கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 28, 2015
பார்வையிட்டோர்: 12,491 
 

மொத்தமாக இன்றே கருமேகங்களை சுத்தமாக்கிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியிருந்த வானம். கருமை நிறத்தை குறைத்தே தீருவேன் என்று தீவிரவாதம் செய்து கொண்டிருந்த தெருவிளக்கின் ஒளியால் , மழைநீரில் குளித்த தார்ரோடு பளிங்கு போல் மின்னிக்கொண்டிருந்தது. விடாது பெய்து கொண்டிருக்கும் மழைநீர் தற்காலிக கண்ணாடியாக மாறி பின்னிருக்கும் புகழ்பெற்ற பிரெசிடென்சி கல்லூரியையும், மரங்களையும், மின் கம்பத்தையும், அதன் அருகில் உள்ள ஓய்விருக்கையையும் தரையில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

‘மழையின் வேகத்தில் கலைந்து கலைந்து ஆடிக்கொண்டிருந்த பிம்பங்களின் நடுவில் கலைந்து போய், களைத்துப் போய் கருமேகங்களை கரைய விடாமல் மன ஏட்டில் புதைத்துக் கொண்டு, கரைந்துக் கொண்டிருந்த மழையில் சாலையின் ஒரத்தில் அமைத்திருந்த ஓய்விருக்கையில் அமர்ந்தபடியே பார்வையால் வெறித்துக்கொண்டிருந்தான் .’

அடர்ந்த மழையிலும், தொடர்ந்த இடியிலும் பயந்து போய், வழி தவறிய குட்டி நாய் ஒன்று, தாயை காணாமல் ஆள் ஆரவாரமற்ற சாலையில் அங்குமிங்கும் அலைந்தபடி, விட்டு விட்டு குறைத்துக் கொண்டே, சிறு முணகலோடு பாதை புரியாமல் பரிதவித்துக் கொண்டிருந்தது.

“அலைந்து சோர்ந்த நாய்க்குட்டியின் விழிகளில் விழுந்த வெளிச்சத்தால், சாலையின் எதிர்பக்கமிருந்த மின் கம்பத்தின் அருகில், ஓய்விருக்கையில் அமர்ந்திருந்தவன் பார்வையில் பதிந்ததும் துணைக்கு ஒருவனை கண்டுவிட்ட மகிழ்ச்சியோடு வாலை வேகமாக ஆட்டியபடி, அவன் கவனத்தை தன் பக்கம் திருப்ப சந்தோஷமாக குறைத்துக் கொண்டே, தன் மீது விழும் மழைநீரை பலமான குலுக்கலில் வெளியேற்றி, கண்கள் ஜொலிக்க தலையை நிமிர்த்தி கம்பீரத்தோடு அவனை நோக்கி நடையை திசை திருப்பியது.”

இரவின் இருட்டை தன் உடலில் வாங்கி, தெருவிளக்கின் ஒளிப்படும் இடம் மட்டும் இளநிரத்தில் உடம்பின் அசைவிற்கேற்ப மாறி மாறி படர்ந்துக் கொண்டிருந்த அழகிய நடையுடன் ஓய்விருக்கையில் அமர்ந்திருந்தவனை மட்டுமே தனது இலக்காக்கி, அவன் மேல் பார்வையை பதித்து வந்து கொண்டிருந்த நாய்க்குட்டி, சட்டென்று தன் மீது பீய்ச்சி அடிக்கப் பட்ட ஒளியால் தன் இயற்கை நிறமும் சேர்ந்து தங்க நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது.

எதிரில் அமர்ந்திருந்தவனிடமிருந்து தன் பார்வையை மீட்டு ஒளிவந்த திசையில் கவனத்தை திருப்புவதற்குள், “தடால்” – என்ற சத்தத்தோடு கடந்து சென்ற ரத்த சிகப்பு காரின் நிறத்தையும் தன்னுடலில் பூசிக்கொண்டு, காதை நிறைத்த ஊளையோடு சுருண்டு விழுந்து, தன் பங்குக்கு தாரின் கருமையை போக்க சாலையில் செம்மை பூசிக்கொண்டிருந்தது.

ஓய்விருக்கையில் அமர்ந்திருந்தவனை நெருங்க முடிந்திராத போதும் அதன் பார்வை மட்டும் அவனை நோக்கியே நீண்டிருந்தது.

மழையோ, காரின் சத்தமோ, நாயின் ஊளையோ, பின்புறத்தில் இருந்து வரும் அலையோசையோ சுற்றுப்புறத்தின் எந்த பிரஞ்ஞையும் இல்லாமல், இந்த உலகத்திலிருந்து தன்னை துண்டித்துக்கொண்டவன் போல் அமர்ந்திருந்தவன் பார்வை மெல்ல மெல்ல நாயின் பார்வையில் கலந்த நொடியில், ‘தன் அகம் நிறைந்த விழிகளின் மெல்லிய பிரழ்வினில் அதிர்ந்து போய் எழுந்து நின்று விட்டான்’.

அவன் சிந்தையிலே நிறைந்திருந்த “அதே காட்சி, அதே கண்கள், தன் அடையாளம் இழந்து, வெறும் விழித்திரையாய் மாறி கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிக்கொண்டே வந்து அவனை மொத்தமாக முழுங்கிக்கொண்டிருந்தது”.

எல்லையில்லாத வெண் திரைக்குள் எதையோ தேடி தேடி ஓடி சோர்ந்துக் கொண்டிருந்தான். நாய்க்குட்டியை நோக்கி அவன் அடிகளை குறைக்கும் கால்களின் வேகத்தை நொடிகள் அதிகரித்துக் கொண்டே போனது.

நாய்க்குட்டியின் சத்தம் குறைந்து கொண்டே போய் ஈனஸ்வரத்தில் முனகியது, அவனை நோக்கி செல்லத் துடித்த கால்களை அசைத்தபடி, ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்பையும், நட்பையும் கண்களில் தேக்கி, தன்னை நெருங்கும் அவன் பிம்பத்தால் விழிகளை மலர்த்தி, காதை நிமிர்த்தி, தன்னியல்பாய் வாலை ஆட்ட முயற்சித்தது.

மழைநீருக்கு கண்ணீரும் போட்டி போட்ட படி நாய்க்குட்டியின் விழிகளிலிருந்து அவன் விழிகளை அகற்றாமல் அதனை நெருங்கி, அருகில் முழங்காலிட்டு அமர்ந்து, “மித்ரா….மித்ரா…” என்று விடாமல் உச்சரித்து உருகிக் கொண்டிருந்தவனை, முகமலர்ந்து பார்த்துக்கொண்டே மெல்ல மெல்ல அதன் மார்பு ஏறி இறங்கும் நிமிடம் குறைந்துப் போய்……… நின்றேவிட்டது.

தன்னை சேர்ந்த ஒருவனை நெருங்கிவிட்ட மகிழ்ச்சியோடு மெல்லியதாகிக் கொண்டிருந்த மூச்சுக் காற்றையும் மொத்தமாக நாய்க்குட்டி நிறுத்திவிட்டதை உணராமல் இன்னமும் சலனமற்று விரிந்திருந்த அதன் விழித்திரைக்குள் தேடி தேடி சலித்தபடி “மித்ரா…மித்ரா.”…என்று விடாமல் கரைந்துக் கொண்டிருந்தான் அவன்.

‘மாலினி’….

‘மாலினி’…… என்று மனைவியை அழைத்துக் கொண்டே, கண்ணாடி முன் நின்று தலை சீவிக்கொண்டிருந்த ஜீவன், படுக்கை அறையின் கதவோரத்தில் வந்து நின்றவளை பார்த்து , “என் யூனிபார்ம் எங்கே?” என்றான்.
மாலினி அவனை முறைத்துக்கொண்டே, தினமும் இருக்கற இடத்தில் தான் இருக்கு என்று அலமாரியை நோக்கி கை காட்டிவிட்டு, கணவனுக்கு காபி போட சமையலறைக்கு சென்றவளுக்கு, ஒரு நிமிடத்தில் கணவனிடமிருந்து அடுத்து அடுத்து பல அழைப்புகள் வந்த வண்ணமிருந்தது…..

மாலினி……. ‘பர்ஸ் எங்கே?’

மாலினி……. ‘வாட்ச் எங்கே?’

மாலினி…….’போன் எங்கே?’

மாலினி…..

அமைதியாக வந்து அறை வாசலில் சாய்ந்தபடி கைகளை கட்டிக்கொண்டு, “இப்ப எது காணோம் ஜீவா?”, என்றவளிடம்

அதான் சொன்னேனே, மாலினி… ‘என் மாலினியை காணோம்’ என்று கூறிக் கொண்டே அவளின் கைப்பிடித்து அருகில் இழுத்தான்.

தினமும் இதே வேலை தானா ஜீவா?

கல்யாணமாகி ஆறு மாசம் தான் ஆகுது இதை தவிர வேற என்ன வேலை இருக்கு.

‘பர்ஸ், போன் எல்லாம் எங்கே இருக்கும்ன்னு உனக்கு தெரியாதா?’

அதெல்லாம் எங்க இருக்கும்ன்னு எனக்கு தெரியும். உனக்கு தெரியுமான்னு தான் கேட்டேன்…… ‘இப்ப என்ன கேட்டேன்னு புசு புசுன்னு மூச்சு விடற, ரொம்ப கோபமாயிட்டியா? வேணும்னா குறைக்க முயற்சி செய்யலாமா?’

இதுக்கு தான் ஒரு பக்க வசனமா?

எனக்கு தேவையில்லை ஆனா உனக்கு தேவைப்படுதே இல்லைனா ‘காபி போடறதில் தானே உன் கவனம் இருக்கும்.’

மாலினி சிரித்துக்கொண்டே, உனக்கு காபி வேண்டாமா என்றாள்.

உன் கேள்வியே சொல்லுது நீ தயாராயிட்டேன்னு.

மனைவி கொடுத்த காபியையும் பருகி விட்டே இரவு பணிக்கு கிளம்பினான்.

***********************

மழையின் ஊடே கடற்கரை சாலையில் ஊர்ந்து கொண்டிருந்த போலிஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த கண்ணாடியின் வழியே, வெளியே கவனமாக பார்த்துக் கொண்டே வந்த ஜீவனின் பார்வை ‘அடிபட்டு கிடந்த நாயும் அதன் அருகே அமர்ந்து மித்ரா…. மித்ரா….. என்று கதறிக் கொண்டிருந்தவனிடம் பதிந்தது’. வண்டியை நிறுத்த சொன்னவன் தன் கூட வந்த கான்ஸ்டபிளிடம் சீக்கிரம் நாயை கிளியர் பண்ண சம்மந்தப்பட்ட ஆளுங்களிடம் சொல்லுங்க இல்லைனா போக்குவரத்து தடைப்படும் என்று உத்தரவிட்டு, தரையில் அமர்ந்திருந்தவனை நோக்கி சென்றான்…

‘ஹலோ’….., இந்த நேரத்தில் இங்க என்ன பண்றீங்க? உங்களை தான் கேட்கிறேன்…

இங்க பாருங்க மிஸ்டர்….. என்ன ஆச்சு? என்ன கேட்டாலும் பதிலே இல்லை, காதுலையே வாங்காம இருக்கான்… இவனோட நாயோ? என்று நினைத்துக்கொண்டே, ‘மிஸ்டர் உங்க பேர் என்ன?’ எதற்கும் பதிலில்லாமல் போகவே அவனை கவனமாக பார்த்தவனுக்கு உடனே பிடிப்பட்டது எதுவோ சரியில்லை…..

சட்டையெல்லாம் கசங்கிப் போய், தலையெல்லாம் கலைந்து போய், பார்வையை ஒரே இடத்தில் செலுத்தியபடி “மித்ரா… மித்ரான்னு சொல்றானே?”, யாரந்த மித்ரா? மனநிலை சரியில்லாதவனா? – என்று யோசித்துக் கொண்டே அவனை எடைபோட்டுக் கொண்டிருந்த ஜீவனின் பார்வையில் கழுத்தில் மாட்டியிருந்த அடையாள அட்டை விழுந்தது.

திரும்பியிருந்த அடையாள அட்டையை திருப்பிப் பார்த்தபோது அதில் ‘prof. C. ஜெகன்நாதன்,’ என்ற பெயருடன் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த கல்லூரியின் பெயரும் அச்சிடப்பட்டிருந்தது.

இது மாலினியோட கல்லூரி ஆச்சே, ஒருவேளை அவ அடிக்கடி சொல்ற ‘சீனியர் ஃப்ரொபசர் ஜெகன் இவரு தானோ?’ என்று நினைத்துக்கொண்டே.

‘சார்… சார்’ … என்று உலுக்கியதற்கும் எந்த அசைவுமில்லாமல் போக, முகவரிக்காக அவர் உடுப்பை ஆராய்ந்த ஜீவனின் கையில், சட்டை பையிலிருந்த அலைபேசி சிக்கியது ஆனால் முழுவதுமாக நனைந்து செயலற்று போயிருந்தது.

மாலினியை கூப்பிட்டு ஃப்ரொபசர் நம்பரை வாங்கி, கண்ட்ரோல் ரூமிற்கு தொடர்பு கொண்டு விசாரிக்க உத்தரவு இட்டு, அந்த இடத்திலிருந்து நகர மறுத்தவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ஜீப்பில் அமரவைத்தான். சிறிது நேரத்தில் கண்ட்ரோல் ரூமிலிருந்து அவர் அதிகமாக தொடர்பு கொண்டிருந்த நம்பரை பெற்றுக்கொண்டு அதற்கு அழைத்த போது…… மறுமுனையிலிருந்து ‘ஹலோ’ என்று அதிகமாக மூச்சை விட்டபடி பதட்டமாக வந்தது ஒரு பெண்ணின் குரல்….

‘ஹலோ.. மேடம்’, நான் இன்ஸ்பெக்டர் ஜீவன்….Mr. ஜெகன்நாதனை உங்களுக்கு தெரியுமா?

அவர் என்னோட கணவர் தான் சார், என்னாச்சு அவருக்கு? எங்க இருக்கிறார் இப்ப?

பதட்டப்படாதீங்க… ‘உங்க கணவர் நல்லா இருக்கார், கொஞ்சம் மனஅழுத்தத்தில் இருப்பார் போல தெரியுது. நான் நைட் ரவுண்ட்ஸ்க்கு வரும் போது கண்ணில் பட்டார்’, அது தான் அவரை விசாரித்துக் கொண்டிருந்தேன்…

மேடம் உங்க பேர் ‘மித்ரா’ வா?

இல்லை சார் என் பேர் ‘வான்மதி’…. நாங்க ரொம்ப நேரமா அவரை காணோம்னு தொடர்புகொள்ள முயற்சி செய்துக் கொண்டிருந்தோம், லைன்னே கிடைக்கலை, பதட்டத்தோடு இருக்கும்போது தான் நீங்க கூப்பிட்டீங்க….. இப்ப அவரோட நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க, நான் வந்து அவரை அழைச்சுக்கிறேன்..

அவரோட போன் மழையில் நனைந்து வொர்க் ஆகலை, நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க.

‘…………..’

“ஓ….அந்த ஹாஸ்பிடல்” எனக்கு பக்கம் தான்… உங்க மாமனாரை தவிர வேற யாரும் அருகில் இல்லைன்னு சொல்றீங்க, அவரும் வயசானவர் அதனால இந்த மழையில் நீங்க வரவேண்டாம் நான் ரவுண்ட்ஸ்ல தான் இருக்கேன் நானே கூட்டிட்டு வரேன். எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை, என் மனைவி வேலை பார்க்கும் காலேஜில் தான் உங்க கணவரும் வேலைப் பார்க்கிறார். அவள் வார்த்தைகளின் மூலமாக இவர் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர் தான்.

பேசி முடித்த ஜீவன், போனில் தொடர்பை துண்டித்துவிட்டு, அவர் மனைவி கூறியபடி, Mr.ஜெகன்நாதனை ட்ரிப்ளிகேனில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல டிரைவரை வண்டி எடுக்க சொன்னான்.

தன்னையே சுமக்க முடியாதவரைப் போல தோய்ந்து உட்கார்ந்திருந்தவரிடம் பேச்சு கொடுத்து பார்த்தும் எந்த பதிலும் இல்லை, ஒரு தலை அசைப்புக் கூட இல்லை…. “யாரிந்த மித்ரா” என்ற கேள்வி அவன் மனதில் சுற்றி கொண்டிருந்தது. அவர் நிலையைப் பார்த்தால், நடந்துவிட்ட விபரீதத்தின் எதிர்விசைப் போல் இருந்தது.

மருத்துவமனையில் நுழைவதற்கு முன்பே நிறைமாத கர்ப்பிணியான அவரின் மனைவி வாசலிலேயே இவர்களை கண்டு விட்டு பதட்டத்தோடு மூச்சிரைக்க வேகமாக நடந்து அருகில் வந்தார். அந்த நிலைமையில் அவரை பார்த்ததும், எது நடந்தாலும் மனைவியை இந்த நிலைமையில் தவிக்க விட்டா வருவது என்று ஜீவனுக்கு சிறு எரிச்சல் எழுந்தது.

‘நிறைமாத கர்ப்பிணியாய், இயற்கை உபாதைகள் பற்றிய உணர்வற்று, மகளாய், தோழியாய் இருந்த மித்ராவை இழந்து, பேதலித்துப்போன கணவனை காணாமல், தந்தை போன்ற மாமாவையும் தேற்ற வேண்டிய பொறுப்போடும் குழம்பிப் போய் தவித்து, துடித்துக் கொண்டிருந்த வான்மதி, தலை கலைந்து, நனைந்து போய் எங்கோ வெறித்தபடி நின்று கொண்டிருந்த ஜெகனை பார்த்ததும் உடைந்து போய் அவனை உலுக்கியபடி கதறிக்கொண்டிருந்தாள்’.

சில நிமிடங்களிலே தன்னை கட்டுக்குள் கொண்டுவந்து மெல்லிய விசும்பலுடன் ஜெகனை விசாரித்துக்கொண்டிருந்தவளிடம் எந்த உதவி தேவைபட்டாலும் தயங்காமல் தன்னை அணுகுமாறு கூறிவிட்டு, அதற்குள் அலுவலகத்திலிருந்து வந்த பல அவசர அழைப்புகளால் தன் இரவு பணிக்கு விரைந்தான் ஜீவன்.

ஏற்கனவே மகளை இழந்து தவித்து கொண்டிருந்த ஜெகனின் தந்தை, ‘மகளை போல வளர்த்த தங்கையின் கண் தானத்திற்காக பள்ளி படிக்கும்போதே பதிந்திருந்த படிவத்திற்கு கடைசியாக அனுமதி கையெழுத்திட்டுவிட்டு பித்துபிடித்தபடி சென்ற தன் மகனை வெகுநேரம் காணாமல் தேடி சலித்து சோர்ந்து போய், எங்கே மகனையும் இழந்து விடுவோமோ என்று அவருள் விரிந்து செல்லும் கற்பனையை தடுக்கும் சக்தியற்றவராய் தளர்ந்து போய் இருக்கையில் அமர்ந்திருந்தார்’.

காத்திருப்பு அறைக்குள் அவரை நோக்கி வந்து கொண்டிருந்த வான்மதியையும் அவள் கைப்பிடியில் இருந்த ஜெகனையும் கண்டவுடன், பெரிதாக சுவாசத்தை விட்டபடி தன் பலமனைத்தையும் திரட்டி தடுமாறியபடியே எழுந்து சென்று அணைத்துக் கொண்டார் மகனை.

ஆனால் அதன் பிரஞ்ஞை சிறிதும் இல்லாமல் தன் உலகத்தில் சுற்றி கொண்டிருந்த ஜெகனை அழைத்து வந்து சுவற்றை ஒட்டி போட்டிருந்த இருக்கைகளில் ஒன்றில் அமரவைத்து, அருகில் அமர்ந்து அவன் கைகளை வருடியபடி, சமாதான வார்த்தைகளை கோர்க்க முடியாமல், எதையும் உச்சரிக்கும் தெம்பற்றவராய், பாலைவனமான விழிகளில் மீண்டும் மீண்டும் ஊற்றெடுக்க, கடந்து செல்லும் நொடிகளை முழுங்க முடியாமல் தன் மகளின் உயிரற்ற உடலை எடுத்துச் செல்ல காத்திருந்தார்.

***************

கல்லூரியை விட்டு வரும் தன் மனைவிக்காக, வரவேற்பறையின் இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்து கொண்டு செய்தித்தாளின் இணைப்பு இதழையும் விடாமல் வரி வரியாக வாசித்தபடி காத்துக்கொண்டிருந்தான் ஜீவன்.

வண்டிச் சத்தம் கேட்டதும் ஆவலாக விழி உயர்த்திய ஜீவனின் கண்கள் அடுத்த நொடி கேள்வியாக சுருங்கியது தன் மனைவியை பார்த்து. ‘எதையோ யோசித்துக் கொண்டே கைப்பையை சுவற்றில் மாட்டிவிட்டு, சாவியை மேஜையில் வைத்துவிட்டு, செருப்பை கழட்டாமல், வரவேற்பறையில் அமர்ந்திருந்த ஜீவனை கூட கவனிக்காமல் உள்ளறையை நோக்கி நடந்துக் கொண்டிருந்தாள் மாலினி.’

‘மாலினி….மாலினி’….என்று அழைத்த ஜீவனின் குரல் கேட்டு கலைந்தவள்….

என்ன ஜீவா? இருங்க காபி எடுத்திட்டு வரேன் என்று கூறியபடி கை கால் கூட சுத்தம் செய்யாமல் சமையலறையில் நுழைய சென்ற மனைவியை வேகமாக எழுந்து சென்று தடுத்து அவளை அழைத்து வந்து இருக்கையில் தன் அருகில் அமரவைத்தவன், மேஜையில் வைத்திருந்த பிளாஸ்க்கை எடுத்து காபியை கோப்பையில் ஊற்றி மனைவிக்கு கொடுத்தான்.

அவனை பார்த்து சிரிக்க முயன்றும் முடியாமல் கோப்பையை வாங்கி, ஒருவித இறுக்கத்தோடு அமர்ந்து கடமையாக குடித்துக் கொண்டிருந்த மனைவியை கவனமாக ஆராய்ந்தபடி தன் கோப்பையிலிருந்த காபியை துளி துளியாக அருந்திக் கொண்டிருந்தான்.

திடீரென்று, “ஹார்லிக்ஸ் நல்லா இருக்கா மாலினி?…” என்றவனிடம், முழித்தபடி என்னாச்சு உங்களுக்கு இது “டீ” ங்க என்றாள்.

மெதுவாக தலையாட்டியபடி, அவள் தோளில் கை போட்டு அவளை அணைத்துக் கொண்டு… ‘பரவாயில்லை கலர் ப்ளைண்ட்னஸ் இல்லை, சுவை நரம்பு தான்…..’ என்று கிண்டலாக சிரித்தபடி இழுத்தவனை, புருவத்தை சுருக்கி புரியாமல் பார்த்தபடி கோப்பையிலிருந்ததை அருந்திக் கொண்டிருந்தவள் புருவத்தை விரித்து, உதடு லேசாக சிரிப்பில் விரிய அவனை பார்த்தபடி மெதுவாக உச்சரித்தாள்….”காபி…”

‘ம்ம்ம்….சுவையும் மீண்டிடுச்சி….’ இப்ப சொல்லு என்ன யோசனை ?

‘ம்ப்ச்….ஜெகன் சார் இல்ல…நேத்து நீங்க ஹாஸ்பிடல்ல கொண்டு போய் விட்டீங்களே….அவரோட தங்கை மித்ரா இறந்திட்டாங்களாம் நேத்து,’ கெமிஸ்ட்ரி ஃப்ரொபசர் சொன்னார்.

அப்படியா…..ஓ…..அதான் அப்படி இருந்தாரா……எப்படி நடந்தது?

“நேத்து மத்தியானம் காலேஜ் வந்து, அவங்க அண்ணனை பிடிவாதமா அனுமதி வாங்கிட்டு வர சொல்லி, ரொம்ப ஆசையா பிறக்க போற தன் அண்ணன் குழந்தைக்கு துணியெடுக்க கடைக்கு கூட்டிட்டு போயிருக்காங்க, இரண்டு மணிநேரத்தில் தகவல் தான் வந்ததாம் மருத்துவமனையிலிருந்து.” அதே மருத்துவமனையில் தான் மித்ரா ஹவுஸ் சர்ஜன் பண்ணிட்டிருந்தாங்கலாம்.

துணி வாங்கிட்டு கடையை ஒட்டிய பார்க்கிங் இடத்தை நோக்கி போகும்போது “திருஷ்டி சுத்தி உடைத்து போட்டிருந்த பூசணிக்காயில் கவனமில்லாமல் கால் வைத்து வழுக்கி விழுந்திருக்கிறாள், ஒரு சின்ன அடியோ, ரத்தமோ எதுவுமேயில்லை, மூளை தான் அதிர்ச்சியில் சுயநினைவு இழந்துவிட்டிருக்கு.” அப்போதும் காப்பாத்திவிடலாம் என்று எவ்வளவோ நம்பிக்கையோடு இருந்திருக்காங்க. ம்ஹும்…ஒரே ஒரு தடவை தான் சுயநினைவு வந்திருக்கு.

ச்சே……ரொம்ப குற்ற உணர்வா இருக்கு மாலினி, அவசரமா ஸ்டேஷனில் இருந்து போன் வந்ததால் அன்னைக்கு அவங்களுக்கு என்னால உதவி பண்ண முடியலை. நிலைமையை தெரிஞ்சுகிட்டிருந்தேனா வேற யாரையாவது ஏற்பாடு செய்திருப்பேன். குறைந்தபட்சம் போன் பண்ணியாவது விசாரிச்சிருக்கணும், சுத்தமா மறந்திட்டேன். ‘ஹும்ம்ம்…… இந்த வார இறுதியில் வேணா அவங்க வீட்டுக்கு போய் விசாரிச்சிட்டு வருவோம்’ – என்றான்.

“ம்ப்ச்….. ஒரு அஜாக்கிரதையான செயல் எண்ணற்ற உயிரை காக்க போகும் டாக்டரின் உயிரை பறித்து ஒரு குடும்பத்தையே நிலை குலைய வைத்துவிட்டது, யாரோ ஒருவரின் சின்ன கவனக்குறைவால் சிதைந்துப் போனது அவள் கனவுகள்.” ஜீவனால் ஜீரணிக்க முடியாமல் அவன் அகம் முழுவதும் ஜெகன்நாதனின் கசங்கிய முகமே நிறைந்திருந்தது….

கலங்கி போய் அமர்ந்திருந்த கணவனின் நிலை கண்டு அவனை சகஜமாக்க முயன்றவள்….

’என்ன ஜீவா….’ என்று கலக்கமாக அழைத்த மனைவியின் குரலால் மீண்டு அவளை நோக்கிய ஜீவனின் மனதில் நிறைமாத கர்ப்பிணியாக கணவனின் நிலைக் கண்டு பயந்துப் போய் வந்த ஜெகன்நாதனின் மனைவியே தோன்றினார்.

இதயத்தில் யாரோ அதிக எடையை வைத்தது போல் கனக்க, எதிலிருந்தோ விடுபடுபவன் போல் மாலினியை இறுக அணைத்து, கண்களை இறுக்கமாக மூடியபடி அவள் தோள் வளைவில் தன் முகத்தினை அழுத்தமாக புதைத்தான்.

*****************

உறுப்புகளில் ஒன்றிற்கு கூட தன் உடலை தாங்கும் பலம் இல்லாதவனைப் போல துவண்டு போய், கண்ணீர் வற்றிவிட்ட கண்களால் வெறித்துக் கொண்டு சோபாவில் புதைந்து போயிருந்த ஜெகன்நாதனை பார்த்த ஜீவனின் கண்களில், ஒரு நொடி விழிநீர் திரையிட்டு மறைந்தது. ‘வேலையில் பலரின் கண்ணீரை பார்த்து பார்த்து பழக்கப்பட்டிருந்தாலும் சில நேரங்களில் தன்னுணர்வை மீறி அவை எட்டிப் பார்த்துவிடுகிறது.’

ஜீவனை கேள்வியாக பார்த்த ஜெகனின் தந்தை, வான்மதியால் அவனை பற்றி அறிந்து, முகம் மலர்ந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டு நன்றி கூறி கண் கலங்கினார்.

நெகிழ்ந்துபோய் அவரை சமாதானப் படுத்திவிட்டு ஜெகனை நோக்கிய ஜீவனை பார்த்த அவன் தந்தை…..”இப்ப கொஞ்சம் பரவாயில்லை ஒரு வேலையாவது சாப்பிடறான், கொஞ்சம் எழுந்து அங்க இங்க நடமாடறான், மருமகளோட கோயிலுக்கு போறான், சரியாகிடுவான்” என்றார் மருமகளை பார்த்துக்கொண்டே சிறு நம்பிக்கை கீற்று படர.

கல்லூரிக்கு போனால் கொஞ்சம் மாற்றமா இருக்குமில்ல என்ற ஜீவனிடம்….தலையை இடமும் வலமுமாக ஆட்டியபடி கேட்க மாட்டேங்கிறான், “அவனுக்கும் மித்ராக்கும் பத்து வயசு வித்தியாசம், குழந்தை மாதிரி பார்த்துப்பான். அவளுக்கும் எல்லாமே அண்ணன் தான், கடைசியா சுயநினைவு வந்த போதும் அவ அண்ணனை பார்த்திட்டே தான் உயிர் விட்டாள்” என்றார் கரகரத்த தொண்டையை செருமியபடி. அவரிடம் சிறிது நேரம் பேசி விட்டு, உதவி தேவைப்பட்டால் எந்நேரம் என்றாலும் அழைக்கும்படி கூறிவிட்டு விடை பெற்ற ஜீவனிடம் நேரம் கிடைக்கும்போது வந்து போங்க என்று கூறியபடி விடை கொடுத்தார் ஜெகனின் தந்தை.

பத்து நாள் கடந்தும் கல்லூரிக்கு செல்லாமல் தங்கையின் நினைவிலேயே இருந்தவன் மனது நிலைக்கொள்ளாமல் மித்ராவின் நினைவுகளையே தோண்டி தோண்டி சலித்துக் கொண்டிருந்தது.

‘எங்கு பார்த்தாலும், எங்கு சென்றாலும் அவள் நினைவுகளே கலைந்துக் கிடந்தது. அவள் அறையில், அன்று மதியம் வந்து கட்டிலில் எறிந்து விட்டு போன டாக்டர் கோட் கூட கலையாமல், அதே இடத்தில் கிடந்தது, அதன் அருகில் அவளுக்கு ஜெகன் மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பிக்கும்போதே ஆசையாக பரிசளித்த ஸ்டெதஸ்கோப். சுவற்றை ஒட்டி இருந்த மேஜையின் மேலிருந்த புத்தகம், உள்ளே புக் மார்க்குடன் அவள் வைத்தபடியே கிடந்தது. அவள் கலைத்து போட்ட ஆடைகளும், கழட்டி போட்ட ஆபரணங்களும், அந்த அறை முழுவதும் அவள் பொருட்களால் மட்டுமல்ல, அவள் வாசனையாலும், மூச்சுக்காற்றாலும் நிறைந்திருந்தது.’

உள்ளே நிற்கமுடியாமல் மூச்சடைக்க வெளியே வந்தமர்ந்தவனுக்கு அங்கேயும் சுவாசிக்க சிரமமாகவே இருந்தது.

“எல்லா இடத்திலும் மித்ராவே நிறைந்திருந்ததால், சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து அவனை பார்த்து சிரிக்கும் மித்ரா, வான்மதியை எதிர்பாராமல் பின்னாலிருந்து பயமுறுத்தும் மித்ரா, அப்பாவிற்கு தெரியாமல் திருட்டு முழியோடு அவர் பையிலிருந்து புது பேனாவை உருவும் மித்ரா, எதிர் வீட்டு நாயோடு போட்டி போட்டுக்கொண்டு சோபாவை ரெண்டாக்கும் மித்ரா, இப்படி எங்கே பார்த்தாலும் அவள் சிரிப்பு, கிண்டல், குறும்பு பேச்சு, கண்கள்…”.

‘கடைசியாக மருத்துவமனையில் அவனையே பார்த்திருந்த அவள் கண்கள், எதையோ சொல்லத் துடித்து வாயசைக்க முடியாமல் இங்குமெங்கும் உருண்ட அவள் கண்மணிகள். அவன் விழி மூடினாலும் திறந்தாலும் எதையோ தன்னிடம் கேட்க துடிக்கும் அந்த கண்களே எங்கும் நிறைந்திருக்கும்.’

சிரிப்பு, பேச்சு, சத்தம் எல்லாமே மறைந்து வெறும் ‘அவள் கண்கள், கண்கள், கண்கள்’ மட்டுமே சுற்றிலும் அதிகரித்துக்கொண்டே வந்து அவன் அருகில் நெருங்கி கொண்டிருந்தது….. அதில் முழுகிப் போய் மூச்சு விட தவித்துக் கொண்டிருந்த போது, தீடிரென்று வேகமாக வந்து விழுந்த “ஜெகன்” என்ற சத்தத்தில், பேரை கேட்டதும் கவனம் குவிந்த இயற்கையில், சோபாவில் தலை சாய்த்தப்படியே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தவன் விதிர் விதிர்த்து எழுந்து, சத்தம் வந்த திசையை அறிய முயன்றான்.

உட்கார முடியாத அவஸ்த்தையோடு பிரசவ வலியில் துடித்துக்கொண்டே வான்மதி விட்டு விட்டு எழும் வலியை பல்லைக் கடித்துப் பொருத்துக்கொண்டே அவனை ‘ஜெகன்…. ஜெகன்….’ என்று அழைத்துக் கொண்டிருந்தாள். ஒரு க்ஷணமும் தயங்காது அவன் கால்கள் அவளை வேகமாக அடைந்துவிட்டது.

பிரசவ அறைக்கு முன்னால் ஜெகனும் அவன் தந்தையும் அமர்ந்திருந்தார்கள் . ‘பத்துநாளைக்கு முன் மித்ராவிற்காக தவித்திருந்த நாளின் நினைவு ஒரு துளி கூட விடாமல் அவனை நிறைத்திருந்தது….’

மருத்துவர் வந்து வாழ்த்துச் சொல்லியும் அவன் மனதில் அது பதியவே இல்லை. அவன் தந்தை அழைத்தும் உள்ளே செல்ல மறுத்துவிட்டான். அந்த அறைக்குள் காலை எடுத்து வைக்கவே அவனுக்கு பயமாக இருந்தது,

மித்ரா இறந்த நினைவே நிழலை பார்த்தும் அவனை மிரள செய்தது. தனக்குள்ளேயே உழன்று கொண்டிருந்தவன் காதை நிறைத்த குழந்தையின் அழுகை, அவனை அறையின் வாசலுக்கு இழுத்துச் சென்றது. “தலையை நிமிர்த்தி பார்த்தவன் விழி திரையில் பதிந்தது, திறந்திருந்த கதவின் ஊடே வெண் நிற துணியால் சுற்றியிருந்தாலும் அதன் விலகளில் தெரிந்த ரோஜா நிற சிறிய பாதங்களும், மெல்லிய சிறு கைகளும் கோபமாக ஆட்டிக்கொண்டு கண்ணை இருக மூடி வீரிட்டு அழும் மகனின் உருவம்.”

எதுவோ செலுத்தியது போல் உள்ளே சென்றவனின் பார்வை மகனிடமே நிலைத்து மெல்ல மெல்ல இறுக்கம் குறைந்தது. சோர்வாக ‘இறுக்கி மூடிய ஒரு கையை தூக்கி தலைக்கு மேல் வைத்துவிட்டு முகத்தை திருப்பிய மகனின் செய்கையும், மித்ராவை கையில் ஏந்திய நாளை நினைவில் நிறுத்தி தானாகவே உதடு புன்னகையில் விரிந்தது. மித்ராவின் மூடியிருந்த கையில் அவன் விரலை நுழைத்ததும் அவள் இறுக்கி பிடித்த ஸ்பரிசம், நினைக்கையிலேயே இன்றும் விரலில் ஒட்டிக்கொண்டிருந்தது.’

ஆசையாக மகனின் ஒவ்வொரு அசைவுகளையும் விடாமல் பார்வையில் பதித்துக் கொண்டிருந்த ஜெகனை, காதிற்குள் தடம் போட்டிருந்த கண்ணீரோடு இதழ் விரித்து, விழிகளில் நிரப்பிக் கொண்டிருந்தாள் வான்மதி .

***************************

‘மாலினி…மாலினி…..’ என்று வழக்கம் போல் மனைவியை அழைத்துக் கொண்டிருந்த ஜீவனின் முன்னால், கைகளை கட்டிக் கொண்டு கதவில் சாய்ந்து நின்று முறைத்துக் கொண்டிருந்தாள் அவனின் நான்கு வயது மகள் லயா.

என்ன லயா குட்டி கோபமா இருக்காங்க? அம்மாவை கொஞ்சம் கூப்பிடுங்க அப்பா சீக்கிரம் இன்னைக்கு வேலைக்கு போகணும்.

‘நோ ப்பா அம்மா எனக்கு மட்டும் தான்….’ நானும் சீக்கிரம் ஸ்கூலுக்கு கிளம்பணும், அதனால அம்மா என்னோட பென்சில், புக்ஸ், பேக், யூனிபார்ம் எல்லாம் எடுத்துவச்சிட்டு இருக்காங்க.

என் தங்கமில்ல ‘அப்பா பர்ஸ்’ மட்டும் எடுத்து குடுத்திட்டு போக சொல்லுங்க அம்மாவை….

‘ம்ஹும்……நீங்க பெரியவங்க தானே நீங்களே தேடி எடுத்துக்கோங்க.’ இன்னும் என்னோட மாட்சிங் ஷாக்ஸ் வேற கிடைக்கலை அதை வேற தேடணும்.

அப்ப காபிக்கூட கிடையாதா அப்பாவுக்கு என்று முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கேட்ட ஜீவனிடம், ‘அதிகமா காபி சாப்பிட்டா வைட் ஹேர் வரும்னு அம்மா சொல்லிருக்காங்க,’ அதனால சீக்கிரம் வேலைக்கு கிளம்புங்க என்று சத்தமாக கூறிக் கொண்டே அம்மாவிடமிருந்து வந்த அடுத்த அடுத்த அழைப்பை ஏற்று பள்ளிக்கு கிளம்ப விரைந்தாள் லயா.

இடுப்பில் கையை வைத்து தலையாட்டி சிரித்துக்கொண்டே… “ஹும்ம்…” என்று பெரியதாக பெருமூச்சு விட்டபடி கடிகார முட்களின் வேகத்தில் கலைந்து, அவசர அவசரமாக பர்சையும், கைகடிகாரத்தையும் தேடி எடுத்துக் கொண்டு விரைந்தான் ஜீவன்.

வழியில் கடைத்தெருவில் கவனத்தில் படும்படி தேங்கி சென்ற கூட்டத்தினை கண்டு, புருவத்தை சுருக்கி கூர்ந்து கவனித்த ஜீவனின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்து பின்பு மகிழ்ச்சியில் மலர்ந்தது.

காலை ஏழுமணியளவில் நடைபயிற்சிக்கு செல்பவர்களும், கடை திறப்பவர்களும், தெரு ஓரத்தில் கடை விரிப்பவர்களும் மும்முரமாக தத்தம் வேளைகளில் ஈடுபட்டிருக்க, ஜாக்கிங் சூட்டோடு கையில் பெரிய சாக்கு பை வைத்துக் கொண்டு “கடைக்கு முன் உடைத்திருந்த திருஷ்டி பூசணிக்காயை சிறு துண்டு கூட மிச்சவிடாமல் கவனமாக எடுத்து அதில் போட்டுக் கொண்டிருந்தான் ஜெகன்.”

‘இந்த ஆளுக்கு இதே வேலையா போச்சு, விடிஞ்சா கோணி பையை தூக்கிட்டு வந்திட வேண்டியது, பாவம் பாரேன் கஷ்டப்பட்டு தினமும் இதெல்லாம் செஞ்சிட்டிருக்காரு, இவரை யாராவது காசு குடுத்து வேலைக்கு வச்சிருக்காங்களா என்ன? பார்த்தா அப்படி தெரியலையே, இப்ப கொஞ்ச நாளா தான் இந்த தெருவில கால் வச்சி நடக்க முடியுது’ என்று வித விதமாக வந்து விழுந்த வார்த்தைகளையும், தேங்கி நின்ற ஆச்சரிய பார்வைகளையும் கிஞ்சித்தும் கவனம் கொள்ளாது தன் ஐந்து வயது மகன் மித்ரனோடு சிரித்தபடி உரையாடிக் கொண்டே, அவனின் உதவியோடு வேகமாக சுத்தம் செய்து கொண்டிருந்தான் அந்த கடைத்தெருவை.

ஜெகனை பார்த்துக் கொண்டிருந்த ஜீவனின் கண்களில் மெச்சுதல் தெரிந்தது, முன்பு இருந்த கடைத்தெருவின் தோற்றம் கண் முன்னால் வந்து போனது.

“தற்போது ஒரு சில கடைகளை தவிர, சுத்தமாக நேர்த்தியாக இருக்கும் மற்ற கடைகளின் வாசல்களும், கிழிந்த பாலித்தின் பைகள், சீவிய பழங்களின் தோல்கள், காபி குடித்த பிளாஸ்டிக் கப்புகள் அனைத்தையும் தன் அருகில் வைத்திருக்கும் மூடிய குப்பை கூடையில் சேகரித்துக் கொண்டிருக்கும் நடைப் பாதை கடையினரும் சொன்னது ஜெகனின் ஐந்து வருட விடாமுயற்சியை.”

சட்டமோ, தண்டனையோ மாற்றத்தை கொண்டு வராது, மாற்றம் நம்மில் இருந்து தொடங்க வேண்டும். அதுவே அடுத்த தலைமுறையை முன்னெடுத்துச் செல்லும் என்று எண்ணியபடியே மனம் நிறைந்த புன்னகையோடு தன் கடமையை செய்ய விரைந்தான் ஜீவன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *