இலவு காத்த பலவேசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2023
பார்வையிட்டோர்: 1,363 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பனைமட்டை நாரில் நெருக்கமாக மிடையப்பட்ட கொட்டப்பெட்டியை இடுப்பின் இடது பக்கம் குழந்தையைத் தூக்கி வைத்திருப்பதுபோல் வைத்து, இடது கை அதை அணைத்திருக்க, பெட்டியின் மேல்பாகத்தை மாராப்புச் சேலையின் ஒரு பகுதியால் மூடிக்கொண்டும், முந்தானையின் முனையை வலது கையால் பிடித்து ஆட்டிக் கொண்டும் வேகமாகத் தெருவில் நடந்து கொண்டிருந்தாள் செல்லக்கணி.

மிராசுதார் ‘செவண்செருமா’ மகள் கிளியம்மையிடம் அவள் என்னதான் வீம்பாகப் பேசியிருந்தாலும் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்ததும் அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. செருப்பு பிஞ்சிடுமுன்னு நாக்கு மேல பல்லைப் போட்டுக் கேட்டுட்டாளே. இவ வாயில இஸ்திரி பெட்டிய வச்சி தேச்சா என்ன! இவள் துணிய அடிச்சது மாதிரி அடிச்சி, கசக்குற மாதிரி கசக்கி, பிழியுறதுமாதிரி இவளைப் பிழிஞ்சா என்ன… எல்லாம் மெட்ராஸ் மாப்புள்ளை கிடைக்கப் போற திமுரில பேசுறா. இவள. இவள என்ன பண்ணலாம்…?

செல்லக்கணி அந்தக் குட்டாம்பட்டிக்கு வந்து மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை. பக்கத்திலுள்ள டவுனான தென்காசியில் பிறந்தவள். அவள் தந்தை அங்கு லாண்டிரிக் கடை வைத்திருக்கிறார். அங்கே துணி வாங்க வருபவர்களும், கொடுக்கப் போகிறவர்களும், மரியாதையோடு பேசியதைக் கேட்டுப் பழகிப்போனவளுக்கு, குட்டாம்பட்டிக்காரர்களின் குறிப்பாக கிளியம்மையின் பேச்சைக் கேட்கக் கஷ்டமாக இருந்தது.

மிராசுதார் மகளைப் பொறுத்தவரையில், செல்லக்கணியின் மாமியார் சோறெடுக்க வரும்போதெல்லாம், ‘சோறு போடு மவராசி’ ‘சோறு போடு புண்ணியவதி’ என்று ஒரு நாளைக்கு ஒரு விதமான பட்டப் பெயரைக் கிளியம்மைக்குச் சூட்டுவது வழக்கம். செல்லக்கணி அனாவசியமாய்ப் பார்த்துக் கொண்டும், அலட்சியமாய்ப் பேசிக்கொண்டும் நின்றாள். அவளைக் கிளியம்மை அவமானப் படுத்தத் துடித்தாள். தாமதமாகச் சலவை கொண்டு வந்ததைச் சாக்காக வைத்துச் சாடிவிட்டாள்.

ஊரின் வால்போல் அதன் முனையில் இருந்த தன் ஓலை வீட்டுக்கு வந்த செல்லக்கணி, கணவனிடம் கிளியம்மையின் அடாவடித்தனத்தைச் சொல்லவில்லை. எதுக்குச் சொல்லனும். சொன்னால், என்னாலதான் ஒனக்குக் கஷ்டமுன்னு சொல்லுவாவ. “குட்டாம்பட்டில மவராசா இருந்தாக் கூட என் மவளைக் குடுக்கமாட்டேன். குட்டுப் பட்டே குனிஞ்சிடோன சின்னானுக்கா கொடுப்பேன் என்று, அய்யாக்காரர் இவள் காதலை அசைத்த போதும், இவள் அசையவில்லை. பிடிவாதமாக, சின்னானை மணந்து கொண்டாள். ‘அப்புறமா… நான் இல்லம்பேன். உடனே என் ராசாத்தின்னு கன்னத்த தொடுவாவ… இஸ்திரி பெட்டிய விட்டுடுவாவ… நாளைக்கு சொன்னபடி சொன்ன டயத்துல துணியக் குடுக்காட்டா நமக்கும் ஊர்க்காரங்களுக்கும் என்ன வித்தியாசம்.’

கிளியம்மையை நினைத்துக் கொண்டே தூங்கியவள், அவளை நினைத்துக்கொண்டே எழுந்தாள். ‘செருப்பு பிஞ்சிடுமுன்னு கேட்டுட்டாளே… கேக்கட்டும்…

கிளியம்மையின் நினைவை வலுக்கட்டாயமாக மனத்திலிருந்து விலக்கிவிட்டு, முளையில் கட்டியிருந்த இரண்டு கழுதைகளை அவிழ்த்து விட் டு, பின்னர் ஒவ்வொரு கழுதையின் முன்னங்கால்களை இடைவெளி கொடுத்துக் கயிற்றால் கட்டினாள். கழுதைகள் கனைத்துக்கொண்டே, தத்தித் தத்தி, கண்மாய்ப்பக்கம் போய் நின்றுகொண்டன.

சத்திரப்பட்டைக் குளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ‘ஒரு மண்ணை’ (உவர் மண்; கிராமிய சோப்புப் பொடி) குவியலாக்கி விட்டு, வெளுக்கப்பட்டிருந்த. துணிகளை அடையாளம் பார்த்துப் பிரித்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் இருந்த சின்னான், “துணிய அப்ப, பிரிக்கலாம்… மொதல்ல இந்தத் துணிகளுக்கு கஞ்சி போடு பிள்ள…” என்று சொல்லிவிட்டு, உள்ளுர் வி.ஐ.பி.க்களின் துணிகளை எடுத்துபோட்டுக் கொண்டிருந்தபோது, செவண் செருமாவின் தங்கையைக் கட்டினாலும் (ஒருவேளை அப்படியே கட்டியதாலோ) செவண்செருமாவுக்கு ஜென்ம எதிரியாகப் போன அவர் மைத்துனர் பலவேசம் அங்கே தோன்றினார். வந்ததும் வராததுமாக, “ஏள்ளே செல்லக்கணி… ஏன் ஒரு மாதுரி இருக்கே… சின்னான் அடிச்சானா?” என்று சொன்னபோது, சின்னான், “எங்கள்ள அப்படில்லாம் வழக்கமுல்ல மொதலாளி”, என்றான்.

“ஏள்ளா மூஞ்ச தூக்கிக்கிட்டு இருக்கே…”

செல்லக்கணி சொன்னாள்:

“தென்காசில ராசாத்தி மாதுரி இருந்தேன். இப்ப இங்க நாயிகிட்டயும், பேயுங்கிட்டயும் ஏச்சு வாங்க வேண்டியதிருக்கு.”

“பட்டுன்னு உடளா.”

“ஒம்ம மச்சினன் மவள்… கிளியம்ம… என்ன கேக்கக் கூடாத கேள்வில்லாம் கேட்டுட்டு…”

பலவேசம் தோளைத் தட்டிக் கொண்டார்.

“அவள் விஷயமாத்தான் வந்தேன். ஒங்களுக்கே தெரியும். கொண்டான் குடுத்தான்னு என் மவன் அக்னி ராசாவுக்கு கேட்டேன்…”

செல்லக்கணியால் பேசாமல் இருக்க முடியவில்லை. “ஆமாம். எங்க காதுலயும் விழுந்துது. ‘பலவேசம் மவனுக்குக் குடுக்கிறத விட என் பொண் ண எருக்குழில வெட்டிப் புதைச்சிடலாமுன்னு’ ஒம்ம மச்சினன் சொன்னாராமே. அக்கினிராசாவுக்கு என்ன குறையாம்? கொஞ்சம் குடி. கொஞ்சம் பொம்புள சாவாசம். மத்தபடி நல்லவர்தான். இனும் பேசி என்ன பிரயோஜனம்? மெட்ராஸ் மாப்பிள்ளைக்கி நிச்சயம் பண்ணியாச்சே? ஒம்ம நிச்சய தாம்பூலத்துக்கு கூப்புடல போலுக்கே…”

“தானா அவன் கூப்புடப் போறான் பாரு, நீ மட்டும் கொஞ்சம் தயவு காட்டுனா போதும். இந்தக் கல்யாணத்த நிறுத்திப்புடலாம்…”

சின்னான், எச்சரிக்கையானான். சுதாரிப்பாகப் பேசினான்.

“இதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்? கல்யாணத்தைக் கலைக்கணுமுன்னா மொட்டக் கடுதாசி போடணும்?”

“போடாம இருப்பனா… கல்யாண மாப்பிள்ளை அப்பனும் எங்க சொந்தக்காரன்தான். மொட்ட லட்டர விசாரிக்க பையனோட தாத்தா வராரு. பழைய காலத்து மனுவடின். இப்ப விஷயம் ஒன் கைலதான் இருக்கு…”

“நான் என்னய்யா பண்ண முடியும்?”

“சொல்றதக் கேளுளா.. அவரு பழய காலத்து மனுஷன்… வண்ணாத்திக்குத் தெரியாம எந்தக் கொம்பனும் கொம்பியும் காதல் பண்ண முடியாதுன்னு நினைக்கிறவரு. நீ நெனச்சா நிறுத்திடலாம்…”

சின்னான், என்ன பேசுவதென்று புரியாமல் குழம்பிய போது, செல்லக்கணி படபடப்பாகப் பேசினாள்.

“பையனோட தாத்தா எப்ப வாராரு?”

“சாயங்காலம் என் வீட்டுக்கு வாராரு. நான் தங்கமான பொண்ணுன்னு சொல்லிட்டு எதுக்கும் வண்ணாத்திகிட்ட கேளுமுன்’னு சொல்லுவேன்… நீ ‘மூணுமாசமா… தீட்டுச் சீல வெளுக்கலன்னு’ சொல்லிடு. அவரு, பொண்ணுக்கு மூணுமாசமுன்னு தீர்மானிச்சிடுவாரு. சாயங்காலம் அவர இங்க கூட்டி வரட்டுமா?”

செல்லக்கணி, சிறிது யோசித்தாள். சின்னானின் கோபத்தைப் பொருட்படுத்தாமல் நிதானமாகப் பேசினாள்.

“இங்க வேண்டாம். ஒம்ம மச்சினனுக்கு உடம்புல்லாம் கண். பாவூர் சத்திரத்திற்குத் துணிகொண்டு போறேன். பஸ் ஸ்டாண்ட் பக்கம் நிக்கச் சொல்லும், அடையாளத்துக்கு ஒம்ம கடெக்குட்டி பொண்ண அனுப்பிவையும். நீரு வராண்டாம். ஏன்னா, சந்தேகம் வரப்படாது. நான் முடிச்சிடுறேன்… என்னை அவமானமா பேசுன கிளியம்மையை வைக்க வேண்டிய இடத்துல வச்சாத்தான் என் மனசு ஆறும். அவளுக்கு ஒம்ம குடிகார மவன்தான் லாயக்கு.”

பலவேசம், லேசாக ஏற்பட்ட கோபத்தைச் சிரிப்பால் மறைத்துக் கொண்டார்.

“இந்தாடா சின்னான், இருநூறு ரூபாய். ஒரு கழுத வாங்கணுமுன்னு சொன்னல்லா? என் பேருல ஒரு கழுதை வாங்கு. இது கடன்தான். வட்டி வாண்டாம். செளரியப்படும் போது பணத்தைக் கொடு” என்றார்.

சின்னான் பணத்தை வாங்கிக் கொள்ளவில்லை. செல்லக்கணி வாங்கிக் கொண்டாள்.

திட்டமிட்டபடி, அவள் பாவூர் சத்திரத்தில், பையனின் தாத்தாவிடம் சொல்ல வேண்டியதை, சொல்ல வேண்டிய முறையில் சொல்லிவிட்டாள்.

ஒரு வாரம் ஓடியது.

கிளியம்மையின் கல்யாணம் மேளதாளத்துடன், பத்தாயிரம் ரூபாய் வரதட்சணையுடன், திறந்த கார் ஊர்வலத்துடன் நல்லபடியாக முடிந்தது. இலவுகாத்த பலவேசமும், கல்யாணத்தில், வேண்டா வெறுப்பாகக் கலந்து கொண்டார். ஒரு வேளை மாப்பிள்ளை, தாலி கட்டுற சமயத்தில் கலாட்டா செய்யலாம் என்றும், அந்த இடத்தில் மகனை அமர்த்தி விடலாம் என்றும் நினைத்திருந்தார். தாலி கட்டப்படும்போது, அவருக்குத் தன் கழுத்தை எவரோ அறுப்பது போலிருந்தது.

செல்லக்கணி, கல்யாணப் பந்தலுக்குள்ளே வண்ண வண்ணச் சேலைகளைக் கட்டிய களைப்பில், வெற்றிலையை குதப்பிக் கொண்டு, தன் வீட்டில் சின்னான் மடியில் பட்டும் படாமலும் தலை வைத்திருந்தபோது, பலவேசம், ஆவேசமாக வந்து அலறினார்.

“கடைசில ஒன் புத்திய காட்டிட்டியே மாப்பிள்ள தாத்தாகிட்டே கிளியம்மையை மாதிரி ஒழுக்கமுள்ளவள் பாக்க முடியாதுன்னு சொன்னியாமே? அந்த கிழவன் நீ சொன்னத எல்லார் மத்தியிலும் பட்டுன்னு உடச்சிட்டான். இப்படியாளா அடுத்துக் கெடுக்கது?”

செல்லக்கணி அமைதியாகப் பேசினாள்.

“நானா அடுத்துக் கெடுக்கப் பார்த்தது, இல்ல நீயா…”

“பின்ன எதுக்குளா நான் சொன்னபடி சொல்றேன்னு சொன்னே?”

“நான் அப்படிச் சொல்லாட்டா நீரு வேற யாரயாவது பிடிச்சி அந்த அம்மா கல்யாணத்த கெடுத்திருப்பீரு.’

“வுன்ன கையக்கால ஒடிக்கனா… இல்லியான்னு பாரு”

“கிளியம்மை தலக்கிறுக்குல என்னைப் பேசுனது உண்மைதான். அது அகங்காரி என்றதும், உண்மைதான். அதுக்காக நான் பதிலுக்குப் பதிலா பேசலாமே தவிர செய்யலாமா? ஒரு பொண்ணோட வாழ்வ குலைக்கிற அளவுக்கு நான் மோசமானைவ இல்ல. ஏன்னா நான் அழுக்க எடுத்திட்டு சுத்தத்தை குடுக்கிறவ.”

பலவேசம் புரிந்து கொண்டார். மீசை துடிக்க, உதடுகள் துள்ள, கண்கள் எரிய, அவர்களைக் கோபமாகப் பார்த்து விட்டு வெளியேறினார்.

– ஒரு சத்தியத்தின் அழுகை – முதல் பதிப்பு : 1981, மணிவாசகர்பதிப்பகம், சென்னை-600108

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *