Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

காதல்

 

தஞ்சாவூரில் உள்ள ஒரு மருந்து விநியோகநிறுவனத்தில் வேலைசெய்வதால் என்னுடைய
முக்கியப்பணியே ஊரில் உள்ள அனைத்து மருந்து கடைகளுக்கும் சென்று ஆர்டர் எடுப்பதுதான்.

அன்று வழக்கம்போல் நான் அந்த மருந்துக்கடைக்குச் சென்றபோது வாசுதேவன் என்னைப்பார்த்து புன்னகைத்துவிட்டுக் கிளம்பினார்.

“என்ன இந்த ஆளு…ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கடையில மருந்து வாங்கிட்டு திரியிறாரு? எல்லா கடையிலயும் கடன் சொல்லிட்டுப் போறாரோ?” என்று நான் சாதாரணமாகத்தான் கேட்டேன்.

“டேய் ராமமூர்த்தி…உடம்பு வலியால ராத்திரிஎல்லாம் தூங்கமுடியலை.நாங்க வலிதாங்காம கத்திகிட்டு இருக்குறதால மத்தவங்களுக்கும் தூக்கம் கெடுது.என்னால அடிக்கடி கடைக்கு வந்து மாத்திரை வாங்க முடியாது.அதனால பத்து மாத்திரை சேர்த்துக் குடு தம்பின்னு கேட்டாரு.நானும் நம்பிட்டேன்.

ஆனா இவரு ஊர்ல இருக்குற கடை எல்லாத்துலயும் ஏறி இறங்குறாருன்னு நீ சொல்றதைப் பார்த்தா, தற்கொலை செஞ்சுக்க ஏற்பாடு பண்ணிகிட்டு இருக்குற மாதிரியில்ல தெரியுது.உனக்குத் தெரிஞ்ச ஆளா இருந்தா ஏதாவது புத்திமதி சொல்லி அந்த மாத்திரைகளைப் பிடுங்கி வீசுற வழியைப் பாரு.

இது பாட்டுக்கு நிம்மதியா போய் சேர்ந்துடும்.என் கெட்ட நேரம் அங்க தொட்டு இங்க தொட்டு விசாரணைன்னு போலீஸ் இங்க வந்ததுன்னு வையி…நான் மாமூல் கொடுத்தே கடையை மூடிட வேண்டியதுதான்.” என்று குமார் அலறாத குறையாக பதறினான்.

குமாருடைய பேச்சு எப்போதுமே விளையாட்டாகத்தான் இருக்கும். ஆனால் இப்படி படபடப்புடன் தகவல் சொன்னால் அது உடனடியாக கவனிக்க வேண்டிய விஷ¬யம்தான்.

நேற்றுதான் அவரை, பெரியகோயிலுக்கு அருகில் இருந்த மெடிக்கலில் பார்த்தேன்.

“பிரதோ¬ஷத்துக்காக வந்தேன்.அப்படியே மருந்தையும் வாங்கிட்டுப்போயிடலாம்னு…” என்று சிரித்துவிட்டுச் சென்றார்.

அந்தக் கடை முதலாளி,“அவரு உனக்கும் பழக்கமா?…மன நிம்மதிக்காக பிரதோ¬ஷ தரிசனம், நிம்மதியான தூக்கத்துக்காக மாத்திரை கொள்முதல்… வயசாயிட்டாலே இதெல்லாம் சகஜமோ…” என்று சொல்லிவிட்டு அவருடைய வேலையைக் கவனித்தார்.

அப்போது இதை நானும் பெரிய வி¬ஷயமாக எடுத்துக் கொள்ள வில்லை. இன்று குமாருடைய மெடிக்கலிலும் அவர் தூக்க மாத்திரைகளை வாங்கிச்சென்றதை அறிந்ததும் என் மனதுக்குள் சந்தேகம் அழுத்தமானது.

****

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டு தஞ்சாவூரில் ஒரு வீட்டுத் திண்ணையில் தொடங்கப் பட்டதுதான் வாசுதேவன் மெஸ். சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய தஞ்சை நகர மக்கள் வாசுதேவன்,அவர் மனைவி பத்மா இருவரது கைப்பக்குவத்தில் உருவான உணவின் ருசியையும் அனுபவித்து மகிழ்ந்தார்கள்.

தஞ்சாவூருக்குச் சென்ற யாருக்கும் வாசுதேவன் மெஸ் பற்றி தெரியாமல் இருக்காது என்ற அளவில் புகழ்பெற்று பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது.

தஞ்சைக்குப் பெருமை சேர்த்த ராஜராஜனின் பிறந்த தினமான சதய நட்சத்திர நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படாத காலத்தில் கூட வாசுதேவன் தன்னுடைய உணவு விடுதியில் அன்னதானம் செய்வார்.பலரது பசியையும் போக்கி வயிறுடன் மனதையும் நிறையச்செய்த வாசுதேவனைப் பற்றி தஞ்சை நகரத்தில் பேசாதவர் இல்லை.

என்னுடைய தாத்தா முதல் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் வரை வாசுதேவனின் குணத்தைப் பற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள். தான தர்மம் செய்வதைக்காட்டிலும் தொழிலில் அவர் காட்டும் ஈடுபாடுதான் அனைவரையும் அதிகஅளவில் பிரமிப்பில் ஆழ்த்தி யிருப்பதாக எனக்குத் தோன்றியது.

எங்கள் கல்லூரிப் பேராசிரியரின் தங்கைக்குத் திருமணம்.இரண்டாயிரம் பேர் வருவார்கள் என்று கணக்கிட்டு மதிய உணவு தயாரித்திருக்கிறார்கள்.ஆனால் முகூர்த்த நேரம் நெருங்கியபோதே கூடியிருந்தவர்கள் எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்து விட்டது.

மகளைத் தாரைவார்த்துக்கொடுக்க தயாராகிக்கொண்டிருந்த பேராசிரியரின் தந்தை செல்வகணபதியிடம் சென்ற வாசுதேவன், “அய்யா…எப்படியும் ரெண்டாயிரம்பேர் கூடுதலா வர வாய்ப்பு இருக்கு.” என்று சொன்னதும் செல்வகணபதியின் முகம் இருண்டிருக்கிறது.

“அய்யா…உங்களைப் பயமுறுத்துறதுக்காக இதை நான் சொல்லலை.யாரும் சாப்பிடுறதுக்கு முன்னால கிளம்பாம பார்த்துக்குங்க.முதல் பந்தியில இருக்குற எல்லா வகை பதார்த்தமும் கடைசி பந்தி வரை இருக்குற மாதிரி கூடுதலா தயார் செய்யுறது என் பொறுப்பு.

இலை எண்ணிக்கையை கவனிச்சுக்குறதுக்கு உங்க சார்பா யாரையாச்சும் அனுப்பி வையுங்க.உங்க சொந்தக்காரங்களுக்கு நம்பிக்கை வரணும் இல்லையா…” என்ற வாசுதேவன் கிடுகிடுவென சமையல்கூடத்துக்குச் சென்றுவிட்டாராம்.

கூடுதல் சமையலுக்கு பெண்வீட்டிலிருந்து பணம் கிடைக்குமா கிடைக்காதா என்றெல்லாம் அவர் யோசித்துக்கொண்டிருக்கவில்லை.அவருடைய ஒரே நோக்கம், அந்த திருமணத்திற்கு வந்தவர்கள் சாப்பிடாமல் செல்லக்கூடாது. அடுத்தடுத்த பந்திகளில் சாப்பிட அமர்ந்தவர்கள் முதல் பந்தியில் இருந்த பல பதார்த்தங்களைக் காணவில்லை என்றும் சொல்லக்கூடாது.அவ்வளவுதான்.

இந்த ஒரு வி¬ஷயத்துலேர்ந்து அவர் மேல எனக்கு அவ்வளவு மரியாதை.என்று எங்கள் பேராசிரியர் சொன்னபோது எங்கள் அனைவருக்கும் வியப்பாகத்தான் இருந்தது.

இப்படி ஊருக்கே பசியாற்றியவர் சரியான உணவு கிடைக்காமல் மெலிந்துகொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரிந்ததும் முதலில் அய்யோ…பாவம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் நிலைமை தூக்க மாத்திரை அளவில் வந்திருப்பது தெரிந்ததும் என்னால் வேலையில் கவனம் வைக்கமுடியவில்லை.

பொதுவாக வயதாகிவிட்டால் வீட்டில் சும்மா இருக்க முடியாமல் எதையாவது சொல்லி திட்டிக்கொண்டே இருப்பதும் அவர்களின் வாரிசுகள் பதிலுக்கு இவர்களைத் திட்டுவதும் பெரும்பாலான இடங்களில் நடக்கும் விஷ¬யம்தான் என்பதால் இதைப் பற்றி யோசிக்கவில்லை.

வாசுதேவனின் மகள் திருமணமாகி கோயம்புத்தூரில் இருக்கிறார்.

அவர் அழைத்ததற்கு,“இரண்டு மகன்கள் இருக்கும்போது மகள் வீட்டில் சென்று செத்தால் பிள்ளைகளின் கவுரவம் போய்விடும். அதனால் எங்களுக்கு எது நடந்தாலும் இங்கேயே நடக்கவேண்டும்.” என்று வாசுதேவனும் அவர் மனைவியும் உறுதியாக இருந்தார்கள்.

இதைக் கேட்டதும் உங்களைத் திருத்தவும் முடியாது.நீங்க அவதிப்பட்டு சாகுறதைத் தடுக்க ஆண்டவனாலயும் முடியாது”ன்னு நானே நினைச்சிருக்கேன்.

வாசுதேவன் வீடு இருந்த தெருவுலேயே நாங்களும் கடந்த ரெண்டு வரு¬மா குடியிருக்கோம்.அதனால என் அம்மா மூலமா தெரிஞ்ச தகவல்கள்தான் இவை.

இவ்வளவு சம்பாதித்து மகன்களை நல்ல நிலையில் வைத்த வாசுதேவன் இப்படி சாப்பாட்டுக்கு வழியில்லாம அவதிப்படுறதுக்கு அவரும் அவர் மனைவியும் வாய்த்துடுக்கா பேசுறதுதானே காரணமா இருக்க முடியும்னு என் மனசுக்குத் தோணுச்சு. அதை வெளிக்காட்டிக்காம,இவ்வளவு தூக்க மாத்திரை எதுக்குங்க என்று கேட்டேன்.

எனக்கு எல்லா வி¬ஷயமும் தெரிந்து விட்டது என்பதை உணர்ந்த அவர் தன் மனதில் இருந்த ஆதங்கத்தைக் கொட்டினார்.

“தம்பி…இப்போ நீ மூவாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு எவ்வளவு கஷ்டப்படுறன்னு உனக்கு நல்லாவே தெரியும்.இந்த வேலையில நீ எவ்வளவுதான் சிரமப்பட்டாலும் சம்பளம் நிச்சயமா கிடைச்சிடும். ஆனா நான் மெஸ் ஆரம்பிச்ச காலத்துல இதை விட கடுமையா உழைக்க வேண்டியிருந்தது.ஆனா இலாபம்னுங்குறது நிச்சயமில்லை.அதுதான் சொந்த தொழிலுக்கும் வேற வேலைக்குப் போறதுக்கும் உள்ள வித்தியாசம்.இந்த ஆபத்தை உணர்ந்து எதிர்நீச்சல் போட்டதாலதான் நான் நேசிச்ச ஹோட்டல் தொழில் எங்களுக்கு படிப்படியா வருமானத்தை அள்ளிக்கொடுத்தது.

இந்தப் பணத்தை என் மகன்கள் அவங்க வசதிக்கு பயன்படுத்திக்கிறாங்க.அது கூட பரவாயில்லை.ஆனா நான் உழைச்ச காலத்துல வருமானத்துல ஒரு பகுதியை மற்றவங்களுக்கு உதவி செய்யுறதுக்காக ஒதுக்கி செலவழிச்சேன்.இவங்க அதை செய்யுறது இல்லை.ஆனா என்னோட மருமகளுங்க அவங்க பிறந்த வீட்டினருக்கு கணக்குவழக்கில்லாம செலவழிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

முடியாதவங்ளோட கல்வி, மருத்துவ செலவுகளுக்குப் பணம் கொடுக்குறது வேற.அதே சமயம், நம்ம பிள்ளைகளுக்கோ, உறவினர்களுக்கோ இஷ்டத்துக்கு அள்ளிக்கொடுத்து சோம்பேறியாக்குறது எனக்கும் பத்மாவுக்கும் சுத்தமா பிடிக்காது.

நாம கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி சேர்த்த பணம் இப்படி வீணாகுதேன்னு ஆதங்கத்தை நான் மனசுக்குள்ளேயே பூட்டி வெச்சிட்டேன்.ஆனா என் மனைவியால முடியலை.அவ கோபப்பட்டு பேசுறது என் மருமகளுங்களுக்கு புடிக்கலை.

பெருசுங்களுக்கு சாப்பாட்டுல ஒண்ணும் இல்லாம ஆக்கிட்டா சீக்கிரம் போய் சேர்ந்துடுவாங்க. நாம இஷ்டப்படி செலவழிக்கலாம்னு நினைச்சுட்டாங்க. அவ்வளவுதான்.

இந்த ஜென்மத்துல ஹோட்டல் வெச்சு, முடியாதவங்க பலருக்கும் உணவு கொடுக்க வெச்ச கடவுள், இப்போ எங்களை அவதிப்பட வெச்சிருக்கான்னா அதுக்கு பூர்வ ஜென்மத்துல நாங்க செய்த பாவம்தான் காரணமா இருக்கும்.அதனால சரியான சாப்பாடு கிடைக்காதது கூட எனக்கு வருத்தமில்லை.
என் மனைவிக்கு காது மந்தமாயிடுச்சு. அதனால மருமகளுங்க இஷ்டத்துக்கு அவளைத்திட்டுற வார்த்தைகள் என் காதுல ஈட்டியை வெச்சு குத்துறமாதிரி இருக்கு. அதைத்தான் என்னால தாங்கமுடியலை.இப்படி அசிங்கப்படுறதுக்கு பதில் அவ போயிட்டான்னா மருமகளுங்க செலவழிக்கிறதை தப்பு சொல்ல யாரு இருக்கா?

அவங்களுக்கும் சந்தோஷ¬ம். பத்மாவுக்கும் நிம்மதி. நான் என்ன சொல்லப்போறேன்.அவங்க போடுறதை தின்னுட்டு ஒரு மூலையில முடங்கிக் கிடப்பேன்.
ஆனா ஒரு விஷ¬யம் தம்பி…நல்லதோ கெட்டதோ, நாளைக்கு உங்க அம்மா அப்பாவை ஓரம்கட்டிடாதீங்க.

அதாவது,சின்னதோ பெரிசோ அவங்களுக்குன்னு ஏதாவது ஒரு பொறுப்பையோ வேலையையோ கொடுங்க.இத்தனை வரு¬மா ஓடி ஓடி உழைச்சு புள்ளைங்ளைக் காப்பாத்துனோம்.இப்ப நாம ஓரமா இவங்களுக்கு பாரமா இருக்கோமோ…அப்படின்னு பெரியவங்களுக்கு வர்ற சிந்தனைதான் பல குடும்பங்கள்ல உறவுச் சிக்கலுக்கு காரணமாயிடுது.

என் மனைவி பேர்லயும் தப்பு இருக்கு ஒத்துக்குறேன்.அன்பு இருக்குற இடத்துல சகிப்புத்தன்மைக்கு வேலையில்லை.ஆனா அன்பு, பாசம், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை இதெல்லாம் இருவழிப்பாதையா இருக்கணும்.பல குடும்பங்கள்ல இதெல்லாம் ஒருவழிப்பாதையாயிடுச்சு.அதோட விளைவுகள்தான், இவ்வளவு முதியோர் இல்லங்களும், குடும்பநல நீதிமன்றங்களும், சமீப காலமா பிள்ளை என்னைக் கவனிக்கலைன்னு பெத்தவங்க கொடுக்குற புகார்களும்.” என்று சொன்ன வாசுதேவனின் முகத்தைப் பார்த்தேன்.

தூக்கிய சுமையை நெடுநேரம் கழித்து இறக்கிவைத்தவர் போல் அவருடைய முகம் தெளிவாக இருந்தது.
இவரைப்பொறுத்தவரை மனதில் உள்ள கவலைகளை நியாயமான முறையில் பேசினார்.இதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்க ஆட்கள் இருந்தாலே, இவரைப்போன்ற முதியவர்கள் மனதில் சலனமில்லாமல் இருப்பார்கள் என்று எனக்குத் தோன்றியது.

“நீங்க சொன்னதெல்லாம் சரிதான் அய்யா…ஆனா மரணத்தை முடிவுசெய்யுறது கடவுள்தான்.பல பேரோட பசியைப்போக்கிய எனக்கு சரியான சாப்பாடு இல்லை. அது போன ஜென்மத்துல செய்த பாவமாத்தான் இருக்கும்னு நீங்களே சொல்லிட்டீங்க.இப்போ உங்க மனைவியை உலகத்தை விட்டு அனுப்பி ஏன் இன்னும் பாவத்தை சுமக்க நினைக்குறீங்க?

இந்த ஜென்மத்துல நீங்க செய்த புண்ணியங்கள் மட்டுமே உங்க கணக்குல இருக்கட்டுமே.தயவு செய்து அந்த மாத்திரைகளைக் கொடுங்க.” என்று நான் கேட்டதும் அவர் கண்களில் கண்ணீர்.ஆனால் முகத்தில் பிரகாசம்.

“என்னை மாதிரி வயசானவங்க பேச ஆரம்பிச்சாலே கிழம் அறுக்க ஆரம்பிச்சிடுச்சுன்னு ஒதுங்கிப் போறவங்கதான் அதிகம்.ஆனா நீ ரொம்ப பேசலைன்னாலும் சொன்ன சில வார்த்தைகள் என் மனசுக்கு ஆறுதலா இருக்கு. நம்ம ஆயுளைத் தீர்மானிக்கிற உரிமையையே பகவான் நமக்குத் தரலை. அடுத்தவங்களுடைய வாழ்நாளைப் பற்றி முடிவுசெய்ய நான் யாரு?…பெரிய பாவம் செய்ய இருந்த எனக்கு நல்ல வழி காட்டிட்ட தம்பி. வீட்டுல இருக்குற மாத்திரைகளைத் தூக்கிப்போட்டுடுறேன். ” என்ற அவர் தன் கையில் இருந்த மாத்திரைகளை என்னிடம் தந்தார்.

“ஆனா ஒண்ணு தம்பி…என் மருமகளுங்க அவ்வளவு அசிங்கமான வார்த்தைகளால என் மனைவியைத் திட்டுறாங்க.இதையயல்லாம் வாங்கிகிட்டு அவ இருக்குறதைவிட போய்ச் சேருறது மேல்னு நினைச்சுதான் தூக்கமாத்திரைகளைக் கொடுக்க முடிவு செஞ்சேன்.” என்று மீண்டும் கண்கலங்கினார்.

அடுத்த சில நாட்களில் வாசுதேவனின் மனைவி பத்மா, கீழே விழுந்ததில் நினைவிழந்து விட்டார்.இரண்டு நாட்கள் அதே நிலையில் இருந்து அவருடைய உயிர் பிரிந்தது.

நான் வாசுதேவனின் வீட்டுக்குச் சென்றபோது அவருடைய மருமகள்கள், அவர்களுடைய உறவுக்கார பெண்களைக் கட்டிக்கொண்டு, “ஆயுசுக்கும் இவங்களுக்கு சேவை செய்யணும்னு நினைச்சோமே…இப்படி எங்களை அநாதையா தவிக்கவிட்டுட்டு போயிட்டாங்களே…” என்று அழுதார்கள்.

எனக்கு வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டேன். அதுவரை பேசாமல் இருந்த வாசுதேவன் என் கைகளைப் பிடித்துக்கொண்டு,“தம்பி…என் மனசு சஞ்சலப்பட்டது அவளுக்கு எப்படியோ தெரிஞ்சுடுச்சு…அதான் உங்களுக்கு எந்த பாவமும் வேண்டாம்…நானே போயிடுறேன்னு அவ வாழ்க்கையை முடிச்சுட்டு போயிட்டா…இனிமே எனக்கு யாரு இருக்கா…நான் அனாதையா நிக்கிறேனே…” என்று கதறியவரைத் தேற்ற எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

- அக்டோபர் 2010

தினமலர் – வாரமலர் (வேலூர், திருச்சி, சேலம், ஈரோடு பதிப்புகள்)
டி வி ஆர் நினைவு சிறுகதைப்போட்டி – 2010 ல் இரண்டாம் பரிசு ரூ.5,000/- பெற்ற சிறுகதை. 

தொடர்புடைய சிறுகதைகள்
காதல் என்றால் மிஸ்டுகால் இல்லாமல் இருக்காது. அதே போல் ராங்நம்பர் போட்டு நட்பாக (?!) தொடங்கி காதலில் முடிந்தது என்று பேப்பரில் செய்திகளைப் படித்திருக்கிறோம். இரண்டு முறை ராங்நம்பர் போட்ட ஆசாமியை நம்பி நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு ஒரு பெண் ஓடி ...
மேலும் கதையை படிக்க...
1996ஆம் ஆண்டு கோடை விடுமுறை தொடங்கிய நேரம்: திருவாரூர் அய்யனார் கோவில் தெருவில் இருந்த முடிதிருத்தகத்தின் வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்ச்சில் இரண்டு சிறுவர்களின் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள். "டேய்...வர்ற 9ஆம் தேதி இந்தியன் படம் ரிலீசாகுதுடா...¬ஷங்கர் டைரக்சன். படம் சூப்பரா இருக்கும். கமல் ஹீரோ.கேட்கவா ...
மேலும் கதையை படிக்க...
வெளியூர் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை வவுச்சர்களைக் கணிப்பொறி மூலம் தேன்மொழி தயார் செய்துகொண்டிருந்தாள். தொலைபேசிவிட்டுவந்த கணக்குப்பிள்ளை,"தேன்மொழி,உங்கம்மா பேசுறாங்க..." என்று சொல்லிவிட்டு அவர் இருக்கைக்குச் சென்றார். முதலாளியின் அறையில் அவர் இல்லை.மேசையின் மீது கவிழ்த்துவைக்கப்பட்டிருந்த ஒலிவாங்கியை எடுத்து காதுக்குக் கொடுத்தாள். "என்னம்மா அவசரம்?..." "மாப்பிள்ளை தம்பி வந்துருக்குடி.முக்கியமான விஷயம்.ஆபீஸ்ல ...
மேலும் கதையை படிக்க...
மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் பேருந்து பரமக்குடி பேருந்து நிலையத்தில் வந்து நின்று இளைப்பாறியது.நிரம்பி வழிந்த பஸ்சில் இருந்து பிதுங்கிய வாழைப்பழமாக வெளியே வந்து உதிர்ந்த கூட்டத்தில் சிவபாலனும் காயத்ரியும் பளிச் சென்று தெரிந்தார்கள். உடைகள் கசங்கி கண்களில் தூக்கம் மிச்சமிருந்தாலும், மஞ்சள் நிறம் ...
மேலும் கதையை படிக்க...
திருவாரூர் நகரில் பல்வேறு சுடுகாடுகள் இருந்தாலும் அனைத்து வயதினருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது நெய்விளக்குத்தோப்பில் உள்ள சுடுகாடுதான்.இங்குள்ள மக்கள் யாருக்குமே அந்தப் பெயரைக் கேட்டாலோ உச்சரித்தாலோ அவர்கள் மனதில் அச்சம் அல்லது வெறுப்பு கண்டிப்பாகத் தோன்றும். ஓடம்போக்கி ஆற்றங்கரையோரம் உள்ள அந்த சுடுகாட்டுப் ...
மேலும் கதையை படிக்க...
கதையைப் பற்றிய குறிப்பு: அவ்வப்போது நாளிதழ்களில் மணப்பெண் மாயமானதால் அந்தப் பெண்ணின் தங்கையோ வேறு யாருமோ திடீர் மணமகளாகும் செய்தி வெளிவரும். அப்போது அந்த பெண்களின் மனநிலை எப்படி இருக்கும் என்ற கோணத்தில் யோசித்தபோது உருவானதுதான் இந்தக் கதை. தங்கஊசிதான்...அதுக்காக கண்ணுல குத்திக்க ...
மேலும் கதையை படிக்க...
வாசலில் கூடி நின்ற கூட்டத்தைப் பார்த்ததுமே அதிர்ந்து போனான் சங்கர்.ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது. மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்குப் போன அவன் இருபது நிமிடங்களிலேயே திரும்பி விட்டான்.இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று அவனுக்கு தெரியவில்லை.அவன் சைக்கிளை நிழலில் நிறுத்திவிட்டு ...
மேலும் கதையை படிக்க...
ஏங்க...இந்தக் கதையைக் கேட்டீங்களா...நம்ம பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம்தான் ஆகுது. புதுப்பொண்டாட்டியை அழைச்சுக்கிட்டு ஊட்டி, கொடைக்கானல்னு போகாம, தன் அம்மா அப்பாவையும் அழைச்சுக்கிட்டு மதுரை, திருச்செந்தூர்னு கோயில் கோயிலா அலையப் போறாராம் மாப்பிள்ளை. இந்தக் கொடுமையை எங்க போய் சொல்றது?''என்று ...
மேலும் கதையை படிக்க...
நான் சிறுவனாக இருக்கும் போது பார்த்த உலகம் வேறு. இப்போது குழந்தைகளுக்கு நாம் காட்டும் உலகம் வேறு. தொழில்நுட்பத்தில், பலவித வசதிகளில் உலகம் மேம்பட்டிருந்தாலும் உறவுகளைப் பேணுவதில் நாம் மிகமிக பின் தங்கிய நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக தோன்றுகிறது. சுருங்கச் சொன்னால் ...
மேலும் கதையை படிக்க...
மிஸ்டு கால்
நண்பன்
தேன்மொழியாள்
முகவரி
நெய்விளக்குத்தோப்பு
பூ பூக்கும் ஓசை
கட்டுப்பாட்டு அறை
நேசம்
பார்றா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)