வழித்துணை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 25, 2021
பார்வையிட்டோர்: 3,919 
 

ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு வெளியே நோக்கினார் சரபசாஸ்திரிகள். திருநீற்றைப் பூசிக் கொண்டு புறப்படும் உதய காலம். பார்வை சென்று முடியுமிடத்தில் தெரு இரண்டாகப் பிரிந்தது. கறுப்பும் வெள்ளையுமாக இரண்டு கார்கள் ஒன்றையொன்று கடந்தன. பேப்பர் விற்கும் பையன்கள், பால் புட்டிகள் உராயும் சப்தம், கைத்தடி கொண்டு வயோதிகத்தை விரட்டியடித்தவாறு உலாவும் முதியவர்கள், தொலைவில் இளமையை தோளில் சுமந்து கொண்டு மைதானத்தைச்சுற்றி ஓடிவரும் இளைஞர்கள், கண்ணாடித் திரைவழியே நோக்கினால் சினிமா பார்ப்பது போன்ற பிரமை…

“அப்பா !”

குரலில் எவ்வளவு கடுமை! சரபசாஸ்திரிகள் திரும்பிப் பார்த்தார். மகன் ஹரிஹரன்தான் இவ்வளவு அழகாக அவரை அழைத்தான்!

இப்போதுதான் எழுந்திருக்கிறான் போலிருக்கிறது. ‘நைட் கவுன்’ அதில் கறுப்பும் சிவப்புமாக சதுரங்கக் கட்டங்கள். கையில் ‘டூத் பிரஷ்!’

“என்ன அப்பா இது?”

“இது’ என்று எதைக் குறிப்பிடுகிறானென்பது அவருக்குத் தெரிந்தது தான். நேற்று இரவு மருமகள் பிரேமா தன் கணவனிடம் வெகு நேரம் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அவள் ஒன்று விடாமல் எல்லாவற்றையும் சொல்லியிருப்பாள். மாமியார் இல்லையே! மாமனார் மீதுதானே அவளால் குற்றம் சாட்ட முடியும்?

“என்னப்பா இது; கேட்கிறேன்; பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்?”

“என்ன செய்யச் சொல்றே?”

சரபசாஸ்திரிகள் சிரித்தார்.

“சிரிக்கிறீர்களே… எவ்வளவு தடவை சொன்னாலும் உங்களுக்கு….” – அவன் இதைச் சொல்லி முடிக்கத் தயங்கினான்.

ஏன் தயக்கம் வராது? அவனுடைய தாயார் பிரசவ அறையி லேயே போய்விட்டாள். பிறகு அவனுக்கு தாய்க்குத் தாயாகவும் தகப்பனுக்கு தகப்பனாகவும் இருந்து வளர்த்த பரிவையும் பாசத்தையும் அவ்வளவு சுலபமாக அவனால் மறந்துவிட முடியுமா? ‘உங்களுக்கு ஏன் மூளை இல்லை?’ என்று கேட்க அவன் நினைத்திருப்பான். மனசுக்கு இல்லாவிட்டால் கூட, நாக்குக்குக் கூடவா நன்றியில்லாமல் போய் விட்டது? அது பேசமறுத்து விட்டது.

“ஏண்டா, கேளேன்… ‘உங்களுக்கு மூளை இல்லையா?’ கேளுடா!”

“நடராஜன் வீட்டுக்குப் போயிருந்தீர்களா?” – விஷயத்துக்கு நேரடியாக வந்துவிட்டான்.

பக்கத்து அறையில் கண்ணாடி எதிரே உட்கார்ந்து கொண்டு கொண்டையை சரி செய்து கொண்டிருந்தாள் பிரேமா. அவள் உட்கார்ந்திருந்த அலட்சிய பாவம், இவர்கள் பேசுவதை அவள் அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்பதைக் காட்டிக் கொடுத்தது.

“ஆமாம்… நேற்று லோடி காலனியிலே நடராஜன் வீட்டுக்குப் போயிருந்தேன். அதுக்கு என்ன வந்துடுத்து இப்போ ?”

“என்ன வந்துடுத்தா?… நடராஜன் யாருன்னு தெரியுமில்லையா உங்களுக்கு?”

சற்றுக் குனிந்த தலையுடன் கொண்டையில் ஊசியை செருகிக் கொண்டிருந்த பிரேமா, சாய்ந்த பார்வையாகத் தம்மை நோக்குவதைச் சரபசாஸ்திரிகள் கவனித்தார்.

“நடராஜன் யாரென்று இவன் கேட்க வந்து விட்டானே! ஏ உலகமே, அப்படி நன்றி கெட்டா போய் விட்டாய்? நடராஜனுடைய தாத்தா நடராஜ தீட்சதர் உபகாரம் செய்யாவிட்டால் இன்று ஹரிஹரன் ஐ.ஏ.எஸ். என்று இவனால் கொழிக்க முடியுமா? ‘ட்ரெஸ்ஸிங் டேபிள்’ முன்னால் உட்கார்ந்து கொண்டு கொண்டையை போட்டுக்கொள்ளும் மனைவியை இவனால் அடைய முடியுமா? – சே…சே… நன்றிகெட்டவன்.

‘நடராஜன் யார் என்று வாய் கூசாமல் கேட்கிறானே! நடராஜ தீட்சதர் குடும்பத்துக்கு தமது குடும்பம்தான் பரம்பரை பரம்பரையாக வைதிகம். ஆனால் இந்தத் தலைமுறையில் தமது பிள்ளை ஒரு ஆபீஸர். நடராஜன், அவனுடைய ஆபீஸில் வேலை செய்யும் ஒரு ‘டைப்பிஸ்ட்’ நடராஜனின் தகப்பனார் சிவராம அய்யர் மைனர் பேர்வழி! ஆடி ஓய்ந்து பிள்ளையைக் காண டில்லிக்கு வந்தார்.

வந்தவருக்கு ஊருக்குத் திரும்பிப் போக இஷ்டமில்லை; அப்படியே ஒரு வழியாகப் போய்விட்டார். துயரச் செய்தி வந்ததும், போய்ப் பார்க்காமல் எப்படி இருக்க முடியும்? நடராஜன் எவ்வளவோ மறுத்தான். ஆனால், அந்தக் குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய வைதிகப் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியுமா? செய்தால்தான் என்ன குறைந்து விட்டது!

“என்னப்பா, சொல்லுங்களேன்; நடராஜன் யாரென்று உங்களுக்குத் தெரியுமில்லையா?”

“டாடி!” – பேரன் சுரேஷ் ஓடி வந்து ஹரிஹரனின் கால்களைக் கட்டிக் கொள்கிறான்.

“சுரேஷ்…நோ..” – பிரேமா கண்டிக்கிறாள். குழந்தைக்கு நல்ல பழக்கம் கற்றுக் கொடுக்கிறாள். இரண்டு பேர் பேசும்போது குறுக்கே பேசக் கூடாது; ஆனால், செய்ந்நன்றி மறக்கக்கூடாதென்பதைக் காட்டிலும் வேறு நல்ல பழக்கம் என்ன இருக்க முடியும்? நமது பிள்ளைக்கு அதைக் கற்றுக் கொடுக்கத் தவறி விட்டோமோ?

“நடராஜன் யாரா? நடராஜ தீட்சதர் பேரன். நடராஜ தீட்சதர் யாருன்னு கேட்க மாட்டியே?”

“துக்கம் விசாரிக்கப் போக வேண்டாம்னு யார் சொன்னா? அதுக்காக…” – அவன் சொல்வதற்கு சங்கடப்பட்டான். வாயால் சொல்லக் கூடவா அவனுக்கு வெட்கம்?

“அதுக்காக? சொல்லேண்டா…. வாயால் சொல்ல வெட்கப்படக்கூடிய அளவுக்கா அது ஈனமான தொழிலாப் போச்சு?”

“அது ஈனமான தொழில்னு யார் சொன்னார்கள்? ஆனால், பிள்ளையோட கௌரவத்தையும் ஒரு அப்பா பார்க்க வேண்டாமா?” – கொண்டையைப் போட்டுக் கொண்டே பிரேமா அந்த அறைக்குள் வந்தாள்; பவுடர் மணம் வீசியது.

“தொழிலுக்குத் தொழில் ஒசத்தி, தாழ்த்தி உண்டாம்மா? இந்தக் காலத்துப் படிப்பு படிச்சவா நீங்க…”

“ஒசத்தியோ, தாழ்த்தியோ, அவர்கள் வீட்டுக்குப் போய் காரியம் பண்ணினது தப்புத்தான்… அதுவும் நடராஜன் அவர் ஆபீசிலே ஒரு ‘டைப்பிஸ்ட்’. பார்க்கிறவர்கள் என்ன சொல்லுவா?” என்றாள் பிரேமா.

“உன்னைப் பொறுத்த வரையில் அவன் ‘டைப்பிஸ்ட்’ தான்; ஆனா உன் புருஷன் அப்படி நினைக்க முடியாது. நினைக்கவும் கூடாது…”

“அதெல்லாம் கிடக்கட்டும்… நடராஜனுக்குத்தான் வேலை வாங்கித் தந்தாச்சே; வேறே என்னதான் பண்ணனும்? ஒரு ‘குட்ஃபர் நத்திங்’ மனுஷன் வந்து மண்டையைப் போட்டான்னா. அதுக்காக நீங்க போய்…”

“அப்படியெல்லாம் பேசாதேடா” என்றார் சரபசாஸ்திரிகள்.

“உங்களோட வழக்காட எனக்கு இஷ்டமில்லை. நீங்க நடராஜன் வீட்டுக்குப் போய் அதெல்லாம் செஞ்சது தப்புத்தான். வைதிகம் உயர்வான தொழிலா இல்லையாங்கற ஆராய்ச்சியிலே இறங்க எனக்கு இப்போடயம் இல்லை.”

விடுவிடென்று பேசி விட்டு அவன் போய் விட்டான். தம்முடைய தொழில் உயர்ந்ததா தாழ்ந்ததாவென்று அபிப்பிராயம் கூற அவனுக்கு நேரமில்லை! அப்பனுக்கும் பிள்ளைக்குமிடையே ஜாதி வேறுபாடு! தம்முடைய தொழிலைப் பற்றி தமக்கு கௌரவம் இருக்கக் கூடாதா? இதை நினைக்க நினைக்க அவருக்கு வேதனையாக இருந்தது. கால்கள் தள்ளாடின. அவர் அப்படியே சோபாவில் உட்கார்ந்தார்.

சுரேஷ் அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். கையில் கலர் கலராகப் படம் போட்ட புத்தகம். வாயில் சாக்லெட். அவன் அந்தப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டியவாறு தீவிர சிந்தையில் ஆழ்ந்திருந்தான்.

ஹரிஹரனும் பத்து வயதில் சுரேஷ் மாதிரிதான் இருந்தான். இவ்வளவு நிறமும் வளர்த்தியுமில்லை. ஆனால், பாவனை அப்படியே. கால் மேல் கால் போட்டுக் கொண்டு சோபாவில் சாய்ந்தவாறு, வாயில் சாக்லெட்டும் கையில் இங்கிலீஷ் புத்தகமுமாக வீற்றிருக்க வேண்டிய காட்சியை ஹரிஹரன் சிறுவயதில் எவ்வளவு தரம் கனவு கண்டிப்பானோ, தெரியவில்லை… தனக்குக் கிடைக்கப் பெறாத பால்யப் பருவத்தை தன் மகனுக்கு அளித்திருக்கிறான்.

பத்து நாட்களுக்கு முன்னால் ஹரிஹரன் ஒரு விருந்து வைத்திருந்தான். யார் யாரோ வந்திருந்தார்கள். அமெரிக்காவுக்குப் போய்விட்டு வந்த தன் அனுபவத்தைப் பற்றி அவர்களிடம் கூறிக் கொண்டிருந்தான் ஹரிஹரன்.

“அங்கே ஒருத்தன் மூட்டை தூக்கலாம்; ‘ப்ளேட்’டைச் சுத்தம் செய்யலாம்; பேப்பர் விற்கலாம். தொழிலைப் பற்றிய வரையிலும் உயர்வோ, தாழ்வோ கிடையாது. அமெரிக்கா போனப்புறம்தான் ஜனநாயகம்னா என்னன்னு எனக்குத் தெரிஞ்சது…”

அமெரிக்காவுக்குப் போய் ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரிந்து கொண்டு வந்தவனுக்கு தன் தகப்பனார் இன்ன தொழில் செய்கிறாரென்று சொல்லிக் கொள்ள வெட்கம்! இதற்கு என்ன காரணம்? தனக்கு வைதிகக் காரியங்களில் நம்பிக்கையில்லை என்பதற்காகத் தனது தகப்பனாரும் அந்தத் தொழிலைச் செய்யக் கூடாதென்பது அசட்டுத்தனமான முற்போக்கு மனப்பான்மையோடு ஒத்துப் போவதென்பது விவேகமா அல்லது கோழைத் தனமா? இக்காலப் படிப்பு ஒருவனை இப்படியா கோழையாக்கி விடுகின்றது?

ஒருவன் மூட்டை தூக்கலாம், ‘ப்ளேட்’ கழுவலாம். பேப்பர் விற்கலாம்… ஆனால், வைதிகத் தொழில் செய்யக் கூடாது… திடீரென்று உலகமே இருள்வது போல அவருக்குத் தோன்றிற்று.

அவர் திரும்பி வந்து சோபாவில் உட்கார்ந்தார். எதிரே உட்கார்ந்திருப்பது ஹரிஹரனா? மடியிலும் தோளிலும் சுமந்த பிள்ளையா இவன்? இல்லே, இவன் வேறு யாரோ!

ஹரிஹரன் செய்தித்தாளை மடித்து மேஜையின் மீது வைத்து விட்டு சோம்பல் முறித்தான். அப்பாவை ஓரக் கண்களால் நோக்கினான். மிகவும் கடுமையாகப் பேசி விட்டோமோவென்ற சந்தேகமாக இருக்கலாம். சரபசாஸ்திரிகள் கண்களை மூடிக் கொண்டிருந்தார்…

ஹரிஹரன் ஆபீஸ் போய் விட்டான். பிரேமாவும் சிநேகிதிகளோடு அரட்டையடிக்கச் சென்று விட்டாள். வீட்டில் சரபசாஸ்திரிகளையும் சமையல்காரப் பையனையும் தவிர வேறு ஒருவருமில்லை. அவருக்குப் பொழுது போகவில்லை; காலாற வெளியே நடையைக் கட்டினார்.

அஜ்மல்கான் ரோடில் எப்பொழுதும் போல் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஸ்கூட்டர்கள், கார்கள்… எல்லோருக்கும் ஏன் இவ்வளவு அவசரம்?

திடீரென்று, காரணம் தெரியாமல் தலைதெறிக்க ஓடும் ஒரு பைத்தியக்காரக் கூட்டத்தினிடையே வந்து அகப்பட்டுக் கொண்டு விட்டோமோவென்று சரப சாஸ்திரிகள் சிந்தித்தார்: ‘டில்லிக்கு வந்திருக்கக் கூடாது; ஆனால் ஒரே பிள்ளை, அவன் வற்புறுத்தும்போது வராமலிருக்க முடியுமா? அவன் என்ன குறை நமக்கு வைத்திருக்கிறான்? சௌகரியங்களுக்குத் தான் என்ன குறைவு?”

சில நாட்களுக்கு முன்பு ஹரிஹரன் தன் நண்பர்களிடையே கூறிக் கொண்டிருந்ததொன்று அவருடைய நினைவுக்கு வந்தது. சர்வாதிகார நாட்டில் ஒரு நாய்க்கு எல்லாவிதமான சௌகரியங்களுமிருந்தன; ஆனால் அதற்கு ஓர் ஏக்கம், தன்னிஷ்டத்திற்குக் குரைக்க முடியவில்லையே என்று.

எவ்வளவு சௌகரியங்கள் இருந்தாலென்ன? தம்முடைய சுய கௌரவத்தைக் காப்பாற்றி கொள்ள முடியவில்லையே; ஹரிஹரன் ஆவேசம் வந்தவன்போல் கத்தினானே. ‘தப்பு, தப்பு, தப்பு’வென்று, எதற்காக அப்படிக் கத்தினான்; ‘நீங்கள் ஆபீஸர், நடராஜன் டைப்பிஸ்ட் என்று மனைவி அடிக்கடி ஞாபகப்படுத்தி வந்ததன் காரணமாக தன் மனைவியின் முன்னால் தன் கௌரவம் போய் விட்டதே என்ற ஆத்திரமா? அல்லது ஆரம்பகால நிகழ்ச்சிகளை மறந்துவிட்டு நன்றி கெட்ட தனமாகப் பேசுகிறோமே வென்று தன்மீதே ஏற்பட்ட கோபமா?

“நமஸ்காரம் சாஸ்திரிகளே…”

சரப சாஸ்திரிகள் திரும்பிப் பார்த்தார். ராகவ சாஸ்திரிகள் ஸ்கூட்டரினின்றும் இறங்கினார்.

“எங்கே இப்படி?” என்று கேட்டுக் கொண்டே ஸ்கூட்டரை தெரு ஓரமாக தள்ளிக்கொண்டு போனார் ராகவ சாஸ்திரிகள்.

வீட்டுக்கு வீடு கால் தேய சென்ற காலம் போய் விட்டது; பிறகு சைக்கிள், இப்பொழுது ஸ்கூட்டர்! இதுவும் கொஞ்ச நாளில் பழகிவிடும். வைதிகத் தொழில் முன்னேறிக் கொண்டு வரவில்லையென்று யார் சொன்னார்கள்?

“நேற்று நடராஜன் வீட்டுக்கு நீங்க போயிருந்ததாகக் கேள்விப்பட்டேன்; சவுத் இந்தியா கிளப்பிலே சொன்னா.”

“ஆமாம்…” ராகவ சாஸ்திரிகள் புன்னகை செய்தார். “ஏன் சிரிக்கிறீர்கள்?”

“மகன் மலை மலையா சம்பாதிக்கிறார். உங்களுக்கு எதுக்கு இந்த வேலை. இந்த எழவுக்கெல்லாம்தான் நாங்க இருக்கோமே.”

கோபத்தால் சரப சாஸ்திரிகளின் முகம் சிவந்தது. தம் தொழிலைப் பற்றித் தாமே ஈனமாக நினைக்கும் இவரைப் போன்றவர்களால்தான் இந்தத் தொழிலுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. இதைப்பற்றி இவ்வளவு மட்டமான அபிப்பிராயத்தை வைத்துக்கொண்டு யார் இவரை வைதிகத் தொழில் மேற்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள்? செய்வது கல்யாணமாயிருந்தாலென்ன? கருமாதியாயிருந்தாலென்ன? செய்கின்ற தொழிலைப் பொறுத்தா அந்தஸ்து ஏற்படுகின்றது; இவர் ஸ்கூட்டரில் போகட்டும், அல்லது ஏரோப்பிளேனிலேயே பறக்கட்டும்; காலத்துக்கேற்றவாறு சௌகரியங்கள் செய்து கொள்வதில் தவறில்லை; ஆனால் இதை ‘எழவுத் தொழில்’ என்று சொல்லிக் கொண்டே ஏன் செய்ய வேண்டும்? இயந்திரம் போல் மந்திரங்களை மனப்பாடம் பண்ணி ஒப்பிப்பதில் என்ன பிரயோஜனம்? இனிமேல் சாஸ்திரம் படித்தவர் எதற்கு? கிராமபோன் ரிக்கார்டுகள் போதுமே!

“என்ன பேசாமல் நிக்கறேள்? ஏதாவது தப்பா பேசிட் டேனோ?”

சரப சாஸ்திரிகள் அவருடன் வழக்காட விரும்பவில்லை. மனத்தில் உணர்ச்சிக் கொந்தளிப்பு அதிகமாயிற்று. ஊருக்குப் போக வேண்டுமென்ற எண்ணம் விசுவரூபமெடுத்தது.

“நடராஜன் வேண்டியவன், போனேன்… உங்களுக்குத் தான் நடராஜ தீட்தரைத் தெரிஞ்சிருக்குமே…”

“ஓ! பேஷா தெரியும்…! அவர் வீட்டிலே ஒரு காரியம்னா ஜில்லாவே அமர்க்களப்படுமே!”

“அது அப்போ . இப்போ , நடராஜ தீட்சதர் போயாச்சு. எட்டு திக்கிலேயும் விட்டெறிஞ்ச கை ஒடிஞ்சு கிடக்கு. நடராஜன், அவர் பேரன், ஊரை விட்டு ஊர் வந்து அவதிப்படறான். ஸ்கூட்டர்லேயே ஊர் சுத்தற உங்களாலே ஒரு வார்த்தை வந்து துக்கம் விசாரிக்க முடியாத அளவுக்கு கேட்பாரற்றுப் போச்சு! அப்போ ஜில்லா அமர்க்களப்பட்டா என்ன, படாட்டா என்னா?”

சரப சாஸ்திரிகளுக்கு மூச்சு வாங்கியது. உணர்ச்சி வசப்பட்டு பேசியிருக்கக் கூடாது.

“எதுக்கு இப்படிக் கோபம்? எனக்கு நேற்று சாயங்காலம்தானே செய்தியே தெரியும்?”

“உங்க பேரிலே என்ன கோபம்? உலகமே அப்படி ஆயிடுத்து. கண்ணுக்குத் தெரியற விஷயங்களுக்குத்தான் மதிப்பு. நகை, நட்டு, பங்களா, கார் இதெல்லாம் கண்ணுக்குத் தெரியும். நன்றி, பாசம், இதெல்லாம் தெரியுமா?”

“அப்போ வரட்டுமா?” என்று ஸ்கூட்டரைக் கிளப்பினார் ராகவ சாஸ்திரிகள்.

சரப சாஸ்திரிகள் மௌனமாக மேலே நடந்தார். உணர்ச்சி செறிவைத் தளர்த்த வெளியே வந்தார். ஆனால் அது, இப்பொழுது இன்னும் செறிந்திருந்தது.

சிந்தித்துக் கொண்டே போனவருக்கு பின்னால் வந்த கார் ‘ஹாரன்’ சத்தம் காதுகளில் விழவில்லை . கிறீச்சிட்டுக் கொண்டு அந்தக் கார் நின்றது. திடுக்கிட்ட நிலையில் சாஸ்திரிகள் தெரு ஓரமாகப் பாய்ந்தார். யார் மீதோ மோதிக் கொண்டு கீழே விழப் போனார். அவன் அவரை அப்படியே தாங்கிக் கொண்டான்.

“சாமீ… நீங்களா?”

சரப சாஸ்திரிகள், தம்மைத் தாங்கிக் கொண்டவனை ஏறிட்டு நோக்கினார். இரத்தினவேலு வைத்தியன்!

“வேலு, இங்கே எங்கேடா வந்தே?”

“மூணு மாசமா இங்கேதான் இருக்கேன் சாமி…”

“இங்கே யார் இருக்கா உனக்கு?”

“பட்டணத்திலே இருந்த என் மவனுக்கு இங்கே மாத்தலாயிடுச்சி. ஒரு வருஷமா இங்கேதானிருக்கான்.”

வேலுவின் ‘கை’ ஆகி வந்தது. ஊரில் எந்தக் குழந்தைக்கு முடி இறக்கினாலும் அவனைத்தான் கூப்பிடுவார்கள்! சலூன் என்று தனிக் கடையாய் ஒன்றும் வைத்ததில்லை. ஆனால், வந்த வருமானத்தை வைத்துக் கொண்டு முன்னுக்குக் கொண்டு வந்து விட்டான்! சரப சாஸ்திரிகளும் ஊரிலிருந்த வரை அவனைத் தவிர வேறு யாரிடமும் போக மாட்டார். நல்ல குணம், எடுப்பான போக்கு… கடைசிக் காலத்தில் அவனும் டில்லிக்கு வந்து விட்டானே!

“எப்படி சாமி இருக்கீங்க?”

“ஹும்…”- சரப சாஸ்திரிகள் பதில் சொல்லாமல், அலுத்துக் கொண்டார்.

“என்ன சாமி, அலுத்துக்கறீங்க?”

“ஏதோ இருக்கேன். என்னத்தைச் சொல்றது?”

“சின்ன ஐயா இங்கே பெரிய வேலையிலே இருக்குன்னு கேள்விப்பட்டேனுங்களே..”

“அவன் இருந்தா என்னடா? நான் தர்ப்பை பிடிக்கிறவன் தானே?”

“எல்லாம் படிச்சவங்க இப்படிப் பேசலாமா?”

“நான் சொல்றதிலே என்னடா தப்பு?”

“அவங்க அவங்க தொழில் அவங்களுக்கு உசத்திதான். நீங்க தர்ப்பை பிடிக்கிறீங்க. நான் கத்தி பிடிக்கிறேன். இன்னொருத்தன் பேனா பிடிக்கிறான்… இதிலே என்னா வந்ததுங்க?”

சரப சாஸ்திரிகள் அவனை ஆச்சரியத்துடன் நோக்கினார். அவன் குரலில் ஒலித்த தன்னம்பிக்கை அவருக்குத் திருப்தி அளித்தது.

“நீ சந்தோஷமாக இருக்கிறாயாப்பா? உன் பிள்ளை எப்படி இருக்கான்!”

“அவன் கிடக்கிறான். அணிப்பிள்ளை ! நாலு வார்த்தை இங்கிலீஷ்லே தப்பும் தவறுமா படிச்சிட்டான் இல்லே! ‘அப்பா அது செய்யாதீங்க ன்னு என்னை விரட்டிகிட்டே இருக்கான்… ஒரு நாளைக்குப் பாருங்க, யாரோ வீட்டுக்கு வந்தாங்க, அவங்ககிட்டே ‘எங்கப்பா ஊரிலே டாக்டரா இருந்தார்’னு வாய் கூசாமப் பொய் சொல்றான். ஏஞ்சாமி, நீங்களே சொல்லுங்க. என் தொழில் எனக்கு உசத்தி. இதைச் செஞ்சேன்னு சொல்றதிலே என்ன தப்பு? ஆளுங்க மதிப்பை இதை வைச்சா எடை போடணும்.”

சரப சாஸ்திரிகள் வாயடைத்து நின்றார். வேலு கீதை படித்திருக்க முடியாது. ஆனால், அதன் தத்துவம் அவன் அனுபவத்தில் ஊறிக் கிடந்தது.

“என்னாங்க, நான் சொல்றது சரிதானே? நேத்து அவன் கிட்டே சொல்லிட்டேன். ‘இதோ பாருடா உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது. நீ டில்லிக்கு கவர்னராகவே இருந்துட்டுப் போ, நான் ஊருக்குப் போறேன்.னு.”

“ஊருக்குப் புறப்பட்டுட்டியா?”

“ஆமாங்க… பிள்ளையாவது குட்டியாவது… கையிலிருக்கிற வரையில் நம்ம சுய கௌரவத்தைக் காப்பாத்திக்கலாமில்லே…”

“உண்மையான பேச்சு… டிக்கெட் வாங்கிட்டியா?”

“இல்லீங்க, நாளைக்குத்தான் எடுக்கப் போறேன்.”

“எனக்கு ஒண்ணு செய்வீயா?”

“என்னாங்க?”

“எனக்கும் ஒரு டிக்கெட் வாங்கிண்டு வா. ஊருக்கு வந்ததும் பணம் கொடுத்துடறேன். துணைக்குத் துணையுமாச்சு…”

இப்பொழுது, வேலு வாயடைத்து நின்றான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *