கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 8, 2023
பார்வையிட்டோர்: 3,445 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

2. உனக்கு செல் ஒரு கேடா | 3. அடுத்த வாரமே வச்சுக்கலாமா! | 4. அதென்னமோ நெசந்தானுங்க சாமி

ராஜேந்திரன் கைக்கோளபாளையத்துக்காரன். அவனும் சாமிநாதனோடு தான் விசயமங்கலம் பள்ளியில் ஒரே பெஞ்சில் படித்தவன். படிப்பை முடித்தவர்கள் கள்ளியம்புதூரில் வாத்தியார் தறிப்பட்டறையில் தான் தறி ஓட்டக் கற்றுக் கொண்டார்கள். சொல்லி வைத்தது மாதிரி இருவருமே பத்தாம் வகுப்பில் கணக்கில் மட்டுமே கோட்டை விட்டார்கள். இருவருமே முன்னூறு மதிப்பெண்கள் பெற்றிருந்தார்கள். சாமிநாதன் எந்த வேலைக்கு வேண்டுமானாலும் முகம் சுளிக்காமல் போய் விடுவான்.

ஆனால் ராஜேந்திரன் அப்படி அல்ல. சாமிநாதனைப் போலவே இவனும் வீட்டுக்கு ஒரே பிள்ளை. அம்மாவும் அப்பாவும் காரை வேலைகுப் போகிறார்கள். இவனே சம்பாதித்து பாஜாஜ் பிளாட்டினா கியர் வண்டி வாங்கி ஓட்டுகிறான். தண்ணி போடும் வழக்கம் ராஜேந்திரனுக்கு கிடையாது . பான்பராக் மட்டுமே மெல்லுவான். கெட்ட பழக்கம், சகவாசம் எதுவும் அவனுக்கு இல்லை என்றாலும் காதல்

அவனையும் விட்டு வைக்கவில்லை . காதலில் விழுந்தவன் எந்த நேரமும் பிரியாவின் நினைப்பிலேயே இருந்தான்.

பிரியா எட்டாம் வகுப்பு வரைதான் படித்தவள். மூங்கில் பாளையத்துக்காரி . சிப்காட்டில் பேண்ட் துணிகளில் பிசிறு வெட்டும் வேலைக்கு மூன்று வருடம் சென்றவள், சம்பளம் குறைவு சம்பளம் குறைவு என்றே புலம்பிக் கொண்டிருந்தாள். ஊத்துக்குளி ரோட்டில் புலவர்பாளையத்துக்கு அருகே பெரிய பனியன் கம்பெனி வந்து அங்கே பெண்களை வேலைக்கு எடுத்துக் கொண்டவுடன் சிப்காட் வேலைக்கு முழுக்குப் போட்டாள்.

பெரிய பஸ் ஒன்று மூங்கில்பாளையம் வழியாகத்தான் பெண்களை ஏற்றிக் கொண்டு செல்கிறது. ஆனால் ஒன்னரை ஷிப்ட் வேலைதான். காலையில் எட்டு மணிக்குப் பஸ் ஏறினால் இரவு அதே பஸ்

மூங்கில் பாளையம் வருகையில் இரவு ஒன்பதுக்குப் பக்கம் ஆகிவிடும். நோம்பி , கல்யாணங்காச்சிகளில் ராஜேந்திரனைக் கண்டு அவனிடம் மனதை பறிகொடுத்து விட்டாள் பிரியா . ஒரே ஜாதி என்கிற போது யாரும் தடையும் சொல்லப் போவதில்லை தான். பிரியாவும் வீட்டுக்கு ஒரே பெண். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான்.

பிரியா இரண்டு வருடங்களாக பஸ் ஏறி வேலைக்குப் போகிறாள். அதிகம் விடுப்பு எடுப்பவளும் அல்ல. அவளுக்கு செலவும் அதிகம் கிடையாது. மூங்கில் பாளையத்தில் பிரியா என்று ஒரு பெண் இருப்பதே ஊருக்குள் அதிகம் தெரியாது என்பது மாதிரி தான். எப்படியிருந்தாலும் காதல் அவளையும் விட்டு வைக்கவில்லை. காதலில் விழுந்த பிரியாவிற்கு எந்த நேரமும் ராஜேந்திரனின் நினைப்பு தான்.

பிரியா ராஜேந்திரனின் நினைப்பில் படுக்கையில் கிடந்தாள். அம்மா தான் வேலையை செஞ்சு போட்டு வந்து சாப்புட்டமா தூங்கினமான்னு இல்லாம டிவியப் பாத்துட்டு இருக்கியே!” என்று சொன்னது. ‘நீ சும்மாயிரு. நான் தூங்கிக்க எனக்குத் தெரியும். நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்’ என்றாள். அம்மா திருப்பி இவளிடம், ஒவ்வொரு நாளைக்கி அப்பிடியே தூங்கிடறே. டிவி அதுபாட்டுக்கு ஓடிட்டே இருக்குது’ என்று சொல்லி விட்டு அமைதியாகி விட்டது.

மணி ஒன்பதரையைத் தாண்டி விட்டது . ராஜேந்திரன் ஏன் இன்று இன்னமும் கூப்பிடவில்லை? கே.டிவியில் ஆனஸ்ட்ராஜ் ஓடிக் கொண்டிருந்தது. விஜயகாந்தின் குண்டுக் கண்கள் சிவந்து போய் பயங்கரமாய் இருந்தன. இவளுக்கு டிவியில் மனம் பதியாமல் இருந்தது. செல்லை எடுத்து ஏர்செல் டவர் இருக்கிறதா? போய்விட்டதா? என்று பார்த்தாள். முழு டவரும் இருந்தது . கம்பெனிக்குள் செல்போனை கொண்டு போக முடியாது. கொண்டு போனாலும் வைப்ரேசனில் தான் வைத்துக் கொள்ள வேண்டும். உணவு இடைவேளை சமயத்தில் பாத்ரூம் போய்த்தான் பேசிக்கொள்ள வேண்டும்.

இவள் கம்பெனிக்கு செல்போனைக் கொண்டு போவதே இலை. வீட்டினுள் சும்மாதான் கிடக்கிறது. உன் நெம்பருக்கு ரீச்சார்ஜ் போட்டு விடறேன்’ என்றுதான் ராஜேந்திரன் சொல்கிறான். இவள் தான் வேண்டாம் என்று சொல்லி விடுகிறாள். ஆனால் அப்படி வேண்டாமென்று சொன்னது எவ்வளவு தவறு என்று இப்போது தான் தெரிகிறது. செல்போனில் காசு இருந்திருந்தால் ராஜேந்திரனைக் கூப்பிட்டு இருக்கலாமல்லவா? இன்று கண்டிப்பாகச் சொல்லிவிட வேண்டும் என்று பிரியா நினைத்த போதே செல்போன் அலறியது. உடனேயே எடுத்தாள்.

“என்ன பிரியா, உடனே போனை எடுக்கறே? கையிலயே வச்சுட்டு இருந்தியா? பேச்சையே காணம்? எப்பவுமே கடைசி ஆக ஆகத்தான் சண்டை போடுவே. இன்னிக்கு ஆரம்பமேவா? இப்போத்தான் சாப்டுட்டு வந்தேன்”

“ஒன்பதரைக்கு டாண்னு கூப்பிடுவீங்கன்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன். மணி ஒன்பதே முக்கால் தெரியும்ல ! இப்படி ஒரே ஒரு வாட்டி தான் லேட் பண்ணீங்க. அன்னிக்கி பத்து மணி”

“ஆனா உனக்கு நல்ல ஞாபக சக்தி. இன்னிக்கு தேதி அஞ்சு நாளைக்கு வேற லீவு நாள்”

“எப்பவும் போலத்தானே?”

“சம்பள நாள்ல ! எவ்ளோ வாங்கினே?” “ம், மூனாயிரத்தி முன்னூத்தி ஐம்பது . ம் சொல்ல மறந்துட்டனே, இன்னிக்கு நீங்க போன வருசம் வாங்கிக் குடுத்த யெல்லோ கலர் சுடிதார் போட்டுட்டுதான் கம்பெனிக்கு போனேன். என்னோட ப்ரண்ட்ஸ் எல்லோரும் சூப்பரா இருக்குன்னாங்க”

“ஐயா செலக்சன் பண்ணி எடுத்ததில்ல. உன் பிறந்த நாள் அன்னைக்கு மட்டும் போட்டுட்டு சூட்கேஸ்ல சும்மா வச்சிருந்தியா? அடுத்த பிறந்த நாளே வரப்போகுது. அடுத்த மாசம் தானே!”

“யார் சொன்னா அப்படியே வச்சிருந்தேன்னு? நாலஞ்சு வாட்டி போட்டேன். எல்லாமே சொந்தக்காரங்க கல்யாணத்துக்குத்தான். நாம பழகி எத்தனை நாள் ஆச்சு தெரியுமா? ரெண்டரை வருஷம் ஆச்சு”

“ஆமா கணக்குல நீ புலி தான் போ. நேர்ல உன்னைப் பார்த்தது இரண்டரை வருஷத்துல நாற்பது தடவை தான் இருக்கும்”

“நாற்பது இல்ல. நாற்பத்தி ஒன்பது தடவை. நாம் சேர்ந்து பார்த்த படம் பதினைஞ்சு. பதினஞ்சு படமும் ஞாபகம் இருக்கே! சொல்லட்டுமா வரிசையா? முதல் படம் காங்கயத்துல.”

“ஐயோ சாமி வேண்டாம் ! என்னை எத்தனை தடவை பார்த்தேன்னு எல்லாமா கணக்கு வச்சுட்டு இருப்பே? மோசமான புள்ளை நீ கல்யாணம் பண்ணீட்டா வேற ஒன்னையும் கணக்கு வச்சுட்டு சொல்லீட்டு இருப்பியா?”

“ச்சீ… என்ன நீங்க இப்படி? சரி என்ன சாப்பிட்டீங்க?”

“சாப்பாடு தான்”

“ஜோக்கா? சாப்பாடு சரி, என்ன கொழம்பு?”

“கொஞ்சூண்டு சாப்பாடு, அப்புறம் தயிர்”

“ஏன் அப்படி? நான் தான் கொஞ்சூண்டு சாப்பாடு அப்புறம் தயிர். அவ்ளோ தான். என்னை மாதிரியேவா?”

“உன்னை மாதிரி எல்லாம் இல்ல. இன்னைக்குச் சாப்பிட உட்கார்ந்தப்பவே மணி ஒன்பதரை நீ எதிர்பார்த்துட்டு படுத்திருப்பீன்னு தெரியும். அதான் தயிர் ஊத்தி அடிச்சுட்டுட்டு வந்து படுத்துட்டேன்”

“போய் நல்லா சாப்டுட்டு வந்து அப்புறம் கூப்பிட்டுப் பேசுங்க” “உன் கிட்ட பேசுனதுலயே எனக்கு வயிறு ரொம்பிடுச்சு” “ரொம்பும் ரொம்பும் ஏன் ரொம்பாது? எனக்கு கால்ல ரெண்டு குதியும் வலிக்குது தெரியுமா?”

“சிக்கன் குனியாவோ என்னமோ?” “அதெல்லாம் எனக்கு வராது. டேபிள் முன்னாடி பொழுதுக்கும் நின்னுட்டே இருக்கேன்ல அதனால் தான். மூவ் இருக்குது. கம்பெனில் பிஸ்ஸ்னு குதிங்கால் கிட்ட அடிச்சுக்குவேன். ஒரு மணி நேரம் தான் வலி இல்லாத மாதிரி இருக்கும். இப்ப கால் நீட்டி படுத்துட்டதால வலி இல்ல”

“அயோடெக்ஸ் வாங்கிப் போடேன்” “நாளைக்கி விசயமங்கலம் போய் பூரணி மெடிக்கல்ல வாங்கணும். செல்லுக்கு ரீச்சார் கார்டு வாங்கணும் “

“எனக்கு உன்னைப் பார்க்கணும்னு இருக்கு. வாங்கன்னு மட்டும் கூப்பிட மாட்டே! வர வேண்டாம்னு தானே சொல்வே”

“போனை வையுங்க மொதல்ல. வர வேண்டாம்னு உங்களை நான் சொல்வேனா? ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க?”

“நீதான மொதல்ல எத்தனை வாட்டி சொல்லியிருக்கே வர வேண்டாம்னு . அதான் நான் சொன்னேன்”

“ஆமா நான் சொன்னேன். ஆமா நாளைக்கு என்ன பகல் ஷிப்ட்டா உங்களுக்கு? ஆமாம் இப்ப வீட்டுல இருந்து தானே பேசுறீங்க? சரின்னு சொல்லிட்டன்னா தறிக்கு போக மாட்டீங்க நாளைக்கி. சினிமாவுக்கு போலாம் போலாம்னு நச்சுவீங்க”

“நிறுத்து நிறுத்து, நான் நச்சுவேனா? ஓஹோ!”

“மன்னிச்சுக்கங்க, மன்னிச்சுக்கங்க. என்ன உம்முன்னு ஆயிட்டீங்களா? அதான் மன்னிப்பு கேட்டுட்டேன்ல. இப்ப பேசப் போறீங்களா இல்லியா?”

“சங்கடமா இருக்கு பிரியா. திடீருன்னு நச்சுவேன்னு சொல்லிட்டே. தப்பு தான். எங்க வழுவுலயும் தான் பசங்க லவ் பண்ணுறாங்க. தோள்ல தூக்கி வச்சுட்டு போகாத குறையா ஜாலியா வாரா வாரம் படத்துக்கு போறாங்க. ஜாலியா என்கிட்ட சொல்றாங்க. அதைக் கேட்குறப்ப எனக்கும் தான் ஆசையா இருக்கும். ஒரு வாட்டியாவது நீயா போலாம் படத்துக்கு வாங்கன்னு கூப்பிட்டிருக்கியா? நானே எப்பவும் நோ சொன்னாப்ல நச்சி நச்சித்தான் உன்னை கூப்டுட்டு போயிருக்கேன். இப்போத்தான் அதும் நீ சொன்னங்காட்டி தான் எனக்கே தெரியுது பிரியா”

“சரி நாளைக்கு போகலாம் சரிங்ளா?”

“வேண்டாம் பிரியா. நீ டெய்லியும் ஒன்னரை ஷிப்ட் வேலை செஞ்சுட்டு வர்ற பொண்ணு. ஒரு நாளைக்குத்தான் உனக்கு லீவு கிடைக்குது. சுடிதாரெல்லாம் துவைக்கிற வேலையெல்லாம் இருக்குதுன்னு நீயே பலதடவை சொல்லியிருக்கே”

“நாளைக்கு நான் தான் போலாம்னு சொல்றேன்ல”

“வேண்டாம் பிரியா. நான் தறி ஓட்டவே போறேன்”

“தெரியாம சொல்லிட்டேங்க. மன்னிப்பு கேட்டுடேன்ல. நீங்க ஏன் இப்படி பண்றீங்க? எனக்கு சங்கடமா இருக்கு. அதையே திருப்பித் திருப்பிப் பேசாதீங்க அழுவேன்”

“வச்சுட்டடுமா.. ஏனோ ஒரு மாதிரி ஆயிட்டேன் பிரியா”

“நான் அழுதுட்டு இருக்கணும்னா வச்சுடுங்க… உங்க இஷ்டம்”

“நெஜமாலுமே எனக்கு தெரிஞ்ச பசங்க எல்லாருமே ரொம்ப சந்தோசமா இருக்காங்க பிரியா. நானும் உன் நினைப்புல சந்தோசமாத்தான் இருக்கேன். இல்லைன்னு சொல்லலை. நீ மூங்கில் பாளையத்துல இருக்கீன்னு தெரியும். ஒரு நாளாவது வரச் சொல்லி இருக்கியா? உன் வீடு எங்கீன்னு கூட தெரியாது எனக்கு. மூங்கில் பாளையத்துல எனக்கு ஒரே ஒருத்தனைத் தான் அதும் சாமிநாதனைத்தான் தெரியும் எனக்கு. அவனை நான் பார்த்தே ஒரு வருஷம் இருக்கும். அவன் வீட்டுக்கு நான் வந்து கூட மூனு வருஷம் இருக்கும்.”

“அவன் வீடு வடகோட்டுல கடைசி வீதி . என் வீடு மூனாவது வீதியில் நாலாவது வீடு. அம்மா மட்டும்னா நான் உங்களை வீட்டுக்கு எப்பவோ வரச் சொல்லி இருப்பேன். எனக்கு ரெண்டு சித்தப்பனுக. மூனாவது வீடும் அஞ்சாவது வீடும். அவங்க வேலைக்கு போயிட்டாலும் ரெண்டு சித்திங்களும் வீட்டுல தான் இருப்பாங்க. சரி இப்படி கேக்கறீங்களே என் வீட்டைப் பார்க்கணும்கறீங்க. இங்கயா வந்து நீங்க குடும்பம் நடத்தப் போறீங்க? நான் தானே உங்க வீட்டுக்கு வரணும். எனக்கு வேணா கைக்கோளபாளையம் தெரியும். மாமா வீடு இருக்குது. உங்க வீடு எங்க இருக்குதுன்னே தெரியாதே!”

“அப்படின்னா அது தப்புதானே!” “அது தப்பு தான்னு நான் நினைக்கவே இலை. உங்களைத்தான் நான் விரும்புறேன். உங்க வீட்டையா விரும்புறேன். பார்க்கோணுமுன்னு ஆசைப்படுறதுக்கு? நீங்க என்னைக் கூட்டிட்டுப் போய்க் கட்டிக்கிட்டீங்கன்னா இது தான் நம்ம வீடுன்னு குடிசையைக் காட்டினாலும் குடும்பம் நடத்தித்தான ஆகணும் நானு” “அப்போ குடிசையா இருந்தாலும் உனக்கு ஓகேவா?”

“ஓ.கே.”

“அப்போ உடனே கல்யாணத்தை வச்சுக்கலாம். அடுத்த வாரமே வச்சுக்கலாமா?”

“நின்னது நிக்க கல்யாணம்னா எப்படி என்னால் முடியும்? வீட்டுல எப்பப் பார்த்தாலும் கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோன்னு ரெண்டு சித்திங்களும் வேற பேசிட்டே இருக்காங்க. அவங்க சொந்தத்துல பசங்க இருக்காங்களாமா. சித்திக சொல்றவனுக குடிகாரப்பசங்க. சொன்னோம்னா.. யாரு குடிக்காம இருக்காங்க? உங்க சித்தப்பனுகளும் தான் குடிக்கறானுக, உங்கொப்பனும் குடிச்சே தான் செத்தான்னு சொல்றாங்க”

“நான் குடிகாரன் இல்லன்னு உனக்கு எப்படி தெரியும்?” “பார்த்தா தெரியாதா? அதெல்லாம் பொம்பளைங்க நாங்க பார்த்த ஒடனே கண்டு பிடிச்சுடுவோம். நீங்க என்ன தப்பு வேணாலும் பண்ணிக்கோங்க. ஆனா சிகரெட் குடிக்கிறது, தண்ணி போடறது மட்டும் எனக்கு பிடிக்காது. தண்ணி போட்டுட்டு வந்து எங்க சித்தப்பனுக ரெண்டு சித்திகளையும் எப்படி அடிப்பாங்க தெரியுமா? பாவமா இருக்கும்”

“அப்போ உனக்கு தண்ணி சிகரெட் ஆகாது!”

” அதான் டிவியிலயே தண்ணி போடற ஆளைக் காண்பிச்சாக் கூட குடி குடியைக் கெடுக்கும், சிகரெட் குடிச்சா புகை உடலுக்குப் பகைன்னு காட்டறாங்கள்ள. அதெல்லாம் உங்க கண்ணுக்கு எங்க தெரியுது”

“அப்போ வேற என்ன பண்ணினாலும் கண்டுக்க மாட்டே?”

“வேற இனி என்ன கெட்ட பழக்கம் இருக்குது?” “நீ ரெண்டு தான சொன்னே புடிக்காதுன்னு. ரெண்டு பழக்கமும் எங்கிட்ட இல்ல. போதுமா?”

“வேற என்னதான் கெட்ட பழக்கம் இருக்குது? சொல்லுங்க”

“உங்க ஊர்ல சரோஜான்னு அக்கா மாதிரி எங்க ஊர்லயும் இருக்காங்களே பொம்பளைங்க! இப்ப உனக்கு மூஞ்சி உம்முன்னு ஆயிருக்கோணுமே! இன்னுமா உர்ர்னு ஆகலை?”

“உங்களுக்கு இன்னிக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன். பக்கத்துல இருந்திருந்தேன்னா இப்படிச் சொன்னதுக்கு உங்களைச் சாத்தியிருப்பேன் சாத்தி. உங்களை கல்யாணம் பண்ணீட்டு அப்புறம் வச்சுக்கறேன். இப்படி எல்லாம் நெனப்பு இருக்குதா?”

“நெனப்பு இல்லையின்னா ஆம்பளையே இல்ல தெரியுமா? அப்புறம் கல்யாணம் பண்ணீட்டு என்ன பண்ணலாம்னு நினைச்சிருக்கே? புள்ளை ஒன்னு எப்படி பெத்துக்குவே? கோயிலுக்குப் போயி பிரசாதம் வாங்கித் தின்னு புள்ளை பெத்துக்கலாம்னா நினைச்சுட்டு இருக்கே? இந்தக் காலத்துல இப்படியும் ஒரு புள்ளை. அவ எனக்கு காதலி வேற”

“இந்தக் கிண்டல் எல்லாம் வேண்டாம்”

“பிரியா, எவ்ளோ சங்கடமா இருக்கு தெரியுமா?”

“சங்கடம் உங்களுக்கு மட்டும் தானா? எனக்கு இல்லையா?”

“அப்போ அடுத்த வாரம்..”

“என்ன அடுத்த வாரம்?”

“கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்கிறேன்”

“ஆறு மாசம் பொறுத்துக்கங்க”

“நீதான் வீட்டுல காதலைச் சொல்ல முடியாது. கூப்புடற இடத்துக்கு வந்துடறேன்னு சொல்றே! ஆறு மாசம் கழிச்சு நீ வர்றதை அடுத்த வாரம் வரச் சொல்றேன்”

“அப்ப நான் சொல்றதை கேட்பீங்களா மாட்டீங்களா? என்னடா இப்பவே இப்படிக் கேட்கிறா கல்யாணத்துக்கு பிறகு என்ன என்ன சொல்வாளோன்னு யோசிக்கிறீங்களா? தாலி கட்டீட்டீங்கன்னா நீங்க சொல்றதை தான் கேட்பேன். உட்காரச் சொன்னா உட்காருவேன். எந்திரிக்கச் சொன்னா எந்திரிப்பேன்”

“வேற ஒன்னு சொன்னாலும் உடனே கேட்பியா?”

“ஐயோ “

“ஐயோவா? அப்போ கோவில்ல போய் பிரசாதம் வாங்கித் தின்னா தான் குழந்தை பிறக்கும்னு நம்பீட்டு இருக்குற கேஸா நீ .சரி நீ கோவில் கோவிலா போ”

“ஐய்யய்யோ! ஆறு மாசம் உங்களை பொறுக்கச் சொன்னதுக்கு காரணம் ஒரு சீட்டு போட்டிருக்கேன். அஞ்சாவது மாசத்துல பணம் கைக்கு வரும்”

“அதை அப்புறமா எடுத்துக்கக் கூடாதா?”

“வெறும் கையோடவா நானு உங்கூட்டுக்கு வர்றது? நானே சம்பாதிச்சு நாலு பவுன் நகை கழுத்துல போட்டிருக்கேன். யூனியன் பேங்க்ல பணம் போட்டு வச்சிருக்கேன். ஏடிஎம் கார்டு இருக்கு. என்னை சும்மான்னு நினைச்சீங்களா?”

“அப்போ நான் வெறும் கையின்னு சொல்றே? இருந்துட்டுப் போகட்டும். நான் வேணா நீ கூப்புடற எடத்துக்கு வந்துடறேன். என்னை நல்லா வச்சு பதனமா காப்பாத்துவியா? என்னை அடிச்சு வச்சிடவெல்லாம் கூடாது”

“சரிங்க உங்களை கண்கலங்காம வெச்சுக் காப்பாத்துறேன்”

“கோயிலுக்குப் போயி பிரசாதம் வாங்கித் தின்னு. புள்ளை பெத்துக் குடுங்கன்னு என் கிட்ட சொல்லக் கூடாது”

“ஐய்யய்ய்யோ ! ஏனோ இன்னிக்கு உங்க பேச்சு பூராவும் அசிங்கமாவே இருக்குது. முருகா, முருகா!”

“அவரை எதுக்கு கூப்பிடறே?”

“நல்ல புத்தி சொல்லிக் கொடுக்கத்தான்”

“டிவி ஓடிட்டு இருக்கா?”

“ஆமா ஏன்?”

“சன் மியூசிக் வெய்யேன் சீக்கிரம்”

“அதுல என்ன ..ம் ! காதலின் தீபம் ஒன்று… ஏற்றினாளே என் நெஞ்சில்… எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டுப்பா”

“எப்பவோ சொல்லியிருக்கீல. அதான் சொன்னேன். சும்மா பாரு, கூடக் கூடப் பாடீட்டு இருக்காதே!”

“ம், என்ன சொன்னீங்க?”

“ம், சொன்னேன் நாயிக்கு நாலு கால்னு” “அதுக்குள்ள உங்களுக்கு என்னாச்சு? நீங்க தானே சன்மியூசிக் பாருன்னு சொன்னீங்க”

“சரி பிள்ளைங்க கூடவெல்லாம் நீ பேச்சே வச்சுக்கறதில்லையா?”

“எதுக்கு இப்போ திடீருன்னு இந்தக் கேள்வி? எங்க ஊர்ல இருந்து ஏழு பிள்ளைங்க பஸ் ஏறுவாங்க. ஆனா நான் யாருகிட்டயும் பேச்சே வச்சுக்கறதில்லே. ஆனா கம்பெனில் மட்டும் ஊத்துக்குளி பொண்ணுக ரெண்டு பேரு கிட்ட மட்டும் பேசுவேன். ஒருத்திக்கு அடுத்த மாசம் கல்யாணம். என்னைய நீங்க தான் கூட்டீட்டு போகணும் அந்த கல்யாணத்துக்கு. போனதீம் வந்துடறோம்”

“அது போய்க்கலாம். எங்கே கல்யாணம்?”

“திருப்பூர்லன்னு சொன்னா அவ. ஆனா இன்னும் முடிவாகலையாம். சரி நீங்க தறி ஓட்டறக்கு போறீங்கள்ள? வாரம் எவ்ளோ சம்பாதிப்பீங்க?”

“நல்ல ஓட்டம்னா வாரம் ஆயிரத்தி ஐநூறு சம்பாதிப்பேன். எதுக்குக் கேட்குறே?”

“ஏன் நான் கேட்கக்கூடாதா?”

“கேட்கலாம். ஆனா இத்தனை நாள் இல்லாம இப்போ என்ன திடீர்னு?”

“இத்தனை நாள் இல்லாம இன்னிக்கு திடீர்னு கோவில் பிரசாதம் அது இதுன்னு பேசறீங்கள்ள”

“கல்யாணம் பண்ணீட்டு வேலைக்குப் போகச் சொல்லீடுவானோன்னு பயம் வந்திடுச்சா?”

“நீங்க போடீன்னு சொன்னா நான் மாட்டேன்னா சொல்ல முடியும்?”

“இந்த வாரம் செவ்வாய்கிழமை உங்க ஊருக்கு வரோணும்”

“எதுக்கு?”

“சாமிநாதனைப் பார்த்துப் பேசணும். போன் நெம்பர் வாங்கணும்.

அவனால் ஒரு காரியம் ஆக வேண்டி இருக்குது”

“அவனெல்லாம் உங்களுக்கு என்ன காரியம் பண்ணித் தருவான்? அவனை நான் பார்த்தே வெகு நாள் ஆச்சு.”

“அவன் உன்கிட்ட பேசுவானா?” “என்ன பிரியா வேலைக்குப் போகலியாம்பான் . லீவும்பேன்”

“இவ்ளோ தான் பேசுவானா? வேற பேச மாட்டானா?”

“இதென்ன இன்னிக்கி உங்க்கூடக் கூத்தாவே இருக்குது? உள்ளூர்ப் பையன். என்னை விட என்ன ஒரு நாலு வயசு மூத்தவனா இருப்பான். சின்ன வயசுல இருந்தே தெரியும். நானாப் பேசினாக்கூட ஆமாம்

ஆமாமுன்னுட்டு போயிடுவான் தெரியுமா?”

“உங்க ஊர்ப் பையனை அப்பிடியும் உட்டுக் குடுத்துப் பேச மாட்டீங்கறே பார்த்தியா?”

“சரி அப்பிடியெ வச்சுக்கோங்க”

“அவன் செல் நெம்பர் உன் கிட்ட இருக்கா? இருந்தா குடேன். பேசணும் ரொம்ப முக்கியமான விசயம்”

“என்கிட்ட இல்லங்க. என் சித்தப்பனுக போன் நெம்பர் கூட என்கிட்ட இல்ல”

“ஒரு அவசரம்னா நீ யாரைத்தான் கூப்பிடுவே போன்ல?”

“உங்களைத் தான்! ஏன் நீங்க வரமாட்டீங்களா?”

“என்னைய விடு. நாளைக்கே உனக்கு தெரிஞ்சவங்க போன் நெம்பரையெல்லாம் உன் செல்லுல பதிவு பண்ணி வை.”

“சரிங்க, நாளைக்கே பண்ணிடறேன்”

“சாமிநாதன் நெம்பரையும் வாங்கிப் பதிவு பண்ணி வை. நாளைக்கு நைட்டு எனக்குக் குடு. அவன் கிட்டே நான் பேசிக்கிறேன்”

“திடீர்னு போய் நெம்பர் குடுன்னு நான் கேட்டா அவன் என்னை என்ன நினைப்பான்?”

“ஒன்னும் நினைக்க மாட்டான். எல்லாம் நான் வேணுங்கறப்ப பேசிக்கறேன். அவனை வெச்சுத்தான் எல்லா காரியமும் பண்ண முடியும். எனக்காக அவன் செய்வான்”

“சரி, நாளைக்கு எப்படியாச்சும் சாமிநாதன் செல் நெம்பரை வாங்கிடறேன். அப்புறம் அவன் நெம்பரை வச்சுட்டு …?”

“ம், அவன் நெம்பரை வச்சுட்டு? என்ன கேட்கிறே பிரியா?”

“வேற நெம்பரெல்லாம் வாங்கி பழக்கம் வச்சுக்கிட்டீங்கன்னா?”

“எது? சரோஜா நெம்பரெல்லாம் வாங்கீட்டா?”

“ம், உங்களையெல்லாம் நம்ப முடியுமா?”

“உன் புத்தி அப்புறம் உன்னைய விட்டு எங்கே போகும்? அப்படிப் பார்த்தா அதுக்கெல்லாம் எங்க ஊர்லயே அழகழகா இருக்காங்க. உங்க ஊருக்கு நான் தேடீட்டு வரோணுமா இதுக்கு?’

“இல்ல, அவனால் ஏதோ காரியம் ஆகணும்னு சொன்னீங்கள்ள”

“அப்ப அவன் என்ன உங்கூரல் மாமா வேலை பார்த்துட்டு இருக்கானா?”

“நான் போனை வச்சுடறேன்”

“வெச்சுட்டா? நாளைக்குக் கூப்பிடுவன்னு நினைச்சியா? கூப்பிடவே மாட்டேன் நீ வெச்சுடு”

“உங்களுக்கு பயங்கரமா கோபம் வருது. எனக்குப் பயமா இருக்குது” “பேசுறதைப் பேசிட்டு பயமா இருக்குதுன்னு வேற சொல்றியா? ஆறு மாசமெல்லாம் என்னால் பொறுத்துக்க முடியாது. அதுக்குள்ள கேட்டுடுவே! ஆம்பளைங்களை நம்ப முடியாதுன்னு வேற பேச்சோட பேச்சா சொல்றே. சீக்கிரம் வழி பண்ணிடோணும். அவன் நெம்பரை நாளைக்கு எப்போ வாங்குறியோ அப்பவே அவனை அவன் போன்ல இருந்து எனக்கு ரிங் விடச் சொல்லு”

“ஐயோ அவசரப்பட வேண்டாம். நான் இனி அது மாதிரியெல்லாம் பேசலை. உங்களை நம்புறேன். சும்மா பேசினேன்”

“நீ சும்மா பேசினியோ இல்ல நெஜம்மா பேசினயோ? நானும் இனி சும்மா இருக்க முடியாதே. தனியாவெல்லாம் என்னால் உருண்டுட்டுப் பொறண்டுட்டுக் கிடக்க முடியாது. சரியின்னு சொல்லுவேன்னு பார்த்தா …!”

“ஆறு மாசம் … ஆறு மாசம்…”

“அதெல்லாம் முடியாது. எப்ப வேணாலும் கூப்பிடுவேன். நீ கிளம்பி வர முடியுமா முடியாதா?”

“சரி வர்றேங்க “

“பேச்சு மாறக் கூடாது” “சரி பேச்சு மாற மாட்டேன்”

“என் மேல சத்தியம்னு சொல்லு”

“ஐயோ, எதுக்குங்க அதெல்லாம்? வேண்டாம். நான் வர்றேன்”

“அப்போ சத்தியம் பண்ண மாட்டேல்ல, சாமிநாதன் நெம்பரையும் நீ வாங்க வேண்டாம். நானே பாத்துக்கறேன். போனை வை.”

“சரி உங்க மேல சத்தியம்”

“யப்பா , ஒவ்வொன்னுக்கும் உன்னை மிரட்டி மிரட்டித்தான் காரியமே சாதிக்க முடியுமாட்ட இருக்கு. சரி நாளைக்குக் கூப்பிடறேன். தூக்கம் வருதா?”

“ம்… வருது”

“அப்போ தூங்கு வச்சிடறேன்”

– தொடரும்…

– எட்றா வண்டியெ, முதற் பதிப்பு: 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *