ஒரு புதிய நாளின் காலைப்பொழுதில் அவன் மிகவும் உற்சாகம் இழந்து காணப்பட்டான். ஒவ்வொரு நாளின் காலைப்பொழுதும் இவ்வாறாயினும் இன்று ஏனோ அந்த உற்சாகமின்மை அவனிடத்திலே அதிகமாய் காணப்பட்டது. ஒரு திடமான பாரம் நெஞ்சை அழுத்துவது போன்ற முகபாவனையுடன் ஜன்னலுக்கு வெளியே ஆதவனின் வெளிச்சத்தில் கண்களை மேய விட்டிருந்தான்.
“காலைக் குயில்களின் இனிய நாதங்களும், நந்தவனத்தில் புதிதாக பூத்த மலர்களின் நறுமணமும் அவனுடைய காதுகளையும் நாசியையும் ஒருசேர துளைத்தற்கான எந்த அறிகுறியும் அவன் முகத்தில் தென்படவே இல்லை. இதையெல்லாம் கண்டு இரசிக்கும் மனநிலையில் தான் இல்லை என்பதை அவனுடைய களைப்பு நிரம்பிய கண்கள் மிகவும் அப்பட்டமாக வெளிப்படுத்தின.
“வாழ்க்கையைப் பற்றிய கவலையை விட அந்த வாழ்க்கையை எப்படி வாழப் போகிறோம் என்ற கவலையே அவனுக்கு அதிகமாக இருந்தது………” யாரும் இல்லாத அனாதையாக நாம் இந்த உலகத்தில் தனித்து விடப்பட்டு விட்டோம் என்ற எண்ணம் அவனது உள்ளத்தை கதிகலங்கச் செய்தது. தான் சபதம் பூண்ட லட்சியத்தை ஒருமுறை நினைவு கூர்ந்தான் அந்த லட்சியத்தை அடைய இதுவரை இயன்ற அவனால் முடிந்த பிரயத்தனங்களையும் நினைவு கூர்ந்ததான். கடைக்கோடி இதழில் ஒரு புன்னகை சடுதியில் தோன்றி மறைந்தது.
“வெறும் லட்சியங்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஒருவன் வாழ்க்கையை முழுவதும் வாழ்ந்து விட முடியாது என்பதை முதல் முறையாக ஒப்புக் கொண்டான”. அதே நேரத்தில் அவனுடைய தந்தை அடிக்கடி சொல்லும் வாசகம் ஒன்று சட்டைன்று நினைவுக்கு வந்தது.
“உன் லட்சியம் இதுதான் என்று முடிவு செய்து விட்டால் ஒருநாளும் நீ தேறமாட்டாய்.” அது எவ்வளவு உண்மை என்பதை இப்போது உணர ஆரம்பித்தான்.
இந்த நிவைலைகள் அவனை மேலும் சோர்வடையச் செய்தன. இந்த மாதிரி சமயங்களில் அவன் சுயிங்கம் மெல்லுவது வழக்கம். சுயிங்கம் மெல்லுவது அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதற்கான காரணமும் அவனிடத்தில் இருந்தது. சிலருக்கு அது வேடிக்கையாகவும் கிண்டலாகவும் தோன்றலாம். ஒரு மனிதனின் காரணங்கள் அவ்வளவு எளிதில் யாருக்கும் பிடித்துப் போய் விடுவதில்லை.
மனம் ஒரு கட்டுக்குள் இயங்காமல் தாறுமாறாக காட்டுத்தனமாக திரியும் போது அவன் ஒரு சுயிங்கத்தை எடுத்து வாயில் போட்டுக் கொள்வான். தன்னுடைய மனவோட்டத்தை சிறிது நேரம் கட்டுக்குள் வைக்க அவன் கையாளும் யுக்தி இது.. சுயிங்கத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு கண்களை இறுக மூடி சவற்றில் சரிந்தான்.
அந்த சுயிங்கத்தின் உதவியால் அவனால் சிறிது நிம்மதியாக இருக்க முடிந்தது. மனதின் பாரம் சுருங்கி அவனால் இப்பொழுது சுத்திரமாக சுவாசிக்க முடிந்தது. குயில்களின் நாதமும் மலர்களின் நறுமணமும் அவனால் உணர முடிந்தது. இந்த அசுவாசம் சிறிது நேரம்தான் என்பது அவனுக்கும் தெரியும். இன்னும் சிறிது கழித்து நரம்புகள் புடைக்க ஓரு இனம் புரியாத தவிப்புக்கு அவன் மனம் உள்ளாகப் போகிறது என்பதும் தெரியும். ஆனால் அதைத் தாங்க அவனுக்கு இந்த சிறிது நேர அசுவாசம் கண்டிப்பாக தேவை….
“மெல்ல கண்களைத் திறந்தான். சோப்பு நுரையைப் போல கண்முன் ஏதோ நிழலாடுவது போலத் தோன்றியது”. களைப்பு அவனுடைய கண்களைத் கொஞ்சம் கொஞ்சமாக நிரப்ப ஆரம்பித்தது.
சுயிங்கத்தை நாவால் உருட்டி ஜன்னலுக்கு வெளியே உள்ள சுவற்றை நோக்கி வேகமாகத் துப்பினான். சென்ற வேகத்தில் அது சுவரோடு சுவராக போய் ஒட்டிக் கொண்டது. அவன் அந்த சுயிங்கத்தை வெறித்துப் பார்த்தான். ஈரப்பசை குறைய குறைய அது அந்த சுவற்றின் பிடியிலிருந்து மெல்ல மெல்ல கீழே வழுக்கிக் கொண்டு வந்தது. அது அவனுக்கு பிடித்திருக்க வேண்டும் போல, அதையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான். வழுக்கிக் கொண்டே வந்த அது ஒரு கட்டத்தில் பொத்தென்று தரையில் விழுந்தது. இவன் பட்டென்று ஓடிச் சென்று ஜன்னலுக்கு வெளியே கீழே விழுந்த சுயிங்கத்தை பார்த்தான். அவனுடைய வாய் பின்வருுமாறு கூறியது:
“மனித வாழ்க்கையும் இந்த சுயிங்கம்போலத்தான்” ; பசை உள்ளவரை அவர்களால் ஒரே இடத்தில உயர்ந்த ஸ்தானத்தில் நிரந்தரமாக இருக்க முடிகிறது. இந்த உலகம் அர்களை உயர்த்திப் பிடித்து அழகு பார்க்கிறது. அர்களுடைய சொல்லை வேதவாக்காக கருதிகிறது. அவர்களை தனி ஒரு கூண்டுக்குள் அடைத்து தன்னிலும் இவர்கள் வேறுபட்டவர்கள் என தனக்குத்தானே ஒரு கோட்பாட்டை வகுத்துக் கொள்கிறது. ஆனால் நிலமை கொஞ்சம் மாறும் பொழுது ஒரு நொடிப் பொழுதில் அசாத்திய வேகத்தில் கீழே இறக்கி விடுகிறது. என்ன ஒரு விந்தையான உலகம்! கேவலமான உலகமும் கூட; நீண்ட பெருமூச்சை அவன் ஜன்னல் கம்பிகளை நோக்கி செலுத்தினான்.
“ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறக்கின்றன. ஒவ்வொரு சூரியனும் புத்தொளியை பரப்புகின்றன. ஒவ்வொரு அதிகாலையும் புதிய வெளிச்சத்தையும் புதிய நிறங்களையும் அள்ளி வருகின்றன. ஆனால் நான் மட்டும் ஏன் இப்படி பழைய நினைவுகளில் மூழ்கிப் போய் கிடக்கிறேன்.
இந்த உலகம் ஒவ்வொருவருக்கும் ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறது அல்லது அவர்கள் மாறிக் கொள்கிறார்கள். ஆனால் என்னால் மட்டும் மாற முடியவில்லையே ஏன்? எல்லோரையும் போல ஏனோ தானோ என்ற வாழ்க்கையை வாழ எனக்கு விருப்பமில்லை. நான் ஒரு அசாத்திய வாழ்க்கை வாழவே ஆசைப்படுகிறேன். யாரும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத வாழ்க்கை அது. அதே சமயம் நான் அந்த வாழ்க்கைக்கான அஸ்திவாரத்தை பலமாக செய்திருக்கிறேனா என்றால் நான் மட்டுமல்ல என்னோடு சேர்ந்து நீங்களும் சிரிப்பீர்கள்…. எந்த முயற்சியும் செய்யாமல் வெறும் கனவுகளுடனே நான் வாழ்வது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்.
“திறமை இல்லாதவனிடத்தில் முயற்சி துளியும் இருக்காது” என ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. என்னிடத்தில் திறமை உள்ளது ஆனால் முயற்சிதான் இல்லை இது ஏன்? ஒருவேளை என்னுடைய சோம்பேறித்தனமாக இருக்கலாம். அல்லது வாழ்க்கையைப் பற்றிய எனக்கான பயமாகக் கூட இருக்கலாம். வெறும் திறமையை மட்டும் வைத்துக் கொண்டு லட்சியத்தில் யாரும் ஜெயித்துவிட முடியாது. எனக்கு இந்த திறமை மேலும் சில சமயங்களில் சந்தேகம் வருவதுன்டு. எனக்கு இருக்கும் இந்த திறமை உண்மையிலே என்னிடம் முழுமை பெற்று இருக்கிறதா? இல்லை அவ்வாறு நான் காட்டிக் கொள்கிறேனா? சரியாகச் சொன்னால் இரண்டாவதே எனக்குப் பொருத்தமாக இருக்கும்.
“முன்னொரு சமயம் நான் அடிக்கடி ஒன்றை சொல்லிக் கொள்வேன். நான் பெரிய இலக்கியவாதியாக ஆவேன் என்றும் இதுதான் என வாழ்க்கையின் லட்சியம் என்றும், ஏன் இப்போது கூட நான் அவ்வாறுதானே கூறிக் கொண்டிருக்கிறேன். எழுத்துக் கலையிலும் பேச்சுக் கலையிலும் எனக்கு அசாத்திய திறமை இருப்பதாகவே நான் காட்டிக் கொண்டேன். என்னை சுற்றி உள்ளவர்களும் என்னை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள் அவர்களுடைய அறிவுக்கு எட்டிய வரை. வெளியில் அதை நான் பெருமையாக எண்ணினாலும் உள்ளுக்குள் ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
“இந்தப் புகழ்ச்சிக்கு நீ சிறிதும் தகுதியானவன் இல்லை என்று.”
இவர்களைப் போல அவளும் சில சமயங்களில் சொல்வாள். “நீங்கள் என்றைக்காவது ஒருநாள் இந்த உலகம் போற்றும் ஒரு மாபெரும் படைப்பீர்கள் என்று. ” யாரவள்……… என் இதயத்தில் ஒனறெனக் கலந்தவள்; என் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டவள். அவள் அடிக்கடி சொல்லும்போதெல்லாம் அவளிடம் இந்த கம்பீரமான மறுமொழியைச் சொல்வேன்:
“ஒரு ஷேக்ஸபியரைப் போல’, ஒரு டால்ஸ்டாயைப் போல ஒரு மாபெரும் படைப்பை நான் படைத்துக் காட்டுவேன்”. அவள் சொல்வாள்:
“அப்படியானல் அன்றிலிருந்து நாம் நம் இல்வாழக்கையைத் தொடங்கலாம். அதுவரையில் நான் காத்துக் கொண்டிருப்பேன் என்பாள். காதலின் இலக்கணம் அவள்; புரிதலின் சின்னம் அவள்;.
என்னை காதலித்தற்காக எவ்வளவு துன்பங்களை அனுபவித்து விட்டாள்….. சாதாரண இடத்துப் பெண்ணா அவள்…. நான் ஒரு காதலனாக அவளுக்கு என்ன செய்திருககிறேன். கஷ்டங்களைத் தவிர அவளுக்கு வேறு என்ன குடுத்திருக்கிறேன். வாழ்நாள் முழுதும் வசந்தமாய் வாழக் குடுத்து வைத்தவளை தகிக்கும் பாலைவனத்தில் இழுத்து வந்து விட்டது யார்…… நான்தானே….. நான் எத்தனை பேரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்.
“இதுவரை நான் எழுதியுள்ள கதைகளில் எத்தனை தேறும்” இலக்கிய கோணத்தில் பார்த்தால் அதில் ஒன்று கூட தேறாது. எனக்கு எவ்வளவு தைரியமிருந்தால் ஷேக்ஸ்பியரோடும், டால்ஸ்டாயோடும் என்னை ஒப்பிட்டுப் பேசுவேன். எனக்கு என்ன தகுதி இருக்கிறு நான் அவர்களோடு சேர்ந்து கொள்ள…..
அவள் ஒவ்வொரு முறையும் இவனை உற்சாகப்படுத்தி விட்டுப் போகும் போதெல்லாம் இவன் மிக சந்தோஷமாய் புது தெம்பு வந்தவனாக அதற்கான வேைலையில் மிகத் துரிதமாக இயங்குவான்.
அவளை முதன் முதலாய் சந்தித்தபொழுது அவனுக்குள் ஏற்பட்ட மின்சார அதிர்வை மையமாகக் கொண்டு உற்சாகமாக எழுத ஆரம்பிப்பான். இரண்டு மூன்று வார்த்தைகளுக்குப் பிறகு அவனுடைய எழுதுகோல் அப்படியே நின்றுவிடும். மேலும் வாரத்தையை எழுத முடியாமல் அவனுடைய கைகள் நடுங்க ஆரம்பிக்கும். வார்த்தைகள் கோர்வையாக வரமறுக்கும். பொல பொலவென்று கண்களிலிருந்து தண்ணீரை விடுபவன் எழுதுகோலை ஓங்கி சுவற்றில் அடித்து விட்டு கட்டிலில் தேம்பித் தேம்பி அழ ஆரம்பிப்பான்.
“அவனுடைய இயலாமையை அவனால் விரட்ட முடியவில்லை, அதிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை. அதற்கான காரணமும் அவனுக்கு விளங்கவில்லை. அவனுடைய மிகப்பெரிய சரித்திரப் படைப்பு அந்த இயலாமையின் காரணமாக முதல் மூன்று வார்த்தைகளுக்குள் அப்படியே நின்று கொண்டிருக்கிறது.