உயிர் மேல் ஆசை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2021
பார்வையிட்டோர்: 4,912 
 

வைகறை ஞாயிற்றின் முதல் கீற்று அந்த ஊரில் பாட்டிமீது தான் முதலில் விழும். வெண்ணாற்றில் குளித்து முடித்து ஈரப்புடவை சொட்டச்சொட்ட நின்றபடியே அந்த முதல் ஒளியை எதிர்நோக்கி ஜபத்தையும் அங்கேயே முடித்துக்கொண்டபின் குடத்தை எடுத்துக்கொண்டு ஆள் உயரம் உள்ள படுக்கைக் கரையில் ஏறி இறங்கி, படு வேகமாகக் கண் மண் தெரியாமல் லாரிகள் பறக்கும் மெயின் ரோடைத் தாண்டித் தெருவுக்குள் அந்த இறக்கத்தில் பாட்டி இறங்கும் போதுதான் பல் துலக்கவே ஆற்றுப் பக்கம் போகும் பலர் எதிரில் வருவார்கள்.

சாலையைத் தாண்டி நாலு தப்படி நடந்ததும் சுகவனேசுவரர் கோயிலின் கீழ் வாசல் நிறைந்த கோபுரமாக இருந்து இப்போது இடிந்துபோய் மொட்டையாகச் சுற்றுப்புறம் முழுவதும் அரைக் கல்லாகவும் கால் கல்லாகவும் இறைந்து கிடக்கும் அந்த இடத்தைத் தாண்டி உள்ளே நுழைவாள் பாட்டி. கோபுர வாசலிலிருந்து முன் மண்டபம் வரும்வரை உள்ள அந்த நாற்பது அடிப் பிரதேசத்தில் நெருஞ்சிமுட் செடிகள் தன்னிச்சையாக வளர்ந்திருந்தாலும் ஒற்றையடிப் பாதையாக வழி விட்டிருக்கும். பாட்டி கண்களை இடுக்கித் தடம் புரிந்துகொண்டு நடந்து முன் மண்டபத்தில் ஏறி உள்ளே நோக்குவாள். முன் மண்டபமே இருட்டாக இருக்கும். அதனுள் தெரியும் கர்ப்பக்கிரகம் அதைவிடக் கருக்கிருட்டாக இருக்கும். அதனுள் தண்டபாணி குருக்கள் தட்டுத்தடுமாறி உதயவேளை பூஜையை முடித்துக் கொண்டு விட்டதற்குச் சாட்சியாக விளக்கேற்றி வைத்து விட்டுச் சுகவனேசுவரரின் தலையில் இரண்டு பூக்களையும் போட்டுவிட்டுப் போயிருப்பார். அந்தக் கருக்கிருட்டிலும் இந்தச் சின்ன விளக்கொளியில் எண்ணெய் முழுக்கில் வழவழவென்று தெரியும் சுகவனேசுவரரைத் தரிசித்துப் பரவசமாகி நிற்பாள் பாட்டி. பின்னர் வலப்புறம் தனியாக அமைந்துள்ள அம்மன் சந்நிதியிலும் தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளிப் பிரகாரத்துக்கு வருவாள். அந்த இடத்தில் இப்போதெல்லாம் சுந்தரிப் பாட்டி மாத்திரமே கால் வைப்பதனால் தடங்கூட விழாமல் எல்லா இடங்களிலும் ஒரே நெருஞ்சி முட்காடாக இருக்கும். அந்தப் பிரதேசத்தில் பாட்டி காலில் முள் தைத்துக் கொள்ளாமல் ஓர் உத்தேசமாக நடந்து தெற்கு நோக்கி இருக்கும் தட்சிணாமூர்த்தியின் சந்நிதிக்கு வருவாள். பாட்டியின் பிரகாரச் சுற்றே இந்தத் தட்சிணாமூர்த்தியை உத்தேசித்திதுத்தான். பிராகாரத்தில் இருந்த பிள்ளையாரும் சுப்பிரமணியரும் அவரவர்களுடைய மண்டபங்களை விட்டுக் கோயிலின் முன்மண்டபத்தின் இருட்டு மூலைகளை எப்போதோ ஆக்கிரமித்துக் கொண்டு விட்டார்கள்.

ஒருவாறாக கோயிலைச் சுற்றிக்கொண்டு வெளியில் வந்து ஈரப்புடவை புழுதியில் படாதவாறு கோபுர வாசலில் ஒரு நமஸ்காரமும் செய்துவிட்டுப் பாட்டி வெளியேறுவாள். சிவன் கோவில் வாசலைத் தாண்டி நாலு தப்படி தெற்கு நோக்கி நடந்தால் சின்ன வாய்க்கால் ஒன்று குறுக்கிடும். அதில் பாலம் அமைத்து வெகு காலம் ஆகிவிட்டதனால் அது இப்போது வண்டிப் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக ஆகி, கல் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். அந்த இடத்தையும் ஜாக்கிரதையுடன் தாண்டி இரு பக்க வேலியடைப்புடைய சந்தினுள் நுழைந்து தெருவுக்குள் பிரவேசித்து மேற்கே திரும்பினால் நாலாவது வீடு பாட்டியின் வீடு.

‘வீடு’ என்று கௌரவத்துக்காக அதைச் சொல்லலாமே தவிர பாட்டிக்கான எழுபது வயசையும் அதற்கு மேலும் விழுங்கி விட்டு நிற்கும் அந்த வீடு பல ஆண்டுகளாக எந்த விதமான பழுதும் பார்க்கப் படாமல், மனிதர்களிடமிருந்து மறைந்து விட்ட நன்றி விசுவாசத்தைத் தானாவது கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்குடன்தான் இன்னும் விழாமல் நிற்கிறது என்று சொல்ல வேண்டும். வீட்டின் திண்ணையையும் இடைக்கழியையும் தாண்டினால் பெரிய முற்றம், நீண்ட கூடம், தாழ்வாரம்.. அவ்வளவுதான். சமையற்கட்டும் பின்னால் இருந்த பகுதிகளும் எப்போதோ விழுந்துவிட்டன.

பாட்டிக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு காரியந்தான் அவசரம். காலையில் எழுந்து இருள் பிரிவதற்கு முன் குளித்துவிட்டுச் சுகவனேசுவரர் தரிசனத்தை முடித்துக்கொண்டு வந்துவிட வேண்டும். அவ்வளவுதான். அதன் பின்னர் அவள் கால அட்டவணை ஒரு வரைமுறைக்கு உட்பட்டதில்லை. ஏகாதசி முதலிய விரத நாட்களில் அந்த வீட்டில் அடுப்பே மூட்டப்படாது. மற்ற நாட்களில் பத்து மணிக்கு மேல் ஒரே ஒரு தடவை மூட்டப்பட்டு, பாட்டியின் மூன்று வேளை ஆகாரமும் ஒரே அடுப்பில் முடிந்துவிடும்.

பாட்டி தன் எழுபது வயது வாழ்க்கையையும் இப்படியேயா வாழ்ந்திருப்பாள்? அவளும் ஒரு காலத்தில் சின்னஞ்சிறுமியாக இதே தெருவில் பாவாடையைத் தூக்கிக் கட்டிக்கொண்டு, நாக்கைத் துருத்தியபடியே பாண்டியாடியிருப்பாள். அந்த நாளில் அறுபது வருஷங்களுக்கு முன்னர், ஒரு நாள் பாதிப் பாண்டியாட்டத்தில் ‘உப்புக்கோட்டில்” அவள் இரண்டு கால்களையும் வைத்துக்கொண்டு நிற்கும்போது யாரோ வந்து அவளைத் தூக்கிக்கொண்டு போய்க் கையிலும் காலிலும் மூக்கிலும் கழுத்திலும் தூக்க முடியாதபடி நகைகளை அணிவித்து, எட்டு வயதில் பதினெட்டு முழப் புடவையை உடலில் சுற்றிக் கல்யாணம் என்ற அந்த விளையாட்டை ஆடியிருப்பார்கள்.

ஆம், அப்படித்தான் நடந்தது.

பாட்டியின் பிறந்த வீடும் அந்த நாளில் வசதி வாய்ந்தது. புகுந்த வீடோ பெரிய கை. பாட்டி அந்த வீட்டில் புகுந்த சில நாட்களுக்கெல்லாம் மாமியாராக இருந்தவள் மருமகளை அழைத்துத் தனக்கு இருந்த பெட்டி கொள்ளாத நகை அத்தனையையும் காண்பித்து அவளை ஸ்தம்பிக்கச் செய்தாள்.

அந்த நாட்களின் நினைவுகள் பாட்டியின் மனத்தில் இலேசாக நிழலாடுகின்றன.

ஒரு நாள் இரவு, கூடத்தில் மாமியாருடன் படுத்துக் கொண்டிருந்தாள். மாமனாரும் ‘அவரும்’ வாசல் திண்ணையில் படுத்துக் கொண்டிருந்தார்கள். நடுநிசிக்கு மேல் அவள் கண் விழித்துப் பார்க்கும்போது மாமனாரை ஒரு தூணோடு சேர்த்துக் கட்டி வைத்திருக்கிறது. ஏழெட்டு முரட்டுத் திருடர்கள் வீட்டின் உள் அறையில் இருந்த மரப்பெட்டிகளை எல்லாம் கூடத்தில் கொண்டு வந்து கவிழ்த்திருக்கிறார்கள். கூடம் முழுவதும் தங்கச் சங்கிலிகளும் வளையல்களும் காசுமாலைளுமாகச் சிதறிக் கிடக்கின்றன. மாமியார் தம் கழுத்தில் இருந்த தாலிச் சரட்டைத் தவிர மற்றவை அனைத்தையும் கழற்றி வைக்கிறார். அவளையும் அப்படியே செய்யச் சொல்கிறார்கள். பின்னர் அவற்றை எல்லாம் மூட்டையாகக் கட்டித் திருடர்கள் தூக்கிக் கொண்டு வீட்டின் பின்பக்கமாகப் போகிறார்கள். மாமியார் அழுதுகொண்டே மாமனாரின் கட்டுகளை அவிழ்க்கிறார்.

அந்தக் காட்சி அவ்வளவுதான்.

அதன் பின்னர் மாமனார் மாமியார் ஒவ்வொருவராகக் காலமானதுகூடத் திருடர்கள் வந்துவிட்டுப் போனதைப் போல் அவ்வளவு ஆழமாகப் பதியவில்லை. அதற்குப் பின் அவள் வாழ்க்கையில் சோக நாடகமான அதுவும் அந்த நாட்களிலேயே நடந்து முடிந்தது.

எப்படியோ காலம் நகர்ந்து அவளுக்கும் பதினைந்து வயதாகி நினைவு தெரிந்து, இருபத்தைந்து வயதாகி அறிவு தெரிந்து, முப்பத்தைந்து வயதாகி மூப்பின் நரை தெரிந்து, நாற்பத்தைந்து ஆகிப் பாட்டி என்ற பட்டத்தையும் வாங்கிக் கொண்டாள்.

அவளுக்கு இரண்டு அண்ணாக்கள், ஒரு தங்கை உண்டு. அவள் வீட்டுச் சொத்தை எல்லாம் கொள்ளைக்காரர்களிடம் பறிகொடுத்து விட்டபின் அவளால் அவர்களுக்கு ஓர் ஆதாயமும் இல்லை. அவளுக்கும் அவர்களால் ஆகவேண்டியது ஒன்றும் இல்லை. அவ்வப்போது ஒவ்வொருவர் வீட்டிலும் கொஞ்ச நாள் காலம் கழித்து, அத்தனை பேர் வாயிலும் புகுந்து புறப்பட்டு, அவ்வப்போது கோபித்துக்கொண்டு இங்கே திரும்பி வந்து இந்த வீட்டில் நாலைந்து மாதம் அடைக்கலம் புகுந்து விட்டு மீண்டும் அந்தத் தனிமையின் கொடுமையைத் தாள முடியாமல் வெட்கத்தையும் விட்டு அந்த அண்ணன்மார்கள் வீட்டிலும் சகோதரி வீட்டிலும் அவர்கள் குழந்தைகளிடமும் அன்பை யாசிக்கும் தனிக் கட்டையாகக் காலம் கழித்தாள் அவள்.

பின்னர் அண்ணாக்களின் பிள்ளைகளும், சகோதரியின் பெண்களும் அவரவர்கள் சென்னை, பம்பாய், டில்லி என்று பல ஊர்களில் பிழைப்புக்குப் போனபோது அவர்கள் எல்லோருக்குமே ஒரு சமயம் இல்லாவிட்டால் ஒரு சமயம் அவள் தயவு வேண்டியிருந்தது. பம்பாயில் அண்ணா பிள்ளையின் மனைவிக்கு நாலாவது பிரசவத்துக்காக நான்கு மாதம் பம்பாயில் இருந்துவிட்டுத் திரும்பவும் ஊருக்கு வந்து வெண்ணாற்று நீரோட்டையும், சுகவனேசுவரர் தரிசனத்தையும் விட்டுப் போன நாட்களுக்கும் சேர்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும்போது கல்கத்தாவில் இருந்த சகோதரி பெண்ணிடமிருந்து அழைப்பு வரும். அங்கேயிருந்து நேராக டில்லிக்குப் போக வேண்டியிருக்கும். இப்படியாக ஒரு பதினைந்து வருஷம் தன் உடலை ஓடாக்கி வஞ்சனையின்றி அத்தனை பேருக்கும் உழைத்தாள் பாட்டி, ஒரு பிரதிபலன் நினைக்காமல் மனசில் துளியும் கள்ளங்கபடு இல்லாமல்.

அறுபது வயது முடிந்த பிறகுதான் அவளால் முன்னைப் போல் பம்பாய்க்கும் கல்கத்தாவுக்கும் போக முடியவில்லை. சென்னைக்குக் கூடப் போக முடியவில்லை. இப்போதெல்லாம் பாட்டியும் அந்த வீடும், வெண்ணாறும் சுகவனேசுவரரும் ஒருவருக்கு ஒருவர் ஏற்பட்டுவிட்ட பிணைப்புடன் இணை பிரிக்க முடியாதவர்களாக ஆகி விட்டார்கள்.

இந்த அறுபது வருஷ காலத்தில் சுகவனேசுவரரின் வாழ்க்கையையும் கவனித்து வந்திருக்கிறாள் பாட்டி. முன்பெல்லாம், அவள் சின்னஞ்சிறுமியாக இருந்தபோது இந்தச் சுகவனேசுவரர் மிகப் பிரசித்தியுடன் இருந்தார். நவராத்திரி என்றால் ஒன்பது நாளும் ஊர் அமர்க்களப்படும். அம்மனின் அலங்காரத்தைப் பார்ப்பதற்காகச் சுற்று வட்டாரத்திலிருந்தெல்லாம் நூற்றுக்கணக்கான ஜனங்கள் வருவார்கள். நான்கு புறமும் மதில் சுவர் அடைப்புடன் இருந்த விசாலமான பிரகாரத்தில் விநாயகர் சந்நிதிக்கு அருகில் ஒன்பது நாளும் கதை கச்சேரிகள் நடக்கும். சிவராத்திரி என்றால் ஊர் முழுவதும் குஞ்சுகுளுவான் வரை சுகவனேசுவரர் சந்நிதியில் தூங்காமல் நின்றபடியே ஆறு காலம் நடக்கும் அபிஷேங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கும். அந்த விமரிசை எல்லாம் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து போய் இப்போது தண்டபாணி குருக்கள் தயவில் இருந்து வருகிறார் சுகவனேசுவரர். பாட்டிக்காவது தினந்தோறும் வெண்ணாற்று ஸ்நானம் கிடைக்கிறது. சுகவனேசுவரருக்கு அதுகூட இல்லை.

தண்டபாணி குருக்கள் பாழ்பட்டு மண்மேடிட்டுக் குழம்பிக் கிடக்கும் கோயில் கிணற்றிலிருந்து செம்பைப் போல் இருக்கும் சின்னக் குடத்தில் நடுங்கும் கைகளால் தண்ணீரை எடுத்து வந்து செய்யும் அபிஷேகத்துடன் அவர் திருப்தியடைய வேண்டியதாக இருந்தது. தண்டபாணி குருக்களுக்கும் வயது எண்பதுக்கு மேல் ஆகிவிட்டது. அவருக்கு சுகவனேசுவரர் பிரசித்தியுடன் விளங்கிய காலமும் தெரியும். சுந்தரி பாட்டி என்ற ஏக பக்தியுடையவராகி விட்ட இன்றையக் காலமும் தெரியும். பாட்டியை விடப் பத்து வயது பெரியவரான அவருக்கு பாட்டிக்கு உள்ள உடல் தென்பில்லை. பார்வையும் குறைவு. பல நாட்கள் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து வந்து லிங்க உருவத்தை அருகில் தொட்டுப் பார்த்துவிட்டுக் கை நிதானத்தில் அபிஷேகத்தை முடித்துக்கொண்டு துணியால் துடைக்க ஆரம்பிக்கும் போதுதான் ஊற்றிய தண்ணிரில் ஒரு பொட்டுக் கூட லிங்கத்தின்மீது விழுந்திராததைக் கண்டு மீண்டும் கிணற்றுக்குப் போய்த் தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகத்தை முடிப்பார்.

அதிகாலை வேளையில் அயர்த்து தூங்கினாலும் பாட்டியின் உள்மனதில் ஒரு கடியாரம் ஓடிக்கொண்டிருக்கும். எழுந்திருக்க வேண்டிய நேரம் வந்ததும் அலாரம் வைத்து எழுவது போல் எழுந்திருக்கிறாள் பாட்டி. தலைக்கு உயரமாக வைத்துக் கொண்டிருந்த கட்டையை எடுத்துச் சுவரோரம் வைத்துவிட்டு சமையலறையாக உபயோகப்படும் தாழ்வாரத்தின் மூலைக்குப் போய் தூக்குவதற்கு வாகாக இருக்கும் சின்னக் குடத்தையும் பல் தேய்க்க அடுப்புச் சாம்பல் கட்டி ஒன்றையும் வீபூதிச் சம்புடத்தையும் புடவைத் துண்டு ஒன்றையும் எடுத்துக்கொண்டு ஆற்றுக்குக் கிளம்புகிறாள்.

வாசல் பக்கத்துக் கதவைத் தூக்கி நிறுத்தித் தாழிட்டுக் கொண்டிருக்கும்போது, “அம்மா” என்ற குரல் கேட்டுத் திரும்புகிறாள். தெருவோடு போய்க் கொண்டிருந்த வேலைக்காரி அன்னம், “குருக்களய்யா போயிட்டாங்க அம்மா… பாதி ராவுக்கு மேலே..”என்று அறிவித்துவிட்டுப் போகிறாள்.

அப்படியே அயர்ந்துபோன பாட்டி, “என்னடி சொல்கிற? நிஜம்மாவா?” என்று கேட்பதற்கு முன்னமே அந்த வீட்டு வாசலைக் கடக்கும் அன்னம், “ஆமாம்மா. போய்ப் பாரு” என்று சொல்லிவிட்டு அடுத்த வீட்டினுள் நுழைந்து விடுகிறாள்.

அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் ஒரு கணம் அப்படியே நிற்கும் பாட்டி ஒருவாறு சமாளித்துக்கொண்டு தாழிட்ட கதவைத் திறந்து மீண்டும் உள்ளே போய்க் குடத்தையும் துண்டையும் இடைகழித் திண்ணையில் வைத்துவிட்டுக் கதவைத் தாழிட்டுக் கொண்டு கிழக்கு நோக்கி நடக்கிறாள். குருக்கள் வீட்டுத் திண்ணையில் சிறு கூட்டம் கூடியிருக்கிறது. உள்ளே போன பாட்டியைப் பார்த்ததும் குருக்களின் பெண் அபயம் “பாட்டி! அப்பாவைப் பாருங்களேன். ஒரே நிமிஷத்தில் போயிட்டாரே!” என்று கதறுகிறாள்.

பாட்டி கீழே அமர்ந்து தண்டபாணி குருக்களைப் பார்க்கிறாள். தூங்குபவர் போல் இருக்கிறார் அவர். “ராத்திரி ஒரு மணி இருக்கும். ‘அபயம்’னு கூப்பிட்டார். அப்பவே மூச்சு ஒரு மாதிரியா இழுத்தது. ‘அபயம்! எனக்கு உன்னைப்பத்திக்கூடக் கவலையில்லை. சுகவனேசரை நினைச்சால்தான் நெஞ்சை என்னமோ பண்றது. சங்கரன் சரியாய்ப் பூஜை பண்ணமாட்டான். நான் சொன்னேன்னு ஊர்க்காராகிட்டே சொல்லி வேறே யாராவது சிரத்தையுள்ள குருக்களா- யார் வருவா? சுகவனேசுவரருக்குப் பூஜை நின்னு போயிட்டால் பாவம், சுந்தரிப் பாட்டிதான் ஏங்கிக்போயிடுவா’ என்று உங்கள் பேரைத்தான் மெதுவாச் சொல்லிண்டே இருந்தார். விளக்கு அணையறா மாதிரி பக்குன்னு போயிட்டார் பாட்டி!” என்று ஓங்கிய குரலில் அழ ஆரம்பிக்கிறாள் அபயம்.

ஒரு வழியாகப் பாட்டி அந்த வீட்டை விட்டு வெளியில் வரும்போது சூரியன் உதித்து வெகு நேரம் ஆகிறது. வீட்டுப் பக்கம் நடக்க ஆரம்பித்த பாட்டி ஆற்றுப் பக்கம் போகும் சந்தினுள் திரும்பி நடக்கிறாள். சுகவனேசுவரர் சந்நிதியைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு ஆற்றுக்குப் போய் ஸ்நானம் செய்து முடித்துக் கொண்டு திரும்புகிறாள். சந்நிதிக்கு அருகில் வரும்போது அவளையுமறியாமல் அவள் கண்கள் கோபுர வாசலில் திரும்புகின்றன. இரண்டு தப்படி போன பிறகுதான் ‘இன்றைக்குச் சுவாமிக்குப் பூஜை கிடையாதே!’ என்பது நினைவுக்கு வருகிறது. அவள் கண்ணுக்குக் கோயில் ஒரே நாளில் களையிழந்து போய்விட்டதாகத் தோன்றுகிறது. மறுகணம் வேறு ஒரு நினைவும் உள்மனத்தில் ஓடுகிறது. நாலைந்து மைல் தூரத்தில் உள்ள ஒரு ஊரில் இந்த மாதிரி தான் நித்தியப்படி பூஜை நின்று போன சிவன் கோயில் ஒன்று, முதலில் சுற்றுச் சுவர் கொஞ்சங் கொஞ்சமாக இடிந்து விழுந்து, பின் கர்ப்பக்கிரகமும் ஜீரணமாகி, அந்த லிங்கம் வெட்ட வெளியில் மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து, மாட்டுக்காரப் பையன்களின் விளையாட்டுப் பொருளாக மாறிப்போய் விட்டதை பாட்டி பார்த்திருக்கிறாள்.

அதை நினைத்த பின் அவள் வாழ்வில் பின்னிப் பிணைந்து போய் விட்ட இந்தச் சுகவனேசுவரருக்கும் இந்தக் கதிதான் வருமோ என்ற எண்ணம் தோன்றி மறைய அவள் புலன்கள் அனைத்தும் அந்த நினைவால் நடுங்குகின்றன.

‘சுகவனேசா! உனக்கு இன்னிக்கு மாத்திரம்தான் பூஜை கிடையாதா? இல்லை, இனிமேல் என்றைக்குமே கிடையாதா?’ அடிமனத்திலிருந்து பந்தாகச் சுருட்டிக்கொண்டு எழும் கேள்வியைக் கேட்டுவிட்டு அப்படியே நிற்கிறாள்.

“இந்த ஊரிலே, இந்த உலகத்திலே எனக்கு வேண்டியவன்னு நீ ஒருத்தன்தான். இனிமேல் நீ கூட எனக்கு இல்லாமல் போயிடுவே போலிருக்கிறதே!” என்று மௌனமாகக் கண்ணீர் விடுகிறாள். இனித் தினமும் ஆற்றில் குளித்துவிட்டுக் கோவிலுக்குப் போகாமலே வீட்டுக்கு வர வேண்டும் என்ற நினைவை அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கண்கள் இருட்டிக்கொண்டு வருகின்றன. மெல்லத் திரும்பி வீட்டை நோக்கி நடக்கிறாள். வாய்க்கால் மதகின் அருகில் வெளியே துருத்திக்கொண்டு நிற்கும் கல்லின் நினைவு இன்று பாட்டியின் மனத்தில் இல்லை. இடம் தெரியாமல் காலை எடுத்து வைத்தபோது கல்லில் கால் தடுக்கி அப்படியே தலை குப்புறக் கீழே விழுகிறாள். விழுந்த வேகத்தில் பூஞ்சையான அந்த உடலில் இருந்த நினைவும் போய் விடுகிறது.

காலையில் எழுந்ததும் குருக்கள் வீட்டுச் செய்தி கேட்டு அங்கே போய் விசாரித்து விட்டுப் பல் துலக்குவதற்காக வாயில் வைத்த வேப்பங்குச்சியுடன் சந்தில் வந்து கொண்டிருந்த பட்டாமணியம் வேம்புவும் இன்னும் இரண்டொருவரும் மதகடியில் நினைவிழந்து கிடக்கும் பாட்டியைத் திருப்பிப் போட்டு வாய்க்கால் தண்ணீரைச் சேம்பிலையில் ஏந்தி முகத்தில் அடித்துப் பார்த்தும் மூர்ச்சை தெளியாமற் போகவே, அப்படியே கால் பக்கம் ஒருவரும் தலைப்பக்கம் ஒருவருமாகத் தூக்கி வீட்டுத் திண்ணையில் கொண்டு வந்து போடுகிறார்கள். வெகு நேரம் கழித்துக் கண்ணைத் திறந்த பாட்டி அடுத்த வீட்டுப் பெண்கள் குனிந்தபடியே தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு எழுந்திருக்க முயற்சி செய்கிறாள்.

பிற்பகலில் குருக்கள் காரியமெல்லாம் முடிந்து பாட்டியும் ரசஞ்சாதத்தைக் கரைத்துக் குடித்தபின் பட்டாமணியம் பாட்டியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். “இனிமே உங்களாலே இங்கேயிருந்து ஆத்துக்குப் போய்க் குளிக்க முடியாது. படுகை இறக்கத்திலே இறங்கின மயக்கத்தில் ஒரு கணம் அசந்து நின்றால், ராட்சத லாரிக்காரன் ஒரு கணத்தில் உங்களை அப்பளமாக்கிவிட்டு நிற்காமல் போய் விடுவான். அதனால் இனிமேல் குளியல், ஜபதபம் எல்லாத்தையும் வீட்டிலேயே வச்சுக் கொள்ளுங்கோ” என்று சொல்லுகிறார்.

பாட்டி யோசிக்கிறாள். சுகவனேசுவரரே இருந்தும் இல்லாதவராகப் போய்விட்ட பிறகு ஆற்று ஸ்நானம் மாத்திரம் எதற்கு என்று தோன்றுகிறது. “அது சரிப்பா. குளிக்கிறதுக்கு முதல்லே கிணறாவது வேணுமே” என்று பாட்டி வரட்டுச் சிரிப்புச் சிரிக்கிறாள். பாட்டியின் வீட்டில் இருந்த கிணறு எந்தக் காலத்திலோ பாழடைந்து தூர்ந்தும் போய் விட்டது.

“அதற்கென்ன? நானே நாலு ஆளை விட்டுக் கிணற்றை வெட்டித் தரச் சொல்கிறேன். நீங்க மாத்திரம் கிணறு இல்லையேன்னு ஆத்துக்குப் போய் லாரியிலே மாட்டிக் கொள்ளாமல் இருங்கோ” என்று மீண்டும் பயமுறுத்துகிறார் பட்டாமணியம்.

பாட்டிக்குச் சாவதில் பயம் இல்லை. ஆனால் லாரியில் விழுந்து சாவதை நினைத்து நடுங்கிய பாட்டி, “சரிடாப்பா. எவ்வளவு ஆகுமோ, பார்த்து நீயே செய்து கொடு” என்று முடிக்கிறாள்.

கிணறு வெட்டும் வேலை ஆரம்பமாகிறது. வேம்பு நல்ல மனிதர். அவரே காலையிலும் மாலையிலும் முன் நின்று கிணறு தோண்டும் வேலையைப் பார்வையிடுகிறார். நாலைந்து நாள் ஐந்தாறு ஆள் வேலை செய்து பத்தடிக்கும் மேல் தோண்டியும் கிணற்றில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறியே காணவில்லை. வேம்புவைப் பிடித்த கவலை பாட்டியையும் பிடித்துக் கொள்ளவே, “இது என்னடாப்பா, அதிசயமாக இருக்கு? இவ்வளவு அருகில் வெண்ணாறு இருக்கும்போது… ஊம் வேறே இடத்திலே வேணுமானா வெட்டிப் பார்க்கலாமா?” என்று ஆலோசனை கேட்கிறாள்.

“இன்னும் நாலைந்தடி பார்க்கலாம்” என்கிறார் வேம்பு.

சாயங்காலம் கிணற்றருகில் பாட்டியும் வேம்புவும் கவலையுடன் வேலை நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கீழே வெட்டும் ஆள் கடப்பாரையில் ஏதோ தட்டுப்படவே மெதுவாக அதை எடுத்து வாளியில் போட்டு மேலே அனுப்புகிறான். அதைக் கையில் எடுத்துப் பார்க்கும் வேம்பு, “அட! என்ன இது?” என்று தம்மை அறியாமலே கூப்பாடு போடுகிறார். “என்னப்பா? புதையலா?” என்று சிரிக்கிறாள் பாட்டி.

ஆம், புதையல்தான்! கீழே இருந்த ஆள் வெட்டி வெட்டி வாளியில் வைத்து மேலே அனுப்புகிறான். எத்தனையோ ஆண்டுகளாகப் பூமிக்கு அடியில் இருந்த தங்கம் ஒளியிழந்து கறுத்திருந்தாலும் நிறையாலும் உருவத்தாலும் தன்னைக் காட்டிக் கொடுத்து விடுகிறது. தங்கம் சங்கிலிகளாகவும் வளையல்களாகவும் நாலைந்து காசுமாலைகளாகவும் ஏழெட்டு வாளிகளில் வருகிறது. ஆட்களும் உற்சாகத்துடன் ஒட்ட ஒட்ட வெட்டி, இனிமேல் இல்லை என்று நிச்சயப்படுத்திக் கொண்டுதான் கரை ஏறுகிறார்கள்.

பாட்டி வீட்டுத் தாழ்வாரத்தில் வாளியில் வந்த தங்க நகைகள் நன்றாக அலம்பப்பட்டுக் கொட்டிக் கிடக்கின்றன. வேம்பு, பாட்டிக்கும் நகைகளுக்கும் நம்பிக்கையான பொறுப்பாக இருந்து ஒரு வழியாக அத்தனைக்கும் பட்டியல் தயாரிக்கிறார். அன்றைக்கு ராத்திரி நகைகள் அவர் வீட்டு இரும்புப் பெட்டியில் பத்திரப் படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்.

மறுநாள் காலையில் பாட்டி வீட்டில் ஊரே கூடியிருக்கிறது. ஆளுக்கு ஒரு யோசனை சொல்கிறார்கள். “இது கண்டெடுத்த புதையலானதால் சர்க்காருக்குத் தெரிவிக்க வேண்டும். சர்க்காரின் உடைமை இது” என்று பள்ளிக்கூட வாத்தியார் சொல்லுகிறார். ஆத்திரத்துடன் வேறொருவர், “அநியாயமாகச் சர்க்காருக்கு எதற்குப் போக வேண்டும்? இதெல்லாம் பாட்டியின் வீட்டுச் சொத்துத்தான். அறுபது வருஷத்துக்கு முன் இதே வீட்டில் நடந்த தீவட்டிக் கொள்ளையைப் பற்றியும், திருடர்கள் சாக்குச் சாக்காகச் சங்கிலிகளையும் காசு மாலைகளையும் மூட்டை கட்டிக்கொண்டு போனதையும் எங்கள் அப்பா எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறார். அதைப்பற்றி நேரடியாகத் தெரிந்தவர்கள் இன்னும் இந்த ஊரில் சில பேர் இருக்கிறார்கள். அந்தத் திருடர்கள்தாம் என்ன காரணத்தினாலோ அந்த மூட்டைகளைக் கிணற்றில் போட்டுப் போய் விட்டார்கள். அது இப்போது பாட்டியிடமே வந்திருக்கிறது. இதில் சர்க்காருக்கு எந்த விதமான பாத்தியதையும் இல்லை” என்று விமரிசனம் செய்கிறார்.

சர்க்கார் பிரதிநிதியான பட்டாமணியம் வேம்புவுக்குச் சிறிதளவு சந்தேகம் இருந்தாலும் அவரும் அதை ஆமோதிக்கிறார்.

இதே ஊரில் இருந்தும் இத்தனை நாளாக பாட்டியை அதிகமாகப் பாராமல் இருந்த அவள் அண்ணாவும், பாட்டிக்கு வந்துள்ள நகைப் பொறுப்புகளைப் பற்றித் தம்மாலான உதவியை மனமுவந்து செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துக் கொள்கிறார். எல்லோருக்குமே கரை புரண்ட உற்சாகம்.

கடைசியில் பாட்டி சொல்கிறாள். “இந்த நகை எல்லாம் உண்மையாகவே எங்கள் வீட்டு நகைதானோ, இல்லாவிட்டால் கண்டெடுத்த புதையலோ எனக்குத் தெரியாது. எப்படி இருந்தாலும் என் ஆசை இதுதான். எனக்கு மனுஷர்கள் இல்லை என்று நினைச்சு ஏங்கியது உண்டு. நீங்க இத்தனை பேரும் என்கிட்டே இவ்வளவு பிரியமா இருக்கிறதைப் பார்த்து மனதுக்கு ரொம்பவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் பெருமையாகவும் இருக்கு. நான் அனாதையாக இருந்த ஊரில் சாக மாட்டேன்கிற தைரியம் வந்துடுத்து. இப்பவே என் ஆசையையும் சொல்லிடறேன். இந்த நகைகளை நான் கையாலே கூடத் தொடப் போகிறது இல்லை. இது எல்லாத்தையும் இப்பவே வித்துடணும். இதிலே வருகிற பணத்தைக் கொண்டு சுகவனேசுவரர் கோயிலைத் திருப்பிக் கட்டணும். மறுபடியும் சுவாமிக்கு நித்தியப்படி பூஜைக்கு ஏற்பாடு பண்ணணும். பிரகாரத்திலே இருக்கிற நெருஞ்சி முள்ளெல்லாம் போய்ச் சிமிண்டுத் தரையாக்கணும். நாலு பக்கமும் முன்னே இருந்த மாதிரி மதில் அமையணும். மண்டபமும் கர்ப்பக்கிரகமும் முன்மாதிரி புதுக் களையுடன் ஒளி வீசணும். இந்த வேலைகளை எல்லாம் நீங்க எல்லாருமே பொறுப்பு எடுத்துக் கொண்டு செய்யணும்” என்று சொல்லிக்கொண்டே போகும்போது பாட்டியின் கண்ணில் புத்தொளியும் இளமை ஆர்வமும் பெருக்கெடுத்தோடுகின்றன.

பகல் முழுவதும் கோயில் வாசலில் லாரிகளில் செங்கல்லும் மணலும் வந்தவண்ணமாக இருக்கின்றன. மண்டபத்தை அடுத்த திறந்த வெளியில் புதிய பாறாங்கற்களில் டக் டக் டக் என்ற சிற்றுளிகளின் ஒலி இரவு நேரம் வரும் வரை கேட்ட வண்ணமாக இருக்கிறது. மண்டபத்தில் ஸ்தபதிக் கூட்டத்தினர் வர்ணக் குழம்புகளைக் கலந்துகொண்டே தூரிகையும் கையுமாக நிற்கின்றனர். பாட்டியின் பணத்துடன் ஊரில் உள்ள அத்தனை பேரும் போட்டி போட்டுக்கொண்டு பணத்தாலும் ஆட்களாலும் உதவி செய்கிறார்கள்.

மார்கழி மாதத்தின் காலை வேளையில் பாட்டி ஸ்நானத்தை முடித்துக் கொண்டு ஈரப்புடவை சொட்டச் சொட்ட உதய ஞாயிற்றின் முதற்கீற்றைத் தரிசனம் செய்யும் ஆவலுடன் கரையில் நிற்கிறாள். ஆயிற்று சூரிய பகவானைத் தரிசனம் செய்துகொண்ட பின்பு குடத்தை எடுத்துக்கொண்டு ஆற்றுப் படுக்கையில் ஏறி, மீண்டும் இறங்கி இரண்டு பக்கமும் பார்த்தபடியே சாலையைக் கடந்ததும் எதிரில் உருவாகிக்கொண்டு வரும் சுகவனேசுவரரின் முன்பக்கத்துக் கோபுரத்தைப் பார்க்கிறாள் பாட்டி. முன்பெல்லாம் அரைக் கல்லும் கால் கல்லுமாக இறைந்து கிடந்த இடங்களில் இப்போது லாரி லாரியாக வந்து இறங்கிய முழுச் செங்கற்களை வரிசை வரிசையாக அடுக்கியிருக்கும் தோற்றமே ஓர் அழகுடன் தெரிகிறது. வாசலில் நின்றபடியே, “என் அப்பா! சுகவனேசா!” என்று கண்ணீர் விடுகிறாள். இன்னும் கோயிலுக்கு ஜீர்ணோத்தாரணம் ஆகவில்லை. ஆனால் பாட்டியின் மனத்தினுள் அவள் அறுபது வருஷங்களுக்கு முன் கண்ட கோயில் அப்படியே பசுமையாகக் காட்சி அளித்தது. நாளை அப்படியே மீண்டும் அது அமையப் போவதை நினைத்துப் பெருமிதத்தில் தன் ஆயுளில் பத்து வருஷங்கள் குறைந்து விட்டதாகத் தோன்றுகிறது. சுகவனேசுவரரின் தரிசனத்துக்காக இன்னும் குறைந்தது பத்து வருஷமாவது வாழ வேண்டும் என்று உயிரின்மேல் ஆசை வருகிறது பாட்டிக்கு.

– கலைமகள் இதழில் ஏப்ரல் 1968இல் வந்த சிறுகதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *