காதுள்ள கடவுள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 14,634 
 

நாச்சியார் தனியே வந்திருந்தாள். இருக்கன்குடி ஆறு வெயிலோடிக்கிடந்தது. பனைகளில் அமர்ந்திருந்த குருவி மட்டும் யாரோ தெரிந்தவரை அழைப்பது போல கூப்பிட்டுக்கொண்டு இருந்தது. தொலைவில், ஆற்று மணலில் உறை தோண்டி, தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்தார்கள். ஒதுங்குவதற்குக்கூட நிழலே இல்லாத வெம்பரப்பின் கீழாக, அவள் வேகவேகமாக நடந்துகொண்டு இருந்தாள். பிடறியில் கை வைத்துத் தள்ளுவது போல, சூரியன் கூடவே வந்துகொண்டு இருந்தது.

அவள் நிமிர்ந்து எதையும் பார்க்கவே இல்லை. தன் வீட்டிலிருந்து அவள் அதிகாலையில் கிளம்பியிருந்தாள். இரண்டு நாட்களுக்கு முன்பாக மருத்துவமனையில் இருந்தபோதுதான் இந்த யோசனை வந்தது. ஆனாலும் இருக்கன்குடிக்குப் போய்வருவது என்றால், எப்படியும் நூறு ரூபாய்க்கு மேலாகிவிடும். அதைப் புரட்டுவதற்காக இரண்டு நாள் காத்துக்கொண்டு இருந்தாள். யாரோடும் இதைப் பற்றிப் பேசிக்கொள்ளக்கூட இல்லை.

தனியாக அவள் உள்ளூரில் இருந்த சிவன் கோயி லுக்கோ, ஆஞ்சநேயர் கோயிலுக்கோ போயிருக்கிறாள். ஆனால், பஸ் ஏறி தனியே இப்படி இருக்கன்குடி வரை வருவது இதுதான் முதல் தடவை. டவுன் பஸ் இருக்கன் குடியில் இறக்கிவிட்டபோது எந்தப் பக்கம் கோயில் இருக் கிறது என்றுகூட அவளுக்குத் தெரியவில்லை. மறுகிமறுகி நின்றவளாக, யாராவது கோயி லுக்குப் போகிறவர்கள் வருவார் களா என்று பார்த்துக்கொண்டு இருந்தாள்.

புளிய மரத்தடியில் உட் கார்ந்தபடியே வெள்ளரிக்காய் விற்கும் இரண்டு பெண்களைத் தவிர வேறு ஆட்களைக் காணோம். எப்ப வும் அதிகக் கூட்டம் இருக் கும் என்று கேள் விப்பட்டிருக் கிறாள். ஆனால், இன்று மணி பன்னிரண்டைக் கடந்திருந்தது காரணமாக இருக்கக்கூடும். ஒருவேளை, கோயில் நடை சாத்திக்கூட இருக்கலாம். ஆனாலும் என்ன… நடை திறக்கும் வரை இருந்து சேவித்துவிட்டுத்தான் போக வேண் டும் என்று நினைத்துக்கொண்டாள்.

மணலில் நடக்க நடக்க, சர்வேயர் மனைவியோடு ஒரேயரு முறை இருக்கன் குடிக்கு வந்த ஞாபகம் இருந்தது. அநேகமாக சர்வேயரின் கடைசி மகளின் காது குத்துக்குத்தான் என்று நினைப்பு. அப்போது இன்னும் அதிகமாக பனைகள் இருந்ததாகத் தோன்றியது.

அவள் வெயிலில் நடந்தபடியே சர்வேயர் மனைவியைப் பற்றி நினைத்துக்கொண்டாள். இப்போது எந்த ஊரில் இருக்கிறார்களோ, தெரிய வில்லை. சர்வேயர் மனைவி மட்டு மல்ல… அவளுக்கு தெரிந்த, பழக்கமான பெண்கள் எத்தனையோ பேர் அவள் ஊரை விட்டுப் போய்விட்டார்கள். சிலரது பெயர் நினைவிருக்கிறதே அன்றி, முகம் மறந்து போய்விட்டது. யாராவது அவளை நினைவில் வைத் திருப்பார்களா என்ன?

வெயிலின் ஊடாகவே கோயிலின் கோபுரம் கண்ணில் பட்டதும், நிச்ச யம் மாரியம்மன் நம்மைக் கைவிட மாட்டாள் என்ற நம்பிக்கை நாச்சி யாருக்கு உறுதியானது. கன்னத்தில் போட்டுக்கொண்டபடியே, சுடுமண லில் கால் தாங்கியபடியே கோயிலை நோக்கி வேகவேகமாக நடந்தாள். பனையோரமாக பலூன் விற்கின்ற ஒருவன் யாரைப் பற்றிய கவலையும் இன்றி நின்றபடியே சிறுநீர் கழித்துக் கொண்டு இருந்தான். அது காற்றில் சிதறி, அவன் கால்களின் மீதே வடிந்துகொண்டு இருந்தது.

கோயிலை நெருங்க நெருங்க அவளுக்கு அழ வேண்டும் போலத் தோன்றிக்கொண்டு இருந்தது. மனசை கட்டுப்படுத்திக்கொண்டு, வெறித்த கண்களோடு அவள் நுழைவாசலில் வந்தபோது, தூக்கி எறிந்த இலையில் கிடந்த பொங்கலை ஒரு நாய் தின்று கொண்டு இருந்தது. கோயிலின் நடை சாத்தப்பட்டு இருந்தது. அரசமரத்தடி யில் ஊதாப் பூ போட்ட சேலை கட்டிய ஒரு பெண்ணும், அவளது குடும்பமும் இலை போட்டுச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். தேங்காய், பழம் விற்கும் ஒரு சிறுமி அவளிடம் ‘‘யக்கா! அர்ச்சனை தட்டு வாங்கிக்குங்க!’’ என்று கூப்பிட் டாள்.

நாச்சியார் தயக்கத்துடன் அவளிடம், ‘‘முடி இறக்குறதுக்கு இங்கே ஆள் இருக்கா?’’ என்று கேட்டாள். அந்தச் சிறுமி அவளை ஏறிட்டுப் பார்த்தபடியே ‘‘அந்த மரத்தடியில் பாருங்க, முருகன்னு ஒரு அண்ணன் இருப்பாங்க’’ என்று சொன்னாள். நாச்சியார் வேம்படியை நோக்கி நடந்தபோது, மெலிந்து போன ஒரு ஆள் தனியே பீடி புகைத்துக் கொண்டு இருப்பதைக் கண்டாள்.

அந்த ஆள் புகைச்சலோடு விடா மல் பீடியை இழுத்துக்கொண்டு இருந் தான். அவள் அருகில் வந்தபோது கூட அவன் பீடியை அணைக்காமல், ‘‘யாருக்கு முடி இறக்கணும்?’’ என்று கேட்டான். அவள் தனக்குத்தான் என்றதும், அவன் காரமேறிய எச்சிலை உமிழ்ந்தபடியே ‘‘இருபது ரூவா ஆகும்’’ என்றான்.

நாச்சியார் தன் இடுப்பில் இருந்த சுருக்குப் பையிலிருந்து இரண்டு பத்து ரூபாயை எடுத்து நீட்டினாள். அந்த ஆள் உட்காரச் சொல்லி விட்டு, அடி பைப்பில் தண்ணீர் பிடித்து வருவதற்காக பிளாஸ்டிக் குவளையை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

அவன் உட்கார்ந்திருந்த மரப் பலகையின் அடியில் நிறைய தலை முடிகள் மண் அப்பிக் கிடந்தன. நாவிதன் தலைமழிப்பதற்காகக் கை நிறைய தண்ணீர் அள்ளி அவள் தலையில் தெளித்துத் தடவிவிட்டபோது, அவளது அய்யாவுக்குப் பிறகு அவள் தலையை இப்படி ஆறுதலாகத் தடவிவிட்ட ரெண்டாவது ஆம்பளை இவன்தான் என்று நினைவுக்கு வந்தது. அவள் புருஷன் ஒரு நாளும் அவள் தலையைத் தொட்டுப் பார்த்ததே இல்லை. பிராயத் தில் அவள் தலை நிறையப் பிச்சிப் பூ வைத்திருக்கும்போதுகூட அவளது கணவன் நுகர்ச்சி கொண்டதே இல்லை.

நாவிதன் உச்சியில் இருந்து தலை முடியை மழிக்கத் துவங்கினான். தலை முடி இருப்பதே பல நேரத்தில் அவளுக்கு நினைவில் இருந்ததில்லை. முன்பாவது, அவள் தலைமுடியைக் கற்றையாகப் பிடித்து இழுத்து அவள் புருஷன் முகத் தில் அறைவான். அவன் செத்துப்போன பிறகு கேசத்தைப் பற்றிய நினைப்பு அடி யோடு மறந்து போய்விட்டது. அதுவும் காதோரம் நரையேறி, பிறகு குளிக்கையில் கொஞ்சம் சீயக்காயை அள்ளி தேய்ப் பதைத் தவிர, அதற்கு வேறு சவரட் சணை எதுவும் செய்வதில்லை.

ஆனால், அவள் அழகான கூந்தலுக்கு ஆசைப்பட்டிருக்கிறாள். அதுவும் ருது வான நேரத்தில் அவளுக்குக் கருகருவென அடர்ந்த கூந்தல் இருந்தது. அதை ஆசை ஆசையாக அவள் மயில் ரத்தம் கலந்த எண்ணெய் தேய்த்து வாரிவிட்டிருக் கிறாள். ஆனால், அவளைக் கட்டிக் கொடுத்த வீட்டில் தலைக்குத் தேங்காய் எண்ணெய் வைப்பதை பெரிய பவுசாக பலரும் சொல்லிய பிறகு விளக்கெண் ணெய்யைத் தடவிப் பார்த்தாள். ரெண்டு வருஷத்தில் அந்த ஆசையும் வடிந்து போனது.

நாவிதனின் கை பிடறியை மழிக்க இறங்கியபோது, அவளது மடியிலும் தோளிலும் கற்றை கற்றையாக தலைமுடி கள் விழுந்திருந்தன. அவள் தலைகவிழ்ந்த படியே உட்கார்ந்திருந்தாள். நாவிதனின் அலுமினியக் கிண்ணத்தில் இருந்த தண் ணீரை வெயில் உறிஞ்சிக் குடித்துக்கொண்டு இருந்தது.

பத்து நிமிஷத்துக்குள் அவள் தலையை மழித்துவிட்டு துண்டை உதறி அவன் எழுந்துகொண்டான். நாவிதன் காலடியில் புரண்டு கிடந்த கண்ணாடியை எடுத்து முகம் பார்க்கலாமா என்று நாச்சியாருக்குத் தோன்றியது. ‘அதான் முடியைக் கழித்தாகிவிட்டதே, இனி எதற்கு’ என்று அவளும் எழுந்து நின்றாள். கை அவள் அறியாமலே தலையைத் தடவிக்கொண்டது.

நாற்பது வருஷத்துக்கும் மேலா கக் காப்பாற்றி வந்த தலைமுடியை ஒரே நாளில் இழந்தாகிவிட்டது. சாமிக்குத்தானே தந்திருக்கிறோம் என்று அவளாக ஆறுதல் சொல்லிக் கொண்டாள். நாவிதன் திரும்ப வும் ஒரு பீடியைப் பற்ற வைத்த படியே, ‘‘குளிக்க கிணற்றுக்குத் தான் போக வேண்டும்’’ என்று சொன்னான். அவன் கை காட்டிய திக்கை நோக்கி நடந்தபோது, அவள் தலையை காற்று தன் கைகளால் தடவிக் கூச்சம் உண்டாக்கியது.

அவள் கிணற்றடியில் போய் நின்றபோதுதான், மாற்றுத் துணி கொண்டுவரவில்லை என்று தோன்றியது. கிணற்றடியில் இருந்த தொட்டியில் கலங்கலாக கொஞ்சம் தண்ணீர் கிடந்தது. கூடவே, ஒரு பிளாஸ்டிக் கப்பும் இருந்தது. அவள் அள்ளி அள்ளி ஊற்றத் துவங்கினாள். தண்ணீர் உடம்பில் ஓடத் துவங்கும்போது அவள் அறியாமல் கண்ணீர் பொங்கி வந்தது. உடம்பு எரியத் துவங்கியது. அவள் காலடியில் ஓடும் தண்ணீரைப் பார்த்தபடியே, ‘மாரியாத்தா! உன்னை நம்பிதான் வந்திருக்கேன். நீதான் எங்களைக் காப்பாத்தணும்’ என்று முணு முணுத்துக்கொண்டாள்.

ஈர உடையோடு நாச்சியார், கோயிலை நோக்கி நடந்து வந்த போது, பூ விற்கும் பெண் அவளை நோக்கியபடியே, ‘‘யக்கா! கூட யாரும் வரலையா? இப்படி ஒத்தை யில வர்றீங்க! துண்டு கொண்டு வந்திருக்கக் கூடாதா?’’ என்று அக்கறையாக விசாரித்தாள். நாச்சி யார் அவளுக்குப் பதில் சொல்ல வில்லை. அந்தப் பெண் திரும்பவும் கேட்டாள்… ‘‘யாருக்கு வேண்டுதல்?’’ நாச்சியார் தயங்கித் தயங்கிச் சொன்னாள்… ‘‘என் மருமகன் உடம்பு சரியில்லாமக் கிடக்காக. அதான்!’’

பூ விற்கும் பெண் ஓர் இலந்தைப் பழம் அளவில் சந்தன உருண் டையை அவளிடம் நீட்டியபடியே, ‘‘தலையில தேய்ங்க. இல்லைன்னா சூடு தாங்காது’’ என்றாள். நாச்சியார் ஈரமான சுருக்குப் பையில் விரலை விட்டுத் தேடி, ரெண்டு ரூபா காசை எடுத்தபோது அந்தப் பெண், நாச்சி யாரின் முகத்தை உற்றுக் கவனித்த வளாக, ‘‘யக்கா! உங்க காது அறுந்து, குறைக்காதா இருக்கு. எங்கம்மைக்கு இப்படித்தான் அரைக்காது இருக்கும். பாதியை எங்கப்பன், கம்மலுக்கு ஆசைப்பட்டு தூங்கையில அறுத்துட் டான்’’ என்று வெள்ளந்தியாகச் சொன்னாள்.

நாச்சியாருக்கு அந்தப் பூ விற்கும் பெண் மீது நெருக்கம் உண்டானது. ‘‘பிள்ளைக பள்ளிக்கூடம் போயி ருக்கா?’’ என்று சன்னமான குரலில் கேட்டாள். பூ விற்பவள் தன்னை மீறிய ஆதங்கத்துடன் ‘‘அதை ஏன் கேட்குறீக… அந்த மனுசன் ஒரு வேலை உருப்படியா பாக்க மாட் டேங்கிறாரு. இங்க வந்து கோயில் வாசல்ல உக்காந்து யாவாரத்தை கவனிச்சிக்கோனு சொன்னா கேட்கறதேயில்லை. நான் ஒத்தையில என்ன செய்யறது? நாலு பிள்ளைங்க. கஞ்சி ஊத்தி வீட்ல போட்டு அடைச் சிட்டு வந்திருக்கேன். இனிமே போய்த் தான் அதுகளைப் பாக்கணும். நாளும் பொழுதுமா கோயில் வாசல்லயே கிடக்கேன். ஆனாலும், ஆத்தா நம்மளை சுகப்பட வைக்க மாட்டேங்கிறா. அவளுக்கா ஒரு நாள் மனசு இரங்காமலா போயிரும்! நான் என்ன வீடு வாசல் வேணும்னா கேட்கேன். ஆம்பளை சரியா இருந்தா போதும்னுதானே சொல்றேன்!’’ என்றாள்.

நாச்சியார், ‘‘எல்லாம் சரியாப் போயிரும். பொம்பளை, மனசை விட்றக் கூடாது’’ என்று சொன்னாள். பூக்காரி கண்ணைத் துடைத்தபடியே ‘‘உங்களைப் பாத்தா நல்ல மனசா தெரியுது. வெக்கத்தை விட்டுச் சொல்றேன்… நான் இந்தப் பூவுல ஒரு முழம் பூ தலையில் வச்சிப் பாத்தது இல்லே. வைக்கக் கூடாதுன்னு வைராக்கியமா இருக்கேன். ஒரு நாள் உங்களை மாதிரி நானும் முடியை இறக்கிட்டுப் போதும்டா எல்லாம்னு துடைச்சிட்டுப் போயிரப் போறேன், பாருங்க’’ என்றாள். ‘‘வீட்டுக்கு வீடு இப்படித்தான் இருக்கு. என்ன செய்ய’’ என்று நாச்சியாரும் சலித்துக்கொண் டாள். கோயில் நடை திறப்பதற்கான பாட்டு போடத் துவங்கியிருந்தார்கள். பூக்காரி ஒரு கதம்ப மாலையைக் கொடுத்து சாமிக்குச் சாத்த சொன்னாள்.

நாச்சியார், கோயிலின் பிராகாரத் துக்குள் போனபோது, 20 வயதுப் பெண் ஒருத்திக்கு நெற்றியில் மாவிளக்கு போட்டு, விளக்கு ஏற்றி இருந்தது. அந்தப் பெண் மிகவும் மெலிந்துபோனவளாக இருந்தாள். அவளது அம்மாக்காரி குனிந்து பெண்ணிடம், ‘‘சாமி… வர்ற முகூர்த்தத் திலே கல்யாணம் ஆகணும்னு வேண்டிக்கோடி… காலை ஒடுக்கமா வையி’’ என்று திட்டிக்கொண்டு இருந்தாள். இரண்டு இளவட்டப் பையன்கள் அந்தப் பெண்ணை உற்று நோக்கியபடியே பபிள்கம் மென்றுகொண்டு இருந்தார்கள்.

நாச்சியாரின் தலையில் வைத்த சந்தனம் நிமிஷத்தில் காய்ந்து உதிரத் துவங்கியது. கர்ப்பக்கிரகத்தின் வாசலில் வந்து நின்ற நாச்சியார், நெற்றி தரையில் பட விழுந்து வணங்கினாள். மனதுக்குள்ளாகவே மாறி மாறிப் பிரார்த்தனை செய்துகொண்டாள். யாரும் தனது முணுமுணுப்பைக் கேட்டுவிடக் கூடாது என்பது போல அவள் உதடுகள் மிக மெதுவாக அசைந்தன. பிறகு, அவள் சாமியை வெறித்துப் பார்த்தபடியே நெடுநேரம் எதையோ கண்களால் பேசிக்கொண்டு இருந்தாள்.

பூசாரி, ‘‘யார் பேருக்கு அர்ச்சனை?’’ என்றபோது மட்டும் மருமகன் பெய ரைச் சொன்னாள். பூசாரி திருநீற்றை அள்ளித் தந்தபடியே, ‘‘எல்லாம் நல்லா இருப்பாங்க. இந்தா, பிடி! ’’ என்றதும், ‘‘உங்க வாக்கு பலிக்கட்டும், சாமி!’’ என்றபடியே நாச்சியார் திருநீறு முழு வதையும் நெற்றியில் பூசிக்கொண் டாள். மகளுக்காக ஒரு கவளம் திருநீறு அள்ளி, முந்தியில் முடிந்து வைத்துக் கொண்டாள். பிராகாரத்தில் வந்து உட்கார்ந்தபோது, மனது சற்றே தைரியம் கொண்டது போலவும், யாவும் எளிதாகத் தன்னைக் கடந்து போய்விட்டது போலவும் அவளுக்குள் ஒரு சாந்தி வந்து சேர்ந்தது.

பேரனுக்காக பலூன் விற்பவ னிடமிருந்து ஒரு ஊதல் வாங்கிக் கொண்டு போகலாம் என்று நினைத்து எழுந்து அருகில் போனாள். கயிறு சேர்ந்த ஊதல் ஒன்றை வாங்கிக் கொண்டு, கூடவே ஒரு டஜன் ஊக்கு வாங்கிக்கொண்டாள். ஒரு ரப்பர் பந்துகூட வாங்கலாம் என்று தோன்றி யது. ஆனால், பலூன் விற்பவனிடம் ரப்பர் பந்து இல்லை. ‘பேருந்து நிலை யத்தில் வாங்கிக்கொள்ளலாம்’ என்று நினைத்தபடியே அவள் கோயிலை விட்டு வெளியேறி நடக்கும்போது வெயில் வடிந்திருந்தது.

மொட்டைத் தலையும் திருநீறுமாக அவள் மிக மெதுவாக நடந்துகொண்டு இருந்தாள். கோயிலை விட்டு வெகு தூரம் வந்தபிறகு ஒரு முறை திரும்பிப் பார்த்து மனதுக்குள் பிரார்த்தனை செய்துகொண்டாள். பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது மிட்டாய் கடை யின் கண்ணாடியில் அவளது உருவம் தெரிந்தது. அது அவள் உருவம்தானா என்று சந்தேகமாக இருந்தது. தலையைத் திருப்பிக்கொண்டாள்.

பேருந்தில் ஏறியபோது, ‘மருத்துவ மனைக்குப்போய் மகளிடம் திருநீறு கொடுத்துவிட்டுப் போவதற்குள் எப்படியும் இருட்டிவிடும்; அப்புறம் தன்னால் இட்லிக் கடையை எடுத்து வைத்து நடத்த முடியாது. இன்றைக்கு ஒரு நாள் விட்டுவிட வேண்டியது தான்’ என்று தோன்றியது. பேருந்து வளைந்து திரும்பும்போது, ‘‘தன்னால் முடிந்தது அவ்வளவுதான்! வேறு என்ன செய்துவிட முடியும்?’’ என்று நாச்சியார் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

திடீரென அவளுக்கு, தன் கேசத்தை அந்த நாவிதன் என்ன செய்வான் என்ற கேள்வி எழுந்தது. உதிர்ந்து கிடந்த கேசத்தில் தனது கேசத்தை மட்டும் தனியே அடையாளம் கண்டு கொள்ள முடியுமா என்ன? எல்லாக் கேசமும் ஒன்றுதான் இல்லையா? யோசிக்க யோசிக்க… எதற்கெனத் தெரியாமல் துக்கம் திரும்பவும் அவ ளைப் பற்றிக்கொள்ளத் துவங்கி யிருந்தது. பூக்காரி, அந்த நாவிதன், சர்வேயரின் மனைவி என்று யாவரின் மீதும் நாச்சியாருக்கு துக்கமாக வந்தது. உலகமே இப்படித்தான் இருக்கிறதா?

எங்காவது வழியில் இறங்கிக் கொஞ்ச நேரம் அழுதுவிட்டு, அப்புறம் பஸ்ஸில் ஏறிக்கொள்ளலாம் என்று கூடத் தோன்றியது. அவள் வெறித்த கண்களுடன் சாலையைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். மனதில் மகளின் முகம் தோன்றி அழிந்துகொண்டே இருந்தது.

பிரார்த்தனைக்கு வெளியே…

ஐந்து நாட்களுக்கு முன்பு, நாச்சி யாரின் மூத்த மகள் மீனாவின் கணவன் துரைப்பாண்டி மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு அவளை அடித்து, வலது கையை முறித்ததோடு, மீனாவின் சேலையை உருவி அம்மணமாக்கி அப்படியே கொளுத்திவிடப்போவதாக நாச்சியார் முன்னிலையில் கரைச்சல் செய்த போது, இப்படியரு பயலுக்குப் பெண்ணைக் கொடுத்துவிட்டோமே என்று வேதனைப்பட்டு, தலையில் அடித்துக்கொண்டு புழுதியை வாரித் தூற்றிவிட்டு, தன் மகளை வீட்டுக்குக் கூட்டிப்போய்விட்டாள் நாச்சியார்.

அன்றிரவு முழு போதையில், தன் பெண்டாட்டியை வெட்டியே தீருவேன் என்று தெருவில் கூச்சலிட்ட படி இருந்த துரைப்பாண்டி, பின்னி ரவில் எங்கோ தனது ஆட்டோவை ஓட்டிக்கொண்டு போய் இடித்து, ரத்தக் காயத்தோடு மருத்துவமனை யில் அனுமதிக்கப்படவே, அவனுக் காக நாச்சியாரின் குடும்பமே பகலிர வாக உடனிருந்து வைத்தியம் பார்த்தது. அதன் தொடர்ச்சியாகத்தான், மருமகன் நலனுக்காக தானே முடி இறக்குவது என்று நாச்சியார் முடிவு செய்தது நடந்தேறியது.

இந்தச் சம்பவங்கள் யாவையும் கடவுள் அறிந்திருப்பாரா என்பது தான் சந்தேகமாக இருக்கிறது.

– ஜனவரி 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *