எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 27, 2023
பார்வையிட்டோர்: 3,722 
 
 

(1998ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8

அத்தியாயம்-5

திருவல்லிக்கேணி வெங்கடரங்கம் தெருவில் ஆட்டோவில் போய் இறங்கினான் கரிகாலன். சரஸ்வதி யிடம் போகிறோம் என்ற உணர்வில் உடம்பு சற்றே பூரித்துச் சிலிர்த்திருந்தது. கடலை நோக்கிய அவளுடைய உயர்ந்த வீட்டு வாசலில் ஏறிக் கதவைத் தட்டினான். மறுவினாடியே கதவு திறந்தது. கரிகாலனைப் பார்த்ததுமே சரஸ்வதியின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. 

“வாங்க வாங்க… என்ன… நாலுநாளா வரவே காணோம். பிஸியா ரொம்ப?” கரிகாலனை வரவேற்று உள்ளே திரும்பி நடந்தபடியே சரஸ்வதி கேட்டாள். வாசல் கதவை தாளிட்டுவிட்டு வேகமாக அவளைப் பின் தொடர்ந்த கரிகாலன், “என்ன – தலைக்கெல்லாம் குளிச்சி தயாரா இருக்கிற மாதிரி தெரியுது,” என்றான். 

“நான் கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லுங்க… 

“ஒடம்பு சரியில்லை சரசு. அதான் எங்கேயுமே நகரலை”. 

“நேரா கிளம்பி இங்கே வந்திருக்கலாமே…”

“என்னமோ-பேசாமே ரூம்லேயே இருந்திட்டேன்…”

“அட – என்ன இது; முகமெல்லாம் ஜோரா துடைச்சி விட்டாப்பல பளபளன்னு இருக்கு?” சரஸ்வதி வியப்புடன், கரிகாலனின் முகத்தைப் பார்த்தவாறே கேட்டாள். 

“ப்யூட்டி பார்லர்ல இருந்து நேரா வரேன். எப்படியிருக்கு முகம்?” 

“என்ன திடீர்னு பார்லர் எல்லாம் போக ஆரம்பிச்சாச்சி?” 

“ஒரு பெரிய பிளான் சரசு.” 

“பெரிய ப்ளான்னா-பெரிய கொள்ளைன்னு உங்க அகராதியில அர்த்தம்.” 

“ப்ளானைக் கொஞ்ச நேரம் கழிச்சிச் சொல்றேன்… அதுக்கு முந்தி வேற ஒரு சின்ன விஷயம்.. திடீர்னு என்னமோ தோணிச்சீ… நாலு நாள் முந்தி ஒரு போட்டோ என்னை எடுத்தேன்… பார் – எப்படியிருக்கேன்னு…”

கரிகாலன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த கிருஷ்ணகுமார் தனியாக எடுத்துக் கொண்டிருந்த போட்டோவை எடுத்துக் காட்டினான். 

சரஸ்வதி வாங்கிப் பார்த்தாள். “அய்! நாலு வயசு குறைச்சலா தெரியரீங்க…!” 

”நெஜமாவா?” 

“பொய்யா சொல்றேன்… பாருங்களேன் நீங்களே தான்…” 

“நேர்ல இப்பத் தெரியறேனே இதை விடவா இந்தப் போட்டோவில் யங்கா இருக்கேன்?” 

“ஆமா ஆமா ஆமா…” 

“வேற என்ன தோணுது இந்தப் போட்டோவைப் பார்த்தா?” 

“வேற என்ன இருக்கு தோன்றதுக்கு… ஏன்; வேற ஏதாவது இருக்கா தோன்றதுக்கு?” 

“இருக்கிறதாலதானே கேக்கிறேன்…”

சரஸ்வதி கரிகாலனை ஏறிட்டுப் பார்த்தாள். கரிகாலன் ஒரு வெற்றிப் பாவத்துடன் அவளை ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். சரஸ்வதி மறுபடியும் போட்டோவைப் பார்த்தாள். 

“வேற எதுவும் தோணலையே…” என்றாள். 

“நான் ஒண்ணு கேக்கறேன். நல்லா யோசிச்சி பதில் சொல். சொல்றியா?” 

“சொல்றேன்”. 

“இந்தப் போட்டோவுக்கும் எனக்கும்- ஏதாவது வித்தியாசம் தெரியுதா?” 

“நீங்க கேக்கறப்பத்தான் வித்தியாசம் இருக்கு மோன்னு தோணுது…” 

“வித்தியாசம் தெரியுதா தெரியலையா? அதைச் சொல்லு…” 

“புருவத்ல எதுவும் சேஞ்ச் பண்ணியிருக்கீங்களா?” 

“இல்லையே…’” 

“அதுலதான் வித்தியாசம் தெரியுது”. 

”வேற?” 

“வேற ஒண்ணும் சொல்ற மாதிரி பளிச்னு தெரியலை…” 

“இன்னும் நல்லா பாரேன்.”

“இப்பத்தான் சந்தேகம் வருது – இந்த போட்டோ நீங்க இல்லையோன்னு…” 

“ஆஹா! இதான் சரஸ்வதி… பார்த்தியா- எப்படி ஏமாந்தேன்னு…” 

”அய்யோ… நான் சும்மா ஒரு பேச்சுக்கு அப்படிச் சொன்னேங்க…” 

“நெஜமாவே இந்த போட்டோவில் இருக்கிறவன் நான் கிடையாது சரஸ்வதி…”

“நெஜமாவேவா?” சரஸ்வதி சிறிதும் நம்ப முடியாமல் கேட்டாள். 

”உன் அப்பன் மேல ஆணையா சொல்றேன். இதில் இருக்கிறவன் நான் இல்லை…”

“என்னால் நம்பவே முடியலைங்க… நெஜமா வித்தியாசமே தெரியலைங்க…”

“இந்தப் போட்டோவில் இருக்கிறவன் பெயர் கிருஷ்ணகுமார் சரஸ்வதி… ரொம்பப் பெரிய இடத்துப் பையன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி காணாமே போயிட்டான்…” என்று ஆரம்பித்து, திட்டம் பூராவையும் சொல்லி முடித்தான். 

சரஸ்வதி பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவளின் பார்வை கிருஷ்ணகுமாரின் போட்டோவின் மீதே லயித்திருந்தது. 

”ஏய்; என்ன அந்தப் பயலையே டாவ் அடிச்சிக்கிட்டு இருக்கே…” 

“உங்க ப்ளான் நல்லபடியா கிளிக் ஆகுமாங்க…?” 

”உனக்கே வித்தியாசம் தெரியலை.. அப்படி இருக்கறப்ப ப்ளான் கிளிக் ஆகாமே போயிடுமா?” 

“இதுல இன்னொரு விஷயம் இருக்குங்க.”

“என்ன விஷயம்?” 

“நீங்க போய் அவங்க வீட்ல இருக்கிற அந்தச் சமயத்ல; யாரும் எதிர்பாராம திடீர்னு அந்தப் பையன் கிருஷ்ணகுமார் வீடு திரும்பி வந்திட்டா?” 

இந்தக் கேள்வியைக் கரிகாலன் கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை. திருதிருவென்று விழித்தான். 

“ஓடிப் போனவன் ஓடியே போயிருவான்னு என்ன நிச்சயம்? திடீர்னு மனசு மாறி அவனாகவே நீங்க இருக்கும்போதே திரும்பி வந்திட்டா உங்க கதி என்ன ஆகிறது… அதையும் யோசிச்சிப் பார்த்துக்கோங்க…” 

கரிகாலன் பதில் சொல்லவில்லை. புதிய காதலுடன் சரஸ்வதியைப் பற்றி இழுத்து அணைத்து முத்தமிட்டான். 

”உண்மையிலேயே இது யோசிக்க வேண்டிய விஷயம்தான் சரசு… நானும் இதை நெனைச்சே பார்க்கலை. செல்வமும் யோசிச்சிப் பார்க்கலை… நீ சொல்ற மாதிரி நான் சிவசிதம்பரத்தோட வீட்ல இருக்கிற சமயத்ல அந்த கிருஷ்ணகுமார் பயல் வந்திட்டான்னு வச்சிக்க-அவ்வளவு தான்; பயங்கர அதிரடிதான்… காம்ப்ளி கேஷன்தான்…” 

”எப்படித் தப்பிச்சி வருவீங்க… அப்ப?” 

“அதெல்லாம் பறந்து வந்திருவேன்… ஆனால் கொஞ்சம் டென்ஷனாயிடும்… கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமே போயிடும்… அது மட்டுமில்லை. அப்படி ஆயிடுச்சின்னா இந்த மெட்ராஸ்ல நான் தலைகாட்ட முடியாதபடி ஆயிடும். ப்ளான் போட்டது இப்படி நடக்காமே போனாலும் கல்கத்தாவுக்கு நான் ஓடித்தான் ஆகணும்…” 

“அதனால நல்லா ப்ளான் போட்டுக்கோங்க…” 

“அதை நான் செல்வம்கிட்டே க்ளீயரா பேசிக் கறேன்… எதிர்பாராமே அந்த மாதிரி ஏதாவது நடந்திட்டா எப்படி ஃபேஸ் பண்ணலாம்னும் ஒரு ப்ளான் பண்ணி வச்சிக்கிறோம்…”

“பேராசைப்பட்டு இருக்கிறதுக்கும் ஆபத்து வந்திரக் கூடாதே… இதுவரைக்கும் எந்த போலீஸ்காரன் சந்தேகத்துக்கும் ஆளானதில்லை-நீங்க…” 

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் சரசு. இப்ப நான் உன்கிட்டே வேற ஒரு ப்ளானைப் பத்திப் பேசணும் என்கிறதுக்குத்தான் அவசரமா ஓடி வரேன்… இந்த ப்ளான் நல்லபடியா நிறைவேறி நானும் நகையோ பணமோ – நெறைய அடிச்சிக்கிட்டு கிளம்பிடறேன்னே வச்சிக்க- எதிர்பார்த்ததுக்கும் மேலேயே ஈஸியா கிடைச்சதுன்னு வச்சிக்க – கிடைச்சது அத்தினியையும் செல்வம் கிட்டே காட்டிர வேண்டாம்னு ரகசிய ஐடியா போட்டிருக்கேன். முதல்ல நமக்குக் கொஞ்சம் தனியா வேணும் என்கிறதை உன்கிட்டே கொண்டாந்து ஒதுக்கிடறேன். பத்திரமா வச்சிக்க. இந்த ஆபரேஷன் கம்ப்ளீட் ஆன பிறகு நானும் அவனும் பங்கு போட்டுக்கிட்டு கல்கத்தாவில் செட்டில் ஆனதும் வீடெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டு உன்னை வந்து கூட்டிட்டுப் போயிடறேன். மொத்தப் பணம் நகை எல்லாத்தையும் வச்சி ஏதாவது தொழில் ஆரம்பிச்சிருவோம். என்ன..”

“பொண்ணு பிறந்திட்டா?” 

“கிருஷ்ணகுமாரி…!’ 

“செல்வம் கிட்டேயும் ஜாக்கிரதையா இருங்க…”

“டோண்ட் வொர்ரி… அவனுக்கு உன்னைத் தெரியவே தெரியாது – இன்னும்…” 

“சரி வாங்க முதல்ல… உங்களுக்குச் சாப்பாடு போடறேன்…” சரஸ்வதி கூப்பிட்டாள். 

“இதோ வந்திட்டேன் …” என்றபடி கரிகாலன் கைகால் கழுவ பாத்ரூம் நோக்கிப் போனான். 

அத்தியாயம்-6

பாரிமுனையில் இருக்கும் சிவசிதம்பரத்தின் கப்பல் ஏஜென்ஸியின் அலுவலகத்திற்குச் செல்வம் போனபோது சிவசிதம்பரம் வீட்டுக்குக் கிளம்பிப் போயிருந்தார். 

“நீங்க யார்; என்ன வேணும் உங்களுக்கு?” ஒருவர் கேட்டார். 

செல்வம் சுருக்கமாகத் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். 

“ஓ-நீங்கதானா; முதலாளி உங்களைப் பத்தி சொல்லிட்டிருந்தார். ஒரு நிமிஷம் இருங்க அவருக்கு இன்ஃபார்ம் பண்றேன். வீட்டுக்கு வரச் சொன்னார்னா வீட்ல போய்ப் பாத்திடுங்க… முதலாளி ரொம்ப அப்செட் ஆகிப் போயிருக்கார்… “

பேசிக் கொண்டே அவர் ரிசீவரை எடுத்து டயல் பண்ணினார்… லைன் எங்கேஜ்டாகி இருந்ததோ என்னமோ சில விநாடிகள் காத்திருந்த பின் மீண்டும் டயல் செய்தார். 

“உங்களைத் தேடி நீங்க சொன்ன அந்த விக்ரமன் என்கிறவர் வந்திருக்கார்… ஆமா சார், சரி சார்; சொல்லிடறேன் சார்… வேற ஒண்ணுமில்லை சார்…” ரிசீவரை வைத்தார். 

“உங்களை வீட்டுக்கு வரச் சொன்னார்.”

“போறதுக்குள் எங்கேயும் வெளியில் போயிட மாட்டாரே…?” 

“அவர் பாவம் சார், ஒரு மகன் இப்படிக் கல்யாணம் பண்ற வயசில் வீட்டைவிட்டு ஓடிப்போயிட்டானே என்கிற பயங்கர கவலையில் இருக்காரு… இல்லைன்னா இந் நேரத்ல எழுந்து வீட்டுக்குப் போறவரா…” 

“அவர் மகனும் இப்படி அநியாயமா ஓடிப் போயிருக்க வேண்டாம்.. ஏதோ இல்லாத வீட்ல பிறந்து லோல்பட்டா சரி; இந்தப் பையனுக்கென்ன பெரிய ராஜா மாதிரியான குடும்பத்ல பிறந்திட்டு…”- செல்வம் மெதுவாக விஷயத்தை கிரஹிக்கிற மாதிரி பேசினான். 

”கொஞ்சம் எக்செண்ட்ரிக்கான பையன் சார் அவன்… ஒரு மாதிரி டைப். ஆனா மோசமான டைப் கிடைய டயாது. தேவைக்கும் மேல பணம் இருக்கு. பெரியவராவது இந்தக் காலத்து பசங்களைப் புரிஞ்சி விட்டுப் பிடிச்சிருக்க லாம். இவரு கொஞ்சம் பழமையான ஆள்… அப்பாவுக்கும் பிள்ளைக்கும் ஒத்து வராமே போயிடுச்சி… ஆனா ஒண்ணு கிருஷ்ணகுமார் மட்டும் திரும்பி வரலை… எங்க முதலாளி அவ்வளவுதான்.. சரி சார்; நீங்க புறப்பட்டுப் போய் வீட்ல பாருங்க…” 

“ஓகே சார்.” 

செல்வம் அந்த அலுவலகத்தை விட்டுத் திருப்தியுடன் வெளியேறினான். அலுவலகம் வந்ததுகூட நல்லதாகத்தான் போயிருப்பதாகத் தோன்றியது. ஆனாலும் மீண்டும் ஒரு முறை அலுவலகம் பக்கம் வந்துவிடக் கூடாது. சிவசிதம்பரத்தைச் சார்ந்த நிறைய பேர் தன்னை அடையாளம் கண்டு கொள்கிற மாதிரி தான் பரிச்சயமாகி விடக்கூடாது என்கிற நினைவு வந்துவிட்டது அவனுக்கு. செல்வத்திற்கு தான் ஒரு தவறு செய்திருப்பதாகத் தோன்றியது! தான் முதன் முதலாக சிவ சிதம்பரத்தைச் சந்திக்கப் போயிருந்த போது சிறிது மாறுவேஷம் போட்டுக்கொண்டு சென்றிருக்கலாம்.

இனி அதைப்பற்றிக் கவலைப்பட்டுப் பயன் இல்லை… ஆட்டோ ஒன்றை அழைத்து ஏறிக் கொண்டான். மந்தைவெளி பஸ்ஸ்டாண்ட் அருகில் இறங்கி வேகமாக நடந்தான். பதினைந்து நிமிடங்களில் சிவசிதம்பரத்தின் வீட்டை அடைந்தான். 

செல்வம் வீட்டிற்குள் நுழைந்தபோது சிவசிதம்பரம் யாருடனோ டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தார். கையைக் காட்டி செல்வத்தை உட்காரச் சொன்னார். தொடர்ந்து ஐந்து நிமிடங் எகளுக்குப் பேசியபின் ரிசீவரை வைத்துவிட்டு செல்வத்தின் பக்கம் திரும்பிச் சொன்னார். 

“ஆடிட்டர்கிட்டே பேசிட்டிருந்தேன்… இன்கம் டாக்ஸ் அட்வான்ஸ் டேக்ஸ் கட்றதில் ப்ராப்ளம்ஸ்… மகன் ஓடிப் போயிட்ட பிரச்சனை மனசுக்குள் தீயா எரிஞ்சுக்கிட்டு இருந்தாலும் இந்த விஷயங்களையும் பார்த்துத் தானே ஆக வேண்டியிருக்கு…’ 

“கஷ்டம்தான்,” என்றான் செல்வம். “வீடியோ கேசட்ஸை நல்லா போட்டுப் பார்த்தீங்களா?” 

“பாத்திட்டேன் சார். உங்ககிட்டே திருப்பிக் குடுத்திரலாம்னுதான் ஆபிஸ்க்குப் போனேன்… நீங்க வீட்டுக்குப் புறப்பட்டு வந்திட்டீங்க… உங்களை ஒரு முக்கியமான விஷயம் கேக்கணும்னுதான் வந்தேன். உங்க மகன் கிருஷ்ணகுமார் சமீபத்ல பாஸ்போர்ட் எதுவும் வாங்கறதுக்காக முயற்சி செய்தாரா?” 

“எனக்குத் தெரிஞ்சு இல்லை. ஏன் அப்படிக் கேக்கறீங்க?” 

உடனே செல்வம் தன்னுடைய பாக்கெட்டில் வைத்திருந்த கரிகாலனின் புகைப்படத்தை எடுத்து நீட்டினான். 

”பாருங்க; சமீபத்ல ஒரு ஸ்டூடியோவில் உங்க மகன் இந்த போட்டோ எடுத்திருக்கார். அவருக்கு இந்த மாதிரி சாதாரண ஸ்டூடியோவில் போய் இப்படி ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை எடுத்துக்க வேண்டிய காரணமே கிடையாது. இல்லையா?” 

சிவசிதம்பரம் ஆர்வத்துடன் போட்டோவை வாங்கிப் பார்த்தார். செல்வம் கூர்மையான கவனத்துடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான். 

“இந்தப் போட்டோவை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே கிடையாது…” சிவசிதம்பரம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து அவருடைய மனைவி வந்தாள். 

“இந்தப் போட்டோவை நீ பார்த்திருக்கியா பார்…” சிவசிதம்பரம் போட்டோவை மனைவியிடம் நீட்டினார். மனைவி உற்று நோக்கிவிட்டுச் சொன்னாள். 

“பார்த்த மாதிரி இல்லையே…’ 

“இது உங்க கிருஷ்ணகுமாரோட போட்டோதானே?” 

செல்வம் மிகவும் திட்டமிட்டுக் கேட்டான். 

“அவன்தான்..” சிவசிதம்பரம் அவசரமாகச் சொன்னார். 

“இது ஏது உங்களுக்கு?” சிவசிதம்பரத்தின் மனைவி கேட்டாள். 

சிவசிதம்பரமே பதில் சொன்னார்: “ஒரு ஸ்டூடி யோவில் கிடைச்சதாம். பரவாயில்லை மிஸ்டர் விக்ரமன்! ரொம்ப வேகமாகவும் தீவிரமாகவும் வேலை பார்த்திருக்கீங்க… அந்த பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சியோட கண்லகூட இந்த போட்டோ படலை. நீங்க கண்டுபிடிச்சிருக்கீங்க. நெஜமாவே எனக்கு நம்பிக்கை வந்திருக்கு – நீங்க என் மகனைக் கண்டு பிடிச்சித் தந்திடுவீங்கன்னு…” சிவசிதம்பரம் நன்றி பெருக்குடன் பேசினார். 

”ஆனா, எனக்கொரு சந்தேகம் சார். கிருஷ்ணகுமார் விசா வாங்கிக்கிட்டு ஏதாவது வெளிநாட்டுக்குப் போனாலும் போயிருப்பாரோன்னு…” செல்வம் பெரிய ஆதங்கத்தைக் காட்டியவாறு சொன்னான். 

“இருக்க முடியாது விக்ரமன்! அப்படியெல்லாம் தெரியாமே பாஸ்போர்ட் விசா எல்லாம் வாங்கிட முடியாது. ஃப்ளைட் ஏறிப் போயிடவும் வழி கிடையாது. ஸோ-இட்ஸ் நாட் பாசிபிள்…” 

“எனக்கும் தெரியும் சார் அது… இருந்தாலும் உங்களுக்குத் தெரியாம அப்படியெல்லாம் நடக்கிறதுக்கு சான்ஸ் உண்டான்னு சும்மா உங்களைக் கேட்டுப் பார்த்தேன்…” 

“நோ சான்ஸ்…”

“கோவாவில் இருக்கிற என்னோட நண்பனுக்கு ஒரு பிரைவேட் கம்பெனி மூலமா கிருஷ்ணகுமார் பத்தி டெலக்ஸ் மெஸேஜ் குடுத்திருக்கேன்… ஃபேக்ஸ் சர்வீஸையும் யூஸ் பண்ணிக்கிறதா இருக்கேன். அநேகமா நாளைக்கி நான் பேங்களூர் போவேன்… அங்கே ஒரு ரவுண்ட் அடிச்சிப் பார்த்திட்டு, அப்படியே எர்ணாகுளம் போய்ப் பார்க்கிறேன்…” 

“கொஞ்சம் இருங்க விக்ரமன் ; இதோ வந்திடறேன்” என்று சொல்லிவிட்டு சிவசிதம்பரம் எழுந்து உள்ளே போனார். “எப்படியாவது என் மகனைக் கண்டுபிடிச்சித் தந்திருங்க தம்பி… ” சிவசிதம்பரத்தின் மனைவி கண்களைத் துடைத்தவாறே செல்வத்திடம் சொன்னாள். 

“என்னால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணிப் பார்க்கிறேன் அம்மா… அதுக்கு மேல கடவுள் விட்ட வழி” 

சிவசிதம்பரம் உள்ளிருந்து வந்தார்…. 

“இந்தாங்க விக்ரமன் – மூவாயிரம் ரூபாய், பேங்களூர், எர்ணாக்குளம் எல்லாம் போறதா சொன்னீங்களே- அந்தச் செலவுக்கு வச்சிக்கோங்க…” 

செல்வம் இதை எதிர்பார்க்கவில்லை “வேணாம் சார்… இப்ப எதுக்கு… கிருஷ்ணகுமாரைக் கண்டுபிடிச்சித் தந்த அப்புறம் கடைசியில வாங்கிக்கறேன்…” என்றான் மிக மிக நல்ல பிள்ளை போன்ற பாவனையுடன்… 

”நோ நோ…நீங்க வாங்கிக்கத்தான் செய்யணும்,” என்றார் சிவசிதம்பரம். 

“வேணாம் சார்… இது எனக்குத் தொழில் இல்லையே…” 

”இருக்கலாம்… அதுக்காக பணம் செலவழியாமே இருக்குமா… வாங்கிக்கோங்க.”

”சரி; உங்களுக்காக வாங்கிக்கிறேன்…!” 

“இது செலவானதும் தயங்காமே என்கிட்டே வந்து கேளுங்க. நீங்க வீணா உங்க கைகாசை செலவு பண்ண வேண்டாம்…” 

“உங்களோட இந்த நல்ல மனசுக்காகவாவது உங்க மகன் சீக்கிரமா வீடு வந்து சேரணும்…” 

“உங்களுக்குத் தெரியுது என் மனசு… ஆனா என் மகனுக்குத் தெரியாமே போயிடுச்சி பாருங்க…”

“இந்தப் பணத்துக்கு நான் எப்படி ரசீது தரணும்னு சொல்றீங்களோ அப்படியே தந்திடறேன்” 

சிவசிதம்பரம் அவசரமாக மறுத்தார். 

“நோ நோ. இதுக்கெல்லாம் போய் ரசீது தந்துகிட்டு…” 

“நீங்க கணக்கு எழுதணுமே – அதுக்காக கேட்டேன்.”

“இல்லை விக்ரமன்… இதையெல்லாம் போய் எந்தக் கணக்கிலும் நான் எழுதமாட்டேன். எழுதவும் முடியாது…” 

”எனக்கு ஒண்ணுமில்லை. உங்களுக்குத் தேவையிருந்தா குடுத்திரலாமேன்னு பார்த்தேன்…” 

“தேவையே இல்லை” 

“அப்ப நான் கிளம்பறேன்.” 

என்று சொல்லியபடி செல்வம் எழுந்தான்.

”-விக்ரமன், லஞ்ச் சாப்பிடற டைம் ஆயிடுச்சி; இருந்து சாப்பிட்டுட்டு போயிருங்க…” 

சிவசிதம்பரம் சொன்னார். 

“இப்பவே நேரமாயிடுச்சி… பாஸ்போர்ட் ஆபீஸ்ல ஒருத்தரைப் பார்க்க வர்றதா சொல்லியிருக்கேன்” செல்வம் சிறிது பிகு பண்ணினான். ஆனாலும் அத்தனை பெரிய செல்வந்தர் வீட்டில் சாப்பிட்டுப் பார்க்கிற ஆர்வமும் உள்ளுக்குள் வந்தது. 

சிவசிதம்பரம் மனைவியிடம் சொன்னார். 

“பாக்யம், இவருக்கும் சாப்பிட தட்டு எடுத்து வை…”

“இதோ எடுத்து வைக்கிறேன்… அஞ்சு நிமிஷத்ல அவரைக் கூட்டிட்டு வாங்க…” என்றபடி அவரின் மனைவி டைனிங் ஹால் நோக்கிப் போனாள். செல்வம் என்ன செய்வது என்று தெரியாமல் அகன்ற ஹாலை சுற்றும் முற்றும் பார்த்தான்… 

”கொஞ்சம் பழைய வீடுதான்” சிவசிதம்பரம் சொன்னார். 

“இருந்தா என்ன சார்… ஜோராயிருக்கே… இன்னிக்கிக் கட்டறதா இருந்தா இருபது லட்சம் ஆகுமே…” 

“அது ஆகும்…” 

“அவ்வளவும் தேக்குத்தானே?” 

“பர்மா தேக்கு… வாங்க; அவங்க கூப்பிடறதுக்குள்ளே வீடு பூராவையும் உங்களுக்கு காண்பிச்சிடறேன். எங்க அப்பா கட்டின வீடு இது” 

சிவசிதம்பரம் அழைத்தார். செல்வத்திற்கு அதுவும் நல்லதுதான் எனத் தோன்றியது. வீடு பூராவையும் துல்லியமாகப் பார்த்து எது எது எங்கேயென்ற விபரங்களை அப்படியே கரிகாலனுக்கு இந்த வீட்டின் பிளான் ஒன்றையே வரைந்து காட்டிவிடலாமே… சிவசிதம்பரம் ஒவ்வொருடமாகச் செல்வத்திற்குக் காட்டினார்… கிருஷ்ணகுமாரின் அறை உட்பட… அந்த அறை மாடியில் இருந்தது. 

கிருஷ்ணகுமாரின் அறைக்குள் சென்றதும் செல்வத்தின் உணர்வுகள் உயர்ந்து முனைந்தன. அங்கு இருந்த அத்தனை பொருட்களையும் கவனமாகப் பார்த்தான். அந்த அறைக்குச் சிறிய பால்கனி இருந்தது. பால்கனியை ஒட்டி தென்னை மரம் உயர்ந்து வளர்ந்திருந்தது. எளிதாகக் குதித்து கீழே சென்றுவிட வசதியாய் ஒரு ‘ஸன்-ஸேடு’ சென்றது… 

“நைட்ல ஈசியா திருடன் வந்திடலாம் போலிருக்கே… இந்த பால்கனி வழியா…” செல்வம் ஆழம் பார்ப்பதற்காக கேட்டான். 

“விடிய விடிய நைட்ல மட்டும் செக்யூரிட்டி உண்டு…”-சிவசிதம்பரம் சொன்னார். அப்போது கீழிருந்து பணியாள் ஒருவன் படியேறி வந்து கூப்பிட்டான். 

“சாப்பிட வரச் சொன்னாங்க அம்மா” 

“இதோ வந்திட்டோம்… வாங்க விக்ரமன்.” 

செல்வம் முழு திருப்தியுடன் சிவசிதம்பரத்துடன் 

சாப்பிட கீழே இறங்கிப் போனான்.

– தொடரும்…

– எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி (நாவல்), முதற் பதிப்பு: 1998, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *