ஒரு நட்பின் ஆன்மா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2023
பார்வையிட்டோர்: 1,398 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று அலுவலகத்தில் எனக்கு ஏகப்பட்ட வேலை. காலையில் எட்டு மணிக்கே வந்துவிட்டேன். கம்பெனி சம்பந்தமாக, அரசாங்கம் அனுப்பிய தாக்கீது ஒன்றுக்கு விளக்கம் கொடுக்கும் ட்ராஃப்டைத் தயாரிக்க வேண்டும். தனிப்பட்ட நலனுக்காக, சில விளம்பரங்களுக்கு அளவுக்கு மீறிப் பணம் கொடுத்ததாக, சில பங்குதாரர்கள் ‘ஜெனரல் பாடி கூட்டத்தில் கேட்கப்போகும் கேள்விகளை நானே கற்பனை செய்து, நானே பதில் தயாரிக்க வேண்டும் என்று எம். டி. சொல்லிவிட்டார்.

போதாக் குறைக்கு, ஆடிட்காரர்கள், கண்ட கண்ட ரிஜிஸ்டர்களை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். கம்பெனி சம்பந்தப்பட்ட முடிவுகளை மேற்கொள்ளும்போது என்னைக் கலந்தாலோசிக்காத எம். டி. இப்போது நான் சம்பந்தப்படாத விவகாரங்களுக்கு பதில் வரையும்படி சொன்னது, எனக்கு எரிச்சலைக் கொடுத்தது. அதை அவரிடம் காட்ட முடியாமல், மத்தியானம் என்ன குழம்பு வைக்கவேண்டும்?” என்று டெலிபோன் செய்த மனைவியிடம் ‘மண்ணாங்கட்டியையும் மருதாணி இலையையும் வை’ என்று கோபமாகப் பேசி, வேகமாக டெலிபோனை வைத்தேன்.

இந்தச் சூழ்நிலையில், பியூன் என் மேஜையில் வைத்துவிட்டுப் போயிருந்த விசிட்டிங் கார்டை நான் பார்க்கவில்லை. பியூன் வந்து, ‘நீங்க பார்க்க முடியுமா, முடியாதா? என்று கேட்டுட்டு வரச் சொன்னார்’ என்று சொல்லி, கார்டைத் தூக்கிப்பிடித்துக்

காண்பித்தபோதுதான் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. மோகன்

– என் பால்ய நண்பன், என்னைப் பார்க்க வந்திருக்கிறான். நான் நாற்காலியில் இருந்து எழுந்த அவசரத்தைப் பார்த்துப் புரிந்துகொண்ட பியூன், வெளியே போய் மோகனைக் கூட்டிக்கொண்டு வந்தான். வந்தவனை நான் அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டேன்.

“வாடா மோகன்… அதிக நேரம் காத்து இருந்தியா?”

“ஏண்டா… பெர்ஸனல் மானேஜரானதும் கண்ணு தெரியலியோ? நீ… டில்லிக்கு ராஜாவானாலும் எனக்குச் சந்திரன் தாண்டா? உம்… மறந்துட்ட… “

“மறக்கலடா…”

“அப்போ… மறக்காமத்தான் காக்க வச்சியோ?”

“நோ. நோ… நான் நீ அனுப்பின கார்டை சத்தியமாய்ப் பாக்கல…’

‘ரொம்ப பிலியோ?”

“நாய்க்கு வேலையுமில்ல. உட்கார்ந்திருக்க நேரமுமில்லன்னு பழமொழி சொல்லுவாங்கள்ள அந்தக் கதை தான் நம்ம கதையும். என்னடா சாப்பிடுற…”

“எது கிடைச்சாலும்.”

நான், மோகனையே பார்த்துக் கொண்டிருந்தேன். கல்லூரியில் நான் வறுமையில் வாடிக் கொண்டிருந்தபோது, எனக்குத் தேவையான போதெல்லாம் உதவி செய்தவன் இவன். படிப்பு முடிந்ததும் வேலைக்கு மனுப் போட வேண்டுமென்றால், அப்ளிகேஷன் பாரங்களை மட்டுமில்லாமல், தேவையான ‘போஸ்டல்’ ஆர்டர்களையும் வாங்கி வருபவன் இவன்.

ஒரு தடவை, கிளார்க் வேலைக்குரிய விண்ணப்பம் ஒன்றை நான் பூர்த்தி செய்து கொண்டிருந்தபோது ‘மடையா’ இந்த வேலை என்னை மாதிரி கஜினிமுகம்மதுகளுக்காக இருக்கு. அறுநூறு ரூபாய்க்குக் குறைந்த வேலைக்கு மனு ப் போட்டால், தொலைச்சிப்பிடுவேன்’ என்று செல்லமாக அதட்டி, அந்த விண்ணப்பத்தைக் கிழித்துப் போட்டவன் இவன்.

பள்ளிக்கூடக் காலத்தில் இருந்தே நாங்கள் உயிர் நண்பர்கள். பி. யூ. ஸி.யை பல தடவை சந்தித்த அவன், இறுதியாக அரசாங்க இலாகா ஒன்றில் கிளார்க்காகச் சேர்ந்தான். நானும் அவனுடன் தங்கிக்கொண்டே படித்தேன். சம்பளத்தில் கால்வாசியை எனக்குச் செலவிட்டு விடுவான். அவனுக்குத் திருமணமானதும், நான் பழையபடி ஹாஸ்டலுக்குப் போக முயற்சித்தேன். அவன் விடவில்லை. அவன் மனைவியும் என்னைச் சொந்த சகோதரனாக நினைத்தாள். அவர்கள் செய்திருக்கும் உதவியை ரூபாய்க் கணக்கில் பார்த்தால், இப்போது நான் வாங்கும் சம்பளத்திற்கு, சாதாரணம். ஆனால் மதிப்பு…? என்னால் ஈடுகட்ட முடியாது.

ஒரு நாள் –

வழக்கமாக என்னை அதட்டிக் கூப்பிடும் மோகன், ‘சந்திரா’ என்று என் பெயருக்குரிய கோளத்தின் குளிர்ச்சியுடன் கூப்பிட்டான். அவன் மனைவி, வழக்கத்திற்கு மாறாக, கதவுக்குப் பின்னால் நின்றுகொண்டு, தலையை மட்டும் காண்பித்துக் கொண்டிருந்தாள். மோகன், எடுத்த எடுப்பிலேயே கேட்டுவிட்டான்.

“ஏண்டா… என் மச்சினி இந்திராவைப் பற்றி என்னடா நினைக்கிறே…”

“அவளுக்கென்னடா… ஆயிரத்தில் ஒருத்தி…”

“நீயும் ஆயிரத்தில் ஒருவனா ஆகிறாயா?” “என்னடா சொல்ற?” “குழந்தைக்கு இதுக்கு மேல் சொல்லணுமாக்கும். அவளை உனக்குக் கொடுக் கலாமுன்னு தீர்மாணிச்சிட்டோம்…”

நான் விச் துப் போனேன். இதற்குள் அவன் மனைவி, புன்னசை ஆக்க வெளியே வந்துவிட்டாள். எனக்கு என்ன சொல்வதெ6 றே தெரியவில்லை. கூடப் பிறக்காத சகோதரர்களாக இருக்கும் எங்கள் உறவை நிலைநிறுத்தத்தான் அவன் இந்தத் தீர்மானத்தைச் சொல்கிறான் என்பது புரிந்தது. சொல்லப் போனால், ‘மைத்துணிக்கு மாப்பிள்ளை பார்க்கிறான் என்பதைவிட, எனக்குப் பெண் பார்க்கிறான் என்பதே பொருந்தும். எனக்கு அவனது அந்தரங்க சுத்தி புரிந்தது.

ஆனால் என் மாமா மகள் எனக்கு எழுதிய காதல் கடிதங்களில் சிலவற்றை அவனே பலவந்தமாகப் பிடுங்கிப் படித்திருக்கிறான். ஒரு கடிதத்தில், ‘அத்தான், உங்கள் நண்பர் மோகன் செய்யும் உதவிகளைப் பற்றி எழுதியிருந்தீர்கள். கல்லூரியில் முதலாவதாக வந்த உங்களை, எப்படியாவது ஒரு நல்ல பதவியில் வைப்பதற்கு அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சியைப் பற்றி எழுதியிருந்தீர்கள். எனக்கு என்னமோ, அவர் மீது கோபந்தான் வருகிறது. உங்களை மேலே மேலே கொண்டு போய், எனக்கு எட்டாக்கனியாக ஆக்கி விடுவாரோ என்று பயமாயும் இருக்கிறது.எனக்கு நீங்கள் வேண்டும் என்றால் உங்களுக்கு

பெரிய வேலை கிடைக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்படுகிறது. இது அப்பட்டமான சுயநலம் என்பதை உணரும் போது, என்னை நானே வெறுக்கிறேன். ஆனால் ஒரு ஆறுதல், நீங்கள் ‘வழி தவறிப்’ போனாலும், உங்கள் நண்பரிடம் முறையிட்டு ‘நான் உங்களை அபகரித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தாள். இதைப் படித்ததும் மோகன் திக்கித் திணறினான். அவன் பேசும்போது அவன் குரல் தழுதழுத்தது.

‘ஒருவேளை அந்தப் பொண்ணு பயப்படறதுமாதிரி… நீ வழி தவறினால், மவனே ஒன் கையக் கால முறிச்சிப்புடுவேன்’ என்று நிஜமாகவே மிரட்டினான். ஆகையால் அவன் தன் மைத்துணியைக் கட்டிக் கொள்ளும்படி சொன்னதில் ஆச்சரியப்பட்டு, ஒரளவு கோபப்பட்டு பேசாமல் இருந்தேன். மீண்டும் அவன்தான் பேசினான்.

“என்னடா… பதில் சொல்லுடா!” “மௌனம் சம்மதத்துக்கு அடையாளந்தானே” என்றாள் அவன் மனைவி.

“நீ சும்மா இரு… பாப்பா சொல்லட்டும்.”

“ஏண்டா… நான் வழிதவறிப் போனால்… நீ கையைக் காலை முறிச்சாலும் முறிப்பியே.” மோகன் நான் சொல்வதைப் புரிந்துகொண்டவன்போல் திடுக்கிட்டான்.

“ஐயம் லாரி… சந்திரன்… நான் ரொம்ப சுயநலவாதியா மாறிட்டேன். பருந்து தன் குஞ்சுகளை குவிப்படுத்தறதுக்காக, கோழிக் குஞ்சுகளைப் பிடிக்கிறது மாதிரி… நான் உன்னை’ என்கிட்ட நிலைப்படுத்த… அந்தப் பொண்ணைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்திட்டேன்… ஐ யம் லாரி…

எல்லாம் இவளால்தான். தன் தங்கச்சியை உனக்குக் கொடுத்திடணுமுன்னு ஒத்தக் கால்ல நிக்கிறா…”

“இப்பக் கூடச் சொல்றேன் மோகன், நான் உனக்கு ஒருநாள் டயம் கொடுக்கிறேன். நீ கட்டுன்னு சொன்னால் கட்டிடறேன்.”

“டோண்ட் பி ஸில்லி. நீ மட்டும்… ஒன் மாமா பொண்ணு கழுத்துல தாலி கட்டல… இப்பவும் சொல்றேன்… கையைக் காலை உடைச்சிடுவேன்.” அவன் மனைவி அதற்கு மேல் நிற்கவில்லை. கைகள் ஒடிந்தது மாதிரி உள்ளே கட்டிலில் போய்ப் படுத்துக் கொண்டாள். அதற்குப் பிறகு, மோகனின் மனைவி போக்கில் பெரிய மாறுதல் ஏற்பட்டது. சாப்பாட்டுத் தட்டை ‘டங் என்று வைப்பாள். முனங்கிக் கொண்டே பரிமாறுவாள். கணவன் மீது காரணம் இல்லாமல் எரிந்து விழுவாள். என்னை, அவள் அன்னியமாக நடத்துவது அவனுக்குத் தெரிந்து, அவன் அவளோடு சண்டை போடக்கூடிய கட்டம் வந்து விட்டதை நான் புரிந்துகொண்டேன். இவ்வளவுக்கும் அடிப்படை அன்புதான் என்பதைப் புரிந்துகொண்டதால் என்னால் அவளை வெறுக்கவும் முடியவில்லை. அதே சமயம், முன்னை மாதிரி சகஜமாகப் பழகவும் முடியவில்லை.

தம்பதிக்குள் நான் விரிசலாக இருக்கக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு சென்னைக்கு மாற்றல் வந்தது. அதற்குப் பிறகு மாமன் மகளோடு கல்யாணம். மோகன் மட்டும் வந்திருந்தான். எங்கள் இருவருக்கும் இடையே ஒரு தடுப்பு விழுந்துவிட்டது, இருவருக்கும் புரிந்தது. ஒருவேளை, அவன், அன்பினால் விடுத்த உறவின் அழைப்பை ஏற்க முடியவில்லையே என்பதால் அவனை நேராகப் பார்க்கக் கூசிய என்னை, உதாசீனப்படுத்துவதாக நினைத்துக் கொண்டானோ என்னவோ!

நான்கைந்து ஆண்டுவரை போனதே தெரியவில்லை இரண்டு மூன்று கடிதங்கள் போட்டேன். இயல்பிலேயே சோம்பேறியான அவன், பதிலே போடவில்லை. ஒருவேளை மனைவிக்காரி என் கடிதங்களை அவனிடம் காட்டவில்லையோ என்னவோ!

அதற்குப் பிறகு இப்போதுதான் நான் மோகனைப் பார்க்கிறேன். அவன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். எங்களுக்குள் மெளனம் ஒரு மொழியாயிற்று. புன்னகை, கடந்த காலத்தின் பிரசுரமாயிற்று. இதற்குள், இரண்டு மூன்று தடவை மானேஜர் இண்டர்காமில் பேசிவிட்டார். மோகன் புரிந்து கொண்டான்.

“அப்புறம்… ஒரு விஷயம்டா… எனக்கு நெருங்கினவர் ஒருவரு… ஒரு வேலை போட்டுக்கொடு…”

“என்னடா… என் பையில் வேலை இருக்கிறது மாதிரி கேக்குற.”

“நீ யாருக்கும் சிபாரிசு செய்யறதில்லையா?”

“அதை ஏன் கேக்குற… வேண்டியவங்க சொல்றாங்களேன்னு… வேற கம்பெனியில இருக்கிற எக்ஸிகியூட்டிவ் ஃபிரண்ட்ஸ் கிட்டச் சொல்லி… நிறையப் பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்தேன். அப்புறந்தான் விவடியம் தெரிந்தது, என்கிட்ட யாரையாவது கூட்டிக்கிட்டு வருகிறவங்க ரேட் பேசிக்கிட்டு வந்திருக்காங்கன்னு. எனக்கு ஆயிரம் ரெண்டாயிரம் கொடுக்கணுமுன்னு. அப்பாவி இளைஞர்கள் கிட்ட வசூலிச்சிருக்காங்க… இந்தக் காலத்துல… யாரையும் நம்புறாப் போல இல்லடா.”

“ஏண்டா சுத்தி வளைச்சிப் பேசுற? எனக்கு ரொம்ப வேண்டியவரு ஒன்னால… வேலை கொடுக்க முடியுமா… முடியாதா?”

“டேய்… இன்னும் பிறத்தியாருக்கு உதவனுங்கற புத்தி உன்னை விட்டுப் போகலியா? எனக்கு உதவுனே… அதனால உனக்கு என்ன கிடைச்சுது?”

“டேய்…டிப்ளமஸ்ல்லாம் வேண்டாம்… எனக்கு அவரு ரொம்ப வேண்டியவரு. என்னையே நம்பிக்கிட்டு இருக்காரு.”

“வேலை கிடைக்கிற வரைக்கும் காலைப்பிடிப்பாங்க… அப்புறம் தலையைப் பிடிப்பாங்க… உனக்கு ஏன்?”

“உம்… உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. எனக்கு இன்னும் வேணும். எல்லாம் எனக்கு வாய்ச்சவளால. அறிவு கெட்ட மூதேவி… சந்திரன் மாறியிருப்பாண்டி, அவன்கிட்ட உதவிக்குப் போகக்கூடாதுன்னேன்… கேட்டாத்தானே.”

“தங்கச்சி சிபாரிசா… மடையா, முதல்லே இதைச் சொன்னால் என்ன? ”

“என் வீட்ல ஒரு போர்வஷினை புதுசா கல்யாணம் ஆன ஒரு ஜோடிக்கு விட்டேன். அவனுக்கு ஏதோ ஒரு கம்பெனில வேலை. மூணு மாசத்துக்கு முன்னால கம்பெனியை இழுத்து மூடிட்டாங்க. நான் வீட்டைக் காலி பண்ணச் சொன்னேன். ஆனால் உன் தங்கச்சிக்காரி இவன் மனைவிக்குக் ‘குளோஸ்’ ஃபிரண்டா மாறிட்டாள். எனக்குத் தெரியாமலே அரிசி கிரிசியெல்லாம் கொடுக்கிறாள். நான் சத்தம் போட்டால் அழுவுறாள். எப்படியும் சிநேகிதி புருஷனுக்கு நான் எம்ப்ளாய்மென்ட் ஆபீஸ்ராய் மாறனுமாம். என்ன பண்றது. ஏற்கனவே அவளுக்கு ஒரு ஏமாற்றம். இதுலயும் ஏமாற்றமுன்னா ஹார்ட் அட்டாக் தான் வரும்…”

எனக்கு அவன் குத்தல் புரிந்தது. சமாளித்தேன்.

“ஏண்டா இல்லாதது பொல்லாததெல்லாம் கற்பனை பண்ற? அந்த ஆளுக்கு வேலைதானே வேணும் கொஞ்சம் டயம் கொடு. ஆனால் ஒரு நிபந்தனை.”

“என்னடா புதுக்குண்டு?”

“நீயும் தங்கச்சியும் என் வீட்டுக்கு வரணும். அப்புறந்தான் வேலையைப் பற்றி யோசிப்பேன்…”

“கண்டிப்பா வர்றோம். ஆனால் இதையும் அதையும் முடிச்சிப் போடாதே.”

இப்போது மானேஜிங் டைரக்டர் என்னை உடனடியாகப் பார்க்கும்படி இன்டர்காமில் பேசிவிட்டார். என் வேலைப் பளுவைப் புரிந்து கொண்டவன் போல், மோகன், நான் எவ்வளவு சொல்லியும் கேளாமல் போய்விட்டான்.

எம். டி. யிடம் பேசிவிட்டு வந்த என் சிந்தை முழுதும் அவனே வியாபித்திருந்தான். ஆசாமி எப்படி மாறி விட்டான் ஒரு வார்த்தை ‘உன் பொண்டாட்டி, பிள்ளைங்க செளக்கியமான்னு கேட்கவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதில் ஏற்படும் ஒரு துள்ளலோ, ஒரு அன்னியோன்னியமோ அவனிடம் இல்லை. முகத்தில் மகிழ்ச்சிக்குப் பதிலாக ஒருவித பேரத்தின் சாயல்தான் தெரிந்தது. எதையோ பறிகொடுத்த ஏக்கம் தெரிந்தது.

திடுதிப்பென்று. மோகன், அவன் மனைவி, அவள் மடியில் ஒரு குழந்தை, இன்னொரு இளம் ஜோடி, என் அலுவலக அறைக்குள் வந்து நின்றார்கள். வியப்பில் என்னால் அவர்களை உட்காரக்கூடச் சொல்ல முடியவில்லை. மோகன், இப்போது உரிமையோடு பேசினான் என்பதை விட, அப்படிப் பேசுவதற்கு முயற்சி செய்தான் என்றே சொல்லலாம்.

டேய்… நான் சொன்னது இவர்தான்… பெயர் கோபாலன். நாலுமாசமா வேலை இல்லாமல் திண்டாடுறார். இவருக்கு வேலை கொடுத்தால்… எனக்குக் கொடுத்தது மாதிரி.”

நான், கோபாலனை நோட்டம் விட்டேன். சாதாரணமான உயரம் என்றாலும், கழுத்தைச் சுருக்கி வைத்துக் கொண்டு அவன் நின்ற முறையில் குள்ளமாகத் தோன்றினான். நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும், அவன் சொந்தக் காலில் நிற்க சுய தைரியம் இல்லாதவன் என்று, மனோதத்துவத்தைப் பாடமாகப் படித்த எனக்கு நன்றாகப் புரிந்தது. அவன் கண்கள் ‘இன்டர்காமையே’ வெறித்துப் பார்த்தன. மனுஷனுக்கு வேலை கிடைக்குமா என்பதைத் தெரிந்து கொள்வதைவிட, அந்த இன்டர்காம், மொஸாயிக் தரை, டிஸ்டம்பர் அடித்த சுவர்கள் ஆகியவற்றைப்பற்றித் தெரிந்துகொள்வதில் அக்கறை அதிகம் இருப்பதுபோல் தோன்றியது. அவனது ‘குணாதிசயங்களுக்கு’

ஈடுகட்டுவதுபோல் இருந்தாள் அவன் மனைவி. இருபத்திரண்டு வயதிருக்கலாம்; செக்ஸியான பார்வை; அதற்கேற்ற உடம்பு. அசாத்தியமான நம்பிக்கை அலட்டிக்காத தோரணை.

“ஏண்டா, தங்கச்சியையும் இந்தப் பொண்ணையும் என் வீட்ல விட்டுட்டு வந்திருக்கலாமே…”

“ஐ யம் லாரி… உன் ஆபீஸ் டெகோரத்தைக் கலைச்சிட்டேன்.” “மடையா, நான் அந்த அர்த்தத்தில் சொல்லல. தங்கச்சி முதன் முதலில் இப்போதான் வந்திருக்கு என் ஒய்ஃப் எவ்வளவு சந்தோஷப்படுவாள் தெரியுமா?”

நான் டெலிபோனைச் சுழற்றப் போனேன். மோகன் ரிலீவரைப் பிடுங்கிக் கீழே வைத்தான்.

“இப்போ அவசரமா ஊருக்குக் கிளம்பிக் கொண்டு இருக்கோம். நாளைக்கு என் மச்சினிக்குக் கல்யாணம். திருத்தணிக்குப் போயிட்டு வர்ற வழி. இது…” “மாப்பிள்ளை யாருடா?” “உன்ன மாதிரியே ஒரு ஆபீலர்.” “அப்படின்னா வீட்டுக்கு வரலியா?” “இன்னொரு நாளைக்கு வர்றோம். அப்புறம், இவரு வேலை விஷயம் என்னடா ஆச்சு?”

“அவ்வளவு சீக்கிரத்துல முடிஞ்சிடுமா. எங்கேயாவது வேகன்ஸி வரும்போது சொல்றேன்.”நான் ஒருத்தன் வெல மெனகட்டு உன்கிட்ட பிச்சை வந்தேன்

பாரு… எல்லாம் இவளல. அவன் மாறிட்டாண்டி, மாறிட்டாண்டின்னு சொன்னேன். அறிவு கெட்ட கழுத என் வார்த்தையைக் கேட்டாத்தானே. ஏண்டி, நான் சொன்னேனே கேட்டியாடி! உன்னால எனக்குத்தான் அவமானம்.புருஷனைவிட சினேகிதி அவளுக்கு உசத்தியாப் போச்சு.”

டேய் ஏண்டா தங்கச்சியை இப்டி மிரட்டுற?” “மிரட்டுறேனா? வீட்டுக்கு வரட்டும், அவள் என்ன கதியா ஆகப் போறாள் பாரு.”

“அண்ணா, இந்தப் பொண்ணுகிட்ட என் உயிரையே வச்சிருக்கேன். எப்படியாவது ஒரு வேலை வாங்கிக் கொடுத்திடுங்க. இல்லேன்னா நான்…”

மோகன் மனைவி கண்களைத் துடைத்துக் கொண்டாள். என்னால் தாளமுடியவில்லை.

“இன்னும் பதினைந்து நாளையில் எப்படியாவது ஒரு வேலையில அவனை வாரிப் போட்டுடுறேன். இந்தத் தடவை உன்னை ஏமாத்தமாட்டேன்’ என்றேன். மோகனின் மனைவி லேசாகச் சிரித்தாள். அவள் சிநேகிதியோ, அவள் புருஷன்காரனுக்கு வேலை வாங்கிக் கொடுப்பது என் கடமை என்பது மாதிரி ‘அசால்டாக உட்கார்ந்திருந்தாள். அவள் புருஷன் இப்போது காட்ரேஜ் பீரோவைப் பார்த்துக் கொண்டிருந்தான். மோகன் சந்தோஷம் தாங்காமல் சீட்டியடித்தான்.

அந்தக் கோஷ்டி, என் வீட்டுக்கு வராமலே போய் விட்டது. பதினைந்து நாள் கெடுவில், பத்து நாளிலேயே ஒரு கம்பெனியில் காலியாக இருந்த ‘ஸ்டோர் கீப்பர்’ வேலையை ‘ரிசர்வ்’ செய்துவிட்டேன். சம்பந்தப்பட்ட பெர்ஸனல் மானேஜர் சம்மதித்து விட்டதாகவும், வேலையை ஒப்புக் கொள்ளும்படியும் மோகனுக்குக் கடிதம் போட்டுவிட்டேன்.

இந்தச் சமயத்தில் மதுரைக்கு ஆபீஸ் விஷயமாகப் போக வேண்டியது இருந்தது. மோகன் வீட்டிற்குப் போனேன். தங்கச்சியிடம், அவள் சிநேகிதிக்குக் கிடைத்த புதிய வாழ்க்கையைப் பற்றித் தெரிவித்து, அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள நினைத்தேன். அதோடு, பழைய கோபத்தையும் புதிய உதவியால் போக்கிவிடலாம்!

மோகன் வீட்டில் இல்லை. அவன் மனைவி! அழுது களைத்துப் போனவள் போல் உட்கார்ந்திருந்தாள். வாங்கண்ணா என்று சொன்னாளே தவிர சொல்லில் ஒரு உற்சாகம் இல்லை. எனக்கு ஒரளவு ஏமாற்றந்தான்; வெளிக்குக் காட்டிக் கொள்ளவில்லை.

“தங்கச்சி, கடைசியில அவனுக்கு வேலை கிடைச்சுட்டுது. இன்னும் ரெண்டு நாளையில வேலையில சேர்ந்துடலாம்… என்னம்மா, ஏன் அழுவுற? நான் கொடுத்து நீ வாங்க வேண்டியதிருக்குன்னா? எதுக்கும்மா அழுவுற?”

அவள் இரண்டு நிமிடம்வரை ஏங்கி ஏங்கி அழுதாள். பிறகு, அழுது விட்டோமே என்று அவமானப்பட்டவள் போல் கண்களைத் துடைத்துக் கொண்டாள். என்னை மருட்சியோடு பார்த்தாள்.

‘’எதுக்கும்மா அழுவுற?” “உங்ககிட்ட சொல்றதுக்கு என்னண்ணா. அவரு அந்தப் பொண்ணு கூட… அந்தப் பொண்ணுகூட… அவள் புருஷன் அரை லுன்ஸ்…”

எனக்கு அந்த வீடே இடிந்து என் தலையில் விழுந்தது போல் இருந்தது. எந்தப் பெண்ணையும் சொந்தச் சகோதரி போல் கருதும் மோகனுக்கா இந்த விபத்து? நான் சிறிதுநேரம் அசைவற்ற ஜடமானேன்.

“அப்படின்னா நீ ஏம்மா வேலை வாங்கிக் கொடுக்கணுமுன்னு என்கிட்ட சொன்னே? உன் முகத்துக்காகத் தான் நான்…”

“நான் உங்ககிட்ட வந்து சொல்லணுமுன்னு என்னை பலவந்தப்படுத்துனாரு அண்ணா! எனக்கு அவங்க ரெண்டு பேரையும் கட்டோட பிடிக்கல. இப்போ அவளோட அதிகாரந்தான். ரெண்டாவது தாரங்கூட இப்படி நடக்கமாட்டாள். அவள் புருஷனுக்கு வேலை வாங்கிக் கொடுத்து அவங்களை எங்கேயும் போகவிடாமல் கைக்குள் போட்டுக்கிடணுமுன்னு நினைக்கிறாரு தாலி கட்டின மனைவியையே இதுக்கு உடந்தையாய் இருக்கச் சொல்லி நிர்ப்பந்திக்கிறது எங்கேயாவது பார்த்திருக்கீங்களா..? அண்ணா…” “இதை நீ பொறுத்துக்கிடுறதா? என் கிட்டேயே பொய் சொல்லிட்டியே?”

“நான் என்னண்ணா பண்ண முடியும்? நான் உங்ககிட்ட சிபாரிசு

போனால் என்ன விதமாகப் பேசுவாங்கன்னு உங்களுக்கே தெரியும். அதனாலதான் அழுகையை அடக்கிக்கிட்டு, பல பேர்கிட்ட ஏச்சு

சிபாரிசு செய்தேன். ஒங்க வீட்டுக்கு நான் வந்தால் அண்ணிகிட்டே சொன்னாலும் சொல்லிடுவேன்னுதான். என்னை ஆபீசுக்கே கூட்டிக்கிட்டு

என் தங்கச்சிக்கு இப்டோ ஒரு குழந்தைகூட இருக்கு.”

“ஆச்சரியமாய் இருக்கம்மா… ரொம்ப மாறிட்டானே… என்னால நம்பக்கூட முடியலியே. மோகனா இப்படி நடந்துக்கறான்?”

“அது என்னமோ அண்ணா. நீங்க போனதில் இருந்து ரெண்டு மாசம் வரைக்கும் அவரு பித்துப் பிடிச்சவரு மாதிரி இருந்தாரு. தூக்கத்திலேகூட சந்திரா, சந்திரா ன்னு கத்துவாரு… நான்தான் உங்களை விரட்டிட்டேன்னு என்னோடு அடிக்கடி சண்டைக்கு வந்தாரு தினமும் உங்களைப் பத்தித்தான் பேசுவாரு. இப்போது சனி மாதிரி அவள் வந்ததும் உங்களையும் மறந்துட்டாரு…”

“மோகன் ஆபீசுக்குப் போயிருக்கானா?” “இல்ல. சாத்தனுருக்குப் பிக்னிக் போயிருக்காங்க. இவருக்கும் அவளுக்கும். அவள் புருஷன் ஒத்தாசை பண்ண போயிருக்கான்.” அவள் மீண்டும் அழுதாள். அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று எனக்குப் புரியவில்லை. சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தேன். அவள் அழுதுகொண்டிருக்கும் போதே நான் புறப்பட்டு விட்டேன். என் கண்ணிரை மறைப்பதற்கு இது தான் சிறந்த வழியாகத் தோன்றியது.

நான்கைந்து நாட்கள் நகர்ந்தன. என் பெயருக்கு வந்த தபால் உறையைப் பிரித்தேன். மோகன்தான் எழுதியிருந்தான். கோபாலனுக்கு வேலை கிடைக்கச் சிபாரிசு செய்த நான், பிறகு அந்தச் சிபாரிசை வாபஸ் வாங்கிக் கொண்டதை பயங்கரமாகக் கண்டனம் செய்திருந்தான். நான் நன்றி கெட்ட துரோகி என்றும், செய்நன்றியை மறந்த படுபாவி என்றும், ஆரம்ப காலத்தில் அவள் மனைவி. என்னைக் காரியவாதி என்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்றும், அவள் பேச்சைக் கேளாமல் என்னிடம் அன்பு காட்டியது மடத்தனம் என்றும், அவன் மனைவி உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி என்றும், அவளை எனக்காக அலட்சியப்படுத்தி பெரிய பாவம் செய்து விட்டதாகவும் புலம்பியிருந்தான். இப்போது என் – ங்கக் கெளிர் பிட்டது என்றும், இனிமேல் என் முகத்தில் விழிக்கப் போவதில்லை என்றும் சபதமிட்டிருந்தான்.

அந்தக் கடிதத்தை நான்கு தடவையாவது படித்திருப்பேன். நான் சென்னைக்கு வந்ததும் பிரிவாற்றாமையால் அவன் ‘லோன்லியாக’ இருந்திருப்பான் என்பதும், இதற்குக் காரணமான மனைவியிடமிருந்து அன்னியப் பட்டிருப்பான் என்பதும், இப்படித் தனிமைத் துயரில் அவன் வருடக் கணக்கில் தவித்துக் கொண்டிருக்கும்போது கோபாலனும் அவன் மனைவியும் அவன் வீட்டில் குடியேறி இருப்பார்கள் என்பதும் எனக்குத் தெரிந்தது. ‘செக்ஸ்’ என்பது வெறும் உடல் சம்பந்தப்பட்ட அல்லது மனக்கிளர்ச்சி சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல. தாயன்பு கிட்டாதவர்களும், இளமையில் பலவித தொல்லைகளை அனுபவித்தவர்களும், பிரச்னைகளை நேருக்கு நேர் சந்திக்க அஞ்சுபவர்களும், தத்தம் பிரச்னைகளை ‘செக்ஸ்’ பிரதிபலிப்பாகக் காண்டார்கள் என்று கல்லூரியில், மனோதத்துவப் பாடத்தில் படித்திருக்கிறேன். ஒரு வகையில் பார்த்தால், நானும் அவன் ‘திரிபுக்கு’ ஒரு காரணம்.

என்னை அவன் ‘துரோகி’ என்று தூற்றியதற்காக நான் கவலைப்படவில்லை. மாறாக மகிழ்ச்சி அடைகிறேன். என்மீது ஏற்பட்ட அன்பினால், மனைவியை வெறுத்தவன், இப்போது என்மீது ஏற்பட்ட வெறுப்பினால், என்னைப் ‘பழிவாங்கும்’ தோரணையில் சைக்காலஜிப்படி ‘காம்பன்ஸேவடின்’ செய்து கொள்ளும் வகையில் மனைவியின் மீது அன்பைப் பொழிவான் என்று எனக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இதனால் படிப்படியாக கோபாலன் மனைவி மீதுள்ள மோகமும் மறைந்துவிடும் என்றும் நம்புகிறேன். ஒரு வேளை இவன் இயலாமையை அறிந்து அவளே ஒதுங்கிக் கொள்ளலாம்.

அவன் நன்மைக்காக, அவன் பார்வையில் நான் ‘துரோகியாக’ நிரந்தரமாக இருக்க விரும்புகிறேன். அதற்காக, அவன் கடிதத்திற்குப் பதிலாக, அவனை வசைபாடி, கண்டபடி திட்டி ஒரு கடிதம் எழுதலாம் என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

தங்கச்சியும் தப்பாக எடுத்துக் கொள்வாள். என்ன செய்வது? சில தவறுகளே சில நல்ல காரியங்களுக்குத் தகுதிகளாகின்றன. ஒரு நட்பின் ஆன்மாவிற்காக, அதன் உடம்பைப் பலியிட வேண்டியதாகிறது.

– ஒரு சத்தியத்தின் அழுகை – முதல் பதிப்பு : 1981, மணிவாசகர்பதிப்பகம், சென்னை-600108

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *