர்கள் சந்தோஷம் முழுசாய் இரண்டு நாட்கள் கூட நீடிக்க வில்லை. மூன்றாம் நாள் பனையூரான்கள் மறுபடியும் கோடிமடையை அடைத்து விட்டார்கள். இப்போது நந்தியூரான்களுக்கு வேறு போக்கிடமில்லை. இரண்டு வேன்கள் நிறைய ஆட்களைத் திரட்டிக் கொண்டு கலெக்டரிடம் ஓடினார்கள்.

“தெரியும்யா! தாசில்தார் போன் பண்ணிட்டார். திரும்பத் திரும்ப எத்தனை தடவைதான் எடுத்துப் போட்றது?. வருஷாவருஷம் இதே கூத்துதான். அரசாங்கத்துக்கு எழுதியிருக்கேன். பதில் வரட்டும் பார்ப்போம்..”——-முடித்துக் கொண்டார். போன கும்பல் விதிர்விதிர்த்து நின்றது. என்ன இப்படி பல்டியடிச்சிட்டார்?. நல்லது செய்வாரென்று நம்பிக்கையாய் வந்தோமே. அப்போது நந்தியூரின் பெருந்தனக்காரர் சாரங்கன்பிள்ளையின் அப்பா வேணுபிள்ளை மெதுவாக எழுந்து நின்றார். எழுபது வயசு.பத்து வருஷம் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர்.

“என்ன பெரியவரே!.”—இது கலெக்டர்.

“உங்க கிட்ட ரெண்டொரு வார்த்தை பேசணுமய்யா!.”

“பேசுங்க.”

“எங்களுக்குத் தெரிஞ்சிப் போச்சிய்யா.இனிமே உங்களால எங்களுக்கு நியாயம் எதையும் செய்ய முடியாது..”

“ யார்கிட்ட பேசறோம்னு யோசித்து பேசுங்க. புரியுதா?. ஆமாம் எதை வெச்சி அப்படி சொல்றீங்க?.”

“தப்பா எடுத்துக்காதீங்க. மந்திரி நரசிம்மன் இந்த விஷயத்தில உள்கையில இருக்கிறது தெரிஞ்சிப் போச்சிய்யா. அவன் பனையூரின் இருந்தான்குடி( பூர்வீகம் ). விட்ருங்க இதை நாங்களே தீர்த்துக்கிறோம்.”

“மறுபடியும் அடிச்சிக்கிட்டு சாகப்போறீங்களா?..”

“ஐயா! அந்த ஊரு பொண்டுக இங்க வாழுதுங்க, இந்த ஊரு பொண்டுக அங்க வாழுதுங்க. எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு பனையூரான் செத்தானே அதுக்கு என் ஊரு பொண்ணுதான் தாலியறுத்தாள். என் ஊரு மாணிக்கத்தின் புள்ள செத்ததுக்கு பனையூர் பொண்ணுதான் தாலியறுத்தாய்யா. வாணாம்யா. யாரும் இதுக்கோசரம் இனிமே அடிச்சிக்க வாணாம். சேதம் வராம நிறுத்தணும். நிறுத்திடுவோம்யா.”———–கலெக்டருக்கு ஆச்சர்யம்.

“பெரியவரே! நிஜமாகவே எனக்கு சஸ்பென்ஸ் தாங்கல.அப்படி என்னதான் செய்யப் போறீங்க?.”

“நேரம் வரட்டும் சொல்றேன்.”

கிழவர் என்ன செய்யப் போகிறார் என்று ஒருத்தருக்கும் தெரியவில்லை.. மறுநாள் காலையில் வீட்டிற்கு வெளியில் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து ஏதோ யோசனையிலிருந்த போது, அவருடைய மகன் சாரங்கன்பிள்ளை வந்து அப்பனிடம் நைச்சியமாய் பேச்சுக் கொடுத்தார்

“என்னப்பா பண்ணப்போறே?. பனையூரானுங்க உண்ணாவிரதத்துக்கெல்லாம் மசிய மாட்டானுங்கப்பா. நீ எதைச் செய்றதுன்னாலும் அடுத்த மழைக்குத்தான். இந்த வருசந்தான் அத்துப் போச்சே.”

கிழவர் சிரித்தார். சிறிது நேரம் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“டேய்! மேற்கே பார்த்தியா? மூணு நாளா செவ்வானம் போட்டிருக்கு.அந்தி கிழக்கிலும்,அதிகாலை மேற்கிலும் செவ்வானம் போட்டால் அடுத்து கனமழை இருக்குன்னு அர்த்தம். அதில்லாம மேலே மப்பு மணல்வாரி எறைச்சிருக்குது பார்த்தியா?. இதெல்லாம் நல்ல அறிகுறி. கனமழைக்கான அத்தாட்சி. பாப்போம். எங்கப்பன் பாண்டுரங்கன் துணையிருப்பான். அதுக்கு முன்னே நான் சொல்றபடி, நீ ரகசியமா சில வேலைகளைச் செய்யணும்.”
பிள்ளையிடம் கொஞ்ச நேரம் ரகசியம் பேசினார். கிழவரின் பிள்ளைக்கு இதுபோன்ற ஆருடங்களின் மேல் நம்பிக்கையில்லை. வேண்டா வெறுப்பாய் கிழவர் சொன்ன காரியங்களை இரண்டு நாளில் செய்து முடித்தார்.அடுத்த வாரம் முழுக்க எதுவுமே நடக்கவில்லை. காத்து கூட திரும்பல. இன்னமும் தென்னங்காத்துதான் ஓட்டுது கிழவருக்கு மனசு குழப்பமாக இருந்தது. பெருமாளே! ஏழுமலையானே! அரங்கநாதா!—மனசுக்குள் அரற்றிக் கொண்டிருந்தார். ஆனால் கிழவரின் கணக்கு பொய்க்கவில்லை. பலிக்க ஆரம்பித்தது. இரண்டாவது வாரக் கடைசியில் நிலைமை மாறி வாடைக் காற்று வீச ஆரம்பித்தது.. அடுத்த நாலாம் நாள் காலையிலேயே கிழக்கே பனைமரம் உசரத்திற்கு மேகம் கரைகட்டி கொசுத்தூறல் போட ஆரம்பித்தது. கிழவர் பிள்ளையிடம் இன்னும் ரெண்டு நாள்ல பார்றா என்று கண்கள் மின்ன சிரித்தார். மூணாம் நாள் அப்பப்பா! மழையா அது?.இடி மின்னல் இல்லாமல் ராத்திரி முழுக்க கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது.. மறு நாள் சூறாவளிக் காற்றுடன் பேய் மழை. எங்கும் வெள்ளக்காடு. எங்கேயோ எக்குத்தப்பாய் புயல் மையங் கொண்டுவிட, அடுத்த நாற்பத்தெட்டு மணி நேரத்திற்கு தமிழகம் முழுக்க பலத்த மழைஎன்று செய்திகளில் சொன்னார்கள். கடலோரப் பகுதிகளில் புயல் எச்சரிக்கை விடப்பட்டது. மாவட்டங்களில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிவதாக செய்தியில் சொல்லிக் கொண்டிருந்தார்கள் அந்த நேரத்திற்கு பனையூர் ஏரிக்கரைக்கு வரச் சொல்லி கிழவரிடமிருந்து கலெக்டருக்கு அழைப்பு வந்தது. இந்த அடைமழையிலா? சரி கிழவன் அப்படி என்னதான் செய்யறான்னு பார்த்திட்றதே சரி. அவசரப் பணிகளுக்கான பொறுப்பை துணை கலெக்டரிடம் ஒப்படைத்து விட்டு, பனையூர் ஏரியாவைச் சார்ந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தந்து விட்டு கிளம்பிவிட்டார்.

கார் அங்கே போனபோது கலெக்டருக்கு அதிர்ச்சி. இரண்டு மூன்று போலீஸ்கள் ஏரிக்கரை பச்சையம்மன் கோவிலில் மழைக்கு ஒதுங்கி நிற்க,கிழவரும் அவர் பிள்ளையும் குடை பிடித்துக் கொண்டு கோடிமடைப் பக்கம் நிற்கிறார்கள். கொட்டும் மழையில் நனைந்தபடி நந்தியூர் ஆட்கள் பெருந்திரளாய் நின்றிருந்தனர். ஒவ்வொருத்தனிடமும் ஆயுதங்கள். உருட்டுக்கட்டை, சைக்கிள் செயின், சிலரிடம் வீச்சரிவாள் கூட காணப்பட்டது. கலெக்டருக்கு உள்ளே பிசைந்தது. கிழவன் பேச்சை நம்பி வந்தது பிசகோ?. இறங்கி நடந்தார். பாலாற்றிலிருந்து வரும் மாமண்டூரான் கால்வாயில் கட்டுக்கடங்காத வெள்ளம். ஏரிக்குள் தமதமவென்று வந்து விழுகிறது. நிலைமையை நோட்டமிட்டார்.
பனையூரான்கள் ரொம்ப உஷாராய் நாலடி உயரத்திற்கு கட்டி வைத்திருந்த கோடிமடையை அப்புறப் படுத்தியிருந்தார்கள். கலங்கு சாயும் வெள்ளம் ஆறுபோல சுழித்துக் கொண்டு வெளியேறுகிறது. அடுத்து நந்தியூர் ஏரிக்குத்தான் தண்ணீர் சாய்ந்துக் கொண்டிருக்கிறது.. கலெக்டருக்கு சற்று தெம்பு வந்தது. அப்பாடா! இப்போதைக்குப் பிரச்சினை தீர்ந்தது. இதோட அடுத்த வரட்சிக்குத்தானே. அப்ப பார்த்துக்கலாம்.

ஆனால் கிழவன் இப்போதுதான் பிரச்சினையைத் துவக்குகிறான், என்ற உண்மை அடுத்த பத்தாவது நிமிஷத்திலேயே கலெக்டருக்கு உறைத்தது. கிழவன் சமிக்ஞை காட்ட, ஆட்கள் ஓடிவந்து மளமளவென்று சத்தமில்லாமல் காரியத்தில் இறங்கினார்கள். இருபது நிமிஷம். அகற்றப்பட்டிருந்த கோடி மடை மீண்டும் பழையபடி நாலடி உயரத்திற்கு கட்டப்பட்டது.

“டா.ய்.ய்!…டாய்!…எவன்டா அவன் டாய்!.”—பனையூர் ஆட்கள் வெறிக்கூச்சல் போட்டபடி ஓடி வந்தார்கள். வந்தவர்கள் கலெக்டரையும், போலீஸையும், கூடியிருந்த கும்பலையும் பார்த்து நிதானித்தார்கள்.

எங்க ஏரியில எவன்டா கோடிமடைய கட்னவன்?.ஒதைங்கடா அவனுங்கள. டாய்…எவன்டா?.”—-இப்போது கிழவர் முன்னே வந்து நின்றார்.

“நான்தான்டா மடைய போட்டவன்.”

“டேய் மாசி! கெழவனை ஒதைங்கடா.போட்றா,..போட்றா சொல்றேன். டாய் கெழவா! மரியாதையா சொல்றேன் உங்காளுகளோடு ஓடிப் போயிரு. இல்லே ஒருத்தனும் உசுரோடு போவமாட்டீங்க. என் ஊரு ஏரியில மடை கட்றதுக்கு நீ யார்றா?டாய்!.”

பனையூர் தலைவர் குறுக்கால பாய்ந்தார்.

“டேய்!..டேய்!..பேசறது அப்புறம் மொதல்ல மடைய ஒடையுங்கடா. ஆபத்து…ஆபத்துடா. ஐயோ! தண்ணி பெரள்ற வேகத்துக்கு கரை தாங்காதுடா. சீக்கிரம்,..சீக்கிரம் மடைய ஒடையுங்கடா.நம்ம ஊரு முழுவிப்பூடும்டா. சீக்கிரம் ஒடையுங்க. எவன் தடுத்தாலும் வெட்டுங்க பார்த்துக்கலாம்..”

இரண்டு பக்கங்களிலும் உருட்டுக் கட்டைகளும்,வீச்சரிவாள்களும் உயர்ந்தன. கலேக்டருக்கு பயம் வந்துவிட்டது. நாம ஓடிட்றதே உயிர் பிழைக்கிற வழி என்று எச்சரிக்கை செய்த உள்ளுணர்வை அடக்கினார். கிழவன் பேச்சை நம்பி வந்தது பெரிய தப்பு. ஐயய்யோ! ரெண்டு குரூப்பும் நெருங்கிட்டானுங்களே. அப்போது.

“டேய்!…டேய்! வுடாதே..ஒருத்தனையும் வுடாதே..அடி..அட்றா..அவனுங்களை.”—–திடீரென்று கீழ்ரோடு பக்கமிருந்து பெருங்கூச்சல் கேட்டது.பார்த்தால் லாரிகளும், டிரக்குகளும்,வேன்களும், சாரிசாரியாய் வந்து நிற்க, தேப்பைதேப்பையாய் ஜனக்கூட்டம். வெறிக்கூச்சல் போட்டபடி திமுதிமு வென்று ஓடிவந்தார்கள். மாமண்டூரான் கால்வாயினால் பயனடையும் மற்ற பதினோறு ஏரிகளைச் சார்ந்த ஊர்க்காரர்கள். ஒவ்வொருத்தனிடமும் பயங்கரமான ஆயுதங்கள். ஓடிவந்து சூழ்ந்துக் கொண்டார்கள்.

“டாய் பனையூரான்! எவன்னா கட்டியிருக்கிற மடைமேல கையை வெச்சீங்க, மவனே வெச்ச கையை வெட்டுவோம்டியேய்! ஊரையே துவம்சம் பண்ணிடுவோம். ஆமா. எல்லாத்துக்கும் தயாராத்தான் வந்திருக்கிறோம்.கலெக்டர் அசந்து நின்றுவிட்டார். இந்த கொட்டுகிற மழையில எவ்வளவு ஜனங்க?. அடேங்கப்பா! என்னமாதிரி கலெக்டிவ் ஒர்க் இது.?. சினிமா மாதிரி இருந்தது அவருக்கு. பனையூர் ஆட்கள் விக்கித்து நிற்கிறார்கள். கிழவர் இப்போது உரக்க பேச ஆரம்பித்தார்.

“நம்ம கலெக்டர் முன்னாலயும், வந்திருக்கிற இந்த பதிமூணு ஊர்க்காரங்க முன்னாலயும், எல்லாருடைய சார்பா நான் ஒரு சத்தியஞ் செய்யறேன். இனிமே என்னா கஷ்டம் வந்தாலும் சரி, தண்ணி இல்லாம நாங்க செத்தாலும் சரி பனையூர் ஆளுங்க நாலடி உசரத்துக்கு இந்த கோடிமடையில கட்ன மடைய எடுக்கச் சொல்லமாட்டோம். அதே சமயம் என்னா ஆபத்து வந்தாலும் சரி, மடையை எடுக்கவும் வுடமாட்டோம்.. போட்ட பலவை போட்டதுதான்..”
“ஐயய்யயோ! ஏரி தாங்காதுடா. மடையை சீக்கிரமா ஒடையுங்கடா.. ஏரி ஒடைப்பெடுத்தா பனையூரே முழுவிடும்டா. ஓடுங்கடா.”—பனையூர் தலைவர் கத்திக் கொண்டேயிருந்தார்.மடையை எடுக்கப் பாய்ந்தவர்களை ஒரு கும்பல் கோழிக்குஞ்சு போல் அமுக்கிக் கொண்டது. பாலாற்றுக் கால்வாயில் ( மாமண்டூரான் கால்வாய் ) புரளும் வெள்ளத்தைப் பார்த்தால் இன்னும் இரண்டுமணி நேரம் கூட தாங்காது. கரை உடையும் அபாயம். கலெக்டர் விரைந்தார்.

“பெரியவரே! என்ன அடாவடி இது?.இது நல்லதில்லை.. கோடிமடைதான் ஏரிக்கு சேஃப்டி வால்வ் மாதிரி. இப்ப மடையை எடுக்கலேன்னா ஏரி உடையும். பனையூரே மீழுகிப் போயிடும்யா.”

“மூழ்கட்டும்…சாவட்டும்யா எங்களுக்கென்ன?.”

“என்ன குரூர புத்தி?. இதை நான் அனுமதிக்க முடியாது.”

”நீங்க என்னய்யா அனுமதிக்கிறது?. உங்க அனுமதியைக் கேட்டா நீங்க எடுத்துப் போட்ட மடையை மறுபடியும் கட்னானுங்க.?. வந்து ரிப்போர்ட் பண்ணமே என்னா செஞ்சீங்க?. இப்ப மந்திரி நரசிம்மன் உங்களை தூது அனுப்பினானா?. என்ன ஆனாலும் சரி, கட்ன மடை கட்னதுதான்..”——பின்னால் திரண்டு நின்ற பெருங்கூட்டமும் அதை ஆமோதித்து கர்ஜித்தது.

“எப்ப தண்ணி அருந்தட்டலு காலத்தில வர்ற கால்வாய் தண்ணி மொத்தமும் எங்களுதுதான்னு அடைச்சான்களோ, அப்ப வெள்ளம் பெரளும் போதும் மொத்தத் தண்ணியும் அவன்களுடையதுதான். இந்தப் பக்கம் மடைக்குமேல கசியற தண்ணி மட்டுந்தான் வரலாம்.ஆமாம்.”

வித்தியாசமான கான்செப்ட். கலெக்டர் அசந்து நின்றுவிட்டார். இதான்யா செக்மேட். கிழவன் பனையூரான்களுக்கு செக் வெச்சிட்டான்யா.. செஸ் ஆட்டத்தில் இந்தப் பொஸிஷனில் ராஜாவை காப்பாற்ற வேண்டுமானால் வேறு ஒரு பவரை இழந்துதான் தீர வேண்டும். இல்லையேல் ஆட்டம் குளோஸ்.

கொட்டும் மழையில் ஒருத்தரும் அசையவில்லை.10…..20…..30 ஆவது நிமிஷம் பனையூர் காங்கியம்மன் கோவிலையொட்டி, ஏரிக்கரையின் தென்னண்டை மூலையில் உடைப்பெடுத்துக் கொள்ள, குய்யோமுறையோ என்றுகத்திக் கொண்டு ஒரு கும்பல் ஓடியது.. மாமண்டூரான் கால்வாயிலிருந்து தண்ணீர் தமதமவென்று விசையுடன் விழுகிறது. பலவை போட்டு கட்டியிருந்த மடைக்கு மேல் தண்ணீர் வழிந்து வெள்ளம் புரள ஆரம்பித்து விட்டது.. அடுத்த பெரிய உடைப்பு ஏற்படும்போது ஊர் தாங்காது.எதிர்பாராத ஆபத்து ஊரில் குஞ்சும்,குசுமானுமா ஜனங்க வரப்போகிற ஆபத்து தெரியாம இருக்குதுங்க. .இப்போது பனையூர் ஆட்களுக்கு வேறு வழியில்லை. பஞ்சாயத்துத் தலைவர் தன் சகாக்களுடன் ஓடி வந்து கிழவரின் கையைப் பற்றி கொண்டார்.

“எங்களை மன்னிச்சிடுங்க மாமோவ்! எல்லாரும் எங்களை மன்னிக்கணும். செஞ்சது தப்புதான். இனிமே இப்படி நடக்காது. ஊர்சார்பா மன்னிப்பு கேட்டுக்கறேன்..”——தலைக்கு மேலே கையை உயர்த்தி எல்லோரையும் பார்த்து கும்பிட்டார், கூட இருந்த பனையூர்காரர்களும் கையை உயர்த்தி கும்பிட்டார்கள். பெரியவர் கையை உயர்த்தினார்.
“வுட்றா! மல்லுக்கு நிக்கிறதுக்கு நீ யாராய் போயிட்ட?. ஆனா இனிமே இந்தத் தப்பை யார் செய்தாலும் சரி. இதுதான் பதில். பதிமூணு ஊர்க்காரங்களும் எதுக்கும் தயாராய் வந்து நிற்போம். நீங்க செஞ்சதில ஞாயம் இல்லபாரு.கால்வாயோ,ஆறோ உன் ஊருவழியா வர்றதினாலேயே அது உன்னுதாயிடுமா? சொல்லுப்பா. அது எல்லாருக்கும் பொது. .எல்லாருக்கும் அதில பாத்தியதை இருக்கு. இருக்கிறதை எல்லாரும் பங்கிட்டுக்கணும்யா. அதான் முறை. டேய்! மடையை எடுத்து வுடுங்கப்பா.!.”

கிழவர் உத்தரவில் சடுதியில் மடை இடித்து அகற்றப்பட, வெள்ளம் நொப்பும் நுரையுமாக சுழித்துக் கொண்டு வெளியேற ஆரம்பித்தது. கிழவர் கலெக்டரைப் பார்த்து லேசாய் கண் சிமிட்டினார். மழை மேலும் தீவிரமடைந்தது.

– அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி—2008 ல் இரண்டாம் பரிசு பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *