கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: May 7, 2023
பார்வையிட்டோர்: 2,513 
 

அத்தியாயம் 1 – 5 | அத்தியாயம் 6 -10

1. யானையுடன் மோதிய பூனை 

சந்தைப்பேட்டையின் சந்தடி மிக்க சில கடைத் தெருக்களையெல்லாம் கடந்து நேராக ஆற்றங் கரையின் இடது பக்கம் திரும்பினால் அங்கே ஒரு டூரிங் சினிமாக் கொட்டகை இருக்கும். நாலா ப பக்கங்களிலிருந்தும் வரும் ரோடுகள் சங்கமம் ஆகும் இடத்தில் அந்த பேபி டாக்கீஸ் இருந்தது. 

ஏழுமணிக்குமேல் ஆரம்பமாகிற ஒரு பழைய தமிழ்ப்படத்திற்கு, மாலை ஐந்து மணியிலிருந்தே போவோரையும் வருவோரையும் வருந்தி வருந்தி அழைப்பதுபோல் ரிகார்டு பாடல்கள் முழங்கிக் கொண்டிருக்கும். அன்று ஒரு புதுப்படம் ஆரம்ப மானதால் அளவுக்கு மீறிக் கூட்டம் கூடியிருந்தது. 

டூரிங் டாக்கீஸை ஒட்டியுள்ள நாயர் டீக்கடை களைகட்டிவிட்டது. கதவில்லாத அந்த டீக்கடையில் நெரிசல் காரணமாக, கண்ணாடி கிளாசுக்கும் ஸ்பூனுக்கும் கைகலப்பு மும்மரமாகக் கேட்கத் தொடங்கியது. 

டீக் கடைக்குப் பக்கத்தில் இருந்த கைப்பிடி மதகில் உட்கார்ந்து ரிகார்டு கேட்டுக் கொண்டிருந்த சங்கரும் அவன் நண்பர்களும் இந்தக் காட்சியை வெகுவாக ரசித்தார்கள். அத்துடன் பாவாடை வஸ்தாதை, நாயர் வெகுவாக உபசரித்துக் காக்காய் பிடிப்பதைக் காண அவர்களுக்குச் சிரிப்பாக வந்தது. 

அன்று தியேட்டரில் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்த வெகு விரைவிலேயே எல்லா வகுப்பு டிக்கெட்டுகளும் விற்றுவிட்டன. இதனால் ஏமாற்றம் அடைந்த கூட்டத்தினர் மனமின்றித் திரும்பிக் கொண்டிருந்தார்கள். ‘பிளாக்’கில் வாங்கி அநுபவ முள்ளவர்கள், “வஸ்தாது கையில் பத்து டிக்கெட் டாவது இல்லாமலா போகும்? சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்” என்று வஸ்தாதை நெருங்கச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

“டேய், இன்னிக்கு வஸ்தாதுக்கு வேட்டை தாண்டா!” என்றான் சூழ்நிலையை நன்கு புரிந்து கொண்ட சங்கரின் நண்பன் கோபு. 

“ஏண்டா சங்கர், நாம்கூட குரூப்பா இந்தச் சைடு பிஸினஸ் பண்ணினா என்ன? பாக்கெட் மணி கிடைக்கும். வீக்லி ஒன்ஸ் டவுனுக்குப் போய் இங்கிலீஷ் படம் பார்த்துவிட்டு வரலாம்.” 

“ஆமாண்டா, டிக்கெட் என்னமோ ஆறுக்கு மேலேதான் குடுக்க ஆரம்பிக்கிறாங்க. ஸ்கூல் விட்டு வந்தாக்கூடப் போதும், ‘ப்ளென்டி’யா டயம் இருக்கு. நீ என்ன சொல்றே சங்கர்? நாளையி லிருந்தே பிஸினஸ் ஆரம்பிச்சிடுவோம். கூட்டத்தில் முண்டியடிக்கிற ‘ஜாப்’ என்னுடையதாகவே இருக் கட்டும். நான் பார்த்துக்கறேன்!” என்றான் பாலு. 

“தூ, இது ஒரு பிழைப்பா!” என்று சங்கர் காறித்துப்பினான். இதைக் கண்ட மாணவர்கள் அசந்து போனார்கள். 

“பார்த்தியாடா, பார்த்தியா, ஒரு நிமிஷத் திலே நம்மோடெ அத்தனை ஐடியாவையும் போட்டு உடைச்சு எறிஞ்சிப்பிட்டான் இந்தச் சங்கர்,” இதைக்கூறி முடிப்பதற்குள் பாலுவுக்குக் கண்ணீரே வந்துவிடும் போலிருந்தது. 

“இந்தப் பிசினஸ் பண்ணினா என்ன? இதுவு ஒரு விதத்தில் ‘சோஷியல் ஹெல்ப்’ தானே? கூட் டத்திலே முண்டியடிச்சு வாங்க முடியாதவங்க எத்தனை பேர் இருப்பாங்க? இத்தனை தூரம் நடந்து வந்து கௌன்டர் மூடினதும் ஏமாந்து போற வங்க எத்தனை பேர் இருப்பாங்க! இவங்களுக் கெல்லாம் நாம உதவிதானே செய்யப் போறோம்? அதுக்கு லேபர் வாங்கினாத் தப்பா?” என்றான் குமார். 

“சுள்ளி பொறுக்கிச் சம்பாதிக்கலாம்” என்று சங்கர் கூறினான். வேறு ஒன்றும் விளக்கம் கூற வில்லை. சங்கர் அவ்வளவுதான் பேசுவான். மற்றவர்கள்தான் அதை விளக்கம் செய்து கொள்ள வேண்டும். 

“ஆமாம்! நீ எல்லாத்துக்கும் இப்படித்தான் பேசுவே. பெரிய வஸ்தாதாம்-அவரே செய்ய றாராம்.” 

“அது வஸ்தாத் செய்ய வேண்டிய தொழில் தான். இருட்டினதும் தண்ணி போட அவனுக்குக் காசு வேணும். ஊரையடிச்சு உலையிலே போட்டுக் கிறவனுக்கு இது ஒரு சரியான பொழைப்பு. உனக்கும் எனக்கும் இந்த ‘ப்ளாக்’ வேலை ஒத்து வராது. வந்தாலும் கௌரவமில்லை. அதுக்காகத் தான் சங்கர் இப்படிச் சொல்றான் போலிருக் குடா!” என்று சேகர் சங்கரின் கருத்தை ஊகித்தவன் போல் பேசினான். அப்போது- 

டீக்கடையிலிருந்து ஒரு பலமான கனைப்புக் குரல் கேட்டது. அது வஸ்தாத் பாவாடையினுடைய குரலேதான். 

“ஏண்டா சங்கர், நாம இப்போ பேசிக்கொண்டிருந்ததெல்லாம் வஸ்தாத் காதிலே விழுந்திருக்குமோ?’ பாலு பயந்தபடியே கேட்டான். 

“விழட்டுமே” என்றான் சங்கர் சற்றும் பயப்படாமல். ஆனால் வஸ்தாத் இதொன்றையும் கவனித்ததாகத் தெரியவில்லை. 

டீக்கடை வாசலில் இருந்த ஸ்டூல்மீது ஒன்றைக் காலை ஊன்றிக்கொண்டு நின்றபடி இடக்கையி லிருந்த பீடியை ஒரு ‘தம்’ ஆழ இழுப்பதும், வலக் கையிலிருந்த கிளாசிலிருந்து நாயர் ஸ்பெஷலாகப் போட்டுக் கொடுத்திருக்கும் சைனா சாயாவை ஓர் உறிஞ்சு உறிஞ்சிச் சுவைப்பதுமாக இருந்தான் பாவாடை. 

சாயாவைக் குடித்து முடித்த பாவாடையின் கையிலிருந்த கிளாஸை டீக்கடை பையன் மிகுந்த மரியாதையுடன் வாங்கிக் கொண்டு போனான். வஸ்தாத் மீண்டும் ஒரு பீடியை எடுத்துப் பல் விடுக்கில் செருகி அலட்சியமாக வத்திப்பெட்டியை இடுப்பிலிருந்து எடுத்து ஓர் உரசு உரசியபோது அது துள்ளிக் குதித்துச் சங்கரின் அருகில் வந்து விழுந்தது. அருகில் இருந்த மாணவர்கள் ‘கொல்’ லென்று சிரித்துவிட்டார்கள். 

சுற்றிலும் விழிகளைச் சுழலவிட்டான் வஸ்தாத். பல ஜோடிக் கண்கள் தன்னையே பார்த்துக்கொண் டிருப்பது தெரிந்தது. குனிந்து வத்திப் பெட்டியை எடுப்பது அப்போது தன்னுடைய கௌரவத்துக்கும், வஸ்தாத் தன்மைக்கும் இழுக்கு என்பது போல் நினைத்து, “டேய், அந்த வத்திப் பெட்டியை எடுடா!” என்று சங்கரைப் பார்த்துச் சவடாலாகக் கூறினான் பாவாடை. 

சங்கர் அலட்சியமாகச் சிரித்தான். 

“டேய் சோமாறி, முழிக்கிறியே! உன்னைத் தாண்டா சொல்றேன். எடுடா வத்திப் பெட்டியை!” 

சங்கர் அப்படியே எழுந்து நின்றான். 

“என்னடா முறைக்கிறியே! சொல்றது காதிலே விழல்லே? ஏ களுதே! எடு! உன்னைத்தான்.” 

சங்கருடைய அலட்சியச் சிரிப்பும், பார்வையும் பாவாடையின் ஆத்திரத்தைத் தூண்டியது, ஓங்கி ஒரு அறை விடலாமா என்று யோசித்தான். 

ஆனாலும் –

பள்ளிக் கூடத்துப் பையன்கள்! நாளைக்கு. விவகாரம் முற்றி வேறு விதமாகத் திரும்பி விட்டால் ஊரில் கேவலமாகத் தன் பெயர் அடிபடும் என்கிற எண்ணத்தில் கோபத்தைச் சற்று அடக்கிக் கொண்டு– 

“தம்பி, உன்னைத்தான் சொல்லறேன்; அந்த வத்திப் பெட்டியை எடுத்துக் குடு”, என்று சங்கரைப் பார்த்து கம்பீரமாகக் கூறினான். ஆனால் சங்கர் அதை லட்சியமே செய்யவில்லை. 

உழைத்துச் சாப்பிட விரும்பாமல் வெறும் உடம்பைக் காட்டியே ஊரை மிரட்டி மிரட்டி வயிறு வளர்க்கும் வஸ்தாதை கிராமத்திலுள்ளவர்கள் எல்லோரும் வணங்குவதை அவன் கண்டிருக். கிறான். அதற்காக?….அவனும் பயப்பட வேண்டுமா என்ன? 

2. ஜல் ஜல் ஜல்… 

இதற்குள் மூர்த்தி குனிந்து ‘போகிறது’ என்று அதை எடுத்துக் கொடுக்கப் போனான். சங்கர் சட் டென்று திரும்பி, “ஊஹூம்” என்று தடுத்தான். 

பாவாடைக்குக் கோபம் பொத்துக் கொண்டது 

“எலே, நீ எடுக்காதேடா! அவனையே எடுத் துக்கொடுக்கச் சொல்றேன், பாரு இப்போ” என்று மூர்த்தியிடம் சொல்லிவிட்டு, சங்கரைப் பார்த்து, “உம் எடுடா!” என்று மிரட்டினான். 

“ஏன்?”

பாவாடை ஒரு சிலிர்ப்புச் சிலிர்த்து எழுந்தான்.

“ஏன்னா கேக்கறே? ஊம்….?” 

“கேட்டா என்ன? நீதானே கீழே போட்டே?”

பாவாடைக்கு அதற்குமேல் பொறுக்கவில்லை. காலை அலட்சியமாகத் தூக்கிச் சங்கரை உதைக்கப்போனான். 

அடுத்த கணம் காலைத் தூக்கிய பாவாடை அப்படியே குப்புற விழுந்தான். தூக்கிய காலைப் பிடித்து அப்படியே வாரி விட்டுவிட்டான் சங்கர். 

யாரும் இப்படி நடக்குமென்று எதிர்பார்க்க வில்லை. சோனி சங்கர் எங்கே? குண்டு வஸ்தாது பாவாடை எங்கே?. பாவாடை எழுந்திருப்பதற்குள் கூட்டத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் ஏதாவது விபரீதம் நிகழ்ந்துவிடப்போகிறதே என்று வத்திப்பெட்டியை வஸ்தாதிடம் எடுத்துக் கொடுக்கப் போனார். உடனே – 

வஸ்தாத் அந்த ஆளின் முதுகுச் சட்டையைப் பிடித்து அப்படியே அலாக்காகக் கோழிக் குஞ்சைப் போலத் தூக்கி எறிந்தான். எட்டப்போய் விழுந்த அவர் உடனே எழுந்து வந்து, “ஏண்டா தம்பி, இவ்வளவு பிடிவாதம்? பெரியவங்களுக்கு உதவி பண்ணினாப் புண்ணியம் உண்டுடா. வத்திப் பெட்டியை நீயே தான் எடுத்துக் கொடுத்தால் குறைஞ்சா போயிடும்?” என்று சங்கரைப் பார்த்து இதோபதேசம் செய்தார். 

“இவனா பெரியவன்? பொறுக்கி!” என்றான் சங்கர். 

இதைக் கேட்டதும் நெஞ்சு புடைக்கப் பாய்ந்து வந்த பாவாடை புறங்கையால் சங்கரின் கன் னத்தில் ஓர் அறைவிட்டு, காலால் எட்டி உதைக் கப்போனான். 

அவ்வளவுதான்; மறுபடியும் வஸ்தாதின் கால் சங்கரின் பிடியில் அகப்பட்டுக் கொண்டுவிட்டது. இரும்புக் காலை ஒரு பிஞ்சுக்சுரம் அசைக்க முடி யாமல் மர்மமாகப் பிடித்து நிறுத்திவிட்டது. 

“ஐயோ, ஐயோ! உயிர் போகிறதே! விடுடா விடுடா!” என்று பாவாடை அலறினான். 

காசில்லாமல், டிக்ககெட் வாங்காமல், ஓசியி லேயே ஒரு கூட்டம் இந்தக் குஸ்திக் காட்சியைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தது. பாவாடையோ, சங்கரின் பிடியில் துடித்துக் கத்திப் புறண்டு கொண்டிருந்தான். சுற்றியிருந்தவர்கள் தங்கள் கண் களையே நம்பமுடியாமல், இதைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். 

“ஜல்……ஜல்…ஜல்…! 

பட்டாமணியகாரரின் இரட்டை மாட்டு வண்டி அது! மாடுகள் இரண்டும், தலைக் கயிற்றுக்கு அடங்காமல்முரண்டிக்கொண்டு அங்குவந்து நின்றன. 

சங்கர் திரும்பிப் பார்க்கவில்லை. வண்டியில் பட்டாமணியகாரரும் அவர் மகள் வசந்தியும் இருந்தார்கள். கலகல வென்று மெல்லிய சிரிப் பொலி கேட்டது. பட்டாமணியம் பதறிப் போனார் வஸ்தாது. புரண்டுகொண்டிருந்ததைக் கண்டு வசந்திக்கு மகிழ்ச்சி தாளவில்லை. 

“சங்கர்!… போதும்!… போதும்! விட்டுவிடு!” என்று வண்டியிலிருந்தபடியே கத்தினார் அவர். 

பழக்கமான அந்தக் குரலைக் கேட்டுச் சங்கர் பிடியைத் தளர்த்திவிட்டுத் திரும்பிப் பார்த்தான். அருகே பட்டாமணியம் நின்று கொண்டிருந்தார். வண்டியிலிருந்து வசந்தி வைத்த கண் வாங்காமல் தன்னையே பெருமையுடனும் பூரிப்புடனும் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான் சங்கர். 

மாமிசமலைபோன்ற வஸ்தாது தண்டால் எடுத்துத் தண்டால் எடுத்துச் சேர்த்து வைத்தி ருந்த தன் முண்டாவைக் காட்டியே அல்லவா இத்தனை காலம் ஊரை ஏமாற்றி வந்திருக்கிறான்! ஒரு சின்னப் பையன், நிமிஷ நேரத்தில் கழுதை மாதிரிப் புரட்டி எடுத்து விட்டானே!’ என்று கூடியிருந்தவர்களுக்கு வியப்பு. 

பட்டாமணியத்துக்கு முன்பு மீண்டும் தன் னுடைய வீரத்தை நிலைநாட்ட எண்ணங் கொண்ட பாவாடை, “டேய் கழுதை! என்ன செய்யறேன் பாரு!” என்று ரோசத்தோடு முஷ்டியை முறுக்கிக் கொண்டு சங்கரின் முகத்தைக் குறிவைத்தான். 

ஆனால் சங்கர் வெகு அலட்சியமாகந் தன் னுடைய இடது கையினாலேயே ஒரு தட்டுத் தட்டி விட்டான், 

“ஐயோ….அம்மா….” என்று, இரும்புத் தண்ட வாளத்தினால் அடிபட்டதுபோல் வஸ்தாது அலறினான். 

“வெல்டன் சங்கர்”

“வெரி குட் சங்கர்!” 

“கிவ் ஒன் மோர் ஹிட் சங்கர்!” என்று நாலா பக்கங்களிலிருந்தும் சங்கரின் மாணவ நண்பர்கள் உற்சாகக் குரல் எழுப்பினார்கள். 

தாக்குண்ட புலியைப்போல் பாவாடை, சங்கர் மீது பாய்ந்தான். சங்கர் உடனே ‘கபார்’ என்று அப்படியே குனிந்து, வஸ்தாதின் வயிற்றில் அநாயாசமாக ஒரு குத்துவிட்டான். 

அவ்வளவுதான்; பாவாடை நெரிப்பில் விழுந்த புழுப்போல “ஐயோ!….ஐயோ!” என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு அலறினான்; புரண்டான். 

இதையெல்லாம் கண்ட பட்டாமணியத்துக்குத் தலையே சுழல்வதுபோலிருந்தது. அவரால் இந்தக் காட்சியை நம்பவேமுடியவில்லை. ஒரே சமயத்தில் பத்துப்பேருக்குப் பதில் சொல்லும் சண்டியர் பாவாடை, ஒரு சிறு பையனிடம் தோற்றுத் தரையில் கிடந்து புரளுகிறானே! 

முக்கிமுனகிக் கொண்டே எழுந்த பாவாடை “எஜமான்” என்று ஏதோ பேச வாயெடுத்தான். “எல்லாம் அப்புறம் பேசிக் கொள்ளலாம்; முதலில் வண்டியில் ஏறு” என்று அவர் அதட்டினார். 

வைத்த கண் வாங்காமல் சங்கரையே ஆச்சரி யத் தோடும் மகிழ்ச்சியோடும் பார்த்துக் கொண் டிருந்த வசந்தி, அப்பா வருவதைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். பாவாடை மெல்ல ஓர் எம்பு எம்பி வண்டியோட்டியின் பக்க மாக முன் புறத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டான். 

வழியில், ஆதியோடந்தமாகப் பாவாடை பட்டாமணியத்திடம் விஷயத்தையெல்லாம் கூற கூட இருந்த வசந்தி அக்கறை இல்லாதவள் போல் அனைத்தையும் கவனித்துக் கொண்டே வந்தாள். 

‘‘உனக்குச் சமமா உள்ளவங்ககிட்டே நீ இப்படி அடி வாங்கித் தோத்துப்போனா பரவாயில்லை; ஒரு பொடிப்பயல்கிட்டே, நடுத்தெருவிலே இப்படி அவமானப்பட்டுப் போனியே! வெக்கமா யில்லியா?…” என்று ஆத்திரத்துடன் கேட்டார் பட்டாமணியம். 

“அதுதான் எசமான் எனக்கு ஒண்ணும் புரியல்லே. எவ்வளவோ சண்டியர்களை, அடியாட் களை, பயில்வான்களை எல்லாம் என்னோட இத்தனை வருஷ சர்வீஸ்லே பதம் பார்த்து ஓட பாவாடை தன் சுய ஓட விரட்டியிருக்கேன்….’’ புராணத்தை அவிழ்த்துவிட்டான். 

“அதெல்லாம் சரிதான்…உன் பழங்கதையை யெல்லாம் இப்போ யார் கேட்டா? ஒரு பள்ளிக்கூடப் பையன் உன்னை ஜகா வாங்க வச்சுப்பிட்டானே…. அது என்ன சின்ன விஷயமா? “

“சின்ன விஷயமா எனக்கும் தோணல்லே எசமான் பையன் பிடியெல்லாம் தெரிஞ்சு வெச் சிருக்கான். காலாலே நான் அப்படி எட்ட உதைச்ச துக்கு, வெறொரு பயல்னா பஞ்சாப் பறந்து போயிருப்பான். ஆனா….இவன் என்காலைப் பிடிச்சு, குதிகால்லே ஒரு நட்டுவாக்காலிப் பிடி போட்டு ஏழாவது நரம்பிலே ஒரு சிலந்திவலை பின்னினான் பாருங்க..”

“தூ – நீ ஒரு வஸ்தாதா?” என்று ஆத்திரத் தோடு கேட்டார் பட்டாமணியம். 

வசந்தியும் வண்டிக்காரனும் மனத்துக்குள்ளேயே சிரித்துக்கொண்டார்கள். 

பட்டாமணியத்துக்கு ஒரு புறம் வருத்தமாகவும், மறுபுறம் ஆத்திரமாகவும் வந்தது. பாவாடை அவருடைய ஆள். அவனை அவர் கைக்குள் போட் டுக்கொண்டு, ஊரை மிரட்டி எத்தனையோ காரியங் களைச் செய்துவருபவர். சந்தைப்பேட்டையில் தமக்கு மிஞ்சி ஒரு பெரிய மனுஷன் இருக்கக்கூடாது. என்று எண்ணினார். அதனால்தான் அவருக்கு அத்தனை வேகம் வந்தது. 

அத்தனை கூட்டத்துக்கு மத்தியில் சந்தைப் பேட்டையில் தன் கண்ணெதிரே கண்ட காட்சி அவர் மனதை வெகுவாகப் பாதித்து விட்டது. 

‘பாவாடைக்கு ஒரு போட்டியா?’ 

தன்னுடைய எதிர்காலத் திட்டங்கள் ஒரு. கேள்விக்குறியாக எழும்பி நிற்பது போல் அவரை பயமுறுத்தின. 

3. சதியாலோசனை 

தாயுமானவர் உயர்நிலைப் பள்ளி சமீபத்தில் தான் சந்தைப்பேட்டையில் உருவாயிற்று. இதை உருவாக்க முன் நின்றவர் தேசத் தொண்டரும், பழுத்த சிவபக்தருமான மிராசுதார் சந்தானம். அது பட்டாமணியத்துக்குப் பிடிக்கவில்லை. 

அதனால், பல தனவந்தர்களை உதவி செய்ய வொட்டாமல் ரகசியமாகப் பட்டாமணியம் கலைத் தார். பிறகு அவராகவே வலுவில் சந்தானத்திடம் சென்று தம்முடைய பெயரைப் பள்ளிக்குச் சூட்டுவ தானால், நிதி திரட்ட ஏற்பாடு செய்வதாகக் கூறினார். இதையெல்லாம் கண்டு வெறுப்புற்ற சந்தானம், தம்முடைய சொத்துக்களில் ஒரு பகுதி யை விற்று, ஏகபோகமாக அவரே அந்தத் தருமப் பள்ளியைத் தாயுமானவர் பெயரில் கட்டி முடித்து விட்டார். 

அதுமட்டுமல்ல; அந்தப் பள்ளியில் படிக்கும் ஏழை, அநாதைக் குழந்தைகளுக்கு இலவச விடுதி யொன்றையும் கட்டி, உணவும் உடையும் கொடுக்கவும் வழி செய்தார். 

சந்தானத்தின் தரும் இல்லத்தில் படிக்கும் சங்கரிடம்தான் பாவாடை இன்று தோற்றுப் போனான். சங்கரிடம் பாவாடை தோற்றது, சந்தானத்திடம் தாம் தோற்றதுபோல ஒருவித வெறியையே பட்டாமணியத்தின் உள்ளத்தில் தூண்டிவிட்டு விட்டது. 

எதையோ நினைத்துக் கொண்டவர்போல், பாவாடையை அழைத்து ரகசியமாக, “இன்று இரவு சரியாகப் பத்து மணிக்கு நம்ம வீட்டுக்கு வா!” என்று உத்தரவு பிறப்பித்தார். பாவாடையும், ‘சரி’ என்று தலையை அசைத்தான். 

‘இன்று இரவு ஏதோ விபரீதம் நிகழப்போகிறது; நாம் எப்படியாவது அதைத் தெரிந்துகொண்டு எவ் வித ஆபத்தும் நேராமல் தடுக்க வேண்டும்’ என்று வசந்தி உறங்காமலே பக்கத்து அறையில் ஒளிந்து காத்திருந்தாள். 

இரவு மணி பத்து-

குறிப்பிட்டபடி பாவாடை வந்துவிட்டான். அவனைத் தம்முடைய அறைக்கு அழைத்துச் சென்ற பட்டாமணியம் தம் திட்டத்தை விளக்கினார். வஸ்தாது அதைக் கேட்டுவிட்டு மிகவும் உற்சாகத் துடன், “அப்படியே செஞ்சு, பூண்டோடு அழிச்சுப் பிடறேனுங்க!” என்று வாக்களித்தான். கேட்டுக் கொண்டிருந்த வசந்தியின் உள்ளத்தில், ஒரு பெரும் இடியே விழுந்துவிட்டாற் போலிருந்தது. இங்கே வஸ்தாதை வண்டியில் ஏற்றிக் க கொண்டு பட்டாமணியம் சென்ற பிறகு அங்கே ஓர் அசா தாரண அமைதி நிலவியது. ஆனால் அந்த அமைதி அதிக நேரம் நீடிக்கவில்லை. 

சங்கரின் நண்பர்ககள் அனைவரும் கூடி அவனை அப்படியே அலாக்காகத் தூக்கித் தோள்மீது வைத்துக் கொண்டு, “விக்டரி ஃபார் சங்கர்! சங்கருக்கு ஜே!” என்று கூத்தாடினார்கள். டீக்கடை நாயர் சங்கரை அப்படியே கட்டித் தழு வியபடி கடைக்குள் அழைத்துச் சென்றான் ஸ்பெஷல் பன்னும் டீயுமாகச் சங்கரின் நண்பர்கள் எல்லோருக்குமே நாயர் ஒரு டீபார்ட்டி கொடுத்தான். ஆமாம்! வஸ்தாது பாவடையானால் என்ன; சோனிச் சங்கரானால் என்ன? பலசாலியைத் தன் கைக்குள் போட்டுக்கொள்ளவேண்டும்; தன் கடையில் கலாட்டா ஏதும் ஏற்படாமல் தொழிலை நடத்திக்கொண்டு போகவேண்டும்! இதுதானே நாயருடைய பாலிஸி!- 

ஆனால் நாயருடைய அழைப்பைச் சங்கர் ஏற்றுக் கொள்ளவில்லை. 

“நான் என்ன வஸ்தாதா?” என்று மறுத்து விட்டான். 

“டேய் சங்கர், வஸ்தாதுன்னா என்னடா அர்த்தம்? பூகோள டூம் மாதிரி இருந்துட்டாப் போதுமா? பேர் வாங்கின வஸ்தாதையே புரட்டி எறிஞ்சிருக்கியே….இப்போ நீ தாண்டா வஸ்தாத்!’” என்றான் மூர்த்தி. 

“ஆமாம்.. சங்கர்! நீ வஸ்தாத் மட்டுமல்ல ; வஸ்தாத்கி வஸ்தாத்!” என்றான் பாலு. 

உடனே நாயர், “ஆ! அதே. இப்போள் குட்டி பறஞ்ஞதாணு சரி! சங்கர்ஜி, நிங்ஙள் ‘வஸ்தாத்கி வஸ்தாத்’ தன்னே; ஞான் வளரே ஆசையோடு விளிக்குன்னதே, நிங்ஙள் மறுக்கான் பாடில்லா. என்றே கடைக்குவந்நு, ஞான் என்றே கையால் இட்டு கொடுக்குன்ன ஒரு சிங்கள் டீ யெங்கிலும் குடிக்கணம்!” என்று கெஞ்சினான். 

“டேய் சங்கர்… நாயர் இவ்வளவு ஆசையோடு கூப்பிடறபோது மறுக்காதேடா!”

“ம்ஹ்ம்…” சங்கர் அமுத்தலாகச் சிரித்தான். 

“டேய், உனக்காக இல்லா விட்டாலும், எங்களுக்காகவேனும் நாயருடைய அழைப்பை ஏத்துக்கோடா. நீயும் வஸ்தாதும் சண்டை போட் டதைப் பார்த்ததிலேயே மத்தியானச் சாப்பா டெல்லாம் ஜீரணமாகி வயிற்றைப் பசி கிள்ளற துடா….” என்று ரகசியமாய்க் கூறினான் ராமு. சங்கர் ஒருவாறு ஒப்புக் கொண்டான். 

பிளேட்டில் டீக்கடைப் பையன் கொண்டு வந்து போடப் போட பிஸ்கட்டையும் பன்னையும் நண்பர்கள் தீர்த்துக் கட்டினார்கள். 

நாயர், தன் கைப்படவே ஸ்பெஷல் டீயைக் கலந்துகொண்டு வந்து சங்கரிடம் கொடுத்துக் குடிக்கும்படி உபசரித்தான். சற்று முன்பு வஸ்தா துக்குச் செய்த மரியாதைகளை மிஞ்சுவதாக இருந்தது அது. 

“என்றே பொன் ஐயப்பா, ஈ கொச்சு கரம் ஆ வலிய ஜீவனெ எந்து பாடு படுத்திக்களஞ்ஞு?’” என்று கூறியபடி சங்கருடைய இரு கைகளையும் பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொண்டான். 

சங்கர் நாயரிடமும், மற்றவர்களிடமும் நன்றி தெரிவித்துவிட்டுப் புறப்பட்டான். 

மிராசுதார் சந்தானத்தின் சம்பந்தர் தரும உணவு விடுதி’யில் சங்கரைப் போலவே தங்கிப் படிக்கும் குமாரைத் தவிர, மற்ற நண்பர்கள் எல்லாம் சங்கரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்று விட்டார்கள் 

சங்கரும் குமாரும் ஒருவரை யொருவர் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே சம்பந்தர் ஹாஸ்டலை அடைந்தார்கள். அவர்கள் மனத்தில் லேசான பயம் தட்டியிருந்தது. இத்தனை நாட்களில் அவர்கள் விடுதிக்கு இப்படி நேரம் கழித்து வந்ததே இல்லை. 

இன்று, சங்கரும் குமாரும் ஹாஸ்டலுக்குள் நுழையும் போதே பிரார்த்தனை முடிந்து அனை வரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சூப்ர வைசர் கண்காணித்தபடி குறுக்கே நடந்து கொண்டிருந்தார். 

“என்னடா செய்யலாம் சங்கர்?” என்றான் குமார் சற்றுப் பயம் கலந்த குரலில், 

“பேசாமல் திரும்பி விடலாம்…” என்றான் சங்கர். 

“ஆமாம்; அதுதான் சரி. பொல்லாத சூப்ர வைசர் கண்ணில் அகப்பட்டுக் கொண்டால், நேரே மிராசுதார் வீட்டுக்கே சமாசாரம் போய் விடும்..” என்றான் குமார். 

“போகட்டுமே!” என்று தன்னுடைய இயல்புப் படிசங்கர் இப்போது பேசவில்லை. வேறு எந்தக் குற்றத்துக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் காலை, மாலை தேவார பஜனையில் ஹாஸ்டல் மாணவர்கள் கலந்து கொள்ளாவிட்டால் சந்தானம் மன்னிக்கவே மாட்டார். 

“சரி; ‘என் அத்தைக்கு உடம்பு சரியில்லை என்று ஆள் வந்தது. உடனே சங்கரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு அரசலூருக்குப் போய் விட்டேன்’ என்று சொல்லலாமா?” என்றான் குமார். 

அதுதான் சரி. இராப் பொழுதை ஏதாவது வீட்டுத் திண்ணையில் கழித்துவிட்டு விடிந்ததும் ஹாஸ்டலுக்கு வந்து இந்தச் சரடை அவிழ்த்துவிட வேண்டியதுதான். வேறு வழியே இல்லை, வா சீக்கிரம்!” என்று சங்கர் வற்புறுத்தவே, குமாரும் பின் தொடர்ந்தான். 

இருட்டில் இருவரும் நடந்து ஆற்றங்கரைப் பாலத்தை அடைந்தார்கள். அங்கே உட்கார்ந்திருந் தால் பக்கத்துக் கொட்டகையில் நடைபெறும் சினிமா வசனம்-பாட்டுக்கள் எல்லாம் கேட்கலாம். 

முதல் ஆட்டம் முடிகிறவரை இருவரும் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். இன்னும் அரை மணியில் படம் விட்டுவிடும் என்று தெரிந்ததும், வேகமாக எழுந்து அருகில் உள்ள ஒரு தெருவுக்குள் நுழைந்து, படுப்பதற்கு வசதியாக எந்தத் திண்ணை காலியாக இருக்கிறது என்று நோட்டம் பார்த்தபடியே நடந்தார்கள். 

அப்போது திடீரென்று அக்கரையில் தெரிந்த பெரிய வெளிச்சத்தைக் கண்டு பயந்துபோன குமார், “ஐயோ,அங்கே ஏதோ வீடு தீப்பிடிச்சு எரியுதுடா; சங்கர்!” என்று குழறினான். 

சங்கர் அந்தத் திசையையே வெறிக்கப் பார்த்தான்.  பாவாடை வஸ்தாத் குடியிருக்கும் பகுதி. 

சங்கருக்குத் திடீரென்று அடிவயிற்றில் நெருப்புப் பிடித்தாற் போலிருந்தது. ஆனால் இதொன்றையும் உணராத குமார், “வாடா, போய்ப் பார்க்கலாம்….” என்று சங்கரையும் இழுத்துக் கொண்டு இரண்டு அடி எடுத்து வைப்பதற்குள் நான்கு முரட்டுக் கரங்கள் அவர்களைப் பின்னிப் பிணைத்தன கூச்சல் போட முடியாதபடி வாயில் துணி உருண்டை திணிக்கப்பட்டது. மீன் போல் துள்ளிக் குதித்த குமார் ஒரு கோணிப் பைக்குள் போட்டுக் கட்டப்பட்டான். சங்கரும் கட்டப்பட்டான். இருவரும் எங்கேயோ கடத்திச் செல்லப்பட்டார்கள். 

4. பூஜைவேளையில் கரடி 

பொழுது விடிந்ததும் விடியாததுமாக மிராசுதார் சந்தானத்தின் வீட்டு வாசலில் பெரியதொரு கூட்டம் கூடியிருந்தது. பல்துலக்கி நெற்றியில் திருநீற்றை அள்ளிப் பூசிக்கொண்டிருக்கும் போதே பங்களா வேலையாள் எஜமானரிடம் விஷயத் தைச் கூற உள்ளே நுழைந்தான். அப்போது அவர் தம் இருகண்களையும் மூடி எதிரே இருந்த கைலயங் கிரிநாதன் திருவுருவப் படத்தின்முன் கரம் கூப்பி நின்று ஜெபித்துக்கொண்டிருந்தார். 

சிவ பூஜையில் கரடியாக நுழைய வேண்டாமென்று காத்திருந்தான் பணியாள். ஆனால் அதற்குள் வெளியிலிருந்து வந்த பேரிரைச்சலும் கூச்சலும் சந்தானத்தின் தியானத்தைக் கலைத்ததோடு அவரைத் திடுக்கிடவும் வைத்துவிட்டன. 

விழிகளைத் திறந்த அவர் எதிரில், வேலை யாள் சண்முகம் பணிவுடன் கைகட்டி நின்று கொண்டிருந்தான். எஜமானரது பார்வையிலே. பிறந்த கேள்வியைப் புரிந்துகொண்டு சண்முகமே. விஷயத்தை விளக்கினான்: 

“நேத்து ராத்திரி நம்ம பள்ளிக்கூடத்துப் பிள்ளைங்க யாரோ, பாவாடை வஸ்தாது வைக்கப் போரிலே தீ வைச்சுப்புட்டாங்களாம். அக்கரைச் சனங்களே திரண்டு வந்திருக்காங்க. வஸ்தாதுக்கு, உங்களை உடனே பார்க்கணுமாம்.” 

சந்தானம் ஒரு கணம் அப்படியே செயலிழந்து நின்றுவிட்டார். கேள்விப்பட்ட செய்தியிலே அவருக்கு அதிர்ச்சி தரும் அம்சம் ஒன்று இருந்தது. 

“பாவாடையின் வைக்கோல் போர் தீப்பிடித் தால், அதற்காக அவனோ மற்றவர்களோ இங்கே வந்திருக்கமாட்டார்கள். நீதி விசாரணைக்குப் போக வேண்டிய இடம் பட்டாமணியத்தினுடைய வீடு. ஆனால் மாணவன் தாயுமானவர் உயர் நிலைப் பள்ளி ஒருவன் இதில் குற்றவாளியாகச் சம்பந்தப்பட்டிருப்பதால்தான், கூட்டம் திசைமாறித் தன் வீடு நோக்கி வந்திருக்கிறது. இது எவ்வளவு: பெரிய தப்பான காரியம்! தனக்கு இத்தனை அவமானம் ஏற்படச் செய்த அந்த மாணவன் யார்? அவனையும் கட்டி இழுத்து வந்திருப்பார்களே, பார்க்கலாம்’ என்று நினைத்த சந்தானம் வேகமாய் வாசலுக்கு வந்தார். 

சந்தானத்தின் தலையைக் கண்டதுமே, “எஜமான், என்னோட முந்நூறு ரூபாய் வைக்கோலுக்கும் அநியாயமாகக் கொள்ளி வைச்சுப் புட்டாங்க எஜமான். பக்கத்திலே கொட்டகையிலே நின்ன கன்னுக்குட்டியோட காலு எல்லாம் கூட வெந்து போச்சு எஜமான். கடைத் தெருச்சண்டை கடைத் தெருவோடு போயிடுச்சு; அதுக்காக் இப்படியா விரோதம் வெச்சுக்கிட்டு, வைக்கல் போருக்குக் கொள்ளி வைக்கிறது? எஜமான்தான் நியாயம் வழங்கணும்!” என்று கூறியவன், நெடுஞ் சாண் கிடையாய்ச் சந்தானத்தின் காலில் விழுந்து விட்டான். 

சந்தானத்தின் கண்கள் கோவைந் பழமாகச் சிவந்தன. அவருக்குக் கடைத்தெருச் சண்டை யைப் பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது* ஆனாலும், அந்தச் சண்டையின் எதிரொலியாக இந்தத் தீவைப்பு நிகழ்ந்திருக்கிறது. எனவே, அவரது உள்ளத்தில் ஒரு வியப்பு. 

வஸ்தாதை எதிர்க்கும் வலிமை மட்டுமல்ல; அவன் வீடு தேடிச் சென்று பழிவாங்கவும் திறமை படைத்த ஒருவன் தம் பள்ளியில் இருக்கிறானா- அந்த மாணவன் யார் என்று அவனை அறிந்து கொள்ள ஓர் ஆவல் பிறந்தது. ஆனாலும் அந்த மாணவன் செய்த காரியம் வீரமென்று மெச்சும் செயலல்லவே! 

குற்றவாளிக்குத் தண்டனை கொடுக்கும் குரலிலேயே, “யார் இந்தக் காரியத்தைச் செய்தவன்?’” என்று மிகவும் கோபமாகக் கேட்டார் சந்தானம். 

“யாரோ சங்கராம், எஜமான்; சோனி மாதிரி இருப்பான். அந்தப் பாவிப்பயல் பண்ணின காரியத்தைக் கேளுங்க” என்று டீக்கடை நாயர் வாசலில் நடந்த சண்டையைப்பற்றி வஸ்தாதும் கூட இருந்தவர்களும் விஸ்திரமாக சந்தானத்திடம் விளக்கிக் கூறினார்கள். 

“பிறகு, அவனும்; கூட இன்றைருத்தனுமா இருட்டினதும் என் தோட்டத்துப் பக்கம் போவதைப் பார்த்தேன். ஆனா கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வைக்கோல் போர் குபீர்னு பத்தி எரிஞ்சதுங்க. பாவிப்பசங்கள், பிடிக்கறதுக்குள்ளாற ஓடிட்டானுங்க. அப்பாலே, தீயைப் பார்ப்பேனா, ஆளைத் தேடு வேனா? நாங்க இத்தனை பேரும் அரும்பாடுபட்டுத் தண்ணியை மழையாகக் கொட்டியுங்கூடப் போரு போயிட்டுதுங்க!”-பாவாடை அழாக் குறையாகக் கூறினான். கூட இருந்தவர்கள் அதை ஆமோதித்தார்கள். 

“சரி, நான் இப்பவே ஹாஸ்டலுக்குப் போய் விசாரிக்கிறேன்; நீங்க அமைதியாகப் போங்க…” என்றார் சந்தானம். 

“விசாரிச்சாப் போதாதுங்க; எங்களுக்கு நியாயம் கிடைக்கணும்!”-பாவாடை சிடுசிடுத்தான். 

“அதுக்கு நான் என்ன செய்யணும்?” 

“நீங்க சோறும் தண்ணியும் போட்டு; தங்க நிழலும் கொடுத்துப் படிப்புச் சொல்லி வைக்கிறீங்க! தின்னுப்புட்டு ஒழுங்கா படிக்காமே; இப்படி ஊர் வம்புக்குத் தினவெடுத்து அலைஞ்சா?” 

“அப்படி அலையறவனுக்கு இங்கே இடமில்லை.  என் பையன்கள் மேலே தப்பு இருந்தா; நீங்கபட்ட நஷ்டத்துக்கு ரெண்டு பங்குப் பணம் தந்து உங்க கஷ்டத்தைப் போக்கறேன். நீங்க இப்போ அமைதியாப் போயிட்டுச் சாயங்காலமா வாங்க!” என்றார் சந்தானம். 

அதற்குமேல் அங்கே வாதாடிக் கொண்டிருக்க யாருக்கும் துணிவில்லை. மேலும்; சந்தானம் ‘விசாரிக்கிறேன்’ என்றுகூறிவிட்டால் அவர் நியாயத் தைத் தான் பார்ப்பார். ஆகவே ச சங்கருக்குத் தண்டனை தப்பாது; நஷ்டஈடும் கிடைத்துவிடும். என்று பாவாடை உள்பட அனைவரும் எண்ணிக் கொண்டு சென்றார்கள். ஆனால் பாவாடை மட்டும் சங்கரும், அவனது நண்பனும் தான் அடைத்து வைத்த ரூமில் கிடப்பார்கள்; போய் நல்ல செமை அடி கொடுக்க வேண்டும்’ என்று தனக்குள் மனப்பால் குடித்துக் கொண்டு சென்றான். 

எண்ணியபடியே எல்லாம் உலகத்தில் நடந்து விட்டால் அப்புறம் என்ன இருக்கிறது? 

கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு பாவாடை சந்தானத்தின் வீட்டுக்கு வரும் போது தன்னுடைய காரியம் இத்தனை சுலபமாக; வெற்றியாக நடந்தேறும் என்று அவன் எண்ணவில்லை. 

மேலும்; பட்டாமணியத்திடம் பேசிக் கொண் டிருந்தபடி தனது திட்டத்தை நிறைவேற்ற அன்றே இப்படி ஓர் அருமையான வாய்ப்புக் கிடைக்கும் என்றும் அவன் நினைக்கவேயில்லை. 

சங்கர் ஒழுங்காக ஹாஸ்டலுக்கு அன்றிரவு வந்து சேராததுதான் பாவாடையின் தீய்வைப்பு: நடவடிக்கைக்கு உரமாக அமைந்தது. ஹாஸ்டலில் படுத்துக்கொண்டிருந்தாலும் அவனை ரகசியமாகத் தூக்கிக் கொண்டு வந்து விடவேண்டும் என்று பாவாடை தன் ஆட்களுக்கு உத்தரவிட்டிருந்தான். ஆனால் அவர்களுக்கெல்லாம் அத்தனை சிரமம் கொடுக்காமல் சங்கரே அந்தத் தீயவர்களது திட்டத்துக்கு வழிவகுத்துக் கொடுத்துவிட்டான். 

ஆம்! சங்கரை டீக்கடையிலிருந்தே ரகசியமாகக் கண்காணித்துப் பின் தொடர்ந்து வந்த பாவாடையின் ஆட்கள்; மதகுக்குப் பின்னாலிருந்து, சங்கரும், குமாரும் பேசிக்கொண்டிருந்ததையெல்லாம் ஒட்டுக் கேட்டார்கள். ஹாஸ்டலுக்கே அன்றிரவு போகாமல் மட்டம் போட்டுவிட்டுத் தெருத் திண்ணையில் தூங்குவது என்கிற முடிவுக்கு அவர்கள் வந்ததும்;, பாவாடைக்குச் செய்தி பறந்தது. 

“பயல்கள் கைக்குள்ளிருக்கிறானுகள். உடனே போருக்குத் தீ மூட்டிடுங்க, நாங்கள் மதகிலி ருந்தே இவனுகளைக் கடத்திக் கொண்டுவந்து விடுகிறோம்’ என்று செய்தி வந்த பிறகுதான் திட்டப்படிக் கொள்ளி வைப்பு நடந்தது. சங்கரும் அவன் கூட்டாளியும் கோணிப்பைக்குள் கட்டப்பட்டு பட்டாமணியத்தின் சவுக்குத் தோப்பு வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டார்கள். அவர்களை உள்ளே தள்ளிப் பூட்டி விட்டுத்தான் பாவாடை செய்தி சொல்ல எஜமானர் வீட்டுக்கு ஓடோடியும் வந்தான். 

அதைக்கேட்டுப் பட்டாமணியம் மனம் பூரித் தார். காரியத்தை அன்றே அத்தனை சுலபமாக வெற்றிகரமாக முடித்து விட்டதற்காகப் பாவாடையை வாயாரப் புகழ்ந்தார். அதோடு அவர், ‘மேற்கொண்டு நாளைக் காலை என்ன செய்ய வேண்டும்’ என்கிற உத்தரவு ஒன்றும் போட்டார். 

‘பொழுது விடிவதற்குள், கூட்டாகப் பொய்ச் சாட்சி தயார் செய்து கொண்டு, காலையில் சந்தானத்தின் வீட்டுவாசலில் போய் முறையிட வேண்டும்.’ இதுதான் அந்தத் திட்டம். அந்தக் கைங்கரியத்துக்காகப் பட்டாமணியம் இரண்டு கற்றை நோட்டுகளையும் எடுத்துப் பாவாடையின் கையில் கொடுத்தார். 

அந்தக் கைக்கூலிப் பணம்தான்-சந்தானத்தின் வீட்டு வாசலில் பல பேர்களின் வாக்குமூலமாகப் – பொய்ச்சாட்சியாக முழங்கியது. 

அந்தப் போலி நாடகத்தையும்; அதில் தன்னு டைய நடிப்பையும் சந்தானம் உண்மை என்றே நம்பி ஏமாந்து விட்டதில் பாவாடைக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியுடனேயே சவுக்குத் தோப் புக்குச் சென்றான் தன்னுடைய கைத்தினவை எல்லாம் – சந்தைப் பேட்டையில் பலபேருக்கு முன்னால் அவமானப் படுத்திய சங்கரை தையப் புடைப்பது மூலம் தீர்த்துக்கொள்ள அந்த வீட்டினுள் நுழைந்த பாவாடைக்குத்தான் எவ்வளவு ஏமாற்றம்! 

பட்டாமணியகாரருடைய சவுக்குத் தோப்பு வீட்டை நெருங்கும் போது அவனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஆனால்- வாசலில் பூட்டிய பூட்டு அப்படியே இருக்க, பக்கத்துச் சுவரிலிருந்த ஜன்னல் கம்பிகள் மட்டும் அவனையே விழுங்கி விடுபவை போல் ‘ஆ’ வென்று வாயைப் பிளந்து கொண்டு நின்றன. உள்ளே அவர்களைக் கட்டிக் கொண்டு போய்ப் போட்ட கோணிப்பைகள் கை கொட்டிச் சிரிப்பது போல் தரையில் பரப்பிக் கிடந்தன. 

5. நத்தை வயிற்றில் முத்து 

பாவாடைக்கு ஒருகணம் தன்னுடைய கண்களையே நம்பமுடியவில்லை. தோலிருக்கச் சுளையை விழுங்குவது போல், பூட் டிய பூட்டு பூட்டியபடியே இருக்க உள்ளே அடைத்து வைத்திருந்த பையன்களைக் காணவில்லையே! 

எஜமானர் கூறிய திட்டப் படியே கொள்ளிவைப்பை நடத்தினான். எவ்வளவு சாமர்த்தியமாக அந்தப் பழியைச் சங்கர் தலைமீது சுமத்திச் சந்தானத்தைநம்ப வைத்தான்?  எச்சரிக்கையாகச் சங்கரை அந்த இரவிலேயே பிடித்து பாழும் வீட்டில் அடைத்து வைத்தான்? இத்தனையும் செய்து, வழக்கும் ஜோடித்து என்ன பயன்? கூண்டிலிருந்து பறவை தப்பிச் சென்றுவிட்டதே! 

இந்த அவமானச் செய்தியை எந்த முகத்துடன் பட்டாமணியத்திடம் சென்று கூறுவது? முகத்தில் காறி அல்லவா உமிழ்வார்? அதுமட்டுமா?தப்பிச் சென்ற சங்கர் தன் குட்டுக்களை அம்பலமாக்கி விட்டால்?- 

பாவாடை ஒரேயடியாகக் குழம்பி: அப்படியே அந்தா அறையில் உட்கார்ந்துவிட்டான். அவனது சிந்தனை எல்லாம், ‘சங்கர் இப்போது எங்கே இருப் பான், அவனை எப்படிப் பிடிப்பது?” என்பதுதான். 

அறைக்குள் அடைபட்ட சங்கரும், குமாரும் இன்னது செய்வது என்று புரியாமல் திகைத்துக் கொண்டிருந்தபோது- 

“டேய் சங்கர், நம்மைக் கொன்று று இந்தச் சவுக்குத் தோப்பிலேயே குழிதோண்டிப் புதைக்கத் தாண்டா பாவாடை நம்மை இங்கே அடைச்சு வெச்சிருக்கான்!” என்றான் குமார், 

சங்கர் பதிலே பேசவில்லை; ஒருவறட்டுச் சிரிப்பு அவன் இதழ்க்கடையில் ஓடியது. 

“டேய் சங்கர், உன்னைப் போல் என்னாலே சமாதானமா இருக்க முடியல்லேடா! லேட்டானாலும் பரவாயில்லேன்னு ஹாஸ்டலுக்கே போயிருக்கலாம். அப்போ இந்த வம்பெல்லாம் வந்திருக்காது பாவிகள் கையிலே அகப்பட்டு..ஹும்… இனிமே? பொழுது விடிஞ்சா, இங்கே என்ன வெல்லாம் நடக்கப் போகிறதோ?” என்று குமார் முணுமுணுத்தான். 

“பொழுது விடியாது!”-சங்கர் ஒரே வார்த்தையில் கூறினான் மோட்டு வளையைப் பார்த்தபடி. 

“உக்கும்…இவரு பெரிய நளாயினி!’” 

குமாரின் வார்த்தையை லட்சியம் செய்யாமல் அறையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த சங்கர், “குனிடா கீழே!” என்றான் குமாரைப் பார்த்து. 

சங்கர் குறிப்பிட்ட சுவர் ஜன்னலின் கீழே குனிந்து நின்று கொண்டான் குமார். சங்கர் குமாரின் முதுகின் மீதேறி ஜன்னல் கம்பிகளைச் சற்று அசைத்துப் பார்த்தான். என்ன ஆச்சரியம்! அந்தக் கம்பிகள் வளைந்து விரிந்துவிட்டன. நிச்சயம் இது மந்திரவாதமல்ல! சங்கருக்கு அப்போதுதான் முதன் முதலாக ஒரு சந்தேகம் எழுந்தது. தன்னையும் அறியாமல் தன் கரங்களில் ஏதோ ஓர் அமானுஷ்ய வலிமை இருப்பது நன்கு புலனாயிற்று. 

அக்கிரமமாகக் கடைத்தெருவில் தாக்கவந்த பாவாடையிடமிருந்து தக்க சமயத்தில் தன்னைக் காப்பாற்றி உதவிய இந்த அதிசயவலிமையை, ரகசியமாகவே வைத்துக் கொள்ள விரும்பினான். 

எனவே, மிகுந்த சிரமப்பட்டுக் கம்பியை வளைப்பதுபோல் முக்கி முனகியபடி ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிய சங்கருக்குத் ‘திக்’ கென்றது. 

ஆம்! ஓர் உருவம் அந்த வீட்டை நோக்கி வந்து கொண்டிருப்பது மங்கலான வெளிச்சத்தில் தெரிந்தது. சட்டென்று கீழே குதித்தான் சங்கர். குமாரிடமும் விஷயத்தைக் கூறி உஷார்ப் படுத் தினான். 

அடுத்த நிமிஷம் என்ன நடக்குமோ என்று அவர்கள் திகில்பட்டுக் கொண்டிருக்கும்போதே, பூட்டுத் திறக்கப்படுகிற சத்தம் கேட்டது. 

பூட்டிய பூட்டை இவ்வளவு சுலபமாகத் திறப்ப தென்றால், அதைப் பூட்டியவர்களால் தானே முடியும்? நிச்சயம் இது பாவாடையோ அல்லது அவனது ஆட்களோதான் என்று அஞ்சி, மூலையில் இருவரும் பதுங்கினார்கள். அப்போது உள்ளே நுழைந்த உருவத்தின் கையிலிருந்த பாட்டரி, ஒளி வெள்ளத்தை வாரியிறைத்தது. அந்த வெளிச்சம் குறிப்பாக மூலையில் பதுங்கியிருந்த அவர்கள் மீது படவும் தவறவில்லை. 

ஆனால் என்ன ஆச்சரியம்! அந்த உருவம், ‘‘சங்கர்” என்று மெல்ல அழைக்கவும், ஏக காலத்தில் சங்கரும் குமாரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். 

“சார்!” என்று ஓடிவந்து காலில் விழுந்த குமாரையும், சங்கரையும் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டார் ஹாஸ்டல் மேனேஜர் பசுபதி. 

”விவரம் எல்லாம் விடுதியில் போய்ப் பேசிக் கொள்ளலாம். இப்போது நாம் மூவருமே மிக ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறோம். உடனே என்னோடு புறப்படுங்கள்!” என்று அவசரப் படுத்தினார். 

அவர்கள் வெளியே வந்ததும் கதவை மீண்டும் பூட்டாமலே பசுபதியும் அவர்களுடன் புறப்பட்டார். 

உடனே குமார், “ஏன் சார், கதவைப் பூட்ட வேண்டாமா? இல்லாட்டி சந்தேகம் ஏற்பட்டு விடாதா?” என்றான்; ஏதோ அற்புத யோசனை யைக் கூறுபவன்போல. 

“பூட்டினால்தான் சந்தேகம் ஏற்படும். ஏன்னா, என்கிட்டே இருக்கிற இந்தச் சாவி, இந்தப் பூட்டோடெ ரெண்டு ஒரிஜினல் சாவிகளிலே ஒண்ணு. இன்னொன்னு பாவாடை கிட்டே இருக்கு. இதை இப்படியே திறந்து விட்டுட்டுப் போனா, யாரோ பூட்டை உடைச்சுக் காப்பாற்றியிருக்காங் கன்னு நினைப்பான்!” என்று விளக்கம் கூறினார் பசுபதி, 

உளனே சங்கர், வெளியே வளைந்திருக்கிற ஜன்னல் கம்பியைக் காட்டி, ”இது வழியா நாங்க தப்பிப் போனதா பாவாடை எண்ணிக் கொள்ளட்டும்; நீங்க பூட்டை இழுத்துப் பூட்டிடுங்க!” என்றான். 

பசுபதிக்கும் அதுதான் மிக நல்ல யோசனை யாகப் பட்டது. கதவை இழுத்துப் பூட்டைப் பூட்டினார். விறுவிறு என்று மூவரும் சவுக்குத் தோப்பு களின் ஊடே குறுக்கும் நெடுக்கும் புகுந்து, பாட சாலை விடுதியை அடைந்தார்கள். 

வழி நெடுகக் குமாரும் சங்கரும், ‘மானேஜர் இங்கே எப்படி இவ்வுளவு கரெக்டாக நம்மைக் காப்பாற்ற வந்து சேர்ந்தார்? இங்கே அடைபட்டுக் கிடக்கிற விஷயம் அவருக்கு எப்படித் தெரிந்தது? மாவாடை கையில் இருக்கும் சாவிக்கு மற்றொரு சாவி நம் மானேஜர் கைக்கு எப்படி வந்தது? மானேஜருக்கும் பாவாடைக்கும் என்ன உறவு? அல்லது அவர்களுக்குள் என்ன விரோதம்? ஹாஸ் டலுக்கு வந்த பிறகு தங்களை என்னென்ன கேள்வி கள் கேட்கப் போகிறாரோ?’ என்றெல்லாம் கவலைப் பட்டுக்கொண்டே வந்தார்கள். 

ஆனால் ஹாஸ்டலுக்கு வந்ததும் அவர்கள் எதிர் பார்த்தபடி எதுவுமே நடக்கவில்லை. மாறாக, உடனே அவர்கள் இருவரையும் கை கால் கழுவிப் பிரார்த்தனையை முடித்துக்கொண்டு வரச் சொன் னார். சமையல் அறை விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. விடுதியில் மற்ற அறையிலுள்ள பையன்கள் எல்லாரும் எப்போதோ தூங்கிவிட்டார்கள். சங்கரும், குமாரும் வந்ததும் சமையல் காரர் அவர்களுக்கு உணவு பறிமாறினார். 

சங்கரும், குமாரும் பிறகு மானேஜருடன் அறைக்கு வந்தார்கள். – கொட்டகை வாசலுக்கு வந்தது முதல்; சங்கருக்கும் பாவாடைக்கும் மல்யுத்தம் மூண்டு பட்டாமணியம் அழைத்துச் சென்றதுவரை ஆதியோடு அந்தமாகக் கூறினான் குமார். அதன் பிறகு டீக்கடை நாயர் தேநீர் விருந்து கொடுத்ததையும் கூறி – ஆனால் நேரம் கழித் துப் பாடசாலைக்குப் போக மனமின்றி இரவைக் கழிக்கப் போட்டிருந்த பொய்த் திட்டத்தைப் பற்றிக் கூறமட்டும் தயங்கினான். 

சங்கர், “அதையும் கூறிவிடேன் குமார்; ஒன்றை மட்டும் மறைப்பானேன்?’ என்பதுபோல் பார்த்தான். 

குமார் அதையும் கூறி முடித்தவுடன் மானேஜர் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார். பையன்களுடைய திறமையும், நேர்மையும் சத்தியமும் அவர் மனத்தைக் கவர்ந்தன; என்றாலும் எவ்வளவு பெரிய வம்பை விலைக்கு வாங்கி பெரிய சதியில் சிக்கி விட்டார்கள்! 

“நீங்கள் குஸ்திபோட்டதெல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் எத்தனை நேர மானாலும் நேரே நீங்க விடுதிக்கு வராதது பெரிய தப்பு. அப்படி நீங்க வராததினாலேயே, அக்கரை யிலே பாவாடையோடே போரிலே தீ வைத்த பழி உங்க மேலே வந்து விழுந்திருக்கு” என்று பசுபதி கூறி முடிக்குமுன்- 

“சார், சத்தியமாகச் சொல்லறேன் சார்; அக்கரையிலே தீப்பற்றி எரியறபோது நாங்க இக் கரையிலே தான் இருந்தோம். தீயை நான்தான் பார்த்துவிட்டுச் சங்கருக்குச் சொன்னேன். அது எங்கே யார் வீட்டிலே பிடிச்சுது என்கிறதுகூட எங்களுக்குத் தெரியாது சார்!” என்றான் குமார் அழுதபடி. 

“நீ சொல்றதை யெல்லாம் நான் நம்பறேன் குமார். ஆனால் அந்தப் பழியை இல்லேன்னு மறுத் துச் சொல்ல முடியாதபடி நீங்க ரெண்டுபேருமே விடுதியிலே இல்லையே. அப்படி நீங்கள் வெளியிலே சுத்திக்கிட்டு இருக்கிறது தெரிஞ்சு உங்களையும் தங்கள் வசம் வைத்துக்கொள்ள ஏற்பாடு ஆன பிறகுதானே கொள்ளி வைப்பதே நடந்திருக்கு!” 

“அப்படியா சார்? இதெல்லாம் எங்களுக்கு ஒண்ணுமே தெரியாது. மோசம் போயிட்டோம் சார்!” என்று குமார் அழாக் குறையாகக் கூறினான். 

“நீங்கள் மட்டுமா மோசம் போனீர்கள்? நாளைக்கே இந்த விஷயம் ஐயா காது வரைக்கும் போகும். உங்களை நான் இப்போ காப்பாத்தினது பெரிசு இல்லே. தீ மூட்டின அந்தப் பொல்லாப் பழியிலேயிருந்து உங்களைக் சாப்பாத்தணும்னா-தீ விபத்து நடக்கிறபோது நீங்க ரெண்டுபேரும் ஹாஸ்டலிலே இருந்ததா நான் பொய் சொல்லணும். அதுமட்டும் போதாது. பாடசாலைப் பையன் கள் அத்தனை பேருமே உங்களுக்காகப் பொய்ச் சாட்சி சொல்லியாகணும். அதை என்னால் அனு மதிக்கவே முடியாது!” 

“அப்போ என்ன தான் ஸார் செய்யறது?” 

“ஐயா வரையில் விஷயம் போய் விசாரித்தால் நீங்கள் உங்கள் பகுதியைச் சொல்லுங்க; நான் எனக்குத் தகவல் கொடுத்து, உங்களையும் காப்பாத் தச் சொல்லி என் கையிலே சாவியைக் கொண்டு வந்து கொடுத்த பட்டாமணியத்தின் பெண்ணைப் பற்றிச் சொல்லித்தான் ஆகணும்!” என்றார் பசுபதி. 

இதைக் கேட்டதும் சங்கருக்குச் ‘சுரீர்’ என்றது. வசந்தியா மானேஜரிடம் சாவியைக் கொடுத்துத் தங்களைக் காப்பாற்ற உதவியிருக்கிறாள்? அவனையும் அறியாமல் அவன் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. ‘எவ்வளவு கொடிய மனிதருக்கு எவ்வளவு நல்ல பெண் பிறந்திருக்கிறாள்… இரணியனுக்குப் பிரகலாதன் பிறந்தது போல!_’ என்று அவன் மனம் உருகியது.

– தொடரும்

– ஜேம்ஸ் பாண்ட் சங்கர், முதற் பதிப்பு: டிசம்பர் 1984, காயத்ரி பப்ளிகேஷன், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *