டேக் இட் ஈஸி

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 5,349 
 

“அடேங்கப்பா! என்ன வெயில், என்ன வெயில்! ராதா, குடிக்க எனக்கும் உன்னோட அண்ணா விஷால்க்கும் ரஸ்னா சில்லுனு போட்டுண்டு வாடி பட்டு”.

“என்ன யாருன்னு பாக்கறேளா. நான்தான் வேதம். எனக்கு ரெண்டு கண்மணிகள்.

மூத்தவன் விஷால், கம்ப்யூட்டர் என்ஜினியரிங் படிச்சுட்டு இப்போ எச்.பிங்கற பெரிய கம்பெனில 3 வருஷமா வேலை பாத்துண்டு இருக்கான். எப்பவும் துரு துருன்னு இருப்பான். ராதா 12வது படிச்சுண்டு இருக்கா. சமத்து. கொஞ்சம் தூக்கப் ப்ரியை. ஆங்! முக்கியமா ஒருத்தரைப் பத்தி சொல்லலயே. கீதா, எங்காத்துக்கு மாட்டுப் பொண்ணா வரப்போறவ. நேரம் ஆனதே தெரியலை பாருங்கோ! அப்பறமா கீதாவைப் பத்தி சொல்றேன்.” வேதம், மிச்ச வேலைகளைப் பார்க்க அடுக்களைக்குள் நுழைந்தாள்.

ராதா ரஸ்னாவை நீட்ட, விஷால் “தாங்க்ஸ்டி பட்டு”னு சொல்லிட்டு, படிப்பு எல்லாம் எவ்ளோ தூரத்துல இருக்கு என்று பொறுப்பாக கேட்டான். ராதா குறும்பாக சிரிச்சுண்டே “இப்போதான் அதுக்கு போர் அடிச்சதுன்னு வாக்கிங் அனுப்பினேன்”னு சொல்லியவளை செல்லமாய் மண்டையில் தட்டினான். “எங்க இந்த வேதம், வேதம்!”னு விஷால் அம்மாவை வம்புக்கிழுக்க கூப்பிட்டான். உள்ளே இருந்தபடிக்கு வேதம், “இதோ
வரேன். என் ஆத்துக்காரர் கூட இவ்ளோ பலத்த குரல்ல கூப்பிட்டது இல்ல.இதுங்களுக்கு இடம் கொடுத்தா.. ” என்று பாத்திரம் தேய்த்த ஈரக்கையை புடவை நுனியில் துடைத்துக் கொண்டே வந்தாள். “அம்மா, மெகா சீரியல் ஆரம்பிக்கற நேரம் ஆச்சு, நீ மிஸ் பண்ணிடக் கூடாதே”ன்னு கூப்பிட்டேன்னு நைஸாக பேர் சொல்லிக்
கூப்பிட திட்ட வந்த அம்மாவை திசை திருப்பினான் விஷால். வேதமும், “சரி கை கால் அலம்பிண்டு வா, திங்கறத்துக்கு தட்டை
பண்ணி இருக்கேன்”னு சொன்னாள். அண்ணாமலை சீரியல் பாத்துட்டுத்தான் இனிமே எழுந்துப்பேன்னு சொன்ன அம்மாவைப் பாத்து “ஆமாமாம், இல்லாட்டி ராதிகா கோச்சுண்டுடுவாம்மா”னு கேலி பண்ணிட்டு விஷால் தனது வேலையைப் பார்க்க போனான்.

பொழுது விடிந்தது. அரக்க பரக்க அம்மா ஆசையா போட்டுக் கொடுத்த கோதுமைக் கஞ்சி, ஹெல்த் ட்ரிங்க் குடிச்சுட்டு, ஸ்மார்ட்டா டிரஸ் பண்ணிண்டு ஆபீஸ்க்கு கிளம்பினான். ஆபிசுக்குள் நுழைந்த வண்ணமாய் எதிரில் தென்பட்டவர்களுக்கெல்லாம் ஹலோ, குட் மார்னிங் சொன்னபடி சீட்டிற்குச் சென்றான். விஷால் படு குஷியா
இருந்தான். ஏதோ ஹம் பண்ணிண்டு இருக்கானே. இருங்கோ கிட்டக்க போய் ஒட்டுக் கேட்போம். சத்தமா பாடினாலே ஒரு வார்த்தையும் புரியறது இல்ல இப்ப வர பாட்டுல, இதுல இவன் வாய்க்குள்ள பாடிக்கறது எவனுக்கு புரியும் சொல்லுங்கோ.

“டேய்! விஷ¤, இந்த லோகத்துக்கு வாடா. மலை இறங்கு.” தட்டி விஷாலை நிஜ உலகுக்கு கொண்டு வந்தவன் சிவா. விஷாலோட உற்ற தோழன்.

“என்ன மச்சி, கீதாவ பாத்த மாறி ஹேப்பியா இருக்க !”

“சிவா இன்னிக்கு என்னவோ தெரியலைடா, ஐ அம் பீலிங் வெரி குட். கார்த்தால எழுந்தவுடனே ரேடியோ ஆன் பண்ணிணேன். எனக்கு பிடிச்ச பாட்டு “ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்”. இன்னிக்கு லன்ச் என்ன தெரியுமோ எனக்கு பிடிச்ச அவியல், அடை. இன்னிக்கு ஈவினிங் TVல சச்சின் இன்ட்டர்வியூ. 8 மணிக்கு கீதாவ பாக்க போறேன்.

அவ ரெண்டு நாள் கான்பரன்சுக்காக வந்து இருக்காளாம். இப்படி மனசுக்குப் பிடிச்ச எல்லாமே சில நாள் அமையும்போது, மனசு ரொம்பவே சந்தோஷமா இருக்கு.”

“விஷ¤, வெரி குட். சில நாள் சாதரணமா ஓடிடும். சில நாள் எக்ஸலண்டா போகும். ஒரு சில நாள் வராம ஸ்கிப் ஆகி அடுத்த நாளா இருக்கப்பிடாதான்னு இருக்கும். இந்த மூணுல கவலையில்லாம இருக்கற நாள்தான் பெஸ்ட். இந்த இனிய நாளைக் கொண்டாட வாடா ஆபிஸ் வேலை முடிச்சுட்டு, லன்ச் ப்ரேக்ல ப்ரூட் ஸாலட்
சாப்பிட்டுட்டு வரலாம்.”

“சிவா, போலாமே.. ஒரு நிமிஷம் இந்த நாள் இனிய நாள் ப்ரோக்ராம் ப்ரிவியூ மாறி இருந்ததுடா நீ சொன்னது. TV ரொம்ப பாக்கறங்கறது நீ பேசற ஸ்டைல்ல இருந்தே தெரியறது. ஆமா, உன் ப்ராஜக்ட்க்கு மூட்டைப் பூச்சி மருந்து தெளிச்சாச்சா?”

“விஷால், அத ஏன்டா கேக்கற, எவனப் பாத்தாலும் பக் பக்-ங்கறானுங்க. கோட் எழுதறச்சயே முக்குறுணி வினாயகர C++ தெரிஞ்சுக்க சொல்லிட்டா, நாம 108 தேங்காய் உடைக்கறேன்னு வேண்டிண்டு அவர் பார்த்துப்பார் கம்பைலரன்னு பாக்கறேன். புள்ளையார் பாட்டுக்கு தேங்காய்க்கு ஒரு எரர்னு கணக்கு பாத்துடுவாரோன்னு
டவுட்டாவும் இருக்கு. நீயோ சந்தோஷமா இருக்க, இன்னிக்காணும் நாம C++ மறந்து தாய் மொழியில் அளவளாவுவோம். ”

“ஹா ஹா ஹா! டேய், பிள்ளையார் பாவம்! தேமேன்னு பக்தர்கள் உடைச்சுட்டு அவங்களே தேங்காயை எடுத்துண்டு போறதைப் பார்த்துண்டு செய்வதறியாமல் இருக்கார். அவரை ·ப்ரீயா விடுங்க. சரி, நான் பாக்கி வேலையை முடிக்கிற வழியைப் பாக்கறேண்டா”னு சொல்லிண்டே ஏதோ டாக்குமெண்ட் எடுக்க போன விஷால் தடுமாறி விழ இருந்தவனைத் தாங்கிப் பிடித்தான் சிவா. “பாத்துடா விஷ¤,
கால் ஜாக்கிரதை. எப்போ, டாக்டர் அப்பாயின்மென்ட்? ”

“இந்த வாரம் வர சொல்லி இருக்கார்டா. இம்போர்ட்டட் ஆர்டிபிஷியல் லெக் பிக்ஸ் பண்ணறேன்னு சொல்லி இருக்கார். அதுக்கப்புறம் உனக்கும் எனக்கும் ஓட்டப் பந்தயம் வெச்சுக்கலாம்”னு பளிச்சென சிரித்த விஷாலின் முகத்தின் ப்ரகாசம், சிவாவிற்கு சிறு துளி கண்ணீர் வர வைத்தது. (மனசுக்குள், “விஷ¤ யூ ஆர் கிரேட் டா. உன் கிட்ட
இருந்துதான் எதையும் ஈஸியா எடுத்துக்கறது எப்படின்னு கத்துக்கணும்.”). சரி அப்போ லன்ச் ப்ரேக்ல பாப்போம்டானு சொல்லிட்டு தன் இருக்கைக்கு கிளம்பினான் சிவா.

வேதத்துக்கு சட்டுனு ஞாபகத்துக்கு வரவே, “கீதா பத்தி சொல்லிண்டு இருந்தேனே. விஷால் கம்பெனி மீட்டிங்குக்காக மும்பை போய் இருந்தப்போ ஒரு நாள் எலெக்ட்ரிக் ட்ரெயின்க்காக வெயிட் பண்ணிண்டு இருக்கறச்ச, ஒரு ட்ரெயின் நின்னுது. அதுல இருந்து இறங்க இருந்த கீதா, புடவைத்தலைப்பு சிக்கிண்டு அவதிப்பட, விஷால் அவளுக்கு உதவி பண்ணப் போனான். புடவைத் தலைப்பை எடுத்த அடுத்த நிமிஷம்
ட்ரெயின் கிளம்ப நிலை தடுமாறி விஷால் இடது கால் இடுக்குல மாட்டிக்கவும் போறாத காலம் துடிச்சு போய்டுத்தாம் எம்புள்ளை. இத்தனையும் கண் முன்னாடி 10 நிமிஷத்துக்குள்ள நடந்து முடிஞ்சுடுத்து. அந்த கீதா ஒரு டாக்டர் ஆண்டவன் புண்ணியத்துல அவ உடனே விஷாலை பெரிய ஆஸ்பத்திரில சேர்த்து அவனை கண் போல பாத்துண்டாளாம். எங்களுக்கும் சொல்லி அனுப்பிச்சு, தைரியம் சொல்லினா கீதா. தெய்வம் மாறி என்னைக் காப்பாத்த வந்த உங்க பையனுக்கு ஒரு இழப்பு என்னால வந்துடுத்துனு கதறி அழுதா. விஷால்க்கு பக்க பலமா சிரிக்க சிரிக்க பேசி அவனை பழைய மாறி ஆக்கினவ கீதா. எங்க எல்லார் மனசுலயும் இடம் பிடிச்சுட்ட
கீதாக்கும் விஷாலுக்கும் கூடிய சீக்கிரமே கல்யாணம். சொல்லி அனுப்பறேன் கண்டிப்பா வந்துடுங்கோ. ராதா! குக்கர்ல பருப்பு வெய்மா!”-னு வழக்கமான ரொட்டீன் வேலை செய்ய கிளம்பிவிட்டாள்.

– அருணா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *