சிவாவின் காதல்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 29, 2023
பார்வையிட்டோர்: 6,485 
 

சிவராம கிருஷ்ணனைப் பார்த்ததும் எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சிதான். என் பள்ளி நாட்களில் என்னோடு படித்தவர்களை எங்காவது பார்க்க நேர்ந்தால் அதுவும் அவர்கள் என் ஞாபகத் திரையில் இருந்தால் தனி உற்சாகம்தான். இவனைப் பார்த்தது ஒரு கல்யாண மண்டபத்தில்.

“மோர்க்குழம்பு யார் கேட்டது” என்று எவர்சில்வர் வாளியுடன் வந்து நின்றான்.

“எனக்குத்தான்” என்று கை உயர்த்தி.. அட.. இது நம்ம சிவா!

சட்டென்று வாளியுடன் ஓடி விட்டான்.

“என்ன.. ஊத்தாம போறாரு” என்றார் பக்கத்து இருக்கைக்காரர்.

“ம்”

கை கழுவிக் கொண்டு வந்து அவனைத் தேடினேன். சமையலறை உள்ளே.. ஸ்டோர் ரூமில்.. எங்கு பார்த்தாலும் ஆள் இல்லை. எனக்கு என்னவோ அவன் எங்கேயோ நின்று கொண்டு என்னைக் கவனிப்பது போலவே ஒரு பிரமை.

மணமக்களை வாழ்த்தி, அன்பளிப்பு கொடுத்து, குரூப் போட்டோ எடுத்துக் கொண்டு தேங்காய் பையுடன் வெளியே வந்து விட்டேன்.

கொஞ்ச நேரம் தெரு முனையில் நின்று விட்டு பிறகு மண்டபத்திற்குள் போனேன். எதிர்பார்த்த மாதிரியே அவன் வாளியுடன் ஒவ்வொரு இலையிலும் எதையோ பரிமாறிக் கொண்டிருந்தான். ஒதுங்கி நின்று அவனைக் கவனித்தேன். கொஞ்சங்கூட மாறவே இல்லை. அதே ஒல்லி. அதே கோண வாய் சிரிப்பு. கண்கள் மின்னியது மட்டும் மிஸ்ஸிங்க்.

அவன் சற்று ஓய்வானபோது அருகில் போனேன்.

“சிவா”

அவன் கையைப் பிடித்துக் கொண்டு விட்டேன் ஓடி விடாமல் இருக்க.

“ம்”

“ஏண்டா என்னைப் பார்த்து ஓடற.. நான் சீனிடா.. உன்னோட படிச்சேனே”

“ம்”

“உன்னை மறுபடி பார்ப்பேன்னு நினைக்கலடா.. இன்னிக்கு எதிர்பாராம உன்னைப் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்டா”

“ம்”

என் உற்சாகம் அவனிடம் பிரதிபலிக்கவில்லை. அது புரிந்ததும் எனக்குள் உறுத்தல்.

“என்னடா சிவா ஏன் டல்லா இருக்க”

“வரட்டுமா.. வேலை இருக்கு”

“உங்க வீட்டுக்கு வரணும்டா. அம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. உனக்கு ஞாபகம் இருக்கா.. ஒரு நாள் நான் கோவிச்சுகிட்டு வீட்டுல சாப்பிடாம வந்திட்டேன். அப்ப உங்க அம்மா எனக்கும் சாப்பாடு போட்டாங்களே..”

பழைய நினைவுகளில் திளைத்து என் கண்களில் ஒரு நினைவுப்படலம். அந்த நிமிஷம் அவன் எங்கோ நகர்ந்து போய் விட்டான் மறுபடி.

“என்ன ஸார்.. யாரை தேடறீங்க”

“சிவா.. சிவராமகிருஷ்ணன்”

“அவனா.. கிறுக்குப் பய.. இங்கேதான் இருப்பான்”

“அவர் வீடு எங்கேன்னு தெரியுமா”

“எதுக்கு ஸார்.. ஏதாச்சும் கடன் வாங்கிட்டு திருப்பித் தரலியா”

“சேச்சே.. நான் அவர் கூட படிச்சேன்”

“ஓ.. அவன் படிச்சிருக்கானா..”என்றார் கேலியாக.

“அவர் வீடு எங்கே”

விலாசம் சொன்னார். வெளியே வந்தேன். பக்கத்தில் தான். நடக்கிற தூரம். அந்த நாளில் ஈபி ஆபிஸ் இருந்த சந்து. கரண்ட் பில் கட்ட அம்மா என்னை அனுப்புவார்கள்.

அப்போதுதான் சிவா வீடு அங்கே இருந்தது எனக்குத் தெரிய வந்தது. வாசலில் நின்று பம்பரம் விட்டுக் கொண்டிருந்தான். ‘அப்பீட்’ என்று நிமிர்ந்தவன் என்னைப் பார்த்ததும் அதட்டினான்.

“இங்கே எதுக்குடா வந்தே”

“ஈபி பில் கட்ட வந்தேன்டா.. உங்க வீடாடா”

“போடா..”

அவன் அம்மா அந்த நிமிடம் வெளியே வந்து விட்டார்.

“யாருப்பா அது”

“சிவா கூட படிக்கறேம்மா”

“அப்படியா.. ஏண்டா வெளியே நிக்க வச்சு பேசற.. தம்பி.. உள்ளே வாப்பா”

சிவா என்னைப் பார்த்த பார்வையில் அதட்டல் தெரிந்தது.

“இல்லம்மா . அப்புறம் வரேன்.. ஈபி பில் கட்டணும்”

“நல்லா படிக்கிறானாப்பா இவன்”

“மேத்ஸ்ல மார்க் குறைஞ்சிட்டான்மா”

“கணக்குல நூறுன்னான்.. “

சிவா உடனே என் மேல் பாய்ந்தான். என்னைத் தள்ளி விட்டு மணலில் புரட்டினான்.

“மாட்டி விடறியா..இருடா.. உன்னை..”

அவன் அம்மா வேகமாய் வந்து விலக்கி விட்டார்.

“ராஸ்கல்.. பொய் வேற. போடா.. நீ போப்பா தம்பி”

சட்டை எல்லாம் மண். தட்டி விட்டுக் கொண்டு கீழே விழுந்த கார்டை எடுத்துக் கொண்டு நடந்தேன். திரும்பி அதே வழியாகத் தான் வந்தேன். சிவாவைக் காணோம். அவன் அம்மா என்னைப் பார்த்து விட்டார்.

“இந்தாப்பா..”

கை முறுக்கு கொடுத்தார்.

“அவனைப் பார்த்துக்கப்பா.. படிப்புல அக்கறையே இல்லப்பா.. இவனை நம்பித்தான் இருக்கேன்”

தலையாட்டினேன். சிவா எல்லாப் பாடத்திலும் மார்க் குறைவுதான். அதைச் சொன்னால் இன்னும் மன வருத்தப்படுவார்.

மறுநாள் சிவாவிடம் சொன்னேன்.

“நல்லா படிடா.. நான் வேணா உனக்கு ஹெல்ப் பண்ணவா..”

“உன் வேலையைப் பார்த்துட்டு போ”

“அம்மா உன்னைப் பத்தி கவலைப்படறாங்கடா”

“எங்கம்மாவா.. உங்கம்மாவா”

“உங்கம்மாதான்டா”

“அதைப் பத்தி நீ கவலைப்படாதே”

படிப்பு விஷயம் தான் இப்படி என்றால் அடுத்ததாய் இன்னொரு சிக்கலும் எங்கள் ஆண்கள் பள்ளியை ஒட்டித்தான் பெண்கள் மேனிலைப்பள்ளியும். இரு பள்ளிகளுக்கிடையில் பொதுவான காம்பவுண்டு சுவர். இங்கிருந்து அங்கே போக ஒரு வாசல்.

கலாவதி என்கிற பெண்ணுக்கு அப்போது ரசிகர்கள் அதிகம். ரெட்டை ஜடையும் மை தீட்டிய கண்களுமாய் அவள் வரும்போதே பசங்களுக்கு கிறுகிறுப்பு. அவள் மேல் சிவாவிற்கு லவ் இருப்பது எனக்கு மட்டும் தெரியவில்லை. காரணம் அதே காதல் என் கண்ணையும் மறைத்திருந்தது. ஏகப்பட்ட பிழைகளுடன் ஒரு லவ் லெட்டர் எழுதி அவள் வரும்போது எதிரில் போட்டு விட்டு ஓடினேன். அது இருட்டி விட்ட நேரம். அவர்கள் வீட்டுப் பக்கம் போனதும் திரும்பி ஓடி வந்ததும் யாருக்கும் தெரியாது என்றுதான் நினைத்தேன். ஓடி வரும்போது யார் மீதோ இடித்துக் கொண்டு வந்தேன். பிறகுதான் புரிந்தது. அது சிவா என்று.அவனும் இதே போல அவளைப் பார்க்க வந்திருக்கிறான். என்னைப் பார்த்தானா இல்லையா என்று புரியவில்லை. கையில் கடிதத்துடன் கலா நிற்கும்போது எதிரில் இவன் போயிருக்கிறான். லெட்டரைப் போட்டுவிட்டு அவன் தான் திரும்பி வந்து பார்த்திருக்கிறான் என்று நினைத்து விட்டாள்.இதெல்லாம் பழைய கதை. எனக்குத் துணிச்சல் போதாமல் அப்புறம் சமர்த்தாய்ப் படிப்பு முடித்து, அப்பா, அம்மா பார்த்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு, பிறந்த பெண்ணுக்கு கலாவதி என்று பெயர் வைத்தேன்.

இப்போது சிவாவைப் பார்த்ததும் பழைய நினைவுகள் பீரிட்டன. அவன் விலாசமும் கிடைத்து விட்டது. அவன் அம்மாவைப் பார்க்க வேண்டும். கதவைத் தட்டினேன்.

“அம்மா”

“யாரு.”

“சீனிம்மா.. சிவா கூட படிச்சவன்..”

கதவைத் திறந்து.. கலாவதி நின்றாள்.

“நீ..”

“ம்.. “

கலாவதியின் மீதான சிவாவின் காதல்தான் உண்மையான காதல். நான் காதலை உதறிவிட்டு போய்விட்டேன். சிவா படிப்பு வராவிட்டாலும் காதலில் உறுதியாய் இருந்திருக்கிறான். கலாவதி சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“அவங்க அம்மா இப்போ இல்லை.. தவறிட்டாங்க”

என்ன சொல்வதென்று புரியாமல் விடை பெற்றேன்.

என் வேலை.. கை நிறைய சம்பளம்.. மதிப்பு.. எல்லாம் அந்த நிமிடம் வேடிக்கையாய் இருந்தது.. சிவாவின் காதல் எதுவுமில்லாமலேயே ஜெயித்துவிட்டதைப் பார்த்தபோது.

– ஜனவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *