கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 10,988 
 

துருப்பிடித்த சைக்கிள், உடைந்த கார் இருந்த இடத்துக்குப் பக்கத்தில் குத்தவைத்து உட்கார்ந்திருந்தார் ராசு. ஒரு குச்சியால் தரையில் ஏதோ கோடு போட்டுக்கொண்டு இருந்த அவர் மனம், துக்க நெருக்கடியில் அலறியது. வயிற்றில் உருண்டோடிய துயரத்தின் நெடி, கண்களில் திரண்டு பெருகியது. உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தார். அவர் மகன் ஸ்டாலினை எப்போது வேண்டுமானாலும் வெளியே கொண்டுவரலாம். அவனுடைய பைக்கும் பழைய பைக், சைக்கிள் கிடந்த இடத்தில், நம்பர் பிளேட் நெளிந்துபோய், பைக்கின் கண்ணாடிகள் உடைந்து சிதைந்துகிடந்தது. அதைப் பார்க்கச் சகிக்காமல், தலை குனிந்து யாருக்கும் தெரியாமல் கண்ணீரை உகுத்துக்கொண்டு இருந்தார். போட்ட கோட்டினை அதே குச்சியால் திரும்ப அழித்தார். 10 மணிக்கு மேல் அவனை வெளியே கூட்டி வந்தார்கள், இரண்டு போலீஸ்காரர்கள். ஸ்டேஷன் வாசற்படியைத் தாண்டும்போது அவனை நெட்டித் தள்ளினார்கள். இத்தனைக்கும் அப்போது அவன் குற்றமற்ற முகத்துடன் இருந்தான். நேற்றைய இரவின் வன்மமும் குற்றமும் அவன் முகத்தில் இருந்து முற்றாக வடிந்திருந்தது. எதிர்பாராத தள்ளலில் அவன் திடுக்கிட்ட கணத்தில், பய ரேகை ஒன்று அவன் முகத்தில் தோன்றியதை அப்பா பார்த்துவிட்டார். அவனின் முகம், கைகளில் சிராய்ப்பு ரத்தக் கோடுகளாக இருந்தன. சிராய்ப்பு கால் களிலும் இருந்தது. ஆனால், அவன் லுங்கியைக் கால் வரை இறக்கி இருந்ததால், அது வெளியே தெரியவில்லை.

ஆற்றாமையில் மருகிக் குலைந்து எழுந்து நின்றார் ராசு. அப்பாவின் முகத்தைப் பார்க்கும் தைரியம் மகனுக்கு இல்லை. ராசு, போலீஸ்காரர்கள் பக்கத்தில் போய் ஏதோ பேச முயல, வார்த்தைகள் எதுவும் வெளிவரவில்லை அவருக்கு. ஏளனமாகப் பார்த்த துப்பாக்கி வைத்திருந்த காவலர், ”என்னாய்யா..?” என்று மிக அருவருப்பான முக பாவனையோடு, ஒரே மிரட்டலில் உயிரை எடுத்து விடலாம் என்ற தோரணையில் வார்த்தையை எறிந்தார். அவரைப் பார்த்துப் பயப்படும் மன நிலையில் இல்லை ராசு.

வாழ்வைத் தொலைத்த தன் மகனின் அடுத்தகட்ட வாழ்க்கை என்னவாகும் என்பதில் இருந்த கலக்கத்தில், ”சார், கேஸெல்லாம் போடாதீங்க சார்… ஏதோ குடிவெறியில செஞ்சுட்டான். அவன் கவர்மென்ட் வேலைக்குப் போகணும் சார்” என்றார் கலங்கிய கண்களுடன். அதனைக் காதில் வாங்கிக்கொள்ளாதவர் கள்போல பெரும் அலட்சியத்துடன் அவர்கள் அவரைக் கடந்து சென்றார்கள். பின்னால் போவதா அல்லது நிற்பதா என்ற தயக்கத்துடன் ஒரு கணம் ராசு நிற்கையில், போலீஸ்காரர்களின் உடல்மொழி அவரை அழைப்பதைப்போலத் தோன்ற, பின்னாடியே போனார். ”பாளையம் கோர்ட்டுக்குக் கொண்டுபோயிட்டு, அப்படியே ஜெயிலுக்குக் கொண்டுபோய்டுவோம்” என்றார் ஒரு காவலர், அவரைப் பார்க்காமலேயே. அதில் ஏதோ ஒரு விஷயம் இருந்தது. அவர்கள் பின்னால் சென்றார் ராசு.

நெடுஞ்சாலையிலேயே ஸ்டேஷன் இருந்ததால், அப்படியே வாசலுக்கு வந்து ஒரு பஸ்ஸை மறித்து ஏறினார்கள். மகன் கையில் பூட்டப்பட்டு இருந்த விலங்கை அப்போதுதான் பார்த்தார் ராசு. அவருடைய முகம் உறைந்துபோனது.

பின்பக்கப் படிகளில் போலீஸ்காரர்கள், தன் மகனைத் தள்ளிக்கொண்டு ஏற… ராசுமுன் பக்கப் படிகளில் ஏறினார். பஸ்ஸில் இருந்த ஊர்க்காரர்கள் யாரும் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. பெரிய திரைக்கோடாகத் தோன்றிய கண்ணீர்ப்படலம் எல்லாவற்றையும் மறைத்தது. ஓர் ஆணின் மிகப் பெரும் துக்கம் எந்த மனிதனையும் உள் நெஞ்சிலாவது கலங் கடிக்கச் செய்யும்.

யாரோ ஒருவர், ”என்னாச்சுப்பா… உன் மகன் கையில வெலங்கப் போட்டு போலீஸ்காரங்க கூட்டுப் போறங்க” என்றார் வருத்தத்துடன். ”ஒரு சின்னப் பிரச்னை” என்று மட்டும் பதில் அளித்த அவருக்கு, ஈரக் குலை நடுங்க… பயம் வயிற்றைக் கவ்வியது. மகனைப் பார்த்தார். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருந்த ஸ்டாலின், மிகப் பெரிய குற்றத்தில் இருந்து விடுதலை அடைந்தவன்போல ஆசுவாசமாக இருந்தான். இதுநாள் வரை அவனை அலைக்கழித்து, மேலும் மேலும் பாதாளத்துக்குள் இழுத்துக்கொண்டுபோன பெரிய பாரம் ஒன்று முற்றாக வடிந்திருந்தது. எப்போதும் பதற்றம் அடைந்தவன்போலவே காணப்படும் அவன், அன்று இயேசுவின் கரங்களால் ஆசி பெற்றவனைப்போல அருள் நிறைந்த அமைதியுடன் இருந்தான். அந்த அவனின் இயல்பு அப்பாவுக்கு மேலும் கலக்கத்தை அதிகப்படுத்தியது. அவன் மனதில் என்ன ஓடிக்கொண்டு இருக்கிறதோ என்று கவலைப்பட்டார்.

நேற்று மட்டும் அவன் பிராந்திக் கடைக்குப் போகாமல் இருந்திருந்தால், எப்படியும் கவர்மென்ட் வேலை கிடைத்து இருக்கும் என்று அந்த பஸ் பயணம் முழுதும் அப்பா நினைத்துக்கொண்டே வந்தார். நேற்று ஸ்டாலினும் அவன் நண்பன் ராஜேஷ§ம் பிராந்திக் கடையில் உட்கார்ந்து குடித்துக்கொண்டு இருந்தார்கள். சிவகுமார் அவர்கள் இருக்கும் டேபிளுக்கு இரண்டு டேபிள் தள்ளி உட்கார்ந்து இருந்தான் தன் நண்பர்கள் இருவரோடு. அடிக்கடி சிவகுமாரும் ஸ்டாலினும் பார்த்துக்கொண்டார்கள். சிவகுமாரின் பார்வை ஸ்டாலினை ஏளனப்படுத்துவதாகவே தோன்றியது. பகை மூண்டுகொண்டு இருந்த இந்த இரவுக்காகக் காத்திருந்ததைப்போல, வன்மத்தின் புன்னகையை உதிர்த்தான் ஸ்டாலின் மனசுக்குள். இருளின் நிறத்துக்கு ஏற்ப அவன் கசப்புகளும் கூடிக்கொண்டே இருந்தன. ஸ்டாலினோடு சேர்ந்து குடித்துக்கொண்டு இருந்த ராஜேஷ் ”ஏன்டா சிரிக்கிறே?” என்று கேட்டுவிட்டு, பின் பதிலற்ற இவன் சிரிப்பின் திசையைப் பார்த்தான். அங்கே சிவகுமார் இரண்டு போலீஸ்கார நண்பர்களோடு குடித்துக்கொண்டு இருந்தான். இருவரின் உள் பகையை முழுதும் அறிந்திருந்த ராஜேஷ§க்கு எல்லாம் புரிந்துவிட்டது. ”டேய் கௌம்பலாமா?” என்றான். ஸ்டாலின் மறுபடியும் அதே சிரிப்போடு, ”ஏன்டா பயப்படுறியா?” என்றான். ”இல்லடா… கௌம்பலாம். வீட்லருந்து இப்பவே எனக்கு நெறையே போன் வந்திருச்சு” என்றான். ”சரி, நீ போடா… நான் கொஞ்ச நேரங் கழிச்சு வாறேன்” என்றான் ஸ்டாலின். ”டேய் போதும்டா… கௌம்பலாண்டா” என்ற ராஜேஷை, ”கடைசியில நீயும் போலீஸ்காரன் புத்தியைக் காட்டிட்டியிலே. போலீஸ்காரனும் போலீஸ்காரனும் கூட்டு” என்றான் எரிச்சலோடு. ”ஏன்டா, நீ இப்ப சம்பந்தம் இல்லாமப் பேசற?”என்ற ராஜேஷ், அவனை விடாப்பிடியாக வெளியே அழைத்து வந்து விட்டான்.

சிவகுமாரும் ராஜேஷ§ம் ஒரே பேட்ச்சில்தான் போலீஸ் செலெக்‌ஷனில் தேர்வானார்கள். அவர்களோடு ஸ்டாலினும் போலீஸ் செலெக்ஷனுக்குப் போயிருந்தால், அவனும் தேர்வாகி இருப்பான். டிகிரி முடித்து இருந்த அவர்கள் மூவரும் ஒரு பேப்பர் கம்பெனி சார்பாக மாவட்டக் கபடிக் குழு அணியில் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். ஸ்டாலினுக்கு போலீஸ்காரர்களையே பிடிக்காது. அவர்கள் இருவரும் போலீஸ் வேலைக்குப் போக, இவன் போக்குவரத்துத் துறையில் விளையாட்டுப் பிரிவில் வேலைக்கு முயற்சித்துக்கொண்டு இருந்தான். எப்படியும் ஒன்றிரண்டு மாதங்களில் கிளர்க் வேலை கிடைக்கும் என்று காத்திருந்த வேளையில் தான், நேற்று பிராந்திக் கடையில் நண்பன்ராஜேஷோடு குடி.

ஸ்டாலினுக்கு போலீஸ் வேலை பிடிக்காமல் போனதற்கு ஒச்சாயி பாட்டிதான் காரணம். அவள் போலீஸ் பற்றி கதை சொன்ன நாளில் இருந்தே அவர்கள் மீதான வெறுப்பு பசையென அவன் மனதில் ஒட்டிக்கொண்டது. ”ஏன் பாட்டி, நம்ம வீடெல்லாம் இப்படி மண் சுவரா இருக்கு. அப்பா பொழுதன்னிக்கும் அடுத்தவங்க காட்டுக்கே உழுகப்போறாரு. நமக்குன்னு காடு இல்லியா? புளுத்துப்போன ரேஷன் அரிசிச் சோறா சாப்பிட்டுக்கிருக்கோம். சின்ன அரிசிச் சோறு எப்ப சாப்பிடுவோம்?” எனத் தங்கள் குடும்பத்தில் கவிழ்ந்திருக்கும் வறுமையைப்பற்றி ஓயாமல் பாட்டியிடம் கேட்பான். பாட்டி நீண்ட ஒப்பாரி வைத்து பழைய கதையைச் சொல்ல ஆரம்பிப்பாள். ”டேய், அந்த காக்கி உடுப்பு போட்டவங்க மட்டும் ராத்திரியில நம்மாளுகளைப் புடிச்சு அடைச்சுவைக்காட்டி, நாமளும் இந்நேரம் வசதியா இருந்திருப்போமுடா. ஒரு தலைமொற பொழப்பயேக் கெடுத்துப்பிட்டாங்கடா. எப்பவோ நம்மாளுக களவாண்டுக்குத் திரிஞ்சாங்களாம். அதை மனசுல வெச்சுக்கிட்டு, திருட்டே பண்ணலைன்னாலும் நம்ம ஆளுகளுக்குப் பூராத் திருட்டுப் பட்டம் கட்டி ராத்திரி ஆனா ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போயி அடச்சுக்கிருவா னுங்க. தெனமும் இந்தக் கொடுமை புடிக்காம உங்க தாத்தா காடே பரதேசமுன்னு திரிவாரு. நானும் என் பிள்ளைகளும் கூலி வேல செஞ்சும் தன்னால மொளச்சுக்கெடக்கிற ஆமணக்கு முத்தை உடைச்சு வித்துக் காலத்தை ஓட்டுனோம். அதனாலதான் மேடேற முடியல. இன்னும் வறுமையாக் கெடக்கோம். நீயாச்சும் படிச்சு கெவருமென்ட்டு வேல பாக்கணுமப்பா!”

இப்படி பாட்டி சொன்ன கதையைக் கேட்டுக் கேட்டு, போலீஸ்காரர்களைக் கண்டாலே சிறு வயதில் இருந்தே எரிச்சலும் கோபமும் இருந்தது. சிவகுமார் போலீஸ் வேலை பார்த்தது வேறு அவன் மீதான கோபம் குறையாமல் இருப்பதற்கான காரணமாக இருந்தது.

ராஜேஷ் அவனை இழுத்துக்கொண்டு போவதை சிவகுமார் அலட்சியத்தோடு பார்ப்பதாகவே ஸ்டாலினுக்குத் தோன்றியது. அவன் மீதான வன்மம் எதில் இருந்து தொடங்கியது என்று சரியாகத் தெரியவில்லை. கலாவின் பொருட்டே அது தொடங்கி இருக்கலாம் என்று அவனே ஞாபகப்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் அடிமனதில் கிடந்தது. சரசரக்கும் சீட்டிப் பாவாடை இவன் மேல் உரசும்படியாக கலா நடந்து சென்ற ஏதோ ஒரு பொழுதில், இவன் அவள் மேல் பைத்தியமானான். ஆனால், சரியான ஊமக் கொட்டானான இவன் கலாவிடம் பேசுவதுகூடக் கிடையாது. அவளைக் குறுகுறுவென்று பார்த்துக்கொண்டே இருந்தான். அழகான சிரிப்பைக்கொண்டு இருந்தாள் கலா. சந்தோஷமும் பூரிப்பும் அந்தச் சிரிப்பில் முழுமையாக இருக்கும். சிரிப்பு என்றால், ஏதோ எல்லாவற்றையும் பார்த்துக் காரணமற்ற சிரிப்பு இல்லை. அன்பின் வெளிப்பாடு அவளுக்குச் சிரிப்பாகத்தான் இருந்தது. அவளுக்குப் பிடிக்காத விஷயம் நடந்தால், வருத்தப்படுவாளே தவிர, கோபப்பட மாட்டாள். அந்த வருத்தமும் கொஞ்ச நேரம்தான். இத்தகைய குணங்களை உடைய அவளை ஸ்டாலினுக்குப் பிடித்துப்போனது ஒன்றும் வியப்பு இல்லை.

இவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது கலாவின் பெயரை சிலேட்டில் திரும்பத் திரும்ப எழுதி அழித்துக்கொண்டு இருந்தான். இது அவனுக்கு ஒரு பழக்கமாகவே போய்விட்டது. அப்படி இவன் கலா பெயரை சிலேட்டில் எழுதிக்கொண்டு இருப்பதை பொன்ராஜ் வாத்தியாரிடம் சிவகுமார் காட்டிக்கொடுத்தான். ”இந்த வயசுல இதெல்லாம் செய்றியா?” என்று குச்சி தெறிக்கும் வரை அடித் தார். எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் கலா அன்று அழுதாள். வாத்தியார் அடித்ததுகூடஸ்டாலி னுக்குப் பிரச்னை இல்லை. கலா அழுததைத்தான் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

மாலை பள்ளி முடிந்ததும், பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில் இருக்கும் சவுக்கு மரத்துக்குக் கீழே இவனும் சிவகுமாரும் கட்டி உருண்டு சண்டைபோட்டார்கள். கடைசியில் சிவகுமாரின் மண்டையை உடைத்தான் ஸ்டாலின். விஷயம், பெரிய வாத்தியார் வரை போய், அப்பாவை அழைத்து வரச் சொல்லி, சர்ட்டிஃபிகேட்டைக் கொடுத்துடுவேன் என்று அவர் மிரட்ட, அப்பா ரொம்பக் கெஞ்சி இவனைப் பள்ளியில் சேர்த்துவிட்டு வந்தார். வீட்டுக்கு வந்தவனை அடி அடியென்று அடித்து, இனி மேல் யாரோடும் சண்டை போட்டால், தலைகீழாகக் கட்டித் தொங்கவிடுவேன் என்று பயமுறுத்தினார். அன்றில் இருந்தே அவன் மனதில் சிவகுமார் மீதான வன்மம் மனதில் ஆழப் படிந்தது.

முன்பெல்லாம் இவனோடு சிரித்துப் பேசிக்கொண்டு இருந்த கலாவும் இவனைக் கண்டு பேச மறுத்து முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அந்த வருடம் மாணவ – மாணவிகள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில், சிவகுமாரின் முகத்தை சிவப்பு இங்க் பேனாவால் முகம் தெரியாமல் கிறுக்கி அழித்தான் ஸ்டாலின். அதுவும் சிவகுமார், கலா நின்று இருந்த இடத்துக்குப் பின்னால் அவளுக்கு இணையாக நின்று இருந்தது இன்னும் அவனது வெறியைக் கூட்டியது. சிவகுமாரும் அவனும் ஒரே தெருவில் இருந்ததால் அடிக்கடி பார்த்துக்கொள்ள நேர, பகை மூண்டுகொண்டே இருந்தது. பள்ளிக்கூடத்திலும் தெருவிலும் விளையாடும்போது இருவரும் எதிர் எதிர் அணியில் நின்று, மிகப் பெரும் படையில் நின்று போரிடும் போர் வீரர்களைப்போல மோதிக்கொள்வார்கள். அவர்கள் வளர்ந்து பெரியவன் ஆனாலும், தண்ணீருக்கு அடியில் படிந்த பாசிபோல சிவகுமாரின் மீதான வன்மத்தை வெளித் தெரியாமல் வளர்த்துக் கொண்டே போனான் ஸ்டாலின்.

ராஜேஷ் வீட்டுக்குப் போனதும், பைக்கை ஓட்டிக்கொண்டு மீண்டும் பிராந்திக் கடைக்கு வந்தான் ஸ்டாலின். அப்போது சிவகுமாரும் அவனின் இரண்டு நண்பர்களும் பிராந்திக் கடைக்கு வெளியே நின்று இருந்தார்கள். ஸ்டாலின் நேராக அவன் மேல் பைக்கைவிட்டான். பைக் சிவகுமாரை இடிக்க, அவன் கீழே சரிந்து, ஒரு நொடியில் சுதாரித்து எழுந்தான். பைக் தரையில் உராசி சரிந்து விழுந்தது. அப்போதும் வெறி தீராத ஸ்டாலின், பைக்கில் இருந்து எம்பி மேலே எழுந்து சிவகுமாரை நோக்கி ஓடி, ஒரு அடி அடித்துக் கீழே தள்ளிவிட்டு, பக்கத்தில் இருந்த சிக்கன் கடையையும் அடித்து நொறுக்கினான். கொஞ்ச நேரம் பார்த்த மூவரும் கையோடு ஸ்டாலினைப் பிடித்துக்கொண்டார்கள். யாரும் அவனை அடிக்கவில்லை. குண்டுகட்டாகத் தூக்கி அவன் பைக்கிலேயே வைத்து, அப்படியே போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோனார்கள். சிவகுமாரோடு இருந்த போலீஸ்காரர்கள், பக்கத்து ஊர் ஸ்டேஷனில் வேலை பார்ப் பவர்கள். அவர்களே நேரடியாக ஸ்டேஷனில் ஒப்படைத்ததால், போலீஸ்காரர்களையே அடிக்கிற அளவு திமிரா என்று ஸ்டாலினை அடி பிய்த்து எடுத்துவிட்டு, உடனடியாக எஃப்.ஐ.ஆர் போட்டுவிட்டார்கள்.

கூடலூரில் இருந்து பாளையம் போகும் வரை பஸ்ஸில் ஏறும் ஒவ்வொரு பயணியும் விலங்கு மாட்டப்பட்ட தன் மகனையும் போலீஸ்காரர்களையும் பயத்தோடு பார்ப்பதாக ராசு நினைத்தார்.

அது மார்கழி மாதம். வழியெங்கும் பசுமையான தோட்டத்தை வேடிக்கை பார்த்த ஸ்டாலின், அப்போதுதான் முதன்முறையாக வெள்ளையாகப் பூத்துக் குலுங்கிய கரும்புப் பூவைப் பார்த்தான். அவன் மனம் நேற்று நடந்தவை எதனோடும் தொடர்பு இல்லாமல் முற்றிலுமாக இயற்கையோடு இணைந்து இருந்தது. தன் மனதில் இருந்த வன்மத்துக்கு, தனக்குத்தானே விடுதலை அளித்துக்கொண்டதுபோல் இருந்தது அவனுக்கு. இனி சிவகுமாரை நேர்கொண்டு பார்த்தாலும், ஒருவேளை சிநேகத்தோடு சிரிக்கக்கூடச் செய்யலாம். பாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்ததும் இறங்கினார்கள். ராசு அவர்கள் அருகில் போனார்.

கொலை முயற்சி வழக்கு எண் 307-ல் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு இருந்தது. அது மட்டும் நிரூபிக்கப்பட்டால், கவர்மென்ட் வேலை கிடைக்காமல் போவதோடு மட்டும் அல்லாமல், தண்டனையும் அதிகமாகக் கிடைக்கும் என்று காலையில் உள்ளூர் வக்கீல் ஒருவர் ராசுவிடம் சொல்லி இருந்தார். ”எஃப்.ஐ.ஆர் போட்டு இருப்பதால், கோர்ட்டில் ஸ்டாலினை ஆஜர்படுத்திய பின்புதான், வழக்கை எப்படி இல்லாமல் ஆக்குவது என்பதுபற்றி சொல்ல முடியும். அதுவரை உள்ளூர் போலீஸ்காரர்களைச் சரிக்கட்டுங்கள்” என்று வக்கீல் சொல்லியதால், ராசு போலீஸ்காரர்கள் பின்னாடியே நடந்தார்.

ஒரு போலீஸ்காரர் ராசுவிடம், ”என்னப்பா… இப்படியே நடந்து போவமா. இல்ல… ஆட்டோ கூப்டுறியா?” என்று சொல்வதற்கு முன்பாகவே, ராசு ஒரு ஆட்டோவைக் கூப்பிட்டார். இரண்டு போலீஸ்காரர்களும் ஸ்டாலினை நடுவில்வைத்து, பின் சீட்டில் உட்கார்ந்துகொள்ள, ராசு டிரைவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டார்.

முள் வேலி இடப்பட்ட பாளையம் கிளை கோர்ட் காலை நேரம் என்பதால், கொஞ்சம் பரபரப்பாக இருந்தது. ராசு இப்போதுதான் கோர்ட்டை முதன்முறையாகப் பார்க்கிறார். வம்பு வழக்கு என்று இல்லாமல், காடு கரை என்று திரிந்தவருக்கு கோர்ட் பற்றித் தெரிய வில்லை. சினிமாவில் பார்த்ததுபோல் கோர்ட் ஒன்றும் பெரிதாக இல்லை என்று நினைத்தபடி, அவர்கள் பின்னாடியே போனார். ஆட்டோவுக்குப் பணம் கொடுத்தது மட்டும் அல்லாமல், வரும் வழியிலேயே போலீஸ்காரர்கள் கையில் 200 ரூபாய் கொடுத்ததால், போலீஸ்காரர்கள் இப்போது அவரோடு சிநேகிதமாகப் பேசியபடி வந்தார்கள்.

”உன் மகன் என்னப்பா எதுவுமே பேச மாட்டேங்கிறான். ஜட்ஜு, ‘போலீஸ்காரங்களை அடிச்சது உண்மையா?’னு கேட்டா. ‘ஆமா’ன்னு சொல்லிடுவான்போல. இல்லேன்னு சொல்லச் சொல்லு. செக்ஷன் 307, அப்புறம் மாமூல், வழிப்பறின்னு கேஸு ஸ்டிராங்காப் போட்டு இருக்கிறதால எப்படியும் பதினஞ்சு நாள் ரிமாண்ட் போடுவாரு ஜட்ஜு. அதுக்கு அப்புறம் உங்க வக்கீலை வெச்சு பெட்டிஷனைப் போட்டுக்கங்க” என்றார்கள்.

அதைக் கேட்டு ராசுவுக்கு மயக்கமே வந்துவிட்டது. போலீஸ்காரர்கள் கிரிமினல் கோர்ட்டுக்கு வெளியே நின்று இருந்த அமீனாவிடம், ”இது பெரிய கேஸு… உடனே ஆஜர்படுத்தணும்” என்று விஷயத்தைச் சொன்னார்கள். உள்ளே போன அமீனா வெளியே வந்து, ”ஒரு கேஸ் விவாதம் நடந்துக்கிருக்கு. ஒரு மணி நேரம் ஆகும்” என்றார். இடைப்பட்ட நேரத்தில் போலீஸ்காரர்களுக்கு டீயும் வடையும் வாங்கிக் கொடுத்தார் ராசு. ஸ்டாலின் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டான். அவன் அமைதியாக இருப்பதைப் பார்த்தால், தூக்குக்குக்கூடத் தயாராக இருப்பதைப்போல் இருந்தான்.

ராசு அவனிடம், ”ஏலே, ஜட்ஜுகிட்ட நான் அடிக்கவே இல்லன்னு சொல்லுடா” என்று கெஞ்சிக்கொண்டு இருந்தார். அப்பா ஓயாமல் அதையே சொல்ல, ஒரு கட்டத்தில், ”சரிப்பா… நான் அப்படியே சொல்றேன். நீ பேசாம இரு” என்றான் சன்னமான குரலில்.

”கூடலூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன்” என்று அமீனா அழைக்க, இரண்டு போலீஸ்காரர்களும் அவனை உள்ளே அழைத்துப்போனார்கள். நீதிபதிக்கு சல்யூட் அடித்து, கேஸ் கட்டை அவரிடம் கொடுத்தார் ஒரு போலீஸ்காரர். ஸ்டாலினைப் பார்த்து நீதிபதி, ”எஃப்.ஐ.ஆரில் போடப்பட்டு இருக்கும் வழக்குப்படி நீ குற்றங்களைச் செய்தது உண்மைதானா?” என்று கேட்க, அவன் ஒரு கணம் யோசித்தபடி நின்றான். அப்பாவின் கண்ணீர் மிதக்கும் முகம் நினைவில் வர,”இல்லை” என்று தலையாட்டிச் சொன்னான்.

நீதிபதி வேறு எதுவும் கேட் காமல், 15 நாட்கள் ரிமாண்ட் கொடுத்தார். போலீஸ்காரர்கள் நீதிபதிக்கு சல்யூட் அடித்து விட்டு, அவனை வெளியே அழைத்து வந்தார்கள்.

அப்பா ஏக்கத்தோடு அவர்களைப் பார்க்க, ”சொன்ன மாதிரியே பதினஞ்சு நாள் ரிமாண்ட். கிளை ஜெயிலுக்குப் போகணும். அதுக்கு முன்னாடி ஹோட்டல்ல சாப்பிட்டுப் போய்ரலாம்” என்றார்கள். அப்போது ஸ்டாலின் கையில் போட்டு இருந்த விலங்கை அவிழ்த்துவிட்டனர். அதுவே கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது ராசுவுக்கு. விலங்கு இருந்ததையோ, இல்லா ததையோ ஸ்டாலின் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.

ராசு தனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, போலீஸ்காரர்களுக்கும் மகனுக்கும் சாப்பாடு வாங்கிக் கொடுத்தார். ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக, போலீஸ்காரர்கள் ராசுவிடம், ”பாக்க நல்ல பய மாதிரியே இருக்கான். நல்லாப் படிச்சிருக்கான். எதுக்குப்பா உன் மகன் இந்த காரியத்தைச் செஞ்சான்? கூட்டுக்காரன், அதுவும் போலீஸ்காரன்னு தெரிஞ்சும் அவனை ஏம்ப்பா அடிக்கணும்?” என்றார்கள்.

”பிராந்திக் கடையில ஏதோ பேசி குடி வெறியில சண்ட போட்டாங்களோ என்னவோ தெரியல சார். அவங்களும் குடிச்சு இருந்தி ருக்காங்க சார்… அப்ப இந்த கேஸை இல்லாம ஆக்கிடலாம்ல சார். இல்லன்னா, இவன் பொழப்பே போய்டும். இன்னும் ரெண்டு மாசத் துல கவர்மென்ட் வேல கெடச்சிடும் சார்” என்றார் அப்பாவியாக.

ரொம்ப அதிகமாக அவனுக்காகப் பரிதாபப்பட்டுவிட்டோமோ என்று நினைத்த ஒரு போலீஸ்காரர், ”அதெல்லாம் நீ ஒரு வக்கீல வெச்சுப் பாத்துக்கப்பா” என்றார்.

ஸ்டாலின் அமைதியாகச் சாப்பிட்டுக்கொண்டு இருக்க, இப்பவும் ராசு, தன் மகன் நேற்று அப்படி நடந்துகொண்டான் என்பதை நம்ப முடியாமல் இருந்தார். அவர் கண்களில் வழிந்த கண்ணீர்த் துளி சாப்பாட்டு டேபிளில் விழுந்தது. குனிந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த ஸ்டாலின், அந்தக் கண்ணீர்த் துளிகளைப் பார்த்ததும் அப்பாவைக் கொலை செய்ததைப்போன்ற குற்ற உணர்வில் குமைந்துபோனான். அதுவரை அவனிடம் இருந்த அமைதி குலைந்தது.

அவனை கிளை ஜெயிலில் ஜெயிலரிடம் ஒப்படைத்துவிட்டு, போலீஸ்காரர்களும் ராசுவும் அங்கே இருந்து கிளம்பினார்கள். சிவகுமார் மீது அவனுக்கு இருந்த வன்மம் நீங்கி, இப்போது அப்பாவுக்குத் துரோகம் இழைத்துவிட்ட குற்ற உணர்ச்சி ஒன்று புதிதாக உருவாகியது. இது வன்மத்தைவிடப் பெரும் வலியாக இருந்தது. எப்போதும் தன்னை வீழ்த்தும் ஒரு உணர்ச்சி வாழ்நாள் முழுதும் தன்னைச் சூழ்வது விதிபோல என்று நினைத்தபடி, கிளை ஜெயிலின் கம்பிகளை நோக்கி நடந்தான் ஸ்டாலின்!

– ஏப்ரல் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *