பெரிய மனுஷி

periyamanushi
 

சூரியன் பிடிக்குள் உலகம் கைமாற இன்னும் நேரம் இருக்க, இருளையும் குளிரையும் போர்த்திச் சுருண்டு கிடந்தது ஊர். ராக்கோழிகளின் ஒலியும் நின்று, தீராச் சீக்காழிகளும் ரணம் மறந்து கண் அசந்த இரண்டாம் ஜாமத்தில், இமைக்கவே கற்றுக்கொள்ளாதவளாக விழித்துக்கிடந்தாள் பவானி.

விஷயம் வெளி வந்தால் நிகழவிருக்கும் விளைவுகளை மனது திரும்பத் திரும்ப எடுத்துச் காட்டி எச்சரிக்க, பதிலாக சொல்லிக்கொண்ட எந்த தேறுதல் கம்பளியும் பலனளிக்காமல் உள்ளும் புறமும் நடுங்கின. யாரும் உணராமல் தான் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ள ஒரு யுத்தத்தை சந்திக்கும் சக்தி சுத்தமாக இல்லை. எப்படிச் சமாளிப்பது? இடைவெளியற்றுக் கேள்வி அவளைச் சுற்றிச் சுழன்று கும்மியடித்தது. விடியலை எதிர்கொள்ளும் துணிவின்றி வெடவெடப்பின் பிடியில் கிடந்தது உடம்பு.

முந்தைய நாள் படுக்கைக்கு வரும் வரையிலும்கூட எந்த சமிக்கையும் இருந்திருக்கவில்லை. ஊர் அடங்கி அவளும் தூக்கத்துள் ஆழ்ந்திருக்கையில்தான் நிகழ்ந்தது அது..

வெட்டுக்கத்தியை சரக்கென்று ஒரு சொருகல் சொருகி அதே வேகத்தில் வெளியே இழுத்ததுபோல மின்னலாக அடி வயிற்றைத் தாக்கியது ஒரு அசுர வலி. அதுவரை பரிட்சயமில்லாத வேதனை. இருந்ததன் துளி தடயமும் விட்டுச்செல்லாமல் தொலைந்து போனது தூக்கம். பதற்றமும் படபடப்புமாக எழுந்து உட்கார முயற்சிக்கையில் அதை உணர்ந்தாள்.. ஈரக் கசகசப்பு. உள்ளாடையை நனைத்து உடலைத் தொட்டது திரவம். சன்னமான வெப்பக் கதகதப்பில் தொடங்கி அதே வேகத்தில் நிரந்தர ஜில்லிப்புக்கு மாறியது.

சமீபமாக திரும்பத் திரும்ப பேச்சுக்கு உள்ளான விஷயம் என்பதோடு ‘இது.. இது.. இப்படித்தான்..’ என்று நாசூக்காக சொல்லவும் பட்டிருந்ததால் ஈரத்தை உணர்ந்ததும் அவளுக்கு அந்தச் சந்தேகம் வந்தது. பாத்ரூமுக்குப் போய்ப் பார்த்து உறுதிப்படுத்தினாள்.

பவானி ‘பெரிய மனுஷி’ ஆகிவிட்டாள்.

‘எத்தன தரம் வேண்டிகிட்டேன். காதுலயே வாங்கிக்கலையா கடவுளே? எல்லாச் சாமியும் மோசம்.’ பயம், கோபம், ஆத்திரம், குழப்பம்.. வகைப்படுத்த முடியாத ஏதேதோ உணர்வுக் கால்களில் சிக்கி பந்தாடப்பட்டது மனது. நெருக்கத்தில் உறவுகள் இருந்தும், மனித சஞ்சாரம் துண்டிக்கப்பட்ட பெருவெளியில், பயமுறுத்தும் இருளில் தனித்து விடப்பட்டதுபோல உணர்ந்தாள். இனி இதுதான் மாறுதல் அற்ற நிரந்தரச் சூழல் என்பதுபோல மனம் கலங்கி அழுகை முட்டியது. சத்தத்தை உள்அடக்கும் முயற்சியில் உதவிக்கு வந்த பற்கள் தன் தடத்தை உதட்டின்மீது அழுத்தமாக பதியவைத்தன. ஒருக்களித்து உடலைக் குறுக்கி சுருண்டு படுத்தாள்.

பதினோரு வயது முழுதாக முடிவடையாத சிறுமி, வயதுக்கு மீறிய சுமையில் சிக்கித் தவிக்கும் பரிதாபம் தெரியாமல் ஆழ்கடல் அமைதியில் உறைந்திருந்தது நாயக்கர் காலனி.

கிராமமும் அல்லாத நகரமாகவும் இல்லாத ஊரில் காரும் லாரியும் விரையும் விஸ்தாரச் சாலைக்கு வெகு அருகில் இருந்தது அந்தச் சந்து. சிவப்பு, வெள்ளை மஞ்சள் என பல நிற பூக்களையும், கொஞ்சம் நிழலையும் தவிர வேறு சிறப்புக்கள் அற்ற வாசமில்லா காகிதப்பூ மர வேலிக்கு நடுவே இரண்டடி அகலமும் அறுபதடி நீளமுமாக நீளும் பாதையின் முடிவில் சுழித்து திரும்பும் ஒரு வளைவுக்குப் பின்னால் இருந்தன ஒரு டஜன் வீடுகள். வீடுகளின் உள்ளிருப்பை வளைவுக்கு வரும்வரை யாராலும் யூகிக்க முடியாது. கண்ணாமூச்சி விளையாட்டில் ஒளிந்துகொள்ளும் பிள்ளைபோல வெளி உலகிலிருந்து தன்னை மறைத்துக்கொண்டு, எந்நேரமும் கேலியும் கிண்டலுமாக பெண்களின் ஒலியால் நிறைந்திருந்த அந்த செவ்வகச் சந்தில்தான் ராதிகாவின் மகள்கள் பவானியும் வாணியும் பிறந்ததும் வளர்வதும்.

வாணி பிறந்த அடுத்த ஒன்றரை வருடத்திலேயே பவானியும் வந்துவிட்டாள். அடுத்தடுத்து பெண்களாகவே பிறந்ததில் பெற்றவர்களுக்கு வருத்தமோ வளர்ப்பில் சிக்கலோ இருந்திருக்கவில்லை. அந்தக் குறை வாணிக்கு இருந்தது, யாரும் அறியாமல்.

உருவத்தில் ஏற்பட்ட முரண்தான் முதல் சுழி. தொட்டால் ஒடிந்துவிடுவாள் போல மெலிதான உருவம் வாணிக்கு. அவளைப் பார்க்கும் யாருக்கும் ‘ஐயோ பாவம்’ ‘பயந்த புள்ள’, ‘பரம சாது’ என்பதைத் தவிர மாற்றுக் கருத்து ஏற்படாது. அதற்குப் பொருத்தமானதாகவே இருக்கும் அவள் பேச்சும் செயல்களும்.
வாணி மீதான கணிப்புகளின் எதிர்ச்சொற்கள் பவானிக்கானவை.

நாயக்கர் காலனியில் சிறு பிள்ளைகள் என்று இவர்களைத் தவிர வேறு யாருமில்லாததால் செல்ல கவனிப்பும் கவனமும் அவர்கள் மீது சற்று கூடுதலாகவே இருந்தது. பெரியவர்களுக்கு வைத்து விளையாடக் கிடைத்த உயிருள்ள பொம்மையாக இருந்தாள் பவானி. அழு.. சிரி.. ஆடு.. பாடு.. என்று சாவி கொடுத்து அவளை தங்கள் விருப்பத்திற்கேற்ப இயக்கினார்கள். அவர்களின் தேவைக்கு பவானி அளவுக்கு வாணியால் ஈடு கொடுக்க முடியவில்லை. அம்மா முந்தானைக்குப் பின்னால் மறைந்து, தங்கைக்கான கொஞ்சல்களைப் பார்த்தபடியே துவங்கியது வாணியின் விபரப் பருவம்.

இருவரையும் சேர்த்துப் பார்க்கும் புதியவர் யாரும் வாணிதான் மூத்தவள் என்று ஒரு போதும் சரியாகச் சொல்லியதே இல்லை. குறைந்தபட்சம் இரட்டைப் குழந்தைகள் என்றிருந்தாலாவது மனது சமாதானப்பட்டிருக்கும். அதுவும் அற்ற தப்பித பதிலில் தான் மட்டம்தட்டப் படுவதாக சலித்துப் போவாள் வாணி.
பெரியவள் உடுத்தி அளவு சிறுத்த உடைகள் அடுத்து உள்ளவர்களுக்கு சொந்த மாகும் ஊர் வழக்கம் இவர்கள் விஷயத்தில் மாறிப்போனது. பவானியின் உடைகள் அவளுக்கு உதவாது என்ற நிலையில் வாணியிடம் வந்தன. ‘அளவுதான் சிறுசாச்சே தவிர வேற சேதாரமில்லாமல் துணி நல்லா இருக்கு தூக்கிப்போட மனசு வரலை’ என்று பெற்றவள் தரப்பில் நியாயம் சொல்லப்பட்டாலும் அதில் தான் அவமானத்திற்கு உள்ளாவதாக நொந்து போனாள்.

பவானியின் துறுதுறுப்பு வீட்டு வேலைகளிலும் நீள, அதன் நறுவிசு பார்த்து, “உங்களுக்கு என்னக்கா.. தோளுக்கு வளர்றதுக்கு முன்னமே கைக்கு உதவ ஆளாச்சு. இவ கல்யாணத்துக்கு வீட்டோட மாப்பிள்ள பாருங்க.” என அசந்தது சுற்றம். பாராட்டின் ஊக்கத்தில் ‘இன்னும் இரண்டு வேலை இருந்தா சொல்லுங்க..’ என்பது போல பரபரப்பாள். அந்த நேரங்களில் வாணியை ஒப்பிட்டு யாரும் குறை சொல்லாதபோதும், தான் கவனிப்புக்கு உள்ளாகாதது அவள் மனதில் தாழ்வை விதைத்தது. அதன் பொருட்டு தன் சுபாவத்தை மாற்றிக்கொள்ள முடியாதவள் ஆற்றாமையில் புதைந்தாள். அவள் மனதின் வலி அறியாமலேயே அல்லது அறியாததாலேயே அடுத்தடுத்த நிகழ்வுகளும் அந்த வெறுப்புக்கு நெய் வார்த்தன.

பவுர்ணமி நாள் ஒன்றில், காலனி மொத்தமும் கிணற்றடியில் கூடி, நிலா காய்ந்தபடியே கூட்டாஞ்சோறு சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் ஆண்டாள்தான் முதன் முதலாக அந்தப் பேச்சை ஆரம்பித்தாள்.. ‘ராதுக்கா சின்னக்குட்டி பெரியவள முந்திகிட்டு சீக்கிரமா வேலை வெச்சிடும்போல தோணுது..’ அவள் அப்படி சொல்லி முடித்ததும் மற்ற பெண்கள், இதுவரை கவனிக்கத் தவறி விட்டோமே என்பது போல பவானியின் உடலை பார்வையால் எடைபோட்டனர். ஆண்டாளின் கணிப்பு தவறு என்றோ அப்படி யெல்லாம் ஆகாது என்றோ ஒருவருமே சொல்லவில்லை. அப்படிச் சொல்லாததும், மாறாக, “நான்கூட சொல்லணும்னு நெனச்சேன்”, “எனக்கும் அப்படித்தான் தோணுது”
என்றும் ஆமோதிப்பாய் வந்த வார்த்தைகளும் வாணிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

‘வயசு வித்தியாசம் அதிகமில்லாம அடுத்தடுத்து பொண்ணாப் பொறந்தா இப்படியுந்தான் ஆகும். இதென்ன கல்யாணம் காட்சியா? நாம பார்த்து முடிவு பண்ண.. பொம்பளை வயசுக்கு வர்றதும், பருவம் பொய்க்காம மழை பொழியறதும் பகவானா பார்த்துப் பண்ற காரியம். எவ முந்துனாலும் ஏத்துக்க வேண்டியதுதான்.” அங்கம்மா பாட்டி அனுபவம் பேசி இன்னும் எரிச்சலை மூட்டினாள்.

பெண்மையின் அடையாளம் பெறுவதிலும் தங்கை தனக்கு போட்டிக்கு வந்துவிட்டாள் என்கிற எண்ணம் வாணியின் மனதில் ஒரு வெறுப்புக் குவியலாக மண்டியது. “எனக்கு தூக்கம் வருது. போறேன்” விசுக்கென்று எழுந்து பவானியை முறைத்தபடியே போனாள். அதுவரை இல்லாத புதுப் பார்வை தன் மீது படிந்ததில் ஒருவித வெட்கமும், அக்காவின் பார்வை பற்றிய பயமுமாக திரும்பினாள் பவானி. அதன் பிறகு திரும்பத் திரும்ப அந்தப் பேச்சு எழ, வாணிக்கு அங்கு யாரையுமே பிடிக்காமல் போனது.

அந்தச் சமயத்தில்தான் பவானி ஆறாம் வகுப்பும் வாணி ஏழாம் வகுப்புமாக புதிய உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்திருந்தனர். அங்கு வாணிக்கு கிடைத்த வகுப்புத் தோழிகள் நான்குபேர் பக்கத்து குடியிருப்பில் இருந்தனர். விடுமுறை நாட்களில் அவர்கள் வாணியைத் தேடி வரத்துவங்கினர். பகலெல்லாம் இவர்கள் வீட்டில் விளையாடி, களைத்தபோது திரும்பினார்கள். அதுவரை சமவயது பிள்ளைகள் என்று யாறுமற்று அக்காவும் தங்கையுமாகவே அடித்தும் பிடித்துமாகச் சலித்தவர்களுக்கு புதியவர்களின் வருகையில் வார்த்தைகளில் அடங்கா சந்தோஷம். தோழிகளுக்கு விதம்விதமாய் விளையாட்டு தெரிந்திருந்தது. ‘என் ப்ரெண்ட்ஸாக்கும்..’ என்று வாணி பிரித்து வைத்தாலும் அக்கா அக்கா என்று பவானி அவர்களையே சுற்றிச் சுற்றி வந்தாள்.

‘குலை குலையா முந்திரிக்கா நரியே நரியே சுத்திவா கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்?..’ கேட்டுக்கொண்டே கையில் கை குட்டையை சுழற்றியபடி வட்டத்தைச் சுற்றி வந்தாள் வாணி. பவானியை தாண்டும்போது அவள் கையில் துணி காணாமல் போயிருந்தது. அதை கண்டுகொள்ளத் தவறி அக்காவிடம் கொட்டு வாங்கி அவுட் ஆனாள் பவானி. கொட்டு பெற்று வெளியேறுவதுதான் ஆட்டத்தின் விதிமுறை என்றாலும் ‘ணங்’ என்று இறக்கப்பட்ட அழுத்தத்தில் வலி சுருசுருவென ஏற குபுக்கென கண்ணீர் எட்டிப்பார்த்தது. அது விளையாட்டுக்கானதல்ல, வெறுப்பின் பதிவு என்பது புரிந்தது.

‘பெரிய மனுஷி’ பேச்சுக்குப் பிறகுதான் அக்கா இப்படியான வன்முறையிலும் இறங்குகிறாள் என்று தெரிந்தும் ஏதும் செய்ய இயலாதவளாக இருந்தாள். மீறியும் கேட்டால், “தொட்டாச் சிணுங்கி யெல்லாம் ஆட்டத்துக்கு வேண்டாம்.” என்று விலக்கி வைப்பாள். அல்லது “இது கூட நான் விளையாட வரலை” என்று விலகி விடுவாள். அக்கா வெளியேறினால் பின்னாலேயே மற்றவர்களும் போய்விடுவார்கள். எப்படிப் பார்த்தாலும் ஒதுக்கப்படும் தண்டனைக்கு உள்ளாகப் போவது தான்தான் என்பது புரிந்து, அந்த வலிக்கு தலை வலியே மேல் என்று கொட்டு விழுந்த இடத்தை தேய்த்துவிட்டபடியே விளையாட்டைத் தொடர்ந்தாள் பவானி.

கொட்டுக்களும் தொட்டு விளையாட்டு என்று முதுகில் விழும் ஆத்திர அறைகளும் நாளுக்கு நாள் வீரியம் கூடிக்கொண்டே இருந்தன. தாங்கமுடியாத ஒரு நாளில், அழுதுகொண்டே அப்பாவிடம் விஷயத்தை கொண்டு போனாள். அவள் தலையில் இருந்த வீக்கத்தைப் பொறுத்து வாணிக்கு அன்று கண்டிப்போடு சிறிது அடியும் விழ, அதுவே அவளுக்குச் சாதகமாகிவிட்டது. ‘இனிமே என்கூட பேசாதே’ என்று மொத்தமாக வெட்டி விட்டாள். விளையாட்டிலும் தள்ளி வைக்கப் பட்டாள் பவானி.

தோழிகளின் வருகையும் வாணியின் விளையாட்டும் தொடர்ந்தன. திண்ணைத் தூணைப் பிடித்தபடி அவர்களைப் பார்த்துக்கொண்டே நின்றாள் பவானி, அக்கா எப்போதாவது ‘வா’ என்று கூப்பிடுவாள் என்ற நம்பிக்கையோடு. அனுமதி கிடைத்ததும் பாய்ந்து ஓடத் தயார் நிலையிலேயே அவள் காத்துக் கிடந்தும் வாணியிடமிருந்து அப்படியொரு வார்த்தை வரவே இல்லை. விளையாட்டின்போது அவர்கள் தவறவிடும் பொருட்களை ஓடிச் சென்று எடுத்துக் கொடுக்கும் பவானியின் தவிப்பைக் காணும் தோழிகள், “பாவம்ப்பா. கூப்பிட்டுக்கலாம்” என்று சிபாரிசுக்கு வந்தால் “அப்ப அவகூடவே விளையாடுங்க. நான் வரலை” என்றுவிடுவாள் வாணி. அதன்பின் யாரும் பவானிக்காக பரிந்து பேசவில்லை.

போகப் போக அக்காமீதான நம்பிக்கை நீர்த்துப் போய் தனியாகவே விளையாடத் தொடங்கினாள். அதற்கு வாகாக அவளுக்கு டீச்சர் விளையாட்டுதான் இருந்தது. உள் அறையில், மூடிய கதவுகளுக்கு பின்னால் குச்சியை தரையில் தட்டித் தட்டி சப்தம் எழுப்பி, “சத்தம் போடாதீங்க.. யாரும் விளையாடக் கூடாது.. விளையாடினா அடி கிடைக்கும்.. அமைதியா இருங்க..” என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு, தனக்குத்தானே பாடம் நடத்தி, இல்லாத பிள்ளைகளை அடித்துக்கொண்டே இருந்தாள். சுவர் முழுக்க கரித்துண்டு கிறுக்கல்களாகப் படர்ந்து கரைந்தது பவானியின் விளையாட்டு நேசம் போல.

மாற்று வழி தெரியாமல், அக்காவின் புறக்கணிப்பில் வாழப் பழகியவள், ‘பள்ளிக்கும் உடன் வராதே’ என்ற துரத்தலில்தான் மொத்தமாக உடைந்துபோனாள். நீண்ட அந்தத் தனிமைப் பயணம் அவளுக்கு சொல்லொணா துயரம் தருவதாக இருந்தது. மரங்கள் அடர்ந்த, அமைதியும் ரம்மியமும் சூழ்ந்த குறுக்குப் பாதை தனியாகச் செல்கையில் மேலும் மனதில் பாரத்தைக் கூட்ட, தூரத்தை சகித்து, மக்கள் அடர்ந்த, தார்ச் சாலையில் செல்லத் துவங்கினாள். அப்படியும் மவுனத்தின் பேரிரைச்சல் அழுத்தத்தில் மூச்சு திணறியது. அக்காவின் வெறுப்பு அவளுள் இட்டு நிரப்ப முடியாத வெறுமையை விதைக்க, வீடு திரும்பவே கசந்தாள்.

‘அக்கா மனசு மாறி தன்னோடு பேச வேண்டும். விளையாட்டுக்கு சேர்த்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை ஸ்கூலுக்கு கூட வர அனுமதித்தால் போதும்’ அவளறிந்த அத்தனை கடவுளுக்கும் வேண்டினாள். அந்த மாற்றம் நிகழ எதையும் விலையாக தர தயாராக இருந்தாள். இந்தச் சமயத்தில்தான் பவானி பெரிய மனுஷி ஆகியிருக்கிறாள்.

‘என்ன செய்வது? தான் முந்திக்கொண்டது தெரிந்தால் அக்காவுடன் இனி ஒரு வார்த்தைக்கும் வழி இல்லாமல் போய்விடுமே..’ இரவின் விலகலை பார்த்தபடியே யோசித்திருந்தவளிடம் விடியலில் முடிவு இருந்தது, ‘அக்கா வயசுக்கு வரும் வரை இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது’

தனக்குள் ஒரு ரகசியத்தை புதைத்து வைத்தபடி வெளிச்சத்துக்கு மாறியது நாயக்கர் காலனி.

ஓர் முழு இரவு தூக்கம் விலகியதில் பவானியின் கண்கள் சிவப்பேறி, சோர்ந்திருந்தன. பெண்மையின் பதிவை சுலபமாக ஏற்றுக்கொள்ளும் சக்தி இன்றி உடல் தளர்ந்திருந்தது. பயத்தில் காய்ச்சலும் சேர்ந்துவிட அசதி என்று அடுத்துவந்த நான்கு நாட்களை படுக்கையிலேயே ஓட்டினாள். உடல் வேதனைக்கு ஓய்வு கொஞ்சம் ஒத்தடம் கொடுத்தது.

‘அந்த’ நாட்களில் அம்மாவின் சமாளிப்பை அரசல் புரசலாக பார்த்திருந்ததால், செய்ய வேண்டியது பற்றிய சிறு தெளிவு அவளுக்கு இருந்தது. தேவையும் கவனிப்பும் இன்றி இரும்புப் பெட்டியில் தூங்கிக்கொண்டிருந்த அப்பத்தாவின் சீட்டிப் புடவை நாலாய் எட்டாய் இன்னும் பல பாகங்களாய் கிழிக்கப்பட்டு ஒவ்வொரு துண்டாய் காணாமல் போகத்தொடங்கியது.

வளர்சிதை மாற்றம் தன் வேலையை வெகு துரிதமாக துவங்கியதில், உடல் பூரித்து, பூக்க ஆரம்பித்தாள். ‘எது காட்டிக்கொடுக்குமோ’ என தன்னை கவனிப்பதையே முழு நேர வேலையாக வைத்திருந்தவளுக்கு சின்னச் சின்ன மாற்றங்களும் பெரிய அச்சத்தை தர, பிறர் பார்வை படாமல் அவற்றை மறைக்க மெனக்கெட்டாள்.

அதுவரை முட்டி தெரியும் குட்டைப் பாவாடைகளுக்கும் சின்னச் சின்ன சட்டைகளுக்கும் உடம்பைக் கொடுத்து வந்தவளுக்கு இப்போது அவற்றை தொடுவதே வெட்கக்கேடாகத் தோன்றியது. முழுக்கால் பாவாடையும் லூசான சட்டையும்தான் வேணும் என்று அடம்பிடித்து வாங்கினாள்.

அவள் சமாளிப்புக்குச் சவாலாக இருந்தது பருக்கள். ‘சின்னப் பொண்ணுகளுக்கு பரு வந்து பார்த்ததே யில்லையே இத வெச்சே கண்டுபிடிச்சுடுவாங்களோ..’ கலக்கத்தோடு, குமிழ் குமிழாய் முளைத்த பருக்களை வேக வேகமாக கிள்ளி பிய்த்துப் போட்டாள். நகத்தின் விஷக் கொத்தலை தாளாமல் வந்த பருவெல்லாம் புண்ணாகி குழி குழியாய் தன் தடத்தை பதித்துப் போனது. என்ன வென்று கண்டறிந்து கேட்பதற்கு முன் தானாவே சொன்னாள் “அம்மா முகத்துல அடிக்கடி சூட்டுக் கொப்பளம் வருது.”.

“வெயில் நேரத்துல வெளிய போகாத. நிறைய மோர் குடி எல்லாம் சரியாப் போயிடும்.” தன் வார்த்தைகள் நம்பப்பட்டதின் அடையாளமாக அம்மாவின் பண்டித பதில் வந்ததில் பவானிக்கு ஏகத்துக்கும் ஆறுதல்.

அம்மாவைப் போலவே காலனியின் பிற பெண்களையும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையற்று பிரசவித்த பூனையாக வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தாள். டீச்சர் விளையாட்டும் மறந்தது. அங்கு பாரி அண்ணன் வீட்டில் மட்டும்தான் டிவி இருந்தது. ஒளியும் ஒலியையும் ஞாயிறு சினிமாவையும் பார்க்க ஆசைப்பட்டுச் சென்றால் பக்கத்தில் உட்காரும் அங்கம்மாப் பாட்டி முகத்தை ஊடுருவியே விஷயத்தைக் கண்டுபிடித்துவிடுமோ என பயந்து அந்த நேரங்களில் கட்டிலில் படுத்தபடி கதைப் புத்தகங்கள் வாசிக்கப் பழகினாள். வயசு ஏறினாலும் பேச்சு மாறலையே என்று காலனி கொண்டாடிய அவள் மழலைப் பேச்சும் குழந்தை தனமும் அவளுக்குத் தெரிந்தே வெளியேற, மனதாலும் செயலாலும்கூட பெரிய மனுஷியாக மாறியிருந்தாள் பவானி.

வெளியே சாமர்த்தியமாக தப்பித்தாலும் உடலுக்குள் நிகழ்ந்த தாக்குதலில் திணறித்தான் போனாள். மாதாந்திர அந்த நாட்களில் தொடைகளில் ஊடுருவும் கடுகடுப்பு, உடல் நடுக்கம், ‘என்னை விட்டுடேன்..’ என்று தோள்ப் பட்டையை கெஞ்ச வைத்து இம்சிக்கும் குடைச்சல்.. என்று சிறு பெண்ணின் உடலில் பெரும் தாண்டவம் நிகழ்ந்தது. மொத்தமாக சக்தியை வீழ்த்தி வெற்றி பெற்ற களிப்பில் உடல் முழுக்க சர்வ சுதந்திரமாக வலி உலவுவதும், உயிரை மட்டும் விட்டு வைத்து உள்ளே சகலத்தையும் உருவிவிட்டதைப் போல அவள் சக்கையாகத் துவண்டு கிடப்பதும் மாதம் தவறாத நிகழ்வானது. கடந்துபோன நான்கைந்து மாதங்களில், முடிந்தவரை சமாளித்து, முடியாத தருணங்களில் ‘குளிர் காய்ச்சல்’ என்று சுருண்டு படுத்தாள். வலியை பொத்திப் பாதுகாக்கும் அவலத்திலிருந்து விடுபட்டு, நிஜம் சொல்லி அம்மா மடியில் தலை வைத்துப் படுக்கத் துடித்தது மனது.

இப்படியான ஒரு நாளில் பவானியின் சித்தி கல்பனா காணாமல்போனாள்.

கல்யாணமாகி மூன்று மாதம் கூட முடிவடையாத நிலையில் தங்கை தொலைந்துபோனதில் பவானியின் மாமா பதட்டத்தோடு ஓடிவந்திருந்தார். ஏன்? எதற்கு? எப்படி? என்று ஆளுக்கு ஆள் அரக்கப் பறந்தனர். கண்டுபிடிக்கும் வழி முறைகளைப் பற்றிய பேச்சில், ‘மை போட்டு பார்க்கலாம்’ என்றும் ஒரு யோசனை சொல்லப்பட்டது. பெல்லாரியில் காணாமல் போன கல்பனாவை கண்டு பிடிக்க பண்ணாரியில் இருக்கும் ஜோசியரை பார்க்க முடிவாகி, அம்மா, மாமாவோடு பவானியும் கிளப்பப்பட்டாள். வழியில், அவர்கள் பேச்சைக் கொண்டுதான் தானும் அழைத்துச் செல்லப்படுவதன் காரணம் அவளுக்குப் புரிந்தது.

‘வெற்றிலையில் மை போட்டுப் பார்த்தால் காணாமல் போனது இருக்குமிடம் தெரிந்துவிடும். வயதுக்கு வராத சின்னப் பெண்களின் கண்களுக்குத்தான் அது தெரியும். அதற்காகத்தான் தான் கூட்டிச் செல்லப்படுகிறோம்’ என்று தெரியவர மொத்தமாக நடுங்கினாள். ‘காணாமல் போனவரையே கண்டுபிடிக்கும் மந்திரவாதி என் விஷயத்தையும் கண்டுபிடித்துவிடுவார். என் கண்களுக்கு மையில் எதுவும் தெரியாது. உண்மை தெரிந்ததும் அம்மா என்ன செய்வாங்களோ?’ தவிப்பும் கலக்கமுமாக நீண்டது பயணம்.

மினுமினுக்கும் அடர்ந்த கறுப்பு மை அப்பிக்கிடந்த ஒரு வெற்றிலையை பவானியின் கையில் கொடுத்து “நல்லாப் பாரு. உருவம் தெரியும்..” என்ற ஜோதிடரின் மிரட்டல் குரல் பவானியின் வயிற்றைக் கலக்கியது. உற்று உற்றுப் பார்த்தாள். ஒன்றும் தெரியவில்லை. ‘அதைச் சொன்னால் தன்னிடம்தான் குறை என்று சொல்லிவிடுவாரோ.. தனக்கு உதவும் பொருட்டாகவாவது சித்தியின் இருப்பிடம் மையில் தெரிய வேண்டுமே..’ அவள் மனதின் ஒலி சிறு ஓலம் போன்று இருந்தது.

“உத்துப் பாரு தெரியும்.” திரும்பத் திரும்ப அழுத்திச் சொல்லப்பட அவளுக்கும் இலையில் ஏதோ மெல்ல அசைவதாகத் தோன்றியது.

“அது ஒரு பொம்பளையா?.. புடவை கட்டிருக்கா?.. பக்கத்துல ஆடு மாடு இருக்கா?.. தோட்டம் கிணறு தெரியுதா?.. மரம் செடி அசையுதா?..” ஜோதிடர் கேட்டுக்கொண்டே போனார்.

என்ன தெரியுது? என்று கேட்காமல் அவரே எடுத்துக் கொடுத்தது பவானிக்கு வசதியானது. அத்தனைக்கும் ‘ஆமாம்’ என்றே சொல்லி வைக்க, அவள் பதிலைக்கொண்டு ஜோதிடர் கல்பனா இருக்கும் இடம் என்று ஒன்றைக் குறிப்பிட்டு அனுப்பி வைத்தார். இரண்டொரு நாளில் கல்பனா எங்கிருந்தோ கண்டுபிடிக்கப்பட்டாள்.

கடைசிவரை தன்னைப் பற்றி ஜோதிடர் கண்டுபிடிக்காதது பற்றிய ஆச்சரியமும் நிம்மதியுமாக திரும்பினாள். அதே அளவு பயமும் ஆக்கிரமித்திருந்தது. வெளியே கேட்காத குரல் கெஞ்சிக்கொண்டே இருந்தது ‘அக்கா சீக்கிரமா வயசுக்கு வந்துடேன்..’

பவானியின் வேண்டுதலும் எதிர்பார்ப்பும் மிதம் மிஞ்சிய ஒரு நாளில் வாணி வயதுக்கு வந்தாள்.

“அட நாம நெனச்சதுக்கு ஏறுக்கு மாறால்ல நடந்து போச்சு..”

“பரவாயில்ல. வாணி சாபத்த வாங்கிக் கட்டிக்காம தப்பிச்சா பவானி..”

“மதமதன்னு உடம்பு வளத்திய வெச்சு மட்டும் எதையும் எடை போடக்கூடாது போ..” தங்கள் கணிப்பு தவறிப்போனதாக வேறு வேறு வார்த்தைகளில் சொல்லிக்கொண்டார்கள் நாயக்கர் காலனிப் பெண்கள்.

யாருடைய வார்த்தைகளும் பவானியை நெருங்கவே இல்லை. ஆறேழு மாதங்களாக செத்துக் கிடந்த அவள் சிறு பிள்ளை துடுக்கும் விளையாட்டுத்தனமும், வாணி வயதுக்கு வந்த அந்த ஒரு செய்தியில் சட்டென உயிர்ப்பித்துக்கொண்டன. “ஹை.. இனி எந்த திருட்டுத்தனத்துக்கும் வேலை இல்லை. அப்பத்தா சேலைய திருட வேண்டாம். அம்மா துணையோடவே பாத்ரூமுக்கு போகலாம். பருவை மறைக்க தேவையில்லை. அடுத்த மாசமே அந்த நாள் வந்ததும் அம்மாகிட்ட சொல்லிடணும். வலி வந்தா அம்மா ஏதாச்சும் மருந்து கொடுப்பாங்க. இனி அக்கா தன்னை விலக்கி வைக்க மாட்டா. பல்லாங்குழியும் பரம பதமும் அவளோடு விளையாடலாம். ஸ்கூலுக்கும் கூடவே போகலாம்.” நிகழ வேண்டும் என்றுகூட இல்லாமல் இந்த நினைப்பே அவளுக்கு அத்தனை இனித்தது. முகம் முழுக்க பூரிப்பு பூத்து, உடலில் அத்தனை செல்களிலும் பொங்கி வழிந்தது சந்தோஷம். அவளது ஒவ்வொரு அசைவும் நாட்டியம் போலவே இருந்தது. பிடித்ததுதான் என்றில்லாமல் தெரிந்ததையெல்லாம் பாடினாள்.

“மூணாம் நாளே தலைக்கு தண்ணி ஊத்தி சடங்கு வெச்சுடலாம். நூறு பேருக்கு விருந்து.” தாய்மாமாக்கள் முடிவு செய்தார்கள். திண்ணையில் ஓலை மறைப்பு கட்டி உலக்கையை பக்கத்தில் வைத்து வாணி உட்காரவைக்கப்பட்டாள்.

காலனியின் அத்தனை பேர் வீட்டிலிருந்தும் ஆளுக்கு ஒரு நேரம் என்று முறை வைத்து சம்படம் நிறைத்து பலகாரம் வந்து கொண்டே இருந்தது. நெய் விரவிய புட்டும், இனிப்புகளும், உளுந்து உருண்டைகளும் வீட்டை நிறைத்தன. அம்மா, நினைத்த போதெல்லாம் நல்லெண்ணெய் மிதக்க மிதக்க அரை வேக்காட்டு முட்டையை எடுத்து வந்தாள். வாணி, ‘வேண்டாம். வயித்துல இடமில்லே.. பசிக்கலே..’ என்றபோதும் விடுவதாயில்லை. “இப்ப உடம்புக்கு கொடுக்கற தெம்புலதான் பின்னால புள்ளைகளப் பெத்துப் போட முடியும். பேசாம சாப்பிடு.” திட்டித் திட்டி திணிக்கப்பட்டன வாயில். அத்தனையையும் பார்த்துக்கொண்டே இருந்தாள் பவானி, சொல்லத் தெரியாத ஏக்கத்தோடு.

மறுநாள் சடங்கு. வாணியின் தோழி பங்கஜம் மருதாணியை அரைத்து எடுத்து வருவதாகச் சொல்லியிருந்தாள். ‘மருதாணி வந்ததும் தானும் ரெண்டு கையிலேயும் வெச்சுக்கணும். நைட்டு முழுக்க வெச்சிருந்தா காலைல அழகாச் சிவந்திருக்கும்.’ நினைக்கும்போதே உடல் சில்லிட்டுச் சிலிர்த்தது பவானிக்கு.
விரல்களில் வைக்கப்படும் மருதாணியின் வண்ணம் நகத்தில் பதிந்து, நகம் வளர வளர அடிப்பாகம் வெளுத்து, ஆரஞ்சு வண்ணம் மேலெழும்பிக்கொண்டே இருக்கும் வண்ண மாற்றத்தைப் பார்த்து ரசிக்க அவளுக்கு பிடிக்கும். வாணிக்கு அலங்கரிக்க மல்லிகையுடன் மரிக்கொழுந்தைச் சேர்த்து சரமாகத் தொடுத்துக்கொண்டே பங்கஜத்தை எதிர்பார்த்து காத்துக்க கிடந்தாள் பவானி.

பாதிப் பூக்களை தொடுத்திருந்த நிலையில் கைகள் சோர்ந்து, வயிற்றில் சூடும் வலியும் சரசரவென்று பரவியது. அவளுக்குப் புரிந்துவிட்டது. மாதாந்திர அரக்கன். பூக்களை அப்படியே வைத்துவிட்டு எழுந்தாள்.

பவானியின் மருதாணி பித்து தெரிந்து நேராக அவளைத்தான் தேடி வந்தாள் பங்கஜம். கட்டிலில் அவள் அசைவற்றுக் கிடப்பதைக் கண்டு குரல் எழுப்பாமலே திரும்பினாள். ஆட்கள் நடமாட்டமும் இரைச்சலும் அதிகரித்திருந்த சூழலிலும் அரை மயக்கமாக தூங்கிப் போன பவானியை திடீரென கிட்டே வந்த மருதாணி வாசம் குலுக்கி எழுப்பியது. வாசத்தைப் பின் தொடர்ந்து போனாள். அது வாணியின் அறை நோக்கி இழுத்துப் போனது..

“பவானிக்கு ரொம்ப பிடிக்குமேனு நிறைய மருதாணிய அரைச்சுட்டு வந்தேன். அவளுக்கும் வெச்சு விடலாம்னு பார்த்தா அசையாமப் படுத்துக்கெடக்கறா..” பங்கஜம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

“விடு சனியன. அதுக்குத் திமிரு. அதுதான் மொதல்ல பெரிய மனுஷி ஆகும்னு எல்லாரும் சொல்லிகிட்டிருந்தாங்க. அந்த நெனப்புல திங்கு திங்குனு ஆடிகிட்டிருந்துச்சு. இப்ப நான் முந்திகிட்டேன்ல. அதான்.. பொறாமை.. ஒரு வேலையும் செய்யக் கூடாதுனு தூங்கற மாதிரி டிராமா போடுது. விடு. அதுக்கொண்ணும் மருதாணிய குடுக்க வேண்டாம். எனக்கு வெச்ச மிச்சத்த நீ வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிடு.” வெறுப்பின் உச்சத்தில் நின்று உமிழப்பட்ட வாணியின் அத்தனை வார்த்தைகளையும் கேட்டாள் பவானி.

எத்தனை முயற்சித்தும் அவளால் அடக்கவே முடியவில்லை அழுகையை.

கேவல் சத்தம் கேட்டு ‘என்னாச்சு?’ என்று பதறி வந்த அம்மாவின் கையில் முகம் புதைத்து தேம்பிக் கொண்டே கேட்டாள்..

“ஏம்மா என்னையும் பொண்ணா பெத்தீங்க?”

- 28-01-09 

தொடர்புடைய சிறுகதைகள்
ஆத்தா
“நாடி விழுந்து நாளு நாலாச்சே.. இன்னமும் மூச்சு நிக்காம இழுத்துகிட்டிருக்கே.. ஏ ஆத்தா சிலம்பாயி.. எங்கைய்யா சாத்தையா.. என்ன கணக்கு வெச்சி இந்த சீவனை இழுத்துக்க பறிச்சுக்கனு விட்டிருக்கீகன்னு வெளங்கலையே..” - இன்னைக்கு பொழுது தாண்டாது என்று தான் குறித்துக் கொடுத்த கெடு ...
மேலும் கதையை படிக்க...
வெளியே பலத்த மழை! வடக்கிலிருந்து தெற்காக சாய்வாக விழுகிறது சாரல். இரைதேடி இடுக்குகளில் புகும் நாகம்போல் கடைக்குள்ளே சரசரவென பரவுகிறது ஈரம். தண்ணீர் தொடாத இடமாகப் பார்த்து பசங்க ஆளுக்கு ஒரு பக்கமாக ஒதுங்கியிருக்கிறார்கள். பொழுதென்னவோ பிற்பகல்தான். ஆனால் அதனை சிரமப்பட்டுதான் நம்பவேண்டும். அத்தனை ...
மேலும் கதையை படிக்க...
எப்போதும் விருப்பத்துக்குரியதாக இருப்பது சமயத்தில் அதிகபட்ச வெறுப்புக்கும் உள்ளாகும் இல்லையா. அப்படித்தான் எனக்குப் பிடித்த, நான் சார்ந்திருக்கும் உத்தியோகம் இந்த நிமிடம் எனக்குப் பிடிக்காமல் போனது. நான் ஒரு பத்திரிகை நிருபர். இது சங்கீத சீஸன். இசைப் பிரியர்களின் வார்த்தைகளில் 'டிசம்பர் சீஸன்'. ...
மேலும் கதையை படிக்க...
காற்று விசையிடமிருந்து நீர்க்குமிழியை பத்திரபடுத்துவதுபோல பிடித்திருந்தாள் காகிதக் கற்றையை. ‘கோவை தாலுகா வசுந்தராபுரம் நேரு நகரில் உள்ள மனை எண் இரண்டு’ - அடுத்து வரும் வரிகள், அவ்வளவு சுலபத்தில் விளங்காத அரசாங்க வார்த்தைகளாக நீண்டன. ஆனாலும் வாசித்து மகிழ்ந்தாள். அவள் ...
மேலும் கதையை படிக்க...
ஆத்தா
தேசம்
சுருதி பேதம்
வீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)