Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மகள்களின் சம்மதம்

 

(இதற்கு முந்தைய ‘மாமியார் வீட்டிற்கு விஜயம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

இதற்கிடையே வராத மாப்பிள்ளை வந்திருக்கிறார் என்றதும் வீட்டு அடுப்புகள் சுறு சுறுப்பாக எரியத் தொடங்கி இருந்தன. பேச்சு சுவாரசியமாகப் போய்க் கொண்டிருந்தபோதே, ஒரு சட்டி மலைப் பூண்டு உரித்துப் போடப்பட்ட ரங்கூன் மொச்சைப் பயிறுக் குழம்பின் வாசனை கம கமவென தேடி வந்து சபரிநாதனை ஒரு உசுப்பு உசுப்பியது.

ஒரு நிமிஷம் பேச்சு மூச்சில்லாமல் ஆடிப் போய்விட்டார். இந்தக் குழம்பை மரகதம் செய்தாலும் அப்படியே இந்த வாசனைதான் வரும்! நெஞ்சு விரிய குழம்பு வாசனையை சுவாசித்த சபரிநாதன், பக்குவமாக வந்த விஷயத்தைப் போட்டு உடைத்து விட்டார். அவ்வளவுதான்.. ‘கர்த்தர் இல்லம்’ கப்சிப் என்றாகிவிட்டது. யாரும் யாருடைய முகத்தையும் பார்க்கவில்லை. யாரும் யாரோடும் பேசிக் கொள்ளவில்லை.

நேரம் பார்த்து சபரிநாதனின் சின்ன மச்சான் மெதுவாக இடத்தை விட்டு நழுவிக் கொண்டார். மூன்றாவது மச்சானும் வெளியே ஜோலி இருப்பதாகச் சொல்லி நடையைக் கட்டிவிட்டார். சுருக்கமாகச் சொன்னால் கர்த்தர் இல்லத்தில் சபரிநாதன் மிச்ச நேரம் பூராவும் வேண்டாத விருந்தாளி போலத்தான் இருந்தார். எவ்வளவு நேரம்தான் இருப்பது? “நேரமாச்சி, கெளம்பறேன்” என்று எழுந்து கொண்டபோது மாமியார், “மரகதத்தை என்னால் மறக்கவே முடியலை” என்று சொல்லி கண்களை துடைத்துக் கொண்டாள். மற்றவர்களும் “எங்களுக்கும் மரகதக்கா செத்துட்ட மாதிரியே இல்லை. திம்மராஜபுரத்துல உசிரோட இருக்கிற மாதிரிதான் இருக்கு” என்றார்கள். அவர்கள் சொல்லாமல் சொன்னது – மரகதத்தை அவர்தான் மறந்துவிட்டார் என்பது.

கர்த்தர் இல்லத்திலிருந்து வெளியேறி நடந்த சபரிநாதனின் நடை, ஆளும் கட்சியில் சரியான வரவேற்புக் கிடைக்காமல் நொந்துபோன அரசியல்வாதியின் பாவப்பட்ட நடையாக இருந்தது. ‘இனிமே இங்கே யார் வரப் போகிறார்கள்?’ என்று மனதை சமாதானம் செய்துகொண்டார். இனி ‘கர்த்தர் இல்லம்’ அவரின் மகள்களுக்கு வேண்டுமானால் அம்மாவைப் பெத்த ஆச்சி வீடாக இருக்கலாம். ஆனால் அவருக்கு அது இனி மாமியார் வீடு இல்லை…!

பஸ் பிடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்தார். மறுநாள் காலையில் அடுத்ததாக சபரிநாதன் பெங்களூரில் இருக்கும் மூத்த மகள் புவனாவுடன் மொபைலில் தொடர்பு கொண்டார்.

“அப்பா”

“புவன்… எப்படிடா இருக்கே?”

“நல்லா இருக்கேன்பா. எதுவும் விசேஷமாப்பா?”

“மாப்பிள்ளை எப்படி இருக்கார்?”

“நல்லாயிருக்கார்ப்பா… நீங்க எப்படிப்பா இருக்கீங்க?”

“ஏதோ இருக்கேன் தாயி…”

“ஒடம்புக்கு ஒண்ணுமில்லையேப்பா?”

“ஒடம்பே சரியில்லை தாயி. வயித்துக் கோளாறு.”

“பாலக்காடு அண்ணாச்சி சமையல் வயித்துக்கு கெடுதல் எதுவும் செய்யாதேப்பா…”

“அவன் வேலையை விட்டு ஓடிப்போய் அது ஆயிப்போச்சி ரெண்டு மாசம்.”

“அச்சச்சோ அப்ப சாப்பாட்டுக்கு என்னப்பா பண்றீங்க?”

“தாளந்தான்.”

“இங்க எங்களோட வந்து இருங்கன்னு சொன்னா கேக்க மாட்றீங்க.”

புவனா அலுத்துக்கொண்டாள். சபரிநாதனுக்கு எரிச்சல் வந்தது. ‘பாதகத்தி இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கங்கப்பா’ன்னு சொல்வேனா என்கிறாளே!

“அங்கல்லாம் என்னால வந்து இருக்க முடியாது தாயி.”

“வேற என்னதான் செய்வீங்க இந்த வயசான காலத்துல?”

“பிரியத்துல நீதான் எனக்கு வயசாயிட்டதா சொல்ற. எனக்கு அப்படித் தோணல.”

புவனாவுக்கு குழப்பமாக இருந்தது. என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அம்மா செத்துப்போனபோது வயசான காலத்தில் என்னை இப்படி விட்டுட்டுப் போயிட்டாளே என்று அழுது புலம்பியவர் இதே அப்பாதான். அவர் இப்போது சொல்கிறார் வயசான மாதிரி தோணலைன்னு. அதுவும் அம்மா செத்து ஐந்தாறு வருஷம் கழித்து…

“சமையலுக்கு புதுசா ஒருத்தரும் வரலையாப்பா?”

“ஒரு பய வரமாட்டேங்கான் புவன்… சம்பளம் ரெண்டாயிரம்ன்னு கூட சொல்லிப் பாத்தாச்சி.”

“என்னதான் செய்யப் போறீங்களோ?”

“ஒருவேளை சாப்பாட்டுக்கு இந்தப் பாடு.”

“சொல்லாதீங்கப்பா அழுகையா வருது எனக்கு!”

“சாப்பாடுன்னு மாத்திரம் இல்லை புவன். இனிமே என்னால ஒத்தேல கெடந்து சாக முடியாது. தனிமைவேறு என்னைக் கொல்லுது. நல்லா ஒரு மாசமா யோசனை பண்ணிப் பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்.”

“என்னப்பா முடிவு?”

சபரிநாதன் அவருடைய முடிவைச் சொன்னார்.

பதிலுக்கு புவனாவிடமிருந்து பேச்சு மூச்சைக் காணோம்! சபரிநாதனுக்கு வழக்கம் போல கோபம்தான் வந்தது. ‘இதப் பார்றா. வாயைத் தொறக்காம அம்மி முழுங்கினவ மாதிரி இருக்கிறதை’ என்று மனசுக்குள் கொதித்தார். ‘கர்த்தர் இல்லம்’ ரத்தம் புவனாவின் உடம்பிலும் கொஞ்சம் ஓடத்தானே செய்கிறது.. அதுதான் இந்த ‘கப்சிப்’…!

நிஜமாகவே புவனா அப்பாவிடமிருந்து இந்தப் பந்தை எதிர் பார்க்காததால் பந்தை எப்படி எதிர் கொள்வதென்று தெரியவில்லை அவளுக்கு! சபரிநாதன் அடுத்த பந்தை வீசினார்.

“அப்பா இன்னொரு கல்யாணம் செய்துகிட்டா ஒனக்கோ மாப்பிள்ளைக்கோ ஆட்சேபணை ஏதாவது உண்டா தாயி?”

“எங்களுக்கு என்னப்பா ஆட்சேபணை?”

“கேட்டுக்கிறது நல்லது தாயி. நாளைக்கு எனக்குத் தெரியாது ஒனக்குத் தெரியாதுன்னு சொல்லிரக் கூடாது பாரு!”

“அப்படியெல்லாம் சொல்லிர மாட்டோம்பா.”

“வேற வழி தெரியல எனக்கு.”

“ஒங்க சந்தோஷம்தாம்ப்பா எங்க சந்தோஷம்” சொல்லும்போதே புவனாவின் கண்களில் கண்ணீர் முட்டியது.

“பெண் பாத்து முடிவானதும் திருப்பியும் போன் பண்றேன் தாயி.”

“ஒடம்பப் பாத்துக்கோங்கப்பா.”

“பிள்ளைங்க ஸ்கூலுக்குப் போயாச்சா?”

“உங்க பேத்தி போயாச்சு. பேரனுக்கு லேசா ஜலதோஷம். அதான் வீட்ல இருக்கான்.”

“அவனை பேசச் சொல்லேன்.”

பேசிய பேரனிடம் சீக்கிரமே அவனுக்கு ‘சின்னப் பாட்டி’ வரப்போவதாகச் சொன்னார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு மறுபடியும் புவனாவிடம் பேசிவிட்டு அப்பாடா என்று போனை கட் செய்தார். பெங்களூர் ஓட்டு கிடைத்துவிட்டது. அடுத்து ஹைதராபாத் ஓட்டைக் கேட்க வேண்டும்.

கேட்காமலேயே ‘எங்க ஓட்டு சபரிநாதனுக்கே’ என்று சொன்ன முத்தையா-கோமதி குடும்பம் ரொம்ப உசந்த குடும்பமாக சபரிநாதனுக்குத் தோன்றியது.

சற்று நேரத்தில் அடுத்ததாக அவர் இரண்டாவது பெண் சுகுணாவிற்கு மொபைலில் முயற்சித்தார். ஆனால் அவளுடைய மொபைல் வெகு நேரத்திற்கு வேறொரு தொடர்பில் இருந்தது.

ஏனென்றால் புவனாவால் அவசரப்படாமல் இருக்க முடியவில்லை. ஹைஹராபாத்தில் இருக்கும் தங்கச்சி சுகுணாவுடன் உடனே தொடர்பு கொண்டு பேசினாள்.

“என்னக்கா?”

“அப்பா ஒனக்கு போன் பண்ணினாங்களா சுகு?”

“இல்லியே. ஏன் ஒனக்குப் பண்ணாங்களா?”

“ஆமாம். இப்பத்தான் பண்ணினாங்க. அப்பா இன்னொரு கல்யாணம் செய்துக்கப் போறாராம் சுகு.”

சபரிநாதன் சொன்ன விபரங்களை புவனா சுகுணாவிடம் அப்படியே ஒரு வார்த்தை விடாமல் சொன்னாள். அதைக் கேட்டுக்கொண்டே உறங்கிக் கொண்டிருக்கும் தன் மகனைப் பார்த்தாள் சுகுணா. மகனுக்கு அப்படியே தாத்தாவின் மேட்டு விழிகள்!

“நீ என்னக்கா சொன்ன?”

“சரின்னுட்டேன். வேற என்னத்தை சுகு நான் சொல்ல முடியும்?”

“என் வீட்டுக்காரரு இதைக் கேட்டா கெடந்து குதிப்பார்… சும்மாவே அப்பாவோட தோட்டத்தையும், தோப்பையும் வித்துப் பங்கை பிரிச்சு தரச் சொல்லுன்னு என்னைப்போட்டு அடிக்கடி நச்சரிச்சுக்கிட்டு கெடக்காரு. அக்கா, நீ அப்பாவை இன்னொரு கல்யாணம் செய்துக்க வேண்டாம்னு சொல்லுக்கா.”

“ஏன் நீ சொல்லேன்.”

“என்னால முடியாது.”

“என்னாலயும் முடியாது சுகு.”

அக்காவும் தங்கச்சியும் மாற்றி மாற்றி ஆதங்கத்தோடும் ஆற்றாமையோடும் பேசிப்பேசி; பிறகு என்ன செய்வதென்று தெரியாமலேயே குழப்பத்தில் தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டார்கள்.

அடுத்த சில நிமிடங்களில், சபரிநாதன் போன் பண்ணிப் பேசியபோது “ஒங்க சந்தோஷம்தான்பா எங்க சந்தோஷம்” என்பதற்கு மேல் சுகுணாவால் வேறு எதுவும் சொல்ல முடியவில்லை. ஏதோ ஒரு துக்கம் வந்து நெஞ்சை அடைத்தது. அம்மா இருந்த இடத்திற்கு புதுசாக ஒரு மனுஷி வரப்போவதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இனி அவர்களின் திம்மராஜபுரம் வீட்டிற்கு இயல்பாகப் போய் வரமுடியுமா என்று நினைத்தபோதே கண்களில் நீர் தளும்பியது. பொங்கிய மனசுடன் உடனே கோவில்பட்டி ஆச்சிக்கு மொபைலில் போன்செய்தாள்.

ஆனால் அந்தப் போன் சர்வீஸில் இல்லை என்கிற பதிவு செய்யப்பட்ட குரல்தான் ஒலித்தது… 

தொடர்புடைய சிறுகதைகள்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் சிங்கப்பூர்-சென்னை விமானம் புறப்படத் தயாரானது. ஏர்ஹோஸ்டஸ் பக்கத்துக்கு ஒருவராக நின்று கொண்டு ஆக்ஸிஜனுக்கு அழகாக அபிநயிக்க, விமானம் ரன்வேயில் மெல்ல ஊர்ந்தது. ரகுராமன் சற்றுத் தளர்வாக அமர்ந்து கொண்டான். சென்னையை அடைந்தவுடன் அவன் நெல்லை எக்ஸ்பிரஸில் திருநெல்வேலி செல்ல வேண்டும். பெற்றோர்களையும், ...
மேலும் கதையை படிக்க...
முதலிரவு அறை. கட்டிலில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் அமுதா. கதவு திறக்கப்பட சட்டென்று கண்களை துடைத்துக் கொண்டாள். அவளுடைய கணவன் பெருமாள் அருகில் வந்து அமர்ந்தான். “இன்னும் அழுதுகிட்டுதான் இருக்கியா அமுதா? என் மேல உனக்கு இன்னமும் நம்பிக்கை வரல... அப்படித்தானே?” “அப்படீல்லாம் இல்லீங்க மாமா...” பெருமாள் அவள் கண்ணீரைத் ...
மேலும் கதையை படிக்க...
அவள் பெயர் தீபிகா ப்ரான்சிஸ். வயது இருபது. தினமும் காலை நான்கு மணிக்கே எழுந்து, பக்க வாதத்தால் பாதிக்கப் பட்டிருக்கும் வயதான தன் தந்தையைப் பல் தேய்க்கவைத்து, இதமான வெந்நீரில் குளிப்பாட்டிவிட்டு, காப்பி போட்டுக் கொடுத்துவிட்டு, கடைசியாக அவருக்கான காலை உணவையும் தயார்செய்து ...
மேலும் கதையை படிக்க...
அன்று அவன் மிகவும் சந்தோஷமாக இருந்தான். காரணம், அவனது சிறுகதையொன்று நான்கு பக்க அளவில் ஆனந்த விகடன் வார இதழில் பிரசுரமாகியிருந்ததுதான். ஏற்கனவே அவனது படைப்புகள் அவ்வப்போது அங்கீகரிக்கப்பட்டு பிரசுரமாகி இருப்பினும், அவனுடைய இந்த பிரத்தியேக சந்தோஷத்திற்கு காரணம், சுமதியுடன் பரிச்சயமான ...
மேலும் கதையை படிக்க...
கலிபோர்னியாவில் இருந்த ராம்குமாருக்கு, அவனுடைய மயிலாப்பூர் வீடு முற்றிலுமாக வழித்து துடைத்து கொள்ளையடிக்கப்பட்ட செய்தி கிடைத்ததும் துடித்துப்போனான். அடுத்து என்ன செய்வதென்றே அவனுக்குப் புரியவில்லை. கம்பெனியின் ஒரு ப்ராஜக்ட் விஷயமாக கலிபோர்னியா வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் இருபதுநாட்கள் இங்கேயே தங்கி ...
மேலும் கதையை படிக்க...
தாக்கம்
மனைவியே குடும்பம்
ஓடு விரைந்து ஓடு
கண நேர மீட்சிகள்
அறிவுஜீவிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)