கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 12, 2023
பார்வையிட்டோர்: 4,548 
 
 

அவருக்கு வயது ஓர் எண்பதைத்தாண்டியும் இருக்கும். வழக்கம்போல் குளிக்கச்சென்றவர், இரண்டு மக்கு தண்ணீர் எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டார். அவ்வளவுதான். பாத் ரூமிலிருந்து ” தடால்’ என்று ஒரு சத்தம். 

அவன் வீட்டில் இல்லை. தெருக்கோடியில் உள்ள நெல்லை குசலம்பாள் காய்கனிக்கடை கடைக்குச் சென்று இருக்கிறான். காய் ஏதாவது வாங்கி வரலாம் என்றுதான் போயிருக்கிறான். அவன் மனைவி அச்சத்துடன் பாத்ரூம் அருகே சென்றாள். என்ன சத்தம் என்று பார்த்தாள். “மாமா மாமா என்ன ஆச்சு, கதவைத் திறங்கோ” நான்கு முறை கத்தி நிறுத்தினாள். “அம்ம்ம்மா…. அம்ம்ம்ம்மா” என்று இரண்டு தடவை ஈன சுவரத்தில் ஒரு குரல். பாத்ரூமிலிருந்து வந்தது. மாமாவின் குரல்தான். பாத் ரூம் கதவை தன் பலம் கொண்ட மட்டும் தட்டினாள். 

“என்னம்மா என்ன ஆச்சு என்ன சத்தம் இங்க” கீழிருந்து வீட்டின் சொந்தக்காரர் கூச்சலிட்டபடி படிகளில் ஏறி உள்ளே வந்துகொண்டிருந்தார். “வீட்ட கட்டி அத வாடகைக்கும் விட்டுட்டு வீட்டுசொந்தக்காரங்க படற பாடு இருக்கே” வீட்டு உரிமையாளர் சொல்லிக்கொண்டார். 

“சாரு எங்கே?” 

“அவர் கடைக்குப் போயிருக்கிறார்” 

“என்ன ஒரே சத்தம்” 

“பாத் ரூமுக்குள் மாமா. குளிக்கப் போனார். தடால்னு ஒரு சத்தம். அவ்வளவுதான் கேட்டுது… என்ன ஆச்சுன்னு தெரியல. எனக்கு பயமா இருக்கு. கதவ தாழ்ப்பா போட்டுண்டு குளிக்க ஆரம்பிச்சி இருக்கார். அவருக்கு என்னமோ ஆயிட்து. கூப்டா பதில் இல்லே. அம்மா அம்மா ன்னு ரெண்டுதரம் சன்னக்குரலில் மாமா கூப்பிட்ட மாதிரிக்கு இருக்கு. ஆனா எந்த ரெஸ்பான்சுமில்ல. . இப்ப நான் என்ன பண்ணுவேன்” 
வீட்டுசொந்தக்காரர் பாத்ரூம் கதவைத் தட்டினார். ஒரு முறை இல்லை நான்கைந்து முறைக்கு தட்டினார். ஒன்றும் ஆகவில்லை. 

“மாமா மயங்கி விழுந்து இருக்கணும்” 

அவன் ரெண்டு முருங்கைக்காய்களைக் கையில் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். வாயிலில் இரண்டு செருப்பு இருந்தது. யாரோ வந்துதான் இருக்கிறார்கள். ” யார் அது விருந்து?” அவன் குரல் கொடுத்துக்கொண்டே வந்தான். 

“வாங்கோ இங்க வாங்கோ பாத் ரூமுக்குள்ள மாமா இருக்கார். கதவு தாழ்ப்பா போட்டு இருக்கு.” 

வீட்டு சொந்தக்காரர் பாத்ரூம் அருகே நின்றுகொண்டிருந்தார். 

“இப்ப என்ன பண்றது” அவன் புலம்பினான். 

வீட்டுச்சொந்தக்காரர் வாயைத் திறந்தால்தானே? அவன் எட்டி பாத்ரூம் கதவை ஓர் உதை விட்டான். கதவு வாயைப் பிளந்து கொண்டு ஒரு ஓரமாயிற்று. 

“இதெல்லாம் என் கஷ்ட காலம்” முணுமுணுத்தார் அவர். 

அவன் “அப்பா” என்று அலறினான். அப்பா, பாத்ரூம் குழாயைப் பிடித்துக்கொண்டு கண்கள் மூடியபடி, நிர்வாணமாய் கன்னா பின்னாவென்று காணப்பட்டார். 

“மொதல்ல இந்த வேஷ்டிய மேல போடுங்கோ” அவன் மனைவி கொண்டு வந்து கொடுத்தாள். 

மூவருமாக அந்தப்பெரியவரை முடிந்தும் முடியாமலும் தூக்கிக் கொண்டு ஹாலுக்கு வந்தனர். பெரியவர் கண்திறக்கவேயில்லை. பின் மண்டையில் ரத்தம் லேசாகக் கசிந்து கொண்டிருந்தது. 

“அப்பா கண்ண தெறயேன், அப்பா கண்ண தெறயேன்” அவன் கதறினான். வீட்டு உரிமையாளர் பெரியவரின் நெஞ்சு வயிறு கைகள் எல்லாவற்றையும் தொட்டுத் தொட்டு பார்த்தார். 

“என்னா சார் ஆச்சு என்ன சார் ஆச்சு” அவன் கேட்டுக்கொண்டே இருந்தான். அதற்குள்ளாக அந்தவீட்டு உரிமையாளரின் மனைவி ஆம்புலன்சுக்குப் போன் செய்தாள். சைரன் எழுப்பிக்கொண்டே வந்த ஆம்புலன்சு அவன் வீட்டு வாயிலில் நின்றுகொண்டது. ஸ்டெச்சரைப்பிடித்துக்கொண்டு இருவர் உள்ளே வந்தனர். கம்பவுண்டர் கணக்குக்கு இருந்த ஒருவர் வீழ்ந்துவிட்ட பெரியவரை தொட்டுப் பார்த்தார். அவரின் கண்களைத் திறந்து என்ன ஆயிற்று என்று பார்த்துக் கொண்டார். பெரியவரின் இரண்டு கண்களும் சிவந்து இருந்தன. 

“இது எப்படி ஆச்சு” 

“பாத் ரூமுக்கு குளிக்கப்போனவர். வழக்கமா போறதுதான். இன்னைக்கு இப்படி ஆயிருக்கு. தடால்னு ஒரு சத்தம். போயி பாத்தா, பாத் ரூம் கதவ தெறக்க முடியல. மாமா மாமான்னு கத்தினேன். பதில் இல்லே. உள்ளயே விழுந்துட்டு இருக்கார். இது மாதிரிக்கு எப்பவும் நடந்ததும் இல்லே. அப்புறம் பாத் ரூம் கதவை கஷ்டப்பட்டு உதைச்சித் திறந்தோம். உள்ளாற பாத்தா இப்படி” 

அவன் மனைவி சொல்லி முடித்தாள். 

பெரியவரை ஸ்டெரச்சரில் வைத்து ஆம்புலன்சுக்காரர்கள் தூக்கிக் கொண்டு வெளியே போனார்கள். அவனும் அவன் மனைவியும் ஆம்புலன்சில் ஏறி அமர்ந்துகொண்டார்கள். 
“இப்ப நாம எங்க போறம்” அவள் கேட்டாள். 

“ஜீபா மருத்துவ மனைக்குப் போறம். அங்கேந்துதான் இந்த வண்டியும் வந்து இருக்கு” அவன் பதில் சொன்னான். அவன் தந்தையை ஒருமுறை பார்த்துக் கொண்டான். “அப்பா அப்பா” என்று அழைத்துப் பார்த்தான். எந்தப் பதிலும் இல்லை. கண்கள் மூடித்தான் இருந்தன. அவள் பிரமை பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். வண்டி “ஒய் ஒய் ஒய்’ என்று குரல் கொடுத்துக் கொண்டே சாலையில் பயணித்தது. ஜீபா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பகுதிக்குச் சென்று வண்டி நின்றது. பெரியவரை அதே ஸ்டெரச்சரோடு உள்ளே கொண்டு சென்றார்கள். அவனும் அவளும் வெளியே காத்துக் கொண்டு இருந்தார்கள். 

பரிசோதித்த மருத்துவர் வெளியே வந்தார். 

“யாரு நீங்கதான் இந்த கேசோட வந்தவங்களா” 

இருவரும் டாக்டர் அருகே சென்று நின்றுகொண்டார்கள். 

“பின் மண்டையில அடி. அடி பலமா இருக்கு. வயசானவர் அதுவும் ஒரு விஷயம். நீங்க பெரிய ஆஸ்பத்திரிக்குப் போறதுதான் நல்லது. சட்டுனு பொறப்படுங்க. ஒண்ணும் யோசனை பண்ணாதிங்க” அந்த மருத்துவர் நகர்ந்து கொண்டார். 

“அப்படியே ஸ்டெரச்சரோட இந்த பெரியவரை பெரிய ஆசுபத்திரில கொண்டு போயி சேர்த்துடுங்க”.

கட்டளை தந்துவிட்டுப்போனார். 

குடியிருக்கும் அவன் வீட்டின் உரிமையாளர், ஜீபா மருத்துவமனையின் வாயிலில் நின்றுகொண்டிருந்தார். 

“சார் பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துனுபோகச்சொல்லிட்டா. கேசு கொஞ்சம் சிக்கல்னு தெரியர்து. எனக்கு பயமா இருக்கு சார்” 

“இப்பதான் தைர்யம் வேணும். ஒண்ணும் ஆயிடாது. பயம் வேண்டாம். உங்க தசா புக்தி பலன் எப்பிடி இருக்கு. ஒண்ணும் கர்மா அது இதுங்கறதுக்கு அதிகாரம் இப்பக்கி இல்லன்னா சரிதான். எனக்கு சின்ன ஒத்தாசை பண்ணணும் நீங்க”

“ஏன்னா ஆம்புலன்ச பாருங்கோ. நமக்கு ஏகப்பட்ட காரியம் தலைக்கு மேல இருக்கு” அவன் மனைவி எச்சரித்தாள். 

“மாமி ஒங்களுக்கும் சேத்துதான் சொல்றேன். உங்க கஷ்டம் எனக்கு தெரியர்து. நெருப்புன்னா வாய் வெந்துடாது. பெரியவருக்கு அப்பிடி இப்படின்னு ஏதாவது ஒண்ணு ஆனா இங்க நீங்க குடியிருக்கிற ஆத்துக்கு வந்துடாதீங்கோ. உங்களுக்கே தெரியும் நாளைக்கு என் பேரனுக்கு ஆண்டு நிறைவு. பொண்ணு மாப்பிள, பேரக்குழந்தை, சம்பந்தி ஆத்துக்காரா எல்லாரும் ஒரு வேன் வச்சிண்டு இப்பவே வந்துடறா. ஆத்துலதான் சுபங்கள் எல்லாம் நடக்கப் போறது. மொத மொதல்ல என் பேரனுக்கு சுயக்கிரகத்துல ஒரு விசேஷம் பண்றேன். ஆயுஷ்ய ஹோமம் நவக்கிரக பூஜை எல்லாம் இருக்கு. மயிலாப்பூர் ரேவதி மகா கனபாடிகள் பிரதானமா இருந்து பண்ணி வக்கிறார். அத பின்னமா ஆக்கிடாதீங்கோ. எங்க காதுல அசுபம் எதுவும் விழவே பிடாது, பேரக்கொழந்த, பொண்ணு மாப்பிள்ள ஊருக்கு நல்லபடியா அனுப்பி வைக்கணும்” அவன் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு கெஞ்சினார். 

“அங்க என்ன பேச்சு. ஏறுங்கோ வண்டில. எத எப்ப பேசறதுன்னு ஒரு வெவஸ்த இருக்கணும். ஆம்பளன்னா அதுக்கு ஒரு லட்சணம் வேண்டாமா” 

மாமி எகிறிப்பேசினாள். 

“என்ன மன்னிச்சுடுங்கோ” என அவர் ஆரம்பித்தார். ஆம்புலன்சு வண்டி புறப்பட்டுவிட்டது. தேசிய நெடுஞ்சாலையில் சைரன் கொடுத்துக்கொண்டே வண்டி சீறிப்பாய்ந்து சென்றுகொண்டிருந்தது. 

அப்பா இன்னும் அதே ஸ்டெரச்சரில் அப்படியே கிடந்தார். கண்கள் மூடிக் கிடந்தன. “அயிதராபாத்துல இருக்குற உங்க அம்மாவுக்கும் உங்க தம்பிக்கும் தகவல் கொடுங்கோ. டில்லில இருக்குற மாப்பிள பொண்ணுக்கும் தகவல் சொல்லிடுங்கோ” என்றாள் அவன் மனைவி. அவன் கண்கள் ஈரமாகி கண்ணீர் வழிந்தபடி இருந்தது. 

“தகவல் கொடுத்துடணும்னு சொல்றயா” 

“ஆமாம். உடனே செய்யுங்கோ” 

“வீட்டு ஓனர் எங்கிட்ட சொன்னது என்னன்னு தெரியுமா நோக்கு” 

“காதுல நன்னா விழுந்துதே. எனக்கும் சேத்துத்தான் அவர் சொன்ன சேதி. அவர் ஆத்து மாமி லேசுப்பட்டவர் இல்லே. ஸ்ரீசூக்தம், புருஷ சூக்தம், ஆதித்ய ஹிருதயம், லலிதா சஹஸ்ரநாமம், துளசி பூஜை இன்னும் இருக்கே அனுமான் சலேசான்னு பாராயணம் பாராயணமா சொல்லுவா. ஆனா மனசுதான் மாமிக்கு குறும்பை” .

“அப்பா எழுந்துண்டு நடக்கணும்” 

“நடக்கட்டும். யார் இல்லேன்னா. உங்க தம்பிக்கும் மாப்பிள பொண்ணுக்கும் சேதி சொல்லியாச்சா” 

“ஆச்சி” 

“புறப்பட்டு வராளா” 

“வரலாம். பெரிய ஆஸ்பத்திரியில சொல்றத வச்சியும் நான் பேசணும்” அவன் அவளுக்கு பதில் சொன்னான். ஆம்புலன்சு வண்டி அண்ணா சாலையில் சென்று கொண்டிருந்தது. 

“மாமா… மாமா” அவள் அழைத்துப் பார்த்தாள். அசைவு கூட இல்லை. மார்புக்கூடு அசைந்து அசைந்து மூச்சு மட்டும் வந்துகொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் டிரைவர் வண்டியை விரைந்து ஒட்டிக் கொண்டிருந்தார். அவன் கண்கள் சிவந்து போயிருந்தன. அவளோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். 

பெரிய ஆஸ்பத்திரி வந்தது. ஸ்டெரச்சரை இறக்கி அப்பாவை அவசர சிகிச்சைப்பகுதி வழியே உள்ளேகொண்டு போனார்கள். அப்பாவின் பெயர் வயது விலாசமும் கேட்டார்கள். அவ்வளவுதான். “வெளியே போய் மருந்து வாங்கி வரணும்” ஒரு லிஸ்டை அவனிடம் கொடுத்தார்கள். அவன் அதனை எடுத்துக்கொண்டு சாலைப்பகுதிக்கு வந்தான். பெரியவரை தீவிர சிகிச்சைக்கு என அழைத்துப் போனார்கள். அவன் மருந்து வாங்கிக் கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்தான். 

அவனும் அவளும் மருந்துகளோடு ஐ சி யுவின் வெளியே காத்திருந்தார்கள். ஒரு நர்ஸ் வெளியே வந்தாள். 

“மருந்து வாங்கி வந்து இருக்கோம்” அவன் அந்த நர்சிடம் கொடுத்துவிட முயற்சிசெய்தான். அவள் அதனை சட்டை செய்யவில்லை. “சார் உங்களை உள்ள கூப்பிடறாங்க” அவனிடம் சொன்னாள். 

“நீ இந்த மருந்த வச்சிக்கோ” சொல்லிய அவன் உள்ளே நுழைந்தான். அவன் தந்தை படுக்கை அருகே டாக்டர் நின்று கொண்டிருந்தார். 

“இன்னும் பத்து நிமிஷம். அதுக்குள்ள பெரியவரை வெளியில கூட்டிட்டுப் போயிடணும். இல்லன்னா போஸ்ட் மார்ட்டம் அது இதுன்னு போயிடும். சட்டுனு இங்கிருந்து கௌம்பறத பாருங்க” 

“சார் என்ன சார் சொல்றீங்க. அப்பாவுக்கு என்னதான் ஆச்சு. இந்த சேதி சொல்லவா என்ன மருந்து வாங்கிவரச் சொன்னீங்க. நம்பி மோசம் போயிட்டேனே சார்” 

“கொழந்த மாதிரி நடந்துகாதீங்க. அவருக்கு அவ்வளவுதான் முடிஞ்சி போச்சி. இப்ப ஆக வேண்டியது என்னன்னு பாக்கணும். தெரியுதா” டாக்டர் கொஞ்சம் கறாராகப்பேசினார்.

“அப்பா அவ்வளவுதானா சார். இனி என்ன செய்யமுடியும் சார்” 

“உங்க அப்பாவுக்கு அப்பா இருக்காரா. அவருக்குன்னு இருந்த அந்த ஒரு அப்பா இருக்கறாரா. இல்ல அந்த அம்மாதான் இருக்காங்களா” டாக்டர் நகர்ந்துகொண்டார். அப்பாவைப் பார்த்தான். எந்த மாற்றமும் இல்லை. அப்படியே கட்டை மாதிரி கிடந்தார். மூக்கிலும் வாயிலும் ஏதோ சிறு குழாய்கள் மட்டும் செருகிக்கிடந்தன. “அப்பா நீ என்ன விட்டுட்டு போயிடுவையா” அலறினான். 

அருகிலிருந்த நர்ஸ் “இவுரு வைஃப் இருக்காங்களா” அவனிடம் கேட்டார். 

“அம்மா தம்பியோட ஹைதராபாத்ல இருக்காங்க” 

“வயிசான காலத்துல ஏன் பிரிச்சி பிரிச்சி வைக்கணும். ஏதான ஒரு இடத்துல ஒண்ணா இருக்கலாமுல்ல”

“அப்பா, இப்ப எப்பிடி இருக்காரு” 

“என்ன திரும்பவும் அதே கேள்வியா. நீங்க அவரை வெளியே தூக்கிகினு போனா உண்டு. இன்னும் பத்து நிமிஷத்துல கேசு மார்ச்சுரிக்கு போயிடும்” 

“என்ன நர்ஸ் சொல்றீங்க” 

“அவுரு கண்ணு தொறக்கல… பல்ஸ் எறங்கிட்டு இருக்கு. டாக்டரு சொல்லிட்டு கௌம்பிட்டாருல்ல”

“அய்யோ அப்பா” அவன் கத்தினான். 

“வெளியில போங்க மொதல்ல” என்றாள் நர்ஸ். 

வண்டி தள்ளுபவர்கள் இருவர் அவனருகே வந்து நின்றனர். அதில் ஒருவன் ஆரம்பித்தான். ” இது எப்பிடி ஆச்சி சாரு” 

“பாத் ரூம்ல குளிக்கப்போனவரு. விழுந்திட்டாரு” 

“இதுக்கு இம்மாம் தொலைவு வரணுமா. அங்கயே இது அசமடக்கி. போலீசு கேசு கீசுன்னு இல்லாம போயி இருக்கலாமுல்ல. ஆளுவ வெவரம் இல்லாம கெடந்து லோலு படுதுவ” 
“சார் என்ன சொல்றீங்க. நீங்க பாட்டுக்கு ஏதோ பேசுறீங்க” 

“சாரு இது ஆக்சிடென்ட் கேசு. இத நீங்க குடியிருக்குற ஏரியா போலிசு ஸ்டேசன் கெரீம் எஸ் ஐ கையழுத்து இல்லாம குடுக்கமாட்டாங்க. போஸ் மா ருடம் முடிஞ்சி , பெறவு அய்யாரு சவம் சணலால தச்சி உங்க கையுக்கு வரும். அதுவும் நாளைக்குத்தான் கொற கத ஆவும்” 

நெடுக்கு வண்டியில் அப்பாவின் சவத்தை நீட்டி படுக்க வைத்தார்கள். வண்டி லேசாக நகர்ந்து பிணவறைப்பகுதி நோக்கிச் சென்றது. அவன் மனைவி எப்போதோ உள்ளே வந்துவிட்டிருக்கிறாள். எந்த அசைவும் இல்லாத மாமாவை படுக்கையில் ஒரு முறை பார்த்தும் முடித்தாள். அவன் அவள் கைபிடித்து அழுதான். 

“இப்ப என்ன செய்யறது?” 

“உங்க பொண்ணுக்கும் உங்க தம்பிக்கும் நான் சேதி சொல்லிட்டேன். காலம்பறக்குள்ள அவுங்க இங்க வந்துடுவாங்க” 

“எல்லாம் முடிச்சுட்டயா நீ” அவன் தேம்பி அழுதுவிட்டான். 

அவன் அப்பாவின் சவம் இன்னும் பிணவறை நோக்கிப் பயணித்துக்கொண்டு இருந்ததை இருவரும் பார்த்துக் கொண்டே நின்றார்கள். 

“டக்குன்னு பெரியவரை வெளிய கொண்டு போயி இருக்கணும். இப்ப கேசுன்னு ஆயிட்டுது என்ன செய்வீங்க. உங்க ஏரியா எஸ் ஐ கிட்ட விஷயம் சொல்லி ஒரு கையெழுத்து வாங்கியாரணும். பெறகுதான் ஃபார்மாலிடி முடிச்சி பாடிய ஹேண்ட் ஓவர் பண்ணுவாங்க” நர்ஸ் சொல்லிச் சென்றாள். 

மாலையாகிவிட்டது. பசி இருக்கிறதா? இல்லையா என்பதே தெரியவில்லை. இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டு இருவரும் தின்றுமுடித்தார்கள். 

“இனி இங்க யாரும் இருக்கக் கூடாது. கௌம்பு கௌம்பு” வாட்ச்மென் குரல் கொடுத்துக்கொண்டே வந்தான். 

” நீங்க என்ன சேதி, கௌம்புங்க கௌம்புங்க சாவுசேதி சொல்லியாச்சின்னா ஆவுற காரியம் மேற்கொண்டு எம்மானோ இருக்குதுல்ல” 

“ஆமாம்” 

“உங்கள்ள அந்த அய்யிரு இருப்பாருல்ல அவுரு மொத்த காரியமும் பாத்துகுவாரு. மொத அவுருகிட்ட சேதி போயிட்டுதா” 

“இனிமேதான்” அவன் பதில் சொன்னான். எல்லோரும் எல்லாம் தெரிந்துதான் வைத்திருக்கிறார்கள். 

“எங்க போவுணும்” 

“ஜில்லாவரம், பம்மல் கிருஷ்ணா நகர்” 

“தேவலாம் நல்லா ஊரு பேரு சொல்றீங்க” 

“வந்த வேகத்துக்கு பெரிச இட்டுகினு இந்த காம்பவுண்ட் தாண்டியிருந்தீங்கன்னா இம்மாம் இம்சை இல்லே. அம்மண கட்டையா நாயோட பேயோட அந்தப்பொணம் ரா காக்கவேணாம். சின்னப்பட்டு சீரழிஞ்சி கெடக்குறத ஒரு பொட்டணமா கட்டி நாளைக்கு குடுப்பானுங்க. காக்கி சட்டைக்கார நுங்க வேற கொத்தி புடுங்குவானுவ. ஜில்லாவரம் போயி அவுனுவகிட்டு சீட்டு வாங்கியாரணும். அது ஒரு தும்பம்.” 
இருவரும் இப்போது மருத்துவ மனையின் காம்பவுண்டுக்கு வெளியே வந்து நின்று கொண்டார்கள். 

“ஆத்து வாத்தியாருண்ட சேதி சொல்லிடணும்” 

“இப்பவே பேசறேன்” 

“அவரும் அந்த ஆண்டு நிறைவுக்கு போற மனுஷன். நம்மதான் குடியிருக்குற வீட்டுக்கே போகமுடியாம இருக்கறம். கண்டிச்சி அவர் வரக்கூடாதுன்னு சொல்லிட்டார். நம்ம ஹவுúஸôனர் சொல்றதுல ஒருதுளி நியாயம் இருக்கு. தர்மம் இல்லே. நம்ப என்ன பண்ணறதுன்னுதான் அவருக்கு யோசனையே இல்லே” 

“பாடி எடுத்துண்டு எங்க போறது? நமக்குன்னு சொந்த வீடு இருக்கணும். இல்ல வீட்டு ஓனர் மனுஷத்தன்மையா நடந்துக்கணும்” 

ஆம்புலன்சுகள் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தன. இறுதிச்சடங்கு புரோக்கர்கள் வந்து வந்து நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். 

“ஏம்பா மிஸ்டு கால் இருந்தது. நீ கூப்பிட்டயா” 

“மாமா. வாத்தியார் மாமாதானே பேசறது” 

“ஆமாம் அந்த க்ரிஷ்னா நகர் சின்ன பார்க்கண்ட மாடியில இருக்கறீரே அவர்தானே” 

“கரெக்டா சொல்லிட்டிங்க. என் அப்பா காலம் ஆயிட்டார். நான் என் ஆத்துகாரியோட பெரிய ஆஸ்பத்திரியில இருக்கேன்.” 

“ரொம்ப கஷ்டமா இருக்கே. போன திங்கள்கிழமைன்னக்கி ஒரு ஜோடி பூணூல் வேணும்னார். இன்னும் நான் கொண்டுவந்து கொடுக்கல. அதுக்குள்ள இத்தன அவசரம். பிராப்தம் அவ்வளவுதான். பகவான் இருக்கான்… ஆமாம் விடிஞ்சா அந்த ஆண்டு நெறவு இருக்கு. உங்க ஹவுஸ் ஓனர் ஆத்துல. அவர் என்ன சொல்வாரோ” 

“அவர் பாடி எடுத்துண்டு ஆத்துக்கு வரப்பிடாதுன்னு சொல்லிட்டார். அதான் ரொம்ப கொழம்பி இருக்கேன்” 

“பந்துக்கள் வரணும் பாக்கி காரியம் ஆகணுமே” 

“இப்பிடி கஷ்டம் வரும்னு தெரியல. அது அது தன் பாட்டுலயே நடந்துடும்னு நெனச்சேன்” 

“உன் ஆம்படையா உன்னோட இருக்காளா” 

“ஆமாம்” 

“நாளைக்கு மத்தியானம் ரெண்டு மணிக்கு மேல வச்சிக்கலாம். ஒண்ணரையோட குளிகன் போயிடறது”

“ஆண்டு நெறவுக்கும் நீங்கதான் வாத்தியாரா” 

“ஆமாம். நானேதான். பொழப்பாச்சே. மத்தியானம் சாப்பாட்டுக்கு அப்பறம் எனக்கு அங்க என்ன வேல?”

“நீங்க வந்துடறேள்” 

“எங்க வர்ரது. மசானக்காரங்கிட்ட சொல்லணும். அந்த காரியம் இருக்கு. ஆசந்தி வரணும், கரண்டா கட்டையான்னு தெரியணும். மொதல்ல எங்க பாடிய வக்கறது அப்புறம் எடுக்கறது ஒருத்தர் ஆத்து எழவு அடுத்த ஆத்துக்கு எடுத்துண்டு போமுடியாது. யாரு ஒத்துப்பா இது பட்டணம் வேற” 

“திரும்பவும் பேசறேன். இப்பக்கி ஒண்ணும் முடிவாகல்லே” அவன் பேச்சை முடித்துக்கொண்டான். 

“சாரு… சாரு பெரியவங்களுக்கு என்ன ஆச்சு. ஏதாச்சி” குரல் கொடுத்துக் கொண்டே அவன் வீட்டில் பெருக்கிப் பாத்திரம் தேய்க்கும் வேலைக்காரியும் அவள் புருஷனும் எதிரே வந்து நின்றார்கள். 

“எங்க எங்க எல்லாம் சுத்தி நாங்க இங்க வர்ரம். எனக்கு வழி புரியாதுன்னு. எம்புருஷனை இட்டாந்தேன். பெரியவரு எப்பிடி இருக்காரு” 

“அய்யா போய் சேந்துட்டாரு” 

“அடக்கடவுளே. இதான் கடைசி முடிவா. அந்த பெரிய அம்மாகூடம் இங்க இல்ல. ரவ தொளசி தண்ணி கொடம் போற வாயில ஊத்திட்டு உழுந்து கும்புட கொடுப்பன இல்ல. என்னா தும்பம் இது” 

“பாத்ரூம் போனவரு. அதோட சரி. ஒரு பேச்சு பேசல” 

“அந்த அம்மா தம்பி சின்னவரு பாப்பா மாப்பிள எல்லாம் வருதா” 

“ஆமாம் எல்லாம் காலையில வந்து புடுவாங்க” 

“இப்ப பிரேதம் பாக்க வைக்குமா” 

“இப்ப உடமாட்டானுவ. காசு கனமா கேப்பானுவ. உள்ள பொணம் ஏகப்பட்டது கெடக்கும்” வேலைக்காரியின் கணவன் பதில் சொன்னான். 

“வெடிஞ்சி பாத்துகறம். ஆனா உருவா பாக்க வைக்காது. மூஞ்சி பாக்கலாம்னு சொல்றாங்க” 

“வெள்ளதுணியில சுத்தி குடுப்பானுவ. குளுப்பாட்டி சடங்கு எல்லாம் பண்ண வைக்காது. அப்படியே எடுத்தும் போயி எரியவுட்டறதுதான் ஆவும்” 

வேலைக்காரியின் கணவன் எதையும் பாக்கி வைக்கவில்லை. 

“இங்க என்னா செய்ய நாளைக்கு வருலாம்ல” என்றாள் வேலைக்காரி. 

இருவரும் எதுவும் பேசாமல் இருந்தார்கள். 

“என்ன ஒண்ணும் பேசாம இருக்கீங்க” 

அவன் கோவென்று அழுதான். 

“ஏம்பா அழுவுற. அப்பா வயசான பெரியவருதான” 

“அப்பா செத்தது இந்த நிமிஷம் எனக்குப் பெரிசா தெரியல. அப்பா பொணத்த எங்க எடுத்துகிட்டுப் போறதுன்னுதான்” 

“ஏன் என்ன ஆச்சு. ஓ… ஓ… நாளைக்கி கீழ் வூட்டுல பேரபுள்ளக்கி காதுகுத்தின்னு சொன்னாங்க. ஜாமியானா கூட போட்டு இருக்குல்ல. மறந்து போனேன்” 

“சிக்கலு எப்பிடி எல்லாம் வருது பாரு” இது வேலைக்காரியின் கணவன். 

“என்னா செய்யப் போற” 

“நாளைக்கு அம்மா தம்பி பொண்ணு மாப்பிள்ள இன்னும் உறவுக்காரங்க வருவாங்க. நான் என்ன செய்யுறதுன்னு முழிக்குறன்” 

“இதுக்கு ஒண்ணும் முழிக்க வேணாம் சாரு. எனக்கு சொந்தவூடு. அடையாத்து கர ஒட்டுல இருக்கு. வெள்ளத்துல அது வுழும் எழும்பி நிக்கும். சவத்தை எங்க வூட்டுக்கு தூக்கியாந்துடு. தெருவுல அடச்சி ஜாமியானாபோட்டு சென்டுப்பா தூக்கிகிடுவம் என்ன சொல்ற?” 

அவன் வேலைக்காரியின் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டான். தெய்வம்தான் எதிரே நிற்கிறதா என திடுக்கிட்டான். 

“அம்மா” என்று ஓங்கிக் கத்தினான். சாலையோரம் நின்றிருந்தவர்கள் அவனை ஒருமுறைபார்த்துத் திரும்பிக் கொண்டார்கள். 

“நாங்க பொறப்படறோம். போயி ஆகவேண்டிய வேலய பாக்குறம். என் வீட்டுக்குப்பக்கத்துல என் தங்கச்சி இருக்கு. தங்கச்சி ஆம்படையாங்கூட ஜில்லாவரத்துல போலிசா இருக்குறாரு. நான் எம் புள்ளைவ என் வீட்டுக்காரர் அங்க தங்கிக்குவம். நீங்க ரைட்டா அய்யா காரியத்த நாளைக்கு நல்லபடியா முடிச்சிடலாம்” 

“கடவுளே எனக்கு ஜில்லாவரம் ஸ்டேஷன்ல ஒரு காரியம் ஆவுணும்.” 

“சொல்லு சாரு. என் தங்கச்சிபுருஷனை போய்ப் பாரு. எம்பேரு சொல்லு. என்ன காரியம் ஆவுணும்?” 

“க்ரைம் எஸ் ஐ கிட்ட ஒரு லெட்டெர் வாங்கியாந்து குடுக்கணும். அப்புறம்தான் பாடிய குடுப்பாங்க” 

“அவருகிட்ட நானு சொல்லி வச்சிடறேன். அவுரு பாத்துக்குவாரு” 

“ரொம்ப பெரிய ஒத்தாசை” 

“ஒண்ணும் இல்ல சாரு . போவகுள்ள என்னத்த தூக்கிகினு போப்போறம் சொல்லு” 

“வூடு தெரியும்ல. அனகாபுத்தூருல அடையாத்து பாலத்துக்கும் தாழ செல்லியாயிகோவிலுக்கு அடுத்த வூட்டுக்கு அடுத்த வூடு. வீட்டுக்கு முன்னாடி ஒருகார்ப்பேசன் தெரு பைப்பு இருக்கும். அதான் அடையாளம். புதுசா சுண்ணாம்பு அடிச்சி இருக்குறேன். வூட்டுக்கு ஒரு அடையாளத்துக்கு சொன்னன்” 

“தாரை தம்பட்டை ஒண்ணும் இல்ல இவுகளுக்கு” என்றான் வேலைக்காரியின் கணவன். படப்பையில் கொத்தனார் வேலைக்குச் சென்று வருபவன். முதலில் சித்தாள் சித்தாள் எனத்தான் வேலைக்குப் போய்வந்தான். 

“வூட்டு வாசல்ல ஜாமியானா அடையாளம் போதும்ல. பெறவு என்ன. உங்க அய்யிருண்ட சொன்னிங்கன்னா அவுரு கொற காரியம் பாத்துக்குவாரு” 

மீண்டும் அவன். 

அவர்கள் இருவரும் புறப்பட்டனர். 

“என்னா செய்வ. எப்பிடியோ வேல ஆவுணும். யார் யாருக்கு எழுத்து எங்க போட்டு இருக்குதோ. அப்பிடிதான். மெற்றாசுல வாடவ வூட்டுலயும் புளாட் வூட்டுலயும் குடி இருக்குறது ரொம்ப தும்பம். சாவுன்னா இந்த பாப்பார சனம் ரொம்பதான் அச்சப்படுது. எல்லாரும் மண்ணாதான போவுணும். அது ஏனோ புரியாமாதான் பூமில சனம்கெடக்குது” என்றான் வேலைக்காரியின் கணவன். 

அவனும் அவளும் பெரிய ஆஸ்பத்திரியின் காம்பவுண்டிலேயே நின்று கொண்டிருந்தார்கள். வீட்டில் பத்து தேய்த்துக் கூட்டும் வேலைக்காரியும் கணவனும் பிரச்னைகளை வெகு எளிமையாக்கித் தந்துவிட்டு சென்று இருக்கிறார்கள். 

“நம்மள கடவுள் கைவிட்டுடல” என்றாள் அவள். அவன் பதில் ஏதும் சொல்லவில்லை. முதலில் அம்மாவும் தம்பியும் வந்தார்கள். தொடர்ந்து பெற்ற பெண்ணும் மாப்பிள்ளையும் வந்தார்கள். ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அழுது புலம்பி எல்லாம் ஆயிற்று. 

வீட்டு வாத்தியாருக்குக் கொடுக்க வேண்டிய தகவல் கொடுத்தாயிற்று. அவரும் அனகாபுத்தூர் விலாசத்துக்கு வருவதாகச் சொல்லிவிட்டார். இறுதிச்சடங்குக்கு வண்டி ஏற்பாடு, தாம்பரம் சானடோரியத்தில் மின் தகன மேடை, தருமங்குடி தெலுங்கு மாமி மெஸ்சில் சின்னக்குளியல், வந்தவர்கள் எல்லோருக்குமாக எளிய சாப்பாடு எல்லாம் அந்த வாத்தியார் பொறுப்பாயிற்று. காசா லேசா கையில் காசிருந்தால் கொஞ்சம் விவரம் தெரிந்த வாத்தியாருக்கு இந்த காரியங்கள் எல்லாம் பட்டணத்தில் எளிதாகவே கைகூடும். ஒரு சமாச்சாரம். 

அவன் காலையில் ஜில்லாவரம் காவல் நிலையம் நோக்கிப் புறப்பட்டான். வேலைக்காரியின் தங்கை கணவர் அங்கிருந்து அவனுக்கு எல்லா ஒத்தாசைகளும் செய்தார். காவல் நிலையம் வந்த மாதிரியே அவன் அனுபவப்படவில்லை. “இப்படியும் விஷயங்கள் முடியுமா” என அவனுக்கு விந்தையாக இருந்தது.

“நான் அங்க பேசிட்டேன். நீங்க இந்த லெட்டெர மட்டும் கொண்டுபோய் குடுத்துடுங்க” அவனுக்குச் சொல்லி அனுப்பினார்கள். அவன் மருத்துவமனைக்குத்திரும்பினான். நடப்புக்கள் அனைத்தும் அனுசரிக்கப்பட்டன. உங்களுக்கு நினைவுக்கு வருகிற அந்த அத்தனையும் சேர்த்துத்தான். அவன் அப்பாவை பாலிதீன் பைக்குள் பொட்டலமாக்கித் தந்தார்கள். ஒரே யூகலிப்டஸ் மணம் மூக்கைத் துளைத்தது. பெரிய ஆம்புலன்ஸ் வண்டியில் சவத்தை நீட்டமாய் வைத்தார்கள். முக்கியமானவர்கள்மட்டுமே வண்டியில் ஏறிக்கொண்டார்கள். சிலர் வேறு வேறு வண்டிபிடித்து வந்தார்கள். அனகாபுத்தூர் அடையாற்றங்கரைக்குக் கீழே உள்ள செல்லியாயி கோவிலுக்கு அருகிலுள்ள ஷாமியானா போட்டிருந்த வீட்டிற்கு எல்லோரும் வந்தார்கள். 

அவன் வீட்டு வேலைக்காரியின் வீடுதான் அது. அவனுக்கும் அவன் மனைவிக்கும் மட்டுமே இது விஷயம் தெரியும். “இது நண்பனின் வீடு. இது எனக்கு ஒரு உதவி. தற்சமயம் அவன் ஊரில் இல்லை. கோயம்புத்தூர் சென்று இருக்கிறான்” அவன் சொன்ன சேதி. 

வீட்டுவாத்தியார் சொல்லி வைத்த மாதிரிக்கு எல்லாவிஷயங்களையும் கவனித்துக் கொண்டார். தாம்பரம் சானடோரியம் மின்தகனமேடைக்கு சவத்தை எடுத்துச் சென்றார்கள். சிறு குவளை ஒன்றில் அப்பாவின் அஸ்தியை அவனிடம் ஒப்படைத்தார்கள். வீட்டுவாத்தியார் சடங்குகள் முடித்து அதனை வங்கக்கடலுக்கு அனுப்பியும் வைத்தார். தெலுங்கு மாமி மெஸ்ஸில் குளியலும் சாப்பாடும் ரெடி. எல்லாம் காசு. காசு மட்டுமே. வீட்டு வாத்தியார் மிலிடரி ஆபிசர் கணக்காக எப்படியெல்லாம்வேலை செய்கிறார் என்பதை அவன் கூர்ந்து கவனித்தான். 

நன்கு இருட்டிவிட்டது. தந்தை மறைவுக்கு ரெண்டு நாள் காரியங்கள் முடிந்துபோயின. 

“நீங்க எல்லாரும் உங்க ஆத்துக்கு போகலாம். உங்க ஹவுஸ் ஒனர் திருப்பதிக்கு ஆண்டு நிறைவு முடிஞ்சகையோட பேரக்கொழந்தய கூட்டிண்டு போயாச்சி… வெங்கடாசலபதிய நாளைக்கு சேவிக்கறா” வாத்தியார் அவனிடம் சொல்லி முடித்தார். அந்த ஏழு மலையானுக்கும் கஷ்டங்கள் பலது இருக்கலாம். 

அவன், அவள், அவன் தாய், பெண் மாப்பிள்ளை இன்னும் ஒரு சிலரோடு அவன் தன் வீடு நோக்கிப் புறப்பட்டான். ஹவுஸ் ஓனர் வீடு பூட்டிக் கிடந்தது. வீட்டு வேலைக்காரி அவன் வீட்டை கழுவிவிட்டுக் கொண்டிருந்தாள். 

“அப்பா போயிட்டார். எனக்கு இன்னுமொரு அம்மா கெடச்சி இருக்கா” அவன் வேலைக்காரியின் கால்களைத் தொட்டு எழுந்தான். இக்கணம் மனம் எத்தனை லேசாக உணர்கிறது. அவன் மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

– ஏப்ரல் 2018, தினமணி – எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,000 பெறும் சிறுகதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *