கண்ணில் படாத காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 16, 2020
பார்வையிட்டோர்: 14,256 
 

டெலிபோன் மணி அலறியது.

சோபாவில் சுகமாகக் கிடந்த கானப் பிரியனின் மனம் பதறியது. சில தினங்களாகவே அவருக்கு டெலிபோன் மீது ஒருவித பயம் ஏற்பட்டிருந்தது. அதன் மணிச் சத்தம் அவர் ஆசையைத் தூண்டுவதாகவும் இருந்தது.

கானப்பிரியன் அவர் புகழ் பெற்ற நடிகர் என்பது ரொம்பப் பேருக்குத் தெரிந்திருக்கும் – இதைத் தனது வாழ்க்கையில் குறுக்கிட்டுள்ள விசித்திர அனுபவமாகவே கருதினார். அதனால் தான் அவர் அதற்கு முடிவு கட்டி விடவோ, அல்லது அதை அலட்சியப்படுத்தி ஒதுக்கிவிடவோ விரும்பவில்லை. சுவை மிகுந்த இந்த நாடகம் எப்படி வளர்கிறது என்று தான் பார்க்கலாமே எனும் ஆசை அவருடைய உள் மனசின் அச்சக் குறுகுறுப்பை அமுக்கிவிட்டு மேலோங்கி நின்றது.

இப்பொழுது கூட அப்படித்தான், மணி அலறியதும், அவள் தான், வேறு யாராக இருக்க முடியும்? இந்த வேளை கெட்ட வேளையிலே நம்மைக் கூப்பிட்டுப் பேசவிரும்புவது” என்று அவரது மனம் முனங்கியது. போனைக் கையில் எடுக்காமலே இருந்துவிடலாமே என்று எண்ணினார். ஒரு கணம். நமக்கும் பொழுது போகவேண்டுமல்லவா! தமாஷாக இருக்குமே அவள் பேசுவது!” என்ற நினைப்பும் எழுந்தது அவருக்கு.

அவர் திடமான முடிவுக்கு வருவதற்குள் டெலிபோன் மணி அலறித்தள்ளிவிட்டது. இனியும் காலதாமதம் செய்வது சரியல்ல என்று கருதி அவர் போனை எடுத்தார். ஹல்லோ என்று இயந்திர ரீதியில் குரல் எழுப்பிய வாய், “யாரது?” என்றும் கேட்டு வைத்தது.

“வணக்கம். நடிகர் ஸார்! நான்தான் அழைக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?” – எங்கோ இருந்து வந்த அந்த ஒலித் தொடர் கனவுக்குரல் போல் அவர் காதுகளில் ரீங்காரம் செய்தது.

“தினம் எவ்வளவோ குரல்களைக் கேட்கிறேன். யார் யாரோ கூப்பிடுகிறார்கள். என்னென்னவோ பேசுகிறார்கள், யாரை அல்லது எதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடிகிறது? என்று லெக்சர் அடித்தார் அவர்.

ஊம். உங்களுக்கென்ன யோகவான். கானப்பிரியர் என்றால் சும்மா தானா கலை உலக ஜோதி நடிப்பு உலக நட்சத்திரம் ஆகாகா” என்று நீட்டி நீட்டிப் பேசியது மறுமுனைக் குரல்.

“நீ யார்? அவசரமாக என்னைக் கூப்பிடுவானேன்? முதலில் அதைச் சொல்லு” கானப் பிரியனின் குரலில் கரகரப்பு தட்டியது.

‘உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இன்சுவைக் கீதம் பொழியும் கானப் பிரியர் அவர்களே வாழ்க இன்னுமா என் குரல் உங்களுக்குப் பிடிபடவில்லை?”.

“தினசரி திடீர் திடீரென்று தொல்லை கொடுக்கத் துணிந்திருக்கிற பீடை சனியன்- தரித்திரம் ஏதோ ஒன்று…”.

அவள் எரிந்து விழுவாள்; அல்லது கோபமாக விலகிவிடுவாள் என்றுதான் கானப்பிரியன் எண்ணினார். ஆனால் அவர் காதில் பாய்ந்த ஒலி அவருக்குத் திகைப்பையே தந்தது.

“கானப்பிரியருக்கு அவசரம் போலும், இராதா பின்னே ? கொஞ்சிடக் கோலமயில் ஒருத்தி அருகே காத்திருந்தால், வெறும் பேச்சுப் பேசுகிறவர்கள் மீது….”

“நான் சென்ஸ். ஷட் அப்!” என்று கத்தினார் அவர். அதனால் கூட அவளது தவறான யூகம் வலுப்பெறுமே அல்லாது கரைந்து போய் விடாது என்ற உணர்வு வரவும் அவர் பேசினார். “நீ நினைப்பது தப்பு. இங்கே யாருமே யில்லை, சினிமாவை அதிகம் பார்த்துப் பார்த்து அநேகருடைய மூளையே கெட்டு விட்டதாகத் தோன்றுகிறது. இல்லாததை எல்லாம் கற்பனை செய்து கொண்டு கதைக்கத் தொடங்கிவிடுகிறார்கள்!”

“இல்லாதது ஒன்றுமில்லை. இன்று காலையில் உங்களுடன் காரில் ஒருத்தி வந்தாளா இல்லையா? செம்பட்டு போர்த்திய சொகுசுக்காரி. தேவமோகினி படத்தில் “என் இச்சைக்குரிய பச்சை மயிலே துள்ளி ஓடும் புள்ளி மானே! கூவத் தெரியாக் குயிலின் குஞ்சே!” என்றெல்லாம் நீங்கள் புலம்பினீர்களே அந்த உளறலை ஏற்றுக்கொண்டு சொக்கிப்போன குரங்குதானே இன்று உங்கள் அருகில் இருந்தது? சொல்லுங்கள் ஸார்!”

“பொறாமைப் பிண்டம்!” என்று முணுமுணுத்துவிட்டு போனை வைத்தார் கானப்பிரியன். இவள் யார்? யாராகத்தான் இருப்பாள் இவள்? ஒரே கேள்வியை ஒன்பது விதமாக விட்டெறிந்து வில்லடிக்கத் தொடங்கியது அவர் மனம். அவள் யாராக இருக்கும் என்பது தான் அவருக்குப் புரியவில்லை .

அவள் யாராகவும் இருந்து தொலையட்டும் என்னைவிட அவளுக்குப் பல சௌகரியங்கள் இருக்கின்றன. அவள் என்னைத் தெரிந்து வைத்திருக்கிறாள், அது மட்டுமல்ல , என்னை அடிக்கடி பார்க்கும் வசதியும் அவளுக்கு இருப்பதாகத் தோன்றுகிறது” என்று எண்ணினார் அவர்.

“செச்சே! நாம் அறியாமலே, நமக்குத் தெரியாத நபர் ஒருவர் நம்மைக் கண்காணித்துத் திரிவது நமக்கு உற்சாகம் அளிக்கும் விஷயம் இல்லைதான்” என்ற நினைப்பு அவர் உள்ளத்தில் மிதந்தது.

“ப்சர் ! அதுக்கு நாம் என்ன பண்ணுவது?” என்று அலட்சியப்படுத்த முயன்றார் அவர். ஆயினும் எவளோ ஒருத்தியான அவளை அப்படி அலட்சியப் படுத்திவிட இயலவில்லை அவரால்.

அவள் திடுமெனப் பிரவேசித்த பூதம் போல்தான் தோன்றினாள் அவருக்கு ஒரு நாள் திடீரென்று டெலிபோன் அவரை அழைத்தது. வழக்கமான அசிரத்தையுடன் கானப்பிரியன் பேசத் தொடங்கினார். ஆனால் காதைத் தொட்ட பேச்சின் சுவை அவர் உள்ளத்தில் மகிழ்வை விதைத்தது. புகழ்ந்து பேசப்படுகிறவருக்கும் புகழ் மொழி கசந்தா கிடக்கும்? அதிலும், யார் எனத் தெரியாத அந்நியர் – அதிலும் ஒரு பெண் ! அவள் யுவதியாகத்தான் இருக்க வேண்டும் – பேசும் புகழ்ச்சி “இன்பத் தேன்” ஆக வந்து பாய்ந்தது அவர் செவியில் அது ஆச்சர்யமில்லையே!

“உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் ரசிகர்கள் இருக்கலாம். இருந்தாலும் என்ன? உங்கள் பாட்டுத் திறத்தாலே நீங்கள் என் உள்ளத்தையும் கவர்ந்துவிட்டீர்கள். உங்கள் அழகு சூரிய ஒளி மாதிரி அதனால் நானும் சூரியகாந்திப் பூ மாதிரி ஆகிவிட்டேன்…..

இப்படிப் பேசிய குரல் சினிமா பார்த்துப் பார்த்து “பித்தியிலும் ளபித்தி பெரும் பித்தியாகி விட்ட ஒரு யுவதியினுடையது தான் என்று தீர்மானித்தார் அவர். அவள் நல்ல ரசிகையாகத்தான் இருக்க வேண்டும்; இலக்கியம் – கலை முதலியவைகளில் பற்றுதல் கொண்டு பொழுதை இனிமையாகக் கழிப்பதில் ஈடுபட்டவளாக இருக்கலாம் என்று அவர் நினைத்தார்.

மறுநாள் அவள் அதே நேரத்துக்கு அவரை போனில் அழைத்துப் பேசினாள். “உங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதாக அறிகிறேன். உங்கள் மனைவி பாக்கியம் செய்தவளாகத்தான் இருக்கவேண்டும்… ஆமாம், நடிகர் ஸார். ரொம்ப காலமாக எனக்கு ஒரு சந்தேகம், நீங்கள் நடிக்கிற படங்களில் எல்லாம் காதல் காட்சிகள் மிகப் பிரமாதமாக இருக்கின்றன. ஒடுவதும் பிடிப்பதும், விலகிச் செல்வதும் தேடிக் காண்பதும், சிரிப்பும் விளையாட்டும்…ஆகா! எவ்ளவு இனிமை நிறைந்த விளையாட்டு! உங்கள் காதல் மனைவியோடும் நீங்கள் இப்படி விளையாடி மகிழ்வது உண்டோ ? என்று அவள் கேட்டாள்.

அவருக்குக் கோபம் வந்தது. “என்ன வேடிக்கையான பெண் இவள்!” என்ற எண்ணத்தினால் சிரிப்பும் எழுந்தது. “குறும்புத்தனமாகக் குறுக்கிட்டு வம்பளக்கும் நீ யார்?” என்று கேட்டார் அவர்.

“அருமையான சந்தர்ப்பம். அடாடா! நழுவ விட்டுவிட்டீர்களே! நிலவு செயும் முகம் படைத்த நேரிழையே, நீ யாரோ என்று புதுநிலவு படத்தில் நீங்கள் அற்புதமாகப் பாடினீர்களே, அதையே இப்பொழுதும் பாடியிருக்கலாமே!” என்றாள் அவள்.

“எனக்காக ஒரு பாட்டுப் பாடுங்களேன்” என்றும், “காதல் தீஞ்சுவை நிரம்பிய வசனங்கள் சிலவற்றைப் பேசி என்னை மகிழ்விக்கக்கூடாதா, அன்பரே!” என்றும் அவள் வெவ்வேறு சமயங்களில் கெஞ்சினாள்.

அவள் யார்? அவள் எங்கிருக்கிறாள்? இதே கேள்விதான் அவர் மனசை அரித்தது.

“என் குரல் – நான் எங்கிருந்து பேசினாலும் – உங்களுக்குப் பிடிபடுகிறதா?” என்று ஒரு தடவை அவள் கேட்டாள்.

போன் மூலம் வருகிற குரலைச் சரியாகப் புரிந்து கொள்ளும் திறமை எனக்குப் போதாது என்றே தோன்றுகிறது. ஒரே குரல் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு தினுசாகத் தொனிப்பது போல் எனக்குப் படுகிறது என்றார் அவர்.

“நான் எங்கிருந்து பேசுகிறேன் என்று ஆராய்ச்சி பண்ணும் ஆசை இருந்தால் சொல்லி விடுங்கள்” என்று அவள் ஒரு சமயம் அறிவித்தாள்.

“ஏன்? என்று அவர் கேட்டதும் அவள் கலகலவெனச் சிரித்தாள். “நான் ஒரே இடத்திலிருந்து பேசுவதில்லை. எனக்கு அநேக சிநேகிதிகள் இருக்கிறார்கள். பலர் வீடுகளில் போன் இருக்கிறது. நான் லேடீஸ் கிளப்பிலிருந்தும் பேசுவது உண்டு” என்றாள்.

“உன் பெயர் என்ன?” என்று அவர் விசாரித்தார்.

என்ன பெயராக இருந்தாலென்ன, நடிகர் ஸார்! – நாடகமே உலகம். உங்கள் தொழில் மட்டும்தானா நடிப்பு மயமானது? இல்லையே. உங்கள் வாழ்க்கை கூட நடிப்பு நிறைந்தது தான்… ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு பெயரால் ஒரே பெண்ணை அழைத்துப் பழக்கப்பட்டவர்தானே நீங்கள் ! என்னையும் ஏதாவது ஒரு பெயரால் கூப்பிடுங்களேன்!’

உனக்கென்று ஒரு பெயர் இருக்குமே, அது என்ன? அதைச் சொல்லேன்.”

“புஷ்பா என்று கூப்பிடுங்கள். நான் ஊம் என்று குரல் கொடுக்காவிட்டால் அப்புறம் கேளுங்கள்.”

“அப்படியானால் உன் பெயர் புஷ்பா இல்லை?”

“உங்கள் ஒளியால் கவர்ச்சிக்கப்படும் புஷ்பம் தான் நான்!”

“இந்த விளையாட்டு உனக்கே நன்றாகப் படுகிறதா, புஷ்பா?”

“தேங்கஸ் மிஸ்டர் கானப்பிரியா!”

“ஏனோ?”

“நான் விரும்பியபடியே என்னை அழைத்ததற்காக”

அன்று அதற்குமேல் அவள் பேசவில்லை.

எனினும், தினம் தினம் இது வளர்ந்து வந்தது. “தொல்லை” என்று அவர் எண்ணும் அளவுக்கு அது வளர்ந்துவிட்டது. அவ்வளவுதானா?

“நம் நடவடிக்கைகளைத் துப்பறிய முயல்கிறாளே அவள்” என்ற கோபமும் ஏற்பட்டது அவருக்கு. ஆனாலும், அவளைக் கண்டுபிடிக்கவோ , அவள் பேச்சுக்குத் தடைவிதிக்கவோ அவர் முயலவில்லை .

ஆகவே அவள் போனில் பேசிக் கொண்டுதான் இருந்தாள் “என்னைக் கண்டுபிடித்து விட்டீர்களா? நான் யார் புரிந்ததா?” என்று தினம் கேட்டுத் தொல்லை தந்தாள். நினைத்த வேளைகளில் எல்லாம் போன் செய்து ஒரு பாட்டுப் பாடுங்கள் ஸார்” என்று கெஞ்சினாள். “நீலப் புடவைக்காரியோடு சிரித்துப் பேசியபடி சினிமாவுக்குப் போனீர்களே? அது யார் ?……. கனகாம்பரப் பூவைத் தலை நிறையச் சுமந்தபடி திரிந்த சில பெண்களோடு நீங்கள் கடற்கரையில் காட்சி அளித்தது உண்டா, இல்லையா? என்று மிரட்டினாள். “என்னைச் சந்திக்க வேண்டும் என்கிற ஆசை உங்களுக்கு இன்னும் வரவில்லையா?” என்று அவள் விசாரித்தாள்.

கானப்பிரியன் அவளோடு விளையாடுவதில் ஆனந்தமே கண்டார். அதனால் சில சமயங்களில் சில பாடல்களை மெதுவாக முனங்கிவைத்தார். ஒன்றிரு சமயங்களில் “லவ் டயலாக்” பேசவும் துணிந்தார் அவர்.

வசந்தம் வந்துவிட்டது நண்பரே! இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் நாம் முகம் அறியாக் காதலர்களாகப் பேசிப் பொழுது போக்குவது?” என்று அவள் குழைந்தாள். போனில் தான்.

அவர் ஒரு இடத்தைக் குறிப்பிட்டார். நல்ல நேரத்தையும் குறித்தார்.

“எந்தன் இடது தோளும் கண்களும் துடிப்பதென்ன; இன்பம் வருகுதென்று சொல், சொல், சொல் கிளியே!” என்று இசைத்தாள் அந்தப் பெண்.

கானப்பிரியன் நடிப்புச் சிரிப்பைச் சிதறி வைத்தார்.

குறித்த காலம் வந்தது.

குறிப்பிட்ட இடம் சேர்ந்தார் கானப்பிரியன். அவர் கண்கள் புஷ்பத்தைத் தேடும் வண்டுகளாயின. அவள் குறிப்பிட்டிருந்தபடி நீலப்புடவையும் அதற்கேற்ற ஜாக்கெட்டும் ஒய்யாரத் தோற்றமும் ஒயில் நிறைந்த போஸுமாய்க் காத்திருந்த பெண்ணைக் கண்டதும் அவர் திடுக்கிட்டார். “நம் கண்கள் நம்மை ஏமாற்றுகின்றனவா?” என்ற ஐயுற்று அவர் தன் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டார்.

அவள் குறும்பத்தனமாகச் சிரித்து, வணக்கம் அறிவித்தாள்.

அவர் திகைத்துத் திண்டாடி, “நீயா? நீதானா பத்மா?” என்று குழறினார். அவர் பார்வை அங்கும் இங்கும் ஓடியது. வேறு யாராவது வந்து காத்திருக்கிறார்களா என்று ஆராய முயன்றது.

அங்கு வேறு எவருமில்லை. அவள் தான் நின்றாள், விஷமச் சிரிப்புடன் அவரைப் பார்த்தபடி.

“ஆமாம். இன்னும் என்ன சந்தேகம்? உங்கள் பத்மாவேதான்” என்றாள் அவருக்காகக் காத்திருந்த அவர் மனைவி.

“நீ செய்தது குற்றம், பத்மா!” என்று கண்டிப்புக் குரலில் பேசினார் அவர்.

“இல்லை; போனில் குரலைப் புரிந்து கொள்ளாமல் போனது உங்கள் குற்றம், பொழுது போகட்டுமே என்ற நினைப்பில் நம் விளையாட்டை வளரவிட்டதும் குற்றம். உங்கள் மனைவியான என்னோடு நீங்கள் தாராளமாகச் சிரித்துப் பேசி விளையாட மறந்துவிட்டதும் உங்கள் குற்றம்தான். அதனால் நானாகவே உங்களோடு விளையாட ஆசைப்பட்டேன். அதற்குக்கூட எனக்கு உரிமை கிடையாதா என்ன?” என்று சொல்லிச் சிரித்தாள் பத்மா.

பண்பினால் அவள் என்றுமே குறும்புக்காரிதான்!

– வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள் – முதற் பதிப்பு ஆகஸ்ட், 2002 – பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *