சங்கிலித் தொடர்கள் அறுகின்றன

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 30, 2023
பார்வையிட்டோர்: 1,447 
 

(1978 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜல்…ஜல்…ஜல்…

சதங்கையொலி மங்களமாய் சுற்றிலும் இசை வார்க்க வழியெல்லாம் அழகுத் திருக்கோலமாய் அந்த வில்லுக் கரத்தை வேகமாக ஊர்ந்து செல்கிறது. சமாந்தரமான சரடுகளான மணலொழுங்கையில் நீண்டு செல்லும் வண்டித் தடத்தில் அந்தக் கரத்தையின் பவனி தொடர்கிறது. மன்னர்கள் ஆரோகணித்திருக்க புரவிகள் பூட்டிய அலங்காரத் தேர்கள் ராஜபாட்டையில் ஊர்ந்து சென்றனவாமே அக்காலத்தில். அவற்றின் நல்ல காலமாக்கும்; அவை என்றோ வழக்கொழிந்துவிட்டன. இல்லையெனில் அவை கர்வபங்க முற்று மானமிழந்திருக்கக் கூடும்.

“ஜல்…ஜல்…ஜல்…”

சுருதி பேதலிக்காமல் ஒரே சீராகச் சதங்கைகள் இசை பெருக்குகின்றன ! என்றால் என்ன அர்த்தம்? காளை அவ்வளவு அநாயசமாக முறுகல், முரண்டல், தகைதல் இன்றி வாவயமான தன் பணியை நிறைவேற்றுகின்றது என்பதுதான்.

ஜல்…ஜல்…ஜல்…

சதங்கையொலி வாண்டுகளின் செவிப்பறைகளில் பட்டுத் தெறித்ததுதான் தாமதம், தேன் சிந்திய இடத்தில் எறும்புகள் திரள்வதுபோல படலைகளுக்குள் மூட்டம் போட்டுக் குவிந்து விட்டார்கள். அந்தக் கரத்தைப் பவனி அவர்களுக்கோ கண்கொள்ளாக் காட்சி. வாண்டுகளுக்கு மட்டுமென்ன, கண்படைத்த அனைவருக்குமே அது கண் கொள்ளாக் காட்சிதான்.

‘நெத்திப் பொட்டன், வள்ளிவாலன், நாலுகாற் சிலம்பன், ஒருசாண் சுளியன் டோவ்.. ஓடியாங்கடோவ்…!’

காளையின் அங்க இலட்சணங்களைக் காரணப் பெயர் களாக்கி வாய்நிறைய மொழிந்து மகிழ்வதோடு காட்சி காண மற்றவர்களுக்கும் அழைப்பு விடுப்பது அவர்களுக்கு நாளாந்த பொழுதுபோக்கு. தாங்கள் நிற்கும் கடவல்களைக் கடந்து கண்ணுக்கு மறையும் வரையில் கும்மாளமிட்டுக் களிப்பார் கள். இன்றும் அவர்கள் அதே பணியின் சட்டங்களும் சம் பிரதாயங்களும் பிழைக்காமல் செய்து முடிக்கின்றார்கள். கரத்தையை விடவும் அதை இழுக்கும் காளை தான் அவர்களின் கும்மாளத்திற்கு முக்கிய காரணம்.

மயிலை நிறப் பின்னணியில் பால் வண்ணத் திட்டுக்கள்; வெற்றியிலே பரந்த பொட்டாய் கால் மூட்டுக்களுக்குள் அடிவயிறு முழுவதும் மறையாய்க் காட்சி தரும் அந்தக் காளை எவரைத்தான் கவராது? நிமிர்வான தலையெடுப்பும், மதர்த்த இள முலைகள் ஒட்டித் தளும்புவதுபோன்ற ஏரிக் கட்டும், தொங்கும் கழுத்துச் சவ்வும்கூட அமைந்த கம்பீரம் வேறு. ஏரிக்கட்டிலிருந்து ஒருசாண் தொலைவில் முதுகுச்சுளி ஆபூர்வமாகச் சில காளைகளுக்கு அமைகின்ற ராஜ இலட்சணமாகும். அந்தச் சுழியும் இந்தக் காளைக்கு அமைந்து விட்டது.

அருமையிலும் அருமையாக ராஜயோகம் உள்ளவர்களில் ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் இப்படியொரு காளை வலம்புரிச்சங்கு கிடைப்பது போலக் கிடைக்குமாம்.

கரத்தையின் சாரதியாகவும் பிரயாணியாகவும் தானேயொருவராய் அமர்ந்திருக்கும் சேமன் இப்றாகீம் ஒரு ராஜ யோகிதான். காளையும் அவரது பட்டியிலே வளர்ந் தது தான். காளை கரத்தை இழுக்கத் தொடங்கிய சுப சகு னமோ முதலாவதாக அறிமுகப்படுத்தப்பட்ட கிராமச் சங் கத் தேர்தலில் அரும்பொட்டில் வெற்றியும்; சேமன் பதவி யும் வசய்த்துவிட்டன.

ஒழுங்கையிலே எதிர்ப்பட்ட ஒருவர், சால்வையை எடுத்துக் கம்முக்கட்டில் இடுக்கிய வண்ணம் தலைகுனிந்து விலகிச் செல்கிறார். சேமன் இபுறாகீம் தெருவில் இறங்கி விட்டால் ஏகப்பட்டவர்கள் இப்படியொரு தண்டனையைத் தங்களுக்குத் தாங்களே விதித்துக் கொள்ளார்கள். பெண்கள் எதிர்ப்பட்டாலும், முக்காடுகளைச் சிக்காராக இழுத்துப் போட்டுத் தட்டி வேலிகளில் முட்டிக்கொள்வர்.

‘ஜல் ஜல் ஜலஜலஜல் ஜல்’

சதங்கையின் சுதி கூடுகிறது. வீடு நெருங்குகிறது என்பதற்கு அது அடையாளம்.

‘சலா…..ர்…. சலீ ……ர்’

சிக்கு ஹறாங்குட்டி’ என்ற வார்த்தைகளை ஆத்தி ரத்தோடு முழங்கிக்கொண்டு மூக்கணாங் கயிற்றை இழுத் துப் பிடித்தார் சேமன் இபுராகீம். காளை, கழுத்துச் சலங் கைகள் கலகலக்க, தலையை நிமிர்த்தி முன்னங்கால்களால் நிலத்தை ஒங்கி உதைத்துக் கொண்டு தகைத்தது. கையிலே மஞ்சள் நீர்கொண்ட மண்சட்டியோடு தளுக்குச் சிரிப்புச் சிரித்தவளாக கலகலத்து நிற்கின்றாள் ஒரு சிறுமி.

‘சலார்….சலீ…’

எஞ்சியிருந்த மஞ்சள் நீரையும் அவர்மீது வளமாக இறைத்துக் குதித்துக் குதித்துக் குலுங்கிச் சிரித்தாள். அது என்ன சிரிப்போ? அது என்ன கும்மாளமோ? அவளுக்குத் தான் என்ன துணிச்சல். பெரியவர்களே கண்டு பயங்கலந்த மரியாதை பண்ணும் சேமன் இப்றாகீம் மீது இப்படியொரு காரியத்தைச் செய்துவிட்டுக் கும்மாளம்போட எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும் ! கணப்பொழுதிலே சேமனின் கோபமும் அடங்கிப்போயிற்று. அதுதான் என்ன அதிசயம்.

‘என்னடி பேத்தி, தாத்தாக் காறி வெடிச்சிற்றாளா?’ என்று விகடமாக வினவிய வண்ணம் சால்வையால் தலையையும் முகத்தையும் துடைத்துவிட்டார் அவர்.

‘தாத்தா காலம்பொறவே பெரிய மனிசாப் போச் சுது. அப்பச்சி எப்ப திரும்பிவருவியள் எண்டு பகலெல்லாம் காத்துக்கிருந்தன் மஞ்சள் தண்ணி ஊத்த!

சொல்லிவிட்டு கிசுக்கென வளவுக்குள் ஓடி மறைந்தாள். அவளுக்கோ வெற்றிப்பெருமிதம்.

‘சேமன் அப்பச்சிக்கு வாய்க்கச் சீக்க மஞ்சத் தண்ணி ஊத்திற்றேன்.’

‘அடியேய், சேமன் அப்பாச்சிக்கி ஏண்டி ஊத்தினாய்’ தாய்க்காறி பதறிக்கொண்டே கேட்டாள்.

‘ஊத்தினா என்னவாம். செமிலத்து மூத்தம்மாவுக்கு ஊத்தலாமெண்டா, காதர் மச்சானுக்கு இறைக்கலா மெண்டா..பாத்துமா மச்சிர பொடவையெல்லாம் பூசலா மெண்டா, சேமன் அப்பச்சி மாத்திரம் என்ன கொம்பா? அவரும் நம்மட அப்பச்சிதான்!

அவள் தனது செய்கையை ஆதாரபூர்வமாக நியாப் படுத்திக் கொண்டிருந்தாள். அவளின் துடுக்கான வார்த்தை களைக் கேட்டு குறுஞ் சிரிப்பை உதிர்த்துக்கொண்டே சேமன் மாட்டைச் சாய்க்கிறார்.

‘ஜல் ஜல் ஜல்’

அவர் அணிந்திருந்த பட்டுச் சால்வை, வெள்ளை (வெனியன், போனகிரிச் சாறம் எல்லாம் மஞ்சள் படிந்து விரசமாகக் காட்சி தந்தன. லாலா

சதங்கைச் சத்தம் கேட்டு சேமனின் மனைவி ஆசுறா உம்மா கடப்படிக்கு ஓடிவந்தாள். உழலைக் கடப்புக்குக் குறுக்கால் போடப்பட்டிருந்த மாங்குக் கம்புகளை வேகமாக உருவியெடுத்து வழியைத் திறந்தாள். கரத்தை கரத்தைக் குடிலுக்குள் வேகமாகப் போகின்றது. கீழே இறங்கி காளை யின் பூட்டான் கயிற்றை உருவிவிட்டுக் கரத்தையை முட் டிலே வைத்துவிட்டு வெளியே வந்தார். அவரது கோலக் தைக்கண்ட மனைவிக்கு வந்த சிரிப்பை அடக்கமுடியவில்லை.

‘அவளுக்கிட்ட வகையாக மாட்டிக்கிட்டீங்க என்ன?’

‘அந்தச் சின்னத் தொழுப்புறி மஞ்சத்தண்ணியக் கொண்டாந்து சிலாவி உட்டுட்டாள்.’

‘காலத்தால நீங்க போனபொறகால மருமகள் வந்து விஷயத்தைச் சொல்லிற்றுப் போனா’

‘பொட்டி கொண்டுபோற அடுக்கப் பாக்கல்லய?’

‘ஏன் அடுக்குப் பண்ணாம. பச்சரிசி குத்திப்போட்டன். கோழிமுட்டை இருவத்தஞ்சி கூட்டம் பண்ணிற்றன். நல்லெண்ணைப் போத்தலுக்கு சேகுக் கிட்ட காசு குடுத்து அனுப்பியிருக்கிறன், நிலாக் காலந்தானே ராவுக்குப் போக எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிற்றன், சோறு எலச்சிப் போகும் – கெதியா மேலக் கழுவிக்கிட்டு வாங்க’

இருவரும் வீட்டுக்குள் சென்றனர். மடியை அவிழ்த் துக் கடதாசியால் சுற்றப்பட்ட பொட்டலமொன்றை மனைவி யிடம் கொடுத்துவிட்டு இடுப்பு வாரைக் கழற்றி சுவர் மாங்கொம்பிலே தொங்கவிட்டார். அதே மாங்கொம்பில் தொங்கிய சாரனையும் சால்வையையும் எடுத்துக்கொண்டு கிணற்றடிப் பக்கம் சென்றார்.

ஆசுறா உம்மா பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்து விட்டு மீண்டும் பழையபடி மடித்து பௌத்திரப்படுத்தி பெட்டகத்தைத் திறந்தாள்.

‘ஏங்கா புள்ளே பொட்டகத்துக வைக்காய், புள்ள யளக் கூப்பிட்டுக் கேட்டுடுகா.’

வாய மேல் கழுவி உடை மாற்றிக்கொண்டு வந்த சேமன் மனைவியைத் தடுத்தார்.

‘பொன்னுக்கு வாங்கிப் புதனுக்கு உடுக்கச் சொல்லி சும்மாவா சொல்லியிருக்காங்க’

‘லெக்கா லெக்கா’ நீயும் ஒண்ட பத்தாசியும், பொழுது அசறால சாஞ்சிற்று, புதன் பொறந்த மாதிரித் தான். புள்ளயக் கூப்பிட்டுப் போட்டுடு. மூணு மாசமா என்ன அலைக்காத விதமாக அலக்கழிச்சிப் போட்டான் அந்த ஆசாரி. நாளத்தான் இழுத்தடிப்பான். எண்டாலும் அவன்ர வேல வேலயாத்தான் இருக்கும்.

ஆசுறா பெட்டகத்தை மூடிவிட்டு திண்ணைக்குவந்து அமர்ந்து கடதாசியை விரித்தாள். தங்கத்தால் செய்த அந்த நகைகளின் பிரகாசம் அவள் வதனத்தில் கொடி விரித்தது. குசினியிலே தயிர் கடைந்து கொண்டிருந்த மூத்த வள் கலந்தர் நாச்சி அசுப்பறிஞ்சதும் மத்தை அப்படியே வைத்துவிட்டுத் தாயிடம் வந்தாள்.

‘தங்கச்சி எங்க மனே! கூப்பிடுகா தங்கச்சிய’.

‘புள்ளே! மைமுநாச்சி! வாப்பா அரமுடி சலங்கைக் கோர்வை கொண்டாந்திருக்கா, ஓடியா கிளி. ஓடியா போட்டுப் பாப்பம்’.

தந்தையின் பணிப்பையேற்று புறவளியில் சாம்பலப் பம் சுட்டு விளையாடும் தங்கச்சியை பெரிதாதக் குரல் கொடுத்து அழைத்தாள் மூத்தவள். பிறந்த மேனியாக சாம்பல் அளைந்த கையோடு ஓடிவந்தாள் இளையவள். நாலு வயசு மதிக்கலாம்! அவளுக்கு மூத்தவனான காக்காவும் அம் மணக் கோலத்தில் ஓடிவந்தான். சின்னவள் சேமனின் மடி யில் தொப்பென்று விழுந்தாள். அவளை அவர் தூக்கிப் பிடிக்க மனைவி தகதகதங்கங் கொண்டிழைத்த அரைமூடி சலங்கைக் கோர்வையை இடுப்பிலே அணிந்துவிட்டாள். அரணாக்கொடி; சிறிய அரசிலை வடிவத்தில் கொத்து வேலைப் பாடுகள் கொண்டு செய்யப்பட்ட அரைமூடி அதிலே தொங் கியவாறு அவளது பெண்ணுடம்பை சம்பூரணமாக மறைத்து நின்றது. அரைமூடியின் இரு பக்கங்களிலும் இடுப்பைச் சுற்றி அரும்பு இழைத்த மாங்காய் வடிவச் சலங்கைகள். தாரகைகளின் நடுவில் தன்மதிபோல அரைமூடி சலங்கைக் கோவை ஜகஜோதியாய் ஒளி வீசியது பிள்ளையின் முகத் தில் மாத்திரமல்லாது பெற்றோரின் வதனங்களிலும் பூரிப் பின் ஒளிக்கீற்றுக்கள் கிளித்தட்டு விளையாடின. ‘எனக்கில் லயா?’ என மகன் முணுங்கினான். காறையும் கையிலே குண்டுக் காப்புகளும், தம்பித் துணையனும், பூணிட்டிழைத்த புலிப்பற்களிரண்டும் கேயர்த்த அரனாக் கொடியோடு அவன் காட்சி தந்தான். அவை வெள்ளியாலானவை.

‘உனக்குத்தான் இதெல்லாம் போட்டிருக்கென்னடா?’ என்றவாறே அவன் முதுகை ஆறுதலாகத் தடவிக்கொடுத்தார் தந்தை.

‘தங்கச்சிக்கும் அரமுடி சலங்க முந்திக் கெடந்தானே அவவுக்கு புதிசா எணக்கித் தந்திருக்கென்ன?’

பையன் விடுவதாக இல்லை. அவனை எப்படிச் சமா ளிப்பதென்று தெரியாமல் பெற்றோர் இருவருமே பேந்த விழித்தனர், சேமனுக்கு ஒரு யோசனை தட்டியது.

‘ஆம்புளயள் தங்கம் போடப்படா மனே! போட்டா அல்லா நெருப்பிலே போடுவான். கொழும்புக்குப்போய் நல்ல வடிவான மலேயா தொப்பி வாங்கிக்கந்து தாறன் ; வண்ணம் வண்ணமான படமெல்லாம் இரிக்கும். பொண்டு கள் குத்துக்கரணம் போட்டாலும் அவியளுக்குக் குடுக்கிறல்ல.’

தந்தையின் மகுடிக்குத் தனயன் அடங்கிப்போனான். சிறு பிள்ளைகளிரெண்டும் கும்மாளமிட்டுக் கொண்டு புற வளவுப் பக்கம் ஓடினர். அரைமூடி சலங்கைகள் கலீர்கலீர் என இசைபெருக்கி ஒய்ந்தன. மூத்தவள் தங்க நகைகளைக் கண்ட உற்சாகத்தில் அணிந்திருந்த வெள்ளி நகைகளை மள மளவென்று கழற்றிக் கொண்டிருந்தாள். சேமனுக்கோ பசி குடலைப் பிராண்டவே எழுந்து குசினிக்குள் சென்றார். அவருக்கு விருப்பமான பனையான் மீன் கறியும், வரால் பொரியனும், மீன் போட்டுச் சுண்டிய திராய்ச் சுண்டலும் கறிகளாய் இருந்தபடியால் ஒரு பிடி பிடிக்கத்தொடங்கினார்.

‘ஹோவ்……’

கனமான தொண்டையிலிருந்து கிளம்பிய அசுரமான ஏவறையோடு வெளியே வந்த சேமனின் முன்னால் மூத்த வள் தங்க நகைகளால் பூத்துக் குலுங்கிப்போய் நின்றாள்.

அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை. தன் எதி ரில் நிற்பது தனது மகளா ? அல்லது தேவலோகத்திலி ருந்து இறங்கிய ஹுர் லின்’ பெண்ணா என்று அவரால் நிதானிக்க முடியாதிருந்தது. சந்தன நிறத்தில் கொடி போன்ற தேகவாகுடன் இயற்கையான அழகுச் சிலையான அவள். தகதகக்கும் தங்க ஆபரணங்களால் மெருகுபெற்று நின்றாள். கழுத்தோடு ஓட்டிய ஒட்டியாணம், நீண்டு தொங் கும் மணிச்சரம், காதுகளிற் கூர் அல்லுக்குத்தும், சிமிக்கு வாளியும் பூனைக்குட்டி. கையில் தாவத்துக்கொடி, மணிக் கட்டுக்களில் கட்டு வளையல் காப்புக்கள். வைத்த கண் வாங் காது அவளின் திருக்கோலத்தைப் பருகிக்கொண்டு நின்றார்..

“போதும். புள்ளைக்குக் கண்பட்டுப் போகும். தாய் தகப்பன்ட கண்தான் ஓரமாப்படும்.

மனைவி அவர் கவனத்தைக் கலைத்தாள்.

‘போடி பைத்தியகாரி. என்ர புள்ளக்கி என்ர கண் படுகிறதாவது.’

சேமன் , திண்ணைக்கு வந்து சாடை. விரித்துக்கிடந்த கற்பன் பாயின் படிப்பை விரித்துவிட்டு சிரமத்தோடு அமர்ந் தார். மகள் உற்சாகத்துடன் மத்துக்கடையும் வேலையைத் தொடர்ந்தாள். தாய்க்காறி காய்ந்த கொச்சிக்காய்கள் சில தையும் உப்புக் கற்கள் ஒரு கிள்ளும் எடுத்து அடுப்புத் தணலில் போட்டாள்.

‘பாத்யளா? கொச்சிக்காய் புரையேறவுமில்ல, உப் புக்கல்லு வெடிக்கவுமில்ல. கண்படாது எண்டயள்?

சொல்லிக்கொண்டே வெற்றிலை வட்டாவுடன் கண வனுக்குப் பக்கத்தில் வந்தமர்ந்தாள்.

சேமன் இபுறாகீமுக்கு இந்தமுறை வேளாண்மையும், புகையிலையும் அட்டி சொல்லாமல் அறுவடை வழங்கின. சேமன் பதவியால் பணச் சிலாக்கியங்கள் தாராளமாகக் கிடைத்தன. ஆதலால் மனைவி மக்களின் வெள்ளி நகை களைக் தங்க நகைகளாக மாற்றத் துணிந்தார். வெள்ளி நகைகள் கௌரவக் குறைவாகி, தங்க நகைகள் பெருவழக் காகி தலைவைக்கத் தொடங்கி விட்டனவல்லவா? சேமன் அதில் பின் நிற்கலாமா? இந்தப் போகத்தோடயே மகளின் திருமணத்தையும் செய்து முடிக்க அடுக்குப் பண்ணத் தொடங்கினார்.

ஆசுறா உம்மா பழப்பாக்கைத் பாக்குவெட்டி இடுக் கினால் நறுக்கென வெட்டினாள். பாக்கு இரு துண்டாகியது. தோல் சீவி அரியத் தொடங்கினாள்.

‘உம்மா’ உம்மா லெக்கோவ் கிணத்தடித் தென்னங் கன்று பாள தள்ளிற்றுகா. என்ன பென்னாம் பெரிய பாள? பாளைக் கலியாணம் எடுக்கவேணும் உம்மா, சனங்களக் கூப்பிடுகா.’

தன் வேலையை முடித்துவிட்டுக் கிணற்றடிக்குச் சென்ற மூத்தவள் பாளயைக்கண்டு கும்மாளமிட்டாள்.

‘என்ன புள்ள நீ குழந்தை மாதிரிங்…என்ற உடனே பாளக்கலியாணம் நடத்திடலாமா? பொரிவகை ஆயத்தப்படுத்த வேணும்; மஞ்சலரைக்க வேணும், வெடில் வாங்க வேணும், வாற சனங்களுக்கு தின்னக் குடிக்க வாயில போட ஆயத்தப்படுத்த வேணும். நாளைக்கி நல்ல நாள். அத நாளைக்கிப் பாப்பம்.

மகள் தாய்சொல்லைத் தட்டமுடியாமல் தன் வேலையில் ஈடுபட்டாள். ஆசுறா உம்மா பாக்குச் சீவலைக் கணவனிடம் கொடுத்துவிட்டு காம்பு கிள்ளி வெற்றிலைக்குச் சுண்ணும்பு தடவினாள். சுண்ணாம்பு தடவிய வெற்றிலையை மடித்து கணவனிடம் நீட்டியவாறு பேச்சை ஆரம்பித்தாள்.

‘மத்தியானத்துக்கு முந்தி காக்கா பொண்டிவந்து போனா.’

சேமன் வெற்றிலை பாக்கை அதக்கிக்கொண்டிருந்தார். கடைவாயில் வீ ணி வழியப்போவதைக் கண்ட மனைவி படிக்கத்தை எடுத்து ஏந்திப் பிடித்தாள். படிக்கத்தில் உமிழ்ந்துவிட்டு, கடைவாயை கையால் அராவிக்கொண்டார். அவள் படிக்கத்தைக் கீழே வைத்துவிட்டு புகையிலை நறுக்கையும், கைப்புப் புளகையும் எடுத்துக்கொடுத்தாள்.

‘காக்கா இந்த வருத்தத்தாலே பொளப்பேனா இல்லையோ எண்டு ஒசியத்துச் சொல்லுகாராம். கண்ணோடு மகன்ர கலியாணத்தப் பண்ணிப்பார்க்க வேணுமெண்டு அங்கலாய்க்காராம்.

‘அதற்கென்ன செய்யிறதானே’

‘நாம ஏர்கோலம் பண்ணாம அவிய எப்படிச் செய்யிறது’.

‘அவகட புள்ளக்கி கலியாணத்துக்கு நாமென்னத் தகா பண்ணுற. அவக தொடங்கினா நாமளும் போய்நிண்டு செய்துமுடிச்சிற்று வரலாம்’.

‘பெண் நம்மட பெண்ணா இருக்க, நாம அடுக்குப் பண்ணுறல்லயா?’

‘இந்தா நான் படிச்சிப் படிச்சிச் சொல்லிற்றன். அந்தச் சம்மந்தம் நமக்கு வேணாமெண்டு. எங்கயாவது ஒரு பெண்ணப் பாக்கச் சொல்லு. நாமளும் ஒரு உதவி ஒத்தா சையைச் செய்வம்.’

‘அந்த மாப்பிள்ளைக்கு சாணைக் கூறபோட்ட பொண் நம்மட பொண்தான். நம்மட அப்பா பாட்டன் பூட்டன் காலத்திலிருந்து வந்த வழக்கத்துக்கு மாறு செய்யாதங்க. நீங்க மாமாட மகள், ஒங்கம்மா எனக்கு சாணக்கூற போட்டா. இது பரம்பரையா வந்த சங்கிலித்தொடர். அத அறுக்காதைங்க. அல்லாக்கும் பொருந்தாது. எனக்கும் மார் மடி தாங்காது.

இதைச்சொல்லி முடிக்கும்போதே பால் சுரந்த முலை யாக அவனது கண்கள் உடைந்து சொரிந்தன.

‘அதுக்கெல்லாம் இரு தெறத்தாரிட்டயும் தகுதி இருந்திச்சு செய்தாங்க. என்ற தகுதிக்குக் குறைஞ்ச இடத் தில மாப்பிள்ளை எடுக்கமாட்டன். அதுகும் ஊட்டுக்கு வாற முதல் மாப்பிள்ள.’

அவளுக்கு அழுகை ஆகரோஷமாக மாறியது.

‘என்ட காக்காக்கு ஒண்டும் தகுதி கொறயல்ல. இரண்டு மூணு வருசத்துக்குள்ளதானே அவர்ர சொத்து சொகமெல்லாம் அழிஞ்சிச்சி. போன செல்வம் திரும்பிவர நாளெடுக்காது. இப்ப பாலில்லாட்டியும் பால் வார்த்த பான என்ர காக்கா. அத மறந்திராதீங்க. ரெண்டு மூணு முறை வெள்ளாமையும் போயில வாடியும் கையுட்டுச்சி கடசியாக காணிய அடவு வச்சி மூன்று போயில வாடி வச்சார் ஔக்கலாமெண்டு தான். அவர்ர போதாக்காலம் போயில கண்டுகளையும் வெள்ளம் அள்ளிக்கிட்டுப் போயிற் றுது. அவர்ர காணி பூமியையும் நீங்கதானே அறிதியாக்கி எடுத்தீங்க. அது எங்கட பாட்டன் பூட்டன் சொத்து. அத பொறத்தியான் வந்து ஆள நானுடமாட்டன். அந்த மகுமுது மரைக்காண்ட மகன் எண்ட ஊட்டுக்கு கால மிரிக்க உடமாட்டன்.’

‘மகமூதுர மகன் தானே வேணாம்; அத நானும் கை கழுவிற்றன்.

அவளுடைய முகத்தில் நம்பிக்கை ஒளி பிரகாசமிட்டது.

‘நான் போடி மாத்திரமல்ல. இப்ப சேமன். உத்தி யோகம் பார்க்கிறவன். எனக்கு மருமகனா வாறவனும் உள்ள இடத்துப் பிள்ளையா, உத்தியோக காரனாகதான் இருக்கவேணும். அதுக்கேத்த மாப்பிள்ளையா பாத்துட்டன். நீ கவலப்படாத.’

‘இந்தச் சேமன் பதவி எங்கால வந்திச்சி. ஒங்களுக்கு எதிராக ஒங்கட தம்பி எலக்சன் கேட்டாரே. என்ர காக் காவும் என்ர குடும்பமும் சேந்து ஒங்க துண்டும் பெட்டிய நெறப்பினதாலதான் வெண்டீங்க. சேமன் பதவியும் வந் திச்சி. ஒங்கள வெல்லவைக்க என்ர காக்கா பட்டபாட்ட மறந்திற்றியள். அவர்ர வண்டில்ல மஞ்சக்கொடி கட்டி சனத்த ஏத்திப்பறிச்சார். மருமகப் பொடியன் பத்துத்தரம் கள்ளத்துண்டு போட்டான். எண்டு பெருமையாய் பீத்தி யடிச்சயளே. ஆக அஞ்சி துண்டால தானே வெண்டீங்க.”

சேமன் இபுறாகீம் ஊறிவந்த எச்சிலை பளிச்சென்று படிக்கத்தில் துப்பினார். பின் எழுத்து நின்று,

‘ஒண்ட காக்கா பொண்டி போட்ட சாணக் கூறைய இப்பவே கொண்டுபோய்க் கொடுத்திற்றுவா’ என்று உறுதி யாகக் கூறிவிட்டு பட்டுச் சால்வையை உதறித் தோளில் போட்டார். ஆசுறா பேயறைந்தவள் போல பெருமூச்செறிந் தாள். காளை கொசுக்கடிக்காக தலையை அசைக்க கழுத்துச் கலங்கைகள் ‘ஜல் ஜல்’லென ஒலித்தன.

– மல்லிகை 1978

– மருதூர்க்கொத்தன் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1985, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, கல்முனை (இலங்கை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *