கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 12, 2013
பார்வையிட்டோர்: 10,973 
 

இரவு வந்து சோம்பலை முறிக்கும் நேரம்..நிலாப்பெண் தன் முகத்தை மறைத்து, சூரியன் உதிக்கும் காலைப் பொழுது, பகலவன் ஒளி, பனி மூட்டத்தை விலக்கி கொண்டு மெது மெதுவாக புலர்ந்து கொண்டிருந்தது.

பரபரப்பான சென்னை மாநகரத்தின் அடையாறு…

அங்கே அடுக்கு மாடி குடியிறுப்புகளுக்கு மத்தியில், தனி வீடு ஒன்று பிரம்மாண்டமாய் இருந்தது..அதில்

“ஏன்னா ,சித்த இங்க வாங்கோளேன்..நான் இங்க கரடியா கத்திண்டு இருக்கேன்..நீங்க இங்க என்ன பண்ணிட்டு இருக்கேள்..எழுந்து வாங்கோ..இந்த பலகாரம் பண்டங்கள எல்லாம் சரியா அடுக்கி வைங்கோளேன்”..என்றார் பங்கஜம் மாமி.

“இதோ வரேன்..ஏன் இப்படி கத்திண்டு இருக்க..நானும் ஊருக்கு போறதுக்கு எல்லாம் எடுத்து வச்சிண்டு தான இருக்கேன்..கத்தி கத்தியே உனக்கு bp எகிற போகுது..வரேன் வரேன்..” சொல்லிக்கொண்டே வேகமாக வந்தார் ராமசேஷன்.
ராமசேஷன்,ரிடையர்ட் பேங்க் மேனேஜர்..தீபாவளிக்கு மும்பையில் இருக்கும் மகளுக்கு பட்சணங்கள் கொண்டு செல்ல தான் இந்த தடபுடல் பண்ணிக்கொண்டிருந்தார் பங்கஜம் மாமி..

“ சும்மா நின்னுக்கிட்டே இருந்தா வேலை ஆச்சா..சட்டு புட்டுன்னு எடுத்துக்கிட்டு கெளம்பற வழிய பாருங்கோ..நாழியாறது..”மீண்டும் அவரை ஏவிக்கொண்டே சாமான்களை எடுத்து வாயிலில் வைத்தவர்..

“சித்த நில்லுங்கோன்னா..சகுனம் நன்னாருக்கான்னு பாத்துடறேன்..இன்னிக்கி பாத்து அந்த மூஞ்சியில முழிச்சிட்டு போகாதேள்..என்றபடி வாயிலுக்கு வெளியில் எட்டி பார்த்தார் பங்கஜம்

இவள் திருந்தவே மாட்டாளே..எதுல பாரு சகுனம்,நின்னா,உக்காந்தா,தும்மினா இருமினா..எல்லாத்திலையும் பாத்துக்கிட்டே இருக்கா..ஆனாலும்..இதை மனதில் நினைத்த சேஷன்,

“இங்க பாருடி பங்கஜம்..நீ எப்படி எதுக்கெடுத்தாலும் சகுனம் பாக்கறது கொஞ்சங்கூட நன்னா இல்லை.. நோக்கும் ஒரு பொண்ணு இருக்காங்கறத மறந்துடாதே..அவ்வளவுதான் சொல்வேன்” என்று சற்றே கோபமாக பேசினார் ராம சேஷன்.

“இதோ பாருங்கோ..நான் இப்படிதான் இருப்பேன்..அந்தகாலத்துல இருந்து நானும் பாத்துண்டுதான் வரேன்..நான் கணிச்சா ஏதும் தப்பினது இல்ல..புரியறதா..சரி சரி எதிர் ப்ளாட்ல இருந்து அந்த அமங்கலம் வருதான்னு பாத்துட்டு வரேன்.அப்புறமா வெளியே வாங்கோ “ என்று கூறிவிட்டு வெளியில் வந்தார் பங்கஜம் மாமி.

அவர் வெளியில் பாத்துவிட்டு உள்ளே செல்லவும் நிறைமதி வெளியில் வரவும் சரியாக இருந்தது. அழகான மெரூன் வண்ண பொட்டும் தலையில் மல்லிகையுடன் பிங்க் வண்ண காட்டன் புடவையில் நிறைவாய் இருந்தாள் நிறைமதி….இவள் பெயருக்கேற்ற அழகான மதி முகம்கொண்டவள்.

பெண்ணுக்குரிய லட்சணங்கள் கூடவோ குறையவோ இன்றி அமைதியான அடக்கமான அழகை உடையவள்..இவளைத்தான் மாமி அமங்கலம் என்று கூறினார்.ஏன் என்றால் நிறைமதி ஒரு விதவை..

முகிலோடு திருமணமாகி ஆறேழு மாதம் மனமொத்த தம்பதியாய் பிறர் கண்படும் வகையில் வாழ்ந்து ஒரு விபத்தில், கணவனை பறிகொடுத்தவள். எப்பொழுதுமே பெண்ணியம் பேசுபவன் முகில்..பெண்ணுக்கு பூவும் போட்டும் தாய்வீட்டு சொத்து..அதை எடுத்து கொள்ள கணவனுக்கு அதிகாரம் இல்லை என்று பேசுவான்.மதியையும் அப்படியே இருக்க செய்வான்.

இறுதிமூச்சின்போது கூட,நிறைமதியிடம் அவன் கேட்டது ஒன்றுதான் எப்பொழுதும்போல் வாழ வேண்டுமென்றுதான்.முகிலின் தாய் தந்தையும் மதியோடு மகனின் வேண்டுகோளுக்கிணங்க இருந்து அவளை மகள் போல் பார்த்து கொள்கிறார்கள். ஒரு குழந்தையை தத்தெடுத்து மகிழ்நிலா என்று பெயரிட்டு வளர்த்து வருகிறாள்.இது முகிலின் ஆசையும் கூட..

நம் பங்கஜம் மாமி மட்டும், நிறைமதி எதிரில் வந்தால் சகுனம் சரி இல்லை என்று திரும்பி விடுவார்.நல்ல சகுனத்தில் கணவரை அனுப்பி விட்டோம் என்ற நம்பிக்கையில் உள்ளே சென்றார் மாமி.

நிறைமதி, பேங்க் ஆடிட்டிங் விஷயமாக டெல்லி செல்லவேண்டிய கட்டாயம்.வேறொருவரின் குழந்தையின் உடல்நிலை சரியில்லை என்று இவள் செல்ல வேண்டிய நிலை…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்..
மும்பை எக்ஸ்பிரஸ் வந்து நின்று இளைப்பாறி கொண்டிருந்தது.

டெல்லி செல்வது திடீரென்று முடிவானதால் கடைசி நேரத்தில் டிக்கெட் பதிவு செய்ய முடியுமா என்ற சங்கடத்தோடு நிறைமதி ரிசெர்வேஷன் கவுண்டர் நோக்கி விரைந்து கொண்டிருந்தாள். ஒரு ஷோல்டர் பேக், ஒரு சின்ன சூட்கேஸ் என்று குறைவான லக்கேஜ் என்பதால் விரைவாக நடக்க முடிந்தது.நல்ல வேலையாக மும்பை வழி டெல்லி செல்லும் வண்டியில் டிக்கெட் கிடைத்தது. வாங்கியவள் டிரெயின் நிற்குமிடம் செல்ல தொடங்கினாள்

செல்லும் வழியில் சேஷனை பார்த்துவிட்டாள்..
“ஹலோ..அங்கிள்..நீங்க எங்க இங்க..ப்ரியாவ பாக்க போறீங்களா அங்கிள்”

நிறைமதியை பார்த்தவர் ,இந்த பெண்ணை போய் தன் மனைவி சகுனத்தடையாய் நினைக்கிறாளே,இவளுக்கென்ன குறை..நல்ல மனசுக்கு சொந்தக்காரி..எல்லோருக்கும் உதவும் மனம் படைத்தவள்..என்று தன் போக்கில் சிந்தித்த சேஷன் முன்பு விரலை சொடுக்கிநாள் மதி..

“ என்ன அங்கிள் ..பகல்லேயே கனவா..யாரு கனவுல..மாமிக்கு தெரிஞ்ச பிகரா தெரியாத பிகரா..நான் வேண்ணா அப்படியே கொளுத்தி போடவா மாமிட்ட..” என்று கண்சிமிட்டினாள்..எப்பொழுதுமே ராமசெஷனிடம் இப்படி ஜாலியாக பேசுவாள் மதி. சொடுக்கினாலமதி.

“அ..ஹ.. ஆமாம்மா மதி..தீபாவளிக்கு பட்சணம் குடுக்க போறேன்மா..ப்ரியா இந்த தடவ ஊருக்கு வரலன்னுட்டா..அதான் இங்க இருந்து மாமி குடுத்து அனுப்பறா..பாத்தியா லக்கேஜ..எத்தனன்னு…மகள்னா தனி தான்மா உன் ஆன்ட்டிக்கு..ம்ஹ்ம்..நம்மள கவனிக்கதான் ஆள் இல்லை.

“ ஒரே பொண்ணு இல்லையா அங்கிள்..இருக்காதா பின்னே..அவங்களுக்கு குடுக்காம யாருக்கு குடுக்க போறாங்க..அது சரி உங்க பங்கு உங்களுக்குகெடச்சிருக்குமில்ல..அப்புறம் என்ன அங்கிள் பெருமூச்சு..

“அட போம்மா..நீ வேற..இந்த சுகர், ப்ரெஷர் குக்கர்னு எல்லாம் நம்ம கிட்ட வந்து விசில் அடிக்குது..உங்க ஆன்ட்டி இதுல இருக்கற முறுக்கு தவிர ஒன்னையுமே என் கண்ணுல காட்டல..தெரியுமா?

“என்ன அங்கிள் நீங்க..மாமி உங்க நல்லதுக்குதானே பண்றாங்க..வாங்க உங்க லக்கேஜெல்லாம் நா வந்து ஏற்றி விடறேன்” என்றவள் அவருடையதில் இரண்டை தான் எடுத்துகொண்டு வந்து கோச்சில் வைத்தாள்.

“ரொம்ப நன்றிம்மா” என்றவர் அவருடைய இடத்தில் அமர்ந்து கொண்டு
“நீ வரலேன்னா இந்த கூட்டத்துல சிக்கி ரொம்ப கஷ்டப்பட்டிருப்பேன் மா..ரொம்ப நன்றிம்மா மதி” என்றவர்,” உன் கோச் எதும்மா” என்றார்.

“நன்றியெல்லாம் சொல்லி என்ன அன்னியப்படுத்தாதிங்க அங்கிள்..என்னோட கோச் இதுக்கு அடுத்தது தான் அங்கிள் “

“ இல்ல மதி உன் ஆண்ட்டி உன்ன பத்தி பேசறது உனக்கும் தெரியும் தானே நியாயமா பாத்தா நீ எனக்கு உதவி பண்ணிருக்க கூடாதும்மா..ஆனா உன் நல்ல மனசு அவளுக்கு புரிய மாட்டேங்குதும்மா..பழமையிலே ஊரிபோய் கெடக்குறா..”

“பரவால்ல விடுங்க அங்கிள்..அவங்க மட்டும் சொல்லலையே.. சில மூட நம்பிக்கை உடயவங்களை மாத்தறது ரொம்ப கஷ்டம்..ஓகே அங்கிள் நான் என் இடத்துக்கு போறேன்..அப்புறம் பாப்போம்..ப்ரியாவ கேட்டதா சொல்லுங்க” என்று விட்டு கிளம்புகையில் பக்கத்து சீட்டில் உள்ள பெண்ணை பார்த்தாள்.

நல்ல மைதாவில் செய்த பூரி போல உப்பலாய் அழகாய் இருந்த அவளை பார்த்து விட்டு சேஷனிடம், “அங்கிள் ..ம்ம்ம்..உங்களுக்கு செம ராசி அங்கிள்.அம்சமான ஆள் கம்பணிக்கு கெடைச்சாச்சு..எனக்கும் போட்டு குடுக்க நியூஸ் கெடச்சாச்சு” என்று கலாய்த்துவிட்டு கிளம்பினாள் மதி..

மதி தனது இருப்பிடத்தை கண்டுபிடித்து அமரவும்,வண்டி கிளம்பி செல்லவும் சரியாக இருந்தது.இறுதியாக லோனாவாலா ரயில் நிலையம் வருகையில் திடீரென்று வண்டி நிருத்தப்பட்டது..திடீரென்று ஏதோ ஊர்வலம் செல்லும் கோஷமும், சத்தமும் கேட்டது. பெரிய மதசார்பு கட்சி தலைவர் ஒருவர் இறந்ததால் வண்டிகள் முந்திய ஸ்டேஷன் லேயே நிறுத்தப்படுவதாக பேசிக்கொண்டார்கள். பயணிகளின் முனங்கல்கள் அதிகமாகிட, நிறைமதி கீழே இறங்கி என்ன செய்வது என்று யோசிக்க தொடங்கினாள், மும்பை அலுவலகத்திருக்கு போன் செய்து விசாரிக்க, அங்கிருந்து அமளி அடங்கும் வரை காத்திருக்கும்படி பதில் வந்தது.

ஐயோ என்று இருந்தது மதிக்கு..திடீர்ன்று ராமசேஷன் அங்கிளின் நினைவு வர, அவர் இருந்த பெட்டியை நோக்கி நடக்க தொடங்கினாள். கூட்டம கூட்டமாக நின்று மக்கள் பரிதவித்து கொண்டிருக்க, சேஷனின் பெட்டிக்குள் ஏறியவள் அவரை காணாமல் திகைத்தாள்.

அவரோடைய லக்கேஜ்கள் எல்லாம் அப்படியே இருக்க அவரைக் காணவில்லை.அருகில் இருந்தவர்களிடமிருந்தவர்கள் யாருக்கும் தெரியவும் இல்லை.எல்லோருமே எப்படி செல்வது என்ற பதற்றத்தில் இருக்க, மதி ஒருவேளை அங்கிள் கழிவறை சென்றிருக்கலாம் என்ற எண்ணத்தில், காத்திருக்க தொடங்கினாள்.

நேரம் ஆக ஆக, மும்பை செல்பவர்கள் ஒவ்வொருவரும் வேறு ஏற்பாடு செய்ய தொடங்கி செல்ல தொடங்க, டெல்லி செல்பவர்கள் வேறு வழியின்றி காத்திருக்க தொடங்கினர்.

கிட்டத்தட்ட கால் மணி நேரமாகியும் ராம சேஷனை காணாமல் மெதுவே கழிவறை பக்கம் சென்றாள் மதி..அங்கும் கூட்டமாக இருக்கவே விலகியவள், சட்டென்று உள்ளுணர்வு உந்த கூட்டத்தை விலக்கி பார்த்தவள்,

“ஐயோ அங்கிள்..என்ன ஆச்சு உங்களுக்கு என்று அலறினாள்.

அங்கிருந்த எவரும் கண்டுகொள்ளாமல் அவரவர் போக்கில் சென்று கொண்டிருக்கக கழிவறை ஓரமாக விழுந்து கிடந்தார் ராமசேஷன்..சட்டென்று அவரை நிமிர்ததியவள்,ஹெல்ப்..ப்ளீஸ் ஹெல்ப் மீ..இவரை தூக்குங்க என்று அவளை கடந்து சென்ற ஒருவரிடம் கேட்க..

”இத்தினி தேர் கஹாங் கயி தீ தும்..ஏ ஆத்மி தோடி தேர் கே பஹலே ஹி கிர் கயா..” என்று இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தாய் என்று ஹிந்தியில் கூறிக்கொண்டே அவரை தூக்கி செல்ல உதவி புரிந்தார்.

உள்ளே தூக்கி சென்றவுடன், உடனடியாக கூட்டத்தை விலக்கி, காற்று வர வழி செய்தவள், அவரது சட்டையை தளர்த்தி மார்பை அமுக்கி விட தொடங்கினாள்.“ யாரச்சும் போயி இங்க உள்ள ரயில்வே டாக்டர வர சொல்லுங்க ப்ளீஸ் என்று கூறியவள், தனது மொபைலை எடுத்து மும்பை அலுவலகத்தை தொடர்பு கொள்ள முயன்றாள். இருமுறை முயன்ற பின்னும் தொடர்பு கிடைக்காததால், மீண்டும் தன் கவனத்தை ராமசேஷனின் பால் திருப்பியவள் அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்க தொடங்கினாள். அதற்குள் அவளது மொபைல் ஒலி எழுப்ப, அவசரமாக காதில் வைத்து பேச தொடங்கினாள்.

ஆனால், கார் தற்போது வரமுடியாத நிலை மட்டுமே பதிலாக வந்ததில் மதியின் முகம் வாடியது.

ராமசேஷனின் நிலையை பார்த்தால் காத்திருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் எவ்வளவு முக்கியம் என்று தோன்ற, அருகில் ஏதாவது மருத்துவமனை இருக்கிறதா என்று விசாரிக்க தொடங்க, அதற்குள் ரெயில்வே டாக்டர் வந்து சேர்ந்தார்.

அவர் ராமசேஷனை பரிசோதித்து விட்டு “சிவியர்அட்டாக் ஆக இருக்கும் உடனடியாக மருத்துவமனை செல்வது நல்லது” என்று கூறி மதி செய்த முதலுதவிகளை கேட்டு “குட்..நான் எனக்கு தெரிந்த டாக்ஸி வாலா ஒருவனை வரசொல்லியிருக்கிறேன்.அவனோடு நீ செல்..உடனடியாக ஆஸ்பிடல் செல்வது அவசியம் என்றார்.

ஒருவழியாக, டாக்ஸி யில் ஏற்றி மருத்துவமனை அடையும் வரை மதியின் உயிர் அவள் கையில் இல்லை என்றே சொல்லலாம். மருத்துவமனையின் விதிப்படி,நெருங்கிய உறவினரின் கையெழுத்து இருந்தால் தான் அனுமதிக்க முடியும் என்று கூற, மதியோ சற்றும் யோசிக்காமல் தன்னை அவர் மகள் என்று கூறி கையெழுத்து போட்டாள்.

உடனடியாக 25000 அட்வான்சாக கட்ட சொல்லி அவரை ஐ சி யு வில் அனுமதித்து விரைவாக சிகிச்சை தொடங்கியது. தன்னுடைய கிரெடிட் கார்டை உபயோகித்து பணத்தை கட்டினாள் மதி.

ஆன்ட்டியிடம் பேச வேண்டுமே என்று நினைக்கும்போதே அவளுக்கு ஆயாசமாக வந்தது. வேறு யாரிடம் பேசலாம் என்று நினைக்கும்போதே, ப்ரியாவின் நம்பர் தன்னிடம் இல்லை என்றும் தோன்றியது.

யோசிக்கும்போதே அங்கிளின் செல்லில் இருக்குமே என்ற எண்ணம் தோன்ற, அப்புறம்தான் வண்டியிலிருந்து அவருடைய உடைமைகள் எதுவும் எடுக்க படாதது நினைவிற்கு வந்தது. இருந்தும், பாக்கெட்டில் இருந்தால் ஆஸ்பிடலில் எடுத்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் அங்கிருந்த நர்சிடம் கேட்க..அவரும் எடுத்து வைத்திருப்பதாக கூறி கொடுத்தார்.

செல்லில் ப்ரியாவின் நம்பரை எடுத்து டயல் செய்ய அது நாட் ரீச்சபிள் என்று வந்தது.ப்ரியாவின் கணவர் நம்பருக்கு தொடர்பு கொள்ள அது உடனே எடுக்கப்பட,விவரம் கூறி விட்டு ஆன்ட்டியிடம் தகவல் சொல்ல சொல்லி விட்டு வைத்தாள்.

ஆஞ்சியோ செய்து விட்டு கண்டிப்பாக சர்ஜெரி செய்தே ஆக வேண்டும் என்று டாக்டர் கூறிவிட ,பல மணி நேரத்திற்கு பிறகு ஆப்பரேஷன் முடிந்து ராமசேஷன் உயிருக்கு ஆபத்தில்லை என்ற நல்ல செய்தியை கூறினார் டாக்டர். இரண்டு யூனிட் இரத்தம் தேவைப்பட, நல்ல வேலையாக அது மதியின் ரத்தத்தோடு ஒத்துபோகவே, அவளே கொடுத்தாள். அது வரையில், அவரை சேர்ந்த எவரும் வரும் சூழ்நிலை நிலவ வில்லை.அடிக்கடி அவர் மகள் ப்ரியாவும் அவள் கணவரும் மதியை தொடர்பு கொண்டு பேசி நிலையை தெரிந்து கொண்டனர்.அவர்கள் கிளம்பி விட்டதாகவும் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் மதி இருக்க வேண்டிய கட்டாயம்.எனவே தனது அலுவலகத்திற்கு போன் செய்து விவரம் தெரிவித்து அவர்களிடம் பாட்டும் வாங்கி கட்டிக்கொண்டாள்.மறுநாள் மதியம், ப்ரியா வந்து, அப்பாவை பார்துக்கொண்டதுக்கு ஆயிரம் நன்றி கூறினாள். அவள் வந்ததும் விபரம் அனைத்தையம் கூறிவிட்டு கிளம்பினாள் மதி,.

அதற்குள் சற்றே கலவரம் அடங்கியிருக்க, போக்குவரத்து சீராக தொடங்கியது.அங்கிருந்து மதி கிளம்பவும் மாமி வரவும் சரியாக இருந்தது.வந்தவுடன் பங்கஜம் மாமி ஓஒ என்று அழத்தொடங்க, ப்ரியா அவரை சமாதான படுத்தினாள்.நிறைமதி செய்த உதவிகளை பற்றி ப்ரியா கூறவும்,மாமி விக்கித்து போய் அமர்ந்து விட்டார்.எதுவும் பேசவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து சேஷனை வார்டுக்கு மாற்றினார்கள். மதிக்கும் வேலை பெண்டு நிமிர்ந்து விட்டதால் போனில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. அவளும் அன்று தான் மாலை வேளையில், சேஷனை பார்க்க வந்தாள்.வரும்போதே அவளுக்கு உதறல் தான்..மாமி என்ன சொல்வாளோ என்று..

என்னதான் மனத்துணிவு இருந்தாலும் நம்மை குறித்து ஒருவர் சொல்லும் சிறு சொல்லை தாங்கும் துணிவு, சில சமயங்களில் நம்மை விட்டு விடை பெற தான் செய்கிறது. துணிவை திரட்டி கொண்டு ரூம் நம்பர் விசாரித்து
உள்ளே சென்றாள்.

இவளை பார்த்த மாமி எதுவும் சொல்லவில்லை.ப்ரியா தான் வரவேற்றாள்.
அப்போதுதான் உறக்கம் கலைந்த சேஷேன், “வாம்மா மதி..ரொம்ப நன்றிம்மா..அன்னிக்கு மட்டும் நீ இல்லன்னா இன்னிக்கு நானில்லை.ஏதோ விட்டகுறை தொட்ட குறைம்மா..நீ என்ன காப்பாத்திட்ட”..என்று கூறுவதற்குள் அவருக்கு மூச்சு வாங்கியது..

“ ஹய்யோ அங்கிள் இப்ப என்ன, அந்த இடத்துல ப்ரியா இருந்தாலும் இத தான் பண்ணிருப்பாங்க..அத தான் நான் பண்ணிருக்கேன்.இத பெருசா சொல்ல வேணாம் அங்கிள்..நாளைக்கே எனக்கு எதாவதுன்னு நீங்க செய்ய மாட்டீங்களா என்ன ? ம்ம்..சர்ஜெரி பண்ணிருக்கிற பய்யன் இப்படி வாய் பேச கூடாது தெரியுமா..கீப் கொயட்..என்றாள் விளையாட்டாய்..

“அப்புறம் எனக்கு ஒரு சந்தேகம் அங்கிள் கேக்கவா..என்று கூற,ஏதோ பேச்சை மாற்ற போகிறாள் என்று தெரிந்து கேளும்மா என்றார் புன்னகையோடு..

“ அது ஒண்ணுமில்ல அங்கிள் நீங்க ட்ரைன்ல போகும்போது உங்க பக்கத்து சீட் ல இருந்தவங்க என்ன ஆனாங்கன்னு கேக்கலாமுன்னு தான்..”என்று இழுத்தாள்.

“ அட போம்மா..அது பாதிலேயே விட்டுட்டு போயிடுச்சும்மா..அந்த சோகத்துல தான் மயங்கி விழுந்திட்டேன்” என்றார்.

“அப்போ சரி அங்கிள் ..மாமிகிட்ட பத்த வச்சிடவா..என்று சிரிக்க, அதுவரை ஏதும் பேசாத பங்கஜத்தை ஏறிட்டு பார்த்தார் சேஷன்.

சரி அங்கிள், ப்ரியா, நான் கெளம்பறேன்..லேட் ஆகிட்டு..என்றவள்

மாமியிடமும் வரேன் மாமி என்று கூறினாள்.அதற்குள் ப்ரியாவும் அம்மாவை பார்த்து கண்ணை காட்ட, புரிந்து கொண்ட பங்கஜம், “நில்லும்மா நிறைமதி, என்றாள்.

“என்னைய மன்னிச்சிடும்மா..பிறக்கும்போதே நமக்கு இறப்புக்கான நாள் குரிக்கப்படுது..அதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் இருக்கும்னு நெனைச்சு இப்படி உன்னை ஒதுக்கு உன் மனச காயபடுத்தினேன் ன்னு தெரிலம்மா..ஏன்னா நான் வளர்ந்த விதம் அப்படி..உன்ன அமங்கலம்னு சொல்லி திட்டின என்னை சுமங்கலியா வாழ வச்சிருக்கரவ நீதான்மா..எல்லாத்துக்குமே மனசுதான் காரணம்னு நான் புரிஞ்சிகிட்டேன். இனி, சகுனம் எல்லாம் பாக்க மாட்டேன்மா..”என்று கலங்கிய குரலில் கூறினார் பங்கஜம்.

“ ஐயோ மாமி..நீங்க எதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு..அதான் சொல்லிடீங்களே வளர்ந்த விதம்னு..நடக்குற எதுக்கும் நாம பொறுப்பில்லை மாமி..அதோட எதுவுமே தப்புன்னு சொல்ல முடியாது..ஏன்னா, ஒருத்தர் பார்வைல சரின்னு படறது,அடுத்தவங்க பார்வைல தப்பா தோணும்.அப்படி பாத்தா தப்புன்னு ஒன்னு இல்லவே இல்ல இல்லையா? அப்போ மனசோட பார்வை தான்,சரி தப்புக்கு காரணம்..அவ்வளவுதான் மாமி..சீர் அப் மாமி “

“மதி..உன்னால எப்டி இப்படி இருக்க முடியுது..எங்க அம்மா உன்ன எப்படில்லாம் குத்தி காமிச்சு இருக்காங்கன்னு எனக்கு தெரியும் அப்படி இருக்கும்போது ,யார்கிட்டயும் குறை கண்டுபிடிக்காம, எல்லாரையும் ஏத்துக்க முடியுது “ என்றாள் ப்ரியா.

“ அது ஒண்ணுமில்லை ப்ரியா..நம்ம மனசு இருக்கே அது பாராஷுட் மாதிரி..தேவைப்படும் போது அகலமா விரிச்சு பறக்கணும்னு முகில் அடிக்கடி சொல்லுவார்.நாம மனச லேசா வச்சுகிட்டோம்னா அதுவும், மேல மேல உயர்ந்த எண்ணங்களோட பறக்கும் இல்லையா,,அதான், நான் தேவையில்லாத விஷயங்கள உள்ள விடறதே இல்லை..எப்பவும் மத்தவங்க கண்ணோட்டத்துல, ஒரு தடவ சிந்திச்சு பாத்தா யாரையுமே வெறுக்கவும் முடியாது..குறையும் கண்டுபிடிக்க முடியாது..இது முகில் எனக்கு கத்து குடுத்த பாடம்.அத முதல் படியா வச்சுக்கிட்டு நா மேல ஏறிக்கிட்டு இருக்கேன்.. ப்ரியா..”

“இருந்தாலும் எங்க அம்மா உன்ன அதிகமா காய படுத்திருக்காங்களே..”

“இல்லை ப்ரியா..அதுவும் ஒரு பாடம்தான் எனக்கு..எந்த இடத்துக்கு போகலாம்..எங்க போக கூடாது..யார் எப்படில்லாம் நினைப்பாங்கன்னு முன்கூட்டியே யோசிக்கற பக்குவம் மாமியால தான் எனக்கு கெடைச்சது. சோ, அவங்களும் எனக்கு குரு ன்னுதான் சொல்லணும்..தேங்க்ஸ் மாமி..”

அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த பங்கஜம்,நீ வயசுல சின்னவோ..ஆனா மனசு உனக்கு பெருசும்மா..இனிமேல் எனக்கு ரெண்டு பெண் பிள்ளைகள்..உன்னையும் சேத்து..கேட்டத மட்டும் பாத்தா நான் இனி உன்மூலமா நல்லதும் செய்ய போறேன்” என்றாள்

“சரி மாமி..நான் கெளம்பனும்..அங்கிள், சீக்கிரமா உடம்பு குனமாக்கிகிட்டு வீட்டுக்கு வந்துடுங்க சரியா ? என்று விட்டு கிளம்பினாள்.

சகுனத்தடை என்று தான் சபித்த பெண், சகுனத்திற்கான வேகத்தடையாகி சாதனை படைப்பாள் என்று நம்பிக்கையோடு அவள் செல்வதையே பார்த்தார்கள் பங்கஜம் குடும்பத்தார். சகுனம் குணமுள்ள மனிதர்களுக்கு
சாதாரணமே…

– 06-12-2012

Print Friendly, PDF & Email

1 thought on “சகுனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *