ரங்கசாமி ஆற்றாமை தாங்காமல் பக்கத்து வீட்டு தியாகராஜனைக் கேட்டே விட்டார். ‘ஏன் சார், தீபாவளிக்கு எதுக்கு இத்தனை தடபுடல், இவ்வளவு செலவு? நீங்க செலவு பண்ணுன காசுக்கு ரெண்டு பவுன் நகை வாங்கி வச்சுட்டாக்கூட பிற்காலத்துக்கு உதவியா இருக்குமே?
கேட்ட ரங்கசாமியை கையமர்த்தி விட்டு, வீட்டினுள் சென்ற தியாகராஜன் ஒரு சி.டி.உடன் வந்தார் . அதை ரங்கசாமியிடம் கொடுத்து, ”இதை வீட்டில் போய் போட்டுப் பாருங்கள்! நான் செலவு செய்ததறகு அர்த்தம் புரியும்!” என்றார்
ரங்கசாமி சி.டி.யை பார்க்க ஆரம்பித்தார். தியாகராஜனின் இரண்டு மகன்கள், அவர்கள் குழந்தைகள், அவருடைய மகள், மருமகன், குழந்தைகள், அவருடைய தங்கை குடும்பம் என்று தலைக்கு எண்ணெய் வைப்பதில் இருந்து பலகாரம் சுடுவது, சாப்பிடுவது, வெடி வெடிப்பது என்று சந்தோஷம் நிரம்பி வழிந்தது, அந்த சி.டி.யில்.
கைக்காசு தொலைந்து விடும் என்று மகிழ்ச்சியைத் தொலைத்த ரங்கசாமி, சி.டி.யை தியாகராஜனிடம் தலைகுனிந்தவாறே திருப்பிக் கொடுத்தார்.
தியாகராஜன் கேட்டார். ”ஏன் ரங்கசாமி சார், பவுன் எப்ப வேணா கிடைக்கும்! கோடி கொடுத்தாலும் இந்த சந்தோஷம் கிடைக்குமா?”
பதில் கூற முடியாமல் தலை குனிந்தார் ரங்கசாமி
– வி.சகிதா முருகன் (ஒக்ரோபர் 2013)