வைத்தி ரொம்ப முரடன். எடுத்ததுக்கெல்லாம் அடிதடிதேன். அதுலயும் பொம்பளைகன்னா அவனுக்கு ஒட்டுன தூசிதேன். எங்கேயாவது பொம்பளைக கொஞ்சம் சத்தமா பேசிட்டா போதும்.. ‘‘ஏய்.. என்னடி வாயீ.. பொம்பளையின்னா ஆம்பளைக சொல்லுக்குக் கட்டுப்பட்டு இருக்கணும்’’னு அவள அதட்டுறதுமில்லாம, அவ புருசன்கிட்ட ‘‘ஏலேய்.. அப்படியே அவள தூக்கிப் போட்டு மிதிடா’’னு ஏவி விடுறதோட சமயத்தில இவனும் கை நீட்டிருவான்.
இப்படி இவன் பொம்பளைகள கிள்ளுக்கீரையா பேசுறதப் பார்த்து, ஒருத்திகூட இவனுக்கு வாக்குப்பட மாண்டேன்னு பதறிப்போயி ஓடுதாக. இவனுக்கு ஒரு அத்த மக மணிமேகலைனு இருந்தா. அவ பிறந்ததுமே அவளோட தாயீ, தகப்பனும் செத்துப்போக, பாட்டிகிட்டதான் வளந்தா. அவள வைத்தி, பொண்ணு கேட்டு வந்தான்.
மணிமேகலையோட பாட்டி, ‘‘அய்யய்யோ.. இவனுக்கு எம் பேத்திய கொடுக்கதோட, அவள நானே கிணத்துல புடிச்சித் தள்ளிருவேன்’’னு சொன்னா. ஆனா மணிமேகலை, ‘‘பாட்டி.. அவனுக்கு கோடி காடு, கர இருக்கு. அக்கு, தொக்குனு யாருமில்ல. நானு அவனுக்கே வாக்குப்பட்டுக்கிடுதேன். நீ பயப்படாத. நானு அவன்கூட மறுவீடு போவும்போது மட்டும் நானு சொல்றபடி செய்’’னு சொல்லிட்டா.
வைத்திக்கும் மணிமேகலைக்கும் கல்யாணம் முடிஞ்சி, மறுவீடு புறப்பட்டுட்டாக. அப்ப, ஒரு கோழி. ஒரு கிளி, ஒரு நாய்.. மூணையும் பேத்திகிட்ட கொண்டாந்து கொடுத்த கிழவி, ‘‘இந்தா தாயீ.. நீ உசுருக்குசுரா வளத்த நாயும் கிளியும். அதோட, இந்தக் கோழியையும் வெச்சுக்க. போனதும் அடிச்சி குழம்பு வச்சிக் கொடு’’னு சொன்னா.
ரெண்டு பேரும் கௌம்பிப் போவும்போது, இவ கோழி. நாயி, கிளி மூணுகிட்டயும் ‘‘இந்தா பாருங்க.. நாங்க போற வழியில உங்கள கணக்கா எல்லாம் இருக்கும். அதுகளப் பார்த்து ஏதாவது சத்தம் கொடுத்தீகளோ.. கொன்னு போடுவேன். நானு பொல்லாத அரக்கி!’’னு சொன்னா.
அப்ப அந்தத் தெருவுல இருந்த ஒரு கோழி இவ கையில இருந்த கோழியப் பார்த்துக் கெக்கரிக்க, இதுவும் கெக்கரிக்க.. இவ அப்பவே அந்தக் கோழிய கொதவளைய முறிச்சிப் போட்டுட்டா. ரெண்டாவது தெருவுக்குப் போகையில ஒரு நாக்குட்டி இவ கையிலிருந்த நாக்குட்டியப் பார்த்து குரைக்க.. இதுவும் குரைக்க.. ‘‘இரு.. உன்ன கெணத்தில போட்டுடறேன்’’னு கிணத்துப் பக்கம் போயி, நாய கண் மறவா விட்டுட்டு, ஒரு கல்லத் தூக்கி கிணத்துல டமால்னு போட்டுட்டு வந்தா. மூணாவதா, சோளக்காட்டுத் திக்கமா பறந்துபோன கிளிக இந்தக் கிளியைப் பார்த்துக் கத்த.. இதுவும் கத்துச்சி. இவ, ‘‘நீயும் சரியில்ல. உன் செறவப் புடுங்கி உன்னக் காட்டுல விட்டெறியுதேன்’’னு கிளிய வீசி எறிஞ்சா. பெறவு மடியில முத நாளு மறவா பெறக்கி வச்சிருந்த கிளி செறக எடுத்துப் போட்டா.
அம்புட்டுதேன்! வைத்தி கதிகலங்கிப் போனான். ‘ஆகா, நம்மதேன் கோவக்காரன்னா.. இவ அதுக்குமேல இருப்பா போல. இவகிட்ட நம்ம அடங்கித்தேன் போவணும்’னு நினைச்சி, அன்னிக்கு அடங்குனவன்தேன். இன்னமும் அடங்கிக் கெடக்கான்!
– மார்ச் 2006