ஒரு தோட்டக்காரனின் ‘சத்தியம்’!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 12, 2019
பார்வையிட்டோர்: 35,748 
 

அவன் மகா சாது, மகா பக்தி, மகா உழைப்பு, மகா மகா வினயம், இன்னும் பல மகாக்களுக்கு உரியவன். பொருத்தமில்லாத ஒரு மகாவுக்கும் உரியவன் – மகா குடியன்.

எங்கள் குவார்ட்டர்ஸில் தோட்டக்காரன், காவல்காரன், அக்கம் பக்கத்துக்கெல்லாம் ஆடி மாசக் கூழ் ஊற்றும்போது சமையல்காரன்.

சாயந்தரத்துக்குள் காம்பவுண்ட் வேலைகளை ஒழுங்காக செய்து முடித்துவிட்டு அங்கிருக்கும் பிள்ளையார் முன்னால் (சிறிய ஒரு பிள்ளையார் கோவிலை குடித்தனக்காரர்கள் கட்டியிருந்தனர்.) உட்கார்ந்து விடுவான்.

விடிய விடிய பிள்ளையார் சந்நிதி தோட்டக்கார கிருஷ்ணனுடையதுதான்.

வயிறு முட்டக் குடித்துவிட்டு சுருண்டு படுக்கிற விவகாரமெல்லாம் அவனிடமில்லை. பிள்ளையார் எதிரில் உட்கார்ந்து அவரோடு பேசத் தொடங்கிவிடுவான். பேச்சு சில சமயத்தில் பழைய சினிமாப் பாட்டாக மாறி – அங்கங்கே அவனது சொந்தக் கருத்துக்கள், நாட்டு நடப்பு இதெல்லாம் கலந்து வரும். உதாரணமாக – ”போனால் போகட்டும் போடா, இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?”… பாட்டைத் தொடங்குகிறான் என்றால் சிறிது நேரமே ஒரிஜினல் வரிகள் வெளிப்படும்.

அப்புறம் அவனுக்குள்ளிருக்கும் அரசியல் ஞானமும், கவிதை நயமும், புரட்சிக் கனலும் சில குடித்தனக்காரர்களின் மேலுள்ள எரிச்சலும் பாட்டோடு கலந்துவிடும்.

“போனால் போகட்டும் போடா… டேய் பாலாஜி ராவ்! என்னடா பெரிய ஆபீசரு. உன் காரை நான் இன்னும் நல்லாத் துடைக்கணுமா? ஹா. ஹா. ஹா! (சிரிப்பு – எம்.ஆர். ராதா குரலில்) போடா போடா இவனே. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாருடா? உன் கார் மட்டும் நிலையாடா?… (வேறு பாட்டு தலையெடுக்கிறது) பொன்னை விரும்பும் பூமியிலே, என்னை விரும்பும் ஓருயிரே. ஹா. ஹா. ஹா! உன்னை விரும்பவே மாட்டேண்டா. (சில கெட்ட வார்த்தைகள்.) ஓட்டு போடணுமா ஓட்டு. போங்கடா போங்க. யாரை நம்பி நான் பொறந்தேன். (சிரிப்பு) பிள்ளையார்தான் என் சாமி. அதுக்குத்தாண்டா என் ஓட்டு. டேய் பாலாஜி ராவ், உன்னைவிட உன் வீட்டு நாய் ரொம்ப நல்ல நாய். வாடான்னா வரும். வந்து படுத்துக்கடான்னா வந்து படுத்துக்கும்.”

இப்படியாக ராத்திரி 12 மணி வரை பாட்டும் வசனமுமாக இருக்கும். தூங்குவதற்கு மிக இடைஞ்சலாக இருப்பதாகக் குடித்தனக்காரர்கள் அவ்வப்பொழுது லேசாகக் குறை கூறுவார்களே தவிர தீவிரமாக முடிவெடுத்து அவனை வேலையிலிருந்து நீக்கியதில்லை.

ராத்திரி பூரா அமர்க்களப்படுத்தினாலும் காலையில் 5 மணிக்கு முன்னதாகக் குளித்து நெற்றியில் பளீரெனத் திருநீறு துலங்க தோட்டம், கோயில் எல்லா இடங்களிலும் சுத்தமாகப் பெருக்கிக்கொண்டிருப்பான்.

“என்னய்யா ராத்திரி ரொம்பக் கலாட்டா பண்ணிட்டிருந்த?” என்று யாராவது அதட்டினால் ஒரு நெளி நெளிந்துகொண்டு நைஸாக நழுவி விடுவான். ராத்திரியானால் மறுபடி குடி, உளறல், பிள்ளையாருடன் பேச்சு, பாட்டு.

அவனிடம் ஒரு நாள் காலையில் “யோவ்! போய் ஒரு ரூபாய்க்கு கற்பூரம் வாங்கிட்டு வாய்யா?” என்றேன். வாங்கி வந்தான்.

“உட்கார் இப்படி” பிள்ளையார் முன்னால் உட்கார வைத்து நானும் உட்கார்ந்து கொண்டேன். குடியால் ஏற்படக்கூடிய கெடுதல்களையெல்லாம் ஒரு மணி நேரம் அவனுக்கு சொன்னேன்.

அவனது நல்ல குணங்களையும், அவனது கடவுள் பக்தியைப் பற்றியும் அரை மணி பாராட்டினேன்.

“இனிமேல் குடிக்கமாட்டேங்க. சத்தியமாக,” என்றான். பெரியதாக அழுகை வேறு.

“சரி, சரி. நீ எத்தனையோ தடவை சத்தியம் பண்ணியிருக்கே. ஆனா குடிக்காம இருக்கிறதில்லே. அதனால் இந்தத் தடவை கற்பூரத்தை அணைத்து சத்தியம் பண்ணனும்,” என்றேன்.

கற்பூரத்தை ஏற்றினேன். தணதணவென்று ஒரு ரூபாய் கற்பூரம் எரிந்தது.

“சொல்லுடா, இனிமேல் இந்த பிள்ளையார் சாமி சத்தியமா குடிக்கமாட்டேன். பிள்ளையார் மேலே இது சத்தியம்! சத்தியம்! சத்தியம்!”

நான் சொன்னபடியே சொல்லிக் கற்பூரத்தை அணைத்தான். இது காலை 9 மணிக்கு.

மாலை 7 மணிக்கு பிள்ளையார் முன்னால் ஒரு உருவம் உட்கார்ந்து அவரைக் கேள்வி கேட்கிறது.

“ஹூம்! நீயெல்லாம் ஒரு பிள்ளையார்! கேட்கிறேன் சொல்லு. ஏய்யா, நான் குடிக்கிறேனா. சொல்லு பார்ப்போம். (சில கெட்ட வார்த்தைகள்.) அவ பஜாரி. சரி உடு. நானும் பஜாரிதான். ஹா! ஹா! (சிரிப்பு) அவ பொம்பள பஜாரி. நான் ஆம்பள பஜாரி. ஹா! ஹா! கப்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணிட்டா குடிக்கக்கூடாது. மவனே, கப்பூரத்துக்கும் சத்தியத்துக்கும் இன்னாடா சம்பந்தம். குடிசை பத்தி எரிஞ்சா பத்து ஆளுங்க வந்து நெருப்ப அணைக்கிறாங்க. (பெருஞ் சிரிப்பு.) அத்தனை பேரும் குடிக்கமாட்டேண்ணு சத்தியம் பண்ணாங்களா.”

நான் நினைத்துக்கொண்டேன். சத்தியம் என்பது ரொம்பப் பெரிய விஷயம். அதைப் பெரிய கோடீஸ்வரர்களாலேயே கூடக் காப்பாத்த முடிவதில்லை. இந்த ஏழைக் குடிகாரனால மட்டும் எப்படிக் காப்பாத்த முடியும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *