ராஜயோக ஜாதகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 4,967 
 

ஒரு மனிதனின் எண்ண ஓட்டங்கள் என்பது கற்பனைக்கும் எட்டாது வெகுதூரம் செல்லும் வலிமையைக் கொண்டது. கைக்குள் கட்டுக் கடங்காமல் காட்டு வெள்ளம் போல் பள்ளத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கும். ஆசையின் காரணமாகவோ அல்லது நம்பிக்கையின் காரணமாகவோ இல்லை மடத்தனமான எண்ணங்களை இவ்வுலகில் பரவ விடவேண்டும் என்ற துடிப்பினாலோ எங்கோ ஒரு மூலையில் இன்னும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அன்று வடிவுக்குக் குழந்தை பிறந்திருந்தது. இரத்தினத்திற்குக் கைக்கால் ஓடவில்லை. வானத்தில் பறந்தான். வருவோர் போவோர்க்கெல்லாம் தனக்கு ஆண் குழந்தை பிறந்துவிட்டது என்று சொல்லிச்சொல்லி மிட்டாய்களையும் இனிப்பு வகைகளையும் வாரி வழங்கினான். அந்த மருத்துவமனையே அங்காளப்பட்டது. பிறந்த குழந்தையைத் தன்னுடைய கைகளில் ஏந்தி பிஞ்சு முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான். குழந்தை கண்மூடி தூங்கிக் கொண்டிருந்தது.

“எத்தனை நேரம் இதுபோல பார்ப்பாய் தம்பி” என்றாள் அக்கா இலட்சுமி

”என்னுடைய குழந்தையை எவ்வளவு நேரம் ஆனாலும் இப்படியே பார்க்கத் தூண்டுகிறது அக்கா” என்றான் இரத்தினம்.

“பிரசவ வலி என்பது அம்மாவுக்கு மட்டுமில்ல.. அப்பாவுக்கும்தான்.. இரத்தினத்த பாரு.. குழந்தைய எப்படி பார்த்துகிட்டே இருக்கிறான்னு” என்றாள் குழந்தையைப் பார்க்க வந்த உறவுக்கார பெண்களில் ஒருத்தி.

தூங்கிக் கொண்டிருந்த குழந்தை சிரித்தது. இரத்தினம் பூரித்துப் போனான். “குழந்தை என்னைப் பார்த்து சிரிக்கிறான்… சிரிக்கிறான்.. என்றான்.

அக்கா இலட்சுமி குழந்தையைப் பார்த்துவிட்டு, போடா… குழந்தை நல்லா தூங்குறான்.. நீ என்னாடான்னா சிரிக்குறான்னு சொல்லுற… பொறந்த குழந்தை எங்கையாவது சிரிக்குமாடா… அதுக்கு இன்னும் சிரிக்கக் கூட தெரியாது” என்று மருத்துவர் ரேஞ்சில் பேசினாள்.

குழந்தையை அம்மாவிடம் பாலுக்காகக் கொடுக்கப்பட்டது. இரத்தினம் அப்படியே மருத்துவமனையை விட்டு வெளியே வந்தான். ஆங்காங்கே கூட்டங்கூட்டமாய் மக்கள்நின்றிருந்தார்கள். இரத்தினத்தின் மனதில் குழந்தை சிரித்தது இன்னும் மறையவில்லை. அதையே மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டான். அந்நேரத்தில் தொலைபேசி ஒலித்தது. இரத்தினம் வேலை செய்யும் எக்ஸ்போர்ட் கம்பெனியின் முதலாளிதான் கூப்பிட்டார். தொலைபேசியைக் காதில் வைத்து,

“வணக்கம் சார்.. சொல்லுங்க.. நானே உங்களுக்கு போன் பண்ணனுமுன்னு இருந்தேன்” என்றான் இரத்தினம்

“அப்படியா… என்னன்னு சொல்லுப்பா” மறுமுனையில் முதலாளி

“எனக்கு ஆண் குழந்தை பொறந்திருக்கு சார்”

“வாழ்த்துக்கள் தம்பி.. சந்தோசம்! அப்புறம் உன்ன நாளையில இருந்து மேனேஜரா புரோமோசன் பன்னியிருக்கேன். ஏற்கனவே இருந்தவன் அப்படி இப்படின்னு கொஞ்ச நஞ்சமா தின்னான். அதுதான் வேலைய விட்டு தூக்கிட்டேன். நீயும் அவன மாறி இல்லாம சரியா நடத்துப்பன்னு நினைக்கிறேன். எல்லாம் உன்னோட பையன் பொறந்த நேரம்மய்யா.. ” என்றார்.

இரட்டிப்பு சந்தோசம். குழந்தை பொறந்த நேரம் புரோமோசன். அதிக சம்பளம். இரத்தினம் பையனைத் தூக்கி கொண்டாடினான். வீட்டிற்குக் குழந்தையைப் பார்க்க வந்தவர்கள் எல்லோரும் ராசிக்கார குழந்தைய்யா.. பொறந்தவுடனே அப்பாவ இராஜா மாதிரி தூக்கி விட்டுட்டானே.. இவனோட ராசி உங்கள எங்கெல்லாம் கொண்டு போகும் பாரு.. உதட்டைப் பிதுக்கி மூஞ்சை விரித்து கண்ணை உருட்டி மூக்குப் புடைத்து பக்கத்திலும் தூரத்திலும் சொல்லிவிட்டுப் போனார்கள். பற்றாக்குறைக்குச் சோதிடர் வேறு இன்னும் பற்ற வைத்தார்.

”குழந்தை பிறந்த நேரம் அமோகம்! இவனுடைய ராசி இப்போ உச்சத்துல இருக்கு. இவன் எது தொட்டாலும் துலங்கும். இவன பாத்துட்டுப் போனாவே அவுங்களுக்குக் கூரைய பிச்சிகிட்டு பணம் கொட்டோ கொட்டோன்னு கொட்டும். இவனுடைய கை ராசியான கை. இவன் கையில கொடுத்து வாங்குனா நாம இராஜாவாகலாம். தொட்டது துளிரும். நல்ல ஜாதகம். இந்தப் பையன் வளர வளர செல்வம் பெருகும்” என்றார் சோதிடர்.

இரத்தினம் குழந்தைக்கு இராஜாராம்முன்னு பேரு வைச்சாரு. இரத்தினம் ஒவ்வொரு நாளும் வெளியே போவதாக இருந்தாலும் வேணடுமென்றே ராஜாராமின் முகத்தின் முழித்துவிட்டுத்தான் செல்வார். ஆனாலும் எப்படியோ அவருக்கு அன்னிக்கு வெற்றிதான். சாயுங்காலம் வீட்டுக்கு வந்தவுடனே வாசலில் நின்று பெருமை அடித்துக் கொள்வார்.

”இன்னிக்கு ஞா பையன் முகத்துல முழிச்சிட்டு போன.. எனக்கு எல்லாமே வெற்றிதான்” என்று அங்காய்த்துக் கொண்டார் இரத்தினம். அப்படித்தான் அன்றொரு நாள் பக்கத்து வீட்டு சரசு தன்னோட பையன கூட்டிட்டு, வடிவு.. வடிவு.. ன்னு கூப்பிட்டுக்கிட்டே உள்ளே வந்தா..

சமையல்கட்டில் இருந்த வடிவு, ”என்னக்கா” என்றவாறே வெளியே வந்தாள்.

“ஒன்னுமில்ல வடிவு, என் பையன் இன்னிக்கு இன்டர்வியு போறான். அதான் போகும்போது இராஜாராமை ஒருமுறை பாத்திட்டுப் போலாமுன்னு… என்று இழுத்துவிட்டு எங்கடி உங்குழந்தை” என்றாள் சரசு.

குழந்தையைத் துக்கிக்கொண்டு வந்து சரசுவிடமும் அவளின் பையனிடமும் காண்பித்தாள் வடிவு. ஏதோ புடவையை நகையை காண்பிக்கிற மாதிரி.

”டே குழந்தையின் முகத்தை நல்லா பாத்துக்கோடா… ” என்று தன்னுடைய பையனிடம் சொன்னாள் சரசு.

அன்று மாலையே சரசு ஸ்வீட் பாக்ஸ்வுடன் வடிவின் வீட்டிற்கு வந்துவிட்டாள். சரசுவின் பையனிற்கு வேலை கிடைத்துவிட்டதாம். இரத்தனத்திற்கும் வடிவிற்கும் உச்சந்தலையில் ஐஸ் கட்டியை வைத்தார் போன்று இருந்தது. இது இன்றோடு முடியவில்லை. ஒவ்வாரு நாளும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இரத்தினத்தின் வீட்டில் யாராவது அவ்வவ்போது இராஜாராமைப் பார்க்க வந்து கொண்டே இருந்தார்கள். பையனுக்கு ஆறு வயது ஆனவுடன் பள்ளியில் சேர்த்து விட்டார்கள். இரத்தினம்தான் காலையில் அலுவலகம் செல்லும்போது தன்னுடைய காரிலே கொண்டுபோய் விடுவார். மாலையில் ராஜாராமிற்கென்றே கார் அனுப்பி கூட்டி வரப்பட்டது. இந்த ஆறு வருடங்களில் இரத்தினத்தின் முன்னேற்றம் மிகவும் பெருகியிருந்தது. மனைவிக்கென்றே ஹார்டுவேர் கடையையும் ஒன்றை வைத்துக் கொடுத்திருந்தார். அக்காவையும் மாமாவையும் கூட கூட்டுச் சேர்த்திருந்தார். இலாபமும் நன்றாகப் பெருகியிருந்தது. இதற்கெல்லாம் காரணம் இராஜாராமின் ராஜயோகம்தான் காரணம் என்று எண்ணினார்கள்.

பள்ளியில் மற்ற மாணவர்கள்கூட ராஜாராமை “இப்படித்தான் அவன்“ என்று எண்ணிக்கொண்டார்கள். எல்லோரும் அவனிடம் பேசுவதற்கு முன்வருவார்கள். அந்த வகுப்பே அவனைச் சுற்றித்தான் நடக்கும். அப்பொழுதெல்லாம் ராஜாராமிற்கு தன்னைப் பற்றிய நினைப்பும் மற்றவர்கள் பெருமையாகச் சொல்லுகின்ற வார்த்தையும் ரசிக்க வைத்தன. தானாகவே ஒவ்வொன்றையும் ரசிக்க ஆரமித்தான். வீட்டிலும் வெளியிலும் தனக்கு கிடைக்கின்ற மரியாதையை நினைத்து தனக்குள்ளாகவே ஒரு பிம்பத்தையும் உருவாக்கிக் கொண்டான். தன்னைப் பார்த்துவிட்டுப் போனாலோ அல்லது பேசிவிட்டுப் போனாலோ அவர்களுக்கு நல்லது நடக்கின்றது. அப்படியென்றால் கடவுளால் அனுப்பப்பட்டவன் நான் என்றே நினைத்தான். இப்படியெல்லாம் ராஜாராமை நினைக்கத் தூண்டியது அவனுடைய பெற்றோர்களும் கூட இருந்தவர்களும்தான்.

அப்போது அவன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். வகுப்பில் ஆசிரியர் ஒருவர் கணக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அந்தப் பள்ளியைச் சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர் வகுப்பறைக்குள் திடிரென நுழைந்தார்.

”மேம் சொல்லுங்க.. ” என்றார் வகுப்பாசிரியர். ஆசிரியர் கேட்ட கேள்விக்கு எந்தவொரு பதிலும் சொல்லாமல் வகுப்பில் உள்ள மாணவர்களையே பார்த்துக்கொண்டிருந்தார் அவர்.

“ராஜாராம்… வந்திருக்கியா” என்றார் பெண் ஆசிரியை.

”ம்… வந்துருக்கேன் மிஸ்” என்று எழுந்து நின்று கையைத் தூக்கி நெற்றிப் பொட்டில் வைத்துச் சொன்னான்.

அவனை உற்றுப்பார்த்து விட்டு, ”சரிப்பா நான் வரேன்…. ” என்று வகுப்பை விட்டு வெளியேறினார். வகுப்பாசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை. குழம்பிப்போனார். அடுத்த நாள்தான் தெரிந்தது. அந்த பெண் ஆசிரியையின் மகளுக்கு தலைப்பிரசவம். மகளுக்கு எந்தவொரு பிரச்சனையும் இன்றி தாயும் சேயும் நல்லபடியாகப் பிறக்க வேண்டும் என்று ராஜாராமின் முகத்தைப் பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இன்று அம்மாவும் குழந்தையும் நலமாக உள்ளார்கள். ராஜாராமின் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மிட்டாய் கொடுக்கப்பட்டது.

கிரிக்கெட்டில்கூட எப்பொதும் ராஜாராம்தான் டாஸ் ஜெயிப்பான். ராஜாராமை ஒருப்பக்கமாய் நிறுத்தி மற்றவர்கள் அடித்து ஆடுவார்கள். ராஜாராம் எதிரில் இருக்கும்போது நாம அவுட் ஆக மாட்டோம் என்ற நினைப்புதான். ராஜாராம் ஓரளவுதான் கிரிக்கெட் ஆடுவான். அப்போதும் அவன் அவுட் ஆனாலும்கூட பை-ரன்னராக வைத்துக்கொண்டு ஓடிக்கொண்டு இருப்பார்கள். எப்படியோ ராஜாராம் விளையாட்டில் இருந்து கொண்டே இருப்பான். பள்ளியில் எல்லா விளையாட்டுகளிலும் ராஜாராமை முன்னிறுத்தியே ஆடப்படும். அவனுக்கு கேம் தெரிந்தால் என்ன? தெரியாமல் இருந்தால் என்ன? ஆனாலும் அனைத்து விளையாட்டிலும் அவனுடைய பெயர் போடப்பட்டிருந்தது. அவனை உயர்த்தி உயர்த்திச் சொல்லியே படிப்பிலும் சரி மற்ற இடங்களிலும் சரி ராஜாராம் பின்தங்கியே இருந்தான். அவனுடன் இருந்தவர்களெல்லாம் முன்னேறி சென்று கொண்டேயிருந்தார்கள்.

வாலிப பருவத்தில் கல்லூரி காலங்களில் இன்னும் அதிகமாகவும் உயர்வாகவும் தன்னை நினைத்திருந்தான். தான் கிருஷ்ணனின் மறுபிறப்பு என்றே எண்ணினான். தன்னால்தான் இவ்வுலகம் சுற்றுகிறது. ஐம்பூதங்களும் நிலைத்து நிற்கின்றன என்று நினைத்தான். இரத்தினமும் இலட்சுமியும் மகனை இன்னமும் முன்னிறுத்தியே அனைத்துக் காரியங்களும் செய்து கொண்டிருந்தார்கள்.

ராஜாராம் கல்லூரியில் ஒரு பெண்ணை விரும்பினான். அந்தப் பெண்ணின் மீது மிகுந்த அக்கறையும் அன்பும் மரியாதையும் கொண்டிருந்தான். மற்றவர்கள் எல்லோரும் அவனை பார்ப்பதற்காகக் காத்திருந்தார்கள். இவனோ, அந்த பெண்ணை பார்ப்பதற்காகக் காந்திருப்பான். ஆனாலும் தன்னுடைய காதலை அப்பெண்ணிடம் சொல்லாமல் தயக்கத்தின் காரணமாகவே ஒதுங்கியே இருந்தான்.

“டே.. முதல்ல ஜானகிகிட்ட உன்னோட காதல சொல்லுடா” என்றான் ராஜாராமின் நண்பன் ஒருவன்.

“இல்லடா எனக்கு பயமா இருக்கு. ஜானகியோட முகத்த பாத்தாவே எனக்கு எதுவும் சொல்ல வரமாட்டங்குதுடா..”

”போடா.. ஊரே உன் முகத்த பாத்திட்டுப் போனா.. வெற்றியின்னு சொல்லுறாங்க.. நீ என்னாடான்னா இப்படி பயப்படுறியே…”

“நீ சொல்றது சரிதாண்டா… ஆனா நான் காதல சொல்லவில்லை என்றாலும் ஜானகி என்னை விரும்புறாடா”

“எப்படிடா உனக்கு தெரியும்? அவளோட பிரண்ஸ் யாராவது வந்து சொன்னாங்களா?”

”இல்லை! என் மனசு சொல்லுது. நான் விளையாடுற விளையாட்டிலும் சரி மற்ற இடங்கள் நிகழ்வுகளிலும் சரி நான் என்ன நினைக்கிறேனோ அதுதான் நடந்திட்டு இருக்கு. அதுபோலதான் இதுவும்”

“புரியலயே… உன்ன பாத்திட்டுப் போனா அந்தக்காரியம் நடக்கும் சரி. நீ நெனச்சின்னா அது எப்படி நடக்கும்?”

“எல்லாம் என்னோட ராசிதான். ராஜாயோக ஜாதகம் எனக்கு. நான் எங்கு இருந்தாலும் எனக்குதான் வெற்றி. நான் நினைக்கிறதுதான் நடக்கும். நீ வேணுமின்னா பாரு ஜானகி நாளைக்குக் கல்லூரிக்கு வரும்போது நான் என்ன கலர்ல டிரஸ் போட்டுட்டு வரனோ அதையே அவளும் போட்டுட்டு வருவா பாரு”

“சரி நீ என்ன கலர் டிரஸ் போடப்போற…”

“பிரௌன் கலர் சட்டை வெள்ளை கலர் பேண்ட்”

அடுத்தநாள் காலையில் கல்லூரிக்கு அனைத்து மாணவ மாணவிகளும் ஒவ்வொருவராய் வந்து கொண்டிருந்தனர். ராஜாராமனும் அவனுடைய நண்பர்களும் ஜானகியின் வரவிற்காகக் காத்திருந்தனர். நண்பர்கள் அனைவருக்கும் ராஜாராம் நினைத்தது சொல்வது எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று பார்க்க ஆவலாக இருந்தனர். அந்நேரத்தில் ஜானகியும் வந்து கொண்டிருந்தாள். என்ன ஒரு ஆச்சர்யம்! பிரௌன் கலர் டாப்பும் வெள்ளை கலர் பேண்டும் அணிந்திருந்தாள். ராஜாராமனும் சொன்னவாறே அப்படித்தான் வந்திருந்தான். நண்பர்களுக்குள் ஏற்பட்ட அதிர்வும் மயக்கமும் சாயுங்காலம் வரை தீரவில்லை. அவனுக்குள் ஏதோ இருக்கின்றது என்றே முழுமையாக அவர்களும் நினைத்தனர்.

ராஜாராம் அன்று சூப்பர் மார்கெட் சென்றிருந்தான். பொருட்களை ஒவ்வொன்றாய் எடுத்துக்கொண்டிருக்கும் போது அங்கு ஜானகியைப் பார்த்தான். இவள் தான்இங்கு வந்திருப்பதால்தான் அவளும் வந்திருப்பதாய் நினைத்தான். ஜானகி தன்னுடைய அம்மாவுடன் வந்திருந்தாள். ஜானகி ஏதோ ஒரு இடத்தில் நின்று பெசிக்கொண்டிருக்கிறாள் என்றால் ராஜாராமனும் அங்கே நின்று வேறொருவருடன் பேசிக்கொண்டிருக்கிறான் என்றால் அவள், நான் இங்கே நிற்பதனால்தான் அவளும் அங்கே நின்றுகொண்டிருக்கிறாள் என்று நினைப்பான். அதன்பிறகு கோயில்களிலும் விழாக்களிலும் இன்னும் பிற இடங்களிலும் நிறைய சந்திப்புகள் நிகழ்ந்தன. எல்லாவற்றிக்கும் தான்அங்கு போனதால்தான் அவளும் வந்திருக்கிறாள் என்று நினைத்திருந்தான் ராஜாராம். தன்னுடைய வீட்டிலும் சரி கல்லூரியிலும் சரி தனக்காகவே எல்லாம் நடைபெறுவதாக எண்ணினான்.

அம்மா செய்யும் சமையலில் கூட, இன்றைக்கு வெண்டைக்காய் சாம்பர் இருந்தால் நான் ஜானகியைச் சந்திப்பேன் என்று நினைத்தான். அதேபோல வீட்டிலும் அம்மா வடிவு வெண்டைக்காய் சாம்பார் வைத்திருந்தாள். அன்று காலையில் கல்லுரியில் முதல்மாடி வகுப்புக்குப் படிக்கட்டில் ஏறும்போது ராஜாராமனும் ஜானகியும் பக்கத்தில் பக்கத்தில் ஒரே நேரத்தில் ஏறினார்கள். மாலையில் இறங்கும்போதும் கூட ஒரே நேரத்தில் பக்கபக்கத்தில் இறங்கினார்கள். ராஜாராமிற்கு சந்தோசம் தாங்கல. வாட்சில் மணி பார்க்கும்போது கூட்டு எண் ஒற்றைப்படையாக வந்தால் நினைத்த காரியம் வெற்றிதான் என்பான். ராஜாராமின் மனதில் எண்ணற்ற எல்லைகளில்லாத உணர்ச்சியுள்ள கோடுகள் அதிகம் இருந்தன. இதுதான் முழுமையான வாழ்க்கை என்றே எண்ணியிருந்தான்.

இறைவன் ஆடுகின்ற ஆட்டம் ஒரு பக்கம். இயற்கை ஆடுகின்ற ஆட்டம் மறுபக்கம். இதில் மனிதர்களின் பாடு எம்மாத்திரம். ஒருமாலை நேரத்தில் ஜானகி தன்னுடைய திருமணப்பத்திரிக்கையை ராஜாராமிடம் நீட்டினாள். முதன்முதலாய் சுக்குநூறாய் உடைந்து போனான் ராஜாராம். கண்களில் ஓரத்தில் நீர்த்துளிகள் பரவியிருந்தன. ஜானகியின் முகம் பளிச்சென்று இருந்தது. ராஜாராம் அவளின் முகத்தைப் பார்க்கவே வெட்கப்பட்டான். அவனால் அங்கே நிற்க முடியவில்லை. பின்னால் மெள்ள நகர்ந்து கொஞ்சகொஞ்சமாய் நடந்து சாலைகளில் ஓட ஆரமித்தான். கண்களில் தாரைத்தாரையாய் தண்ணீர் கொட்டியது. வானம் இருண்டு மேகம் சுருங்கி மழை “சோ“வென்று கொட்டியது. மழையின் நீரோடு கண்ணீரும் கலந்து பூமியை நனைத்தது.

அலுவலகத்தில் இருந்து வந்து கொண்டிருந்த ராஜாராமின் அப்பா இரத்தினம், பையன் தன்னுடைய காருக்கு எதிர் திசையில் இருந்து வந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறார்.

”டே.. ராஜாராம்! நில்லுப்பா எங்க போற?” காருக்குள் இருந்தவாறே இரத்தினம் கூப்பிடுகிறார்.

ஆனால் அப்பாவின் சத்தம் ராஜாராமிற்குத் துளிக்கூட கேட்கவில்லை. வேதனையில் ஓடிக்கொண்டேயிருக்கிறான். சிரித்த முகத்துடன் இருந்த குழந்தை, ஏதோ இன்று முகம் வாடி ஓடுகின்றானே! என்று மகனை அழைத்துக்கொண்டே காரை திருப்புகிறார். பின்னால் வந்து கொண்டிருந்த லாரியானது காரின் மீது படுவேகமாய் இடிக்கிறது. இடித்த வேகத்தில் கார் இரண்டு மூன்றுமுறை சுற்றி ஒருவழியாக மல்லாந்து தலைகீழாகக் கிடக்கிறது. சாலையில் இரத்த வெள்ளத்தில் மழைநீர் சொரிய இரண்டு கண்களிலும் மகனுடைய முகமே பிம்பமாகத் தெரிய உயிரை விடுகிறார் இரத்தினம்.

மகனைப் பார்க்க செல்கிறாள் வடிவு. நாலு பக்கச் சுவற்றில் மலுக்கிய தலையுடனும் கைக்கால்களில் கட்டிய இரும்பு சங்கிலியுடனும் சுருண்டு படுத்திருக்கிறான் ராஜாராம். “நான் கடவுள், என்னுடைய ஜாதகம் ராஜயோகம் ஜாதகம், எல்லோரும் என்னைப் பார்த்துவிட்டுச் செல்லுங்கள், எனக்காகவே அவள் இந்த ஆடையை அணிந்திருக்கிறாள், நான் ஒரு பைத்தியக்காரன் என்று இன்னும் என்னவெல்லாமோ சுவர் முழுக்க எழுதியிருந்தன. மகனைப் பார்த்த வடிவுக்கு நெஞ்சு அடைக்கின்ற மாதிரி இருந்தது. அப்படியே மயங்கி கீழே விழுந்தாள். வடிவைத் தூக்குவதற்காகப் பணியாளர்கள் ஓடி வந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *