மனந்திருந்தல்

 

அதிகாலை நேரம் பூக்களும் கதிரவனைக் கண்டதும் மகிழ்வோடு மலர்ந்தன, குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பூங்காவில் உடற்பயிற்சி, நடைப் பயிற்சி செய்துக் கொண்டிருந்தனர். அறிவு நடைப் பயிற்சிக்கு வந்தவன், அங்கிருந்த பெஞ்சில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல், எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தான்.

வளன் அவன் நண்பன், பலமுறை அழைத்தும் திரும்பாமல் அமர்ந்திருந்தான், வளன் அவன் அருகில் வந்து, “டேய் அறிவு, என்னடா ரொம்ப நேரமாக கூப்பிடுகிறேன், காது கேட்காதது போல் அமர்ந்திருக்கிறாய்” என்று அவன் தோளில் தட்டினான். வளன் தட்டிய பிறகுதான் சுய நினைவு வந்தவன் போல, அவனைப் பார்த்து முழித்தான்.

“டேய் அறிவு என்னடா முழிக்கிறே, உனக்கு என்ன ஆச்சுடா?, எப்பொழுதும் வந்ததும், நடைப்பயிற்சி செய்வே, ஆனால் இன்று என்ன ஆனது உன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்று, கூட தெரியாமல் அமர்ந்திருக்கே, என்னடா” என்றான் வளன்.

“ஒன்றுமில்லைடா, வீட்டுக்கு போகவே மனதில்லைடா, அங்கு போனாலே ஒரே சண்டை புலம்பலா இருக்கு, என் மனைவி வனிதா தினமும் அழுவதை பார்க்க முடியலடா, கடவுள் அவளுக்கு ஏன்? இப்படி ஒரு தண்டனையை கொடுக்கிறார் என்று தெரியவில்லை” என்றான்.

“என்னடா புரியும்படி சொல்லுடா, தங்கச்சி எதுக்குடா அழறாள், அவளுக்கு என்னடா ராசாத்தி மாதிரி இருக்காளேடா”

“எங்களுக்கு திருமணம் முடிந்து, மூன்று வருடங்கள் ஆனது, ஆனால் இதுவரை குழந்தை இல்லை, மருத்துவரிடம் சென்று இருவரும் பரிசோதித்துப் பார்த்தோம், இருவருக்கும் எந்தக் குறைபாடும் இல்லை, ஆரோக்கியமாகத்தான் இருக்கிறோம் என்று மருத்துவர் கூறினார்”

“சிகிச்சை எதுவும் தேவையில்லை, திருமணம் முடிந்து மூன்று வருடங்கள்தானே ஆகிறது, பொறுமையாக இருங்கள் சிலருக்கு கரு உருவாவதில் தாமதம் ஆகும்” என்றார்.

“பிறகு என்னடா அதான் பிரச்சினை இல்லையென்று சொல்லிவிட்டாரே அதற்கு ஏன் இப்படியிருக்கே”

“என் அம்மாதான் பிரச்சினையே, இதை நம்பவே மாட்டேங்கிறாங்க, வனிதாவை மலடி, குழந்தை பெற்றுக் கொள்ள தகுதியில்லாதவள் என்று, எப்பவும் அவளை ஏதாவது சொல்லிகிட்டே இருக்காங்க, தகாத வார்த்தைகளால் அவளை கொல்றாங்க, வீட்டுக்கு போனாலே அம்மாவின் புலம்பல்தான், அவளை விட்டு வேறு கல்யாணம் செய்துக் கொள் என்று நச்சரிப்பு தாங்கவில்லைடா”

“டேய் அறிவு நான் ஒன்று சொல்கிறேன் கேட்கறீயா, என்று கேட்டுவிட்டு அவனும் சொல்ல, “வளன் இது சரிபட்டு வருமாடா” என்றான் அறிவு, “முயற்சி செய்து பாரேன்” என்றான்.

வீட்டிற்குச் சென்றான், அங்கு வழக்கம் போல அம்மாவின் புலம்பல் கேட்டுக் கொண்டிருந்தது, “வனிதா நான் வெளியில் சென்று வருகிறேன்” என்றான் அறிவு.

“என்னங்க இன்று வேலைக்கு போகலியா, ரொம்ப அவசரமா எங்கே கிளம்பறீங்க” என்றாள் வனிதா.

“அதைவிட முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது, அது என்னவென்று முடித்துவிட்டு வந்து சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக கிளம்பினான்.

ஒரு மணி நேரம் கழித்து திரும்ப வந்தான், “டேய் அறிவு வேலைக்கு போகாம எங்கடா போயிட்டு வரே?, நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன், நீ எதற்கும் பதில் சொல்லாமல் இருக்கே, இவளை சீக்கிரம் தலை முழுகிட்டு, வேற கல்யாணம் செய்துக் கொள் என்கிறேன், அதையும் கேட்க மாட்டேங்குறே” என்றாள் அவள் அம்மா.
அவன் எதையும் காதில் வாங்காமல் பீரோவிலிருந்து கொஞ்சம் பணத்தையும் எடுத்து வைத்துக் கொண்டான், “அம்மா தலை முழுகத்தான் போகிறேன், ஆனால் அவளை இல்லை உன்னை தலை முழுக போறேன், உன்னுடைய உடைகள் எல்லாவற்றையும் ஒரு பையில் எடுத்து வைத்துக் கொள், வனிதா அம்மாவுக்கு உதவி செய்” என்றான்.

“என்னங்க அத்தையை எங்கே அழைத்துக் கொண்டு போறீங்க”

“முதியோர் இல்லத்துக்கு இனிமேல் அவள் அங்கதான் இருப்பால், நாம் மாதம் ஒரு முறை சென்று பார்த்துக் கொள்ளலாம்” என்றான்

“என்னங்க நீங்கள் செய்வது உங்களுக்கே நல்லாயிருக்கா, ஏன் இப்படி பண்றீங்க, வயதான காலத்தில் அத்தை எப்படி அங்கே இருப்பாங்க, வேண்டாம் சொன்னா கேளுங்க, நான் என் அம்மா வீட்டிற்கு போய்விடுகிறேன், அத்தை இங்கயே இருக்கட்டும்” என்றாள்.

அறிவின் அம்மா திகைப்புடன், “எல்லாம் நீ கொடுத்த யோசனைதானே, இப்போ ஒன்றும் தெரியாத மாதிரி, என் மேல் பரிவு காட்டுவது போல் நாடகம் ஆடறியா” என்றாள்.

“வனிதா நீ என்ன அக்கறையோடு செய்தாலும், அவள் புரிந்து கொள்ள மாட்டாள், அதனால் அவள் முதியோர் இல்லத்துக்கு போவதுதான் சரியானது, அப்பொழுதான் நாம் நிம்மதியாக குடும்பம் நடத்த முடியும், நான் சொல்வதை மட்டும் நீ செய்” என்றான்.

ஒளிமதி வரமாட்டேன் என்றாள், வனிதாவும் விடமாட்டேன் என்று சொல்ல, ஆனால் அவன் எதற்கும் அசையாமல், அவளை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு சென்று முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு வந்துவிட்டான்.

“வீட்டில் வனிதா அழுதுக் கொண்டிருந்தாள், எதுக்குங்க இப்படி செய்தீங்க, அத்தையை கூட்டிட்டு வந்துடுங்க, எல்லோரும் என்னைதான் சொல்வாங்க, தயவு செய்து கூட்டிட்டு வந்துடுங்க”, “அமைதியாக இரு வனிதா எல்லாம் உனக்காகதான்” என்று சொல்லிவிட்டு சென்றான்.

அறிவு முதியோர் இல்லத்தில் ஒளிமதியை, விட்டுவிட்டு வந்து பத்து நாட்கள் ஆனது. வனிதா பலமுறை கேட்டும் அழைத்துக் கொண்டு வரச் சொல்லியும் அறிவு எதற்கும் அசைவதாக இல்லை, நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல் நிம்மதியாக இரு என்று அவள் கேட்கும் போதெல்லாம் சொன்னான்.

முதியோர் இல்லத்தில் ஒளிமதி சரியாக சாப்பிடவுமில்லை, தூங்கவுமில்லை, வீட்டில் அவளுக்கு பிடித்த உணவுகளையே வனிதா செய்வாள், ஆனால் இங்கு அவர்கள் என்ன தருகிறார்களோ, அதைதான் சாப்பிட வேண்டும், வீட்டில் அவளுக்கென்று தனி அறை, கட்டில் என்று அனைத்துமே தனித்தனியாக உண்டு, இங்கும் தனிதான் ஆனால் அறை மட்டும் எல்லோருக்கும் ஒன்றுதான், நன்றாக சுகமாகவும் வசதியாகவும் இருந்து பழகியவளுக்கு இங்கே அவளால் முடியவில்லை, ஆனால் தனக்கு ஒரே மகன் அவனே இங்கு கொண்டு வந்துவிட்டான், அவனைவிட்டால் வேறு போக்கிடமும் இல்லை, என்ன செய்வதென்று தெரியாமல் தன் கண்களிலிருந்து வரும் கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தாள்.

முதியோர் இல்ல பொறுப்பாளர் ஒளிமதியை தினமும் கவனித்துக் கொண்டே இருந்தார். நாட்களும் வேகமாக நகரத் தொடங்கியது, ஒளிமதி முதியோர் இல்லத்திற்கு வந்து மாதம் ஒன்றாகியது, வந்த புதுதில் எல்லோரிடமும் நன்றாக பேசினாள் போக போக பேசுவதை நிறுத்திக் கொண்டாள், அவளுடன் இருக்கும் முதியோர்கள் அவள் தனியாக அமர்திருப்பதைக் கண்டு, எதற்காக யாருடனும் பேசாமல் இப்படி தனியாகவே இருக்கிறாய் என்று பலமுறை கேட்ட பிறகு தான், ஏன் இங்கு வந்தேன் என்பதை சொன்னாள்.

நான்தான் தவறு செய்துவிட்டேன், என் மகன் மருமகளின் மனதை புரிந்துக் கொள்ளவில்லை, எனக்கு வேண்டியதையெல்லாம் பார்த்து பார்த்துச் செய்தனர், ஆனால் நான் அதையெல்லாம் புரிந்து கொள்ளாமல், அவர்களுக்கு குழந்தை இல்லையென்பதை மட்டும் பெரிதாக்கி அவர்களுக்கு மிகவும் தொந்தரவு கொடுத்துவிட்டேன். நான் செய்த தவறுக்கு எனக்கு இது தேவைதான் என்று சொல்லி அழுதாள்.

ஒளிமதி பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பொறுப்பாளர், கைபேசியில் யாரிடமோ பேசினார். அவர் பேசிய ஒரு மணி நேரத்தில் அறிவு அங்கே வந்தான், அவனைக் கண்டதும் ஒளிமதி ஒன்றுமே பேசவில்லை, அமைதியாக இருந்தாள் அவன், “எப்படிம்மா இருக்கே” என்று கேட்டதற்கும் பதில் சொல்லவில்லை.

“உன்னை அழைத்துக் கொண்டு போகலாம் என்று வந்தேன். உன்னால்தான் வீட்டில் சண்டை என்று உன்னை இங்கு விட்டேன், ஆனால் நீ இல்லாமலும் சண்டைதான் நடக்கிறது, உன்னை அழைத்துக் கொண்டு வந்தே தீர வேண்டுமென்று வனிதா சண்டை போடுகிறாள்” என்றான்.

அறிவு பேசிய எதற்கும் அவள் பதில் சொல்லவில்லை, அவன் கூடவே வீட்டிற்கு வந்தாள், ஒளிமதியைக் கண்டதும் வனிதா, “அத்தே, நீங்கள் இங்கயே இருங்கள், நான் என் அம்மா வீட்டிற்கே செல்கிறேன்” என்றாள்.

“வேண்டாம் வனிதா, யாரும் எங்கேயும் போக வேண்டாம், நான் இனிமேல் எதுவும் கேட்கமாட்டேன், உங்களுக்கு குழந்தை பிறக்கும் போது பிறக்கட்டும், அப்படியே இல்லையென்றாலும் குழந்தைகள் காப்பகத்திலிருந்து குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம்” என்றாள் ஒளிமதி.

அவள் பேசுவதைக் கேட்ட வனிதா திகைத்துப் போய் நின்றாள், அத்தையா இப்படி பேசுவதென்று ஒன்றும் புரியாமல் முழித்தாள், அறிவு அவன் மனதில் நினைத்துக் கொண்டான், அவன் நண்பன் வளன் சொன்ன யோசனையின்படி நடத்திய நாடகம் சுமூகமாக முடிந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
கடம்பன், “கோயிலுக்குத் தங்கைகள் இருவரையும் கூட்டிச் செல்கிறேன்” என்று தன் தாய் வள்ளியிடம் கூறினான். “சரி பத்திரமாக கூட்டிட்டு போ சின்ன பிள்ளைகள் கவனமா இரு, நீ வர எவ்வளவு நேரமாகும்” என்றாள் வள்ளி. “அம்மா போக ஒரு மணி நேரம், வர ஒரு ...
மேலும் கதையை படிக்க...
சென்னை கிளைக்கு அஜய்யை மாற்றல் செய்திருந்தார்கள். இன்னும் பத்து வருடங்கள் சென்னை கிளையில்தான் வேலை பார்க்க வேண்டும். அதனால் குடும்பத்தை அழைத்து வருவதற்கு முன் வீடு பார்த்துவிட்டால், அவர்கள் வந்து குடியேறுவதற்கு வசதியாக இருக்கும் என்று வீடு பார்க்கத் தொடங்கினார். அஜய் வேலை ...
மேலும் கதையை படிக்க...
“அமுதா நம்ம வனஜாவோட அப்பா, நேற்று இரவு நெஞ்சுவலியில் இறந்துவிட்டாராம். நாளை காலை பத்து மணிக்கு அடக்கம் எடுக்காங்களாம், உன் நாத்தனார் அகல்யாவுக்கு, வனஜா தோழிதானே அதனால் அவளுக்கும் சொல்லிடு” “வள்ளி என்ன சொல்றே நல்லாதானே இருந்தார், எப்படி நெஞ்சுவலி வந்தது” “அவருக்கு குடிக்கும் ...
மேலும் கதையை படிக்க...
அசோக் தன் மனைவி அன்பரசியோடு சென்னை வந்து சேர்ந்தான். இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு வருடமே ஆகியிருந்தது, அன்பரசி ஆறு மாதம் கர்பிணியாக வேறு இருந்தாள், தனக்கு சொந்தமாக கடை இருக்கிறது, என் பெயரில் சொத்துக்கள் நிறைய இருக்கிறதென்று சொல்லி அன்பரசியை ...
மேலும் கதையை படிக்க...
செல்வி வெகுநேரமாக தனக்கு குழந்தை இல்லையே ஏன் என்ற சிந்தனையிலேயே இருந்தாள், இருவருக்கும் எல்லா மருத்துவரிடமும் போய் பார்த்தாச்சு, இருவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லிட்டாங்க, கல்யாணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது, பிறகு ஏன் எங்களுக்கு குழந்தை இல்லை. “செல்வி ...
மேலும் கதையை படிக்க...
காணவில்லை!
வாடகை வீடு
கண்ணீர்
ஆடம்பரம்
மருத்துவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)