தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,652 
 

ஓரு சிறிய நகரத்தில், பாலன் என்னும் சிறுவன் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான். அவனது அப்பா, அவனுடைய சிறிய வயதிலேயே காலமாகிவிட்டார்.

பாலனோ உடல் ஊனமுற்றவன்.

ஊனம்அவனுக்கு, அம்மா லட்சுமியை மிகவும் பிடிக்கும். அவனுக்கு வயது 13 ஆனபோது வெளியூர் சென்று பணம் சம்பாதிக்க விரும்பினான்.

ஆனால் அம்மாவை எப்படி விட்டுவிட்டுச் செல்வது என்று மிகவும் யோசித்தான்.

பிறகு போக மனமில்லாமல் அந்த நகரத்திலேயே இருந்துவிட்டான்.

அவனுக்கு ஒரே ஒரு நண்பன் இருந்தான். அவனுடைய பெயர் மதன். இருந்தாலும் பாலன் பெரும்பாலான நேரத்தைத் தனிமையிலேயே கழித்தான்.

ஒருநாள் காலையில் மதனின் தங்கை பானு, பாலனைப் பார்த்து, “வேலைக்குப் போகத் தெரியாத ஜடம்’ என்று கேலி செய்தாள்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த மதன், “அவனுடைய கால் ஊனமாக இருந்தாலும் அவனது மனமும் நட்பும் ஊனமில்லை.. இதெல்லாம் உனக்கு எங்கே புரியப் போகிறது?’ என்று தங்கையைக் கடிந்து கொண்டான்.

மறுநாள் காலை, பாலன் அந்த நகரத்திலிருந்த பேருந்து நிலையத்துக்குச் சென்றான்.

அங்கே பலவித கார்கள் நிற்பதைக் கண்டான். அவற்றைப் பார்த்தவுடன் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

வீட்டுக்குச் சென்று, ஒரு அட்டையை எடுத்து அதில் “இங்கே வண்டிகளைச் சுத்தம் செய்து தரப்படும்’ என்று எழுதினான். அந்த அட்டையை எடுத்துக் கொண்டு வந்து பேருந்து நிலையத்திலிருந்த ஒரு கம்பத்தில் தொங்கவிட்டான்.

சிலர் வண்டிகளை அந்தப் பக்கமாக நிறுத்திவிட்டுக் கடைகளுக்குச் சென்றனர்.

அவர்கள் திரும்பி வருவதற்குள் அந்த வண்டிகளை மதனின் உதவியோடு பாலன் நன்றாகத் துடைத்து சுத்தம் செய்து வைத்தான்.

வண்டிகளை நிறுத்திவிட்டுச் சென்றவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, தங்கள் வண்டிகள் சுத்தமாகத் துடைக்கப்பட்டு பளிச்சென்று நிற்பதைப் பார்த்து வியந்து போனார்கள்.

அங்கு நின்று கொண்டிருந்த மதனைப் பார்த்து, “தம்பி, இந்த வண்டிகளை யார் துடைத்து வைத்தது?’ என்று கேட்டனர்.

அதற்கு மதன், “என் நண்பன் பாலன்தான் உங்களது வண்டிகளைக் கஷ்டப்பட்டு துடைத்து வைத்தான்…’ என்றான்.

அதைக் கேட்ட அந்த மனிதர்கள் பாலனைப் பார்த்து, “தம்பி உன் கால் ஊனமாக இருந்தாலும் உன் மனதும் உன் நல்ல நட்பும் ஊனமில்லை…’ என்று கூறியபடியே, அவர்களுக்கு ஆளுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்தார்கள்.

இதைப் போல தொடர்ந்து செய்யவே பாலனுக்குத் தேவையான பணம் கிடைக்க ஆரம்பித்தது. தனது தாயை இனிமேல் கஷ்டப்படாமல் காப்பாற்றலாம் என்று நினைத்துக் கொண்டான்.

மேலும், தனக்கு இந்தச் செயலில் உதவி புரிந்த மதனை மனம் நிறையப் பாராட்டி மகிழ்ந்தான்.

நமக்கு எது ஊனமாக இருந்தாலும் நம் மனமும் நட்பும் கண்டிப்பாக நல்லதாகத்தான் இருக்க வேண்டும் என்று பாலன் எண்ணிக் கொண்டான்.

– பி.பாலமுருகன் (ஏப்ரல் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *