கைக்கு எட்டியது!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 9,068 
 
 

வீட்டின் சின்னத் தோட்டத்தில் ஒரு பெரிய பங்கணபள்ளி மாமரம். ஒவ்வோர் ஆண்டும் அது எங்கள் நாக்குத் தினவைத் தீர்த்துவைக்கும். அதுவும் போன வருடம் நாங்கள் ஒரு மாம்பழம் கூடக் கடையில் வாங்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

முன்னொரு காலம் நாங்கள் லாயிட்ஸ் சாலையில் ஒரு வாடகை வீட்டில் மாடியில் குடியிருந்தோம். பக்கத்து வீட்டில் ஒரு பெரிய மாமரம். மாம்பழ சீசனில் அந்த மரத்தில் எண்ணி மாளாத பழங்கள் கொத்துக் கொத்தாகத் தொங்கும். மரமே பொன்னால் வேய்ந்ததுபோல் மிளிரும்! அந்த மரம் காலை முதல் மாலை வரை கிளிகளின் மகிழ்ச்சிக் கூவலுக்கும், அணிலின் சண்டித்தனத்துக்கும் ஈடு கொடுத்து நிற்கும்.

கீழ் தளம் மட்டுமே கட்டியிருந்த அந்த வீட்டில் ஓர் இளம் ஜோடி. கூட அவர்கள் பெற்ற ஐந்து வயதுப் பெண் குழந்தை. மாலை வேளைகளில் அவர்கள் மூவரும் மொட்டை மாடிக்கு வந்து காற்றாடப் பேசிக்கொண்டிருந்தும், குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்தும் பொழுது போக்குவர். அந்தப் பெண் மாங்கனிகளை விட நிறமாகவும் அழகாவும் இருந்தாள். அவனும் வாட்டசாட்ட இளைஞனாக முகத்தில் ஒளியும் தலையில் லேசான முன்வழுக்கையும் மின்ன இருந்தான். நாங்கள் முதல் மாடியில் வசித்ததால் நான் அவர்களை ஒரு கழுகுப் பார்வையிலேயே நோட்டம் போட முடிந்தது. நான் பார்ப்பதை என் மனைவிக் கழுகு பார்த்துவிட்டு என்னுடன் சேர்ந்துகொள்ளும்! எங்கள் மூன்று வயது மகன் ஹால் போன்று பெரிதாக இருந்த முன் அறையில் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டிக்கொண்டிருப்பான்!

ஹலோ, இந்தக் கதை அந்தப் பெண்ணைப் பற்றி இல்லை! கதை என்னைப் பற்றி! அதற்கு முன் எங்கள் வீட்டு மாமரம் பற்றிச் சில வார்த்தைகள் சொல்லியாக வேண்டும்.

எங்கள் வீட்டு மாமரத்தை இன்னமும் கிளிகள் நாடவில்லை. என்றாலும் அணில்கள் ஓயாது ஓடித் திரிந்து ஒரு மாங்காயும் முழுதாகக் கனிய விடாது குதறித் தின்று மீதியைக் கீழே போட்டுவிடும். போவோர் வருவோர் எங்களுக்குத் தெரியாமல் காய்களைப் பறித்துச் செல்வதும் உண்டு. இதனால் லாய்ட்ஸ் ரோடு வீடு போல மரத்தில் கனிகள் தொங்குவதைக் பார்ப்பது எனக்கோர் கனவாகவே இருந்து வருகிறது.

எங்கள் மாமரக் காய்கள் இப்படி மரத்திலேயே பழுக்க விடுவது முடியாததால், அவை உள்ளங்கையை விடப் பெரிதானவுடன், நாங்கள் காய்களைப் பறித்து அவற்றைத் ’தாம்பரம் டைம்ஸ்’ செய்தித் தாளில் சுற்றிவைத்துக் கனியவைப்போம். வீட்டில் கனியவைத்த பழங்கள் ஏராளமாக இருந்ததால் சென்ற வருடம் நாங்கள் ஒரு மாம்பழம் கூடக் கடையில் வாங்கவில்லை. அக்கம் பக்கத்தார்க்கும் கொடுத்தோம். சீசன் தப்பிப் பெய்த மழையால் இந்த வருடம் அவ்வளவாகக் காய்கள் இல்லை. எனவே இருந்த காய்களையும் அவற்றில் சில கைக்கெட்டும் தூரத்தில் சுற்றுச் சுவர் அருகில் தொங்குவதையும் நாங்கள் தினமும் கண்காணிப்பது வழக்கமாகியது.

*** *** ***

போன வாரம் ஒரு நாள் மாலை. கையில் பத்திரிகையுடன் ஒரு சினிமாப் பாடலை முணுமுணுத்தபடியே நான் வாசலுக்கு வந்தபோது கவனித்தேன். பத்துப் பன்னிரண்டு வயதுள்ள ஒரு பள்ளிச் சிறுவன் சுற்றுச் சுவரை ஒட்டி நின்றுகொண்டு அருகில் தொங்கிய இரண்டு மாங்காய்களைக் கண்ணால் ஆராய்ந்துகொண்டிருந்தான். அருகில் சைக்கிளுடன் அவன் நண்பன்.

“தம்பீ! என்ன வேணும்?”

“ஒரு மாங்காய் வேணும்.”

“இதெல்லாம் அடுத்த சில நாட்கள்ல பழுக்கக் கூடிய பங்கணபள்ளி பழக்காய்கள். அதைக் காயாய்ப் பறிக்கக்கூடாது. இந்த மாம்பழ சீசன்ல எதுக்கு உனக்கு இப்போ மாங்காய்?”

“புதைக்க!”

முதல்நாள் இரவு தாரை தப்பட்டை வாண வேடிக்கையுடன் பின்னால் போலீஸ் ஜீப் தொடர ஒரு சவ ஊர்வலம் எங்கள் தெரு வழியாகப் போனது நினைவுக்கு வந்தது. ஒரு வேளை இவன் வீட்டில் அது மாதிரி யாராவது காலமாகி, அவர் வாழ்வில் மிகவும் விரும்பிய மாங்காய் ஒன்றையும் அவருடன் புதைக்கவேண்டிக் கேட்கிறானோ?

“எதுக்கு மாங்காயைப் புதைக்கணும்?”

“ஒரு மாங்காயை எங்க வீட்ல புதைச்சு வெச்சா அதிலேர்ந்து கொஞ்சநாள்ல செடி வரும் இல்ல? அதுக்குத்தான்!”

அவனது அறியாமை என்னை வியக்கவைத்தது! எந்த ஸ்கூல், என்ன க்ளாஸ் என்றெல்லாம் கேட்கும் துடிப்பை அடக்கிக்கொண்டு பொறுமையுடன் சொன்னேன்.

“தம்பீ! நீ நினைக்கற மாதிரி மாஞ்செடி மாங்காய்லேர்ந்து வர்றதில்ல. அது மாம்பழத்தோட கொட்டைலேர்ந்து வர்றது… ஒண்ணு செய். நேரா சேலையூர் கடைத்தெருவுக்குப் போ. அங்க கடையில மாம்பபழம் கிடைக்கும். நல்ல பங்கணபள்ளிப் பழமா பார்த்து வாங்கிச் சாப்பிடு. அப்புறம் அந்தக் கொட்டையை உங்க வீட்ல மண்ணுல புதைச்சு வெச்சு தினமும் தண்ணி ஊத்து. கூடிய சீக்கிரம் அது முளைச்சுச் செடியாகும். என்ன, செய்யறியா?”

“தாங்க்ஸ்” என்று சொல்லிவிட்டுப் பையன்கள் இருவரும் சைக்கிளை மிதித்துக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

*** *** ***

என் மனைவி வங்கியில் இருந்து வீடு திரும்பியதும் அந்தப் பையனின் அறியாமை பற்றிச் சொன்னேன். சிரித்தாள்.

“அறியாமை அவனுக்கா உங்களுக்கா?”

“என்ன சொல்ற நீ?”

“இவ்ளோ அப்பாவியா இருக்கீங்களே! மாங்கொட்டைலேர்ந்து மாஞ்செடி வரும்னு ரெண்டாம் வகுப்புப் பிள்ளைக்குக் கூடத் தெரியும்! அந்தப் பையன் உங்களை செமத்தியா கிண்டல் பண்ணியிருக்கான். அதுகூடத் தெரியாம அவனுக்குப் பாடம் எடுத்தீங்களாக்கும்!”

“என்னைக் கிண்டலா பண்ணினான் அவன்?”

“ஆமாம்! இன்னும் ரெண்டு நாள்ல பாருங்க. அந்த ரெண்டு மாங்காயும் மரத்தில இருக்காது. ஐயா சாயங்காலம் நாலு-நாலரை மணிவரைக்கும் ஹாய்யா ஏஸியைப் போட்டுகிட்டுத் தூங்குவார் இல்ல. அப்படியே தூங்காட்டியும் நான் வரும்போதுதான் கம்ப்யூட்டர் ரூமை விட்டு வெளில வருவார் இல்ல? அந்த ரெண்டு காயையும் நீங்களே அவனுக்குப் பறிச்சுக் கொடுத்திருக்கலாம்.”

“அப்படியா சொல்ற? நாளைக் காலைலேர்ந்து விடாம வாட்ச் பண்ணி அந்தப் பசங்களைக் கையும் களவுமாப் பிடிக்கறேன் பார். என்ன பந்தயம்?”

“அந்த மாங்காய் இன்னும் ரெண்டு நாளைக்கு அப்புறம் மரத்தில இருந்தா நான் உங்கள் கவிதைகளை யெல்லாம் பொறுமையா, நிதானமாப் படிக்கறேன். அப்படி அந்த மாங்காய் ரெண்டும் காணாமப் போச்சுன்னா நீங்க எனக்கு ஒரு புடவை வாங்கித் தரணும்! சம்மதமா?”

*** *** ***

என் மனம் ஒரு புதிய கோணத்தில் வேலை செய்தது. போன வாரம் இன்டர்நெட்டில் “உங்கள் வெப்-காமிராவால் வீட்டைக் கண்காணிப்பது எப்படி?” என்று விளக்கிய ஓர் ஆங்கிலக் கட்டுரை படித்தது ஞாபகம் வர என் மனதில் ஒரு லைட்-பல்ப் எரிவது போல் பொன்னிற மாம்பழம் தெரிந்தது!

விளக்கம் மிகவும் எளிதாக இருந்தது. மறுநாள் காலை கம்ப்யூட்டரின் மானிட்டர் மேல் ஒரு சின்னக் குருவி போல் உட்கார்ந்திருந்த வெப்-காமெராவை எடுத்து ஜன்னலில் பொருத்தி டேப் போட்டு ஒட்டினேன். காமிராவை மறைவாக ஆனால் சுற்றுச் சுவர் மாங்காய்களை எளிதாகப் படம் எடுக்கும் விதத்தில் அமைத்தேன். அதன் USB கேபிளுடன் ஒரு எக்ஸ்டென்ஷன் சேர்த்ததால் எளிதில் ஜன்னலில் பொருத்த முடிந்தது

அடுத்து, ISPY என்னும் இலவச மென்பொருளைத் தரவிறக்கி நிறுவினேன். அந்த மென்பொருளின் உபயத்தில் இப்போது எங்கள் வீட்டு வாசல் சுவர் திரையில் தெளிவாகத் தெரிந்தது. பத்து வினாடிகளுக்கு மேல் அசைவு தெரிந்தால் அதை வெப்கேம் படம் எடுக்கும்படி மென்பொருளை அமைத்தேன். காற்றில் அசைவுகள் போன்ற சிறு சலனங்களைக் வெப்கேம் பதிவுசெய்யாத வகையில் மென்பொருள் அமைந்தது அதன் சிறப்பு. சுற்றுச் சுவரில் வந்து உட்கார்ந்த ஒரு புறாவை வெப்கேம் படம் எடுத்து ஒரு விடியோ கோப்பாகச் சேமித்ததில் எனக்கு இந்த முயற்சியில் பரம நம்பிக்கை!

என் மனைவியிடம் காட்டிய போது அசந்துவிட்டாள்! “ஐயோ, நூறுக்கு மேல் நீங்கள் எழுதித் தள்ளிய கவிதைகளை நான் படிக்கணுமா? கடவுளே!” என்றாள். மனதில் ஏதோ தோன்றக் கொஞ்சம் ஆறுதல் அடைந்து சிரித்தாள். “எப்படியும் ஐயா மதியம் தூங்க முடியாதில்ல? கம்ப்யூட்டர் பக்கத்திலேயே உக்காந்து கண்காணிக்கணும் இல்லையா?”

“நம்ம பந்தயம் அந்த ரெண்டு பசங்களைப் பத்திதான். அதனால நான் ஒரு மணிக்குப் படுத்திட்டு மூணு மணிக்கு எழுந்திடுவேன். அதுக்கு அப்புறம் தானே ஸ்கூல் விடும்?”

“பசங்க பறிக்கறாங்களோ இல்ல வேறு யாரோ, ரெண்டு நாள் கழிச்சு மாங்காய் மரத்துல இல்லேன்னா எனக்குப் புடவை நிச்சயம்!”

“அதுக்கென்ன வாங்கிட்டாப் போறது!”

*** *** ***

முதல் நாள் மாலை வரை தூங்காமல் கணிணியில் உட்கார்ந்து முகநூலில் மேய்ந்தவாறே கண்காணித்தேன். அந்தப் புறா தவிர வேறு எதுவும் சலனப் படக் கோப்புகளை வெப்கேம் பதியவில்லை. வெளியே அந்த இரண்டு மாங்காய்களும் சற்றுப் பருத்து, பத்திரமாக இருந்தன. மாங்காய் புதைக்கக் கேட்ட பையனைக் காணோம்!

வெப்கேம் தந்த நம்பிக்கையில் இரண்டாம் நாள் மதியம் ஒரு மணிக்குக் கண்ணயர்ந்தேன். வெம்மையைப் பொருட்படுத்தாது கணிணி அறையில் இருந்த கட்டிலில் படுத்தேன். அடுத்த சில நிமிடங்களில் தூங்கிவிட்டேன். மூன்று மணிக்கு செல்ஃபோன் அலாரம் எழுப்பியது. மாங்காய்கள் அப்படியே இருந்தன.

தொடர்ந்து வெப்கேம் திரையில் பார்ப்பது அயர்ச்சியாக இருந்தது. எனக்கு மாங்காய்கள் திருடு போவது பற்றிக் கவலையில்லை. திருடியது அந்தப் பையன்களா என்று தெரிந்தால் போதும். பந்தயத்தில் நான் தோற்று மனைவிக்குப் புடவை வாங்கித் தருவதும் எனக்கு மகிழ்ச்சியே. எனவே என் கற்பனைக் குதிரையில் ஏறிக் கனவுலகை வலம்வந்து எழுதியதில் பாதியில் நின்ற கவிதைகளையும், சிறுகதைகள் இரண்டையும் தொடர்வதில் ஆர்வம் காட்டினேன்.

“மாங்காய் அப்படியே இருக்கே! எனக்கு வேற வழியில்லை போலிருக்கே?” என்றாள் மனைவி மாலை வீடு திரும்பியதும்.

“கவலைப் படாதே விஜயா! மாங்காய் இருக்கோ போச்சோ, என் கதைகளைப் படிக்கற மாதிரி நீ என் கவிதைகளையும் நிறுத்திப் பொறுமையாப் படிச்சா நான் உனக்கு ஒண்ணு என்ன ரெண்டு புடவை வாங்கித் தர்றேன். உன் பொறந்தநாள் வேற அடுத்தவாரம் வருது இல்லையா?”

*** *** ***

மறுநாள் காலை கோலம் போட வாசல் பக்கம் சென்ற என் மனைவி என்னைக் கூப்பிட்டுக் காட்டினாள். “ஒரு மாங்காயைக் காணோம்! ஒண்ணுதான் இருக்கு.”

“அப்படீன்னா நீ என் கவிதைகள்ல பாதிதான் படிப்பியா?”

“நீங்க எனக்கு ஹாஃப்ஸாரிதான் வாங்கித் தருவீங்களா?”

“அடுத்த வருஷம் ரிடயர் ஆற வயசில உனக்கு அதுவேற ஆசையா? வா, கம்ப்யூட்டர்ல பார்ப்போம்.”

நேற்று மாலை தெருவிளக்கைப் போடும் நேரம் வரை இருந்த அந்த மாங்காயை அதன் பின் யார் எடுத்தது என்று நான் எங்கள் வெப்கேம் சேமித்த சலனப் படக்கோப்புகளைத் தேடினேன். இரண்டு கோப்புகள் பதிவாகி இருந்தன. பதிவான நேரம் இரவு எட்டரை மணி. நாங்கள் இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரம். வெளியே இருளாக இருந்தபோதும், வீட்டின் எதிரில் இருந்த சோடியம்-வேப்பர் தெருவிளக்கில் நடந்தது அடையாளம் காணும் அளவுக்குத் தெளிவாகவே தெரிந்தது.

அந்த இரண்டு பையன்கள்தான்! சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு ஒரு பையன் அதன் மேல் ஏறி ஒரு மாங்காயைப் பறித்தது கண்டோம். அதன் பின் அவர்கள் வெளிப்பக்கம் அசையாது நின்றுவிட்டதால் படக்கோப்பு அத்துடன் முடிந்தது. அவர்கள் இன்னும் அங்கேயே இருந்ததால் இன்னொரு மாங்காயையும் பறித்துச் செல்வது பற்றி ஆலோசித்திருப்பார்கள் என்று தோன்றியது.

அடுத்த கோப்பைத் திறந்தேன். ஒரு வினாடி அந்த ’மாங்காய் புதைக்கக் கேட்ட’ பையனின் முகம் தெரிந்து பின் ஒரே இருட்டாகி விட்டது.

“நேத்து இந்த நேரத்துக்குத்தான் பத்து நிமிஷம் கரண்ட் கட்டாச்சு. ஞாபகம் இருக்கா?” என்றாள் விஜயா.

“ஆமாம்!” மறுபடியும் அந்த இரண்டாவது படக்கோப்பை ஓட்டினேன். மின்சாரம் துண்டிக்கப்பட்டு வெளியில் இருளானாலும் அறையில் இன்வர்ட்டர் தயவில் ஒளிர்ந்த வெண்குழல் விளக்கின் ஒளியில் ஜன்னல் அருகில் நிழலாக ஏதோ மூடுவது போல் பதிவாகி இருந்தது.

சட்டென்று கலவரமாகி எழுந்து ஜன்னலில் வெப்கேம் பொருத்திய இடத்தைப் பார்த்தேன். ஒரு பல்லியின் தலைபோல் USB கேபிள் முனை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க, ஆயிரத்தி ஐநூறு ரூபாய்க்குப் போன மாதம் மவுன்ட்ரோடு ரிச்சி தெருவில் வாங்கிய வெப்கேம் காணாமல் போயிருந்தது!

(இலக்கிய வேல் நவ 2015)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *