கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 28, 2015
பார்வையிட்டோர்: 8,375 
 

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு திரும்பிய பாஸ்கரை கோமதி உற்சாகத்துடன் எதிர் கொண்டாள். அன்று அவளுக்கு தபாலில் வந்திருந்த இண்டர்வியூவிற்கான கடிதத்தை பாஸ்கரிடம் கண்பிக்க, அவனும் படித்து சந்தோஷமடைந்தான்.

ஒரு பிரபலமான ஐ.டி.கம்பெனியில் கோமதியை செக்ரட்டரிக்கான நேர்முகத் தேர்விற்கு அழைத்திருந்தார்கள்.

மூன்று மாதங்களுக்கு முன்புதான் பாஸ்கர்-கோமதி திருமணம் நடந்தது.

பதினைந்தாயிரம் ரூபாய் வாடகையில் ஒரு லட்சம் முன் பணத்துடன் வாடகைக்கு ஒரு வீட்டைப் பிடித்து பெங்களூரில் தனிக் குடித்தனம் நடத்திக் கொண்டிருப்பவர்கள். இந்த மூன்று மாத தனிக் குடித்தனத்தில் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு, இரண்டு பேரும் சம்பாதிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தவர்கள்.

பாஸ்கரின் சம்பளம் தற்போதைக்கு குடும்பம் நடத்தப் போதுமாயினும்,

ஸ்கூட்டர், டி.வி., பிரிட்ஜ் போன்ற வசதியான தேவைகளுக்காக கோமதியும் வேலைக்கு முயற்சிப்பது என முடிவாயிற்று.

திருமணத்திற்கு முன்பு கோமதி அம்பாசமுத்திரத்தில் சுருக்கெழுத்து தட்டெழுத்து பயின்று, தேர்வு பெற்றதால் அவளுக்கு தற்போது பெங்களூரில் வேலை தேட வசதியாக இருந்தது.

இண்டர்வியூ தினம்…

எம்.ஜி.ரோட்டில் உள்ள அந்த பிரபல ஐ.டி.கம்பெனி பிரமிப்பான இண்டீரியரில் மெத்தென்ற கார்பெட்டுடன், ஏ.ஸி யின் இதத்தில் அமர்க்களமாக இருந்தது.

தன்னுடைய முறைக்காக கோமதி காத்திருந்தபோது, குறுக்கும் நெடுக்குமாக சென்று கொண்டிருந்த இளம் பெண்களின் ஒப்பனையும், பேசிய நுனி நாக்கு ஆங்கிலமும் அவளுக்கு பிரமிப்பூட்டியது.

சுருக்கெழுத்தும், தட்டெழுத்தும் மிகத் திறமையாக செய்திருந்தபடியால், இன்டர்வியூவிற்குப் பிறகும் அவளை ரிசப்ஷனில் காத்திருக்கச் செய்து

இருபதாயிரம் ரூபாய்க்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் உடனே தரப்பட்டது.

அன்று மாலையே பாஸ்கர், கோமதியை அழைத்துச் சென்று அவளுக்குப் புடைவகளும், மேட்சிங்காக ஜாக்கெட் துணிகளும் வாங்கினான்.

இரவு அவர்கள் சந்தோஷத்துடன் தங்களுடைய வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்வது நிமித்தம் நிறைய திட்டமிட்டார்கள். பாஸ்கர் தன் கம்பெனி லோனில் முதலில் ஸ்கூட்டர் வாங்குவது என முடிவாயிற்று.

கோமதி வேலைக்குச் சென்று வந்த முதல் தினம் பாஸ்கரிடம், “என்னங்க எங்க கம்பெனியில என்னையும் சேர்த்து பத்து பெண்கள், நான் ஒருத்திதான் புடவையும் பின்னலுமாக இருக்கேன். மற்றவர்கள் எல்லாம் அல்ட்ரா மாடர்ன். பாப் கட்டிங், லிப்ஸ்டிக், ஜீன்ஸ், சல்வார் கம்மீஸ் இத்யாதிகள். அதுகள் எல்லாம் நுனி நாக்கில் இங்லீஷ் பேசரதுகள், அதுகளோட வேகமான பேச்சு பல சமயம் எனக்கு புரியறதேயில்லை” என்றாள்.

பாஸ்கர் அவளது தலையை ஆதுரத்துடன் வருடி, “எல்லாம் பழகினா சரியாயிடும் கோமி, இன்னும் மூணு மாசத்துல அவாளவிட நீ நன்னா பேசுவ.. உனக்கு அம்பாசமுத்திரத்தில் இங்கலீஷ் பேசறத்துக்கு எங்க சந்தர்ப்பம்?” என்றான்.

இரண்டாவது நாள், “என்னங்க என் பாஸ் டிக்டேஷன் தரும்போது பைப் பிடித்தபடியே தரான். காபின் முழுக்க ஒரே புகை மண்டலம். எனக்கு குமட்டிக்கொண்டு வருது” என்றாள்.

அதற்கு அடுத்தநாள், “என்னங்க வேலை செய்யற ஆம்பளைங்கல்லாம் ஜோக்கடிக்கிறேன் பேர்வழின்னு அசிங்க அசிங்கமா பெண்களிடம் பேசறாங்க. இதுகளும் அவாளுக்கு சரியா ஈன்னு இளிச்சிண்டு வழியரதுகள், சாயங்காலம் ஆச்சுன்னா ஒவ்வொருத்தன் பின்னாடியும் டூ வீலர்ல தொத்திண்டு டிராப் வாங்கிக்கறதுகள்… கெக்கே பிக்கேன்னு சிரிச்சுண்டு ஆம்பளை பொம்பளைங்கற வித்தியாசமே இல்லை” என்றாள்.

பாஸ்கர் பொறுமையாக, “இத பாரு கோமி, இது பெங்களூர், காஸ்மாபாலிட்டன் சிட்டி, வேலைக்குப் போகும் பெண்கள் ஆண்களுக்கு சமமா பேசுவாங்க, சிரிப்பாங்க, பழகுவாங்க. நீ கிராமத்திலிருந்து வந்ததுனால உனக்கு இதெல்லாம் ஆச்சரியமா இருக்கு, கொஞ்ச நாளில் உனக்கும் இதெல்லாம் சகஜமாகிவிடும்” என்று சமாதானப் படுத்தினான்.

மறுவாரம்…

பாஸ்கரிடம் கண்ணைக் கசக்கிக்கொண்டு, “எனக்கு இந்தப் பெங்களூரில் வேலைக்குப் போறதே பிடிக்கலைங்க, இன்னிக்கு ஆபீஸ் விட்டு பஸ் ஸ்டாண்ட் வரப்ப, எங்க ஆபீஸ் தடியன் ஒருத்தன், ஹாய் கோமதி, ஐ வில் டிராப் யூ என்று பைக்கில் காலூன்றியபடி என்கிட்ட வந்து நிக்கறான்.

நான் பயந்து ஒதுங்கிட்டேன், எனக்கு இதல்லாம் கொஞ்சம் கூட பிடிக்கலை” என்றாள்.

பாஸ்கருக்கு எரிச்சலாக வந்தது. எனினும் அமைதியாக, “கோமி, அவன் அப்படிக் கேட்டதுல தப்பு எதுவும் இல்ல, சின்னச் சின்ன இயல்பான விஷயங்களை பெரிசு பண்ணாத ப்ளீஸ்.. இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்க, எனக்கு ஸ்கூட்டர் அலாட் ஆகி வந்ததும், தினமும் என் ராணியை கொண்டுவிட்டு, திரும்ப அழைத்து வருவது என் பொறுப்பு” என்று பொறுமை காட்டினான்.

அடுத்த வாரத்திலேயே ஸ்கூட்டர் வந்தது. தினமும் கோமதியை அவளுடைய அலுவலகத்தில் இறக்கிவிட்டு, வீடு திரும்புகையில் அழைத்து வந்தான்.

வேலைக்குச் சேர்ந்த ஆறு மாதங்களில் கோமதிக்கு கன்பர்மேஷன் கிடைத்து, சம்பளம் முப்பதாயிரமாக அதிகரித்தது.

கோமதியும் படிப்படியாக மாறத் தொடங்கி, புகார் சொல்வதையெல்லாம் அடியோடு நிறுத்தினாள்.

அன்று அலுவலகத் தோழி பாக்யா கோமதியின் கை விரல்களில் நெயில் பாலீஷ் போட்டுவிட, மாலையே அதை பாஸ்கரிடம் காண்பித்து பெருமைப்பட்டாள்.

அடுத்த சில வாரங்களில் பாஸ்கரின் அனுமதியுடன், பாக்யாவுடன் பியூட்டி பார்லருக்குச் சென்று லிப்ஸ்டிக் பூசி, புருவத்தை திருத்திக் கொண்டாள். கோமதியின் இந்த மாறுதல்கள் பாஸ்கருக்கு நிம்மதியைத் தந்தன.

அடுத்த சில மாதங்களில் அவர்கள் வீட்டில் பிரிட்ஜும், வாஷிங் மெஷினும் குடியேறின.

அன்று இரவு பெட்ரூமில், “என்னங்க எங்க ஆபீஸ் தாமஸுக்கு அடுத்த மாசம் கல்யாணம். கல்யாண ரிசப்ஷனில் பிரசென்ட் பண்ணுவதற்கு ஆபீசில் பணம் பிரிச்சாங்க, நான் உங்களைக் கேட்டுக்கொண்டு நாளைக்கு தருவதாகச் சொன்னேன்” என்றாள்.

“டோன்ட் பி ஸில்லி கோமி, இதுக்கெல்லாம் என் அனுமதி எதற்கு? நீ சம்பாதிக்கலையா? உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்” என்றவன் அவளை இழுத்து அள்ளிக் கொண்டான்.

மறுபடியும் ஒருநாள் பாஸ்கரின் அனுமதியுடன் பியூட்டி பார்லருக்கு பாக்யாவுடன் சென்று, பிருஷ்டங்களைத் தொட்டுக் கொண்டிருந்த தன் நீளமான கூந்தலை வெகுவாகக் குறைத்து பாப் கட்டிங் செய்து கொண்டாள் கோமதி. அதுவும் அவளுக்கு மிக அழகாகத்தான் தெரிந்தது.

தன தோற்றத்தில் கோமதி முற்றிலும் மாறிப் போனாள்.

சம்பாதிக்கும் சந்தோஷத்தில் உடம்புகூட சற்று நிறங்கூடி பூரிப்பாக இருந்தது.

அவர்களுடைய வாழ்க்கை சந்தோஷமான அனுசரித்தலுடனும், நல்ல புரிதலுடனும் ஒரு தெளிவான நீரோடையாக ஓடிக்கொண்டிருக்கையில் –

பாஸ்கரின் அலுவலக முகவரிக்கு, அவனது பெற்றோர்களிடமிருந்து வந்திருந்த கடிதத்தில், வரும் ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் வருவதாகவும் அவனுடன் சேர்ந்து இருக்கப் போவதாகவும் எழுதியிருந்தது.

பாஸ்கரும், கோமதியும் மிகுந்த சந்தோஷத்துடன் வரப்போகும் ஞாயிறுக்காக காத்திருந்தார்கள்.

“என்னங்க நம்ம அம்மா அப்பா நம்முடைய தனிக் குடித்தனத்தை தொடங்கி வைத்தபிறகு, இப்பதான் பெங்களூர் வராங்க. நான் வேலைக்கு போக ஆரம்பிச்சப்புறம் முதல் தடவையா வராங்க. நாம அவங்களுக்கு பார்த்து பார்த்து நிறைய செய்யணும். அம்மாவுக்கு என் சம்பளத்தில் புடவை எடுத்துத் தரணும்… நம்ம கவனிப்புல அவங்க பூரிச்சுப் போயிடணும்.” கோமதி குதூகலித்தாள்

ஞாயிறு காலை.

இருவரும் ரயில் நிலையம் சென்று, பாஸ்கரின் பெற்றோர்களை சந்தோஷத்துடன் எதிர்கொள்ள, கோமதியைப் பார்த்ததும் பாஸ்கரின் தாயார் முகம் சட்டென்று இறுகிப்போனது. அவளிடம் முகம் கொடுத்து கூட எதுவும் பேசவில்லை. அவன் தந்தை மட்டும் இயல்பாக, “என்னம்மா வேலைக்குப் போனதும் ஆளே மாறிட்டியே” என்றார்.

கால் டாக்ஸியில் வீட்டிற்கு வரும்போது பாஸ்கரின் தந்தைதான் உற்சாகமாகப் பேசிக்கொண்டு வந்தார். தாயார் சரத்தில்லாமல் இருந்தாள். இது கோமதிக்கு என்னவோபோல் இருந்தது.

வீட்டையடைந்ததும், கோமதி அருகில் இல்லாத சமயத்தில் மகனிடம், “ஏண்டா, வேலைக்குப் போறான்னா அதுக்காக இப்படியா தாம் தூம் பண்ணிக்கிறது. கொஞ்சம் கூட நன்னா இல்ல, எல்லாம் நீ குடுக்கற இடம்தான்” என்று தாயார் கடிந்து கொள்ள பாஸ்கருக்கு மனம் கஷ்டப் பட்டது. எனினும் பதில் பேசவில்லை.

அன்று இரவு பெட்ரூமில் பாஸ்கர், “கோமி, அம்மா உன்கிட்ட கொஞ்சம் விட்டேத்தியா இருக்காங்கறது எனக்கும் புரியறது, அவ அந்தக் காலத்து மனுஷி” உடைந்த குரலில் ஆரம்பித்தவனை கோமதி இடைமறித்து,

“என்னங்க இதயெல்லாம் பெரிசு பண்ணிகிட்டு, நானும் அந்தக் காலத்து மனுஷியாத்தான் இருந்த்தேன். இங்க வந்தப்புறம் வேலைக்கு போறேன்…இவ்வளவு மாறியிருக்கேன், கவலையே படாதீங்க, அம்மா ஏதாவது சொன்னாக் கூட நான் அமைதியா இருப்பேன். மெளனத்தைப் போல சிறந்த ஆயுதம் உண்டா? நீங்க நிம்மதியா தூங்குங்க” என்றாள்.

பாஸ்கருக்கு தன மனைவியின் பெருந்தன்மை குறித்து கண்களில் நீர் மல்கியது. இருட்டின் சாதகத்தில் அதை மறைத்துக் கொண்டான்.

மறுநாள் காலை அலுவலகத்தில் கோமதி இறங்கிக்கொண்டதும், “என்னங்க இன்னிக்குத்தான் எங்க ஆபீஸ் தாமஸுக்கு கல்யாணம், சாயங்காலம் ஆபீஸ்லர்ந்து எல்லோரும் ரிசப்ஷன் போறாங்க. நானும் அவங்களோட போயிட்டு நேர வீட்டுக்கு வீட்டுக்கு வரேன், நீங்க என்னை பிக்கப் பண்ண வர வேண்டாம்” என்றாள்.

“சரி, கோமி, சீக்கிரமா வந்துரு, அம்மா அப்பா வேற வந்திருக்காங்க” ஸ்கூட்டரை திருப்பிக்கொண்டு தன் அலுவலகம் நோக்கிச் சென்றான்,

மாலை மணி ஏழு.

கோமதி இன்னமும் வீடு சேரவில்லை. வானம் வேறு மழை வருவதைப் போல் இருட்டிக்கொண்டு பயமுறுத்தியது.

பாஸ்கரின் தாயார், “ரொம்ப நல்லா இருக்குடா நீங்க குடும்பம் நடத்துற லட்சணம், விளக்கு வெச்சா வீட்டுக்கு ஒழுங்கா வராம ரிசப்ஷன் என்ன வேண்டி கிடக்கு? உனக்கு தினமும் ஒழுங்கா சமைச்சு போடறாளா? இல்ல ரிசப்ஷன், சினிமா, டிராமான்னு இப்படித்தான் கூத்தடிக்கிறாளா?”

குதர்க்கமாக குத்த ஆரம்பித்தாள்.

பாஸ்கர், “ஏம்மா, நேத்துதான் ஊர்லர்ந்து வந்திருக்க, நல்ல வார்த்தைகள் பேசி கல கலன்னு சந்தோஷமா இரேம்மா… கோமதி ரொம்ப பொறுப்பானவ, நல்லவ. நீ எதுவேணாலும் சொல்லிக்குடும்மா அவ புரிஞ்சுப்பா… ஆனா தயவுசெய்து அவள கரிச்சுக் கொட்டாதம்மா”

என்று கெஞ்சும் பாவனையில் சொன்னான்.

வெளியே மழை தூர ஆரம்பித்து பெரிதாக வலுத்தது.

அவனின் தாயார், “மரியாதையும், பவ்யமும் ஒரு பெண்ணிடம் இருந்தாத்தண்டா வீட்ல கலகலப்பும் சந்தோஷமும் இருக்கும். சாயங்காலம் விளக்கு வெச்சதும் கை கால் அலம்பிண்டு, குங்குமம் இட்டுண்டு, சாமிக்கு விளக்கேத்தி, நமஸ்காரம் பண்ணி அப்புறம் மாமனார் மாமியார நமஸ்காரம் பண்ணுவதற்கு ஒரு பெண்ணுக்குச் சொல்லியாடா தெரியணும்? தலைய மயிர வெட்டி பிசாசாட்டம் விரிச்சு போட்டுக்கத் தெரியறதுல்ல? லிப்பிஸ்டிக் போட்டுக்கத் தெரியறதுல்ல? அதெல்லாம் சொல்லியா கத்துண்டா? … இவ குடும்பப் பெண்ணா அடக்க ஒடுக்கமா இருப்பான்னுதான சல்லடைல சலிக்கிற மாதிரி சலிச்சு உனக்குப் பெண் தேடி, அம்பாசமுத்திரத்துல இருந்த இவள உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன்? ஊர் ஒலகத்துல பொம்மனாட்டி வேலை செய்யலையா என்ன? இவள மாதிரியா தத்தாரி மாதிரி அலையறதுகள்?” வார்த்தைகளை அமிலமாகக் கொட்டினாள்.

மணி ஏழரை… மழை இன்னமும் பெரிதாகப் பெய்து கொண்டிருந்தது.

பாஸ்கரின் தந்தை, தன் முப்பது வருட தாம்பத்திய வாழ்க்கையில் மனைவியின் கொட்டும் சுபாவம் பழகிப்போனதாலோ என்னவோ இந்த சச்சரவுகளில் கலந்து கொள்ளாது, தேமேண்ணு மோட்டுவளையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.

எட்டு மணிக்கு, கொட்டும் மழையில் தன் அலுவலக நண்பருடன் பைக்கில் வந்து இறங்கினாள் கோமதி.

“ஸீ யு குமார்” சொல்லிவிட்டு வீட்டினுள் நுழைய, மாமியார் வெடித்தாள்.

“ரொம்ப நன்னா இருக்குடி நீ குடும்பம் நடத்துற லட்சணம், மாமனார் மாமியார் வீட்ல இருக்காங்களே, சீக்கிரம் வீட்டுக்கு வரணுமேங்கற பயம் கொஞ்சமாவது உனக்கு இருக்கா? கண்டவனோடல்லாம் ஸ்கூட்டர்ல ஓட்டிண்டு வந்து கொட்டற மழைல ஆத்து வாசல்ல இறங்கறயே, வெக்கமா இல்ல… அட பாக்கறவங்கதான் என்ன நினைப்பாங்க? எங்க பாஸ்கருக்கு இப்படியா வந்து வாய்க்கணும்? போன ஜென்மத்துல நாங்க செஞ்ச பாவம், இந்த மாதிரி மாட்டுப்பெண் எனக்கு வாய்ச்சிருக்கு.”

இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத கோமதி அதிர்ந்து போனாள்.

மழையில் நனைந்திருந்தமையால் புடவை சொதசொதவென உடம்புடன் ஒட்டியிருக்க, தலையிலிருந்து முகத்தில் ஏராளமாக மழை நீர் வழிய, பதிலேதும் சொல்லத்தோன்றாது, பாஸ்கரைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

“மச மசன்னு நிக்காம, உள்ளபோய் ஆகவேண்டிய காரியத்தைக் கவனிடி” என்று தொடர்ந்து அதட்டிய தாயாரிடம் பாஸ்கர் பொறுமையிழந்தான்.

“அம்மா, போதும் நிறுத்து. எங்க கல்யாணத்துக்கு முன், நீ வரதட்சணைப் பணத்தை எண்ணியதோட சரி. நான் கோமியோட இந்த ஒரு வருஷம் சந்தோஷமா வாழ்ந்து அவளோட மனசையும், உடம்பையும் புரிஞ்சுண்டவன். என்னைவிட வேற யாருக்கும் அவ மேல அக்கறை இருக்க முடியாது. அவளை வேலைக்குப் போகத் தூண்டியதே நான்தான்.

“புருஷன் சொல்றபடியெல்லாம் ஆடிக்கொண்டு, அவன் ஏதாவது சொல்லிட்டா மூக்க சிந்திக்கொண்டு மூலைல உட்காருகிற ஜாதியல்ல இப்போதுள்ள பெண்கள். இந்த லிப்ஸ்டிக்கும், பாப் கட்டிங்கும் தேவைக்கேற்ற சூழ்நிலை மாற்றங்கள், தன் நம்பிக்கையின் அடையாளம்.

வாழ்க்கைங்கற சிறிய கூட்டைக்கட்டி இப்பதான் திட்டமிட்டு நாங்க ஆரம்பிச்சிருக்கோம். பரஸ்பர அன்பும், புரிந்து கொள்ளுதலும், விட்டுக் கொடுத்தலும்தான் எங்களுடைய பலம். சந்தோஷமான சாம்ராஜ்யம் எங்களுடையது.

“எங்களுடைய அனுசரித்தலைப் புரிந்துகொண்டு சந்தோஷப்படாமல் ஏன் இப்படி எங்களை வதைக்கிற? நீ இந்த மாதிரிதான் இங்க இருப்பேன்னா, நாம எல்லோரும் அவங்க அவங்க வசதிப்படி பிரிந்து இருக்கறதுதான் நல்லது.” வேகமாகப் பேசியதில் பாஸ்கருக்கு உடம்பு பதறி கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்தது.

பாஸ்கரின் தந்தை சலனமற்று அமர்ந்திருக்க, தாயார் அவரை உலுக்கினாள். “என்ன நீங்க பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசறான், பார்த்துகிட்டு சும்மா இருக்கீங்க. நமக்கு மரியாதை இல்லாத இடத்துல நாம இனிமே இருக்கக் கூடாது. நாளைக்கு காலைல கிடைக்கிற முதல் பஸ்ஸைப் பிடித்து நாம திருநெல்வேலி போறோம்.” கொடியிலிருந்த அவரது சட்டையையும், தன் துணிகளையும் எடுத்து தன பெட்டியில் வைத்தாள்.

பெரிதாக குரலெடுத்து அழுது மூக்கை சிந்தினாள். எதுவும் சாப்பிடாது மூலையில் சுருண்டு படுத்தாள்.

அன்றிரவு படுக்கையறையில் கோமதி பாஸ்கரின் மார்பில் புதைந்து கொண்டு அழுதாள். பாஸ்கர் அவளை சமாதானப்படுத்த முயன்று தோற்றான்.

மறுநாள் காலை.

மெளனத்துடன் கூடிய இறுக்கமான சூழ்நிலையில் பாஸ்கரின் பெற்றோர்கள் பிரியும்போது அவன் தந்தை மட்டும், “எதையும் மனசுல வச்சுக்காதீங்க, அடிக்கடி போன் பண்ணுங்க.. கூடியிருக்கும்போது ஏற்படும் சச்சரவுகளைவிட, பிரிந்திருக்கும் சந்தோஷம்தான் இப்போதைக்கு நல்லது” என்று பொதுவாகச் சொல்லிவிட்டு விடை பெற்றார்.

பாஸ்கர்-கோமதிக்கு பதிலேதும் சொல்லத் தோன்றவில்லை. வேதனையான ஒரு புன்னகை மட்டுமே அவர்களிடமிருந்து வெளிப்பட்டது.

என்ன செய்வது? அனைவரும் சம்பாதிக்க வேண்டிய தற்போதைய வேகமான வாழ்க்கையில் – புரிந்து கொள்ளுதலும், விட்டுக் கொடுத்தலும், பொறுமையும் பெரியவர்களிடம் இல்லாவிடில் தன் குழந்தைகளைக்கூட சார்ந்திருத்தல் என்பது அவர்களுக்கு ஒரு பெரிய கேள்விக் குறிதான்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *