கடைசிப் பிறவி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 27, 2023
பார்வையிட்டோர்: 9,664 
 
 

அந்திவானச் சிவப்பில் சூரியனின் வடிவம் நெருப்புப் பந்து போல தகித்துக் கொண்டிருந்தது. பறவைகள் எல்லாம் தங்கள் கூடுதேடிப் பறந்து கொண்டிருக்க தமிழ்நதி மட்டும் நிம்மதியின்றித் தவித்துக்கொண்டிருந்தாள். தனது கணவன் மலரன்பன் கட்டிலில் படுத்துக்கிடக்க மெலிந்துபோன அவனது உருவத்தைப் பார்த்தபோது கண்களிலிருந்து தன்னையும் அறியாமல் பீறிட்ட கண்ணீரை அடக்க வெகுபிரயத்தனம் செய்யவேண்டியிருந்தது.

தமிழ்நதி திருமணத்தின்போதே இருபத்தாறு வயதை எட்டிவிட்டாள். திருமணத்திற்கே ஏகப்பட்ட தடைகள் ஏற்பட்டு, கடைசியில் ஒருவழியாக மலரன்பனைக் கரம்பிடித்தாள். மலரன்பன் பெயருக்கேற்ப மென்மையானவன். நல்ல பண்புகளை உடையவன். கெட்ட வழக்கவழக்கங்கள் இல்லாதவன். அன்பில் தமிழ்நதியை வீழ்த்தியவன்.

திருமணமான சிறிது நாள்களிலேயே சோர்வுடன் காணப்பட்ட அவன் எதிலுமே பற்றின்றி காணப்பட்டான். சரியான உணவு உண்ணாமல் வயிற்றுவலியுடன் துடித்தவனுக்கு நோய் சரியாக அவளது மாமியார் பக்கத்தில் உள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று மந்திரிக்கச் சொன்னாள். தமிழ்நதிக்கு இறைப்பற்று உண்டே தவிர இந்த மாதிரி மூடநம்பிக்கைகளில் நம்பிக்கையில்லாவிட்டாலும் பெரியவர்கள் பேச்சைத் தட்டமுடியாது என்பதால் மலரன்பனைக் கோவிலுக்குக் கூட்டிச் சென்றாள். மந்திரித்த மறுநாள் நன்றாக இருந்த மலரன்பன், அடுத்த நாள் சுணங்கிப் போனான்.

அடுத்த வாரம் மாமியார் மலரன்பனுக்குச் சொந்தக்காரர்கள் செய்வினை வைத்துவிட்டார்கள் என ஜோசியர் சொன்னதாகச் சொல்லி வயிற்றுவலிக்குத் தொக்கம் எடுத்துவா என்று அனுப்பினார். தொக்கம் எடுக்கச் சென்றவிடத்தில் அவன் வாயிலிருந்து மருந்து உருண்டையாக வெளிவர, தமிழ்நதி மாமியார் சொன்னதுதான் உண்மையாக இருக்குமோ என்று நம்பலானாள். தொடர்ந்து வந்த நாள்களில் மலரன்பன் சரியாகச் சாப்பிடமுடியாமல் திண்டாடினான். வயிற்றுவலியும் சோர்வும் மிகுந்திருந்தது.

கொஞ்சநாள்களில் தமிழ்நதி கர்ப்பமானாள். மாதமாதம் சரியாகக் காண்பித்தும் குழந்தை உண்டாகி 3 மாதங்களில் குழந்தைக்கு இதயத்துடிப்புக் குறைவாக இருந்த காரணத்தால் அபார்ஷன் ஆனது. முதல் குழந்தை என்ற காரணத்தால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த தம்பதியர் இருவரும் சோர்ந்துபோனார்கள். இதற்கும் அவளது மாமியார் தமிழ்நதி சரியாக மருத்துவமனையில் செக்கப் செய்யாத காரணத்தால்தான் குழந்தை இறந்துவிட்டது எனப் பழி சொன்னாள்.

தமிழ்நதிக்கு மாமியாரின் பேச்சு கோபத்தை ஏற்படுத்தவே,

“வீட்டில் அடுப்பு எரியாவிட்டாலும் நான்தான் காரணமா? ஆண்கள் எதற்குமே காரணம் ஆகமாட்டீர்களா? தொட்டதற்கெல்லாம் பெண்ணைத்தான் இந்தச் சமுதாயம் குறை சொல்லுமா?” என்று கேட்டாள் தனது கணவனிடம்.

“சரி விடு. அவர்கள் குணம் அப்படித்தான். என்றைக்காவது ஒரு நாள் நம்மைப் புரிந்துகொள்வார்கள்” என்றான்.

வீட்டின் புழக்கடையில் உள்ள புங்கமர நிழலில் அமர்ந்து அங்கிருக்கும் செடிகொடிகளையும் பறவைகளின் சத்தங்களையும் கேட்டுக்கொண்டு அமைதியாக இருப்பதன் மூலமே பிரச்சினைகளின் வீரியத்தை அவ்வப்போது குறைத்துக்கொள்வாள். அது அவளுக்கான கொஞ்ச நேர ஆசுவாசம் மட்டுமே. மீண்டும் புதுப்பொலிவோடு வீட்டுக்குள் நுழைபவளுக்குப் பிரச்சினைகள் துரத்திப் பிடிக்கும்.

திருமணமாகி ஒன்றரை வருடத்தில் புதுமணத் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருந்த நாட்களை விட நிம்மதியிழந்து தவித்த நாட்கள்தான் மிகுதியாகவிருந்தது. தமிழ்நதிக்குத் திருமணம் செய்யாமலே இருந்திருக்கலாமோ இது என்னடா வாழ்க்கை என்று எண்ணத்தோன்றும். தான் பிறந்த வீட்டிலும் நாம்தான் உழைத்துப் போட்டுப் பார்க்கவேண்டியிருந்தது. புகுந்த வீட்டிலும் கணவனின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவளே வேலை பார்த்துக் கணவனைக் கவனித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

மாமியாரின் பேச்சைக் கேட்டு கணவனைச் சரிசெய்ய நினைத்தவள், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து தனது கணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். மருத்துவமனையில் டாக்டர் செக்கப் செய்து கல்லீரலில் ஏதோ பிரச்சினையிருப்பதாகக் கூறி பயாப்சி செய்ய எழுதிக் கொடுத்தாள். பணப்பிரச்சினையினால் ஜிஹெச்சில் பயாப்சி எடுத்துப் பார்த்ததில் கல்லீரலில் மலரன்பனுக்குக் கேன்சர் வந்திருப்பதாகச் சொன்ன தகவலில் நொறுங்கிப் போனாள் தமிழ்நதி.

அவளுக்கு ஆறுதல் கூறி தாங்கவேண்டிய புகுந்தகம் அவள் கணவன் சரியான வேலையில் இல்லாததால் புறக்கணித்தது. மேலும் தமிழ்நதியின் ஜாதகம் சரியில்லாத காரணத்தால்தான் மலரன்பன் உயிருக்கு ஆபத்து வந்துவிட்டது என்றாள் நாத்தனார் ஜெயா. ஆனால் உண்மையில் திருமணத்திற்கு முன்பே மலரன்பனுக்குக் கல்லீரல் பிரச்சினை தொடங்கிவிட்டது. அவனது தாயின் மூடநம்பிக்கையாலும் சரியாக வைத்தியம் பார்க்காமலிருந்த காரணத்தாலும் நோய் தீவிரமானது. இதில் அகப்பட்டதென்னவோ தமிழ்நதியின் வாழ்வுதான். மலரன்பனுக்கு ஏற்பட்ட துன்பத்தின் வேதனை ஒருபுறம் என்றால் சொந்தபந்தங்களின் அவச்சொல் மறுபுறம் என எல்லாம் சேர்ந்து தமிழ்நதியின் மனதை உலுக்கின. ஜிஹெச்சிலேயே சிகிச்சையை ஆரம்பித்தவள் கணவனின் உயிருக்காகப் போராடினாள்.

இயல்பிலேயே முரட்டுத்தனமான சுபாவம் கொண்ட தமிழ்நதி, எளிதில் உடைந்து விடும் மனமுடையவள். வெளியில் தன்னைத் தைரியம் உடையவளாகக் காட்டிக் கொள்வாள். எட்டாக்கனியாக இருந்த திருமணம் நடந்தும் வாழ்க்கை எட்டிக்காயாகக் கசந்துபோனது. இப்பொழுதெல்லாம் மருத்துவமனையின் பினாயில் வாசம் வந்தாலே மனது வலிக்கத் தொடங்குகிறது.

தமிழ்நதிக்கு தன்னையும் அறியாமல் மனது திருமணத்திற்கு முந்தைய நினைவுகளில் மூழ்கிப்போனது. ஜோசியர் மணிகண்டன் சொன்னசொல் காதுகளில் ரீங்காரமிட்டது.

“இதுதான் உனக்குக் கடைசிப் பிறப்பு. நீ திருமணம் ஆனாலும் உன் புகுந்தகத்தையும் நீதான் தாங்கணும். மாங்கல்ய பலம் பெருகணும்னா கும்பகோணம் பக்கத்தில் உள்ள கோவிலுக்குப் போய்ட்டு வாங்க ” என்றார்.

தனக்கு மாங்கல்ய பாக்யம் தங்காதோ என்ற பயம் அப்பொழுதே ஆரம்பித்து விட்டது. ரெண்டு மூன்று இடங்களில் பார்த்தும் எல்லோரும் பூடகமாக இதையே சொல்ல தமிழ்நதியின் அம்மா அழலானாள். தனக்குத்தான் கணவன் சரியில்லை என்றால் தன் மகளுக்கும் இப்படி ஒரு கஷ்டமா என்று நொந்து போனாள். இறுதியில் ஜோசியர் சொன்ன பரிகாரங்களைச் செய்து திருமணம் முடித்துவைத்தாள்.

இப்பொழுதெல்லாம் தமிழ்நதிக்கு அந்த ஜோசியர் சொன்னது உண்மைதானோ தான் ஏன் இவ்வளவு துன்பப்படுகிறோம்? தனக்கு இதுதான் கடைசிப்பிறப்போ, நோயிலிருந்து இவரை மீட்டெடுத்து விட முடியுமா? எனப் பலவாறு சிந்தனைகள் ஓடலாயின. திருமணத்திற்கு முன்பே அவருக்கு நோய் இருந்திருக்கிறது. இதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்? என எண்ணவோட்டங்கள் மனதிற்குள் கும்மாளமிட்டன.

தன்னை மனதளவில் தேற்றியவள் எது நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொண்டாள். கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் உருண்டோடின. ஒரு காலகட்டத்திற்கு மேல் மருத்துவமனையில் நோயாளிகள் முனகும் சத்தம் அவளுக்குப் பழக்கமாகிவிட்டது. முன்னெல்லாம் மலரன்பனைப் பார்த்தாலே கண்களில் எட்டிப்பார்க்கும் கண்ணீர் இப்பொழுது வருவதில்லை. உதட்டில் புன்னகையை அணிந்து வலம்வரத் தொடங்குகிறாள்.

கிட்டத்தட்ட ஓராண்டுகள் கடந்த நிலையில் மலரன்பன் மெல்ல மெல்ல குணமடைந்து பழைய வாழ்க்கைக்குத் திரும்பினான். தமிழ்நதியும் மலரன்பனும் மகிழ்ச்சியாகத் தங்கள் வாழ்க்கையை, இளமையை மீட்டெடுக்கத் தொடங்கினர். இருந்தாலும் மலரன்பன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது ஆதரவு கொடுக்காத புகுந்தவீட்டினரின் பண்புகள் மலரன்பனுக்கும் தமிழ்நதிக்கும் உறுத்தலைத்தர வீட்டைவிட்டுத் தனிக்குடித்தனம் செல்ல முடிவு செய்தனர்.

தனது கணவருடன் தனிக்குடித்தனம் சென்றவள் அவன் உடல்வலிமைபெற ஏற்ற உணவுகளோடு அன்பையும் கலந்து கொடுத்தாள். மலரன்பன் புத்துணர்ச்சியோடு புதுவேலையிலும் அமர்ந்தான். இவர்களை வெறுத்த மாமியாரும் தமிழ்நதியிடம் வந்து ஒட்டிக்கொண்டாள். முல்லைமலர்ப் பற்கள் புன்னகையோடு முகிழ்க்க தமிழ்நதி ஒரு நாள் நல்லசேதி சொன்னாள். மலரன்பன் முகத்திலும் மலர்ந்து அரும்பியது நகைப்பு. குழந்தைக் கனியைப் பெறப்போகும் நிம்மதியில் இருவரும் மகிழ்ந்தனர்.

– உலக முத்தமிழ் மாநாடு சமீபத்தில் இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெற்றது. அம்மாநாட்டு மலரில் இடம்பெற்றது கடைசிப்பிறவி சிறுகதை.

Print Friendly, PDF & Email

1 thought on “கடைசிப் பிறவி

  1. அருமை ஐயா. கடைசிப் பிறவி கதை அருமை தமிழ் நதி மலரன்பன் அருமையான தமிழ்ப் பெயர்கள்..
    இதுதான் முதல் முறையாக கதைகள் இணையத்தில் படிக்கிறேன்.
    மாற்றுச் சாவி அதுவும் அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *