உத்தியோகம் புருஷ லட்சணம்..?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 18, 2021
பார்வையிட்டோர்: 4,234 
 

அந்த மனிதனை ஒரு ‘பிச்சைக்காரன்’ என்று என்னால் சொல்ல முடியவில்லை. ‘அவன் ஒரு பிச்சைக்காரன்’ என்று என்னால் தீர்மானிக்கவும் முடியவில்லை . சமுதாயத்தில் சக மனிதனிடம் கையேந்தி வாங்கிச் சாப்பிடும் அளவுக்குத் தாழ்ந்து வீழ்வதற்கு ஒரு பிரஜையின் நிலைமை ஏன் மாறுபடுகின்றது…? பிச்சைக்காரர்களாக ஒரு பிரிவினர் மாறிவிட்ட பிறகும், அவர்கள் மத்தியிலும், பல உயர்வு, தாழ்வு கொண்ட பிரிவினர் வேறுபட்டுக் காணப்படுகின்றனரே…?

எனக்கு சமுதாய ஆய்வு செய்யக் கூடிய அளவுக்கு ஞானம் போதாது… எனது சந்தேகம்… அதற்கான கேள்விகள்… யாவற்றையும் விட்டுவிடுவோம் என்ற தீர்மானத்துக்கு வந்து விட்டேன்.

அவன்… அந்த பி…ச்…சை…கா…ர…ன்… இன்னும் நான் இருக்கும் அந்த பஸ்ஸில் பாடிக் கொண்டுதான் இருக்கிறான்… பாட்டு இன்னும் முடிய வில்லை…

அவன் பஸ்ஸில் ஏறியவுடன்… தன்னை பிரயாணிகள் மத்தியில் அறிமுகப்படுத்திக் கொண்டதே வினோதமாக இருந்தது… அவன் தன் தாய் மொழியான சிங்களத்தில் துள்ளியமாகச் சொன்னான். அவனது வார்த்தைகள் நன்றாக மனனம் செய்துக் கொள்ளப்பட்டவைகளாகும்… ஒவ்வொரு பஸ்ஸிலும் அந்த ஆரம்ப உரையை அவன் ஆற்றுவான் போலிருக்கிறது…

“நோனா வருனி… மஹத்வருனி…, ஒப யன கமன சுப கமனக் வேவா… சுமன சமன் தெவி பிஹிட்டய்…! மம பொரு, வஞ்ச்சா , ஹொரக்கம், கரன்னே… நே… மம மினீ மரன்னே… நே… ஒபே கமன சுப கமனக் வென்னட்ட மம கீத்தயக் காயனா கரமி… மட்ட சுளு ஆதாரயக் தெய் கியா பலாபொரோத்து வெனவா…”(நான் பொய், களவு, சூது, கொலை செய்து வாழ்பவனல்ல… உங்கள் பயணம் சுபமானதாக வேண்டுமென்று பிரார்த்தித்து ஒரு பாடலை பாடுகிறேன்… உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்…)

அவன் பாடுவதற்கு முன்பு வாயினால் இசையை (இண்டர்லூட்) எழுப்பினான்… “டொட டொட டொங்… டொட டொட டொங்…” தோளில் தொங்கிய கிட்டார் கருவியை மீட்டினான்… அந்தப் பாடல் எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது… சிங்கள பைலா சக்கரவர்த்தி என அழைக்கப்படும் எம். எஸ் . பெர்னான்டோ பாடிய துள்ளல் இசை அது…

“லஸ்ஸன ரோச மலக் மட்ட லஸ்ஸ ன நே…! லஸ்ஸன சமனலயத் மட்ட லஸ்ஸ ன நே…! லஸ்ஸன கிசிம தெயக் மட்ட லஸ்ஸ ன நே…! லஸ்ஸ ன நே…! ஆதரவந்தியே ஓப… வாகே நே…!”

(அழகிய ரோஜா மலர் எனக்கு அழகாக இல்லை… அழகிய வண்ணத்திப் பூச்சியும் எனக்கு அழகாக இல்லை… அழகான எதுவுமே எனக்கு அழகாக இல்லை…! அன்பிற்கினியவளே! உன்னைப் போல எதுவுமே அழகாக இல்லை ..!)

இளமையில் காதல் தாகம் கொண்ட ஒரு இளைஞன் தன் காதலியிடம் பாடுகின்ற பாடல் இது… பஸ் ரசிகப் பயணிகளின் மனதைக் கவர்ந்தது….

அவன் மீண்டும் பாட்டுக்கிடையிலான உந்து இசையை (இன்டாலூட்) வாயிலேயே இசைத்தான்… ‘டொட டொட டொங்… டொட டொட டொங்…”

அந்தப் பிச்சைக்… இல்லை… இல்லை… அந்த ஆளை நோட்ட மிட்டேன்… அவன் அணிந்திருக்கும் டெனிம் ட்ரவுசர் ஆயிரத்து ஐநூறு ரூபா பெறும்… ஸ்போட்ஸ் சப்பாத்து இரண்டாயிரம்… கைக் கடிகாரம், செம்பு வளையல் இரண்டும் ஆயிரத்து ஐநூறு… டீ சேட் தொள்ளாயிரம்… கிட்டார் ஏழாயிரம்… எல்லாம் மொத்தமாக பன்னிரண்டாயிரத்துத் தொள்ளாயிரம் ரூபா பெறுமதியாகும்..!

பாடல் முடிந்ததும் பஸ் பயணிகளிடம் அன்றைய ‘திவயின’ பத்திரிகையை மடித்து, நீட்டிக் கொண்டு வந்தான்… கையேந்தவில்லை…!

எல்லோரும் சில்லறை போடவில்லை… பத்து… இருபது… என்று நோட்டுக்களையும்… ஏழை பாழைகள் ஐந்து ரூபாய் பவுனை போட்டார்கள்…

எனக்கு பாரதியார் ஞாபகம் வந்தது… அவர் கை நீட்டி யாரிடமும் காசு கேட்க மாட்டாராம்… விரித்த கையை நெஞ்சுக்கு நேராக வைத்துக் கொண்டு, நண்பர்களைப் பார்த்து “காசு இருந்தால் என் கையில் வைய்யுங்கள்…’”என்பாராம்…!

“பொஹொம ஸ்துதிய்…! பொஹொம ஸ்துதிய்…!” என்று கூறிக்கொண்டே பின் கதவு வழியாக இறங்கிச் சென்றவன் மீண்டும் முன் கதவால் ஏறி, நன்றியும். சுப பயணத்துக்கு வாழ்த்தும் கூறி… அடுத்து நிற்கும் பஸ்ஸுக்குள் உற்சாகமாக ஏறினான்….

இவன் எடுப்பது பிச்சையா…? அல்லது காலத்துக்கேற்ப பிச்சைக் கேட்பது நவீனமயமாக்கப்பட்டுள்ளதா…? இவனை என்ன சொல்லி அழைப்பது…?

‘ஆஜானுபாகு’வாக இருக்கின்றான்… சவரம் செய்யப்பட்ட பிரகாசமான முகம்… வறுமையின் அடையாளம் இம்மியளவும் இல்லை… இவனுக்கு உழைத்துத் தொழில் செய்து பிழைக்க முடியாதா…? மீண்டும் என்னுள் சமுதாயக் கேள்வி எழும்பி வளைந்து நின்றது.

ஒளவையார் “ஏற்பது இகழ்ச்சி” என்று ஏளனம் செய்து விட்டு… அடுத்த வரியில் “அறம் செய்ய விரும்பு…” என்று போதனை செய்தது முரணாக இல்லையா…? என்னமோ சங்க காலத்தில் புலவர்கள் யாவரும் கையேந்திதான் வாழ்ந்தார்கள் என்ற வரலாறு இருக்கின்ற போது, ஒரு கிட்டார்காரன் கையேந்துவதில் என்ன விவகாரம் இருக்கின்றது…?

இந்த கிட்டார் பிச்சைக்காரனின்… இந்த டெனிம் பிச்சைக்காரனின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு கிடைக்கும் என்ற ஆய்வில் மனம் நுழைந்தது… பஸ் வண்டி இன்னும் அரை மணித்தியாலம் சென்றுதான் புறப்படும்…

நானிருந்த பஸ்ஸில் நாற்பது பேர்கள் வரை இருந்தார்கள்… அவர்களில் சிலர் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டும், புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாலும் அவர்களுள் இருபது பேர் பத்து ரூபாய் வீதம் போட் டிருந்தாலும்… 200 ரூபாய் கிடைக்கும்….

கொழும்பு, கண்டி போன்ற நகரங்களில் ஒரு நாளில் குறைந்தது நூறு பஸ்களாவது வந்து போகும்… அந்த கிட்டார்காரன் 25 பஸ்ஸில் ஏறி இறங்கினால், சராசரி ஒரு பஸ்ஸில் 10 கருணையாளர்கள் 10 ரூபா வீதம் கொடுத்தால், 100 ரூபாவாகும்… 25 பஸ்ஸில் ஒரு நாளைக்கு 2500 ரூபா கிடைக்கும். ஆகவே ஒரு மாதத்தில் அந்த கிட்டார்காரன் 75000 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான்.

இந்த கிட்டார்காரனுக்கு வெளிநாடு போவதற்கு ஏஜன்சி… விசா… கள்ள விசா… இவையெல்லாம் தேவையா…? எனது ஆய்வு மூளை பம்பரமாகச் சுழன்றது… வாழ நினைத்தால் வாழலாம்… வழியா இல்லை பூமியில்…?” என்ற கண்ணதாசனின் வரிகள் என்னிடம் வினா தொடுத்தன…

பஸ் இன்னும் புறப்படவில்லை… ஒரு இளம் பெண் பஸ்ஸுக்குள்ளே ஏறினாள். பலவகையராக்களில் அதிஷ்ட சீட்டுக்களை நீட்டிக் கொண்டு…

“அத அதினவா…” என்று எல்லோரிடமும் வந்தாள்… எல்லோருமே அவளிடம் டிக்கெட் வாங்கினார்கள். நானும் தான் வாங்கினேன்… அவள் அழகான பெண் என்பதற்காகவா… அல்லது கௌரவப் பிரச்சினையாலா…? அவள் தொப்பி அணிந்திருந்தாள்… தோளில் ஒரு பை தொங்கியது… பணத்தை பைக்குள்ளே போட்டுக் கொண்டாள்… பத்து டிக்கட் விற்றிருப்பாள்… 2 ரூபா கமிஷன் என்றாலும் அந்த பஸ் வண்டியில் 20 ரூபாய் அவளுக்குக் கிடைத்தது… அப்படியென்றால் ஐம்பது பஸ்ஸில் 20 ரூபாய் வீதம் 1,000 ரூபாய் கிடைக்கும். ஒரு மாதத்துக்கு 30 ஆயிரம் சம்பாதிக் கின்றாள்… மனம் கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்தது….

அவளும் இறங்கிச் சென்று விட்டாள்…

அடுத்து ஒரு கடலைக்காரன் நுழைந்தான்…

பொறித்த நிலக்கடலை… அவன் லாவகமாக ஒரு கையில் ஏந்தியிருக்கும் பேசனைச் சுற்றி… பாமசியில் மாத்திரை போட்டுக் கொடுக்கும் ஒரு காகித கவர் மாதிரி அடுக்கியிருந்தான்… நடுவே பொறித்த கடலை… மறு கையில் ஒரு அழுக்குப் படிந்த பிளாஸ்டிக் குப்பி… அதற்குள்ளே உப்புத் தூளும், மிளகாய்த்தூளும் கலந்த ஒரு கலவைவைத்திருந்தான்…

பேசினுக்குள்ளிருக்கும் அந்த சிறிய மூடியில், இரண்டு தரம் அள்ளி காகிதப் பக்கட்டுக்குள் போடுகிறான். பிறகு பிளாஸ்டிக் குப்பியை பக்கட்டுக்குள் பிசுக்கி, ஒரு குலுக்கு குலுக்கிக் கொடுக்கிறான்… நிலக் கடலை, உப்புக் கலந்த மிளகாய் தூளுடன் ருசியாக இருக்கிறது..!

கடலை வாங்கிகளும் ஒரு பத்து பேர் இருப்பர்… 10 ரூபாய் வீதம் ஒரு பஸ்ஸில் 100 ரூபாய் கிடைக்கிறது. அவன் 50 பஸ்ஸில் ஏறி, இறங்கினால் ஒரு நாளைக்கு அம்மாடி… 5 ஆயிரம் கிடைக்கிறது…!

30 நாளைக்கு அம்மாடி… ஒன்றரை லட்சமா…? என் தலை சுற்றியது…

மனம் ஆதங்கப்படுகிறது,

“… வழியா இல்லை பூமியில்…?” கண்ணதாசன் மீண்டும் நினைவுக்கு வருகிறார்…

நான் பஸ்ஸில் ‘ட்ரவலிங் பேக்கை’ வைத்து விட்டு பக்கத்து சீட் காரரிடம் “டொயிலட்டுக்கு ஓடிட்டு வர்றேன்… கண்டக்டரிடம் சொல்லி வைங்க…” என்று இறங்கினேன்… எந்தக் காலத்திலாவது… நாம் நினைத்துப் பார்த்திருப்போமா… கக்கூஸ் உள்ளேயும் கதிரையைப் போட்டு உட்கார்ந்து கொண்டு 10 ரூபாய் வாங்கும் ‘அதிகாரி’யைப் பற்றி…?

“ஒன்றுக்கு அடிக்க” 10 ரூபாய்…

இரண்டுக்குப் போகவும் 10 ரூபாய்தான்… அதை இன்னும் கூட்டவில்லை…

என்றோ ஒரு நாள் வயிற்றைக் கலக்கியது… உபாதை தாங்க முடிய வில்லை… இந்த இதே பஸ் ஸ்டான்ட் கக்கூஸில் நுழைந்தேன்… கதவைச் சாத்திக் கொண்டு நரக லோகத்தில் மூக்கைப் பிடித்துக் கொண்டு கழித்தேன்… வயிறு சுகமாக இருந்தது…!

கழுவுவதற்கு வாளியைத் தேடினேன்… அங்கே வாளிக்குப் பதிலாக ஒரு மினரல் வோட்டர் போத்தல்’ கழுத்தறுக்கப்பட்ட முண்டமாய் அசுத்த நீரோடு சுவரோரம் இருந்தது…

அதில் தண்ணீரை நிறைத்துக் கழுவினால் வைரஸ் கிருமி மல வாசல் ஊடாகச் சென்று… எனக்கு பயம் வந்து விட்டது… அதிஷ்டவசமாக ரோட்டில் ஒருவன் ஸ்போக்கன் இங்கிலிஷ்’ நோட்டீஸ் ஒன்று கொடுத்தது ஞாபகத்துக்கு வந்தது.

இப்போதெல்லாம் நாடு முழுவதும் தெருத் தெருவாக ஸ்போக்கன் இங்கிலீஸ் நோட்டிஸ்களை அள்ளி அள்ளி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்… இங்கிலீஸ் படித்துக்கொள்ள வேண்டும் என்ற இப்படியொரு கட்டாய நிலைமை ஏன் வந்தது..? என்றெல்லாம் எனக்கு ஆய்வு செய்ய நேரமில்லை…

ஸ்போக்கன் இங்கிலீஸ் நோட்டிசை சட்டை பைக்குள்ளிருந்து எடுத்து, வெள்ளைக்காரனைப் போல பாவித்து விட்டு எழும்பி வந்த ‘நாற்ற மெடுத்த’ சம்பவம் நினைவுக்கு வந்தது…

அந்த மலசலக்கூட ‘அதிகாரியிடம்’ 10 ரூபாய் இல்லாமல் 20 ரூபாய் நோட்டைக் கொடுத்தேன்… மிகுதி 10 ரூபாவை வாங்கவில்லை… அது நனைந்திருந்தது…

தமிழ் நாடு மாதிரி எந்த இடத்திலும் இங்கே ‘அடிக்க’ முடியாது… தமிழ் நாட்டில் எங்கும் சுதந்திரம்…’ தெருவெல்லாம் மூத்திர நெடி காற்றோடு கலந்திருக்கும்… நம் நாட்டில் பண்பாடு கொஞ்சம் இன்னும் காப்பாற்றப்பட்டு வருகின்றது…

“இங்கே சிறுநீர் கழிக்காதீர்” அல்லது “இங்கே மூத்திரம் பெய்யக் கூடாது” அல்லது “இங்கே சிறுநீர் கழிக்க முடியாது.” என்ற எச்சரிக்கை விளம்பரங்களைப் பார்த்த பிறகுதான்… “ஏன் முடியாது…?” என்று அதே இடத்துக்குச் சென்று கழிப்பதற்குமனம் அழைத்துச் செல்கிறது…

செட்டித் தெருவில் ஒரு முடுக்கு ஒழுங்கை… பழைய மீன் கடைக்கு… ரெக்லமேஸன் ரோட்டுக்குப் போகும் பாதை ஒரே சிறு நீர் வெள்ளமாய் கோரமாகக் காட்சி தரும்… இந்த நினைவோடு என் மனம் இன்னொரு விளம்பரத்தையும் நினைத்தது….

மருதானையிலிருந்து தொழில்நுட்பக் கல்லூரி வழியாக ஒல்கொட் மாவத்தைக்கு வரும்போது… இடது பக்கமாக அதாவது சுவதேசி அச்சகத் துக்கு எதிர்புறமாக ஒரு ஒதுக்குப்புற இடத்துச் சுவரில் “மெஹி மூத்ரா கிரீம் பல்லன்ட பமனய்…” (இங்கே மூத்திரம் பெய்வது நாய்களுக்கு மட்டும்…) என்று ஆத்திரமான வார்த்தைகளால், பச்சை மையில் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருப்பதை இன்றும் பார்க்கலாம்… மனிதன் பழக்க வழக்கங்களில் இன்னும் திருந்தவில்லை… என்பதையே இந்த வாசகம் சுட்டிக் காட்டுகிறது….

அந்த டொயிலட் அதிகாரியை என்னால் மறக்க முடியவில்லை…

பெட்டா பஸ் ஸ்டேன்டில்… அந்த டொயிலட்டுக்கு குறைந்தது 500 பேராவது ஆணும், பெண்ணுமாய் நுழைவார்கள்… 10 ரூபாய் வீதம் 500 பேருக்கு ஒரு நாளைக்கு 5000 ரூபாய்… முப்பது நாளுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய்…

“வாழ நினைத்தால் வாழலாம்… வழியா இல்லை பூமியில்…?”

வசதி, வாய்ப்புக்கள், இப்படியெல்லாம் இருக்கும் போது… நான் 5 வருசமா… 5,000 ரூபா சம்பளத்தில்…

எவன் எவனையெல்லாம் ‘பொஸ்ஸாக’ நினைத்து அடிபணிந்து, கை நீட்டிக் கொண்டிருக்கிறேன்…? எவன் எவனுக்கெல்லாம் ‘சேர்’ போட்டு, சொர்க்கம் சேர்… கைலாசம் சேர்… சிதம்பரம், அருணாசலம் சேர்… என்ற சுடுகாட்டு மந்திரத்தை ஓதிக்கொண்டிருக்கிறேன்…?

ச்சீ.. இனிமே இந்த வயசுல… எந்த கக்கூஸில் போய் கதிரையைப் போட்டு உட்காருவது…? கடலைத் தட்டைத் தூக்குவது..? ஸ்வீப் டிக்கட்… கிட்டார் பாட்டு…?

எனக்கு பொஸ் நினைப்பு… சனிக்கிழமையும் கடையைச் சாத்த மாட்டான்… சாப்பு சட்டத்துக்கு நேர் விரோதி!

இன்னைக்கு வெள்ளிக் கிழமை ஒரு நாள் லீவ் எடுத்து… விடிய நாலு மணிக்கு அட்டனிலிருந்து புறப்பட்டு… 9 மணிக்கெல்லாம் கொழும்புக்கு வந்து… சொந்த வேலைய முடிச்சிக்கிட்டு… பகல் சாப்பாடும் இல்லாம இந்த மூனு மணிபஸ்ஸை பிடிக்க முடிஞ்சது…

எப்படியும் ஏழரை மணிக்குள்ள அட்டன் போயிருவான்….

கரவனெல்ல சந்திக்கடையில் ஒரு பனிஸும், பிளேன் டீயும் வயிற்றுக்குள் நுழைந்தால் தான் பசி களைப்பு கொஞ்சம் ஆறும்..

வெக்கங்கெட்ட அந்த அஞ்சாயிரம் ரூபாவுக்கு முப்பது நாள் வேலை… அஞ்சாயிரத்தை முப்பதால் பிரிச்சுப் பாத்தா… ஒரு நாளைக்கு நான் உழைக்கும் சம்பளம் 166 ரூபாய்…

அதுக்கு பேரு… உத்தியோகம்…?

அதுக்கு பேரு புருஷலட்சணம்..?

ச்… சீ… எப்படி என் முகத்தில் நானே காறித்துப்பிக்கொள்வது…?

(யாவும் நடப்பவை)

– தினகரன், மே 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *