கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 3, 2023
பார்வையிட்டோர்: 5,488 
 
 

மணி பனிரெண்டரை என சுவர்க்கடிகாரம் காட்டிட சபாபதிக்கு டென்ஷன் எகிறியது. ஒன்பதரை மணிக்கு பணம் போட வங்கிக்குச் சென்ற மருமகள் ஜானகியை இன்னும் காணாததால், சோஃபாவில் அமர்ந்திருந்தவர் ஒருவித அவஸ்தையில் நெளிந்து கொண்டிருந்தார்.

வங்கி இருக்கும் தூரமும் குறைவுதான்; சென்று வர டூ வீலர் இருக்கிறது. அதோடு சீக்கிரமாகச் சென்றதால் நிச்சயம் க்யூ வரிசையில் முதலாவதோ அல்லது இரண்டு இல்லை மூன்றாவதாகவோ ஜானகி நிற்க தோதாக இருந்திருக்கும். சலானும் வீட்டிலேயே எழுதி தயாராக இருக்கிறது. வங்கிக்குச் சென்று எழுதவேண்டிய வேலையும் மிச்சம் ! நேராக பணத்தை கவுண்டரில் செலுத்த வேண்டியது, அதன்பிறகு, பாஸ் புக்கை மெஷினில் சொருகி என்ட்ரியை அப்டேட் செய்ய வேண்டியது. இவற்றுக்கெல்லாம் அப்படி ஒன்றும் நேரம் அவ்வளவாகச் செலவாகாது. அப்புறம் ஏன் இவ்வளவு நேரம் என்று புரியவில்லை சபாபதிக்கு.

ஜானகியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டும், எந்த பதிலும் இல்லாது போகவே என்ன ஆயிற்றோ என்ற பீதி வேறு தொற்றிக் கொண்டது .வீட்டில் இருக்கும் வயதானவர் கவலைப்படுவாரே என பயம் கொஞ்சம்கூட இல்லாமல் இருக்கும் அவள் மீது கோபமும் வந்தது.

அப்போது வாசல் பக்கம் சல சலப்பு ஏற்பட திரும்பிப் பார்த்தார் சபாபதி. கதவைத் திறந்த ஜானகி, வில்லிருந்து புறப்பட்ட அம்பைப் போல் சரேலென வீட்டினுள் புயலாய் பாய்ந்தாள். ஒரு வழியாக அவள் வீடு வந்து சேர்ந்தது நிம்மதியாக இருந்தாலும் கோபத்தில் முகம் சிடு சிடுப்பதைக் கண்டு விசனப்பட்டார் சபாபதி.

பணம் போட வங்கிக்குச் சென்றவள் ஏன் இவ்வளவு கோபப்பட வேண்டும் என்று விளங்கவில்லை. ஒருவேளை செல்போனில் வேண்டாத விஷயம் ஏதாவது கேள்விப்பட்டு அதனால் இவள் மூடு அப்செட் ஆகியிருக்குமோ என்ற எண்ணமும் அவர் மனதில் தோன்றியது. மொத்தத்தில், வங்கிக்கு புறப்பட்டுச் சென்றபோது வழக்கமாக இருக்கும் சாந்தம் தவழும் ஜானகியின் முகம் இப்பொழுது முற்றிலும் சகிக்க முடியாத அளவுக்கு மாறிப்போயிருந்தது .

மருமகளாக காலடி எடுத்து வைத்த இந்த பத்தாண்டுகளில் ஜானகி ஒருபோதும் இப்படி இருந்தது இல்லை. எப்பொழுதும் சிரித்த முகம். புருஷனிடம் நல்ல இணக்கம். தனக்கும் (உயிரோடு இருந்தவரை தன் மனைவி சாவித்திரிக்கும்) செய்யும் பணிவிடைகளில் எந்தக் குறையும் இல்லாமை. நல்ல புரிதல் கொண்டு செயல்படும் குணம் ! ‘இவளா இப்போது இப்படி ‘ என்று எண்ணியெண்ணி மாய்ந்து போனார் சபாபதி. அவள் கோபத்திற்கு காரணம் என்னவென்று கேட்கலாமா என நினைத்தவர், பிறகு அந்த எண்ணத்தைக் கைவிட்டு அவளாக சொல்லட்டும் என்று பேசாமல் இருந்துவிட்டார் .

ப்ரிட்ஜைத் திறந்து ஐஸ் வாட்டர் எடுத்துக் குடித்த ஜானகி முந்தானையால் தன் முகம், பிடரியைத் துடைத்துக் கொண்டாள். முகம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியது.

சட்டென தோன்றிய புன்னகையுடன் மாமனாரை பார்த்தாள். தொண்டையைச் செருமிக்கொண்டவள், “மாமா, என்னடா இது ஒரு நாளும் இல்லாத திருநாளாக இன்னிக்கு இவள் இப்படி இருக்கிறாளேன்னு பார்க்கறீங்களா?” என்றதும் நிமிர்ந்து உட்கார்ந்தார் சபாபதி. தன் மனதில் இருப்பதை அப்படியே படம் பிடித்தாற்போல் அவள் கேட்டது மலைப்பைத் தந்தது.

“ஆமாம்மா! இத்தனை நாள் இல்லாத அளவுக்கு இப்போ உன்னோட தோற்றமே கம்ப்ளீட்டா மாறித்தான் போயிருக்கு. இது மாதிரி நீ இருந்து நான் பார்த்தது இல்ல. என்ன காரணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” அதுதான் சபாபதி. எந்த விஷயத்திலும் தன் மூக்கை அநாவசியமாக நுழைக்க மாட்டார். தானாக விஷயம் வெளிப்படும் வரை காத்திருப்பார். சில சமயம் ஆர்வம் தாளாமல் கேட்கத் தோன்றும். ஆனாலும் பொறுமையுடன் ஆர்வத்தை அடக்கிக் கொள்வார். இன்று மருமகளே விஷயத்தைச் சொல்ல கோடிட்டு காட்டியதால் கேட்டு விட்டார். மாமனார் பவ்யமாகக் கேட்டது ஜானகியின் நெஞ்சை விரிவடையச் செய்தது.

ஜானகி , “மாமா, முதலில் லேட்டானதுக்கு காரணம் சொல்றேன். பேங்க் கவுண்டர்ல நான்தான் முதல் ஆளாக நின்னேன். செலானும், பணமும் ரெடியா என் கையில இருந்துச்சு. நேரம் ஆக ஆக கவுண்டர்ல யாரும் வந்து உட்காரல்ல. எனக்கு பொறுமை எல்லை மீறிடிச்சு. என் பின்னால் நின்னுக்கிட்டிந்தவங்க முணங்கிக்கிட்டி ருந்தாங்க. அப்போ திடீர்னு ஸ்பீக்கர்ல சர்வர் வேலை செய்யவில்லை. அதனால் கொஞ்சம் காத்திருக்கும்படி அனவுன்ஸ் பண்ணாங்க. எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியல்ல. ஒருவேளை இன்னிக்கு பூராகவும் சர்வர் சரியாகல்லேன்னா காத்தி ருந்தது வீணாகிடும்ன்னு தோணிச்சு. இருந்தாலும் கொஞ்ச நேரம் இருந்து பார்க்கலாம்ன்னு, பல்லைக் கடிச்சுக்கிட்டு காத்திருந்தேன். அதுக்கப்புறம் சர்வர் சீராகி, பிசினஸூம் தொடங்கிடிச்சு. நான் பணத்தை போட்டுட்டு, அப்படியே பாஸ் புக்கிலும் என்ட்ரியை அப்டேட் பண்ணி வெளியே வரும்போது பனிரெண்டு மணி ஆயிடிச்சு. ” நீட்டி முழங்கினாள்.

“சரிம்மா ! கையில செல்போன் வெச்சிருக்கே. அந்த செல்லுல தகவலை சொல்லியிருக்கலாமில்லையா ! நீ போய் ரொம்ப நாழிகை ஆனதால் என்னவோ ஏதோன்னு பயந்துக்கிட்டிருந்தேன்… “

அப்பொழுதுதான் செல்போனில் மாமனாரிடம் விஷயத்தை சொல்லாதது எத்தனை பெரிய தவறு என்பது சுரீர் என்று ஜானகியின் மர மண்டையில் உறைத்தது. இதை மறந்து போனதுக்காக நொந்து கொண்டாள். தன்னைத் தானே மனதுக்குள் திட்டிக் கொள்ளவும் செய்தாள்.” ஸாரி மாமா !இருக்கற டென்ஷன்ல எனக்கு எதுவும் தோணல்ல. என்னை மன்னிச்சுடுங்க. ” என்று வருத்தத்துடன் சொன்னவள், ” அப்புறம் இன்னொரு விஷயமும் சொல்றேன். ” என்றவள் தொடர்ந்தாள்

பணம் கட்டிவிட்டு வங்கியை விட்டுக் கீழிறங்கியவள் எதேச்சையாக ஆட்டோ டிரைவர் ஜோசப்பை பார்த்திருக்கிறாள்.

ஜோசப் தெரிந்த ஆட்டோ டிரைவர். நகரில் ஓட்டும் சில ஆட்டோ டிரைவர்களில் இவனும் ஒருவன். நேர்மையானவன் ; நாணயமானவனும் கூட . மீட்டருக்கு மேல் ஒரு பைசாகூட வாங்கமாட்டான். ஆட்டோவில் லிமிட்டாகத்தான் ஆட்களை ஏற்றுவான்.

சில சமயம் ஜோசப் ஆட்டோவில் ஜானகியும் பயணம் செய்தது உண்டு. மேடு பள்ளம் பார்த்து எந்த ஜெர்க்கும் இல்லாமல் மீடியம் வேகத்தில் லாவகமாக ஓட்டுவான். பயணம் செய்பவர்களுக்கு எந்த ஒரு அசெளகரியமும் இருக்காது. அதனால், சிலர் வேலை அர்ஜெண்ட் இல்லாத பட்சத்தில், எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருந்து ஜோசப் ஆட்டோவில் ஏறிச் செல்வர். அப்படி காக்க முடியாதவர்கள் வேறு வழியில் லாமல் தங்களுக்குள் நொந்தபடி வேறு ஆட்டோ பிடித்துச் செல்வர். அந்த அளவுக்கு அதீத கட்டுப்பாட்டோடும் , பாதுகாப்போடும் ஆட்டோ ஓட்டும் ஜோசப்பால் ஒரு காரியம் ஆக வேண்டும் என விரும்பினாள் ஜானகி. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல் நினைத்து அவனருகில் சென்று நின்றவள்…

சீமா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மூன்றாவது வகுப்பு படிக்கும் தன் மகன் கவுதமை அடுத்த மாதம் ஒண்ணாம் தேதியிலிருந்து ஆட்டோவில் அழைத்துப் போகமுடியுமா என்று கேட்டிருக்கிறாள்.

ஜோசப் கொஞ்சமும் யோசிக்கவில்லை. ‘ ஏற்கனவே மூன்று பையன்கள் ஆட்டோவில் பயணம் செய்கின்றனர் . நாலாவதாக ஏற்றினால் ஓவர்லோடாகிவிடும்; ஸாரி ‘ என்று பட்டென்று சொன்னவன், மேற்கொண்டு வேறு ஆட்டோ பார்த்துக் கொள்ளும்படி ஆலோசனை வேறு வழங்கியிருக்கிறான்.

ஜோசப் சொன்னால் சொன்னதுதான். மேற்கொண்டு வாதாட முடியாது . தன்னிடம் நியாயம் இருப்பதாக உறுதியாக நம்புகிறவன் ! ஆனாலும் அவன் இப்படி பேசியது தன் முகத்தில் அறைந்தார் போல் இருப்பதாக நினைத்தாள் ஜானகி. தெரிந்தவர், அதனால் ஒத்துக் கொள்வார் என நம்பிக்கை கொண்டிருந்தவளுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது ! சரி, ஸ்பெஷல் ட்ரிப் அடிக்கும்படி அவள் கேட்டுப் பார்த்தும், ‘ அடுத்து உடனே வழக்கமான சவாரி இருப்பதால் அதற்கும் வழியில்லை’ என நிர்தாட்சண்யமாக மறுத்திருக்கிறான்.

அரை நிமிடத்திற்குள் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்து போனது. மேற் கொண்டு எதுவும் பேசவில்லை. ஏற்கனவே வங்கியில் லேட்டானதில் ஏற்பட்ட சலிப்பு ; இப்பொழுது ஆட்டோ கிடைக்காததின் ஏமாற்றம் இவைகள் கோபத்தைஉண்டுபண்ண அந்த இடத்தை விட்டு அகன்றிருக்கிறாள் ஜானகி.

இவ்வளவு நாள் இல்லாமல், திடீரென ஜானகி இப்போது தன் மகனுக்கு ஆட்டோ ஏற்பாடு செய்ய காரணம் இருந்தது. அதாவது, எட்டு வயதாகும், மகன் கவுதமை காலையில், ராகவன் ஆபீஸ் போகும்போது, தன் டூ வீலரில் கொண்டுபோய் பள்ளியில் விடுவதும், மாலை நான்குமணிக்கு ,ஜானகி தன் ஸ்கூட்டியில் அழைத்து வருவதும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

பிரச்சினை என்னவென்றால் , அடுத்த மாதம் ஒண்ணாம் தேதியிலிருந்து ஜானகி டெய்லரிங் கிளாஸில் சேர இருக்கிறாள். திங்கள் முதல் வியாழன் வரை என்று நான்கு நாட்களும் மதியம் மூன்றுமணி முதல் ஆறுமணிவரை வகுப்பு நடக்க இருப்ப

தால் அந்த நான்கு நாட்களும் அவளால் கவுதமை பள்ளியிலிருந்து கூட்டிக்கொண்டு வர முடியாது.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற ராகவனின் தந்தை சபாபதியாலும் முடியாது. மூன்று வருடங்களுக்கு முன்னால் காலமான மனைவியின் இழப்பு அவரை இன்ன

மும் வாட்டிக் கொண்டிருப்பது மட்டுமின்றி, பாழும் மூட்டு வலி வேறு பாடாய் படுத்துகிறது. மூட்டு வலிக்கு தானாகவே கஷ்டப்பட்டு கால்களில் தைலம் தடவிக் கொள்வார் . சில சமயம் முடியாதபோது ஜானகி உதவி செய்வாள். மாத்திரை உட்கொள்வதில் மட்டும் தானாகவே செயல்படுவார். அப்படிப்பட்ட அவரால் தினமும் தெருவில் இறங்கி ஆட்டோ தேடி, கவுதமை கூட்டிக்கொண்டு வருவது என்பது இயலாத காரியம் !

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ஜானகி ஆட்டோ ஏற்பாடு செய்ய பிரயத்னப்படுகிறாள்.

நடந்ததை கூறிமுடித்த ஜானகி, “மாமா, அந்த ஜோசப் ஆட்டோவில மூணு பசங்க தான் ட்ராவல் பண்றாங்க. நல்லா தெரியும். நாலாவதா நம்ம கவுதமை தாராளமா ஏத்திக்கலாம். அப்படி ஒண்ணும் கன்ஜஷனா இருக்காது . மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறார் மனுஷன். இது மட்டுமா? பேச்சோடு பேச்சாக ஓவர்லோடு ஏத்தறதில்லை

ங்குறார். ஏன் மாமா, ஓவர்லோடு ஏத்துற அளவுக்கு நம்ம கவுதம் என்ன அவ்வளவு வெயிட்டாவா இருக்கான்? இல்ல அவன் வெயிட் தாளாமல் ஆட்டோதான் நகராதா? என்ன குதர்க்கமான பேச்சு மாமா இது?” என்றவள் குரலில் படபடப்பு கூடியிருந்தது.

எண்ணிக்கையை வரைமுறை செய்யும் விஷயத்தில் ஜோசப்பை குறை சொல்ல

முடியாது. மூன்று பேருக்கு மேல் ஆட்டோவில் ஏற்ற முடியாது என்கிற அவன் கொள்கை , பாதுகாப்பு நலன் கருதிதான். மேலும் , ‘ஓவர்லோடு’ என்பதை அதே எண்ணிக்கையின் அடிப்படையில் ஜோசப் கூறியிருக்கலாம். இவைகளையெல்லாம் தப்பாக அர்த்தம் கொண்டு ஜானகி இப்படி தன் மூடு அவுட் ஆகும் அளவிற்கு விஷயத்தை எடுத்துக்கொண்டது அவருக்கு விசித்திரமாக இருந்தது. உள்ளுக்குள் சிரிப்பும் வந்தது.

இருந்தாலும் மருமகளாயிற்றே! அதனால் விட்டுக் கொடுக்காமல் அவளை சமாதானம் செய்யும் வகையில், ” விடும்மா. அவன் பேசத் தெரியாம பேசிவிட்டான். அவன் பேச்சை பெரிசா எடுத்துக்காதே. ” என்று கூறியவர்,” கவலைப்படாம போய் ஆக வேண்டியதப் பாரும்மா ! நீ கிளாஸில் சேர இன்னும் நிறைய நேரமிருக்கு. ” ஆறுதலாக பேசிய மாமனாரின் வார்த்தைகளில் சமாதானமாகி அகன்றாள் ஜானகி.

பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஓடும் நான்கு ஆட்டோக்களில் ஜோசப்புடைய ஆட்டோவும் அடங்கும்.

மற்ற மூன்று ஆட்டோக்களிலும் நிறைய பிள்ளைகள் பயணம் செய்வதை ஜானகியே பார்த்திருக்கிறாள். பார்க்கும்பொழுது நெஞ்சு பதை பதைக்கும். மார்பு பட படவென அடித்துக் கொள்ளும்.’ ஐயோ ! இத்தனை பசங்களை இப்படி அடைச்சு வெச்சு ஓட்டிக்கிட்டுப் போறான்களே, ஒண்ணோடு ஒண்ணு இடிச்சிண்டு காயம் ஏற்பட்டால் என்னஆகறது…’ மனசில் அரற்றிக் கொள்ளவும் செய்வாள் !

ஆனால் ஜோசப் பணத்துக்கு ஆசைப்படாமல் மிதமான எண்ணிக்கையில் பசங்களை ஏற்றிச் செல்வான். இதை மனதில் வைத்துக்கொண்டுதான் தன் மகனை ஜோசப் ஆட்டோவில் அனுப்ப ஜானகி விரும்பினாள். ஆனால் விருப்பம் நிறை வேறாமல் போய் விட்டது.

சரி, பள்ளி பஸ்ஸில் அனுப்பலாம் என்றால் அதற்கும் வழியில்லை. ஏனென்றால், அவர்கள் வசிக்கும் குறுகிய சந்தில் பஸ் நுழைய முடியாது. பஸ்ஸை பிடிக்க மெயின் ரோடுக்குச் செல்ல வேண்டும் . தூரம் கொஞ்சம் அதிகம் என்பதால் சின்னப் பையனான தங்கள் மகனை தனியாக அனுப்ப பெற்றோர்க்கு உடன்பாடு இல்லை.

வேலைக்காரியாவது வைத்துக்கொள்ளலாம்; அப்படி வைத்துக்கொள்ளும் பட்சத்தில், வீட்டு வேலைகளையும் சேர்த்து மகனை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பையும் அவளிடம் கொடுக்கலாம் என எண்ணி கணவனிடம் கேட்டுப் பார்த்தாள் ஜானகி. ஆனால் அப்படி வேலைக்காரி வைத்துக்கொள்ள ராகவனுக்கு இஷ்டமில்லாது போகவே தீர்க்கமாய் மறுத்துவிட, அந்த பிரபோசலும் கை நழுவிப் போனது.

அலுவலகத்தில் இருந்து திரும்பிய ராகவனிடம் அழமாட்டாத குறையாக அன்று வங்கி வாசலில் நடந்ததைச் சொன்னாள் ஜானகி. அவளை ஒரு மாதிரி தேற்றி ஆறுதல் சொன்னவன், கூடவே வேறு ஆட்டோ பார்க்கும்படி யோசனையும் கூறினான். கணவன் யோசனையை பட்டும் படாமலும் காது கொடுத்து கேட்டாள் ஜானகி. அந்த அளவிற்கு அவள் நொந்து போயிருந்தாலும், கணவன் கூறுவது சரியெனப்பட்டது.

மறுநாளும் அதற்கு அடுத்த நாளும் ஜானகி ஆட்டோவுக்காக அலைந்தாள். கண்ணில் பட்ட ஆட்டோ டிரைவர்களையெல்லாம் கை தட்டி அழைத்து விசாரித்தும் யாரும் வழிக்கு வரவில்லை. சோர்ந்து போனாள். இருந்தாலும் நம்பிக்கை இழக்கவில்லை . மூன்றாள் நாள் ஆட்டோ ஸ்டாண்டில் தனியாக இருந்த ஜெயசிம்மன் என்ற ஆட்டோ டிரைவர் கண்ணில்பட்டான். உடனே அவனிடம் விசாரிக்க அருகில் சென்றாள்.

ஜெயசிம்மனும் சீமா பள்ளிக்கு பையன்களை கூட்டிச் செல்பவன்தான். லேசுப்பட்ட வன் இல்லை. குறிப்பிட்ட ஓவர்லோடு ஏற்றும் ஆட்டோக்களில் அவனுடைய ஆட்டோவும் ஒன்று ! அவனிடம் கேட்கும்பொழுது, தான் எதிர்பார்க்கும் நேரங்களில் ஜெயசிம்மன் தான் ஃப்ரீயாக இருப்பதாகச் சொன்னவுடன் அவனிடம் தன் மகனைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் கூறினாள். கேட்ட ஜெயசிம்மன் சரி என ஒத்துக்கொண்டான். ஆனால், தனியாள் என்பதால் காலை, மாலை இரண்டு வேளையும் ஸ்பெஷல் ட்ரிப் அடிக்க நாள் ஒன்றுக்கு நூத்தைம்பது ரூபாய் தர வேண்டும் ; அதையும் தினமும் கொடுத்து விடவேண்டும் என கண்டிஷன் வேறு போட்டான் ! சார்ஜ் அதிகம்தான். அநியாயமானதும் கூட. இருந்தாலும் காரியம் ஆகவேண்டுமே என பயந்து மறுப்பின்றி சம்மதம் சொன்னாள் ஜானகி. மாத முடிவில் வீட்டையும், கவுதமையும் வந்து பார்ப்பதாக கூறி ஜெயசிம்மன் அவளிடமிருந்து அட்ரஸ் வாங்கி வைத்துக்கொண்டான்.

ஒருவழியாக , ஆட்டோ கிடைத்ததில் ‘அப்பாடா’ என்று இருந்தது ஜானகிக்கு. தான் டெய்லரிங் கிளாஸில் சேரப் போவது ஏறக்குறைய உறுதியெனப்படதும் நிம்மதி ஏற்பட்டது. விஷயம் அறிந்த சபாபதியும் ராகவனும் ஒரு வழியாக பிரச்னை தீர்ந்ததில் ஆசுவாசப்பட்டனர்.

தையல் வகுப்பில் சேரும் நாள் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வர ஒருவித பரபரப்பு வந்து தொற்றிக் கொண்டது ஜானகியை. தூக்கத்தில் வகுப்பில் சேர்ந்து விட்டது போல் கனவு வேறு ! அந்தக் கனவில் ஏராளமான தையல் மெஷின்களுடன் தான் ஒரு பெரிய , அதுவும் பிரம்மாண்டமான கூடத்தில் இருந்து கொண்டு நிறைய மாணவிகளுக்கு தையல் வகுப்பு நடத்துவது போல் வசீகரமான காட்சி வர சிலிர்த்துக் கொண்டாள். அதே கனவு அடிக்கடி வந்தது. அதுவும் விடியற்காலையில் கனவு வந்ததால், அது பலிக்கும் என்று அதீத நம்பிக்கையும் ஏற்பட்டது. இப்படியாக நாட்கள் இருபத்தைந்தாம் தேதிவரை சுமூகமாகச் சென்றன .

இதனிடையில் ஒருநாள் பக்கத்துத் தெருவைச் சார்ந்த ஜானகியின் தோழி மிருணாளினி என்பவள் செல்போனில் தொடர்பு கொண்டாள். மிருணாளினி ஜானகியின் உயிர் தோழி. இருவரும் சின்ன வயதில் இருந்தே பழகி

வந்தவர்கள். நல்லதுக்கும் கெட்டதுக்கும் ஒன்றாகச் செல்பவர்கள். அவள், ” என்ன ஜானும்மா ! ஒண்ணாம் தேதியிலிருந்து டெய்லரிங் கிளாஸ் போகலாம்தானே ? அதுல ஒண்ணும் டவுட் இல்லையே ?” என விசாரிக்க, ” நோ டவுட் ! கண்டிப்பா போகலாம். ரெடியா இருந்துக்கோ.” என உத்தரவாதமாகச் சொன்னாள் ஜானகி. ” தேங்க்ஸ் ஜானு ! அப்புறம் நாம ஏற்கனவே பேசிக்கிட்டபடி வெஹிகலை யூஸ் பண்ணிக்கலாம். இல்லையா ? ” மிருணாவின் கேள்விக்கு, ” சரி .” என பதில் சொன்னாள் ஜானகி,

டெய்லரிங் கிளாஸில் சேர்ந்த மிருணாளினியிடமும் டூ வீலர் இருக்கிறது. இருவரும் மாறி மாறி ஒரே வண்டியில் போகலாம். ஒரே நாளில் இரண்டு வண்டிகள் எடுத்துச் செல்ல வேண்டாம் என யோசனை கூறியிருந்தாள் மிருணாளினி. அதுவும் நல்லது என பட்டது. எரி பொருள் சிக்கனம் ; அதோடு இருவரும் ஒல்லியாக இருப்பதால் டபுள்ஸ் போவதில் தொந்தரவும் இருக்காது என நினைத்து ஒத்துக் கொண்டாள் ஜானகி. இதைத்தான் செல்போனிலும் உறுதி செய்தாள்.

வழக்கம்போல் அன்று அம்மாவுடன் பள்ளியில் இருந்து ஸ்கூட்டியில் வீடு வந்து சேர்ந்த கவுதம் இறங்கி தன் பையுடன் உள்ளே நுழைந்தான்.

வண்டியைவிட்டு கீழிறங்கினாள் ஜானகி. அப்பொழுது அரக்க பரக்க ஓடி வந்தாள் ஐந்தாறு வீடு தள்ளி இருக்கும் மீனாட்சி என்பவள்.

“ஜானகி, சீமா ஸ்கூல்லேர்ந்துதானே வர்றீங்க….” என்றவள் குரலில் பதற்றம் இருந்தது.

“ஆமாம். என்ன விஷயம் ?”

“சேதி தெரியாதா? ஜெயசிம்மனோட ஆட்டோ வழியில ஒரு பள்ளத்தில் கவிழ்ந்திடிச்சாம். பசங்களுக்கு நல்ல அடியாம், அந்த வழியாகத்தானே வந்தீங்க. நீங்க பார்க்கல்லையா?” பெரிய குண்டைத் தூக்கிப் போட்டாள் மீனாட்சி.

அதிர்ச்சியுற்றாள் ஜானகி. சட்டென சுதாரித்துக்கொண்டு, “நான் மெயின் ரோடு பக்கமா வந்ததால எனக்குத் தெரியாதே !….அது சரி , பிள்ளைங்க எப்படி இருக்குதுங்களாம்?” பதை பதைக்கும் நெஞ்சோடு கேட்டாள்.

“சரியா தெரியல்லீங்க…ஆனால் ஆட்டோ டிரைவர் ஜெயசிம்மனோட வலது கால்ல ஃப்ராக்ச்சராம்.எழுந்து நடமாட மாசக்கணக்காகும்னு பேசிக்கிறாங்க…” என்று கொசுறாக இன்னொரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டாள் மீனாட்சி.

ஜானகி மனசொடிந்துபோய், வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தாள்.

‘பாவம், சின்னஞ்சிறுகள்! இப்படி அநியாயத்துக்கு விபத்தில் மாட்டிக்கொண்டு விட்டதுங்களே! ஆட்டோ டிரைவரின் அசட்டைதான் காரணம்! டிரைவர் உஷாரா யிருந்திருந்தால் விபத்து நடந்திருக்காது’. அடிபட்ட பள்ளிக் குழந்தைகளை நினைத்து வேதனை ஏற்பட்டது. விபத்துக்கு காரணமாயிருக்கும் டிரைவர் ஜெயசிம்மன் மேல் ஜானகிக்கு கோபம் வந்தாலும், விபத்தில் தன் காலை ஒடித்துக்கொண்டதால் அவன் மீது பரிதாபமும் தோன்றியது.

ஆனாலும் கால் குணமாகும் வரை அவனால் ஆட்டோ ஓட்ட முடியாது, கவுதமை அழைத்துச் செல்ல கிடைத்த ஒரு சந்தர்ப்பமும் கை நழுவிப் போய்விட்டதை நினைத்து மனசே ஆறவில்லை ஜானகிக்கு. கனக்கும் நெஞ்சுடன் தொப்பென்று சோபாவில் உட்கார்ந்தாள் ஜானகி.

நாற்காலியில் அமர்ந்திருந்த சபாபதி, மருமகளை விசனத்துடன் பார்த்தார். அவர் பார்வையில் தென்பட்ட கேள்வியைப் புரிந்து கொண்ட ஜானகி, சில வினாடிகள் கழித்து விபத்தைப் பற்றி சொன்னாள்.

கேட்டவருக்கு பற்றிக் கொண்டு வந்தது. , “ஹூம், பணத்துக்காக இஷ்டத்துக்கு பசங்களை மூட்டை மாதிரி அடைச்சு வெச்சு ஓவர்லோடு கணக்கா ஏத்திக்கிட்டு போனா ஏன் விபத்து நடக்காது? அவனோட கால் உடைஞ்சு போனதோட இல்லாம பாவம் பிஞ்சுக் குழந்தைகளும் இல்ல ஆபத்தில் மாட்டிக்கிச்சுங்க. சே..! ” என்றார் பட படக்கும் குரலில்.

“ஆமாம் மாமா ! பிள்ளைங்களை பெத்தவங்க எப்படி துடிச்சுபோயிருப்பாங்க ! அதை நினைக்கறபோது நெஞ்சு கிடந்து அடிச்சுக்கறது… ஆனாலும் ஓவர்லோடு ஏத்திக்கிட்டுப் போற ஆட்டோவில் தங்கள் பிள்ளைங்கள அனுப்பியிருக்கக் கூடாது. பெத்தவங்க மேலயும் தப்பிருக்கு மாமா. அதனாலதான் ஆட்டோ வெயிட் தாளாமல் குடை சாய்ந்து விபத்து நடந்திருக்கு!”

“கரெக்ட் மா ! ஓவர்லோடு ஏத்தற ஆட்டோவில் தங்கள் பிள்ளைகளை அனுப்ப மாட்டோம்னு பெத்தவங்க கறாராக இருக்கணும். அப்போதான் ஆட்டோ டிரைவர்க ளோட அட்டூழியம் ஒழியும். ஹூம் ! இதெல்லாம் நடக்குற காரியமா ; பூனைக்கு யார் மணி கட்டறது ..” என்றவர், ” ஆமாம் , அந்த ஜெயசிம்மன்தானே நம்ம கவுதமை கூட்டிக்கிட்டு போறதாகச் சொன்னே ! இப்போ அவன் கால் ஃப்ராக்ச்சராயிடிச்சு. அவனால் ஆட்டோ ஓட்ட முடியாதே ! மேற்கொண்டு என்ன செய்வதாக உத்தேசம்?”

கவலையுடன் கேட்ட மாமனாரிடம், “என்ன செய்யறதுன்னு தெரியல்ல மாமா” என்றவளின் முகம் பூராகவும் சோகம் அப்பிக்கொண்டிருந்தது.

மருமகளைப் பார்க்க பாவமாயிருந்தது. மெனக்கெட்டு, அலைந்து திரிந்து ஆட்டோ ஏற்பாடு செய்தது வீணாகி விட்டதே என்று மனதுக்குள் புழுங்கினார் சபாபதி. அறைக்குள் இருந்தவாறு தாத்தா கொடுத்த பூஸ்டை குடித்துக் கொண்டிருந்த கவுதம் காதிலும் அனைத்தும் விழுந்தது. தனக்காக அம்மா படுகின்ற அவஸ்தையை நினைத்து கவலையும், வேதனையும் அடைந்தான்.

சிறிது நேரம் கழித்து அலுவலகத்தில் இருந்து திரும்பினான் ராகவன். அவனிடம் காஃபி டம்ளரை தந்த ஜானகி ஏக விசனத்துடன் விபத்தைப் பற்றி சொன்னாள். ஒரே மூச்சில் காஃபியை விழுங்கியபடி கேட்டவனுக்கு ஓரு புறம் பசங்களை விபத்தில் மாட்டிவிட்ட ஆட்டோ டிரைவர்மேல் ஆத்திரம் வந்தது. மறுபுறம் ஜானகி ஆட்டோ விஷயத்தில் ராசி இல்லாதவள் போல் தெரிய சங்கடப்ப ட்டான்.

“மனச தளரவிடாதே ஜானகி. இன்னும் அஞ்சு நாள் இருக்குதுல்ல, பார்க்கலாம்.” என்றான் பரிவுடன். நடப்பதை வைத்துப் பார்க்கும்பொழுது ஒருவேளை ஜானகி டெய்லரிங் கிளாஸில் சேரமுடியாமலும் போகலாம் என்கிற கசப்பான எண்ணமும் தோன்றியது அவனுக்கு.

மறுநாள், ராகவன் அலுவலகம் புறப்படும்பொழுது வழக்கம்போல் கவுதமையும் கூட்டிச் சென்றான். சபாபதி காலை ஆகாரத்தை முடித்துக்கொண்டு தன் அறைக்குள் புகுந்தார். நாற்காலியில் அமர்ந்து கொண்டவருக்கு திடீரென மனைவியின் நியாபகம் வந்தது. அவள் இப்போது உயிரோடு இருந்திருந்தால் எவ்வளவோ செளகரியமாக இருக்கும் என்ற நினைப்பு தோன்றியது. கவுதமை பள்ளியில் இருந்து அழைத்து வர மட்டுமல்ல . தனக்கும் ஒத்தாசையாக இருந்திருக்கும். மூட்டு வலி வரும்பொ ழுதெல்லாம் தரையில் அமர்ந்தபடி பாட்டிலில் இருக்கும் எண்ணெயை இரண்டு உள்ளங்கைகளிலும் ஊற்றிக்கொண்டு கால்களில் தடவி இதமாக நீவி விடுவாள் சாவித்திரி. சில நிமிடங்களில் வலி மறைந்து ஒருவித சுகம் ஏற்படும். அப்படியே கண் மூடி ரசிப்பார்.

கணவர் கண் அசந்துவிட்டார் என நினைத்து சாவித்திரி மெல்ல எழுந்து நகர முற்படுகையில் “சாவி” மென்மையான குரலில் அழைப்பார்.

அப்படியே நின்று ‘ என்ன ‘ என்பதுபோல் பார்ப்பாள் சாவித்திரி. சபாபதி தொடர்ந்து, ” சாவி, உன் கையால் எண்ணெய் தடவி விடும் போது எவ்வளவு சுகமாயிருக்கு தெரியுமா? அதுக்காகவே எனக்கு அடிக்கடி மூட்டு வலி வரணும் போல இருக்கு” என்பார். உடனே சாவித்திரி, “போதும் உங்க அசட்டுத்தனமான பேச்சு ! இந்த மாதிரி தத்து பித்துன்னு உளறாதீங்கோ. ” என செல்லமாகக் கடிந்து கொள்வாள். ஒருநாளைக்கு எப்படியும் காலை, இரவு என இரண்டு வேளையும் சாவித்திரி எண்ணெய் தடவி விடுவது வழக்கம். அதோடு, சாப்பிட்டு கொஞ்ச நேரம் கழித்து மனைவி கொடுக்கிற மாத்திரையும் விழுங்கி வைப்பார் சபாபதி.

தான் இறக்கும் நாள் வரை தன் கணவருக்குச் செய்யும் பணிவிடைகளில் எந்தக் குறையும் வைக்கவில்லை சாவித்திரி. அதோடு , மனைவி இவ்வளவு சீக்கிரம் தன்னை விட்டுப் பிரிந்து விடுவாள் என்று சபாபதி கனவிலும் நினைக்கவில்லை.

அன்று காலை வழக்கம்போல் கணவர் காலில் எண்ணெய் தடவி தேய்த்து முடித்ததும் சாவித்திரிக்கு ஒரு மாதிரியாக இருந்தது. முகம் கோணிப்போக, சட்டென தன் உதடுகளைக் கடித்தபடி எழுந்தவள், கைகளைக் கூட அலம்பாமல் அறைக்குள் சென்று படுத்து விட்டாள். வழக்கத்திற்கு மாறான அவளின் செயல் கண்டு அதிர்ந்து போனார் சபாபதி. பதற்றத்துடன் மனசு தாளாமல் பின்னாடியே சென்றார். ” சாவி , என்னம்மா செய்றது ? அய்யோ ! இந்த மாதிரி நீ இருந்து நான் பார்த்ததே இல்லை. ” புலம்பினார்.

‘மார்பை தன் இரு கைகளாலும் பற்றியபடி, “வலி தாளல்ல. ” என திக்குத் திணறி சாவித்திரி சொல்ல உடனே பட படப்போடு ஆயின்மெண்டை எடுத்து நன்றாக தடவி தேய்த்திருக்கிறார் சபாபதி. அடுத்த சில வினாடிகளில் அவள் முகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால், அவள் கண்களில் தென்பட்ட தீர்க்கமான பார்வை…சபாபதியை சிலிர்க்க வைத்தது. அந்த மாதிரி சாவித்திரி ஒருநாளும் பார்த்ததில்லை. ஏதோ ஒண்ணு நடக்க இருப்பதை சுட்டிக் காட்டுவது போல் தெரிய அரண்டு போனார்.

“ராகவா, ஜானகி ஓடி வாங்களேன். என் சாவித்ரியை வந்து பாருங்களேன்…” தலையில் அடித்துக்கொண்டு கதற, உடனே அவர்கள் பதறியடைத்தவாறு ஓடிவந்தனர்.

அதே தீர்க்கமான பார்வையுடன் சாவித்திரி மரித்துப் போயிருந்தாள். மேஸிவ் ஹார்ட் அட்டாக் ! சற்று நேரம் முன்னால்வரை அந்தப் பார்வையில் இருந்த உயிரோட்டம் அப்பொழுது சுத்தமாக இல்லை. அதன் பிறகு அங்கு ஒரு பிரளயமே ஏற்பட்டது. அது அடங்கி ஒடுங்க பல நாட்கள் ஆயின! கிட்டத் தட்ட மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. இன்னும் சாவித்திரியின் இழப்பு பெரும் சுமையாக சபாபதியின் மனதில் இருந்து வாட்டிக் கொண்டுதான் இருக்கிறது!

கண்களை துடைத்துக் கொண்டார் சபாபதி. போன மாதம்தான் சாவித்திரியின் நினைவு நாள் வந்தது. நாட்கள் யாருக்காகவும் காப்பது இல்லை. பிறப்பு, இறப்பு நிகழும்போது போற்றுதலையும், தூற்றுதலையும் சுமந்து கொண்டு செல்கின்றன. அதனால் நல்ல நாள், கெட்ட நாள் என்ற பட்டப் பெயர்கள் வேறு!

இது இப்படியிருக்க ஜானகியின் நிலையே வேறு! ஒரே வெறுப்பாக இருந்ததால் காவை டிஃபன் சாப்பிட பிடிக்கவில்லை. ஏதேதோ யோசனையில் இருந்தவள் மேல்

விட்டத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அப்பொழுது, மேஜை மீது இருந்த செல்போன் ஒலிக்க எடுத்துப் பார்த்தாள். மிருணாளியிடம் இருந்து கால் வந்திரு ந்தது.

“ஹலோ மிருணா! என்ன விஷயம்?”

“ஜானு ! வந்து ஒரு வருத்தமான செய்தி…அது என்னன்னா, திடீர்னு என்னோட கணவருக்கு பெங்களூர் மாற்றலாகியிருக்கு. அடுத்த வாரமே கிளம்பறார். ஸோ நானும் கூடிய சீக்கிரம் போக வேண்டியிருக்கும். அதனால என்னால் டெய்லரிங் கிளாஸுல சேர முடியாது. இதைச் சொல்லத்தான் ஃபோன்பண்ணினேன். ஸாரி ஜானு ! எனி வே, டெய்லரிங் கிளாஸூல சேரப்போகும் உனக்கு என்னோட அட்வான்ஸ் வாழ்த்துகள். “

‘சரிதான், அங்கேயும் இதே நிலைமையா’ ஜானகிக்கு வேதனை கலந்த சிரிப்பு வந்தது. “வருத்தப் படாதே மிருளா ! நானும் கிளாஸூல சேரப்போறதில்ல..” என்றாள்.

மிரணாளினி திடுக்கிட்டாள். “ஏன், என்னாச்சு ; உன் ஹஸ்பெண்டுக்கும் டிரான்ஸ்பரா ? நீ சொல்லவேயில்லையே !”

“அதெல்லாம் ஒண்ணமில்ல. சரி வர ஆட்டோ கிடைக்கல்லே.”

“அட கஷ்ட காலமே ! ஆட்டோ கிடைச்சாச்சு. ஒண்ணாம் தேதியிலிருந்து வர்றதா சொன்னே. இப்போ கிடைக்கல்லேங்குறே ?”

ஜானகி ஒரு சில வினாடிகளில் எல்லாவற்றையும் சொல்லி முடித்தவள், தொடர்ந்து, ” ஒரு வேடிக்கை பார்த்தாயா ! நீயும் கிளாஸூல சேரல்ல. நானும் சேரப்போ வதில்ல. இதலேயும் நம்ம ஒற்றுமை ஓங்கியிருக்கு !” என்றாள்.

மறுமுனையில் கேட்டுக் கொண்டிருந்த மிருணாளினிக்கு ‘ சே !’ என்று இருந்தது.

அதன்பிறகு சுரத்தில்லாமல் ஏதேதோ பேசிவிட்டு போனை அணைத்தாள். ‘எவ்வளவு ஆசையாகச் சேர்ந்தாள். இப்படி ஆகிப்போச்சே!’ நினைக்கவே கஷ்டமாக இருந்தது.

நேரம் பகல் பனிரெண்டு மணி . அப்போது ” சார்…” வாசலில் குரல் கேட்டது . தன்னறையிலிருந்து மெதுவாக வெளிப்பட்ட சபாபதி, கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்தார். வந்திருப்பது ஜோசப் என்று தெரிந்தது. மெல்ல நடந்து சென்று கதவைத் திறந்தார்

“வணக்கம் சார் ! என்றவனுக்கு பதில் வணக்கம் சொன்ன சபாபதி, ” வா ஜோசப்” என்று தட்டுத் தடுமாறி திரும்பி வந்து சோஃபாவில் அமர்ந்தார்.

சோர்ந்து போய் காணப்பட்டான் ஜோசப். ” எங்கே இவ்வளவு தூரம் ?” என்று விசாரித்தார் சபாபதி .

“மேடம், புள்ளைக்கு ஆட்டோ வேணும்னு கேட்டாங்க. வர்ற ஒண்ணாம் தேதியிலேர்ந்து கூட்டிக்கிட்டு போறேனுங்க . அத சொல்லத்தான் வந்தேன். “

“அப்படியா..!” என்றவர், “அது சரி, மருமகள் அன்னிக்கு ஆட்டோ வேணும்னு கேட்டதுக்கு இடமில்ல அதனால் முடியாதுன்னு நிர்தாட்சணியமா மறுத்துப் பேசினே. இப்போ மட்டும் இடமிருக்குன்னு சொல்றே..எப்படி ஜோசப் ?”

சட்டென சிறுத்துப்போன முகத்துடன்,” சார் அன்னியோட நிலைமை வேற. அதனால் அப்படி மறுத்தேன். இன்னிக்கு அப்படியில்ல. நிலைமை மாறிப்போயிடிச்சு!” என்றான்.

“என்னவோப் போ.” சலித்துக் கொண்டவர் ஜானகியை அழைத்தார். பின் பக்கம் வேலையாக இருந்தவள் மாமனார் குரல் கேட்டு ஹாலுக்கு விரைந்து வந்தாள் . வீடு தேடி வந்திருக்கும் ஜோசப்பை பார்க்க வியப்பாக இருந்தது ஜானகிக்கு.

அவள், என்ன ஏது என்று கேட்கும் முன்னால், சபாபதி சொன்னார்..”அம்மாடி, ஜோசப் , நம்ம கவுதமை ஒண்ணாம் தேதியிலேர்ந்து ஸ்கூலுக்கு கூட்டிக்கிட்டு போறாராம்.”

“அட அப்படியா!” என ஆச்சரியத்தில் முகம் விரிந்தவள், “ஆமாம் , அன்னிக்கு நான் கேட்டப்போ, ஆட்டோவில் இடம் கிடையாது. ஏற்றினால் ஓவர்லோடு ஆகும்னு சொன்னீங்க .இன்னிக்கு ஏற்றினால் மட்டும் ஓவர்லோடு ஆகாதா?” என்று கிண்டலுடன் கேட்டாள்.

“ஆகாதுங்க, ஏன்னா ஒரு புள்ள மிஸ்ஸிங்க . அதோட இடத்தில்தான் உங்க புள்ளைய கூட்டிக்கிட்டு போகப் போறேன்.”

நெற்றி சுருக்கியவள். “அது யார்னு நான் தெரிஞ்சுக்கலாமா ?”

“என்னோட புள்ளதாங்க. ” ஜோசப் தேய்ந்த குரலில் சொல்ல, சபாபதியும், ஜானகியும் ஓருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

பிறகு, ஜோசப் பக்கம் திரும்பியவள் இடுப்பில் கை வைத்தபடி, நமுட்டுச் சிரிப்பு டன்கேட்டாள். ” ஏன், இப்போ படிக்கிற ஸ்கூல் ஸ்டாண்டர்டு சரியில்லேன்னு நினைச்சு வேற ஸ்கூல்ல கொண்டு போய் உங்க பிள்ளையை சேர்த்துட்டீங்களா ?”

“இல்லீங்க….” சட்டென்று ஜோசப் முகம் இறுகிப் போய் கண்கள் கலங்கின. “அவனா போய் சேர்ந்துட்டான்.” என்றான் தழு தழுத்த குரலில்.

“என்ன சொல்றீங்க ?” ஜானகி திடுக்கிட்டாள். சபாபதியும் அதிர்ந்து போனார்.

“ஆமாங்க…” என்றவன் சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தான், ” பதினைஞ்சு நாள் முன்னால ஊர்ல திருவிழான்னு எங்கம்மா புள்ளைய கூட்டிக்கிட்டு போறேன்னாங்க. மூணுநாள் ஸ்கூல் லீவுங்கறதால நானும் புள்ளைய அனுப்பி வெச்சேன். ஆனா…போன அன்னிக்கே .…..அன்னிக்கே…”

திக்கி திணறியவன் , தொடர்ந்து உடைந்துபோன குரலில், ” ஜூரத்துல வீழ்ந்த புள்ள ..எழுந்திருக்கவே இல்ல. …ஒரேடியாக போய் சேர்ந்துட்டான். ” கூறிவிட்டு, தன் இரு கரங்களால் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதான்.

ஜானகி விக்கித்துப் போனாள். ஜோசப்பின் நிலைமை தெரியாமல், தான் அப்படி பேசியதற்காக வருத்தப்பட்டாள். அழும் ஜோசப்பை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தவளுக்கு மனசு வலித்தது. சபாபதியும் அதிர்ச்சியில்

உறைந்து போயிருந்தார்.

பெற்றோருக்கு இன்பச்சுமையாக இருந்தவன் ; தன் தந்தையின் ஆட்டோவுக்குச் சுமையாக இருக்க விரும்பாமல், வியாதியின் சுமையால் மரணமுற்று, கடைசியில் மண்ணுக்குச் சுமையாகிப் போனவனின் அவலம் அவள் நெஞ்சில் சுமையாக இறங்கியது.

“ஜோசப், என்ன நடந்ததுன்னு தெரியாமல் அவசரத்தில் அப்படி பேசிவிட் டேன். மன்னிச்சிடுங்க.” என்றவளின் கண்கள் கலங்கியிருந்தன.

தன் கண்களை கர்சிப்பால் துடைத்துக்கொண்டவன், “பரவாயில்லீங்க. உங்க இடத்துல யாராக இருந்தாலும் இப்படிதான் நடந்துப்பாங்க.. ” தொண்டையடைக்கச் சொன்னான் ஜோசப்.

“ஜோசப், கறிவேப்பிலை கொத்துமாதிரி இருந்த ஒரே பிள்ளையைப் பறி கொடுத்துவிட்டு நிக்கறே. ..நீ எப்படித்தான் தாங்கிண்டிருக்கியோ ! மனசுக்கு கஷ்டமாயிருக்கு . உனக்கு ஆண்டவன்தான் துணையா இருக்கணும். ” வேதனையுடன் சொன்னார் சபாபதி.

ஏறக்குறைய இயல்பு நிலைக்கு திரும்பிய ஜோசப், ” சரிங்க…ஆனது ஆகிப்போச்சு..வர்ற ஒண்ணாம் தேதியிலிருந்து புள்ளைய ஸ்கூலுக்கு

கூட்டிக்கிட்டுப் போறேன். ரெடியா இருக்கச் சொல்லுங்க. ” மறுபடியும் இரு கரம் குவித்து வணங்கினான்.

“ஸாரி ஜோசப் ! என் பிள்ளையை ஆட்டோவில் அனுப்புறதாக இல்லை.”

அழுத்தம் திருத்தமாக ஜானகி சொன்னதைக் கேட்டு சபாபதி திடுக்கிட்டார். திடீரென மருமகளின் அந்த முடிவு அவரை கொஞ்சம் ஆச்சரியப்படவும் வைத்தது ! கேள்விக் குறியுடன் அவளைப் பார்த்தார்.

“ஆமாம் மாமா ! எப்பவும் போல நானே கவுதமை ஸ்கூல்லேர்ந்து கூட்டிக்கிட்டு வரப்போறேன். ஏன்னா நான் டெய்லரிங் க்ளாஸ் சேரப்போறதில்ல.”

“ஏம்மா திடீர்னு இந்த முடிவு ? இதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டே! இப்போ வேணாம்ங்குறயேம்மா !” கேட்டவருக்கு மனசு தாளவில்லை.

“மாமா ! நல்லா யோசனை பண்ணித்தான் இப்படியொரு முடிவு எடுத்திருக்கேன். ” என்றவள் ஜோசப்பை நோக்கித் திரும்பினாள்

” ஜோசப் ! உங்க மகனை இழந்துவிட்ட நிலையிலும் நீங்க கடமையுணர்ச்சியோட நடந்துக்கறதை மனதார பாராட்டுறேன். உங்களிடத்தில் வேற யாராக இருந்தாலும் இப்படி நடந்துக்கமாட்டாங்க. ரியலி நீங்க ஒரு ஜெம் ! ஆனால் நான் என் முடிவை மாத்திக்கேட்டேன். என் மகன் கவுதமை உங்க ஆட்டோவில் மட்டுமில்ல, இனி எந்த ஆட்டோவிலும் நான் அனுப்புவதாக இல்லை. ப்ளீஸ் என்னைத் தவறாக நினை க்காதீங்க. ” என்றாள் ஜானகி.

இருவரையும் மாறி மாறி பார்த்த ஜோசப், ” பரவாயில்லீங்க. உங்களுக்கு சரிப்படலைன்னா விட்டுடுங்க. இதுல நான் தவறாக எடுத்துக்கஒண்ணுமில்லீங்க .வரேன். ” என்று இருகரம் கூப்பி வணங்கிவிட்டு

அகன்றான். தலையைத் தொங்கப் போட்டபடி சென்றவனைப் பரிதாபமாக இருந்தது இருவருக்கும்.

ஜோசப் சென்ற திக்கையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள் பெருமூ ச்சொன்று விட்டாள்.

“அம்மா, தன் மகனை பறிகொடுத்த இந்த இக்கட்டான நேரத்திலும், உன்னை நியாபகம் வச்சுக்கிட்டு ஜோசப் வலிய வந்து தன் ஆட்டோவில கவுதமை ஸ்கூலுக்கு கூட்டிக்கிட்டுப் போறேன்னு சொல்றான். இது நல்ல சந்தர்ப்பம் ! ஆனால் நீ மறுக்கறே. ஏன் இப்படி தடாலடியா ஒரு முடிவு எடுத்தேன்னு எனக்கு தெரியல்லே. .வெண்ணெய் உருகி வரும்போது தாழி உடைந்த கதையாயிருக்கு நீ செய்றது.!” சபாபதி உள்ளூர வருத்தத்துடன் சொன்னார்.

“மாமா ! நான் எடுத்த முடிவுக்கு காரணம் இருக்கு. “

“என்ன காரணம்?”

“தன்னோட இறந்துபோன மகனுடைய இடத்தில் நம்ம கவுதமை கூட்டிக் கிட்டுப் போகப்போவதாகச் சொல்றார் ஜோசப். இல்லையா?”

“………”

“அவர் உண்மையில் நல்ல எண்ணத்துடன் சொல்றதாகவே இருக்கட்டும். ஆனால் எனக்கு வேறமாதிரி தோணறது. “

“என்னம்மா சொல்றே , வேற மாதிரியா?”

“யெஸ், சொல்றதுக்கு கஷ்டமாயிருக்கு மாமா ! அதாவது, கவுதமுக்காக அவர் மகன் இறந்துபோனதுபோல் எனக்கு படறது. பச்சையாச் சொல்லணும்னா, அண்ணன் எப்போ சாவான்; திண்ணை எப்போ

காலியாகும்னு நாம காத்துக்கிட்டு இருக்கற மாதிரி ஒரு சங்கடம் நெஞ்சை அரிச்சிக்கிட்டு இருக்கு. அந்த சங்கடத்தோட நம்ம கவுதமை அவரோட ஆட்டோவில் அனுப்பறது சரியில்லேன்னு நினைக்கிறேன். அதோடு, கவுதம் அவரோட ஆட்டோவில் போகும்போதெல்லாம் இந்த விஷயம் என் மனசுல நெருடிக்கிட்டே இருக்கும். நிம்மதி இல்லாமல் போகும். மனசில்லாமல் எப்படி மாமா அனுப்பறது ? மற்ற ஆட்டோக்களில் அனுப்பவும் வழியில்லை. ஸோ, அல்டிமேட் டிஸிஷன்படி என் டெய்லரிங் கிளாஸ் அட்மிஷன் கேன்ஸல் செய்யறது தவிர வேற வழி தெரியல்ல. அதோடு, கொஞ்ச நேரம் முன்னால் இருந்த இன்ட்ரெஸ்ட் இப்போ சுத்தமா இல்லாம போயிடிச்சு…”

“அம்மாடி ! இது ஒரு சாதாரண விஷயம். இதை பெரிசாக்கி, இவ்வளவு சென்ஸிடிவா எடுத்துக் கொள்ளும் அளவுக்கு நீ போயிருக்க வேண்டாம்னு என் மனசுல படறது. இதோ பாரும்மா ! இது கம்ப்யூட்டர் யுகம். பிசினஸ், சுப காரியங்கள் எல்லாத்தையும் ஆன்லைன்லயே பண்ணிக்கறாங்க. அதுவும் சக்சஸ் ஃபுல்லா முடியறது. வேடிக்கை என்னன்னா, எதுக்கும் நேரம், காலம் பார்க்கிறதே கிடையாது. இந்த மாதிரி சூழ்நிலையில் நீ இப்படி நடந்துக்கறது வேடிக்கையாக இருக்கு !”

“ஸாரி மாமா! தயவுசெஞ்சு நான் ஆர்கியு செய்றதா தவறா நினைக்காதீங்க ! ” என்றவள் தொடர்ந்தாள். ” நீங்க சொல்ற மாதிரி கம்ப்யூட்டர்ல பிசினஸ்,சுப காரி யங்கள் செய்றபோது நேரமும் காலமும் பார்ப்பது, இல்ல பார்க்காமல் இருப்ப துங்குறது அவங்க அவங்களோட இஷ்டம் ! ஆனால், நேரடியா செய்யற போது நேரமும் காலமும் பார்க்கறோமில்லையா ? உதாரணத்திற்கு நாம் சில நல்ல காரியங்கள் செய்யும் போது ராகுகாலம், எமகண்டம் பார்க்குறோம், வெளியே போகும் போது சகுனமும் பார்க்குறது நம்ம வழக்கமா இருக்கு . அது மாதிரிதான் நான் செய்யறதும் ! இதுல என்ன தவறு இருக்குன்னு எனக்குத் தெரியல்ல. “

“நல்ல மருமகள் அம்மா நீ ! ராகு காலம், எமகண்டம் , சகுனம் இதெல்லாம் பார்க்கறத நாங்க விட்டொழிச்சு எவ்வளவோ நாள் ஆயிடிச்சு. நாம நாமன்னு எங்களையும் உன்னோடு சேர்த்துக்கிறியே !”

“ஸாரி மாமா ! பேச்சோடு பேச்சா வார்த்தைகள் வந்திடிச்சு. ” அசடு வழியச் சொன்னாள் ஜானகி.

“ஒரு விஷயம் ! உன் பையனை ஆட்டோவில் அனுப்புவது பத்திதான் பேச்சு. இதுல நல்ல நேரம், கெட்ட நேரம் எங்கேர்ந்து வந்தது ?”

“மாமா ! இறந்து போன பையன் இடத்தில் கவுதம் போகவேண்டியிருக்கு. அது நல்லதாகப் படல்லையே ?”

“நீ பேசறது சரியில்லை ஜானகி ! நல்லா யோசிச்சுப் பாரு. அந்த இடம் காலியா இருக்கப் போறதில்ல. அந்த இடத்தில் வேறு யாரோ ஒரு பையன் நிச்சயம் போகத்தான் போறான். அது உன் பிள்ளையாக இருக்கட்டுமே ! அதோடு நீ ஆசைப்பட்ட படி டெய்லரிங் கிளாஸூல சேராதத நினைக்கறபோது கொஞ்சம் கஷ்டமாயிருக்கு. உன் முடிவை மாற்றிக்கொள்ளக் கூடாதா ?”

மனமுருகி கேட்டுக்கொண்ட மாமனாரை கனிவோடு பார்த்தவள், ” எது எப்படி நடக்

குமோ அது அப்படி நடந்தே தீரும் மாமா. எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சுக்கவே

ண்டியதுதான் !” எனக் கூறிவிட்டு அகலும்பொழுது, ” கொஞ்சம் நில்லும்மா ..” என்றதும் நின்றாள் ஜானகி.

“நீ விருப்பட்டு நல்ல நேரம் பார்த்து டெய்லரிங் கிளாஸூக்கு பணம் கட்டியிருக்கே. ஒரு வழியா காரியம் சக்சஸ் ஆகும்போது நீயாக வேணாம்ங்குறே. இது உனக்கு முரண்பாடா தெரியல்லியா ? அப்படியிருக்கும் பட்சத்தில் எதுக்கும் நல்ல நாள், நல்ல நேரம் பார்க்க வேண்டிய அவசியமில்லையே ! ” நெத்தியடிகளாக வந்த வார்த்தைகள் ஜானகியை யோசிக்க வைத்தன. அதே நேரம், மாமியார் உறிரோடு இருந்தபோது ஒருநாள் சொன்ன அந்தச் சம்பவம் ஜானகியின் நியாபகத்தில் வந்தது.

படிப்பு முடிந்த கையோடு ராகவனுக்கு ஒரு ஐ,டி, கம்பெனியில் இருந்து பர்சானல் மேனேஜர் போஸ்டுக்கான இன்டர்வியூ கார்டு வந்திருந்தது. கை நிறையச் சம்பளம் கிடைக்கும் நல்ல உத்தியோகம். அதனால் இன்டர்வியூவில் தேறி உத்தியோகத்தில் மகன் அமரவேண்டுமே என்ற நோக்கத்தில் சாவித்திரியும் சபாபதியும் நல்ல நேரம் பார்த்தனர். நல்லபடியாக சகுனமும் பார்த்து மகனை அனுப்பி வைத்தனர்.

ஆனால், ஒருமணி அவகாசத்தில் ராகவன் வீடு திரும்பி விட்டான். அந்தக் கம்பெனியில் உயர்ந்த போஸ்டில் இருந்த ஒருவர் திடீரென்று மாரடைப்பால் காலமாகிப் போனதால் இன்டர்வியூ கேன்சலாகிவிட்டது என ராகவன் சொல்ல அவனது பெற்றோர் திகைத்தனர்; நல்லபடியாக சகுனம் பார்த்து அனுப்பியும் காரியம் கைகூடாமல் போனதை எண்ணியெண்ணி மாய்ந்து போயினர். இந்த நிகழ்வு நிச்சயம் தன் பெற்றோரின் மனதை மாற்றும் என உறுதியாக நம்பினான், சகுனம் பார்ப்பது, மற்றும் ராகுகாலம் எமகண்டம் பார்ப்பதில் விருப்பம் இல்லாத ராகவன்.

அடுத்த வாரமே, அதே கம்பெனியில் இருந்து அதே பர்சானல் மேனேஜர் போஸ்டுக்கு மறுபடியும் இன்டர்வியூ கார்டு வந்தது. இந்தத் தடவை பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு தெருவில் இறங்கியவன் தன் டூ வீலரை எடுத்துக்கொண்டு எதிரில் வருவது யார் என்பது கூட தெரியாமல் பறந்தான். மகன் போகுற திக்கில் வந்து கொண்டிருந்த ஆளைக் கண்டு முகம் கோணிப்போன சாவித்திரி, ‘ கர்மம் கர்மம் ; நல்லவிதமா சகுனம் பார்த்தே காரியம் விளங்கல்லே. இப்போ கெட்ட சகுனம் பார்த்துட்டுப் போறானே ! போகுற காரியம் உருப்படியா நடக்குமா ‘ தன் தலையில் அடித்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தாள். சபாபதியும் மகனின் செய்கையை எண்ணி வருத்தப்பட்டார்.

ஆனால் இன்டர்வியூவில் தேறி, வேலையிலும் சேர்ந்தான் ராகவன். அதன்பிறகு அவன் பெற்றோர் சகுனம் பார்ப்பது; ராகு காலம் எமகண்டம் பார்ப்பது; இவற்றில் எல்லாம் நம்பிக்கை போனதால், இந்த பழக்கங்களையெல்லாம் விட்டொழித்தனர். அந்த வீட்டில் மருமகளாக நுழைந்த ஜானகியை அவர்கள் வற்புறுத்தவில்லை. அவள் பாட்டுக்கு தன் புகுந்த வீட்டார் கைவிட்ட பழக்க வழக்கங்களை மேற்கொண்டுதான் வருகிறாள்.

அதன்படிதான் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து தன் புருஷனுடன் சென்று, டெய்லரிங் வகுப்பில் சேர பணம் கட்டினாள் ஜானகி. ஒரு வழியாக ஜோசப் வந்து கேட்டதும் ஒத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படி ஒத்துக் கொள்ளாமல் தன் மகனை ஜோசப் ஆட்டோவில் அனுப்பக் கூடாது என்ற முடிவு எடுத்தது சரியில்லை என நினைத்தாள் ஜானகி. மாமனார் கூற்றுபடி தான் இந்த விஷயத்தை தேவையி ல்லாமல் சென்ஸிடிவாக எடுத்துக் கொண்டதும் தவறு என பட்டது. மேலும், மாமனார் கூறியது நினைவில் வந்தது. ‘ அந்த இடத்தில் வேறு யாரோ ஒரு பையன் போகத்தான் போறான். அது உன் பிள்ளையாக இருக்கட்டுமே ‘ அடிக்கடி இந்த வார்த்தைகள் அவள் மனதில் சுழன்றடித்தன. இது மட்டுமல்ல. மாமனார் கடைசியாக சுட்டிக்காட்டிய தன்னுடைய முரண்பாடான செயலும் நியாபகத்தில் வந்தது. இவைகள் எல்லாம் மெல்ல மாற்றத்தை உண்டு பண்ணின. கடைசியாக, மகன் ஜோசப் ஆட்டோவில் போனால் ஒன்றும் குடி முழுகிப் போகாது என்ற எண்ணம் தோன்றியது.

மறுநாள் மாமனாரிடம் தான் எடுத்த மாற்று முடிவு பற்றி சொன்னவள், ஜோசப்பை காண்டாக்ட் பண்ணி விஷயத்தைப் பக்குவமாக எடுத்துச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டாள். நேற்று வேண்டாம் என்று மறுத்துவிட்டு இன்று கேட்டால் ஒத்துக் கொள்வானா ஜோசப் ? என சந்தேகப்பட்டார் சபாபதி. அதே சமயம் மருமகள் வழிக்கு வந்ததால், முயன்று பார்த்துவிடலாம் என்று எண்ணி உடனே ஜோசப்பை தொடர்பு கொண்டு பேசினார்.

மறுமுனையில், காது கொடுத்துக் கேட்ட ஜோசப் ஒரு கணம் மவுனம் காத்தான். பிறகு, வாய் திறந்து பேச ஆரம்பித்தான். அவன் பேச பேச சபாபதியின் முகம் மாறிக்கொண்டே வந்தது. பதில் எதுவும் சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார் . சில வினாடிகளில் பேசி முடித்தான் ஜோசப். செல்போனை ஆஃப் செய்து விட்டுத் திரும்பினார் மருமகளை நோக்கி.

“மாமா என்ன சொல்றார் ?”

பெருமூச்சொன்று விட்டார் சபாபதி. பிறகு வாய் திறந்தார். ” நேத்து நீ ஆட்டோ வேணாம்னு சொன்னது ஜோசப்புக்கு வருத்தமாயிருந்ததாம். ஆனாலும் மனசு மாறி சாயந்தரம் கூப்பிடுவேன்னு எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருந்தானாம். இன்னிக்கு நீ எடுத்த முடிவை நேத்து சாயந்தரத்துக்குள் எடுத்திருந்தேன்னா நல்லா இருந்தி ருக்கும்….”

“சரி, இப்போ என்னதான் சொல்றார்?” கொஞ்சம் எரிச்சலுடன் கேட்டாள் ஜானகி.

“நேத்து சாயந்தரம் வரை உன் கிட்டேர்ந்து ஃபோன் வராததாலே, அதுக்கப்புறம் , அடுத்ததாக லிஸ்டில் இருக்கும் கோமதியோட வீட்டுக்குப் போய் அவங்க பையனைக் கூட்டிக்கிட்டுப் போறதா வாக்கு கொடுத்துட்டானாம் ஜோசப் ! ஸோ

பழைய குருடி கதவைத் திறங்குற கதைதான். ஆட்டோவில் நோ ப்ளேஸ்ங்குறான்.”

“பரவாயில்லை மாமா ! ” என்று வருத்தமுடன் கூறிவிட்டு நகர்ந்த ஜானகி, ‘ஹூம் ! அவரா வந்து கேட்டப்போ ஏதோ ஒரு டெக்னிக்கல் ரீசனை சாக்காக வெச்சுக்கிட்டு மறுத்தேன். இப்போ அவர் ஒரு ஜெனியுன் ரீசனோட மறுக்கிறார். ஆக மொத்தம் இது இரண்டாவது தோல்வி ! ஆனால் இந்தத் தோல்வி நானாக தேடிக்கிட்டது. இதை நான் ஏத்துக்க வேண்டியதுதான்’. மனதில் வேதனையுடன் நினைத்துக் கொண்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *