மும்பை,அந்தேரி ரயில்நிலையம்.
கடந்து செல்லும் மின்சார ரயிலின் வேகமும்,கால்மீது நடந்து செல்லும் மனிதர்களின் வேகமும் அவசர வாழ்க்கையை எடுத்துரைத்தது.
வினோத் அமைதியாக சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தான்.
எரிமலையாக வெடித்துக்கொண்டிருந்தாள், வித்யா.
“மொதல்ல என் பிரண்ட் சொன்னப்போ நான் நம்பலை, என் வினோத்தை பத்தி எனக்குத் தெரியும் நீ உன் வேலைய பாருடின்னு சொல்லிட்டேன், பட் இப்போ, இன்னைக்கு என் ரெண்டு கண்ணாலேயும் பார்த்தப்பறம்தான் புரியுது அவ சொன்னது உண்மைன்னு!”
“இதுவரைக்கும் தப்பான எண்ணத்தோட நீ என்கிட்ட ஒரு நாளும் வந்ததில்லையே வினோத்! நீயா இப்படி?”
பொறிந்து தள்ளினாள் வித்யா.
“ரெட் லைட் ஏரியாவுக்குள்ள நீ போறத பஸ்ல இருந்து பார்த்தேன், கடவுளே அது நீ இல்லாம வேற யாராவதா இருந்திருக்ககூடாதா?
பொறுமையாய் அவள் பேசுவதை எவ்வித சலனமுமின்றி கேட்டுக்கொண்டிருந்த வினோத் பேச ஆரம்பித்தான்.
“என்னை நீ புரிஞ்சுக்கிட்டது இவ்ளோதானா வித்யா? உன்மேல் என் உயிரையே வச்சிருக்கேன் என் காதலை சந்தேகப்படுற உரிமை உனக்குக்கூட கிடையாது.
இன்னைக்கு காலைல எங்க வீட்டுப் பக்கத்துல ஒரு சின்னப் பையன் பிச்சை எடுத்துட்டு
இருந்தான்,விசாரிச்சப்போ அவனை யாரோ கடத்திட்டு வந்துட்டங்கங்கற உண்மை தெரிஞ்சுது.
அவன் அம்மா சிகப்பு விளக்கு பகுதியில பாலியல் தொழில்ல ஈடுபடுறவங்கன்னும் தெரிஞ்சுது. என் நண்பர்கள் சிலபேரும்,போலீஸும் சேர்ந்து அவனை மீட்டோம்.
அப்புறமா அவனை ரெட் லைட் ஏரியாவுல கொண்டு போய் விட்டுட்டு திரும்பி வரும்போதுதான் நீ பாத்திருக்கன்னு நினைக்கறேன்”
கடந்து செல்லும் ரயிலைப்போல தடதடவென்று பேசிவிட்டு நடக்க ஆரம்பித்தான் வினோத்.
பெத்தவனால் நாலாயிரத்திற்கு விற்கப்பட்டு, பாலியல் தொழிலில் பலவந்தமாய் ஈடுபடுத்தப்பட்டு,கடலில் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்தவளை காப்பாற்றி, உடலை நேசிக்காமல் உள்ளம் மட்டும் நேசித்தவன் கோபமாய் நடந்துசெல்வதை பரிதவிப்புடன்
பார்த்துக்கொண்டிருந்தாள் வித்யா.
– Wednesday, September 26, 2007