கூட்டுக் குடும்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 3, 2018
பார்வையிட்டோர்: 7,158 
 

பத்தாண்டுகளுக்குப் பிறகு நண்பன் சோமசுந்தரம் கிராமத்திற்கு வந்த துரைவேலுவிற்கு அதிர்ச்சி, ஆச்சரியம். காரணம், ஏழ்மையாய் இருந்த குடிசை வீடு கோபுரம். மாடிவீடு. அது இல்லாமல் விவசாய பணிகளுக்கு டிராக்டர். கரும்பு ஏற்ற லாரி என்று பெரிய வரவு செலவு.

”எப்படி இந்த மாற்றம் ? ” அவனுக்குள் கேள்வி எழுந்தது.

”எப்படிடா இப்படி! இந்த மாற்றம் ? ” நண்பனிடம் வாய்விட்டே கேட்டான் துரைவேலு.

”தெரியலை.”

”சரி விடு. உன் அம்மா அப்பா உன்கூடத்தான் இருக்காங்களா ? ”

”ஆமாம். ஏன் ? ”

”உன் கூடப்பிறந்த மத்த பிள்ளைங்க வீடுகளுக்குப் போகலையா? ”

”நாலு அண்ணன் தம்பி வீட்டுக்கும் போனாங்க. ஆனா திரும்பிட்டாங்க. காரணம்….வரவேற்பு, விருந்து உபசரிப்பு சரி இல்லே.”

”அப்படியா ?!”

”ஆமாம். அங்கிருந்து திரும்பறதுக்குள் அவுங்க ஒவ்வொருத்தரிடமிருந்து தினம் எனக்கு நாலு போன்.”

”என்னன்னு ? ”

”சோமு! கிராமத்துல வாழ்ந்த அம்மா அப்பாவை வைச்சு நகரத்தில் இங்கே குப்பைக் கொட்டறது கஷ்டம். மேலும் நாங்க இருக்கிற இடம் சிறிசு. எல்லாரும் இருக்க இடம் போதாது. அது மட்டுமில்லாம எங்க மனைவிகளுக்கும் மாமனார், மாமியார் வந்து தங்கி இருக்கிறது பிடிக்கலை. இதனால எங்களுக்குள்ளே மனஸ்தாபம், கஷ்டம். அதனால…. அம்மா அப்பாவை நீயே வைச்சுக்கோ. எங்களுக்கான செலவுத் தொகைகளை மாசாமாசம் நாங்க அனுப்பறோம். எங்களைப் போல் உனக்கும் பிரச்சனை, முடியலைன்னா முதியோர் இல்லத்தில் சேர்த்துடுவோம். அதுக்குண்டான செலவு பங்குத் தொகையை நாங்க தர்றோம். சொன்னாங்க. எனக்கு பெத்தவங்களைப் பாரமாய் நினைக்கிற அவுங்க மனசு புரிஞ்சது. அம்மா அப்பா திரும்பியதும்….நீங்க எனக்குக் கஷ்டம் குடுக்கக்கூடாதுன்னு நெனைச்சி எல்லார் வீட்டிற்கும் போனது தெரியும். இனி அப்படி போக வேணாம். எந்த கஷ்ட நஷ்டம் வந்தாலும் என்னை மட்டும் பெத்ததாய் என்னோடேயே இருங்க. நானும் அப்படியே நினைச்சு உங்களை விடாம கடைசிவரை வைச்சு காபந்து பண்றேன் சொன்னேன். அவுங்களும் சரின்னு தலையாட்டி இருக்காங்க.” சொல்லி முடித்தான்.

எல்லாவற்றையும் கவனமாகக் கேட்ட துரைவேலு, ”இதனால ஒன்னும் தொந்தரவு இல்லியா? ” திருப்பி சோமசுந்தரத்தைக் கேட்டான்.

”ஒன்னும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அவுங்க இருக்கிறது எனக்கு ரொம்ப உதவி. குழந்தைகளைக் கவனிச்சிக்கிறாங்க. அதுங்களுக்கு கதை சொல்லி அப்பா பள்ளிக்கூடம் வரை கொண்டு விட்டு வர்றார். மத்ததுகளுக்கும் உதவி ஒத்தாசையாய் இருக்காங்க. இந்த கூட்டுக் குடும்பத்தினால் எனக்கு வீட்டுக் கவலையே இல்லே. அடுத்து, நான் தொட்டதெல்லாம் துலங்கி இப்போ இந்த நிலைக்கு ஆளாகிட்டேன். எனக்கு முன்னாடி வசதியாய் இருந்த என் அண்ணன் தம்பியெல்லாம் இப்போ எனக்குப் பின்னால இருக்காங்க. அதாவது என்னைவிட வசதி கம்மியாய் இருக்காங்க. இதிலேர்ந்து எனக்கு ஒன்னு நல்லா தெரியுது. பெத்தவங்க வயிறு குளிர்ந்தா புள்ளைங்க நல்லா இருப்பாங்க என்கிற பாடம்.” நிறுத்திய சோமசுந்தரம், ” சரி நீ எதுக்கு என்னைப் பார்க்க வந்தே ? ” கேட்டான்.

”இந்த விசயமாய்த்தான் குழம்பி வந்தேன். இப்போ தெளிஞ்சுட்டேன்.” என்றான்.

”புரியலை ? ” இவன் அவனைக் குழப்பமாகப் பார்த்தான்.

”என் அம்மா அப்பா தொந்தரவு. இங்கே பக்கத்தில் இருக்கும் முதியோர் இல்லத்தில் அவர்களைச் சேர்த்து விடலாம்ன்னு யோசனை. அருகிலிருக்கும் உன்னிடம் அதைப் பத்தி விசாரிச்சுப் போகலாம்ன்னு வந்தேன். இப்போ முடிவை மாத்திக்கிட்டேன். போறேன்.” நடந்தான் துரைவேலு.

சோமசுந்தரம் சிலையாக நின்றான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *