அவன் அமரனுக்கு அமரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 3, 2024
பார்வையிட்டோர்: 846 
 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முத்தையனார் இல்லம்…….. 

“…மங்களகரமான முறையி’ல தான் நடத்தி வச்சோம்…” கோவிந்தன் பெருமூச்செறிந்தான். 

“‘முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெண்ணாயிரம் ரிசிகள்” மாசிலாமணி முடிப்பதற்குள் கோவிந்தன் இடைமறித்தான். 

“அட்டதிக்குப் பாலகர்கள்…” 

“கிங்கணர்…” மாசிலாமணி. 

“கிம்புருடர்….” கோவிந்தன். 

“அத்தனைபேர் முன்னிலையி’ல அம்மி மிதிச்சு…” மாசிலாமணி 

“அருந்ததி பார்த்து, அக்கினி சாட்சியா … அய்யர் மந்திரம் செபிக்க” 

“முல்லைத்தெரு முத்தைய்யனாரோட அருந்தவப் புதல்வர் அறவாழி கையிலே திருமங்கல்யத்தை எடுத்துக் கொடுக்க…” 

“குங்கில்யத்தெரு குமரேசன் மகள், அருந்தவப் புதல்வி அமுதவல்லி கழுத்து’ல மூணு முடிச்சு போட…” கோவிந்தன் 

“சாஸ்திர சம்பிரதாயத்தோட எந்த வில்லங்கமும் இல்லாம, மங்களகரமா நடந்து முடிஞ்ச கல்யாணத்தை…”

“கண்குளிர, மனங்குளிரப் பார்த்துச் சந்தோஷப்பட்ட தாடிக்காரர் முத்தையா பெரியவர்…” 

“கேவலப்படுத்துறதையும், சாஸ்திர சம்பிரதாயத்தை மீறி நடந்துக்கி’ற முறையையும் நாங்க ஏத்துக்கத் தயாராயில்லை!” 

கோவிந்தனும் மாசிலாமணியும் இடையறாது, மாறி மாறி சொல்லாயுதங்களைத் தொடுத்து, படையெடுப்பின் நோக்கத்தைப் புலப்படுத்தினர். 

பாய்விரித்த கூடத்தில் பலர் கூடியிருந்தனர். 

மெலிந்த உருவம் – வட்டவடிவிலான விலையுயர்ந்த மூக்குக்கண்ணாடி. வாழ்க்கையைவரவேற்கும் பளபளப்பான தலை கழுத்தில் சுண்டுவிரல் மொத்த தங்கச் சங்கிலி-பொன் வாரில் இணைக்கப்பெற்ற கைக்கெடிகாரம்- நவரத்தினக்கல் பதித்தக் கனத்த மோதிரம்-சந்தன நிறச் சட்டையும் தும்பைப்பூ நிறத்திலான கால்சட்டையுமாக அமர முடியாமல் அமர்ந்திருந்தார் – குமரேசன். அமுதவல்லியின் தந்தை : முத்தையனாரின் சம்மந்தி. 

தக்காளிப்பழ நிறம் – பொற்சரிகை இழையோடிய பட்டுப்புடவை – நேர்க் கோடெடுத்துச் சீவிய கூந்தல், காலத்தை வென்று காத்திருந்தது. மல்லிகையும் கனகாம்பர மும் வடைக் கொண்டையை அலங்கரிக்க. பத்துக்காசு அளவிலான குங்குமப் பொட்டு சகிதம் பேரிளங்குமரியாக திருமதி குமரேசன் அவர் பக்கத்தில் வீற்றிருக்க…. 

வெற்றிலைச் செல்லத்தைக் குதப்பிக்கொண்டு, வலிமை மிக்கத் தோள்களை அப்படியும் இப்படியும் அசைத்தவாறே வர்ணாசிரமத்தின் ஏகப் பிரதிநிதியாகக் குரல்கொடுத்து முத்தையனாரின் முக மாறுதல்களைக் கணித்துக்கொண்டு குமரேசனின் மூத்த மருமகன் கோவிந்தன், மாமியாரின் பக்கத்தில் அமர்ந்திருக்க… 

மடிப்புக் கலையாத ஆடைகள் தங்கநிற மேனியை அலங்கரிக்க’ ஆமாம் சாமி’ போட்டுக்கொண்டேயாவது தகப்பன் சேர்த்து வைத்திருக்கும் சொத்தில் இம்மி அளவேனும் சிந்தாமல் சிதறாமல் தானே அனுபவிக்க வேண்டும் எனும் சுத்தமான சுயநலங்கொண்டு, மாறிவரும் காலத்தின் மாற்றங்களை மூடிமறைத்து, தன் வாழ்க்கை யின் ஏற்றத்தில் குறியாயிருக்கும் கதிரேசனின் மகன். மாசிலாமணி மைத்துனனின் பக்கத்தில் சாய்ந்திருக்க… 

வெல்லத் தமிழெடுத்து வெல்லுங் குறள் படைத்த திருவள்ளுவர்… 

கண்மூடிப் பழக்கமெலாம் மண்மூடிப் போகட்டும்’ என்று முரசறைந்த இராமலிங்க அடிகளார் ஆகியோரின் திருவுருவப் படங்கள் சுவரில் தொங்க, அவற்றின் கீழே சுவரை முதுகுக்கு அணையாக்கி நரைத்த தலையும், பழுப் பேறிய தாடியும், மெலிந்த உருவமும், பறந்த நெற்றியும், கருணையுமிழ்க் கண்களும், வேட்டி சட்டையுமாக அமர்ந் திருந்தார் முத்தையனார்; அறவாழியின் தந்தை. 

பழுத்த தாடியை நீவிக் கொண்டே சுற்றியிருந்தோரைப் பார்த்தார் முத்தையானார். 

ஒவ்வொருவர் முகத்திலும் வெவ்வேறு தோற்றங்கள். அகத்தின் ஆழத்தை அங்கே கண்டார். 

ஒவ்வொருவர் கண்களிலும் வெவ்வேறு எண்ணப் பிரதி பலிப்புகள். மனத்தின் வேட்கையை அங்கே கணித்தார். 

வந்து கூடியிருப்பது தன் மருமகளின் பெற்றோர்கள்; சுற்றத்தார்கள்; வந்திருப்பதன் நோக்கம்? 

முத்தையனாரால் செரிமானம் செய்துகொள்ள முடியவில்லை. 

“சமயத்தின்மேல் கைவைக்காதே!” என்று பயமுறுத்தப்பட்ட போது, அவர் மனம் சமயத்தின்மேல் காலை வைக்க நினைத்ததில்லை 

‘பராசக்தி! பராசக்தி !!’ என்று பாடிய பாரதியாரைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடும் நவயுகப் பாட்டரசர்கள், 

‘ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று நம்பி
அலையும் அறிவிலிகாள் – பல்
லாயிரம் வேதம்; அறிவொன்றே தெய்வம்
எனக் கேளீரோ’ 

என்று அந்தப் பாட்டுக்கொரு புலவன் அறைந்தானே, அதை ஓரங்கட்டிவிட்டு, மேனானுமினுக்கித்தனமாக, சாதி கள் இல்லையடி பாப்பா’ என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு தண்டோரா போட்டுத் திரியும் பெரிய ஆசிரியர் களின் செயல் கண்டு உள்ளுக்குள்ளே நகைத்திருக்கிறார். 

திருவள்ளுவருக்கு முன்பும், அவருக்குப் பிந்திய காலகட் டத்தில் வாழ்ந்த புலவர்கள் ஈறாக, ‘உலகம்’ எனும் சொல்லை முதலாக வைத்துப் பாடிய இலக்கியங்களை ஆய்ந் தெடுத்துப் புளகாங்கிதம் அடையும் சொல்லேர் உழவர்கள் கம்பராமாயணத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில், ‘உலகம் ஊமையாய் இருந்த காலை’ என்று துவங்கி, இராவணகாவி யம் எழுதிய புலவர் குழந்தை புறக்கணிக்கப்படுவதைக் கண்டு குமுறி அடங்கியவர். 

கால மாற்றங்களுக்கு ஏற்பப் பண்பாட்டுச் சிதைவின்றி. வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவர் கருத்து. 

இல்லாத தாத்தாவை எப்படி ‘ தீபாவளித் தாத்தா’ என்று உருவாக்கும் மனோநிலையை உருவாக்கம் செய்ய முடிந் தோ… அதே வழியைப் பின்பற்றி மண்மூடிப் புதைக்க வேண்டியவற்றை கைகழுவிவிடும் மனப்பக்குவத்தைப் பெற வேண்டும் என்பது அவரின் கொள்கை. 

உலகப் பேரினம்; பத்தாம்பசலித்தனத்தின் பாசறை யாக விளங்கிய சீனர்கள் பெண்களின் பாதங்களைக் குட்டை யாக்கிச் சிறுக்கவைத்து வேடிக்கை பார்த்த காலகட்டத்தைத் தகர்த்தெறிந்துவிட்டு, உலக அரங்கில் ‘பாலே’ நடனம் ஆடிக்கொண்டிருப்பதையும்…… 

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை, ‘பர்தா’ எனும் ஆடையால் மூடி மறைத்துக்கொண்டு புளுங்கிக் கிடந்த சுலாமியப் பெண்கள், இன்று அழகுராணிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் ‘கமால் பாட்சா’ குறிக்கோள் உலகவலம் வரும்பொழுது… 

கிணற்றுத்தவளை வாழ்க்கைமுறை நீடிக்கத்தான் வேண்டுமா? 

கட்டாயத்தின் பேரில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கலாம். 

ஏமாந்திருந்த நேரத்தில் ஏற்றங்காண சுயநலமிகள் சிலர் திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தியிருக் கலாம். அறிவியல் சகாப்தத்தில் பத்தாம்பசலித்தனத்துக்கு வக்காலத்தா? 

இப்படிப்பட்ட வினாக்களுக்கு மொத்தக்குத்தகையாளர் திருவாளர் முத்தையனார். இன்று அவர் இல்லத்தில்… 

வாழ்க்கையில் சிக்கல்…! 

“எல்லாரும் பேசி முடிச்சுட்டிங்களா…இல்லெ பேசுற துக்கு வேற ஏதாவது மிச்சம் மீதி இருக்கா…?” நிமிர்ந்தார் முத்தையனார். 

“மிச்சமீதி எல்லாம், நடத்த வேண்டிய காரியத்தை நல்லபடியா, சாஸ்த்திர சம்பிரதாய முறைப்படி நடத்திட்டிங்கனா எங்களுக்குச் சந்தோசம்” சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே தலையாட்டினான் கோவிந்தன். 

“நடக்கவேண்டிய காரியம்’னு சொல்றீங்களே, அப்படி என்னதான் நடந்து முடிஞ்சு போயிட்டு’னு பதட்டப் படுறீங்க?” அமைதியாகவே கேட்டார் முத்தையனார். 

“அபசாரம்! அபசாரம்!! தெய்வத்துக்கே அடுக்காது. ஓய், குமரேசா… நான் அப்பவே சொன்னேன் இந்த வம்பெல்லாம் வேணாம்’னு…” உறவுக்கார முதியவர் சினந்து கொண்டார். 

“வாழையடி வாழையா வந்த வழக்கத்தை, ஐதீக முறையை, கிள்ளுக்கீரையா நினைக்கிறீங்களே… பொண்ணைக் கொடுத்த பாவம் எங்களைச் சும்மா விடாதய்யா…” முத்தையனாரைப் பார்த்துப் புலம்பியேவிட்டார் குமரேசன். 

முத்தையனார் குமரேசனை ஏறெடுத்துப் பார்த்தார். அந்தப் பார்வையில் மனத்தலத்து வேதனையின் வெளிப் பாடு… 

“சம்மந்தியார் அய்யா…! என்னைப் பற்றி உங்க அத்தனைப் பேருக்கும் நல்லாத் தெரியும் சாஸ்திர சம்பிர தாயத்தை நீங்களெல்லாம் எந்தக் கண்ணோட்டத்து’ல பார்க்கிறீங்களோ, அது உங்க தனியுரிமையா இருக்கலாம். நான் வேறுபட்டக் கண்ணோட்டத்து’ல சிந்திக்கிறவன். அப்படி இருந்தும் எல்லாத்துக்கும் கட்டுப்பட்டுத்தான் கல்யாணத்துக்குச் சம்மதிச்சு நடத்தி வச்சேன். இன்னிக்கு சொல்றேன் : நீங்க உடும்புப் பிடியா புடுச்சுக்கிட்டு இருக்கிற சாஸ்திர சம்பிரதாயத்தை அடிப்படையா வச்சுதான் சொல்லுறேன், இன்னும் காலம் கடந்து போக’ல. ஆகை யினால, நீங்க அவசரப்பட்டுச் செய்யச் சொல்ற காரியத்தை நடத்தி வைக்க நான் தயாரா இல்லை! ஏன், அமுதவல்லியே தயாரா இல்லை!” ஒவ்வொரு சொல்லையும் நிதானமாகவும், அழுத்தந்திருத்தமாகவும், தீர்மானமாகவும் சொல்லி முடித்தார், முத்தையனார். 

”அப்படி”னா?” கேள்விக் கொக்கியை நீட்டினான் கோவிந்தன். 

“அப்படித்தான் !!” சம்மட்டி கொண்டு கேள்விக் கொக்கியை நிமிர்த்தினார் முத்தையனார். 

அன்று ஞாயிற்றுக்கிழமை…… 

காலை நேரத்து ‘மெது’வோட்டத்தை முடித்துக் கொண்டு, சிற்றுண்டிக்காகக காத்துக் கொண்டிருந்தான் அறவாழி. 

தோசைக்கல்லில் வெந்து கொண்டிருந்த தோசையைச், சுடச்சுடப் ‘பீங்கான்’ தட்டையில் எடுத்துப் போட்டு, தேநீரை இடது கையில் ஏந்திக் கொண்டு இட்ட அடி நோகாமலும், எடுத்த அடி கொப்பளிக்காமலும் பளிங்குத் தரையில் நடை பயின்று, அறவாழியை நெருங்கினாள் அமுதவல்லி. 

அமுதவல்லியின் முகத்தையே இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அறவாழி 

“என்ன அப்படிப் பார்க்கிறீங்க? பசியாறுங்க…”

“பசியாறிகிட்டுதானே இருக்கேன்…” 

“பசியாற தோசை தட்டு’ல இருக்கு…இங்க என் முகத் து’ல இல்ல…” 

“எவன் சொன்னான் இல்லை’னு……” 

இடைமறித்தாள் அமுதவல்லி. “உங்க சொல் சிலம்பத் யெல்லம் அப்புறம் வச்சுக்கலாம்… முதல்’ல தோசை பசியாறுங்க . ஆறிப்போயிடப் போவுது. இதோ உங் களுக்கு விருப்பமான புளிச்சைக்கீரை கடையல்…” என்று கூறிக்கொண்டே பரிமாறினாள். 

திருமணமாகி ஐந்து திங்களே கடந்து விட்டிருந்த வேளையில், இன்னும் ஒரு ‘பூச்சி புழுவோ’ உண்டாகாத நிலையில் ஊடலுக்குக் குறைவா என்ன…! 

”ஆமா, இன்னிக்கு என்ன சமையல்…?” தேநீரைப் பருகியபடியே கேட்டான். 

“ஐஸ் பெட்டி காலியாயிடுச்சு. முதல்’ல பசாருக்குப் போயிட்டு வாங்க” 

வாரம் ஒருமுறை சந்தைக்குச் சென்று ஒரு வாரத்துக்கு வேண்டிய காய்கறி, இறைச்சி கோழி முதலானவற்றை வாங்கி வந்து குளிர்பதனப் பெட்டியில் நிரப்பி விடுவான் அறவாழி. அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில், அப்துல் காதரின் மளிகைக் கடையும், மார்ட்டின் மாணிக் கத்தின் ‘ஓட்டுக்கடை’யும் இருக்கிறது. தட்டுப்படும் சமயங் களில் சில்லறையாக வாங்கிக்கொள்வாள் அமுதவல்லி. 

“அப்பா பசியாறிட்டாங்களா…?”

“மாமா பாத்ரூம்’ல இருக்காங்க…” கிசுகிசுத்தாள் அமுதவல்லி 

வாயிற்கதவு மணியோசை கேட்கிறது. 

அறவாழி எழ முயன்றான்… 

“நீங்க பசியாறுங்க, நான் போய்ப் பார்த்துட்டு வாரேன்” எழ முயன்றவனை அமரச்சொல்லிவிட்டுக், கூடத்தை நோக்கி விரைந்தாள் அமுதவல்லி. 

கூடத்தில் பேச்சுக்குரல்…… 

உள்ளே வந்த அமுதவல்லி, ”என்னங்க, உங்க சித்தப்பா வந்திருக்காரு.” 

“பசியாறிட்டாராமா ?” அறவாழி தேநீரை அருந்திக் கொண்டே கேட்டான். “பசியாறிட்டாங்களாம். அவசரக்க காரியமா உங்களோட பேசணுமாம்.” 

அறவாழியின் புருவங்கள் நெளிந்து நிமிர்ந்தன; நெற்றி யில் சிந்தனைக் கோடுகள். வேலையிடத்து விவகாரம் தீர்வு காண வந்திருப்பார் என்பதை நொடிப்பொழுதில் ஊகித் துக்கொண்டவன், கைகளை அலம்பிக்கொண்டு கூடத்தை நோக்கி விரைந்தான். 

நான்குமுழ வேட்டி, பழுப்பேறிய துண்டு, நீலநிற அரைக்கைச் சட்டை, சராசரி உடற்கட்டு, வெற்றிலைக்காவி படிந்த பற்கள், சந்தனப் பொட்டின் நடுவில் குங்குமப்புள்ளி இத்தியாதிக் கோலத்துடன் சாய்வு நாற்காலியில் வீற்றிருந் தார் அறவாழியின் சிற்றப்பா-சோலைமாடன். 

“வாங்க சித்தப்பா…வந்து பசியாறுங்க…” சொல்லி வைத்தான் அறவாழி. 

”இன்னும் செத்த நேரத்து’ல சாப்பாட்டு வேளை வந்துடப்போவுது… இப்ப எதுக்குப் பசியாற …” இளித்துக் கொண்டார் சோலைமாடன். 

“வீட்டு’ல எல்லாரும் சௌக்கியமா…?” 

“குலதெய்வம் மதுரைவீரன் புண்ணியத்து’ல நல்லா இருக்கோம். ஆமா, அண்ணார் எங்க…?” 

“உலாத்திட்டுவந்து குளிச்சுக்கிட்டு இருக்காரு” 

“வந்து தம்பி…” சோலைமாடன் தயங்கினார். நாற்காலியில் அமர்ந்தவாறே, “சின்னவன் சிங்கராசு” அறவாழி முடிப்பதற்குள் முந்திக்கொண்டார் சோலை மாடன், “ஆமா தம்பி!” 

“எல்லாம் எனக்குத் தெரியும் சித்தப்பா …” 

“ரொம்ப நல்லதாப் போச்சு, வந்த காரியம் சுலுவா முடிஞ்சுடும்’னு சொல்லு. ஆமா அறவாழிதம்பி, அதென்ன அவனுக்கு ஒரு நீதி? விட்டுக்கொடுக்கப்படாது தம்பி..!” கரகரப்பான குரல் சோலைமாடன் கடுமையை அதில் இழைய விட்டிருந்தார். 

“மேற்கொண்டு எதுவும் செய்யறதுக்கு இல்ல சித்தப்பா சிங்கராசுவுக்கு வேலை போனது போனதுதான்…” 

திடுக்கிட்டு எகிறி அமர்ந்தார் சோலைமாடன். 

“என்னப்பா அப்படிச் சொல்லிட்டே…? நீ தானே அங்க யூனியன் லீடரா இருக்கே? உனக்கும் தம்பிதானே சிங்கராசு? நீ நெனச்சா திரும்பவும் அந்த வேலையை வாங்கிததர முடியுமில்’ல?” 

“முடிஞ்சாலும், வேலையை மீண்டும் வாங்கிக்கொடுக்கக் கூடாது சித்தப்பா” 

“ஏன் கூடாதுங்கு’ற?” தொடுத்துக் கொண்டிருந்தார் கேள்விக் கணைகளை. 

“வேலை நேரத்துல’ல சிங்கராசு சூதாடியிருக்கிறான். கையும் களவுமா ‘செக்யூருட்டி கார்டு’கிட்ட சிக்கியிருக்கான்.” அறவாழியின் குரலில் அழுத்தம். 

“ஓகோ, அப்படி’னா அவன் வேலை போனதுதான். உங்க யூனியனா’ல ஒண்ணும் செய்ய முடியாதுங்குற?”எரிச்சலோடு அறவாழியைப் பார்த்தார். 

“முடியாது சித்தப்பா. சூதாடுறதே குற்றம்; அதிலேயும் வேலை நேரத்து’ல சூதாடுறது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா? 

“அப்போ, அந்தச் சீனன் பிடிப்பட்டானே, அவனை மட்டும் எப்படித் திரும்பவும் வேலையி’ல சேர்த்துக்கிட்டாங்க?” சோலைமாடனின் குரலில் கடுகடுப்பு. 

”அந்தச் சீனருக்காக வாதாடினோம். நிர்வாகத்துறை அதிகாரிங்ககிட்ட அவரோட வாழ்க்கைச் சூழலைச் சொல்லி முறையிட்டோம்.மனமிரங்கிக் கடைசி எச்சரிக்கையோட வேலையி’ ல சேர்த்துக்கிட்டாங்க” பொடிவைத்துப் பேசினான் அறவாழி. 

“அவன் மஞ்சத்தோலு இவன் கருப்புத்தோலு… அதனா’ல நல்ல பேரு வாங்கிக்க, ‘மெஜார்ட்டி’ பக்கம் சாய்ஞ்சுட்டே..!” மகளின் நச்சரிப்பு, மருமகளின் உபதேசம், மனையாளின் தலையணை மந்திரம் எல்லாமாகச் சேர்ந்து சோலைமாடனை அலைக்கழித்தது. 

“ஆத்திரப்படாதீங்க சித்தப்பா. வகுப்பு வாதக் கோட்பாட்டை எதிர்க்கிறவர் எங்க அப்பா. அவருக்குப் பிறந்தவன் இந்த அறவாழி, இனமானம் காக்க உயிரைக் கொடுக்கச் சித்தமானவன். இனத்துவேசத்துக்குச் சாவுமணி அடிக்க முன்வரிசையி’ல நிற்கிறவன் நான். என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியா?” உணர்ச்சி வயப்பட்டான் அறவாழி 

மயான அமைதி. 

சோலைமாடன் தரையை நோக்கிக்கொண்டிருந்தார். 

“சித்தப்பா, அந்த சீனர் ‘யூனியன்’ல ஒரு மெம்பர். மாசா மாசம் ஆறு வெள்ளி கட்டிக்கிட்டு இருக்கிற தொழிற்சங்க உறுப்பினர். நல்லது கெட்டதுகளை யூனியன் தலையி’ல போட்டுட்டு, ‘அக்கடா’னு வேலை பார்க்கிற தொழிலாளி. ஆனா சிங்கராசு?” 

“சரி, சிங்கராசு ‘யூனியன்’ல சேர’ல; வாஸ்த்தவம் தான். உனக்குத் தம்பிங்கிற முறையில் உதவலாம் இல்லியா?” சோலைமாடனின் குரலில் ஓர் ஆதங்கம். 

“அண்ணன் தம்பிங்கிற உறவெல்லாம் கம்பெனி ‘கேட்டு’க்கு வெளியதான். வேலை ‘இடம்’னு வந்தாச்சு’னா அவனும் ஒரு ஊழியன். நானும் ஒரு ஊழியன். அவங்க வங்க கடமையைச் செய்தாகணும். சித்தப்பா, ஒண்ணை அல்லா மனசு’ல வச்சுக்குங்க … சிங்கராசு சங்கத்து’ல சேரலேங்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்; சங்கத்து’ல சேர்ந்திருக்கிற எத்தனைப் பேர்கிட்ட சங்கத்தைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மனசைக் கெடுக்கப் பார்த்திருக்கான் தெரியுமா…? இன்றைக்கு நமக்குத் தேவைப்படுறதெல்லாம் தொழில் அமைதி. அதை நிலை நிறுத்த ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு. அந்த அமைப்பை அடிப்படையா வச்சு தொழிலாளி-முதலாளி உறவுக்குப் பாலம் போட்டு, மனித நேயத்தை வளர்த்து வர்றது தொழிற்சங்கம். அப்படிப்பட்ட சங்கத்து’ல, மாதத்துக்கு ஆறு வெள்ளி சந்தா செலுத்தி உறுப்பினனாகாத ஒருத்தனோட சிக்கலை எந்த முகத்தை வச்சுக் கிட்டு முதலாளியோட வாதாடச் சொல்றீங்க… “அறவாழி குமுறலைக் கொட்டித் தீர்த்தான். 

சோலைமாடன் சிந்தனையில் மூழ்கிப் போயிருந்தான். மீண்டும் அமைதி. 

அமைதி மேகத்தைக் கிழித்துக் கொண்டு சுடர் முகம் காட்டிடும் கதிரவன் போல் அறவாழி தொடர்ந்தான்… 

“தொழிற்சங்கம் அரசாங்கத்தோடகைப்பொம்மையாம்; இலட்சக் கணக்கு’ல மாதாமாதம் சந்தாப் பணம் வசூலிக்க தொழிற்சங்கவா திங்கங்கிற போர்வையி’ல கொம்மாள மடிக்கிறோமாம். ஏர்கண்டிசன் அறையி’ல கூத்தடிக்கிறோ மாம். ஆமா சித்தப்பா…இப்படியெல்லாம் பேசியிருக் கிறான் சிங்கராசு. தொழிலாளிங்களோட குடும்ப மருத் துவச் செலவுக்கு மானியமாகவும், அவங்க பிள்ளைங்க படிக்கக் கல்வி நிதியாகவும், குடும்பத்து’ல யாராவது தவறிப் போய்விட்டாங்க’னா மரணநிதியாகவும், குடும்பங் களுக்கு இடையில புரிந்துணர்வை நிலை நாட்டக் கலந் துரையாடல் நிகழ்ச்சிக்காகவும் சிறுநீரக நோயாளிங்க இலவசமா பயன்படுத்திக்க நவீன இயந்திரத்துக்காகவும், வெளிநாட்டுல இருந்து இங்க வந்துட்டுப் போற தொழிற் சங்கப் பேராளர்களை உபசரிக்கிறதுக்கும் இன்னும் எவ்வளவோ காரியங்களுக்காகச் சந்தாப்பணம் செலவாயிக்கிட்டிருக்கு. முதலாளி தரப்பு மூக்கு உடைபடாமலும், தொழிற்சங்கக் கோரிக்கை நிராகரிக்கப்படாமலும், அரசாங்கக் கொள்கைக்குக் குந்தகம் நேராமலும், தொழிலாளர் நலனுக்காகத் தொழிங்சங்கத் தலைவர்கள் பட்டுவந்த சிரமத்தைப் புரிஞ்சுக்காம வாய்க்கு வந்தபடி பேசுறது என்ன நியாயம்? தொழிற்சங்கம்’னா வேலை நிறுத்தம், தெருச்சண்டை என்கிற நிலை – ஜார், முசோலினி காலத்தோட முடிஞ்சுபோன கதை! இது ‘கோ சொக் தொங் சகாப்தம். ரெண்டு துணைப் பிரதமர்களுக்கு ஒரே சமயத்துல புற்றுநோய்ங்கிற மருத்துவ அறிக்கை. அரசாங்கம் ஆட்டங்கண்டா நம்ம நிலை என்ன…? சிங்கராசுவுக்குப் புரியுமா?” பொரிந்து தள்ளினான் அறவாழி. காலை நேரத்திலும் வியர்த்துக் கொட்டியது. 

“ஒரு சிங்கராசு பேசறதால் குடியா முழுகிடப் போவுது?’ ஓட்டிலிருந்து தலையை மெல்ல வெளியே நீட்டும் ஆமையைப் போல் ஆரம்பித்தார் சோலைமாடன். 

“ஐம்பது செங்கல்லை அடுக்கி, நேர்த்தியா ஒரு சுவரை எழுப்புவதற்குக் காலமும் ஆகும்; களைப்பும் ஏற்படும். அதே சுவரைத் தரைமட்டமாக்க, பிடுங்கவேண்டிய ஒரே ஒரு கல்லைப் பிடுங்கினா போதும் சித்தப்பா…” 

குளியலை முடித்துக் கொண்டு உள்ளறையில், 

“அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு…” என்று அறக்குறளடிகளை உருப்போட்டுக் கொண்டிருந்தார் முத்தையனார். கூடத்திலிருந்து செவிப்பதற்கு இதமாக இருந்தது. 

“அப்ப, சிங்கராசுவுக்கு வேலை கிடைக்காது’னு’ சொல்றியா…?” கையறு நிலையில் கேட்டார் சோவை மாடன். 

“அப்படி ஒரு முடிவுக்கு வந்துட்டா, புதுசா ஒரு ‘கிரி மின’லை உருவாக்குறதா அர்த்தமாயிடும். அவசரப்பட்டு கல்யாணத்தை வேற செய்துக்கிட்டான். சித்தப்பா, ஒண்ணு செய்யுங்க. அவன்| போக்கை மாத்திக்கிட்டு ‘தன் வேலையுண்டு. குடும்பமுண்டு’னு இருக்கிறதா இருந்தா, நாளைக்கு சாயங்காலமா இங்க வரச் சொல்லுங்க. என் நண்பர் ஒருத்தரோடத் தொழிற்சாலைக்கு ஆள் தேவைப்படுறதா சொன்னாரு…ஏற்பாடு செய்யுறேன்.” 

”அப்ப அவனுக்கு வேலை கிடைச்சிடும்’னு சொல்ற.”. சோலைமாடன் உருகி நின்றார். 

“முதல்’ல அவனை வரச்சொல்லுங்க. சித்தப்பா, அவன் என் தம்பிங்கிறதுக்காகவோ, கருப்புத் தோலுங்கிறதுக்காகவோ நான் இதைச் செய்ய’ல. அவனும் ஒரு மனுசனா வாழணும்கிற எண்ணத்து’ல செய்யுறேன். இதுதான் முதலும் கடைசியுமா இருக்கணும்..” முத்தாய்ப்பு வைத்தான் அறவாழி. 

“சொல்லிப் பார்க்கிறேன்’பா” அரைமனத்தோடு எழுந்தார் சோலைமாடன். 

“எங்க கிளம்பிட்டிங்க. இருங்க சித்தப்பா, சாப்பிட்டுட்டுப் போகலாம்” 

“வெளிய ஒரு அவசர ‘சோலி’ இருக்கு. சாவகாசமா இன்னொரு நாளைக்கு வாறேன்..” சொல்லிக்கொண்டே உட்புறம் பார்த்தார் சோலைமாடன். 

‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை 
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்’

முத்தையனாரின் குரல் சன்னமாக ஒலித்துக்கொண்டிருத்தது. 

“அண்ணார் செபம் பண்ணிகிட்டு இருக்காரு. வந்துட்டுப்போனதாச் சொல்லிப்புடு..”என்று கூறிக்கொண்டே வெளியேறினார். 

உடைகளை மாற்றிக்கொண்டு சந்தைக்குப் புறப்பட் டான் அறவாழி. 

மூன்று மாதங்கள் உருண்டோடி மறைந்தன. 

தொலைபேசி மணியோசை கேட்டுக் கூடத்துக்குவிரைந் தாள் அமுதவல்லி. 

“அலோ…” 

அகம் மலர்ந்த அமுதவல்லியின் முகம் மலர்ந்தது. மறு முனையில் அறவாழி. 

“உம். பசியா றிட்டேன்…. மாமா அருட்பா ஓதிக் கிட்டிருக்காரு.. உம… உம.. இல்லே..வாந்தி மயக்கமெல்லாம் நின்னுடுச்சு. நெசமா.. நல்லாதான் இருக்கேன். நல்ல செய் தியா… சரிங்க, சமைக்க’ல ஊம்.. மத்தியானத்துக்குக் கவலையில்லை. ‘சிக்கன் சூப்’ குடிச்சுட்டேன்.” குழைவோடு, “ஏங்க என்னாங்க அந்த நல்ல செய்தி..? சொல்லமாட்டிங்களா… சரி..சரி.. நேராவே சொல்லுங்க..வச்சுடுறேன்…?” 

நல்ல செய்தி சொல்வதாகவும், இரவுச் சாப்பாட்டைக் கடலோர அங்காடியில் வைத்துக் கொள்ளலாம் என்றும் அறவாழி சொன்னான். என்ன அந்த நற்செய்தி….? 

பிறக்கப்போவது ஆணா அல்லது பெண்ணா என்பதைக் கணித்தறிந்துவிட்டானா? 

கணினி யுகத்தில் என்னதான் நடக்காது… 

கடவுளுக்குக் ‘காப்பு’ வைத்துப் பாடிய புலவர் கூட்டம், நாளையொரு நாள், அந்தக் கடவுளின் கரங்களில் பொற் காப்பு அணிந்து அரங்கேற்றினாலும் வியப்பதற்கில்லை… 

அமுதவல்லி சாய்வு நாற்காலியில் சாய்ந்தாள். 

மாலை வந்தது. 

அறவாழியும் வந்து சேர்ந்தான். 

“என்னப்பா சங்கதி…?” முத்தையனார் கேட்டார். 

“வந்துப்பா. பொதுமக்களும் எங்க கம்பேனியி’ல பங்கு தாரரா இருக்கணும் னு தீர்மானம் போட்டிருக்கோம். அதோட, வேலைச் சீர்திருத்தம், தொழிலாளர் தொழிற் பயிற்சி, இப்படிப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆய்வுக்குழு அமைத்திருக்கோம்..” 

“அப்படி’னா, நீயும் நானும்கூட பங்குதாரராகலாம்னு சொல்லு” 

”ஆகணும்’னு அபிப்பிராயப்படுறோம். அதற்கு முதலாளி தரப்பி’ல இருந்து ரெண்டு பேரும், யூனியன் ல இருந்து ரெண்டு பேரும் தொழிலாளர் அமைச்சு’ல இருந்து ரெண்டு பேரும், சட்ட நிபுணர்கள் நாலுபேரும் ஆகமொத் தம் பத்து பேர் அடங்கிய குழு திங்கட்கிழமை பேச்சு வார்த்தை தொடங்க ஏற்பாடாயிருக்கு” 

தேநீர் பலகாரங்களைக் கொண்டுவந்து மேசைமேல் வைத்தாள் அமுதவல்லி. 

அறவாழி தேநீரைப் பருகிக்கொண்டே தொடர்ந்தான், “மூன்று நாளைக்குக் கூட்டம் நடத்த நிகழ்ச்சி நிரல் தயாராயிடுச்சு…அமுதா, பேச்சுவார்த்தையை எங்கே நடத்தத் தீர்மானிச்சிருக்காங்க தெரியுமா..?” மனைவியை வம்புக் கிழுத்தான். 

“எனக்கு எப்படித் தெரியுமாம்..” வெட்டிக் கொண்டாள் அமுதவல்லி. 

முத்தையனார் பக்கம் திரும்பி, “நீங்க சொல்லுங்க பார்ப்போம்.” 

“நல்லா கேட்ட போ..இது உங்க காலம்’பா.நெனச்சா சந்திரமண்டலத்து’ல கூட நடத்துவிங்க…” 

சிரிப்பலை எழுந்து ஓய்கிறது. 

“ஆசியான் நாடுகளை உள்ளடக்கி கடல்யக் பகுதியி’ல உல்லாசப் பயணக் கப்பல்’ல,,” 

”கப்பல்”லியா..!” வியந்து போனாள் அமுதவல்லி. 

“அமுதவல்லி, நான் அப்பவே சொன்னேன்ல…ஆல மரத்தடியி’ல கூட்டம் போட்டுட்டு, அதுக்கும் ஒரு வியாக் கியாணம் சொல்றவனுங்களாச்சே ! அறவாழி, இப்பேர் பட்ட ஒரு வாய்ப்பு கிடைச்சதை எண்ணி ரொம்ப ரொம்பப் பெருமையும் பூரிப்பும் அடையிறேன். குறள்கிழவன் சொன்னதற்கிணங்க 

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செய’லாற்றி வாகைசூடி வா” 

என்று பெருமிதத்தின் தளதளப்பு குரலில் தோய்ந்திட”நான் ஒரு நடைநடந்துட்டு வந்துடுறேன்” என்றவாறே கிளம்பினார் முத்தையனார்; இங்கிதம் தெரிந்தவர். 

“ஏய், அமுதாகுட்டி…உதை கிதை விழுந்ததா?”

அமுதவல்லி புரியாதவளாய், “உதையா…?’ 

அருகே நின்றவளை தன்னருகே இழுத்தவாறு, “ஆமாங்கிறேன். அடிவயத்தி’ல” 

வெட்கத்தால் தலை கவிழ்ந்த அமுதவல்லி, அடுக்களை நோக்கி ஓடினாள். 

“பார்த்து பார்த்து ! வேகமா ஓடாதே உடம்புக்கு ஆகாது…” என்று குரல் கொடுத்துக் கொண்டே அமுதவல்லியைப் பின் தொடர்ந்தான். 

கிசுகிசுப்பு அடங்கியது. பிறகு…? 

ஒரே அமைதி! 


“அப்படித்தான்!” என்று அழுத்தந்திருத்தமாகக் கோவிந்தனுக்கு முடிவு சொல்லி நிலைக்குத்திப் போய் நின்ற முத்தையனாரின் சிந்தனை அரங்கில் மீண்டும் சந்தடி. 

குழுமியிருந்தவர்கள் ஆளுக்கு ஒன்றாக அசைபோட்டுக் கொண்டிருந்தார்கள். 

”பேசாம, மக’னு ஒருத்தி இருந்தா…அவளும் போயி சேர்ந்துட்டா’னு தலை முழுகிடச் சொன்னேனே, கேட்டியா குமரேசா…” நாற்பதுக்கும் ஐம்பதுக்கும் இடைப் பட்ட ‘உறவு’ ஒன்று உசுப்பிவிட்டது. 

சுற்றுமுற்றும் பார்த்தார் குமரேசன். அத்துணைக் கண்களும் அவர்மேல். அவர் முத்தையனாரைப் பார்த்து, கம்மிய குரலில்,” அய்யா, சம்மந்தியாரே… உங்களுக்கு விளங்காதது எதுவுமில்லே’னே வச்சுக்குவோம்: உல்லாசப் பயணக் கப்பல் தீ விபத்து’ல மருமகன் அறவாழி செத்துப் போயிட்டாரு…!” 

சிலிர்த்தெழுந்தார் முத்தையனார்.” வார்ர்தையை அளந்து பேசுங்க சம்மந்தி’ என் மகன் சாக’ல, அமுதல்லி யோட கணவன் காணமப் போயிருக்கான் 

ஆமா, அவன் கடல்’ல குதிச்சு உயிர் தப்பிச்சு எங்கயோ இருக்கான். அவன் ஒரு தொழிற்சங்கத் தலைவன். யாரா வது கடத்திக்கிட்டுப் போயிருக்கலாம். மிரட்டிப் பணங் கேட்டு எந்த நிமிசத்திலேயும் தகவல் வரலாம். ஏன், அறவாழியே கூட நேர்’ல வந்து நிக்கலாம்…” அடுக்கினார் முத்தையனார். 

”என்னய்யா, சுத்தப் பைத்தியக்கார ஆளா இருக்கே. அதுதான் தேடிப் பார்த்துட்டாங்களே. பொணம்கூட அம்படலயாமே” அங்கலாய்த்துக் கொண்டார் முதியவர் ஒருவர். 

சுவரில் சாய்ந்துகொண்டு கூரையை அண்ணாந்து பார்த்துக் கொண்டே முத்தையனார் சொன்னார், “தேடிப் பிடிக்கிறது அவ்வளவு சாமான்யப்பட்ட காரியமில்லீங்க… இருந்த ஒண்ணு காணாமப்போயிருக்கு, ஆனா, ‘இனி “அது” இல்லை, செத்துப்போயிடுச்’னு’ அனுதாபத் தீர்மானம் நிறைவேற்ற வந்து இருக்கிற உங்களைக் கேட்கிறேன் : கால காலமா இல்லாத ஒண்ணை இருக்கு இருக்கு’னு தேடி அலையுறீங்களே, அதுக்கு எப்போ முற்றுப்புள்ளி வச்சு, அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றப் போறீங்க…?” 

“வெவகாரத்தை திசை திருப்ப வேணாம். நாங்க ஊரோட வாழ நினைக்கிறவங்க. சாதி சனங்களோட ஒண்ணா இருக்க ஆசைப்படறவங்க, வழமையா இருக்கிற வழக்கத்தையெல்லாம் உதறித்தள்ளிப்புட்டு எங்களா’ல வாழ முடியாது. அதனால…” பேசிக்கொண்டே குழுமியிருந்தோரைப் பார்த்தான், கோவிந்தன். “அதனால…?’ அமைதியாகக் கேட்டார் முத்தையனார். 

“அமுதவல்லி தாலியறுத்து – அமங்கலியாகணும்!” உடைத்தான் கோவிந்தன். 

ஆசியானின் பினாதுபோ எரிமலையாக வீற்றிருந்த முத்தையனார்’ கேமரன் மலைத் தென்றலானார். தாழ்ந்த குரலில், கைகூப்பி வணங்கியவாறே. “அய்யா… சின்னஞ் சிறுசை சுமந்துக்கிட்டு நிற்குது. கொஞ்சம் பெரிய மனசு பண்ணிக் கருணை காட்டணும்…” 

“அதைப் பத்தியெல்லாம் கவலைப்பட்டு விட்டுக் கொடுத்தா ஆசாரம் என்ன ஆகுறது…?” தீயை மிதித்த ஒருத்தரின் அலறல். 

“நம்ம சாஸ்திர சம்பிரதாய வழக்கத்துக்கு இந்தத் தாடிக்காரரா’ல வில்லங்கம் ஏற்பட்டதா இருக்கக் கூடாது…” 

”அப்படி நடக்க நாங்க இடங்கொடுக்கவும் தயாரா இல்ல…” 

குழுமியிருந்தோரிடையே கசமுசா.. ! 

“அறவாழி இன்சூரன்சு எடுத்திருக்கான். மத்திய சேமநிதி சேமிப்பு, பங்கு மார்க்கெட் பணம் இதெல்லாம் பிறக்கப்போற குழந்தையோட எதிர்காலப் பாதுகாப்புக்கு, அறவாழியோட மரணச் சான்றிதழ், அதாவது, டெத் சர்டிபிக்கட்’ இல்லாம இதையெல்லாம் பெற முடியாது…” 

“தலையில என்ன எழுதியிருக்கானோ, அதுதான் நடக்கும். இந்தப் பணங்காசா’ல ஒண்ணும் கிழிச்சுட முடியாது. உம்மை ஆரம்பத்து’ல இருந்தே கவனிச்சுக்கிட்டு தான் வரேன். எடுத்ததுக்கெல்லாம் எடக்கு மடக்கா பேசு’ற இது து நல்லதுக்கில்லை…” குமரேசனின் மூத்த சம்மந்தி, அழகேசன் முதன் முறையாக வாய்மலர்ந்து, முடிவுரைக்குக் கட்டியங் கூறினார். 

“என் மகன், அமுதவல்லியோட கணவன் குமரேசனார் மருமகன் அறவாழி இன்னும் சாகலே’னு சொல்றேன்…” முத்தையனார். 

“யோவ், பைத்தியக்காரத்தனமா பிணாத்தாதீர் அவன்தான் செத்துப் போயிட்டான்ல! அப்புறம் என்ன வளவளா…!” அழகேசன். 

“அறிவுப்பூர்வமா பேசுற நீங்க ஒண்ணு செய்யுங்க. கல்யாணத்துக்குச் சாட்சியா இருந்தாங்கனு சொன்னிங்களே …அந்த அட்டதிக்குப் பாலகர், கிங்கிணர், கிம்புருடர் தேவர்கள், ரிசிகள், அம்மி, அக்கினி எல்லாரையும் கூட்டி கிட்டு ‘ரஜிஸ்ட்டிரார் அப் பெர்த் ஆன்டு டெத் ஆபீசுக்குப் போயி, அறவாழி இறந்துட்டதா ஒரே ஒரு சர்ட்டிபிக்கட் வாங்கியாந்து கொடுத்துடுங்க.” 

சோர்விலும் சூடு இருந்தது முத்தையனார் சொற்களில். 

“யோவ்,நீ ரொம்பப் பேசுற! “அழகேசன் இதழோரம் எச்சில் வடிந்தது. 

“அறவாழி இருக்கான்யா’யா. அவன் அமரன்.” முத்தையனார் 

“செத்துப் போயும் சனங்க மனதி’ல வாழ்றவன்தான் அமரன் அழகேசன்”. 

“சாகாமலேயே செத்துப் போனதா கதைகட்டுற கூட்டத்துக்குச் சவாலா விளங்குறானே அவன் அமரனுக்கு அமரன்!”

எழுந்து நின்றார் முத்தையனார். 

குழுமியிருத்தோர் கலைந்தனர். 

குமரேசன் அருகே சென்று, “சம்மந்தியாரே, என்றைக்கு அமுதவல்லி, அவ கணவன் அறவாழி இறந்து போயிட்டதாச் சொல்றாளோ, அது வரையில அவசுமங்கலி தான். அதுக்கப்புறம் நீங்க எல்லாம் வந்து அறுத்துடுங்க. அதுக்கு இடையி’ல வாங்க போங்க… கதவு திறந்தே இருக்கும் … ” கண்கலங்கி நின்றார் முத்தையனார். 

செய்வதறியாது திரும்பி நடந்தார் குமரேசனார்.

முத்தையனார் வருகைக்காக மகப்பேறு மருத்துவர் சின்னம்மை இல்லத்தில் காத்திருந்தாள் அமுதவல்லி.

– அவன் (சிங்கப்பூரன் சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 1993, நிலவுப் பதிப்பகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *