கலைத்து எழுதிய சித்திரம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 13, 2014
பார்வையிட்டோர்: 25,169 
 

அன்றைக்குக் காலை வீட்டை விட்டு வெளியில் இறங்கியதும் உலகம் புத்தம் புதிதாக விடிந்திருப்பதுபோலத் தோன்றியது. சமூகத்தின் பெரும்பான்மை இளைஞர்களையும்

போலவே நானும் வளைகுடா நாடு ஒன்றில் இரண்டு வருடங்கள் வேலை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பி வந்திருந்தேன். அதிகமில்லை, சரியாக இரண்டே வருடங்கள்தான். ஆனால், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஊரின் முகம் மாறியிருந்தது. நெருங்கிய நண்பர்களில் சிலர் திசைக்கொரு பக்கம் பிரிந்திருந்தனர். ஒருவன் திருமணமாகி குடும்பஸ்தன் ஆகியிருந்தான். அவனிடம் பேச எனக்குவார்த்தைகளே கிடைக்கவில்லை. கிடக் கட்டும்!

புயலடித்தாலும் நிலநடுக்கம் கண்டாலும் ஊரை விட்டு நகரவே நகராத கூடலிங்கம் ஊரில் இருப்பானா என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, வழக்கமான புன்னகையுடன் அவன் எதிரில் வந்து நின்றான். அப்போது பார்த்த மாதிரி அச்சு மாறாமல் இருந்தான். கொஞ்சம் நேரக் குசலம். பிறகு, வழக்கமாக நாங்கள் செல்லும் கடையில் அமர்ந்து அன்றைய தினப் பத்திரிகையைப் புரட்டியபடி தேநீர். பிறகு, பள்ளிவாசல் வீதியில் நடைபோடலாம் என நகர்ந்தோம். அப்போது பார்த்து எங்கிருந்தோ காற்றில் கலந்து வந்து என் நாசியில் ஏறியது அந்த மணம். எனக்கு விருப்பமான, என் ஆன்மா வோடு கலந்த மணம். ஒரு கணம் உடலின் அத்தனை நரம்புகளிலும் அதன் தாக்கம். பிரமையோ என்ற சந்தேகமும் இருந்தது. இல்லை, நிஜம்தான். கிறக்கத்தை உண்டாக்குகிற அதே வாசனைதான். நடக்கத் தொடங்கியவன் அப்படியே சிலை போல நின்றுவிட்டேன்.

கலைத்து எழுதிய சித்திரம்

எனக்கு ஆறேழு அடிகள் முன் சென்றிருந்த கூடலிங்கம் என்னைக் காணாமல் திரும்பிப் பார்த்தான். நான் நடுவீதியில் நின்று ஆஸ்துமாவால் அவதிப்படுபவன்போல மூச்சை இழுத்து இழுத்து வெளியேற்றிக்கொண்டிருந்தேன். வீதியில் நடந்து சென்ற சிலர், என்னைச் சற்று வித்தியாசமாகப் பார்ப்பதும் புரிந்தது. என் எல்லா மூச்சிலும் அந்த வாசனை உள்ளேறியது.

கூடலிங்கத்துக்கு என்னைப் போன்றவர்களின் மன ஓட்டம் சிக்கெனப் பிடிபடும். கொஞ்சம் வினயமாக என்னைப் பார்த்தவன், ‘என்ன அத்தர் வாசனை அடிக்குதா?’ என்று கேட்டான். தஞ்சாவூர் பொம்மையைப் போலத் தலையாட்டினேன். இப்போது என் வலது கை அவன் தோள் மீது படர்ந்தது. என் கையின் அதிர்வுகளை, அவன் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். தந்தியடித்த விரல்களை ஆறுதலாகப் பற்றிக்கொண்டு, அந்த இடத்திலிருந்து என்னை நகர்த்த முயன்றான். நங்கூரம் பாய்ச்சிய கப்பலாக நான் ஸ்திரமாக நின்றேன். காற்றில் அந்த அத்தர் மணம் அலைஅலையாக வந்து என் நாசித் துவாரங்களில் நுழைந்து இசையாக மாறியது. பள்ளிவாசல் வீதியில், அவள் நடந்து வருகிற மாதிரியே இருந் தது. பதற்றத்துடன் கூடலிங்கத்திடம் கேட்டேன்.

”பரீதா வந்தாளா?”

அவன் சுரத்தே இல்லாமல் பதில் சொன்னான்.

”வர மாட்டா!”

பரீதா… பரீதா… மனது நிலைகொள்ளாமல் தவித்தது. எதுவும் பேசாமல் கூடலிங்கத்திடமிருந்து நீங்கினேன். அவன் வெகுநேரம் என்னைக் கூப்பிட்டுப் பார்த்து ஓய்ந்தான். நடுக்கத்துடன் கால்கள் வீடு நோக்கி அடி எடுத்துவைத்தன. வீடு போய்ச் சேருவேனா என்ற சந்தேகத்துடனே நடந்தேன். அத்தர் வாசனை என்னைப் பின் தொடர்ந்து வந்தது.

மூன்று வருடங்களுக்கு முன்னர் நினைவு நாடாக்கள் நீண்டது. ‘விசா’ கிடைத்திராத வெறும் பொழுதுகளாக ஒவ்வொரு நாளும் நகர்ந்து கொண்டிருந்த காலம். சும்மா இருக்கிறோம் என்ற குற்றஉணர்வு மனதை மெலிதாக அரித்தாலும் ‘பயணம்’ புறப்பட்டால், உழைத்துத் தேற்றுவது எல்லாமே வீட்டுக்குத்தானே என்கிற துணிச்சல், வாப்பா, உம்மா இருவரிடமும் சுதந்திரமாக உறவாடவைத்தது. வீட்டுக்கு ஒரே பிள்ளை நான். என் மேல் இருவருக்கும் கரிசனம் உண்டு. வாப்பா கள்ளிக்கோட்டையில் வியாபாரத்தை நிறுத்திவிட்டு ஊருக்குத் திரும்பிய பிறகு தொழு ¬கயைத் தவிர்த்து, வேறு எதிலும் பெரிய ஈடுபாடு காட்டாமல்இருந் தார். ஆனாலும் உம்மாவுக்குஅவர் மேல் எப்போதும் ஒருவித ரகசியக் கண்காணிப்பு இருந்தது. அவர் பள்ளிவாசலுக்குப் புறப்பட் டாலும் என்னைப் பின்தொடரச் சொல்லும் அம்மாவின் சுபாவம் எனக்குப் பிடிபடவே இல்லை. உண்மையைச் சொன்னால், வாப்பா ஒரு பத்தரை மாற்றுத் தங்கம்.

அன்றைக்கு வெள்ளிக்கிழமை. காலை நேரம். எங்கோ, எப்போதோ, சொல்லி வைத்தாற்போல அவளுடைய வருகை நிகழ்ந்தது. விசாலமான எங்கள் வீட்டு வாசலில், கிளை பரப்பியிருந்த வேப்ப மரத்தில், ஆணி அடித்து மாட்டியிருந்த கண்ணாடியில் குனிந்தும், நிமிர்ந்தும் பார்த்து, முகம் மழித்துக்கொண்டிருந்தேன். வாப்பா திண்ணையில் அமர்ந்து தன் கை, கால் நகங்களை நறுவிசாக நறுக்கிக்கொண்டிருந்தார். உம்மாவுக்கான அடுப்பங்கரையும் அதே வாசலில்தான் இருந்தது. உம்மாவின் ஊது குழல் ஓசையும் தாழ்வாரத்தில் நின்ற காகங்களின் கரைச்சலும் சேர்ந்திசையாகக் கேட்டது. வாசல் தரையெங்கும் வேப்பம் பூக்களும், இலைகளும், சருகுகளுமாக உதிர்ந்து கிடந்தன.

”அத்தர் வேணுமா மொதலாளி?”

நடையில் நின்று, அவள் குழைவான குரலில் கேட்டாள். பார்வை, திண்ணையில் நகம் நறுக்கிக்கொண்டிருந்த வாப்பாவின் மீதிருந்தது. உச்சரிப்பில் மலையாள வாசனை கமழ்ந்தது. அதை முந்திக்கொண்டு, அத்தர் வாசனை எங்கள் வாசல் முழுக்க வியாபித்தது. நான் கண்ணாடியிலிருந்த முகத்தை நடைக்குத் திருப்பினேன். எங்கள் ஊருக்கு முற்றிலும் அந்நியமான தோற்றத்தில் அவள் நின்றிருந்தாள். செறிவாக எழுதப்பட்ட சித்திரம் போலிருந்தாள். முதல் பார்வையிலேயே எனக்கு சித்தம் கலங்குவதைப் போல் இருந்தது.

இருபதே வயதுக்குள் அடக்கிவிடலாம். சந்தன நிறம். தலையின் முக்கால் பங்கை சிவப்பு நிறத் தாவணி மறைத்திருந்தது. பின்னே தவழ்ந்த கூந்தலில் வெளிச்செண்ணெயின் பளபளப்பு. அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் முக்கால் கைக்கு இறுக்கமான மேல் சட்டை. முழங்காலுக்குக் கீழே கணுக்கால் தெரிகிற மாதிரி அரக்குக் கலர் பாவாடை. பாதங்கள் பளிச்சென்று இருந்ததைச் சொல்லவும் வேண்டுமா? தோளில் தொங்கிக்கொண்டிருந்தது அந்த விநோதமான பை. பைக்குள் நிறைய பொருட்கள் இருந்தன. அந்தப் பையின் முகப்பு, எழுதி அழிக்க வசதியாக ஒரு சிறு கரும்பலகை போலிருந்தது. அந்தக் கரும்பலகையில் சமீபமாக ஒரு ஓவியத்தை வரைந்து கலைத்திருந்த சாயல் தென்பட்டது. எனக்கு இது விசித்திரமான மனநிலையைத் தந்தது. தோளில் சித்திரம் வரையப்பட்ட கரும் பலகையைத் தொங்கவிட்டுக்கொண்டு அலையும் அத்தர்காரியை இந்த உலகில் எங்கேயும் நான் கண்டதில்லை.

”உள்ளே வா.”

கலைத்து எழுதிய சித்திரம்2என்னை முந்திக்கொண்டு வாப்பாவின் குரல் கேட்டது. ‘மொதலாளி’ என்கிற கேரளத்துப் பரிச்சயமுள்ள அழைப்பு, வாப்பாவை ஈர்த்திருக்க வேண்டுமெனக் கணித்தேன். அவள் அரபு மொழியில் முகமன் கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.

”உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்” – வாப்பா பதில் முகமன் கூறினார்.

”அவ்வண்ணமே உங்களுக்கும் ஆவதாக!”

வாப்பா அமர்ந்திருந்த திண்ணையில் அவள் தன் சுமையை இறக்கிவைத்தாள். நறுக்கிய நகச் சில்லுகளைப் பொட்டுவிடாமல் கவனமாக எடுத்துக்கொண்டு போய், அந்திமந்தாரைச் செடிகள் இருந்த பாத்தியில் மண்ணில் புதைத்து வந்தார் வாப்பா. அப்போது ஏதோ ஒரு சுலோகத்தை அவரின் உதடுகள் உச்சரித்தன. உம்மா ஊது குழலை ‘ணங்’ என்ற ஓசையுடன் கீழே போட்டாள். அத்தர் வாசனையும், அடுப்புப் புகையுமாக வாசல் வேறொரு கோலம் பூண்டது. காகங்கள் ஓயாமல் கரைந்துகொண்டிருந்தன.

நெற்றியில் பூத்திருந்த வியர்வையை முந்தானையால் துடைத்தபடி அம்மா திண்ணைக்கு வந்திருந்தாள். அம்மாவின் பார்வை பரீதாவின் இளமையை ஆராய்ந்தது. நான் கடைக்கண்ணால் பரீதாவை விழுங்கியவாறு கிணற்றடிக்குப் போய், மழிப்பு சாதனங்களைச் சுத்தம் செய்து, உரிய இடத்தில் வைத்துவிட்டு திண்ணைக்கு வந்தேன். வேட்டி மட்டுமே உடுத்தியிருந்த என் வெற்றுடம்பைப் பார்த்து அம்மா முறைத்தாள். நான் வாசல் கொடியில் காய்ந்த ஈரிழைத் துண்டை எடுத்து என்னைப் போர்த்திக்கொண் டேன், வெகு பவ்யமாக.

அவள் தன் பெயரை ‘பரீதா’ என அறிமுகப்படுத்திக்கொண்டு வணிகத்தைத் தொடங்கினாள். தன் கைப்பையிலிருந்து விரல் அளவுள்ள கண் ணாடி சீஸாக்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்தாள். சீஸாக்களின் பொத்தல்கள் மெல்லிய மரத்துணுக்குகளால் இறுக அடைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொன்றிலும் கறுப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள் எனப் பல நிறங்களில் வாச னைத் திரவியங்கள் இருந்தன. நான் அவளுடைய முக வசீகரத்தை மட்டுமல்ல; அவளுடைய விசித்திரமான தோல் பையையும் அதன் முகப் பையும் கலைக்கப்பட்ட சித்திரத்தையும் வியந்து கவனித்துக்கொண்டிருந்தேன். இவள் இந்தியா வுக்கு வந்த புகழ்பெற்ற யாத்ரீகன் இபின் பதூதாவின் வழிவந்தவளாக இருப்பாளோ என்ற புராதன மயக்கம் எனக்கு அந்த நேரத்தில் உண்டானது. உம்மா எங்கள் மூவரையும் மாறி மாறிப் பார்ப்பதும், அடுப்பங்கரையை நெருங்கிக் கொண்டிருந்த காகங்களை விரட்டுவதுமாக இருந்தாள்.

அஸ்வத், ஜென்னத்துல் பிர்தவுஸ், குறைஷி, மதினா, ஹலால், எஹ்ஸான் என ஒவ்வொரு சீஸாவுக்கும் ஒரு விநோதமான பெயரைச் சொன்னாள் பரீதா. ஒரு சீஸாவின் மரத்துணுக்கை நீக்கி, சிறு பஞ்சுத் துகளால் திரவத்தை ஒற்றி எடுத்து, வாப்பாவின் நாசிக்கு அருகில் கொண்டு சென்றாள். வாப்பா அந்த வாசனையில் மெய்மறந்து கண்களைச் செருகி, ரசனையின் உச்சநிலைக்குப் போன பாவனை தந்தார். பிறகு தெளிந்து, ‘ஜென்னத்துல் பிர்தவுஸ்’ இரண்டு சீஸாக்களைப் பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டார்.

பரீதா வாசல் படியேறி உள்ளே நுழைந்தது முதல் உம்மாவுக்கு அவளைப் பிடிக்கவில்லை என்பது அவள் உடல்மொழியில் தெரிந்தது. வாப்பாவிடம் வியாபாரத்தை முடித்துக்கொண்டு ‘உம்மா’ என்று குழைந்து அவள் நெருங்கவும், ‘இந்த பெலாயி எல்லாம் எனக்கு எதுக்கு’ என்று அஞ்சி ஒதுங்கினாள். இப்போது என் முறை.

”கொச்சு மொதலாளி”

என்னைத்தான் அழைத்தாள். எனக்குக் கிறுகிறுவென்று ஆனது. செம்மீனில் பரீக்குட்டியைப் பார்த்து கருத்தம்மா அழைக்கிற மாதிரியே இருந்தது.

”அதுதேம் ரெண்டு வாங்கீருக்குல்ல… வாப்பாவும் புள்ளையும் தட விக்குவாங்க. அது என்ன பாலா, தேனா, லிட்டர் கணக்குல வாங்குறதுக்கு…”

உம்மாவின் ஊதுகுழல் வேகமாகத் தரையில் விழுந்தது. அது உம்மாவின் சமிக்ஞை. பரீதாவின் மஞ்சள் முகத்தில் ஏமாற்றத்தின் ரேகைகள் சிவந்து படிந்தன. உம்மா ஒரு பசுந்தளிரைக் கிள்ளி எறிந்ததைப் போல உணர்ந்தேன். ‘உம்மாவுக்குக் கொஞ்சம்கூட விவஸ்தை இல்லை’ என்று மனதுக்குள் திட்டினேன். என் பரிதவிப்பைப் புரிந்துகொண்டு, நன்றி சொல்வதைப் போல என்னையே பார்த்தாள் பரீதா. அதில் காதலின் சகல கூறுகளும் தென்படுவதாக உணர்ந்து கொண்டு, கிளர்ச்சி அடைந்தேன். ‘கொச்சு மொதலாளி’ எனும் குரல் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. இதோ நறுமணங்களின் சுமையைத் தோளில் ஏற்றிக்கொண்டு அவள் புறப்பட்டுவிட்டாள்.

”வராம் மொதலாளி. வருன்ன வெள்ளி திரிச்சு வராம்!”

வாப்பா மெல்லிய புன்னகையுடன் தலைஅசைத்தார். போகும்போது தன் சுருமா பூசிய கண்களால் ஒரு அழுத்தமான பார்வையை வீசிவிட்டு, என்னைக் கடந்து சென்றாள். உயிர் பிரிந்து செல்வதாக உணர்ந்தேன். வேறென்ன சொல்ல? தான் செல்லும் திசைகளெங்கும் நறுமணத்தைப் பரவவிட்டவள், போய்விட்டாள். நான் அடுத்த வெள்ளிக்காக இப்போதே தவம் இருக்கத் தொடங்கினேன்.

பரீதா வந்து சென்ற இரவு, வாப்பாவின் அறையில் உம்மாவின் கண்ணீர் மல்கிய மன்றாடலைக் கேட்க, எனக்கு என்னவோ போலிருந்தது. உம்மா ஏன் இத்தனை அவநம்பிக்கை கொள்ள வேண்டும்? வாப்பாவின் வயது, தகுதி எதை யுமே கருத்தில்கொள்ளாமல் உம்மா ஏன் இப்படி அரற்றுகிறாள்? என்னைச் சந்தேகிக்கவாவது கார ணங்கள் இருந்தன. வாப்பாவைப் போய்..!? ஒரு கட்டத்தில் பொறுமை தவறி, கத்திவிடலாமா என்றும் தோன்றியது. சிரமப்பட்டு அடக்கினேன். உம்மா, பரீதாவை ‘வசியக்காரி’ என்று வைதாள். அவள் அத்தர் விற்பவள் அல்ல; ஆட்களை மயக்குகிறவள் என்றாள். பரீதாவின் தோற்றம் என்னவோ மற்ற பெண்களை அச்சுறுத்தக் கூடியதுதான். அதற்காக இப்படி எல்லாமா? உம்மா இது உனக்கே நியாயமா?

”அத்தர் வாங்கியது ஒரு தப்பா?”

– வாப்பா அப்பாவியாகக் கேட்டார் உம்மாவிடம்.

”இத்தன நாளும் அத்தர் தடவிக்கிட்டா இருந்தீங்க?”

”இத்தன நாளும் கெடைக்கில. இப்போ வாச்சது… வாங்கினேன். எனக்கு வயசு அறுபது. அந்தப் புள்ள என் மகளாட்டம், பேத்தியாட்டம்…”

”எனக்கு அந்த வாசனை சுத்தமாப் புடிக்கில. அவ போன பெறகும் சைத்தானாட்டம் சுத்திச் சுத்தி வருது”

”உனக்கு அந்த வாசனையப் புடிக்கிலைய்யா. அந்தப் புள்ளையப் புடிக்கிலைய்யா?”

”ரெண்டும்தான்”

உம்மா கதறி அழுதாள். வாப்பா இறுகியமுகத்துடன் விருட்டெனக் கட்டிலை விட்டு எழுந் தார். அலமாரியைத் திறந்து பரீதாவிடம் வாங் கிய இரண்டு அத்தர் சீஸாக்களையும் எடுத்து வேகமாக ஜன்னல் வழியே வீசியெறிந்தார். கும்மிருட்டில் அடர்ந்திருந்த கருவமுள் புதரில் போய் அவை விழுந்த சத்தம் மெலிதாகக் கேட்டது.

”நிம்மதியா?”

வாப்பாவின் உரத்த குரல். உம்மா ஏதும் பேசாமல் கலங்கிய கண்களுடன் வெளியில் வந்தாள். அந்த இடத்தில் நான் நின்றிருப்பேன் என அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. பேசுவதற்கு வார்த்தைகள் இல்லாமல் என்னைக் கடந்து போன உம்மாவைப் பார்க்க, எனக்கு விசித்திரமாக இருந்தது. வாப்பா அறை விளக்கை அணைத்திருந்தார்.

நான் வாசலுக்கு வந்தேன். இரவு ஒரு புதிரைப் போல இருளைப் போர்த்திகிடந்தது. காற்றில் இன்னும் அந்த அத்தர் வாசனை கலந்திருந்தது. அது அத்தனை எளிதாக நீங்காது என்றே தோன்றியது. பரீதா வாசலில் வந்து நிற்கிற மாதிரியே எனக்கு ஒரு பிரமை. வாப்பா, உம்மாவின் மீதான கோபத்தில் வீசி எறிந்த அத்தர் சீஸாக்களின் மேல் ஞாபகம் சென்றது. அவர் செய்தது சரியா? இதைவிடவும், வார்த்தைகளாலேயே உம்மாவைச் சமாதானப்படுத்தியிருக்க முடியாதா? அப்போதைக்கு வேறெந்த வார்த்தைகளால் சாந்தப்படுத்தியிருக்க முடியும்? வார்த்தைகளற்றவராகத்தானே வாப்பா அதைச் செய்தார்? உம்மாவைப் பார்த்து அவர் கடைசியாகக் கேட்ட வார்த்தை, எத்தனை அழுத்தமாக ஒலித்தது. பதில் இல்லாதவளாகத்தான் உம்மா வெளியேறினாள். நிம்மதியா என்று கேட்டால், நிம்மதிதான். அதைத்தான் உம்மா மௌனத் தால் சொல்லிச் சென்றாள்.

பொழுது புலர்ந்தால்தான் காலண்டரின் ஒரு தாளைக் கிழிக்க முடிகிறது. இந்தக் கடி கார முட்களைக் காட்டிலும் உலகில் தாமதமாக நகருகின்ற வஸ்து ஒன்று உண்டா? ஏ… அப்பா! காலத்தை நகர்த்துவது எத்தனை கடினமான விஷயம்! அடுத்த வெள்ளிக்கிழமையை அடைய நான் பட்ட பாடுகளை யாரறிவார்?

மிக அதிர்ஷ்டமான நாள் என அன்றைக்கு விழித்தெழுந்தபோது உணர்ந்தேன். உம்மாவும் வாப்பாவும் கருக்கலிலேயே கிளம்பி நாகூருக்குப் போயிருந்தனர். நிம்மதியாக இருந்தது.

”பரீதா! எங்கிருக்கிறாய்? ஓடி வா, நான் இங்கு தனித்திருக்கிறேன்…”

மனம் கூவியபடி இருந்தது. என்னைச் சுற்றிலும் சங்கீதம் நிரம்பித் ததும்ப, பொங்கிய உற்சா கத்தை அவ்வப்பொழுது விசில்களால் வாசித்துக் கொண்டிருந்தேன். பறவைகளுக்கு இணையான ஓசைகள். குளிக்கப் பிடித்திருந்தது. விதவிதமாக உடுத்தப்பிடித் திருந்தது. உணவு எடுக்க மட்டும் பிடிக்கவே இல்லை. வாசலில் எதிர்ப்படும் உருவத்துக்காகக் காத்திருந்தேன். மனதில் ஒரு உரையாடல் முன்வரைவு தயாராக இருந்தது. அவளுடைய குரலாகி நானே பேசி னேன்.

‘ஊர் எது பெண்ணே?’

‘கொல்லங்கோடு’

‘இந்த மார்த்தாண்டம், களியக்காவிள?’

‘அதே, அதே… கொச்சு மொத லாளிக்குத் தெரியுமா?’

‘ம்… பேர் என்ன சொன்னது?’

‘பரீதா’

‘பரீதா, நல்ல பேரு’

‘கொச்சு மொதலாளின்ட பேரு பரிக்குட் டியா?’ சிரிப்பு … சிரிப்பு… வெண்கல மணிகள் ஏழெட்டு சேர்ந்து எழுப்பும் கலகல சிரிப்பு. அந்த நேரத்தில் திசைகளெங்கும் நிறைய வெண்புறாக்கள் பறந்து சென்றன. அந்தி மந்தாரைகள் காலையிலேயே பூத்திருக்க, முந்தைய சந்திப்பில் வெளிப்பட்டிராத புதுவிதமான அத்தர் மணம் கிறங்கடித்தது. சற்று நேரத்துக்கு எல்லாம், சரி…சரி… கற்பனைக்கு மேனி தந்தது போதுமப்பா என்றது மனம். அது சரி!

ஆனால், பரீதா வரவில்லை! வரவேண்டிய நேரம் கடந்திருந்தது. இப்போது வாசலைக் கடந்து, நடையிலும் வந்து நின்று பார்த்தேன். மெள்ள வலித்தது. தாங்கிக்கொண்டேன். சற்று தாமதித்தேனும் அவள் வரக்கூடும் என்கிற நம்பிக்கை தகர்ந்துகொண்டேயிருந்தது. யாரும் இல்லாத வீட்டைச் சாத்திவிட்டு நடை இறங்கினேன். திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தேன். வளைவு திரும்பியதும் பதற்றமாகி மீண்டும் வீட்டுக்கே நடந்தேன். வந்து நின்று அவள் காத்திருக்க மாட்டாளா? மனம் ஏங்கியது. அவள் வரவில்லை!

வீதியில் இறங்கி ஓடினேன். சிறு பிராயத்தில் எங்கெங்கோ, எதன் நிமித்தமோ ஓடியது. பிறகு எல்லாம் நடைதான். ஓட்டத்துக்கான அவசியம் இல்லாமலிருந்தது. வயதான பிறகு, எதற்காக இருந்தாலும் ஓடு வது, பிறரின் நகைப்புக்கு இடம் அளித்துவிடும். ஆனால், இப் போது ஓடினேன். இதோ… ஓடு கிறேனே… வெட்கம் தொலைந்து போனது. யாரோ எவரோ சிரிக் கிறார் போலிருந்தது. நின்று கவனிக்க நேரம் இல்லை. இதில் கோபப்பட என்ன இருக்கிறது? சிரிக்கட்டும், சிரித்துவிட்டுப் போகட்டும். பள்ளிவாசல் வீதிக்கு வந்ததும் ஓட்டம் நின்றது. அவள் வந்து போகும் திசைகளில் அலைந்து திரிந்தேன், தென்படும் உருவங்களில் எதுவும் அவளுடை யதாக இல்லை. வரமாட்டாளா? வந்து திரும்பிவிட்டாளோ? யாரிடம் கேட்பது? எப்படிக்கேட்பது?

ஓய்ந்து ஒரு முக்கில் நின்றேன். வியர்த்துக் கொட்டி மூச்சு வாங்கியது. போதும்.. இந்தப் பித்து போதும் என்றாகிவிட்டது. மனதைத் தேற்றிக்கொள்ள பிரயாசைப்பட்டேன். எதுவும் புலப்படவில்லை. தளர்ந்துபோய் நின்றபோது, அடித்த காற்றின் ஈரப்பசையில், அத்தர் வாசனை கலந்திருந்தது. விழித்துக்கொண்டேன்.

அவள் வந்துகொண்டிருந்தாள்.

‘பரீதா’

ஈரக்குலையிலிருந்து வார்த்தை எழும்பி வந்தது. அதை உச்சரிக்கும் முன், யாரோ எவரோ போல அவள் என்னைக் கடந்து சென் றாள். அவள் தோளில் தொங்கிய பையின் முகப் பில் புதிய உருவச் சித்திரம் ஒன்று வரையப்பட்டு இருந்தது. அவள் போய்க்கொண்டே இருந்தாள். ஓடிச் சென்று நின்று நிதானித்து அந்த உருவத் தைக் கவனித்தேன். வாப்பா..!

தந்தையின் பரிவு கலந்த புன்னகையுடன் வாப்பா, பரீதாவின் தோளில் குலுங்கிக் குலுங் கிச் சென்றுகொண்டிருந்தார். சிறிது தூரம் ஓடிச் சென்று வாப்பாவைக் கவனித்துக் கொண்டே இருந்தேன். வாப்பா ரொம்பவும் குலுங்காமல் இருக்க, பரீதா அவரை அணைத்துப் பிடித்துக் கொண்டிருந்தது போலத் தோன்றியது.

ஒரு தூரத்துக்குப் பிறகு நான் நின்றுவிட்டேன். பரீதா போய்க்கொண்டே இருந்தாள். காற்றில் அவள் கலந்து சென்ற அத்தர் மணம் கலையாமல் இருந்தது!

– ஜூலை 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *