மனந்திருந்தல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 5, 2020
பார்வையிட்டோர்: 4,822 
 

அதிகாலை நேரம் பூக்களும் கதிரவனைக் கண்டதும் மகிழ்வோடு மலர்ந்தன. குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பூங்காவில் உடற்பயிற்சி, நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அறிவு நடைப் பயிற்சிக்கு வந்தவன் அங்கிருந்த பெஞ்சில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கூடத் தெரியாமல். எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தான்.

வளன் அவன் நண்பன் பலமுறை அழைத்தும் திரும்பாமல் அமர்ந்திருந்தான். வளன் அவன் அருகில் வந்து, “அறிவு, என்ன? ரொம்ப நேரமா கூப்பிடுறேன். காது கேட்காதது போல் உட்கார்ந்திருக்க.” என்று அவன் தோளில் தட்டினான். வளன் தட்டிய பிறகுதான் சுய நினைவு வந்தவன் அவனைப் பார்த்து முழித்தான்.

“அறிவு, என்ன முழிக்கிற? உனக்கு என்ன ஆச்சு? எப்பொழுதும் வந்ததும் நடைப்பயிற்சி செய்வ. ஆனால், இன்னைக்கு என்ன ஆச்சு உன்னைச் சுற்றி என்ன? நடக்குன்னு கூடத் தெரியாம இருக்க.” என்றான் வளன்.

“ஒண்ணுமில்லை வீட்டுக்குப் போக மனசில்லை. அங்க போனா ஒரே சண்டை புலம்பலா இருக்கு. என் மனைவி வனிதா தினமும் அழறதைப் பார்க்க முடியலை. கடவுள் அவளுக்கு ஏன்? இப்படி ஒரு தண்டனையைக் கொடுக்கார்.” என்று புலம்பினான் அறிவு.

“என்ன அறிவு? ஏன் புலம்பற? புரியும்படி சொல்லு. தங்கச்சி எதுக்கு அழறா? அவளுக்கு என்ன? ராசாத்தி மாதிரி இருக்காளே.” என்றான் வளன்.

“எங்களுக்குக் கல்யாணம் முடிஞ்சு மூணு வருஷமாச்சு. ஆனால், இதுவரை குழந்தை இல்லை. டாக்டர்கிட்ட போய் ரெண்டு பேரும் பரிசோதிச்சுப் பார்த்துட்டோம். ரெண்டு பேருக்கும் எந்தக் குறையும் இல்லை ஆரோக்கியமா இருக்கீங்கன்னு டாக்டர் சொல்லிட்டார். சிகிச்சை எதுவும் வேண்டாம் கல்யாணம் முடிஞ்சு மூணு வருஷம்தானே ஆகுது. பொறுமையா இருங்க சிலருக்கு கரு உருவாகிறதில் தாமதம் ஆகும்னு சொன்னார்.” என்றான் அறிவு.

“பின்ன என்ன? அதான், பிரச்சினை இல்லைன்னு சொல்லிட்டாரே. அதுக்கு ஏன் இப்படியிருக்க?” என்று வளன் சந்தேகமாகக் கேட்க.

“என் அம்மாதான் பிரச்சினையே. இதை நம்பவே மாட்டேங்கிறாங்க. வனிதாவை மலடி குழந்தை பெற்றுக்கத் தகுதியில்லாதவன்னு அவளை ஏதாவது சொல்லிட்டே இருக்காங்க. தகாத வார்த்தையால் அவளைக் கொல்றாங்க. வீட்டுக்குப் போனாலே அம்மாவோட புலம்பல்தான். அவளை விட்டுட்டு வேற கல்யாணம் செய்துக்கச் சொல்லி நச்சரிப்பு தாங்கவில்லை வளன்.” அறிவு வேதனையோடு சொன்னான்.

“அறிவு, நான் ஒண்ணுச் சொல்றேன் கேட்கீயா?” என்று கேட்டுவிட்டு அவனும் சொல்ல, “வளன், இது சரிபட்டு வருமா?” என்றான் அறிவு. “முயற்சி செய்து பாரேன். இதனால், நல்லது நடந்தா நல்லதுதானே.” என்றான்.

அறிவு வீட்டிற்குச் செல்ல அங்கு வழக்கம் போல அவன் அம்மாவின் புலம்பல் கேட்டுக் கொண்டிருந்தது, “வனிதா, நான் வெளியில் போயிட்டு வரேன்.” என்றான் அறிவு.

“என்னங்க, இன்னைக்கு வேலைக்குப் போகலையா? ரொம்ப அவசரமா எங்க கிளம்பறீங்க?” என்று வனிதா பதற்றமாகக் கேட்டாள்.

“அதைவிட முக்கியமான வேலை ஒண்ணு இருக்கு. அதை என்னன்னு முடிச்சிட்டு வந்து சொல்றேன்.” என்று சொன்னவன் வேகமாகக் கிளம்பி வெளியில் சென்றான்.

அறிவு ஒரு மணி நேரம் கழித்துத் திரும்ப வந்தான். “அறிவு, வேலைக்குப் போகாம எங்க போயிட்டு வர?” என்று அறிவின் அம்மா கேட்க, “நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். நீ எதுக்கும் பதில் சொல்லாம இருக்க? இவளைச் சீக்கிரம் தலை முழுகிட்டு வேற கல்யாணம் செய்துக்கச் சொல்றேன் அதையும் கேட்க மாட்டேங்குற.” என்று அவர் பாடியப் பாட்டைப் பாடினார்.

அவன் எதையும் காதில் வாங்காமல் பீரோவிலிருந்து கொஞ்சம் பணத்தையும் எடுத்து வைத்துக் கொண்டான். “அம்மா, தலை முழுகத்தான் போறேன். ஆனால், வனிதாவை இல்லை. உங்களைத் தலை முழுகப் போறேன். உங்க டிரெஸ் எல்லாத்தையும் பையில் எடுத்து வச்சிக்கோங்க. வனிதா அம்மாக்கு உதவி செய்.” என்றான் அதிகாரமாக.

“என்னங்க, அத்தையை எங்க கூட்டிட்டுப் போறீங்க?” என்று வனிதா கேட்க.

“முதியோர் இல்லத்துக்கு. இனிமேல், அம்மா அங்கதான் இருப்பாங்க. நாம மாசத்தில் ஒரு நாள் போய்ப் பார்த்துட்டு வரலாம்.” என்றான் அறிவு.

“என்னங்க, நீங்க செய்றது உங்களுக்கே நல்லாயிருக்கா? ஏன் இப்படிப் பண்றீங்க? வயசான காலத்தில் அத்தை எப்படி அங்க இருப்பாங்க? வேண்டாம் சொன்னாக் கேளுங்க. நான் என் அம்மா வீட்டுக்குப் போறேன். அத்தை இங்கயே இருக்கட்டும்.” என்றாள் வனிதா அழுது கொண்டே.

“எல்லாம் நீ கொடுத்த யோசனைதானே. இப்போ ஒண்ணும் தெரியாத மாதிரி என் மேல பாசம் காட்டுற மாதிரி நாடகம் ஆடுறியா?” என்றார் அறிவின் அம்மா.

“வனிதா, நீ அக்கறையோடு செஞ்சாலும் புரிஞ்சிக்க மாட்டாங்க. அதனால், அம்மா முதியோர் இல்லத்துக்குப் போறதுதான் சரி. அப்பதான் நாம நிம்மதியா இருக்க முடியும். நான் சொல்றதை மட்டும் நீ செய்.” என்று கட்டளையாகச் சொன்னான்.

அறிவின் அம்மா வரமாட்டேன் என்றார். வனிதாவும் விடமாட்டேன் என்று அறிவை வழி மறித்து நின்றாள். ஆனால், அறிவு அவளைத் தள்ளிவிட்டு தன் அம்மாவை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு சென்று முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு வந்துவிட்டான்.

வீட்டில் வனிதா அழுது கொண்டே இருக்க, “எதுக்குங்க இப்படிச் செஞ்சீங்க? அத்தையைக் கூட்டிட்டு வந்திருங்க. எல்லோரும் என்னைதான் சொல்வாங்க. தயவு செஞ்சு கூட்டிட்டு வந்திருங்க. அத்தை பாவம் அங்க எப்படி இருப்பாங்க?” என்று அறிவை நச்சரிக்கத் தொடங்கினாள்.

அறிவுக்கும் கோபம் அதிகமாக, “அமைதியா இரு வனிதா. எல்லாம் உனக்காகதான்.” என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றான்.

அறிவு முதியோர் இல்லத்தில் அவன் அம்மாவை விட்டு விட்டு வந்து பத்து நாட்கள் ஆனது. வனிதா பலமுறை கேட்டும் அழைத்துக் கொண்டு வரச் சொல்லியும் அறிவு எதற்கும் அசைவதாக இல்லை. “நீ எதைப் பற்றியும் கவலைப்படாம நிம்மதியா இரு.” என்று அவள் கேட்கும் போதெல்லாம் சொன்னான்.

முதியோர் இல்லத்தில் ஒளிமதி சரியாகச் சாப்பிடலை, தூங்கலை. வீட்டில் அவளுக்குப் பிடித்த உணவையே வனிதா செய்வாள். ஆனால், இங்கு அவர்கள் என்ன தருகிறார்களோ அதைதான் சாப்பிட வேண்டும்.

வீட்டில் அவளுக்கென்று தனி அறை, கட்டில் என்று அனைத்துமே தனித்தனியாக உண்டு. இங்கும் தனித்தனிதான் ஆனால், அறை மட்டும் எல்லோருக்கும் ஒன்றுதான். நன்றாகச் சுகமாகவும் வசதியாகவும் இருந்து பழகியவருக்கு இங்கு இருக்க முடியவில்லை.

ஆனால், தனக்கு ஒரே மகன் அவனே இங்குக் கொண்டு வந்துவிட்டானே அவனைவிட்டால் வேறு போக்கிடமும் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தன் கண்களிலிருந்து வரும் கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தார்.

முதியோர் இல்லப் பொறுப்பாளர் அவரைத் தினமும் கவனித்துக் கொண்டே இருந்தார். நாட்களும் வேகமாக நகரத் தொடங்கியது. முதியோர் இல்லத்திற்கு வந்து மாதம் ஒன்றாகியது. வந்த புதுதில் எல்லோரிடமும் நன்றாகப் பேசினார். போகப் போகப் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

அவருடன் இருக்கும் முதியோர்கள் தனியாக அமர்திருப்பதைக் கண்டு, “எதுக்கு யார்கிட்டயும் பேசாமத் தனியா இருக்கீங்க? இங்க எதுக்கு வந்தீங்க?” என்று பலமுறை கேட்ட பிறகு தான் ஏன் இங்கு வந்தேன் என்பதைச் சொன்னார்.

“நான்தான் தப்புச் செஞ்சிட்டேன். என் மகன் மருமக மனசை புரிஞ்சிக்கலை. எனக்கு எல்லாம் பார்த்துப் பார்த்துச் செஞ்சாங்க. ஆனால், நான் அதைப் புரிஞ்சிக்காம அவளுக்குக் குழந்தை இல்லைன்னு கொடுமை படுத்திட்டேன். நான் செஞ்ச தப்புக்கு இது தேவைதான்.” என்று சொல்லி அழுதார்.

அவர் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பொறுப்பாளர் கைபேசியில் யாரிடமோ பேசினார். அவர் பேசிய ஒரு மணி நேரத்தில் அறிவு அங்கே வந்தான். அவனைக் கண்டதும் ஒன்றுமே பேசவில்லை அமைதியாக இருந்தாள். “எப்படிம்மா இருக்கீங்க?” என்று கேட்டதற்கும் பதில் சொல்லவில்லை.

“உங்களைக் கூட்டிட்டுப் போகலாம்னு வந்தேன். உங்களால்தான் வீட்டில் சண்டைனு இங்க விட்டேன். ஆனால், நீங்க இல்லாமலும் சண்டைதான் நடக்கு. உங்களைக் கூட்டிட்டு வந்தே தீரனும்னு வனிதா சண்டை போடுகிறா.” என்றான் அறிவு பரிதாபமாக.

அறிவு பேசிய எதற்கும் அவள் பதில் சொல்லவில்லை. அவன் கூடவே வீட்டிற்கு வந்தார். தன் மாமியாரைக் கண்டதும் வனிதா, “அத்த, நீங்க இங்கயே இருங்க. நான் என் அம்மா வீட்டுக்குப் போறேன்.” என்று தான் ஏற்கனவே தயாராக வைத்திருந்த பெட்டிப் பைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

“வேண்டாம் வனிதா. யாரும் எங்கேயும் போக வேண்டாம். நான் இனிமேல் எதுவும் கேட்கமாட்டேன். உங்களுக்குக் குழந்தை பிறக்கும் போது பிறக்கட்டும். அப்படியே இல்லைன்னா கூடக் குழந்தைகள் காப்பகத்திலிருந்து குழந்தையைத் தத்தெடுத்துக்கலாம்.” என்றார்.

அவர் பேசுவதைக் கேட்ட வனிதா திகைத்துப் போய் நின்றாள். அத்தையா இப்படிப் பேசுவது ஒன்றும் புரியாமல் முழித்தாள். அறிவு அவன் மனதில் நினைத்துக் கொண்டான். அவன் நண்பன் வளன் சொன்ன யோசனையின்படி நடத்திய நாடகம் சுமூகமாக முடிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *