கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 4, 2023
பார்வையிட்டோர்: 3,317 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1. வேணுங்கறதை கேட்டு வாங்கித் தின்னு | 2. உனக்கு செல் ஒரு கேடா | 3. அடுத்த வாரமே வச்சுக்கலாமா!

மூங்கில் பாளையம் மட்டும் மாலை நான்கு மணிக்கே இருட்டி விட்டதா என்றுதான் சந்தேகமாயிருந்தது. மழை இன்னும் சித்தங்கூரியத்தில் சடசடவெனப் பிடித்துக் கொண்டால் எப்படியும் மணிக்கணக்காகப் பெய்து தள்ளி விடும் என்றுதான் இடறிக் கொண்டிருந்தது. நேற்றைக்கெல்லாம் இந்த நேரம் சீனாபுரம், பெருந்துறை பகுதிகளில் மூனு ஒழவு மழை கொட்டித் தீர்த்ததாகக ஊருக்குள் காலையில் பேசிக் கொண்டார்கள். மழை பெய்கிறதோ இல்லையோ வீட்டில் மின்சாரம் போய் விட்டது. வீட்டினுள் புழுக்கம் அதிகமாகவே சாமிநாதன் எழுந்து வாசலுக்கு வந்தான்.

ஊரின் வடகோட்டு ஒதுக்குப்புறமாகத் திண்டில் மதுரை வீரன் கிழக்குப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு தான் அவருக்குப் புதிதாய் வர்ணம் பூசியிருந்தார்கள். பெய்யப் போகும் கடும் மழையில் நனைந்தாரென்றால் நிச்சயம் அவருக்கு உடல் நலம் கெட்டு விடும். பிற்பாடு அவரை ஒன்னரைக் கிலோ மீட்டர் கைப்பிடித்து அரசாங்க மருத்துவமனைக்குக் கூட்டிப் போக வேண்டும்.

அரசாங்க மருத்துவமனை ஊத்துக்குளி ரோட்டில் கடைசியில் இருக்கிறது. இவருக்குப் போடும் ஊசி பெரியதாக இருக்க வேண்டும். டாக்டர் பெரிய ஊசியை தோளில் ஏவுகணை தூக்குவது போல தூக்கிக்கொண்டு ஓடி வந்து மதுரை வீரனின் புட்டத்தில் ஏற்ற வேண்டும். சாமிநாதன் மனம் போன போக்கில் யோசித்துச் சிரித்துக் கொண்டான்.

தன் வீட்டிற்குச் சற்றுத் தள்ளி உபயோகப்படாமல் கிடந்த ஆட்டாங்கல் மீது அமர்ந்து சம்மணம் போட்டுக் கொண்டான். இவன் சிறுவனாய் இருந்த காலம் தொட்டே இந்தக் கல் கேர்பாரற்று இங்கேயே தான் கிடக்கிறது. அம்மா மூங்கில் பாளையத்தில் இருந்த போது சண்டை

என்று வந்து விட்டால் அப்பனோடு கோவித்துக் கொண்டு இந்தக்கல் மீது தான் உர்ரெனக் கிழக்கு பார்த்தபடி விடியுமுட்டும் உட்கார்ந்து கொள்ளுமாம்.

இவன் விசயமங்கலம் அரசாங்கப் பள்ளியில் ஐந்தாவது வகுப்பு படிக்கையிலேயே அம்மா அப்பனோடு சண்டை போட்டுக் கொண்டு சொந்த ஊரான பவானிக்கே போய்விட்டது. இவனுக்கும் இப்போது வயது இருபத்தி மூன்றாகிவிட்டது. நோம்பி நொடி, இழவு காரியதிற்குக் கூட அம்மா இதுவரை மூங்கில் பாளையத்திற்குள் காலடி எடுத்து வைக்கவில்லை. இவனாகத்தான் தீபாவளி சமயம் பார்த்தோ பொங்கல் சமயம் பார்த்தோ அம்மாவைப் பார்க்க பவானி போய் வருவான். இன்று வரை, ” அம்மாவுக்கும் உனக்கும் என்ன சண்டை ?” என்று அப்பனிடம் இவன் கேட்டதில்லை.

அப்பனும் அம்மாவைப் பற்றி இன்று வரை ஒரு தப்பு சொல்லிப் பேசியும் கண்டதில்லை இவன். சாமிநாதன் டவுசர் ஜட்டிப் பாக்கெட்டிலிருந்து ஹான்ஸ் புகையிலைப் பாக்கெட்டை கையில் எடுத்து இடது உள்ளங்கையில் கொஞ்சம் கொட்டிக் கசக்கி எடுத்து உதட்டுக்குப் பின்னால் இடுக்கிக் கொண்டான். பாக்கெட்டைப் பழையபடி டவுசர் ஜட்டிப்பாக்கெட்டில் திணித்துக் கொண்டான். சைக்கிளில் வந்த பெரியண்ணன் இவனைப் பார்த்து வண்டியை நிறுத்திப் பேசினார்.

“என்றா சாமிநாதா, பூசாரிங்க வேண்டுதலைக்குச் சம்மணம் போட்டு உட்கார்ந்தாப்பிடி உட்கார்ந்துட்டே. மழை பெய்யோணுமின்னு உட்கார்ந்திருக்கியா? பெய்யக் கூடாதுன்னா?”

“ஏன்னா, மழை பெய்யக்கூடாதுன்னு நானு சம்மணம் போட்டுட்டா பெய்யாமப் போயிடுமா? சோத்துக்கு வந்தீங்களா? இன்னாரங் கழிச்சு வந்திருக்கீங்களே?”

பெரியண்ணன் விசயமங்கலம் பஸ் ஸ்டாப்பிலிருக்கும் டாஸ்மார்க் கடையின் சாக்னா கடையில் வேலை பார்க்கிறது.

“இன்னிக்கி தண்ணி போடறதுக்கு வர்றியா?” “தினமும் தண்ணி போடறதுக்கு காசுக்கு நானெங்க போறது?” “நெசமா உங்கிட்ட காசு இல்லியா? நேத்துத்தான செவ்வாக்கிழமெ! தறி ஓட்டி சம்பளம் வாங்கியிருப்பீல்ல? ஒரே நாள்ல காசைப் பூராவும் மூச்சுப் போட்டியா?”

“இந்த வாரம் தறியோட்டம் செரியில்லீண்ணா . மூனு நாள் தான் வேலையே இருந்துச்சு. ஐநூறு ரூவா தான் வாங்கினேன். சந்தைக்குப் போயி காய்கறி வாங்கீட்டு நானும் குடிச்சுப்போட்டு எங்கப்பனுக்கும் ஒரு கோட்டர் வாங்கியாந்தேன். முப்பது ரூவாயோ என்னமோதான் பாக்கெட்டுல இருக்குது”

“இன்னிக்கி என்ன நைட்டு ஷிப்டா?” “எங்கண்ணா … நேத்து மத்தியானம் பாவு மூஞ்சிட்டுது. இனிப் பாவு போட்டாத்தான். பாவு போட்டா போன்ல கூப்புடறேன்னு ஓனரு

சொன்னாப்ல. பேசாம சிப்காட்டுக்கு எதாச்சிம் கம்பெனிக்கிப் போயி சேர்ந்துக்கலாம்னு இருக்கேங்கண்ணா.”

“சரி உங்கிட்ட காசு இல்லாட்டிப் போச்சாது ஒரு எட்டு ஒம்போது மணிக்காட்ட கடைக்கு வா. ஒரு கட்டிங் வாங்கித் தர்றேன். வரட்டா” என்றவர் சைக்கிள் ஏற, “சரிண்ணா ” என்று சாமிநாதன் அவரைத் தாட்டி விட்டான்.

மதுரை வீரனை விசயமங்கல வீதியில் இவன் கைப்பிடித்துக் கூட்டிப் போனால் வீதியிலுள்ள கடைக்காரர்கள் எல்லோருமே வெளியே வந்து வேடிக்கை பார்ப்பார்கள். கூட்டிட்டுப் போறது யாரு?சாமிநாதனா ? மூங்கில் பாளையத்து மாதாரிப் பையனா ? ஒரே நாளில் விசயமங்கலதில் தன் மதிப்பு உயர்ந்துவிடும் என்று யோசித்து அமர்ந்திருந்தவன் முதுகிலும் தலையிலும் பொத்து பொத்தெனப் பெரிய பெரிய மழைத்துளிகள் விழுந்தன. சடச்சடவென வேகம் பிடித்து உடனே நின்றும் போனது.

“டே சாமிநாதா! மழை வர்றாப்பிடி இருக்குதுல்லொ . அங்கே ஏன்டா ஆட்டாங்கல் மேலக் கோந்துட்டு இருக்கே? எந்திரிச்சு இங்க வாடா” கிழக்கு வீட்டின் ஜன்னலில் சரோஜா அக்காவின் குரல் இவனைக் கூப்பிட்டது.

” ஒச்சேனு உண்டுக்கா” என்று கூறிவிட்டு இவனே நாக்கை மெதுவாகக் கடித்துக் கொண்டான். இந்தத் தெலுங்கை வழுவுக்குள் எங்குமே பேசக்கூடாது என்று நினைத்தாலும் வாய் தவறி எப்படியோ வந்து விடுகிறது. ராமசாமிக் கவுண்டர் தோட்டப்புறத்திலிருந்து மயில்கள் கத்தும் சத்தம் குவேக் குவேக்கென கேட்டது.

சரோஜா அக்காவுக்குப் போனவாரம் சிக்கன் குனியா காய்ச்சல் வந்திருந்தது. ஊருக்குள் ஏகப்பட்ட பேருக்கு அந்தக் காய்ச்சல் வந்து போய் விட்டது. இவன் வீடு ஒன்று தான் பாக்கி. சரோஜா அக்கா காய்ச்சலில் படாதபாடு பட்டுவிட்டது. இவன் தான் சைக்கிளில் உட்கார வைத்து டாக்டரிடம் கூட்டிப் போனான். ஒரு ஊசிக்கெல்லாம் சரோஜா அக்காவிற்கு ஏனென்று கூடக் கேட்காமல் காய்ச்சல் அடித்துக் கொண்டேயிருந்தது. மூட்டு மூட்டா வலி உயிர் போவுதுடா சாமிநாதா’ என்று முனகிக் கொண்டேயிருந்தது.

விசயமங்கலம் பொன்னம்பலம் டாக்டர் ஒரு ஊசி, ரெண்டு வேளை மாத்திரையில் காய்ச்சலைக் குணப்படுத்தி விடுகிறார் என்று சனம் அவரிடமே சென்றது. சரோஜா அக்காவின் வீட்டுப்புறத்தில் டிவிஎஸ்

ஒன்று ஸ்டார்ட் ஆகும் சத்தம் கேட்டது. “இனி வாரது எப்போ? நெனப்பு எடுத்தாத் தானா?” என்று சரோஜா அக்காவின் குரல் கேட்டது. ” போனு பண்றேன்” என்ற குரலுடன் டிவிஎஸ் மேலேறி வந்து இவனை நோக்கித் திரும்பியது. இவனைப் பார்த்துச் சின்னதாய் புன்னகைத்து விட்டு முஜீப் மெயின் ரோட்டுக்குச் சென்று பார்ரென முறுக்கிக் கொண்டு போய்விட்டான். சாமிநாதன் கர்ர்ர்ரெனக் காறித் துப்பினான்.

இவனுகளையெல்லாம் ஊருக்குள்ள என்றா சோலி? இங்கென்ன புடுங்கறக்கா வந்தே? என்று தடுத்து நிறுத்திக் கேட்க ஊருக்குள் ஒரு மாதாரிக்கும் தைரியமில்லாமல் போன கொடுமையை எண்ணி மறுபடியும் காறித் துப்பினான். ஊருக்குள் எந்த மாதாரிச்சி நல்லவள் எந்த மாதாரிச்சி கெட்டவள் என்று இவனுக்குப் புரிபடுவதேயில்லை. நல்லவள் என்று நினைத்த கிழகோட்டு வீட்டுக்காரி மல்லிகா பெருந்துறை தேவிச்சித்ரா தியேட்டரில் எவனோ ஒருத்தன் மடிமீது அமர்ந்து முத்தம் கொடுத்துக் கொண்டே சினிமா பார்க்கிறாள்.

அதிலிருந்து ஊருக்குள் எந்தப் பொம்பளையைப் பார்த்தாலும் இவனுக்கு சினிமா தியேட்டர் ஞாபகம் தான் வருகிறது. சாமிநாதன் எழுந்து லுங்கியைச் சரியாக இறுக்கிக் கட்டிக் கொண்டு சரோஜா அக்கா வீட்டுக்குச் சென்றான். சரோஜா அக்கா வீட்டுத் திண்ணையில் காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான்.

“வார்றானுக நேரங்காலம் தெரியாம். ஒரு நூறு ரூவா குடுத்துட்டுப் போன்னா ஈஈன்னு பல்லைக் காட்டீட்டு நாளைக்கு நாளான்னிக்கின்னு சாலாக்கு பேசிட்டு போறானுக!” சரோஜா அக்கா வீட்டினுள் அதும் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தது. இவன் மூச்சு விடாமல் மேலே என்ன தான் பேசுகிறது பார்ப்போம் எனக் காது கொடுத்துக் கேட்டான். ஆனால் அக்கா மறுபடி எதுவும் பேசவில்லை . தட்டம் உருட்டும் சத்தம் மட்டுமே கேட்டது.

சரோஜா அக்கா நல்ல உயரம். உயரத்திற்கு தகுந்த சதைப் பிடிப்பாக இருக்கும். வயது நாற்பத்தி ஆறு இருக்கும். தலையில் நான்கைந்து நரை முடிகள் இருந்தும் கோத்ரேஜ் மை பூசிக்கொள்ளும். முகத்தில் சின்னதாக சுருக்கம் இருக்கிறது என்றாலும் கிட்டக்கே சென்று பார்த்தால் தான் அது தெரியும். எந்த நேரமும் வாய் வெற்றிலை பாக்கு மென்றபடி தான் இருக்கும். விசயமங்கல வீதியில் கடை கண்ணிக்குப் போனாலும் குதிரை மாதிரித்தான். நான்கு பேர் நின்று திரும்பிப் பார்த்து விட்டுத்தான் போவார்கள். பார்க்க முப்பது வயசுக்காரி மாதிரி சுறுசுறுப்பாய் இருக்கும். பெண்ணைப் போன வருஷம் தான் நசியனூருக்கு கட்டிக் கொடுத்திருந்தது. அது ஒரு பாப்பாவையும் பெற்றெடுத்து விட்டது இப்போது.

சரோஜா அக்காவின் வீட்டுக்காரன் மாரனுக்கு வயது ஐம்பத்தி ஐந்து இருக்கும். ராமசாமிக் கவுண்டர் தோட்டத்தில் தான் பொழுதுக்கும் வேலை. சாமிநாதனின் அப்பன் சுப்பனோடு தான் எந்த நேரமும் திரியும். அவர் பையன் முருகேசனுக்கும் சாமிநாதனுக்கும் ஒரே வயது தான். முருகேசன் இப்போதெல்லாம் அதிகம் வீடு தங்குவதில்லை. குடிக்க வேறு பழகிவிட்டான் என்று சரோஜா அக்காவுக்கு வருத்தம்.

சரோஜா அக்காவின் வீட்டுக்காரன் மாரனுக்கு சரோஜாவின் சங்கதிகள், தில்லுமாரித்தனங்கள் எல்லாம் தெரியும் தான். எதும் ‘ஏன்டி இப்படி?” என்று கேட்க முடியாது. ஒருமுறை கேட்கப் போய்த்தான் வீட்டில் பெரும் சண்டையாகி விட்டது. “நீ கொண்டாந்து அவுக்கறதை வெச்சு நானென்ன மசுரையா புடுங்க முடியும்? கேக்கறதுக்கு வந்துட்டான் பாடுவாசி” என்று ஊரே கேட்குமாறு கத்தலை ஆரம்பித்து விட்டது. பட்டு அனுபவிச்சாத்தான் புத்தி வரும் என்று மாரனும் விட்டு விட்டான்.

அத்தோடு சரோஜாவுடம் பேச்சும் அதிகம் அவன் வைத்துக் கொள்வதில்லை. பையனுக்கும் அம்மாவின் சங்கதிகள் அரசல் புரசலாக தெரியவந்த காலம் தொட்டே அவனும் அப்பனைப் போலவே ஒதுங்கிக் கொண்டான். ஆனால் சரோஜா அக்கா இதற்காகவெல்லாம் மனசை விட்டுவிடவில்லை .

மாரன் தண்ணி போட்டு விட்டு வந்து விட்டான் என்றால் ஏதாவது ஒவ்வொரு முறை சாமிநாதன் அவரிடம் மாட்டிக் கொள்வான். ‘உன் கிட்டப் பேசப் பேச எனக்கு போதை ஏறிக்கிட்டே இருக்குதடா சாமிநாதா ! என்னாங்கறே! சாமத்துல நானு எங்கூட்டுத் திண்ணைலதான் வாசப்படிக்கிட்ட உருண்டுட்டு கிடக்கிறன்ல, நம்முளுக்குத்தான் தூக்கம் வருதா ஒன்னா? வெடியறதுக்குள்ள ஒரு மூனு மணி நேரம் தூங்கறதே சாஸ்தீன்னா பாத்துக்கோ. பொறண்டுட்டு உருண்டுட்டே தான் கிடப்பேன். என்னையத் தாண்டீட்டே ஒருத்தன் ஊட்டுக்குள்ள போறான்டா ! அப்புறம் அரைமணி நேரம் கழிச்சுப் பார்த்தா என்னைத் தாண்டீட்டுத்தான் வெளிய போறான். யாரு எவன்னே தெரிய மாட்டீங்குது சாமிநாதா ! விசயமங்கலத்துப் பக்கமா போக முடியுதுங்கறே? உன் பொண்டாட்டி இப்புடியாமா? இப்புடியாமான்னு ஆளு மாத்தி ஆளு கேக்கறாங்கடா. நானு என்னத்தீன்னு சொல்லுவேன்?”

“எவன்டா அவன் தாண்டீட்டு போறவன்னு சத்தம் போட வேண்டீது தான?”

“போடலாம். இவ எந்திரிச்சு வந்து எவன் வந்தா உனக்கென்ன? சூத்தை இறுக்கீட்டு கெடக்க மாட்டியான்னு புடிச்சுட்டாள்னா? இவ சத்தத்தை சாமத்துல எவன் அடக்குறது?”

“அப்படின்னா குண்டாந்தடி ஒன்னு வெச்சுக்கோ. தாண்டீட்டு போறப்ப ஒன்னு போடு அவங்கால்ல!” என்பான்.

சரோஜா அக்கா வேலைக்கு என்று அரமாலுமே போகாமலும் வீட்டோடு இப்படி கிடப்பதுமில்லை. கிடைத்த வேலைக்குத் திடீரென போகவும் செய்யும். உள்ளூர்ப் பெண்கள் சிலரோடு பெருந்துறை சிப்காட்டில் ஏதாவது பிளாஸ்டிக் கம்பெனிக்கோ, கட்டட வேலைக்கோ

போகும் தான். எந்த இடத்திற்கு வேலைக்குப் போனாலும் ஒரு வாரம் தான். அதற்குள் அங்கே மேஸ்திரியையோ, மேனேஜரையோ காட்டிக் காட்டிப் பிடித்துக் கொள்ளும்.

எப்படியும் வேலைக்குப் போன இடத்தில் ஒரே வாரத்தில் இரண்டு மூன்று கள்ளப் புருஷன்களைச் சம்பாதித்துக் கொள்ளும். கூடவே வரும் பெண்களுக்கும் சரோஜா அக்கா போல நோகாமல் நோம்பி கும்பிடும் ஆசை இருக்கும் தான் என்றாலும் சரோஜா அக்காவின் சாமார்த்தியம் அவர்களுக்கு வராது. ‘வேறயாராச்சும் இருக்காங்களா?’ என்று கள்ளப் புருஷன் யாராவது வாய் திறந்து கேட்டால் தான் ஆளைக் கை நீட்டிக் காட்டும்.

கள்ளப் புருஷன்களைச் சம்பாதித்துக் கொண்டால் வீடே கதி என்று தான் கிடக்கும். ஒரு கம்பெனி மேனேஜர் சரோஜா அக்காவுக்கு நோக்கியா செல் வாங்கிக் கொடுத்த்தும் அப்படித்தான். இப்போது அக்கா செல் நெம்பரோடு தான் இருக்கிறது. அப்புறம் மாதக் கணக்கில் கியர் வண்டிகள் மூங்கில் பாளையத்திற்குள் நுழைந்து அக்கா வீட்டு முன் நின்று போய்க் கொண்டிருக்கும்.

சாமிநாதன் எந்த ஊருக்குத் தறி ஓட்டவோ வேறு வேலைக்கோ சென்றாலும் அங்கே பழகும் ஆட்களிடம் ஊர்ப் பெயரைச் சொன்னதும், “உங்க ஊர்ல சரோஜான்னு ஒரு குதிரை இருக்குமே! இப்ப எப்படி இருக்குது? நல்லா இருக்குதா? இப்பயும் அதே மாதிரி தான் போயிட்டு வந்துட்டு இருக்குதா? முன்னே எங்கிட்டே நல்லாப் பழகுச்சு” என்றே சொல்வார்கள். இவனுக்கு ஏண்டா ஊர் பெயரைச் சொன்னோம் என்றிருக்கும்.

இப்போது யார் கேட்டாலும் விசயமங்கலம் என்று சொல்லிப் பழகிக் கொண்டான். சென்னை சென்று யாராவது இவனை விசாரிக்கையில் மூங்கில் பாளையம் என்று சொன்னால், “அங்க ஒரு குட்டி சோக்கா இருக்குமே! பேரு சரோஜா. இப்போ நல்லாகீதா? இல்ல புட்டுக்கிச்சா? இன்னாடா பேமானி திருட்டு மிழி முழிச்சுனு கீறே?” என்று கேட்டு விடுவார்கள் என்று தான் யோசிக்கிறான் சாமிநாதன்.

“சரோசா வூடு இதா? அதா? அப்படின்னு கேட்டுட்டுப் புட்டுர் பைக்குல யாராரோ வந்து இவுத்திக்கி வண்டியெ நம்மூட்டு முன்னாடி நிறுத்தீட்டு என்னையக் கேட்டுட்டு போறாங்கடா சாமிநாதா, இவ என்ன இன்னம் இப்படி? பேத்தி எடுத்துட்டா… இன்னம் இவ ஆட்டம் அடங்க மாண்டீங்குது. நீ லொக்கா லொக்கானுட்டு குப்புனு போயி அவ மடியில் விழுந்துடாதடா சாமீ….. அப்புறம் வெடிய வெடிய சம்பாதிச்சுக் கொண்டி அவ மடியில் தான் அவுத்து உட்டுட்டு நிப்பே! அவளுக்கு ஒரு தராதரமும் கிடையாது பாத்துக்க. பிய்யி மேல ரெண்டு ரூவாக்காசு கெடந்தாலும் சுத்தீம் புத்தீம் யாராச்சிம் பாக்கறாங்களா? அப்படின்னு பாத்துட்டு எடுத்துட்டு போயிக் கழுவி வெச்சுக்குவா!” என்றே இவன் அப்பன் இவனிடம் சொல்லிக் கொண்டேயிருப்பான்.

சரோஜா அக்காவிடம் சாமிநாதன் பேசிக் கொண்டிருப்பானே ஒழிய அவளது இந்த மாதிரியான சமாச்சாரங்களைப் பற்றி எப்போதும் பேச மாட்டான். என்ன தேவையோ அதை மட்டுமே பேசிவிட்டு எழுந்து விடுவான். செலவுக்கு காசில்லை என்றால் கேட்டு வாங்கிக் கொள்வான்.

ஊர் சுற்றிக்கொண்டு வந்த மணி இவனைப் பார்த்து பேருக்குத் துளி வாலை ஆட்டிக் காட்டி விட்டு வாசல் படி மீது கிடந்த சாக்கு விரிப்பில் உடலைக் கிடத்தி, வீட்டுக்குள் ஒரு பார்வை பார்த்துவிட்டு தலையை முன்னங்கால்களில் சாய்த்துப் படுத்துக் கொண்டது. சமயம் பார்த்து வாசலில் போடப்பட்டிருந்த பந்தலில் சடச்சடவென பெரும் துளிகள் விழுந்து மழை வேகமெடுக்கத் துவங்கியது. பந்தலுக்குள் கயிற்றுத் தூக்கில் சரோஜா அகாவின் பாவாடை, ஜாக்கெட்டு மூனண்ணம் காய்ந்து கொண்டிருந்ததை உருவி எடுத்துக் கொண்டு வந்து திண்ணைத் தூக்கில் தொங்கவிட்டு விடலாமா என்று யோசித்தவன் ஒன்றும் செய்யாமல் மழையை வேடிக்கை பார்த்தபடி இருந்தான்.

சரோஜா அக்கா கையில் காலி பியர் பாட்டிலோடு வீட்டினுள்லிருந்து வெளிவந்து இவனைப் பார்த்தது. “மணி தடம் விட்டு எந்திருச்சு திண்ணை மூலைக்குப் போ” என்று சத்தம் போட்டதும் நாய் எழுந்து திண்ணைக்கு ஏறியது. சரோஜா அக்கா வாசலுக்கு இறங்கிப் பந்தலைத் தாண்டி வேலிப்பக்கமாக ஓடியது. வேலியை ஒட்டிக் கிடந்த பெரிய மொடாவினுள் பாட்டிலை டங்’ எனப் போட்டு விட்டுத் திரும்பிப் பந்தலுக்கு வந்தது. பாவாடைகளையும் ஜாக்கட்டுகளையும் மளாரென உருவி எடுத்தோடி வீட்டுக்குள் போட்டு விட்டு வந்து திண்ணையில் கதவுக்கு அருகாமையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டது. மடியைப் பிரித்து வெற்றிலை பாக்கை எடுத்தது.

“சாரலடிக்குது பார்டா சாமிநாதா. மேல திண்ணைக்கு ஏறி வா. அப்பலையாவே வந்துட்டியா? தே ஒன்னுமே பேசாம உம்முன்னு பொண்டாட்டியத் தின்னவங்கணக்கா உக்கோந்துட்டே? ஒரு சத்தம் போட்டிருந்தீன்னா வந்திருப்பேன்ல” என்று சரோஜா அக்கா சொன்னதும், சாமிநாதன் அப்படியே நகர்ந்து கொண்டே மேலே வந்து சுவறில் அக்காளுக்கு அருகிலேயே சாய்ந்து கொண்டான்.

“எங்க முருகேசன் எங்க தான் சாமிநாதா வேலைக்குப் போறான்? தறிக்குடோனுக்கு போவறது இல்லியாட்ட இருக்குது. ஊட்டுக்கு அவன் காசு குடுத்து ஆறு மாசத்திக்கும் மேலயே ஆகிப் போச்சு. எப்போ ஊடு வர்றான் எப்போ போறான், எங்க போறான்னு ஒன்னும் தெரிய மாட்டீங்குது ! உன்கிட்டயாச்சிம் எதாச்சிம் சொல்றானா?”

“ஒருக்காப் பாத்தா சாக்னா கடைக்குள்ளார வேலைக்குச் சேர்ந்துட்டேன்னு நின்னுட்டு இருக்கான். ஒருக்கா மேக்கூர்காரரோட குப்பை லாரிக்குப் போயிட்டு இருக்கன்டாங்கறான்.”

“எப்பிடியோ அவன் செலவுக்கு அவன் தாட்டிக்குவானாட்ட இருக்குது. தண்ணி பட்டையாப் போடுவானாட்ட இருக்குது. இரவத்தி ரெண்டு வயசு தான் ஆச்சு. குடி என்ன குடி அவனுக்கு வேண்டிக் கிடக்குது? இப்பப் புடிச்சுக் குடிச்சு கொடலு குந்தாமணி எல்லாம் வெந்து பாடை ஏறிடுவான்டா. எங்கிட்டே மொகங்குடுத்து பேசுறதீவெ அரமாலும் உட்டுட்டான். கண்டாக்கூடத் திலுப்பீட்டுப் போறான். நான் ஆக்கி வெச்சிருக்குற சோத்தை மட்லும் வந்தா கொட்டிக்கிறான். நீயாச்சும் அவன் கிட்ட சொல்லலாம்லடா சாமிநாதா?” மழை பலமாகவே பிடித்துக் கொண்டது. இப்போதைக்கு ஓயாது என்பது மாதிரி பெரும் பெரும் துளிகளாக பெய்தது. பெருத்த இடி ஒன்று கிழக்கே விழுந்தது. “நானெல்லாம் அவன்கிட்ட ஒன்னும் சொல்ல முடியாதக்கா. நான் சொன்னா கேக்குற ஆளா அவன்? அப்புடித்தான் நானென்ன பெரிய மனுசனா புத்தி சொல்ல? நானும் அன்னாடங்காச்சி, அவனும் அன்னாடங்காச்சி. தானிக்கிம் தீனிக்கும் செரியா இருக்குது”

“ஏன்டா முருகேசா இப்புடின்னு ஒரு வார்த்தை நீ அவனைக் கேட்டா புத்திமதி சொல்றாப்ல ஆயிடுமா?”

“நீ என்ன பெரிய கெஜட்டான்னு அவன் என்னைத் திருப்பிக் கேட்டுட்டான்னா? நானு எங்க கொண்டி மூஞ்சியை வெச்சுக்கறது? ரெண்டு பேரும் வீதியில் கட்டுமாரு கட்டீட்டு என் ஹச் ரோட்டுல உருள வேண்டியது தான். நாஞ் சொல்றன்னு ஏதும் நெனச்சிக்காதே. நீ பண்றதும் தப்பு தானே?”

“எங்கிட்டெ என்ன நீ பெருசா தப்புக் கண்டு பிடிச்சே? ஓ! நீ எனக்கு நாயம் சொல்ல வர்றியா?”

“நான் தான் மொதல்லயே சொல்லிட்டேன்ல, ஏதும் நெனச்சிக்கபுடாதுன்னு . முருகேசன் தண்னி போடறான்னு சொல்றே சரி, அவனுக்கு வேற நோக்காடு வந்தா தண்ணி போடறாங்கறே? இப்போ சித்த முந்தி ஆட்டாங்கல்லு மேல் தான் உக்கோந்துட்டு இருந்தேன். அந்த மேக்கூர் பாய் பயல் டிவிஎஸ்ல என்னைப் பார்த்து ஒரு இளிப்பு காட்டீட்டு அவன் பாட்டுக்குப் போறான். அவனை நானும் பார்த்து இளிப்பு காட்ட முடியுமா? உன் பையனைப் பார்த்து இதே மாதிரி எத்தனை பேரு பல்லைக் காட்டியிருப்பாங்க? ரோசனை பண்டுனியா?”

“பல்லைக் காட்டினா காட்டீட்டு அவிங்க பாட்டுக்கு போயிச் சாட்டாறாங்க. இவனுக்கு எவத்திக்கி கொடையுதாம்?”

“பாத்தியாக்கா.. இப்படி பேசுற உங்கிட்ட இனி எவன் பேசுவான்? உனக்கே தெரியோணும் இந்தச் சங்கட்டமெல்லாம் “

“சரி, நான் இதைப் பேசலை உடு. சீரழிஞ்சு சீப்பாத்துக் கெடக்கட்டும் அவன். எனக்கென்ன வந்துச்சு. ஒரு பொண்ணைப் பார்த்து கட்டி வெச்சுட்டா இவன் ஆட்டமெல்லம் அடங்கீட்டு போவுது. அவ வந்து இடிச்சாத்தான் அடங்குவான்னு இருந்தா அதை மாத்தவா முடியும். என் தம்பி புள்ளை மலைச்சீனாபுரத்துல படிக்கப் போயிட்டு இருக்காள்ல. அவளைப் புடிச்சு கட்டி வெச்சுடறேன். பார்த்துட்டே இரு நீயி. இப்பவே அவ எவ்வளவு வெகரம்ங்கறே! சரி அதை உடு, உங்கொப்பன் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சோறு ஆக்கிட்டுத் தடுமாறீட்டு கெடக்கும்? கலியாணம் பண்டுற ரோசனை உனக்கு இருக்குதா? இல்லியா? ஒரு எட்டு நீயும் அந்த சின்னச்சாமியும் பொண்ணு தேடீட்டு சுத்தீட்டு இருந்தீங்க, அப்புறம் உட்டுட்டீங்களே ஏன்? ஒன்னு சரியா வரலீன்னா இன்னொன்னு சரியா வந்துட்டுப் போவுது. ஒரேயடியா உட்டுட்டா

பொண்ணுக்காரன் ஊடு தேடியா வந்து இந்தா மாப்ளே என் பொண்ணு அப்படின்னு நிப்பான்? உங்கொப்பனை நினைச்சாத்தான் எனக்கு சங்கட்டம்”.

“அவருக்கென்ன சங்கட்டம்? ஓடற பாமபை மிதிக்கிற வயசுன்னு எங்களைத்தான் சொல்லுவாங்க. இவுரு முந்தா நேத்து பண்டுன காரியம் தெரியுமாக்கா? ஆறு மணிக்காட்ட கவுண்டரு தோட்டத்துல இருந்து வந்த மனுசன் தொறப்புக்குச்சி போட்டு ஊட்டை நீக்கீட்டு உள்ளார போயிருக்காரு. பொறவுக்காலயே சாரைப் பாம்பொன்னும் உள்ளார முட்டியிருக்குது. பார்த்துட்டுக் கையில் புடிச்சுக் கொண்டி அருவாமனையில் தலைய அரிஞ்சு மேல் தோலை உருவி வீசீட்டு இத்திச்சோடு இத்திச்சோடா துண்டாப் போட்டு எண்ணெய வடைச்சட்டீல ஊத்தி பொரிச்சு வச்சுட்டு உக்கோந்துட்டு இருந்துச்சு. என்னையக் கண்டதும் கோட்டர் வேணுமுன்னுட்டுது. பின்ன வாங்கிக் குடுத்ததும் குடிச்சுப் போட்டு அதையத் திங்குது. சரவாங்கிக்கு நல்லது நீயும் தின்னுடாங்குது. அந்தக் கருமத்தை நீயே தின்னுக்கோன்னு சொல்லிட்டேன். சீனாக்காரன் தான் பாம்பு, பல்லியெப் புடிச்சுத் திம்பானாம். எங்கப்பன் சீனாக்காரனாயிட்டுது.”

“சரவாங்கி நோவுக்கு அது நல்லது தான். சீனாபுரத்துல இன்னொரு பொண்ணு இருக்குது உனக்குப் பாக்கலாமாடா?”

“ஏக்கா, என்னோட சாதகமே செரியில்ல. ஏழுல செவ்வாய் இருக்குதாமா. ஏழுக்கு ஏழு தான் சூட் ஆகுமாமா. நானும் நாலஞ்சி புள்ளைங்களைப் பாத்துட்டேன். ஒருத்திக்கு நடு மூஞ்சீல கோணை. கோபி பக்கத்துல ஒருத்தி அழகா செவப்பா இருந்தா . ஆனா காது கொஞ்சம் மந்தமாம். அவளைக் கட்டீட்டு வந்து எத்தனை நாளைக்கி கத்திக் கத்தி பேசியே சீரழியறது? உப்பு எடுத்தான்னு சொன்னம்னா சக்கரை தான எடுத்துட்டு வருவா? அதுமில்லாம குருபலன் எம்பட சாதகத்துல இப்போ இல்லியாமா. தேடீட்டு போனாலும் இப்படித்தான் சொத்தை சொத்தையா கிடைக்குமாமா. அப்படித்தான் ஆயிட்டும் இருந்துச்சு. பேசாம லதாவையே கட்டிக்கலாம்னு இருக்கேன்”

“யாரு, அந்த பெரிய வீரசங்கிலிப் புள்ளையையா? அதையத்தான் ரெண்டு வாட்டி விசயமங்கலம் பஸ்ஸ்டாப்கிட்ட பார்த்திருக்கேனே. உன்னையாட்டமே ஒல்லிதான? கண்ணு ரெண்டும் பொடப்பொடன்னு உருண்டையா இருக்குது அதுக்கு. ஆனா புள்ள உன்னைய விட நல்ல

கலரு. இப்பத்தான் ஊத்துக்குளியில் பத்தாவுதோ என்னமோ படிக்கிறாள்னு சொன்னே! அதெங்கியோ, பாக்குறக்கு இன்னும் பால் குடியே மறக்காத புள்ளையாட்ட இருக்குதுடா”

“அது பாக்கத்தான் அப்படி, பத்தாவது ரெண்டு பாடத்துல பெயில் ஆயி டுட்டோரியல் படிச்சுட்டு இருக்கா. பேச்செல்லாம் எப்படிங்கறே? பெரிய பொம்பளைங்க பேசுறாப்புடி தான். எல்லா விவரமும் தெரியுதுக்கா அதுக்கு . ஊட்டைப் பாக்குறதுக்கு ஒரு நாளைக்கு வர்றேன்ங்குது. உங்கொம்மாளைப் போயி ஒரு நாள் பார்த்துட்டு வரலாம்ங்குது . கர்ச்சீப் குடுத்தா வாங்க மாட்டீங்குது. வாங்கீட்டா ரெண்டு பேருக்கும் சண்டை ஆயிடுமாமா. எனக்கே தெரியாது இதெல்லாம். ஆனா அது தெரிஞ்சு வெச்சிருக்குது. மொதல்ல ஒரு விசுக்கா அப்படி ஆயிருக்கா?’ன்னு கேட்டதுக்கு எம்பட கன்னத்துல சப்புனு ஒரு அறை உட்டுட்டா.

“சப்புன்னு அடிக்கிறாளா? இதென்னடா அதிசியமா இருக்குது?” “ஏகப்பட்ட தடவை நானு அவகிட்ட ஈடு தின்னுட்டனக்கா. அவ என்னோட கையை எடுத்து மடியில் வெச்சுப் புடிச்சுக்குவாளாமா. நானு அவ கையைப் புடிச்சு எம்பட மடியில் வெச்சுக்கிட்டாலும் ஈடு போடுவா”

“பெருந்துறை சினிமா தியேட்டருக்கெல்லாம் அவளைக் கூட்டிட்டு போவியா? உங்கூட வந்துருதா அந்தப் புள்ள?”

“வராம என்ன! சனிக்கிழமை நாள்ல வந்துடுவா. ஊட்டுல ஸ்பெசல் கிளாஸ் இருக்குதுன்னுட்டு வருவா. திருட்டுக் கொரத்திக்கி அந்த விவரமெல்லாம் இருக்குது”

“தோள் மேல் கையைப் போட்டுட்டு படம் பாப்பீங்களா?” “க்கும், கையைத் தட்டி உட்டுட்டு இருட்டுலயே என்னை மொறைப்பாக்கா. யாரு இதெல்லாம் உனக்கு சொல்லிக் குடுத்துது?ன்னு கேப்பாக்கா. நீ பழகுற பழக்கம், சாவுகாசமே செரியில்லைன்னு அவபாட்டுக்குப் பேசுவா”

“இதென்னடா இது உலவத்துல இல்லாத அதிசியமா இருக்குது. அப்போ நீ வெட்டியா அவளுக்கு செலவு பண்டீட்டு சுத்துறே! காசு இப்பிடியும் போவுது பாரு. நானெதுக்காச்சிம் அத்து அவசரத்துக்கு கேட்டா , எங்கிட்ட ஏதுக்கா காசு? தறி ஓட்டமே இல்லே’ன்னு பாட்டுப் பாடுவே. செரி அவுளுக்கு சீலை எடுத்துக் குடுத்திருக்கியா? இல்ல சுடிதாரா?”

“ஒன்னும் வேண்டாங்கறாக்கா. ஊட்டுல ஏதுடீ இதுன்னு கேட்டுட்டாங்கன்னா வம்பா போயிடுங்கறா! ஆனா எந்த நோம்பிக்கு அவ துணி எடுக்கப் போனலும் என்ன கலர்ல எடுக்கட்டும் அப்படின்னு என்னைக் கேட்டுட்டு தான் எடுத்துக்குவா. போன தீபாவளிக்கி அப்படித்தான் கேட்டாள்னு எனக்கு வாய்க்கு வந்த கலரை சொல்லீட்டேன். ரோஸ் கலர். நோம்பி முடிஞ்சு ஒரு நாள் போட்டுட்டு வந்து காட்டினாக்கா. பளீர்னு ஒரே ரோஸ் சுடிதார். நல்லா இல்லயேன்னு சொல்லிட்டேன். சப்புச் சப்புன்னு கன்னத்துல அடிச்சுப் போட்டு , “நீதான்டா நாயி ரோஸ் கலர்னு சொன்னேன்னு அழுவாச்சி புடிசிட்டா . அப்புறம் சும்மாநாச்சிக்கிம் சொன்னேன்னு சொல்லி ‘உன்னோட கலருக்கு எடுப்பா இருக்குதுன்னேன்”

“உனக்கு என்ன கலர்னு அவ சொல்லுவாளா?” “சொல்லுவா… எப்பப் பார்த்தாலும் மஞ்சள் கலரே சொல்லுவா” “அதான் நீ மஞ்சள் கலர் பனியனே போட்டுட்டு திரியறியா?” “மூனு பனியன் டீ சர்ட் வச்சிருக்கேன். காலரோடயும் காலர் இல்லாமயும்”

“மழை வேற போட்டுத் தட்டி லேப்புது. அந்தச் சென்னிமலையில் இருந்து வர்ற பஸ்சுல தான ஏறுவா? அவளைத் தாட்டி உடப் போயிடுவியே! மணி அஞ்சு இருக்குமாட்ட. ஊட்டுக்கு கூட்டிட்டு வந்தீன்னா எனக்கு காட்டு. நான் பேசிப் பாக்குறேன் “

“ஒரு வாரமா அவகூட சண்டை. அவளைப் பாக்கவே போறதில்லே நானு”

“அவளைத்தான் கட்டிக்கப் போறேன் அப்படிங்கறே? அப்புறம் பின்னே அவகூட உனக்கென்ன சண்டை?”

“இந்த வாரம் சனிக்கிழமை லதாவை பெருந்துறை வரச்சொல்லி போன்லயும் சொல்லியிருந்தேன். லெட்டர்லயும் எழுதிக் குடுத்திருந்தேன். ‘கண்டிப்பாக வரவும்’ அப்படின்னு மட்டும் லெட்டர்ல அஞ்சாறு வாட்டி எழுதியிருந்தேன். பெருந்துறை போய் நான் மட்டும் நின்னு வெகு நேரம் பார்த்துட்டு மண்டை காஞ்சு வந்தேன். அதான் நாலு நாளா பஸ்ஸ்டேண்டு பக்கமே போறதில்ல நானு. அவ ஒரு ரூபா காசு போட்டுத்தான் எனக்கு போனு பண்டுவா. எடுத்து பேசுறதும் இல்ல. நூறு எரநூறுன்னு கையில் இருக்குற காசை நான் அவகிட்ட குடுத்துடுவேனக்கா . அவ அப்பன் பஸ்சுக்கு போக வர மட்டும் கரைட்டா எண்ணிக் குடுப்பாப்லையாமா”

“அதான கேட்டேன். எம் மவன் சம்பாதிக்கிற காசு பூராத்தியும் கொண்டி அந்தப் பெரிய வீரசங்கிலிப் புள்ளை கிட்டயே குடுத்துடுவானாட்ட இருக்குதுன்னு உங்கொப்பன் ஒரு நாளு என்கிட்ட சொல்லிட்டு தான் இருந்துச்சு. இப்ப நீ சொல்றதைப் பார்த்தா அது நெசம்தான்னு தெரியுது. உங்களுக்கெல்லாம் மொளச்சு மூனு எலை உடறதுக்கு மிந்தியே காதலு வந்துருது. வந்துட்டா கண்ணு மண்ணு தெரியாம போயிடுது. புள்ளைங்க கிட்ட காசைப் புடுங்கீட்டு வருவானுகளா … அந்தப் புத்தி இல்லாம இவுனுக கொண்டி நீட்டுவானுகளா? என்னடா சாமிநாதா நீ கூட இப்படியா? வாயை வேற இளிச்சுக் காட்டாதேயாமா… வந்து கொமட்டுல் குத்திப் போடுவேன்” “ஏக்கா, நீ வேற எங்கப்பன் ஊரு பூராவுஞ் சொல்லி பாத்தாத்துக்கு குடோனு ஓனரு கிட்டயும் சொல்லிப் போடுச்சு. காசு பூராத்தையும் கொண்டி இவம் பொண்டாட்டி கிட்டயே குடுத்துப் போடறான். ஊட்டுக்கு அஞ்சு பீசா தர்றதில்லைன்னு . ஊட்டுச் செலவு தான் நானே பண்ணிப் போட்டுடறேன்ல. வாரம் ரெண்டு கோட்டரும் வாங்கிக் குடுத்துடறேன். இனி என்ன பண்டோணுமாம்? ‘இவனெ என்ன பண்றதுங் சாமி? நீங்களே சொல்லுங்கன்னு ‘ அங்க போயி ஓனருகிட்ட நின்னுகிடுச்சு. ஓனரு என்னெயச் சத்தம் போடறாப்ல . அதான் தறி ஓட்டிட்டு இருக்க இருக்கவே பகல் ஷிப்ட்டுல அஞ்சு மணி ஆனா பக்கத்துத் தறிக்காரனைப் பாத்துக்கச் சொல்லிட்டு ஓடிப் போயர்றியா? பெரிய வீரசங்கிலில் இருந்து எங்க புள்ளைங்களும் படிக்கறதுக்கு வருதுகடா, அதுகளை நீ ஓட்டீட்டு இருந்தீன்னா நசுக்கிப் போடுவோம் சாக்கிரதை . யார்றா அந்தப் பொண்டாட்டி?’ ன்னு கேட்டுட்டு அடிக்கவே வந்துட்டப்ல “

“அடிச்சிருக்கோணும்டா உன்னை. பொண்ணு புள்ள நம்ம சாதி தான்னு தெரிஞ்சுட்டு உட்டுட்டப்லையா? உங்க ஓனரு நெடசிலாபாளையத்துல இருந்து எங்கிட்ட ஒரு எட்டுக்கு வந்துட்டு போயிட்டு இருந்தாப்ல. இப்ப ரோட்டுல கண்டாக்கூட எங்கிட்ட நின்னு பேசாம திருப்பிக்கிட்டு போயிடறாப்ல. இத்தினிக்கும் அவருகூட சண்டையும் இல்ல ஒன்னும் இல்ல. சரி காரியந்தான் பண்டாட்டி போச்சாது, பண்டுன பாவத்துக்கு நாலு வார்த்தை பேசிட்டுப் போவக்கூடாதா? அதனால் தான் அந்தச் சாதிக்காரனுகளையே நானு கிட்ட அண்ட உடறதில்லே. அவனுகளுக்கு புத்தி அப்படி. நாலு சனத்தோட அவனுக இருக்கப்ப நானு கிட்டப் போயி வாங்கன்னு கூப்புட்டுப் போடுவன்னு பயமா இருந்தாலும் இருக்கும் அவனுகளுக்கு. மழை இப்பத்தான்டா கொஞ்சம் கொறஞ்சிருக்குது. முக்கால் மணி நேரம் நல்ல மழை. ஊரைச் சுத்தியும் நாளைக்கு பாரு ‘டர்ர்ர்டர்ர்ர்ர்னு ‘

டிரேக்டர்களைப் போட்டுட்டுச் சோளத்தை வெதைச்சுப் போடுவாங்க. இன்னைக்கு என்னமோ உனக்கு அந்தப் புள்ளை மேல நெனப்புத் தட்டிக்கிசாட்டத்தான் தெரியுது. இன்னம் சித்தங்கூரியத்துல மழை நின்னு போயிரும். பார்றா, வெட்கம் வந்துருச்சு!”

“அப்படி எல்லாம் போவமாட்டனக்கா” என்று சாமிநாதன் சொல்லி முடித்ததுமே அவனது பாக்கெட்டில் கிடந்த செல்போன் அலறியது.

“போனு அடிக்குது பாரடா, அவளாத்தான் இருக்கும் பாரு” “ஆமாக்கா, இந்த நேரத்துல அவதான் பண்டுவான்னு தெரியும். பஸ்ஸ்டாப் வந்திருப்பா. தேடீட்டு இருந்திருப்பா என்னை, ஆளைக் காணம்ன ஒடனே பூத்துல முட்டி காசு போட்டு அடிக்கிறா. இந்தாக்கா நீ பேசு. என்ன பேசுறாள்னு பார்ப்பம் ” என்று செல்போனை நீட்டியவனிடமிருந்து சரோஜா அக்கா வாங்கிக் காதுக்கு வைத்துக் கொண்டது.

“டேய் பன்னி! எங்கடா பஸ்ஸ்டாப்புல உன்னியக் காணோம்? அந்த டீக்கடைக்காரன் என்னையவே ரெண்டு நாளாப் பார்த்துட்டுச் சிரிக்கிறான்டா! எங்கடா இருக்கே நீயி? இங்க தான்டா எங்கியோ இருக்கே நீயி. நீ மட்டும் ஒளிஞ்சு நின்னுட்டு என்னையப் பார்த்துட்டு ஓடீர்றயாடா? பன்னி சாராயக் கடைக்குள்ளார இருக்கியா? ஒரு வாரமா போனை எடுக்கவே மாட்டீங்கறியேடா நீ? என்றா பேச்சைக் காணோம். உனக்கு செல் ஒரு கேடா? எல்லோரும் பேசுறதுக்குத் தான்டா செல் வச்சிருப்பாங்க. நீதான் பேசவே மாட்டீங்கறயே, உனக்கெதுக்குடா போனு?”

“அம்மிணி அம்மிணி நான் அவனோட பக்கத்து வீட்டு அக்கா பேசுறேன்”

“அக்காவா? அவன் உங்களை காட்டுனதே இல்லியே!” “ஆமா அக்கா தான். எனக்கு உன்னையக் காட்டியிருக்கானே. இப்ப எதுக்கு அவனை பன்னி கின்னிங்கறே நீயி?”

“அந்தப் பன்னி உங்க பக்கத்துலயா உக்கோந்துட்டு இருக்குது? வாயை ஈன்னு இளிச்சுட்டு இருக்குமே? நீங்க போனை மொதல்ல அவன் கிட்ட கொடுங்க”

“அவனெங்கெ இங்க இருக்கான்? நான் தான் ஒரு போனு பண்டீட்டுத் தர்றேன்டா சாமிநாதான்னு அவன் ஊடு போயி வாங்கிட்டு வந்தேன். பேசிட்டு கொண்டிக் குடுக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள ரிங் அடிக்குதேன்னு எடுத்தேன். அங்கே மழை நின்னு போச்சா?”

“மழை எல்லாம் நின்னு போச்சு . ஐயோ சில்லறை வேற மூஞ்சு போச்சுக்கா. நீங்க அந்த சக்கிலி கிட்ட போனைக் குடுங்க மொதல்ல. வெளையாட்டு பண்ணீட்டே தான் உக்கோந்திருப்பான் பன்னி”

“இந்தாடா சாமிநாதா, அந்தப் பிளக்காயி உம்மட கிட்ட பேசோணுமுங்குது . அடே புடேங்குதுடா. குடுக்கலீன்னா என்னையவே ரோட்டுல கண்டாக்கூட அடிச்சுப் போடுமாட்ட இருக்குது புடியடா”.. சாமிநாதன் மண்டையை முடியாதென ஆட்டினான்.

“இவன் மண்டைய ஆட்டுறானே சாமி, நான் என்னத்தைப் பண்ட?” “சரி உடுக்கா , அந்தச் சக்கிலி பேசாட்டிப் போச்சாறான். ஒரு ரூபா காசு ஒன்னு தன் இருந்துச்சு. அதையும் உள்ளார போட்டுட்டேன். நான் குடுத்த கிப்ட் பார்சலையும் கழுத்துல நான் போட்டு உட்ட செயினையும் எங்க ஊர் பையன் கிட்ட அந்தச் சக்கிலி திருப்பிக் குடுத்து உட்டுட்டான். அதை நான் அந்தப் பையன் கிட்ட வாங்கிக்கலை. அவங்கிட்டயே கொண்டிக் குடுத்துடு போன்னு சொல்லிட்டேன். அந்தப் பையனைக் கண்டா வாங்கிக்கச் சொல்லிருங்க. சனிக்கிழமெ சினிமாக்கு வரலீன்னு சண்டைக் கட்டப் பாக்குறான். இந்த வாரமும் நான் வருவேன்னு போயி நின்னுட்டு இருக்க வேண்டாம்னு சொல்லிடுங்க. வேணும்னா மத்திரை வாங்குறேன்னு சைக்கிள்ல சனிக்கிழமை நெட்டைக் கோபுரத்துக் கிட்ட பத்து மணிக்காட்ட வர்றேன். பார்த்துப் பேசிட்டு போயிடறேன்னு சொல்லிடுங்க அக்கா அந்த சக்கிலி கிட்ட” என்றவள் போனை வைக்க சரோஜா அக்கா காதுக்கருகிலிருந்து எடுத்து விட்டு சாமிநாதனை முறைத்துப் பார்த்தது.

“மொறைக்காதக்கா சும்மா, அவளை எல்லாம் அப்படித்தான் பண்டோணும். என்னுங்கறா அவொ? போனை வச்சுட்டாளா?”

“என்னடா சாமிநாதா இவளைக் கட்டிக்கிட்டா உனக்கு கண்ணாமுழி திருகிப் போயிருமாட்ட இருக்குதா ! யாருக்கும் அடங்க மாட்டாளாட்டம் தெரியுதே ! போன்ல இந்தப் போடு போடறா? குடுங்க அந்த சக்கிலி கிட்டேங்கறா போனை. இப்புடி ஒருத்திய எம்பட ஆயிசுல பார்த்ததே இல்லையடா”

“கோவம் வந்துட்டா எப்பயும் அப்படித்தான் சக்கிலி சக்கிலின்னே மானத்தைக் கெடுப்பா”

“இதென்ன நீ பாட்டுக்குச் சிரிச்சுக்கறே? இவள்னா மட்டுமென்ன முதலியார்ச்சியா? இல்ல செட்டிச்சியா?”

“சிரிக்காம பின்ன அழுவச் சொல்றியாக்கா?” “பாரு மழை கூட சுத்தமா நின்னு போச்சு. ஒரு எட்டு சைக்கிள எடுத்துட்டு போயி பஸ்ஸ்டாப்ல அவளை பார்த்துட்டு வந்துடுடா சாமிநாதா. உன்மேல் கொள்ளைத்த பிரியமாட்ட அதுக்கு”

“நான் போகலைக்கா . என்னைய உடு. கடைசியா என்னுமோ சொன்னாளாட்ட இருந்துச்சேக்கா”

“சினிமாவுக்கெல்லாம் வரமாட்டாளாமாடா” “வராட்டிப் போச்சாறா, இனி அவளைக் கூப்பிட்டாத்தானே வரமாட்டேன்னு பிலுக்குவா. நான் எங்கீம் கூப்பிட மாட்டேன். அவ படிச்சு டாக்டராகட்டும். இல்ல எதோ ஒரு கருமம் ஆகட்டும்”

“நெட்டைக் கோபுரத்துக்கிட்ட சனிக்கிழமெ காலியில் பத்து மணிக்கி வந்துடறாளாம். உன்னைய அங்க வரச் சொன்னாடா அவொ . அதைத்தான் கடைசியா எங்கிட்டச் சொன்னா. போன்ல எம்பட பிள்ளை பேசுற குரலாட்டவே தான் கேக்குது. அதே மாதிரி கீக்கீன்னு” “நெட்டைக் கோபுரத்துக்கிட்ட வந்து என்ன பண்றாளாமா? அப்பத்தான் ஆராச்சிம் பார்த்துட்டுப் போயி அவ ஊட்டுல சொல்லுவாங்க”

“நெட்டைக் கோபுரம் போயி ரெண்டு பேரும் சேர்ந்துட்டு என்ன பண்டுவீங்கன்னு எனக்கென்னடா தெரியும்? சோறாக்கிக் கொண்டுட்டு வந்து திணிப்பா உன்னோட வாயில் . தின்னு போட்டு வா போ”

“வர்றதெல்லாம் வருவா, ஒரு சைக்கிளைக் கண்டா துப்பட்டாவத் தலைக்கு போட்டுட்டு மூஞ்சிய மூடிக்குவா. எங்கப்பன் குதிருக்குள்ள இல்லையின்னு இவளே காட்டிக்குவா. நிமிசம் நிப்பளுங்கறே? போறேன் போறேன்னு பறவாப் பறப்பா. அவகிட்ட ஒரு நாயம் நிம்மதியா பேச முடியாது. பல்லு புடுங்கு, மூனுவேளை சோறு தின்னு, தெனமும் காத்தால் தலைக்கு தண்ணி வாத்துக்கோன்னு அவளே பெரிய இவ மாதிரி பேசிட்டு நிப்பா”

“என்னமோ பொட்டணம் குடுத்து உட்டியாமா? செயினை கழட்டிக் குடுத்துட்டியாமா? அந்தப்பயன் கிட்ட அவ வாங்கிக்கலையாம். உன்னை திருப்பி வாங்கிக்கச் சொன்னா”

“பொட்டணமா? அது ஊட்டுக்குள்ள இந்த டிவி மேல் எல்லாம் அழகுக்கு வச்சிருப்பாங்கள்ல அது. கண்ணாடிப் பொட்டிக்குள்ளார பூச்செடி இருக்குற மாதிரி பொரி உருண்டைக கலரு கலரா உள்ளார

கெடக்குற மாதிரி குடுத்தா. சண்டையாயிப் போச்சுன்னு திருப்பிக் குடுத்து உட்டேன். வாங்கிக்கலையாமா? அந்தப் பெரிய வீரசங்கிலி ஜோசப்பு கிட்டத்தான் குடுத்துடுடான்னு குடுத்தேன். கையில் திணிச்சுப் போட்டு ஓட்டுடான்னு சொல்லிக் குடுத்தேன். நானெல்லாம் நெட்டைக் கோபுரம் போக மாட்டனக்கா இவ கூப்புடறாள்னு”

“புள்ளை பாவம் புடிச்சுக்கும் உனக்கு. நாம் போயி ஊட்டுக்குக் கூட்டிட்டு வரட்டுமாடா?”

“நீ என்னமோ பண்டுக்கா . நான் ஊட்டுக்குப் போறேன்” என்றவன் எழுந்து கிளம்பினான். வானம் வெட்டாப்பு விட்டிருந்தது.

– தொடரும்…

எட்றா வண்டியெ, முதற் பதிப்பு: 2012

Print Friendly, PDF & Email

1 thought on “எட்றா வண்டியெ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *