மிஸ்டர் மார்க்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 14,246 
 

இயற்பெயர் சி.மார்க்கண்டன். இதில் சி என்பது சின்னையா, சினிமா என்ற இரண்டு

வார்த்தைகளையும் குறிக்கும். ‘மிஸ்டர் மார்க்’ என்றால் கோடம்பாக்கத்தின் திரையுலக நண்பர்கள் பலருக்குத் தெரியும். மார்க்கண்டன், 1993-ல் வெளிவந்த ‘மல்லிகை’ என்ற திரைப்படத்தின் இயக்குநர். “அடுத்து என்னன்னே போய்க்கிட்டு இருக்கு?” என்று யார் கேட்டாலும் “ஃபைனல் பண்ணியாச்சு… புரொடியூசர் வெளிநாடு போயிருக்கார். வந்ததும் உக்கார்ந்திரலாம்” என்பார். தற்போது டீக்கடை பெஞ்ச்சில் உட்கார்ந்திருக்கிறார். 90-களில் வெளிநாடு போன தயாரிப்பாளர் என்னும் கற்பனைப் பாத்திரம் நேற்று வரை சென்னை திரும்ப வில்லை.

வயது 50-க்கு மேலேதான் இருக்கும். கேட்டால் எவ்வளவு போதையிலும் 45 என்றுதான் சொல்வார். கடந்த 10 வருடங்களில் அவருக்கு மூன்று வயது மட்டுமே கூடி இருக்கிறது. வெற்றிகரமாக ஓடுகிற ஒரு படத்தைப்பற்றிக் கேட்டால், “இதெல்லாம் ஒரு படமா?” என்பார். அதை ஒட்டி கொஞ்சம் பேச்சுக் கொடுத்தால், கோபம் வரும். பிறகு, எல்லாம் கெட்ட வார்த்தைகள்தான். விகடனில் அந்தக் கெட்ட வார்த்தைகளை எழுத முடியாது என்பதால், மேற்படி வார்த்தைகள் வரும் இடங்களில் எல்லாம் இனி டேஷ்… டேஷ்…

ஒல்லியான தேகம். சாயம் பூசிய தலை. நரைத்ததை மறைக்க மீசை முடியை ஒட்ட வெட்டி இருப்பார். நரையையும் வறுமையையும் மார்க் வெகு சிரத்தையாகவே மறைத்து வந்தார்.

“மார்க்கண்ணே… இன்னும் யூத்தாவே இருக்கீங்களே… எப்படிண்ணே?”

“ஃபிலிம் டைரக்டர்னா சில விஷயங்களை மெயின்டெயின் பண்ண வேண்டி இருக்குல்ல தம்பி.”

“ஆமா, இவரு பெரிய எல்லிஸ் ஆர் டங்கன்…”

எல்லோரும் சிரிக்க அவரும் சேர்ந்து அப்பாவியாகச் சிரிப்பார். காரணம், காது கொஞ்சம் மந்தம்.

அதிகாலையில் பரபரப்பாக எங்கோ கிளம்பிச் செல்வார். சில நாட்கள் மதிய நேரங்களில் கொளுத்தும் வெயிலில் தனியாக ஒரு பெட்டிக் கடையில் நின்று தீவிரமாகக் கண்களைச் சுருக்கி எங்கோ பார்த்துக்கொண்டு சிகரெட் புகைப்பார். ஒருநாள் விபூதி பூசிக்கொண்டு பேன்ட், சட்டை அணிந்து கையில் ஒரு ஃபைலுடன் பைக்கின் பின்னால் உட்கார்ந்து போய்க்கொண்டு இருப்பார். இன்னொரு நாள் அவரது மனைவி பேசிக்கொண்டு வர, லேடீஸ் சைக்கிளை உருட்டிக்கொண்டே தலை குனிந்து நடப்பார். சினிமாவைத் தவிர வேறு எதுவும் அறியாத இவர்தான்… மிஸ்டர் மார்க்.

எனக்கு அவர் முதன்முறையாக அறிமுகமானது ஒரு சலூனில். பழக்கமானது, அருணாசலம் ரோட்டில் இருந்த பட்டுக்கோட்டை ஒயின்ஸின் பாரில். உதவி இயக்குநர் குமார் உடனிருந்தான். பாருக்குள் ஒரே இரைச்சலும் சிகரெட் புகையுமாக இருந்தது. மிஸ்டர் மார்க் மூன்று மேசை தள்ளி உட்கார்ந்து எதிரில் இருப்பவரிடம் இரண்டு கைகளிலும் கோணம் காட்டிக் கதை சொல்லிக்கொண்டு இருந்தார்.

“மார்க் இருக்காருடா!”

குமார் திரும்பிப் பார்த்தான். “ஐயையோ… அடுத்த படத்துக்கான கதை ஓடிட்ருக்குபோல. கேக்குறவன் போதை இறங்கிருமே. சரி, சரி, அங்க பாக்காத. ஒரு பீரு அடிச்சிட்டு ஓடிருவோம். போதையில மட்டும் அதுகிட்ட மாட்டுனோம்… சிக்கல்” என்று சொல்லி, சட்டைப் பையில் இருந்த பணத்தை எடுத்து பேன்ட் பாக்கெட்டில் ஒளித்தான் குமார்.

கொஞ்ச நேரத்தில் மிஸ்டர் மார்க்கின் எதிரில் இருந்தவர், கேட்டுக்கொண்டு இருந்த கதையை அந்தரத்தில்விட்டுவிட்டு எழுந்தார். மார்க் எழுந்து நின்று அவருக்குக் கை கொடுத்தார். அவர் போன பிறகும் நின்றவாறே டாட்டா காட்டிக்கொண்டு இருந்த மார்க், சிகரெட் புகைக்கு நடுவே பாரில் இருந்த மற்ற மேசைகளைப் பார்வையிட்டார்.

“அந்தாளு எஸ்கேப்… மார்க் இங்கதான் பாக்குறாரு.”

“அங்க பாக்காத…” என்று குமார் எச்சரிக்கும் போதே, புன்னகையுடன் மார்க் எங்களை நோக்கி நடந்து வந்தார்.

“குட் மார்னிங் பிரதர்” என மார்க் எங்கள் மேசைக்கு அருகில் வந்து உட்கார்ந்தார். “ஓ… குமாரு. இங்கதான் இருக்கியா?” என்று கேட்டவர், என்னைப் பார்த்து, “உங்களை… நான் பாத்திருக்கனா?” என்று கேட்டார்.

“பார்த்திருக்கோம். அன்னிக்கு ஒருநாள் சலூன்ல” என்று மரியாதையுடன் சொன்னேன்.

“வி மெட் அட் த ராங் பிளேஸ். ஓ.கே. நீங்களும் கோடம்பாக்கத்தில அகதியா இருக்கீங்களா? ஐ மீன்… ரெஃப்யூஜி ஆஃப் ட்ரீம் லேண்ட். சினிமாவுல இருக்கீங்களா?”

“ஆமா சார்.”

இந்த சார் என்கிற வார்த்தை அவருக்குள் ஏற்படுத்திய மலர்ச்சியை அவரது கண்களில் பார்த்தேன். நாக்கால் கன்னத்தின் உள்ளே அழுத்திக்கொண்டு கண்கள் கிறங்க, என்னை மேலும் கீழும் பார்த்தார். அவர் கண்கள் கலங்கின. கீழே குனிந்து தனது மோவாயைத் தடவிக்கொண்டே அமைதியாக இருந்தார். கலங்கிய கண்களுடன் இருக்கையில் இருந்து எழுந்தார். எதுவும் சொல்லாமல் போய்விட்டார்.

“நீ சார்னு சொன்னதும் பார்ட்டி ஃபீல் ஆயிருச்சு. திரும்ப வரும். அதுக்குள்ள ஓடிரலாம்.”

அப்போதே மணி இரவு 10 இருக்கும். அரை மணி நேரம் கழித்துக் கீழே வந்தபோது மார்க் விளக்குக் கம்பத்தின் அடியில் உட்கார்ந்து சிகரெட் புகைத்துக்கொண்டு இருந்தார். அவருக்கு அருகில் ஒரு நாய் வாலாட்டிக்கொண்டு நின்றது. குமார் நைஸாகக் கழன்றுகொண்டான். நான் தனியாக நடந்தபோது மார்க் என்னை நோக்கி வந்தார். சிரித்தவாறே “என்ன பிரதர்?” என்று என் தோளில் கை போட்டார். நான் மெதுவாக நெளிந்து அவர் கையை விடுவித்து நடந்தேன். அவரும் உடன் நடந்தார். நாய் கூடவே வந்தது.

“போடா… அண்ணன் வீட்டுக்குப் போறேன்” என்று நாயிடம் சொல்லிவிட்டு, என்னைப் பார்த்தார். இருவரும் தெரு விளக்குகள் அதிகம் எரியாத தெரு வழியே நடந்துகொண்டு இருந்தோம்.

“தொந்தரவு ஒண்ணும் இல்லையே பிரதர்.”

“இல்ல சார்.”

“சார்… சார்னு சொல்லி என்னைக் கொல்லாதீங்க பிரதர். நான் என்ன ஏவி.எம். செட்டியாரா? வெறும்… டேஷ்… டேஷ்… ‘மல்லிகைப்பூ’ டைரக்டர். படத்துக்கு வெக்கிற பேரா சார் அது. ‘மல்லியப்பூ’… டேஷ்… பூ. ‘கானல் வரி’ எப்படி இருக்கு டைட்டில். இதை வெக்கணும்னு சொன்னேன். சிலப்பதிகாரம் படிச்சிருக்கேன்ல. அந்த புரொடியூசரு… டேஷ்… டேஷ்… கானல் வரி… வீட்டு வரில்லாம் வேணாம். எந்த டேஷ§க்கும் புரியாதுன்னுட்டான். ‘ரோஜா’ன்னு படம் வந்து ஓடலை? மல்லியப் பூன்னா எல்லாருக்கும் புரியும். பொம்பளைங்க மேட்டர். மணக்கும்னான். ஒரேதா… மணந்துருச்சு… டேஷ்… டேஷ்… படமா என்னைய எடுக்கவிட்டாய்ங்க. எனக்கு வேணும் சார். எங்கப்பன் சின்னையா சொன்னாரு. என்ன சொன்னாரு… ‘டேஷ்…. மகனே மார்க்கண்டா, நீ படிச்சது பி.ஏ., நம்ம வம்சத்துலேயே பெரிய படிப்பு. உனக்கு சினிமால்லாம் சரிப் படாது. நீ அப்பிராணிப் பய. உன்னைய ஏமாத்திருவாய்ங்கடா’ன்னு சொன்னாரு. ‘நோ… மை டியர் ஃபாதர். சினிமாதான் என் உ…யிர் மூ…ச்சு’ன்னுட்டு வந்தேன். இப்ப ஊஊஊஊ…” அவர் ஊளையிட்டதைக் கேட்டு தெருவோரம் படுத்து இருந்த நாய் குரைத்துக் கொண்டே அருகில் வந்தது.

“கடிச்சிராத மிஸ்டர். வைத்தியம் பார்க்க என்கிட்டக் காசு இல்ல” என்றார். எனக்கு சிரிப்பு வந்தது. அவரும் சிரித்துக்கொண்டே “நம்ம இருக்கற கஷ்டத்துல இது வேற கடிச்சு… நாய் கடிச்ச டைரக்டர்னு பட்டப் பேர் வைப்பாய்ங்க. தேவையா?” என்றார்.

அங்கங்கே காறித் துப்பிக்கொண்டு அடிக்கடி வாயைத் துடைத்தபடி நடந்து வந்தார். தசரதபுரம் பேருந்து நிலையம் அருகில் தெருமுனையில் பிரிவதற்கு முன் இருவரும் நின்றோம்.

“பாக்கலாம் சார்.”

“பாத்தியா… திரும்ப சாருங்கிற?ஷூட்டிங்லதான் தெரியாதவன்லாம் என்னை சார் சார்ன்னாய்ங்க. அப்புறம் சார் போடுற ஒருத்தனைக் காணோமே. எங்க போனாய்ங்க? அற்றக் குளத்து அரு நீர்ப் பறவைக. கில்ட்டியா இருக்கு பிரதர். அப்படிக் கூப்பிடாதீங்க. வாடா டேஷ்… போடா டேஷ்…னுகூடக் கூப்பிடுங்க. சார் மட்டும் வேணாம்” – சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார்.

“சரி… உங்களுக்கு இப்ப சிரமம் ஒண்ணும் இல்லையே பிரதர்.”

“இல்லை.”

“பணத்துக்கு எதுவும் கஷ்டம்னா, எங்கிட்டக் கேளுங்க. இப்ப செலவுக்கெல்லாம் காசு இருக்குல்ல.”

“ம்… இருக்குண்ணே.”

“அப்ப ஒரு ஹண்ரட் ருபீஸ் குடுங்க.”

பையைத் துழாவி என்னிடம் இருந்த பணத்தை எடுக்கும்போதும், அவரே பேசிக்கொண்டு இருந்தார்.

“ஏற்பது இகழ்ச்சி. என்ன செய்ய? நான் கனவு காண்றவன் பிரதர். ட்ரீமர். குடிக்கிறதை நான் நியாயப்படுத்தலை. ஒரு க்ரியேட்டர் இந்த இரைச்சல் நிறைஞ்ச நகரத்தில் 24 மணி நேரமும் கான்சியஸ்ஸோட எப்படி வாழ முடியும்?”

பணத்தை வாங்கிக்கொண்டார்.

“பிரதர்… உங்ககிட்ட ஒருநாள் என் கதையைச் சொல்லணும். மல்லியப்பூவை மறந்துருங்க. இது வேற. ரியலிஸ்டிக்கான கதை.”

“சொல்லுங்க சா…. ஸாரி… சொல்லுங்கண்ணே.”

சிஹிஜி

லேசாகத் தூறிக்கொண்டு இருந்தது. சாலிகிராமம் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டு இருந்தேன். மார்க் தூரத்தில் தனது மகளுடன் நடந்து வந்துகொண்டு இருந்தார். அவரைப் பார்த்ததும் அங்கே இருந்த கடையில் புகுந்து ஒளிந்துகொண்டேன். ஒரு நிமிடம் என் செயல் எனக்கே கேவலமாக இருந்தது. படப்பிடிப்பில் எனக்குக் கிடைக்கிற சொற்பப் படிக்காசைச் சேர்த்து ஒரு தனி ஆளாக நாட்களை ஓட்டுவதே சவாலாக இருக்கும் நகர வாழ்க்கையில், மார்க் எந்த வருமானமும் இல்லாமல் குடும்பத்தை எப்படி ஓட்டுவார்? எப்படி வாடகை கொடுப்பார்? குழந்தை என்ன சாப்பிடும்? என் செயல் எனக்கே குற்ற உணர்வாக இருந்தது. ஒரு 100 ரூபாய் கொடுத்தால் குறைந்து விடவா போகிறோம் என்று நினைத்து, கடையில் இருந்து வெளியே வந்தேன். மார்க் பேன்ட் அணிந்து சுத்தமாக சவரம் செய்த முகத்துடன் சாந்தமாக நின்றுகொண்டு இருந்தார். அருகில் அவரது மகள் சீருடையில் நின்றிருந்தது.

“வணக்கம்ணே… இதுதான் உங்க பொண்ணா?”

“ஆமா.”

“உங்க பேர் என்ன மேடம்?”

குனிந்துகொண்டே “தமிழ்ச்செல்வி” என்றது.

“எத்தனாவது படிக்கிறீங்க?”

“செகண்டு.”

“இருங்க பிரதர். இதுதான் ஸ்கூல். விட்டுட்டு வந்துர்றேன். மாமாவுக்கு பை சொல்லுங்க.”

“பை…”

மகளைத் தூக்கிக்கொண்டார். தூறலில் நனைந்துவிடாமல் ஓட்டமும் நடையுமாக நெரிசலான சாலையைக் கடந்தார். பள்ளியின் வாசலில் விட்டுவிட்டு மகளுக்கு டாட்டா காட்டி விட்டு வந்தார். மார்க்கை தந்தையாகப் பார்ப்பது நெகிழ்ச்சியாக இருந்தது.

“தி.நகர் போகணும் பிரதர்.”

“நானும் அதுக்குத்தான். 12 சி-க்காக வெயிட் பண்றேன்.”

“நீங்க இப்பத்தானே. நான் 30 வருஷமா வெயிட் பண்றேன். எல்லாத்துக்கும் வெயிட்டிங் சார்ஜோட சேர்த்து ஒரு ஹிட் குடுத்து 12 சி சம்பளம் வாங்க ணும் இந்த சினிமாவுல” என்று கண்ணடித்துச் சிரித்தார்.

“தி.நகர்ல ஒரு டி.வி. சீரியல் கம்பெனி. டயலாக் எழுதக் கூப்பிடுறான். எபிசோடுக்கு 1,000 ரூவா. எனக்கு இருக்கிற பசியில 300 எபிசோடையும் மூணு நாள்ல எழுதிருவேன்.” அருகில் நெருங்கி வந்து ரகசியமான குரலில் சொன்னார். “15 வருஷமா வேலை இல்லை. குடும்பத்தையும் குழந்தையையும் வெச்சுக்கிட்டு ஓட்டுறது இருக்கே, அப்பப்பா… நமக்கு ஒரு லட்சியம் இருக்கு பிரதர். அதுங்களுக்கு என்ன இருக்கு? பாவம். தெரியாத ஊர்ல இருந்துக் கிட்டு… நினைச்சுப்பாருங்க. எவ்வளவு பெரிய எக்ஸ்ப்ளாய்டேஷன். என் வீட்டுக்காரிக்குச் சுத்தமா இந்த ஊரு பிடிக்கவே இல்ல. வர்றது 12சி -தானே?”

“இல்லண்ணே.”

“கண்ணும் அவுட் அடிக்குதா. நல்லவேளை இந்த டி.வி. வேலை வந்துச்சு. இல்லேன்னா, என்ன செய்யறது? குழந்தை வளருது சார். அதுக்கு ஃபீட் பண்ணணுமே. போன வாரம் ஸ்கூல் ஃபீஸ் கட்டுறதுக்குள்ள முழி பிதுங்கிப்போச்சு. உங்களை எல்லாம் தேடினேன். அம்புடல” என்று புன்னகைத்தார்.

“ஆயிரம் பொய் சொல்லிக் கல்யாணம் பண்ணலாம். ஆனா, பத்தாயிரம் பொய் சொல்லித்தான் புரொடியூசர் புடிக்கிறாய்ங்க. நமக்கு பொய் சுட்டுப்போட்டாலும் வராது பிரதர். பேசாம நீங்களும் டி.வி-க்கு வர்றீங்களா. கேமராமேனுக்கு ஒரு நாளைக்கு ரெண்டாயிரம்.”

அன்று எனக்கும் சேர்த்து மார்க்கே டிக்கெட் எடுத்தார். நான் அவசரமாகப் பணத்தை எடுத்தபோது அலட்சியமாக, ‘வைங்க’ என்று சைகை செய்தார்.

ஆறு மாதம் கழித்து மார்க்கைச் சந்தித்தபோது அவர் சிவப்பு நிற புது ஸ்கூட்டியில் தனது மகளுடன் பூங்காவுக்கு வந்திருந்தார். பூங்காவைப் பார்த்ததும் தமிழ்ச்செல்வி சந்தோஷமாக இறங்கி ஓடியது. மார்க்கைப் பார்த்ததும் இரண்டு உதவி இயக்குநர்கள் மெள்ள விலகிப் போனார்கள்.

“இவருதான்டா மிஸ்டர் மார்க். ஒரு பட டைரக்டர். ஹஹ்…”

“என்ன பிரதர். நல்லா இருக்கீங்களா? டி.வி. சீரியல்தான் எழுதிட்டு இருக்கேன். ஒரே சோகம்” – ஒரு சிகரெட் பாக்கெட்டை சட்டைப் பையில் இருந்து எடுத்து, ஒன்றை உருவி உதட்டில் வைத்துக் கொண்டே பேசினார். “கண்ணு வழியா ஒண்ணுக் குப் போயிருவாய்ங்கபோல. ஹஹ்ஹா… ஆம்பளை யும் பொம்பளையும் அழுதுக்கிட்டே இருக்காய்ங்க. என்ன? மீட்டரு விழுந்துக்கிட்டு இருக்கு. அவங்க கண்ணீரு என் கண்ணீரைத் துடைச்சிருச்சு” என்று வாய்விட்டுச் சிரித்தார்.

“உங்களுக்கு ஒருநாள் சப்ஜெக்ட் சொல்லணும். ஃப்ரீயா இருக்கும்போது…”

“ஓ.கே.”

“ஃப்ரீயா இருந்தா இப்பவே சொல்லவா?”

என்ன சொல்வது என்று தெரியாமல் மையமாகச் சிரித்தேன்.

பூங்கா பக்கத்தில் நிற்கும் பலூன்காரன், பலூனை இழுத்து விநோதமான சத்தத்தை எழுப்பிக்கொண்டு இருந்தான்.

“முன்னாடி ஒரு லைன் இருந்துச்சு… சூப்பர் மேட்டரு. ‘கரகாட்டக்காரன்’ வந்த புதுசுல ராம ராஜனுக்குப் பண்ணது. அப்புறம் ராஜ்கிரண் வந்ததும் கேரக்டருக்கு மீசையை முறுக்கி கைலியைத் தூக்கிக்கட்டி… உள்ளதான் வாழத்தாரு டவுசர் அல்ரெடி இருக்கே. உருவத்தை மட்டும் மாத்துனேன். அம்மா சென்ட்டிமென்ட் ரெண்டுக்கும் பொது. ஆனாலும், வொர்க்-அவுட் ஆகலை. ‘அப்படியே கைலி, டவுசரை உருவிட்டு போலீஸ் டிரெஸ் மட்டும் போட்டு கேப்டனுக்கு சொல்லிப் பாருங்களேன்’னாங்க. அங்கயும் அவுட்டு. இந்த அண்ட்ராயர், பேன்ட்டைக் கழட்டி மாட்டுறதுலேயே 10 வருஷம் போயிருச்சு. திரும்பிப்பார்த்தா, அஜீத்துங்கிறாங்க… விஜய்ங்கிறாங்க. அந்த அம்மா மேட்டரை அப்படியே தங்கச்சி சென்டிமென்ட்டாக்கி, மெயின் கேரக்டருக்கு ஜீன்ஸ் டி-ஷர்ட் எல்லாம் போட்டு, யூத் மேட்டரு, லவ்வு, குத்துப் பாட்டுன்னு சொல்லிப்பார்த்தா. ம்ஹூம்… கோளாறு எங்கிட்டதான் இருக்குன்னு கண்டுபிடிக்க இத்தனை வருஷம். அட, போங்கப்பான்னு எல்லாத்தையும் கிழிச்சுப் போட்டுட்டு, புதுசா உக்காந்து யோசிச்சு ஒரு நாலஞ்சு லைன் பிடிச்சேன். அதுல ஒண்ணுசொல்ல லாம்னா…” பலூன்காரன் விநோதமான சத்தத்தைத் தொடர்ந்து எழுப்பிக்கொண்டு இருந்தான்.

“எனக்கே இந்தச் சத்தம் டார்ச்சரா இருக்கு. இன்னொரு நாள் சொல்லவா?”

கடந்த 10 வருடங்களில் டீக்கடைகளில்,நண்பர் களின் போதைப் பார்ட்டிகளில், அருணாசலம் சாலையில், ப்ரிவியூ படக் காட்சிகளில் மிஸ்டர் மார்க்கை எப்போதாவது பார்ப்பேன். தூரத்தில் இருந்து கையை உயர்த்துவார். இடைப்பட்டகாலத் தில் குமார் இணை இயக்குநராகி ஒரு படம் ஒப்பந்தமாகி இருந்தான். நானும் இரண்டு படங் கள் ஒளிப்பதிவு செய்திருந்தேன்.

“சார், ஒரு நிமிஷம்… என்னைத் தெரியுதா… என்ன சார் கேமராமேன் ஆனதும் மறந்துட்டீங் களா?”

“உங்கள மறக்க முடியுமாண்ணே.”

“உங்க செல் நம்பர் குடுங்க.”

“நம்பர் குறிச்சுக்கங்க. எங்கண்ணே ஸ்கூட்டி?”

“சேட்டு ஆசைப்பட்டுக் கேட்டான். குடுத்துட் டேன். ஹஹ்ஹ்ஹா…”

“சீரியல்?”

என்னைத் தனியாகக் கையைப் பிடித்து அழைத்துப்போனார். “அது ஒரு ஆறு மாசக்கூத்து. அவ்வளவுதான். வறுமை. என் மக மூஞ்சியைப் பாக்க முடியாமத்தான் எழுதப் போனேன். கலை ஞனுக்கு ஏது மரணம் சொல்லுங்க? காம்ப்ரமைஸ். காசுக்காக இந்தக் கண்றாவி எல்லாம் செய்ய ணுமான்னு யோசிச்சேன். விட்டுட்டேன். ஒரு டைரக்டர்ங்கிறவன் யாரு பிரதர்… கிங்!”

அவர் குடித்திருப்பது வாசனையில் தெரிந்தது.

“பாம்பு இருக்கே. அதுக்கு பல்லைப் புடுங்கிட்டா என்ன சொல்லுங்க? புழு… சீ… இந்த சீரியல் எழுதி இது மாதிரி டயலாக் எல்லாம் பேசும்போதே வருது. கருமம்… என்ன சொன்னேன். ம்… டைரக்டர்னா கிங். இந்த உலகத்துல ரெயின்னு யாரு சொன்னா மழை பேயுது. நான் சொன்னேன். என் படத்துல மழை பேஞ்சது சார். ஃபிலிம் பண்ணணும் சார். ‘ஸ்டார்ட் கேமரா’ன்னு சொன்னதும் அதுக்கடுத்து டுர்ருனு கேமரா ஓடுற சத்தம் கேக்குமே. அதுதான்… அந்தச் சத்தம் கேக்கணும் சார் காதில. தூங்குனா இப்பவும் அதுதான் கேக்குது. அது உள்ள கேட்டு கேட்டுத்தான் வெளியில எதுவும் கேக்கல. அட, பசியிலதான் பஞ்சடைக்குதுன்னு பார்த்தா, நெசமாவே காது அவுட்டு. ஹஹ்ஹா…. 30 வருஷம் ஆச்சு, சினிமாவுக்கு வந்து. கணக்குப்பண்ணிப் பாத்தேன். பத்தாயிரம் ராத்திரி. பத்தாயிரம் பகல். அவ்வளவு நாளா காத்திருக்கிற என் வாழ்க்கையிலஷூட்டிங் நடந்த நாள் எத்தனை சொல்லுங்க? வெறும் 50 நாள். ப்ச்… படம் பண்ணணும் சார். ஹிட் அடிக்கணும். நான் நேசிக்கிற சினிமா என்னைய விட்டுடுமா. சொல்லுங்க. எப்படி விடும்? சரி… அது வரைக்கும் என் பொண்டாட்டி தையல் மெஷின்ல கிழிஞ்ச துணி தைச்சுத்தான் சாப்பிடணும்னு இருந்தா யாரால மாத்த முடியும்? இல்ல… தாங்க முடியாத கஷ்டமா இருக்கு. கேமராமேன் சார், ஒரு 1,000 ரூபா குடுங்கன்னா குடுக்க மாட்டீங்களா?”

இந்த வருடத்தின் ஒரு காலைப் பொழுது 7 மணி இருக்கும். செய்தித்தாள் வாங்குவதற்காகக் கடைக் குப் போனபோது, மார்க் கடையின் ஓரமாக நின்று புகைத்துக்கொண்டு இருந்தார். முகம் தெளிவாக இருந்தது. 10 வருடங்களுக்கு முன்பு பார்த்ததைப்போலவே இருந்தார். கொஞ்சம் மெலிந்திருந்தார். என்னைப் பார்த்ததும் கையை உயர்த்திச் சிரித்தார்.

“என்ன சார்.. பார்த்து ரெண்டு வருஷம் இருக்குமா?”

“இருக்கும்ணே… எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன். குடிக்கிறதைவிட்டு ஒரு வருஷம் ஆச்சு. காலையில 5 மணிக்கு எந்திரிக்கிறேன். சின்ஸியரா ஸ்க்ரிப்ட் வொர்க் பண்ணிட்டு இருக்கேன். இப்ப யாரு படம் பண்றீங்க சார்?”

“நம்ம குமார் படம்தான்.”

“ஓ! அந்தப் படம் நீங்கதான் கேமரா பண்ணுறீங்களா? குமார் சொல்லுச்சு. படம் நல்லா வந்திருக்குன்னு.”

“ஆமா.”

“புதுசா ஒரு கதை பண்ணிவெச்சிருக்கேன். சின்ன பட்ஜெட். ஒன் சி-யிலகூட முடிச்சிரலாம். ஒருநாள் சொல்றேன். உங்களுக்கு ரொம்பப் பிடிக் கும். யதார்த்தமா இப்ப இருக்க ட்ரெண்டுல… யாரும் புரொடியூசர் வந்தா விட்டுறாதீங்க. கொஞ்சம் மறக்காமச் சொல்லுங்க சார்.”

“கண்டிப்பா சொல்றேன்.”

“உங்ககூட ஒரு படம் பண்ணணும் சார்.”

“கண்டிப்பா பண்ணலாம்ணே… உங்க நம்பர்?”

“அது… ரீ-சார்ஜ் பண்ணாமக்கெடக்கு. பழைய தெருவுலதான் சார் வீடு. அந்த கன்னிகா மெடிக்கல் ஸ்டோர் இருக்குல்ல. அதுக்குப் பக்கத்து காம்பவுண்ட். அந்த மெடிக்கல் ஸ்டோர்ல சொன்னாக்கூட…”

“கண்டிப்பா சொல்றேன்.”

“கொஞ்சம் மறக்காம சொல்லுங்க சார். இப்ப தான் புதுசு புதுசா புரொடியூசர் வர்றாங்களே” கூடவே நடந்து வந்தார். பிறகு, இருவரும் எதிர் எதிர் திசையில் பிரிந்தோம். வீட்டுக்கு வந்ததும் குமாருக்குப் பேசினேன்.

“என்னப்பா, உங்க ஆளைப் பாத்தேன்.”

“யாரு?”

“மிஸ்டர் மார்க்.”

“ஹ்ஹ்ஹா… என்ன சொல்லுது அண்ணே.போன வாரம் காலையில 6 மணிக்குப் பார்த்தேன்.ஷூட்டிங்குக்குக் கூட்டிப் போங்கப்பா. என்ன வேலைன்னாலும் செய்யுறேன்னு சொல்லுச்சு. காமெடி நல்லாச் சொல்லும். அடுத்த ஷெட்யூல்ல கூட்டிட்டுப் போவம்.”

நேற்று மாலை வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு புதுப் படம் பார்க்க கமலா தியேட்டரில் டிக்கெட் எடுத்து நின்றுகொண்டு இருந்தேன். கூட்டம் நிரம்பி வழிந்தது. தியேட்டருக்குள் படம் விடும்வரை பொழுது போக வேண்டுமே என செல்போனை எடுத்தேன். இரண்டு எஸ்.எம்.எஸ்-கள் வந்திருந்தன. ஒன்று, தெரியாத எண்ணில் இருந்து ஒரு பாலிசிக்கான அறிவிப்பு. இன்னொன்று, குமாரிடம் இருந்து வந்திருந்தது. திறந்தேன்.

‘மார்க் எக்ஸ்பைர்டு.’

அதிர்ச்சியாக இருந்தது. கருணையற்ற காலம் அவருக்கு இன்னொரு வாய்ப்பைத் தந்திருக்கலாம். எப்படி இறந்தார், எங்கு? என்று எதுவும் கேட்கப் பிடிக்கவில்லை. படம் பார்க்க மனம் இல்லாமல் கூட்டத்தில் இருந்து பிரிந்து நடந்தேன். தூறலில் தன் மகளைத் தூக்கிக்கொண்டு அவர் சாலையைக் கடந்த சித்திரம் திரும்பத் திரும்ப நினைவில் வந்து கொண்டே இருந்தது!

– ஜூலை 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *