காய்க்காத பூக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 6,331 
 
 

அறிமுகம்:

ராஜேஷ் ரேவதி தம்பதிகள் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். ராஜேஷ் டெக்ஸ்டைல் பிஸினஸ் செய்து வருகிறார். இவரது குடும்பம் தென் தமிழகத்தின் உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர்கள். ராஜேஷின் தந்தை மாணிக்கம் அந்த கிராமத்திலேயே பெரும் பணக்காரர். அவர் சொல்வது தான் அங்கு சட்டம். சாதி வெறியில் ஊறிப் போனவர். அவரது மனைவி மீனாட்சி. மீனாட்சியும் மாணிக்கத்திற்கு சளைத்தவர் இல்லை. மிகவும் பிற்போக்கான இந்த குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் ராஜேஷ் சக மனிதர்களை மதிக்கும் பண்புடையவராகவே இருந்தார். அவரது மனைவி ரேவதி தமிழ் இலக்கியம் படித்தவர். ஆனால் ராஜேஷின் பெற்றோரை போல ரேவதியின் பெற்றோரான கந்தன் மணிமேகலை பிற்போக்கு சிந்தனை உடையவர்கள் அல்ல. மிகவும் பண்பானவர்கள். ராஜேஷ் குடும்பத்தை போல ரேவதியின் குடும்பமும் வசதியான குடும்பம் தான். ராஜேஷ் ரேவதி இருவரும் திருமணத்திற்கு முன் அறிமுகமே இல்லாதவர்கள் தான். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்து கொண்டவர்கள் தான். ஆனாலும் அன்பும் காதலும் நிறைந்த சந்தோஷமான தம்பதிகளாகவே வாழ்ந்து வந்தனர். திருமணமாகி ஓராண்டிற்கு ராஜேஷ் ரேவதி தம்பதிகள் மாணிக்கம் மீனாட்சியுடன் அவர்களின் சொந்த கிராமத்து வீட்டில் தான் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். மாணிக்கமும் மீனாட்சியும் ரேவதியை அன்போடு நடத்தவில்லை. அவர்களை பொறுத்தவரை மருமகள் சுய விருப்பு வெறுப்புகளை காட்டாமல் வீட்டு பெரியவர்களுக்கு அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டியவள் அவ்வளவு தான். ஆனால் நாளாக நாளாக அவர்களின் கொடுமை அளவு கூடியது. காரணம் ரேவதி இன்னும் குடும்பத்திற்கு ஒரு வாரிசை பெற்று தரவில்லை என்பதே. பெற்றோரை சமாளிக்க மனைவியுடன் சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார் ராஜேஷ். பரிசோதனை முடிவுகள் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது. ராஜேஷ் குழந்தை பெற்றுக் கொள்ள தகுதி உள்ளவர் என்றும் ரேவதி கற்பம் தரிக்க வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்றும் மருத்துவ அறிக்கை கூறுகிறது. விஷயம் தெரிந்ததும் மாணிக்கம் ராஜேஷை இரண்டாம் திருமணத்திற்கு நிர்பந்தித்தார். ஆனால் ராஜேஷ் மனைவி ரேவதி மீது உள்ள அளவு கடந்த காதலால் தன் பெற்றோரை பகைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சேலத்தில் குடியேறினார். காரணம் சேலத்தில் அவருடைய உறவினர்கள் பாலகிருஷ்ணன் உமா மகேஸ்வரி தம்பதியர், பள்ளி தோழன் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி மற்றும் கல்லூரி நண்பன் சுரேஷ் ஆகியோர் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே பகுதியில் வசித்து வந்ததால் ராஜேஷும் அதே பகுதியில் வீடு வாங்கி மனைவி ரேவதியுடன் குடியேறி விட்டார். ஆனாலும் மீனாட்சியம்மா ரேவதியை நிம்மதியாக விடவில்லை. அடிக்கடி ரேவதிக்கு ஃபோன் செய்து வசை பாடி அவளை அதீத மன உளைச்சலிலேயே வைத்து இருந்தார். இப்படியே இரண்டு ஆண்டுகள் ஓடின.

அத்தியாயம் 1

ரேவதி ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம் என முடிவு செய்தாள். மார்ச் 18 திங்கட்கிழமை ராஜேஷ் ரேவதி தம்பதிகளின் மூன்றாம் ஆண்டு திருமண நாள். அன்று ராஜேஷிடம் தன் முடிவை கூறலாம் என காத்திருந்தாள். அந்த நாளும் வந்தது. அவனுக்கு பிடித்த உணவுகளை சமைத்து வைத்து அவன் வருகைக்காக காத்திருந்தாள். ஆனால் ராஜேஷோ வந்தும் வராததுமாக வியாபார வேலையாக பெங்களூர் வரை செல்ல வேண்டும் எனக் கூறினான். நேரமின்மையால் அவசர கதியில் தயாராகி கொண்டிருந்தான். அவன் அவர்களின் திருமண நாளை மறந்து விட்டான் என்பதையே அவனது நடவடிக்கைகள் காட்டியது. கடந்த 3 மாதங்களாக தான் அவ்வபோது இப்படித்தான் நடந்து கொள்கிறான். ஆரம்பத்தில் வேலை பளு காரணமாக இருக்கலாம் என ரேவதி நினைத்து கொண்டு இருந்தாள். ஆனால் மெல்ல மெல்ல அவள் நம்பிக்கை கறையத் தொடங்கியது. தனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை எனத் தெரிந்தும் தன் மீது அன்பு குறையாமல் இருக்கும் கணவனிடம் சந்தேக கேள்விகளை கேட்கவோ அவனை கண்காணிக்கவோ ரேவதிக்கு மனம் வரவில்லை. ஒருவேளை குழந்தை ஏக்கம் கூட தன் கணவனை ஆட்கொண்டு இருக்கலாம் என நினைத்தாள். அதனால் தான் குழந்தையை தத்தெடுக்க முடிவெடுத்து இருந்தாள். ராஜேஷ் 5 மணிக்கு வீட்டில் இருந்து காரில் கிளம்பினான்.

ஒரு மணிநேரம் கழித்து பக்கத்து வீட்டு ஜானகி அக்கா ரேவதியை தேடி வந்தாள். அடுத்த நாள் அவள் குழந்தைக்கு பேர் சூட்டும் விழா இருப்பதை ஞாபகப்படுத்த வந்தாள். ரேவதியும் இன்று வேலை அதிகமாக இருந்ததால் களைப்பாக இருப்பதாகவும் நாளை விழாவிற்கு கண்டிப்பாக வருவதாகவும் கூறி அனுப்பினாள்.

8 மணிக்கு தன் கணவனுக்கு ஃபோன் செய்தாள் ரேவதி. இருவரின் தொலைபேசி உரையாடல்

“சொல்லு ரே (ரேவதி). காலைல தான் பேசுவன்னு நெனைச்சேன். அதுக்குள்ள ஃபோன் பண்ணிட்ட”

“சாப்பிட்டுட்டு இருக்கீங்களா?”

“ஸ்பை எதுவும் வெச்சு இருக்கயா. கரைக்ட்டா சொல்ற”

“உங்களுக்கு எப்ப பசிக்கும்னு எனக்கு தெரியும். இதுக்கு ஸ்பை எல்லாம் தேவை இல்ல”

“சரி சரி கோவப்படாத. இத விசாரிக்க தான் ஃபோன் பண்ணுனியா”

“இல்ல. நான் வேற ஒரு விஷயம் சொல்லணும்”

“என்ன விஷயம்?”

“நான் அந்த விஷயத்த சொன்னா நீங்க ரொம்பவே சந்தோஷப் படுவீங்க. என்னை கட்டி பிடிச்சுப்பீங்க. ஆனா எனக்கு பேச சான்ஸே தராம பரபரப்பா ஊருக்கு கிளம்பிட்டீங்க”

“சஸ்பென்ஸ் வைக்காத ரே. என்ன விஷயம்னு சீக்கிரம் சொல்லு”

“நம்ம ஒரு குழந்தை…”

“குழந்தைக்கு அப்பா அம்மா ஆகப் போறாமா. நீ கற்பமா இருக்கியா”

ரேவதி நொறுங்கிப் போனாள். ராஜேஷ் மேற்கொண்டு அவளை பேசவே விடவில்லை.

“நான் சந்தோஷத்தோட உச்சத்துல இருக்கேன் ரே. எத்தனை நாள் காத்திருப்பு. இந்த மாதிரி நேரத்துல நீ வீட்டுல தனியா இருக்க கூடாது. நான் அம்மா அப்பாவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்த சொல்லி உன் கூட வந்து இருக்க சொல்றேன். ஓகே”னு சொல்லிட்டு ஃபோனை கட் செய்து விட்டான். தன் கணவன் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதை விட தன்னுடைய இரத்த வாரிசிற்காக தான் ஏங்குகிறான் என்பதை ரேவதி உணர்ந்து கொண்டாள். நீண்ட நாட்களாக அவனிடம் இல்லாமல் இருந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் இன்று அவன் பேச்சில் தெரிகிறது. அதை அவளால் தடுக்க முடியவில்லை.

சிறிது நேரத்தில் ரேவதியின் மாமியார் மீனாட்சி ஃபோன் செய்கிறார். எப்போதும் போல இல்லாமல் மிகவும் அன்பாக பேசினார். இருவரின் தொலைபேசி உரையாடல்

“ரேவதி அத்தை பேசுறேன்”

“சொல்லுங்க அத்தை. நல்லா இருக்கீங்களா”

“எங்க நலத்துக்கு என்ன. அப்புறம் ராஜேஷ் ஃபோன் பண்ணி விஷயத்த சொன்னான். உன் மாமாவுக்கு இப்பவே சந்தோஷத்துல தலை கால் புரியல. அப்புறம் மருமகளே இந்த ஒரு இராத்திரி பத்திரமா இருந்துக்க. காலையில அத்தை வந்துடுவேன். அதுக்குள்ள வீட்டு வேலை எதுவும் இழுத்து போட்டுட்டு செய்யாத. குடும்ப வாரிச சுமக்குற உன்னை பூ போல பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு. சரியாடி தங்கம். ஃபோன வெச்சிடுறேன்”

ரேவதி ஒரு முடிவுக்கு வந்தவளாய் எழுந்தாள். வீட்டு கதவை பூட்டிவிட்டு படுக்கை அறைக்கு சென்றாள்.

மார்ச் 19 செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு மீனாட்சியம்மா தன் மகன் வீட்டிற்கு வந்து காலிங் பெல் அடித்தார். கதவு திறக்கப்படவில்லை. பத்து நிமிடங்கள் முயற்சி செய்தும் ரேவதி கதவை திறக்கவே இல்லை. கதவை பலமாக தட்டியபடி “ரேவதி கதவ திறமா. அத்தை வந்துருக்கேன்” என மீனாட்சியம்மா சத்தமா கூப்பிட ஆரம்பித்தார். அப்போது எதிர்வீட்டுகாரர் கதிரவன் வந்து “எதுக்காக கதவ இப்படி பலமா தட்டிட்டு இருக்கீங்க? எதாவது பிரச்சினையா?” என கேட்கிறார். “நீங்க யாருங்க?” என மீனாட்சி கேட்க “நான் இந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷன் ஹெட் கான்ஸ்டபிள். பேரு கதிரவன். எதிர்த்த வீடு தான் என்னோட வீடு” என கதிரவன் கூறுகிறார். “சார் நான் ரேவதியோட மாமியார். ஊர்ல இருந்து வந்து இருக்கேன்” என மீனாட்சி கூறுகிறார். “நீங்க ஊர்ல இருந்து வர்ற விஷயம் ரேவதிக்கு தெரியுமா” என கதிரவன் கேட்கிறார். “தெரியும் சார். நேத்து ராத்திரி எட்டு எட்டே கால் மணி இருக்கும். ஃபோன் பண்ணி பேசினேன். கர்ப்பமா இருக்குற அவள பார்த்துக்க தான் நான் வந்தேன்” என மீனாட்சி சொல்கிறார். “ரேவதி இவ்ளோ நேரம் தூங்க மாட்டாங்களே” என கதிரவன் தாடையை தடவ “எனக்கும் அதே பயம் தான் சார்” என மீனாட்சி கூறுகிறார். வேறு வழியின்றி கதிரவனும் மீனாட்சியம்மா கார் ட்ரைவரும் சேர்ந்து கதவை உடைக்கிறார்கள். மூவரும் வீட்டினுள் சென்று ரேவதியை தேடுகிறார்கள். அங்கே படுக்கையறையில் மெத்தை மீது ரேவதி பிணமாக கிடக்கிறாள்…

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *